Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்12)

இதயத்தில் ஓர் இசை...!(பாகம்12)

5 mins
356


இதயத்தில் ஓர் இசை...!


பாகம் 12


ஹோட்டல் தாஜ். ரம்மியமான ஃபேமிலி ரூம். ஏசியின் மெல்லிய குளிர். மிதமான வெளிச்சம். இளம் காதலர்களுக்கு சொர்க்கம். சுத்தமான யூனிபார்ம் அணிந்த வெயிட்டர்கள் அங்குமிங்கும் விரைந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் விதவிதமான டிஷ்களைத் தாங்கிய அழகழகான பிளேட்டுகள். அவற்றைப் பார்க்கும் போதே நாவில் நீர் ஊறும். எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் வினிதாவும் அருணும் ஃபேமிலி ரூமில் ஒரு டேபிளில் அருகருகே அமர்ந்து இருந்தார்கள். ஒரு வெயிட்டரை அழைத்து தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்தார்கள்.   


வெயிட்டர் சென்றதும் வினிதாவை அருண் வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

"என் அதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். இது கனவா நனவா என்று தெரியவில்லை?" என்றான் அருண். அதைக் கேட்டதும் வினிதா அருணை ஒரு முறை கிள்ளினாள்.

"ஸ்ஸ்ஸ் ஆஆஆ, வலிக்கிறது", என்று அருண் போலியாக கத்த,

"ஸோ, இது கனவில்லை நனவுதான்!" என்று சிரித்தாள் வினிதா.  

"இருந்தாலும் என்னால் நம்ப முடியவில்லை", என்று அருண் மீண்டும் சொல்ல,

மீண்டும் ஒருமுறை வினிதா அவனைக் கிள்ளப் போக, அவளுடைய கைகளைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள் அருண். அவள் கைகளை மென்மையாக வருடினான். அவளும் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


"கிள்ளிய விரல்களுக்கு வலிக்குமோ என்று தடவிக் கொடுக்கிறேன்" அருண் கூற,


"மீண்டும் உங்களுக்குள் உள்ள கவிஞர் வெளியே வர ஆரம்பிக்கிறார்"என்று சிரித்தாள் வினிதா.


"உனது சிரிப்பே ஒரு சங்கீதம் வினிதா"அருண் விடாப்படியாக காதலில் உருக,


"ஐயோ போதும் அருண். வேறு ஏதாவது பேசுங்கள்"என்று வினிதா அவனைக் கிண்டல் செய்தாள்.


"ஆமாம் வினிதா, நீ சியாமளா ஆன்ட்டியின் பெண் என்று தெரிந்தவுடன், உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என நினைத்தேன். நான் பி டெக் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும்போது, நீ லா காலேஜ் இல் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தாய் என நினைக்கிறேன். முதல் வருடத்தில் நீதான் யுனிவர்சிட்டி டாப்பர் என்று சியாமளா ஆன்ட்டி கூறுவார். நீ ஏன் லா பிராக்டீஸ் பண்ணாமல், ஒரு ரிசப்ஷனிஸ்ட்டாக வேலை பார்க்கிறாய்? நான் இதை சாதாரணமாகத்தான் உன்னிடம் கேட்கிறேன். உனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை என்றால் வேண்டாம்" என்றான் அருண். 


"இதற்கு பதில் சொல்வதற்கு என்ன கஷ்டம் அருண்? நான்தான் முதல் வருட படிப்புடன் கல்லூரியில் இருந்து விலகி விட்டேனே! பிறகு எப்படி நான் லா ப்ராக்டிஸ் பண்ணுவது?" என்று வினிதா சொல்ல,


"ஓ மை காட், ஒரு யூனிவர்சிட்டியில் டாப்பர், கல்லூரிப் படிப்பை முதல் வருடத்துடன் விடுவதா, ஏன்?" அருண் ஆச்சரியப்பட்டான்.  


"தீரன், கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு அந்தக் கிராமத்திற்கு வந்தவுடன் நானும் அவனுடன் சென்றுவிட்டேன். அதனால் தான் என்னால் படிப்பைத் தொடர முடியவில்லை"


"நீ படிப்பைத் தொடர வேண்டும் என்று தீரன் சொல்லவில்லையா? வினிதா தயவுசெய்து நான் கேட்கும் கேள்விகளை தவறாக புரிந்து கொள்ளாதே. உன்னுடைய பழைய வாழ்க்கையை நான் கிளறுவதாக எண்ணாதே. நன்றாகப் படிக்கும் ஒரு ஸ்டூடண்ட் தனது படிப்பை முதல் வருடத்திலேயே விட்டு விட்டதை எண்ணி ஒரு ஆதங்கத்தில் கேட்கிறேன். அவ்வளவுதான்!"


"தீரன் கூட சொன்னான் அருண். நான் கண்டிப்பாக படிப்பைத் தொடர வேண்டும் என்று. ஆனால் எனக்கு இந்த எளிமையான வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது அருண். நான் என்ன செய்ய? சொல்லுங்கள்!"


"உனக்கு லா படிக்க பிடித்திருந்தது தானே! எளிமையான வாழ்க்கையும் உனக்கு பிடித்திருக்கிறது. எனவே உனக்கு பிடித்த ஒன்றை உனக்குப் பிடித்த மற்றொன்றுக்காக செய்யாமல் விட்டு விட்டாய் இல்லையா? உனக்கு பிடித்த இரண்டையுமே நீ செய்து இருக்கலாம் இல்லையா? லா படித்துவிட்டு எளிமையான வாழ்க்கையை வாழக்கூடாது என்று யார் சொன்னது?"


வினிதா அருணின் இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் விழித்தாள். லா காலேஜில் முதல் வருடத்தில் இவள் தான் யுனிவர்சிட்டி டாப்பர்! அவ்வளவு விரும்பிப் படித்தாள். பிறகு ஏன் முதல் வருடத்திலேயே இவள் கல்லூரியை விட்டு வெளியே வந்தாள்? தீரன் மேல் உள்ள காதலால் வந்தாளா? தீரனும் அவளைத் தொடர்ந்து படிக்கத் தானே சொன்னான்? பிறகு ஏன் அவன் பேச்சையும் கேட்கவில்லை? தன்னுடைய சோம்பேறித்தனம் தான் காரணமா? எளிமை என்ற பெயரில் தன்னுடைய திறமையை மழுங்கடித்து விட்டாளா? குழப்பம்தான் மிஞ்சியது.


"தெரியவில்லையே அருண்!" என்றாள் தீனமான குரலில்.


"வினிதா, கடவுள் உனக்கு அளவுக்கதிகமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை உபயோகப் படுத்தாமல் வீணடிப்பது தவறல்லவா?" அருணின் இந்தக் கேள்வி வினிதாவிற்கு சரி என்றே பட்டது. ஆமாம் என்பது போல தலையை ஆட்டினாள். இருந்தபோதிலும் காலை நேரத்தில் ஆரவாரமில்லாமல் கடற்கரையில் காலாற நடப்பதும், இயற்கையை ரசிப்பதும் மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் தானே! தனக்குப் பிடித்த வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ரமண மகரிஷியும் மற்ற பல மகான்களும் எளிமையான ஒரு வாழ்க்கையை வாழவில்லையா? அவர்கள் என்ன சோம்பேறிகளா? இல்லை அவர்களுக்கு அறிவுதான் குறைவா? இதை அருணிடமே கேட்டாள் வினிதா.


"வினிதா, ஒவ்வொருவருக்கும் பிடித்த வாழ்க்கையை வாழ்வது அவர்களுடைய உரிமை. அது வேண்டாம் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், கடவுள் கொடுத்த தகுதிகளை உபயோகப்படுத்தி இந்த மனித சமுதாயத்தை மேம்படுத்தினால் அது எவ்வளவு பெரிய சேவை! நீ அந்த கிராமத்தில் நிறைய சேவை செய்திருக்கலாம். அந்தச் சேவையை நிறையப் பேரால் செய்ய முடியும். ஆனால் உன்னுடைய அறிவை உபயோகப்படுத்தி செய்யும் சேவைகளை உன்னால் மட்டும் தான் செய்ய முடியும்! 


ரமண மகரிஷி இந்த மனித சமுதாயத்திற்கு அளவுக்கதிகமான சேவைகள் புரிந்திருக்கிறார். அதற்குக் காரணம் சிறுவயதிலிருந்தே அவருடைய விடா முயற்சியான தியானம்தான். அது எளிமையான வாழ்க்கையா? எவ்வளவு கடினமான வாழ்க்கை! எவ்வளவு பேரால் அதே போல் கடினமாக தியானம் மேற்கொள்ள முடியும்? அந்த ஆழ்ந்த தியானத்தால் கிடைத்த ஞானத்தால் தான் இந்த மனித குலத்துக்கு அவரால் ஆன்மீக வழிகாட்ட முடிந்தது. நிறைய நன்மைகள் செய்ய முடிந்தது"


"நான் கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டதை தவறு என்று சொல்கிறீர்களா அருண்?" வினிதா பரிதாபமாக கேட்க,


"தவறு என்று சொல்லமாட்டேன் வினிதா! சிறுவயதில் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று வேண்டுமானால் சொல்லலாம். உன்னுடைய அம்மாவும் தங்கை மஞ்சுவும் அவர்களுடைய திறமையையும் அறிவையும் உபயோகப்படுத்தி இருக்காவிட்டால் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு நன்மை செய்து இருக்க முடியாது. கோடிக்கணக்கான வாசகர்களின் மன வலிமையை அதிகரித்திருக்க முடியாது. அவர்கள் இருவரும் எங்களுடைய குழந்தைகள் காப்பகத்திற்கும், முதியோர்கள் இல்லத்திற்கும் வழங்கிய நிதி எவ்வளவு தெரியுமா? இன்றைக்கு வரை சுமாராக 5 கோடி ரூபாய்! நீ ஒரு லாயர் ஆக இருந்திருந்தால் எவ்வளவு நீதி கிடைக்காத ஏழைகளுக்கு உதவி செய்திருக்க முடியும்?"   


"அருண் நீ சொல்வதை யோசித்துப் பார்க்கும் போதுதான் நான் செய்தது தவறு என்று புரிகிறது இப்போது அதற்கு நான் என்ன செய்ய முடியும்?"


"நீ செய்தது தவறு என்று ஒருக்காலும் கூறமாட்டேன். அது அறியாப்பருவத்தில் அவசரமாக எடுத்த முடிவு. ஆனால் அதை இப்பொழுது நீ திருத்திக் கொள்ளலாம். நீ மீண்டும் லா படிக்கலாம். இதுதான் என்னுடைய அறிவுரை. ஆனால் இதை உன் மேல் திணிக்க மாட்டேன். நீ மீண்டும் லா சேர்ந்து படித்தாலும் படிக்காவிட்டாலும் எனக்கு உன் மேல் உள்ள காதல் கண்டிப்பாகக் குறையாது" அருண் உறுதியான குரலில் கூற, தனக்குள் ஒரு தெளிவை உணர்ந்தாள் வினிதா. தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அக்கணமே முடிவு செய்தாள். லா காலேஜில் சேர்ந்து தன் படிப்பை மீண்டும் தொடர மனதுக்குள் உறுதி பூண்டாள்.   


வெயிட்டர் உணவு ஐட்டங்களைக் கொண்டுவர இருவரும் மௌனமாகச் சாப்பிட்டனர். அந்த மௌனம் இருவருக்கும் ஏதோ அதிசயமாகப் பட்டது. ஆனால் அந்த மௌனத்தில் இருவருக்கும் எந்த சங்கடமும் இல்லை. மிகுந்த நெருக்கமானவர்கள் இடத்தில் ஏற்படும் மௌனத்தை ஒரு comfortable silence என்று சொல்வார்களே. அதை இருவரும் உணர்ந்தார்கள்.   


"ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அருண்" உண்மையிலேயே அனிதா இதயபூர்வமான தொணியில் சொல்ல, நெகிழ்ந்து போனான் அருண்.


"எனக்கு தேங்க்ஸ் சொல்லி என்னை ஒரு அந்நியனாக்க வேண்டுமா வினிதா? நான் தான் உன் மனதை காயப்படுத்தி விட்டேனா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்"


அருணின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், வினிதாவிற்கு அவன்மேல் உள்ள காதல் இன்னும் அதிகரித்தது. அவனுடைய கைகளை மென்மையாகப் பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அந்த அழகான கரங்களுக்கு தன் இதழ்களால் ஒரு முத்தம் கொடுத்தாள். அருண் இவளை இவ்வளவு நாட்கள் மிஸ் பண்ணி விட்டோமே என்று ஏங்கினான்.


இருவரும் உணவை முடித்தபின் கோடம்பாக்கத்தில் இருக்கும் வினிதாவின் அம்மா வீட்டுக்குச் சென்றார்கள். வினிதாவின் அம்மா சியாமளா கதவைத் திறந்ததும், முதலில் அருணைத் தான் பார்த்தார்.


"ஹாய் அருண்! வாட் எ ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்! வினிதா சொன்ன அந்த விஐபி நீதானா? ஓ மை காட், உன்னைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு! வா வா உள்ளே வா. அம்மாவும் அப்பாவும் நல்லா இருக்காங்களா? இன்னைக்கு உன்னோட மேட்ச் பார்த்தேன். வாவ், பிரில்லியன்ட்!" அம்மா அருணின் மீது புகழ்ச்சிகளை அள்ளிக்கொண்டு வீசி, அருணைத் திணறடிக்க, 

"அம்மா நானும் வந்திருக்கிறேன்", என்று வினிதா தன்னையும் அம்மாவுக்கு உணர்த்தினாள். 


"ஆன்ட்டி, வினிதா உங்கள் பெண் என்று தெரியாமலேயே நானும் வினிதாவும் பிரண்ட்ஸ் ஆகிவிட்டோம்", அருண் சொல்ல 


"ஏய் நாட்டி பாய், வெறும் பிரண்ட்ஸ் மட்டும் தானா?"என்று பூடகமான ஒரு புன்னகையுடன் சியாமளா வினவினார். அதற்கு அருணின் வெட்கத்தைப் பார்த்து,"சரி சரி ரொம்ப வெட்கப்படாதே. நான் புரிந்து கொண்டேன்" சியாமளா அருணின் முதுகில் செல்லமாகத் தட்டினார். அருண் நெளிந்தான்.


"சரி ரெண்டு பேரும் ஏதாவது சாப்பிட்டீங்களா? இல்லை ஏதாவது இங்கேயே ஆர்டர் பண்ணட்டுமா?"


"அம்மா எதுவும் வேண்டாம். நாங்கள் வரும் வழியிலேயே சாப்பிட்டுவிட்டு வந்து விட்டோம். அப்புறம் ஒரு விஷயம். நான் என்னுடைய கிராமத்து வீட்டை காலி செய்துவிட்டு இங்கு வந்து உன் வீட்டில் தான் இனிமேல் தங்கப் போகிறேன். இன்னொரு விஷயம். நான் மறுபடியும் லா காலேஜில் சேர்ந்து என்னுடைய படிப்பைத் தொடரப் போகிறேன். இதில் உனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லையே!" வினிதா சொல்ல,


"இரு இரு, என்ன ஒரே சமயத்தில் பல இன்ப அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்? உன் அம்மாவின் இதயம் தாங்கிக் கொள்ள வேண்டாமா? நீ லா காலேஜில் சேர்ந்து படிப்பதெல்லாம் சரிதான். ஆனால் நீ இங்கு தங்க முடியாதே! அருணுடன் அவன் வீட்டில் அல்லவா நீ தங்க முடியும்?" என்று சியாமளா கேட்க, அருணும் வினிதாவும் ஒருவரையொருவர் பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டார்கள். 


வினிதா அருணின் அம்மாவை செல்போனில் தொடர்பு கொண்டு, இவளுடைய அம்மாவிடம் கொடுத்தாள். இருவரும் நீண்ட நாள் கதைகளைப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். வினிதாவும் அருணும் மொட்டை மாடிக்கு சென்றார்கள். இரவு நேரத் தென்றல் காற்று இருவரையும் இதமாகத் தழுவியது. அருண் வினிதாவை மென்மையாக அணைத்துக் கொண்டான். வினிதாவும் அருணின் அணைப்பில் தன்னை மறந்தாள். உண்மையான காதலில் இருவரும் உலகம் மறந்தார்கள்.


         ____முற்றும்____                


       


                                            

       



Rate this content
Log in

Similar tamil story from Romance