Arivazhagan Subbarayan

Abstract Romance Inspirational

4.8  

Arivazhagan Subbarayan

Abstract Romance Inspirational

இரண்டாவது காதல்...!

இரண்டாவது காதல்...!

8 mins
967



  மாலை நேரத்துச் சென்னை! சூரியன் மறைய ஆரம்பிக்க, வாகனங்கள் சாலையை நிறைத்திருக்க, தலைவர்கள் கட்சி மாறிக்கொண்டிருக்க, தொண்டர்கள் இப்போது எந்தத் தலைவருக்கு பேனர் கட்டுவது என்று புரியாமல் விழிக்க, மின் விளக்குகள் ஒவ்வொன்றாக வெளிச்சம் பூக்க, OMR இல் உள்ள அந்த கஃபே காஃபிடேயில் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள் சௌம்யாவும், பீட்டரும்!


இருவரும் cognizant இல் வேலை பார்க்கிறார்கள். இரண்டு வருடமாக ஆத்மார்த்தமாக ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இருவரின் பெற்றோரும் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டவர்கள் தான். பீட்டரின் அப்பா கிறிஸ்டியன். அம்மா ஒரு இந்து. சௌம்யாவின் அம்மா அப்பா இருவரும் இந்துக்கள் தான். ஆனால், வேறு வேறு ஜாதி. இருவரின் குடும்பமும் நல்ல வசதியான குடும்பம் தான். இவர்களும் நன்கு படித்து, நல்ல வேலையில் இருப்பவர்கள். 


  பீட்டரை சௌம்யா அவளுடைய பெற்றோரிடம் அறிமுகப் படுத்திய போது, அவர்களுக்குப் பீட்டரை மிகவும் பிடித்துப்போய் விட்டது. அதேபோல் பீட்டர் வீட்டிலும் ஓகே சொல்லி விட்டார்கள். இப்பொழுது சௌம்யா ஏதோ பேச வேண்டும் என்று சொன்னதால், கஃபே காஃபிடேயில் இந்த மீட்டிங்!


   "என்ன விஷயம் சௌம்ஸ்?"

   "நீ என்ன ரிலிஜன் பீட்டர்?"

   "இதென்ன கேள்வி சௌம்ஸ்! நான் கிறிஸ்டியன்னுதான் உனக்குத் தெரியுமே!"

  "உன் அப்பாதான் கிறிஸ்டியன். உன் அம்மா ஓர் இந்து!"

   "அப்பாவின் மதத்தைத் தானே நானும் பின்பற்ற வேண்டும்!"

சௌம்யா லேசாகப் புன்னகைத்தாள்.

  "அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா பீட்டர்?"

  "இந்தக் குழப்பம் வரக்கூடாது என்பதற்காகத்தான் திருமணத்தின் போது என் அம்மா கிறிஸ்டியனாக மாறிவிட்டார்கள் சௌம்யா!"

  "அப்படியானால், நமது திருமணத்திற்கு முன்பு, நானும் கிறிஸ்டியனாக மாற வேண்டுமா பீட்டர்!"


  சௌம்யாவின் இந்தக் கேள்வி பீட்டரைக் கொஞ்சம் குழப்பமடையச் செய்தது. "என் மதம் உனக்குப் பிடிக்கவில்லையா சௌம்யா?"

   "அதில்லை பீட்டர். எல்லா மதங்களும் நற்கருத்துக்களைத் தானே சொல்கின்றன! எல்லா மதங்களும் எனக்குப் பிடிக்கும் என்பது உனக்குத் தெரியாதா?"

  "பிறகென்ன சௌம்யா தயக்கம்? நானும் நீயும் ஒன்றாக கோவிலுக்கும், சர்ச்சுக்கும் சென்றதில்லையா சௌம்யா?"


  "கோவிலுக்கும், சர்ச்சுக்கும், மசூதிக்கும் சென்று எல்லாக் கடவுள்களையும் வழிபடுவது வேறு, தன்னுடைய அடையாளத்தை மாற்றுவது வேறு பீட்டர்!"

  "இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? அனைத்து மதங்களும் நமக்கு சமம் தானே சௌம்யா!" பீட்டர் சௌம்யா மீதான காதலால் உருகினான். சௌம்யாவுக்கும் பீட்டர் மீது அளவற்ற அன்பும் காதலும் இருந்ததை அவளது கண்கள் உணர்த்தின.


  "இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது பீட்டர்! நாம் பிறந்ததிலிருந்து நம்முடைய மதச் சூழ்நிலைளின் நடுவே தானே வளர்ந்திருப்போம். அதனால், நம்முடைய மதம் நம்முடைய core beliefs களில் ஒன்றாக இருக்கும். அதாவது அது நம்முடைய அடையாளம். அதைத் திடீரென்று மாற்றமுடியுமா என்று பயமாக இருக்கிறது பீட்டர்!"

  "சூழ் நிலைக்கேற்பத் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்வது தானே மனிதனின் சிறப்பு சௌம்யா!"


  "சூழ் நிலைக்கேற்ப எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு வாழ்க்கை நடத்தலாம்! ஆனால், core beliefs களை மாற்ற முடியாது பீட்டர். 'பொய்சொல்லக் கூடாது' என்பது core belief! அதை மீறிப் பொய் சொன்னால் ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும். குற்ற உணர்வுடன் காலம் முழுதும் வாழ முடியுமா பீட்டர்?"

  "வேண்டுமானால், நான் இந்துவாக மாறிக் கொள்கிறேன் சௌம்ஸ்!"

  "நீயும் உன் மதச் சூழலில் தானே வளர்ந்திருப்பாய்! உன்னுடைய core belief ஐ மாற்றிக்கொண்டு உன்னால் மட்டும் எப்படி பீட்டர் வாழ முடியும்?"

  "வேண்டுமானால் ஒன்று செய்யலாம். யாரும் மதம் மாற வேண்டாம். நீ உன் மதத்தையும், நான் என் மதத்தையுமே ஃபாலோ பண்ணலாம்!"

  "அப்படியானால், நம் குழந்தைகள் எந்த மதத்தை ஃபாலோ பண்ணும் பீட்டர்?"

  "நம் குழந்தைகளுக்கு எந்த மதம் பிடிக்கிறதோ அதை ஃபாலோ பண்ணட்டும்"

  "இல்லை பீட்டர்! குழந்தைகள் வளர்ந்தபின் பிரச்னையில்லை. ஆனால், வளரும் சூழலில் குழப்பம் நிலவினால், குழந்தைகளின் மன வளர்ச்சி பாதிக்கப்படாதா பீட்டர்?"


  "நாம் காதலிக்க ஆரம்பிக்கும் போது இதெல்லாம் உனக்குத் தோன்றவில்லையா சௌம்யா?" பீட்டரின் குரலில் சோகம் இழைந்தது.

   "காதல் என்பது வேறு பீட்டர். காதல் ஜாதி, மதம் பார்த்து வராது! அது உன்னுடன் இருக்கும் போது நான் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் உணர்வதால் வருவது! உன்னைப் போன்ற நல்ல பையனைக் காதலிக்காமல் இருக்க நான் என்ன ஜடமா பீட்டர்?" சௌம்யாவின் குரலும் தழுதழுத்தது. 


  "எந்த மதமும் வேண்டாமென்று எங்காவது சென்று விடலாமா சௌம்யா?"

  "எங்குச் சென்றாலும் நம்முடைய அடையாளம் அதுதானே பீட்டர்?"

  "என்னைக் காதலிக்காமல் உன்னால் இருக்க முடியுமா சௌம்யா?"

  "இப்பெழுது காதல் பிரச்னையில்லை பீட்டர்! காதலால் ஏற்படும் பாதுகாப்புணர்வும், நம்முடைய core belief களால் வரும் பாதுகாப்புணர்வும் ஒன்றுக்கொன்று முரண்படுவதால் எனக்குள்ளே மனக்குழப்பம்! நம் திருமணமும் அதன் பின் நம் வாழ்க்கையும் எனக்குப் பிரச்னையாகப் படுகிறது பீட்டர்!"


  "நம் இருவர் வீட்டிலும் ஒப்புக் கொண்டார்களே சௌம்யா! நமது பெற்றோர்கள் நன்றாக வாழவில்லையா சௌம்யா?"

  "அவர்கள் மனநிலை வேறு, நம்முடைய மனநிலை வேறு பீட்டர்!"

  "இதற்கு என்னதான் வழி? நீயே சொல் சௌம்யா!"

  "ஒரேயொரு வழி இருக்கிறது பீட்டர். ஒரு மாதகாலம் நீ சர்ச்சுக்குச் செல்லாமல் கோவிலுக்குச் செல். நான் கோவிலுக்குச் செல்லாமல் சர்ச்சுக்குச் செல்கிறேன். உன்னால் முடிந்தால் நீ இந்துவாக மாறிக்கொள்! என்னால் முடிந்தால் நான் கிறிஸ்டியனாக மாறிக்கொள்கிறேன். இடையில் நாம் சந்திக்க வேண்டாம் பீட்டர்! ஒரு மாதம் கழித்து நாம் இருவரும் இதே இடத்தில் சந்திப்போம்!"


  சௌம்யாவின் மீதுள்ள காதலால், பீட்டர் சரியெனத் தலையாட்டிவிட்டுச் சென்றான். அவன் சோகமாச் செல்வதைப் பார்த்த சௌம்யாவும் மௌனமாக மனதிற்குள் அழுதாள். 


  முதலில் ஒருவாரம் பீட்டர் விபூதி பூசிக்கொண்டு சந்தோஷமாகத்தான் கோவிலுக்குச் சென்றான். அடுத்த வாரம் அவன் எதையோ இழந்துவிட்டதைப் போல் உணர்ந்தான். இதுதான் சௌம்யா சொன்ன அந்த அடையாளமோ? மூன்றாவது வாரம் அவன் கோவிலுக்குச் செல்லவில்லை! நான்காவது வாரம் அவன் சர்ச்சுக்குச் சென்றுவிட்டான். சௌம்யாவைக் காதலுக்காக மதம்மாறச் சொல்வது 'எவ்வளவு சுயநலம்' என்றுணர ஆரம்பித்தான்.


அந்தக் குறிப்பிட்ட நாள் வந்தது!

அதே கஃபே காஃபிடே! அதே இடம்!

எதிரெதிரே சௌம்யாவும் பீட்டரும்!


  "சொல்லு பீட்டர்!"

  "என்னால முடியல சௌம்யா! எனக்கு நீயும் வேணும்! என் மதமும் வேணும்!"

  "என்னாலும் முடியல பீட்டர்! எனக்கும் நீயும் வேணும், என் மதமும் வேணும்!" என்ற சௌம்யா கண் கலங்கினாள்.

  "அழாதே சௌம்யா, கண்ணீரைத் துடைத்துக் கொள்! இதற்கு ஏதாவது வழி கிடைக்கும்!" பீட்டரும் மனதில் அழுதான். சௌம்யா கலங்கி அவன் பார்த்ததில்லை! அவ்வளவு தைரியமான பெண்! அவளது கண்ணீர், தன்மீதுள்ள காதலால் தான் என்று எண்ணிய பீட்டரின் இதயம் உருகியது!

   சௌம்யா கண்களைத் துடைத்துக் கொண்டு,"சரி பீட்டர் என்னை வீட்ல டிராப் பண்ணிடு. எனக்குக் கொஞ்சம் டைம் கொடு!"

  "உனக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்துக் கொண்டிருப்பேன் சௌம்யா!"

  

  பீட்டர் சௌம்யாவை அவளுடைய வீட்டில் இறக்கி விட்டு விட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தான். வீட்டில் பீட்டரின் அம்மா கேட்டார். பீட்டர் முழுவதும் சொன்னான்.

   "புத்திசாலிப் பெண்" என்றார் பீட்டரின் தாய், மேரி என்ற வரலட்சுமி!

  "ஆமாம்மா, சௌம்யா ரொம்பப் புத்திசாலி" பீட்டர் ஆமோதித்தான்.

  "அந்தப் பெண்தான்டா எனக்கு மருமகளா வரணும்!"

  "சௌம்யா இப்போது ரொம்பக் குழப்பத்தில் இருக்கிறாள் மா!"

  "உங்கள் இருவருக்கும் இருப்பது மதக் குழப்பமில்லைடா! மனக் குழப்பம்! இரண்டையும் நீங்கள் குழப்பிக் கொள்கிறீர்கள்!"

  "என்னம்மா நீ வேற குழப்பறே!"


  "ஆமாம்! மதங்கள் அப்படியேதான் இருக்கின்றன! உங்களின் மனங்களில் தான் குழப்பம்!"

  "மதங்கள் வேறுபடுவதால் தானேம்மா எங்கள் மனங்களில் குழப்பம் ஏற்படுகிறது?"

  "காரணம் மதங்களாக இருக்கலாம். ஆனால், குழப்பம் நிலவுகிற இடம் உங்கள் மனம் தானே!"

  "சரிம்மா! அப்படியே வைத்துக் கொள்வோம். இப்போது எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்?"

  "உனக்கு மனதில் ஒரு கஷ்டம் வந்தால் நீ என்ன செய்வாய்?"


  "எனக்கு மூட் அவுட் ஆனால் ஒரு சினிமாவிற்குப் போய்ட்டு வந்தால் சரியாய்டும்!"

  "அது கொஞ்ச நேரம் மூட் அவுட்டானால் நீ சொல்வது சரியாக இருக்கலாம்! உனக்கு இரண்டு மூன்று நாட்கள் மூட் அவுட்டானால் என்ன செய்வாய்?"

  பீட்டர் ஏதோ சொல்ல வந்தவன், திடீரென்று அவன் அம்மாவைப் பார்த்து,"ஓ மை காட்! என்னம்மா சொல்ல வர்றீங்க? நாங்க யாராவது சைக்கியாட்ரிஸ்டைப் பாக்கணுமா?"


  "ஆமாம் பீட்டர்! அதினெ்ன தவறு?"

  "இந்த விஷயத்துக்கெல்லாம் சைக்கியாட்ரிஸ்டைப் பார்த்தால் எல்லாரும் சிரிப்பாங்கம்மா! இது நாம தான் முடிவு பண்ணனும்!"

  "ஒரு மாதமா உங்களுக்கு இதுல ஏதாவது தீர்வு கெடைச்சுதா?"

  "இல்லை!"

  "தீர்வு கெடைக்காத விஷயங்களில், அந்த விஷயங்களைப் பற்றித் தெளிவான அறிவு பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுவதில் என்ன தவறு?"

  பீட்டர் யோசித்தான்.


  "நீங்க சொல்றதும் ஒரு விதத்தில் சரிதான்மா! அப்ப நாளைக்கே ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே அப்பாயிண்ட்மென்ட் வாங்கிடறேன்!"

  "யாரோ ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட இல்லை. ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த சைக்கியாட்ரிஸ்ட்டைப் பாருங்க!"

  "அது ஏன்மா பர்ட்டிகுலரா அப்படிப் பார்க்கணும்?"

  "நீங்க பார்க்கிற சைக்கியாட்ரிஸ்ட் உங்கள் இருவரின் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் சொல்லும் தீர்வில் அவர்சார்ந்த மதத்தின் தாக்கம் இருக்கலாமில்லையா? அதனால்தான்!"

  "வேறு மதத்தைச் சார்ந்த சைக்கியாட்ரிஸ்ட் சொல்லும் தீர்வு மட்டும் அவர் மதம் சார்ந்ததாக இருக்காதா?"

  "அப்படி ஒரு தீர்வை அந்த சைக்கியாட்ரிஸ்ட் கொடுத்தால் அது நமக்கு வெளிப்படையாகத் தெரிந்துவிடும்! அதனால், அதை நாம் ஏற்க வேண்டிய அவசியமில்லை!"

  "வாவ்! ம்மா எப்டிம்மா இப்டி யோசிக்கிறே? பேசாம நீயே இதுக்கு ஒரு ஐடியா குடுத்துறேன்!"

  பீட்டரின் அம்மா புன்னகைத்தார்.

  "போடா, போய் மொதல்ல அப்பாய்ண்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு!"


  அடுத்தநாள் லஞ்ச் டைமில் பீட்டரும், சௌம்யாவும், சரவணபவனில் அருகருகே! பீட்டர் தனக்கும் தன் அம்மாவிற்கும் இடையில் நடந்த உரையாடல் முழுவதையும் சௌம்யாவிடம் ஒப்பித்தான். அனைத்தையும் செவிமடுத்தாள் சௌம்யா!

  "ஆன்ட்டி ரொம்பப் புத்திசாலி பீட்டர்!"

  "இதையேதான் உன்னைப் பற்றியும் நேற்று என் அம்மா சொன்னார் சௌம்யா!"

  சௌம்யா மனக்குழப்பத்தினூடும் லேசாகப் புன்னகைத்தாள்!

  "அப்பாய்ண்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டியா பீட்டர்?"

  "டாக்டர். மெஹருன்னிஸா, வட பழனி! ஈவ்னிங் சிக்ஸ்!"

   

  மாலை ஆறு மணி. பீட்டரும், சௌம்யாவும் டாக்டர். மெஹருன்னிஸாவின் எதிரே அமர்ந்திருக்கிறார்கள். டாக்டருக்கு நடுத்தர வயது. அமைதியான, அழகான முகம். அந்த முகத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் ஒரு புன்னகை. சௌம்யா சொல்லிய அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார். கேட்கக் கேட்க, அவரது முகம் ஆச்சரியத்தில் மிதந்தது. 'பெண்களுக்குக் கல்வியறிவு அவர்களை எவ்வாறெல்லாம் சிந்திக்க வைக்கிறது!' வியப்பின் உச்சிக்கே சென்றார் டாக்டர். 


  "இதான் டாக்டர் இப்ப என்னோட ப்ராப்ளம்!" சௌம்யா முடித்தாள்.

  "நன்றாகச் சிந்தித்திருக்கிறாய் சௌம்யா! ஆமாம், யார் என்னிடம் ஆலோசனை கேட்க முடிவெடுத்தது?"

  "பீட்டரின் அம்மாதான் டாக்டர் சொன்னார்கள்!"

  "மிகச் சரியான அறிவுரை! சௌம்யா, core belief பற்றி நன்றாக உணர்ந்திருக்கிறாய். ஆனால், core beliefs கூட சில சமயங்களில் நம் முன்னேற்றதிற்குத் தடையாகி பல கட்டுப்பாடுகளுக்குள் நம்மைத் தள்ளிவிடும்!"


  "எப்படி டாக்டர்?"

  "உதாரணமாக, 'மது அருந்துதல்' என்ற செயல் பற்றிய உன்னுடைய core belief ம், ஒரு ஆல்கஹாலிக்கினுடைய core beliefம் வேறுபடும்! உன் மனதின் படி நீ மதுவைத் தொட்டாலே உனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படும்! ஆனால், ஒரு ஆல்கஹாலிக்கிற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் தான் குற்ற உணர்வு ஏற்படும்!"

  "அதைத் தானே டாக்டர் நானும் சொல்கிறேன். ஒவ்வொருவர் core belief ம் தனித்தன்மையுடைது என்று!"


  "ஒவ்வொருவர் core belief ம் தனித்தன்மையுடைதுதான். நான் அதைக் கூறவில்லை! ஆனால், ஒரு ஆல்கஹாலிக்கின் core belief அவர் அந்தப் பழக்கத்திலிருந்து மீள விடாது. அதற்கு psychotherapy கொடுத்து, அவனுடைய belief systemமை மாற்ற வேண்டும். அப்போதுதான் அவன் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபடுவான்!"

  "அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் டாக்டர்?"


  "நான் சொல்ல வருவது core belief என்பது, நாம் பிறந்ததிலிருந்து இந்த சமுதாயம், நம் பெற்றோர்கள், நண்பர்கள் உட்பட நம் உள்ளத்தில் விதைக்கப்படும் நம்பிக்கை! அவையனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை! எஞ்ஜினியரிங் படிக்கவேண்டும் என்பது உன்னுடைய ஆர்வமாக இருக்கலாம்! உன் பெற்றோர்கள் சிறு வயதில் இருந்தே நீ டாக்டராக வேண்டும் என்று உன்மனதில் விதைத்திருந்தால், இறுதியில் நீ உன் வீட்டில் அடம் பிடித்து எஞ்ஜினியரிங் சேர்ந்தாலும், உன் பெற்றோரின் உன் மீது செலுத்திய அன்பின் காரணமாக உன்னில் உருவாகிப் பதிந்த எண்ணங்கள், உன்னுடைய சுய எண்ணங்களுடன் முரண்படும் போது உன் மனதில் குழப்பமும் குற்ற உணர்வுகளும் ஏற்படும்.


அது உன் எஞ்ஜினியரிங் ஆர்வத்தைப் பாதிக்க வாய்ப்பிருக்கிறது! குழந்தைகளின் தனித்தன்மையை ஊக்கப்படுத்தப் பெற்றோர்களை அறிவுறுத்துவதன் காரணமும் அதுதான். அதனால் தான் சொல்கிறேன் core belief கூட சில சமயங்களில் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக மாற வாய்ப்பிருக்கிறது என்று. எவை நமக்குத் தடையாக மாறும், எவை நம்மை வழிநடத்தும் என்பதைப் புரிந்து கொண்டால் போதும். பிரச்னை சால்வாகிவிடும்!"


  "அப்படியானால், என்னுடைய மதம் பற்றிய core belief கள் எனக்குத் தடையாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா டாக்டர்?"

  "அதை நீ தான் யோசித்து முடிவு செய்ய வேண்டும்! ஆனால், நீ யோசிக்க நான் ஹெல்ப் பண்ணுவேன்!"

  "என்னால இப்ப இருக்கிற மனநிலையில் எதையும் யோசிக்க முடியலை டாக்டர்!"

  "சரி! இப்ப எல்லா core beliefs களும் நமக்கு நன்மை செய்யாது என்பதைப் புரிந்து கொண்டாயா?"

  "ஓரளவுக்குப் புரிந்து கொண்டேன் டாக்டர்!"

  "ஓரளவுக்கு என்றெல்லாம் சொல்ல முடியாது! இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் மனக்குழப்பத்திற்கு இதுதான் அடிப்படை!"

  "இன்னும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது டாக்டர்!"


  "முற்காலத்தில் 'உடன்கட்டை ஏறுதல்' என்ற கொடிய பழக்கம் சமுதாயத்தில் இருந்ததை நீ படித்திருப்பாய்! ராஜாராம் மோகன் ராய் என்ற மகான் தான் அந்தப் பழக்கம் ஒழியப் பாடுபட்டார்! ஆக, சமுதாயம் நமக்குள் விதைப்பவை எல்லாம் சரியானவை என்று உறுதியாகக் கூறமுடியாது என்பதை ஒப்புக் கொள்கிறாயா?"

  "ஆமாம் டாக்டர்! அதை ஒப்புக் கொள்கிறேன்!"

  "சமுதாயத்தின் கருத்துக்கள் தானே core beliefs ஆக மாறுகின்றன என்னும் போது அவையும் சில சமயங்களில் தவறாக இருக்கும் என்று உனக்குப் புரியவில்லையா?"

  "இப்பொழுது புரிகிறது டாக்டர்!"

  "எனவே, core beliefs அனைத்தையும் நாம் மீண்டும் ஆராய்ந்தே முடிவெடுக்க வேண்டும்! core beliefs தவறாக வழி நடத்தினால், அது நம் வாழ்வின் போக்கை மாற்றிவிடும்!"


  "சரி டாக்டர் மதங்கள் நற்கருத்துக்களைத் தானே போதிக்கின்றன! அவை பற்றிய core beliefs எப்படித் தவறாகும்?"

  "மதங்கள் போதிக்கும் கருத்துக்கள் தவறாகாது! ஆனால், அதைப் போதித்த மனிதர்களின் தாக்கம் உள்ளே இருக்கும்! இந்தத் தாக்கம் சில சமயங்களில் தீவிரவாதிகளையே உருவாக்குவதில்லையா?"

  "இப்போது புரிகிறது டாக்டர்! பிறருக்குத் துன்பம் தராத core beliefs களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் போதும். மற்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை! அதுதானே டாக்டர்?"

  "மிகச் சரியாகச் சொன்னாய்! அது மட்டுமல்ல! பீட்டரைக் காதலிக்க ஆரம்பிக்கும் முன்பே உன் ஆழ் மனதில் ஒரு பிம்பம் உருவாகியிருக்கும். அதுவும் உனக்கே தெரியாமல் இந்த சமூகம் அமைத்தது தான்! அந்த பிம்பத்திற்கு முரண்படாத ஒருவரைப் பார்க்கும் போது, அவர் மீது அன்போ, காதலோ ஏற்பட்டு விடும்! நீ பீட்டரைக் காதலித்ததும் அப்படித்தான். நாட்கள் செல்லச் செல்ல அந்த பிம்பமும் வலுப்பெற்று விடும்! பீட்டரை, திடீரென்று கடவுள் ஒரு இந்துப்பையனாக இப்போது மாற்றிவிட்டால், உனக்குப் பீட்டரின் மீதுள்ள காதல் மறையக்கூடிய வாய்ப்புகளும் உண்டு!"


  "அது எப்படி டாக்டர்?"

  "பீட்டரை, அவன் மதப்பழக்கங்களோடு சேர்ந்த ஒரு முழுமையைத்தான் காதலித்திருக்கிறாய்! அதனால்தான் அவனோடு சர்ச்சிற்கும் அடிக்கடி சென்றிருக்கிறாய்!"

  "நிறைய இந்துக்கள் சர்ச்சுகளுக்கும், நாகூர் தர்ஹாக்களுக்கும் செல்வதில்லையா டாக்டர்! ஏன் பீட்டரும் என்னுடன் கோயிலுக்கு வந்திருக்கிறான்!"

  "மற்றவர்கள் செல்வது கடவுள் மீதுள்ள நம்பிக்கையினால் மட்டும்! நீங்கள் செல்வது கடவுள் நம்பிக்கையுடன் உங்கள் உள் மன பிம்பங்களின் உந்துதலாலும் தான்! பீட்டரும் உன்னை உன் மதப் பழக்கங்களுடன் சேர்த்தே காதலிக்கிறான் என்பதை மறவாதே!"


  "என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை டாக்டர்!"

  "சரி பீட்டரிடம் உனக்குப் பிடிக்காத செயல் ஒன்று சொல்!"

  "அவன் நான் வெஜ் சாப்பிடுவது எனக்குப் பிடிக்கவில்லை டாக்டர்!"

  "அது அவனுக்குத் தெரியுமா?"

  "எனக்குப் பிடிக்காதென்று தெரிந்து நான்வெஜ் சாப்பிடுவதை ஒரு மாதம் நிறுத்திவிட்டான் டாக்டர்!"

  "ஏன் அதற்குப் பிறகு அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லையா?"

  "இல்லை டாக்டர்! நான்தான் எனக்காக நீ உன்னுடைய இயல்பை மாற்றிக்கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன்!"

  "அதைத்தான் நானும் சொல்கிறேன். பீட்டர் எனும் உன் உள்மன பிம்பத்தின் இயல்பு மாறுவதை உன் மனம் அங்கீகரிக்கவில்லை! இப்போது புரிகிறதா?"

  சௌம்யா இப்போது தன்னுள்ளே ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தாள்!


  "ஒரேயொரு சந்தேகம் டாக்டர். இருவரும் வெவ்வேறு மதங்களைப் பின் பற்றினால் குழந்தைகளின் மனதில் குழப்பம் ஏற்படாதா?"

  "கண்டிப்பாக ஏற்படாது. நாம் தான் சமூகம் விதைத்த பல கட்டுப்பாடுகளுக்குள் சிக்குண்டு ஒரு பிரச்னையை அணுகுவோம். ஆனால், குழந்தைகள் இப்பிரபஞ்சம் போன்ற விசாலமான மனதுடையவை! எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும். அவர்களுக்கு இரண்டு மதத்தினுடைய நற்கருத்துக்களையும் புகட்டுங்கள். தானாகவே அவை தனக்குரியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்!"


  சௌம்யாவின் மனது இப்போது அமைதியை ஸ்பரிசித்தது. கண்களில் ஔி மீண்டும் தெரிந்தது. மனம் மகிழ்வின் தீண்டுதலில் இன்பம் கண்டது. மானசீகமாக டாக்டர். மெஹருன்னிஸாவை வணங்கி, விடைபெற்று இருவரும் வெளியே வந்தார்கள். 

  வெளியே லேசான தூறல். சௌம்யா பீட்டரின் கைகளை மென்மையாகப் பற்றினாள். பீட்டரின் உடல் சிலிர்த்தது. சௌம்யாவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். 


   "சாரி பீட்டர். உன்னை நான் ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்!"

  "எதுவும் சொல்லாதே சௌம்யா! இப்போது உன்னை இரண்டாவது முறையாகக் காதலிப்பது போல் உணர்கிறேன்!"

  "ஆமாம் பீட்டர், இவ்வளவு மனக்குழப்பத்திற்குப் பிறகு உன் மேல் எனக்கு வந்திருப்பது இரண்டாவது காதல்!"

  "இப்ப உன் மனசில எந்தக் குழப்பமும் இல்லையே சௌம்யா?"

  "இப்ப என் மனசில நீ மட்டும் தான் இருக்கே பீட்டர்!"

  வெளியே சிறு மழைச்சாரலுடன் தென்றல் வீசியது. அவர்கள் மனதிலும் கூட!



Rate this content
Log in

Similar tamil story from Abstract