மதுரை முரளி

Romance Classics Thriller

5.0  

மதுரை முரளி

Romance Classics Thriller

" இதயம் அழி- இதையும் அழி"

" இதயம் அழி- இதையும் அழி"

8 mins
534


                    


       “ ஊத்து” - கொடைக்கானல் மலையில் நடுமலைப்பகுதி.    

       கொடைக்கானல் குளிரில் பாதியைப் போர்த்திக் கொண்டு, சற்றே ‘சுரீர்’வெயிலில் இலேசாய் இதமாய் விடிந்திருந்தது. மூச்சு வாங்க ஏறும், மூச்சு விட இறங்கும் வாகனங்களின் சந்திப்பாய் அது.

       பலவகைப்பட்ட செடி, கொடிகளின் இயற்கை வாசம் , மனதையும், நரம்புகளையும் உயிர்ப்பூட்ட, சுற்றுலா பயணிகளின் தாக சந்திப்புக்கான இடைநிறுத்தமாய் ‘ஊத்து’ .

      “ ரேணு., நம்மளோட இந்த கொடைப்பயணம் மூணா?, நாலாவதா? “ போட்டிருந்த ஜெர்க்கினைச் சற்றுத் தளர்த்தியவனாய் மகேஷ்.

     “ ஹேய்., உனக்காத் தெரியாது? இது நாலு.” திருமண நிச்சயம் முடிந்த ரேணுகா, செல்லமாய்த் தன் வருங்காலக் கணவன் மகி என்ற மகேசை செல்லமாய் முதுகில் குத்தினாள்.

     “ இல்லை ரேணு. எனக்குள்ள சின்ன குழப்பம் . ஆனா, நம்ம நிச்சயத்துக்கு முன்னாடி எப்படியோ? பின்னாடி இதுதான் முதல் பயணம். “ என்றவனாய் ஓட்டி வந்த பைக்கை ஓரம் கட்டி இறங்க,அவனோடு ஒட்டிக்கொண்டு நடந்தாள் ரேணுகா. 

     கண்களை விரித்து, மகியின் கையை கெட்டியாய்ப் பிடித்தவள்,   

    “ இன்னிக்கு ரொம்ப குளிருது மகி “ என்றவள் அவன் மீது சாய,

    “ எல்லாம் நம்ம நன்மைக்கே “ தன் தோள்களைக் குலுக்கி சிரித்தான் அவன்.

    ‘ சிலுசிலு’ வென காற்று இவர்களை தழுவிக் கடந்தது.

    ரோட்டோரக் கடையில் சூடாய்ப் பஜ்ஜி கூடவே கருப்பு தேநீர் சொன்னவன்,

   “ இன்னும் எனக்கு நம்ப முடியல. நாலு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு நீ, எங்க வீட்டுக்குள்ள நுழைந்து நம்ம காதல் இரகசியத்தை உடைச்சே பாரு மகி., ரொம்ப துணிச்சல் உனக்கு . “ சில்லிட்டுப் போன தன் கைகளை மகேஷின் ஜெர்கினில் நுழைத்து, தானும் நுழைந்து கொண்டாள்.

    “ தம்பி சூடா பஜ்ஜி சாப்பிடுங்க. மாசாமாசம் வர்றீங்களே.. எப்ப கல்யாணம் ? “ பெரிய குங்குமப் பொட்டோடு தேநீர் பெரியம்மா வினவ,

   “ அ., அது, ஆன மாதிரி தான். போன மாசம் நிச்சயமாயிடுச்சு. சந்தேகமா பார்க்காதீங்க. இதோ..” குறும்பாய் மகி தன் அலை பேசியை உயிர்ப்பித்து, போட்டோக்களை அவங்களிடம் காண்பிக்க,

   “ அதுக்கில்லே தம்பி. சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன். ஏன்னா, உங்க ரெண்டு பேரோட வயசு அப்படி. என் கண்ணே பட்டுடும் போல “ தேநீர்க் குப்பிகளை கீழே வைத்து,

    காற்றிலேயே இவர்களுக்குத் திருஷ்டி கழித்தாள் அவள்.

   “ மகி, கொஞ்சம் தள்ளிப்போய் குடிப்போம். பெரியம்மா வேற, பெரிய போலீஸ் பார்வை பார்க்குது. “ சொன்ன ரேணு, இரகசியமாய் மகியின் காலை ஓங்கி மிதிக்க,

   " ஆ" செல்லமாய் கத்தி, வலித்தது போல் நடித்தவன் , ரோட்டோரத்துக்கு நகர்ந்தான் ரேணுவுடன். .

    “ ரேணு, எப்போதுமே நம்ம மனசுக்கு சரின்னு படறதை, ‘பட்’ டுனு சொல்லிடணும்...அது எதுவாயிருந்தாலும். நீ தான் ரொம்ப யோசிப்பே"

    “ மகி, நீ முதன்முதல்ல, எனக்காக எழுதின அந்தக் கவிதையைச் சொல்லு . அதுவும் டவுன் பஸ்ல , நீ ஒரு சீன் பண்ணி , அதையே வைச்சு கவிதை எழுதின பாரு!.” குலுங்கி, குலுங்கிச் சிரித்தாள்.

   “ ஓ.., அதுவா? அதைத்தான் கவிதையா எழுதிட்டேனே . சரி, இதோ.. இப்ப. உனக்காக.. மறுபடியும். “ 

                அவள் 

             சிரித்த சிரிப்பில் 

            இவன் சில்லறையை 

            கீழே தொலைக்க..

            கடுப்புடன் கண்டக்டர்!

           “ காதல் காணிக்கை 

            அது” எனக் காரணம் புரியாமல் 

                அவர்!

    இது அன்னைக்கு உன்னை முதன்முதலா சந்திச்சப்போ.. “ 

சொன்னவன்,

    “ அன்றைய அவள்.. இன்று என்னவள் “ என எதுகை மோனையாய் முடிக்க,

    “ சீ ” சில வினாடி நேரம் வெட்கப்பட்டு தலை கவிழ்ந்தாள் ரேணு. 

   வெண்பனிக் கூட்டம் ஒன்று, ஒரு போர்வையாய், மகேஷ் - ரேணுகாவை மூடிச் செல்ல ,

   ‘சட்’ டென மகியின் ஜெர்கினுக்குள் மேலும் புதைந்து கொண்டாள் ரேணு.

    வானத்தைப் பார்த்து, வாயைத் திறந்து, பனிப்படலத்தை உறிஞ்சி

 ‘ஆ’ என வாய் வெளியே பனிப்புகையாய் வெளிவிட்டவனாய்,

   “ ஓ., அற்புதம். “ எனத் தனக்குள் முனகினான் மகி.

   “ எ..என்ன? “ ரேணு. 

   அருகில் வந்த அடுத்த மேகக்கூட்டத்தை இவன் காட்ட,

   “ முடியலை. “ வார்த்தைகளின் வழியே வாயில் தந்தியடித்தாள் .

   “ ரேணு, இப்படியே தொடர்ச்சியா பனிக்கூட்டம் வந்தா.. நாம இப்படியே இருக்கலாமேன்னு பார்க்கிறேன் “ என்றவனாய்க் குறும்பாய் ரேணுவின் காதைக்கடிக்க,

   “ போடா..பொறு..” கெட்ட வார்த்தைப் பேசி, மகியின் நெஞ்சில் குத்து விட்டு, அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள் ரேணு.

   “ மகி, இப்பவே பாதிக்கு மேல மலை தெரியல. நாம சீக்கிரமா கோடை ஏரிக்கு போனாத்தான், படகு சவாரி போக முடியும். அப்புறம் , இருட்டறதுக்குள்ள கீழே வேற இறங்கணும் . இல்லைன்னா, வீட்ல பிரச்சனை ஆயிடும் “ மகியின் கைப் பிடித்து இழுத்து,

    பைக்கின் சாவியை மகியிடம் வாங்கி, இன்ஜினை உசுப்பி, மகியுடன் பைக்கில் தாவி ரேணு ஏற,

    மகி- ரேணுவின் காதல் பயணம் மீண்டும் உற்சாகமாய்த் தொடங்கியது கொடைக்கானல் மலையை நோக்கி.

   அதே சமயம்,

   ரேணுவின் அம்மா சிந்து, தன் கணவர் குமாருடன் வீட்டில் கருத்து மோதலில் இறங்கியிருந்தாள்.

   “ இதப் பாருங்க. நமக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு ரேணு. அவளோட வாழ்க்கையும், எதிர்காலமும் நல்ல வசதியோட அமைஞ்சா நமக்கு தானே நல்லது . “

   “ அதுக்கு ? உன்னோட இந்தப் போக்கு எனக்கு பிடிக்கல. இந்தப் பேச்சு வேணாம். இதை , இப்படியே விட்டுடு. நம்ம ரேணுவுக்கும், அவளை உயிருக்கு உயிரா காதலிக்கிற மகேசுக்கும் நிச்சயம் பண்ணியாச்சு . அவன் நல்ல தரமான பையன். இப்பத்தான் , ஒரு பெரிய கம்பெனியில் பொறியாளராக சேர்ந்திருக்கான் . இனி, படிப்படியா..”

   “ படிப்படியாவா?.. ஆமா., அவன் ஒவ்வொரு படியா ஏறி, சிகரத்தை தொடுவான் பாருங்க. ஆனா, அதைப் பார்க்கத்தான் நாம இருக்க மாட்டோம். “ கோபமாய் சிந்து கத்த,

   “ அடடே, அக்கா என்ன இப்படி கத்தற? உன் குரல் தெருமுனைக்கே கேட்குது. “ சொல்லியவாறு உள்ளே நுழைந்தான் விமல்குமார் .

   “ வாடா தம்பி விமல். பின்னே என்னடா? நாமளும், நம்ம ரேணு - மகேஷ் காதலை, பல வகைகளில் தடுக்க அவகிட்ட பேசிப்பார்த்தோம் . முடியலை. அந்த பையனுக்கு , அவங்க அம்மாவை விட்டா ஒரு நாதியில்லை. சொந்தமா ஒரு வீடு கூட இல்லை. இதில, உங்க மாமா.. அதான் இவரு , அந்த மகேசே போதுங்கிறாரு. “

   “ இங்கே பாருங்க மாமா. ரேணுவைச் சரி கட்டத்தான், நாம நிச்சயதார்த்தம் மாதிரி செய்ய ஒத்துக்கிட்டது. அதை முதல்ல, நல்லா புரிஞ்சுக்கோங்க. இப்ப, என் பொண்டாட்டி வழியில, நல்ல அருமையான வரன் வந்திருக்கு . பையனுக்கு வளைகுடா நாட்டில பெரிய வேலை. வெறும் பத்து வருஷத்துல, பல கோடி பார்த்திடலாம். நீங்க ‘கம்’முனு வேடிக்கை பார்த்தாப் போதும் . நானும், அக்காவும்..”

   விமல் பேச்சை ஆக்ரோஷமா இடைமறித்த குமரன்,

  “ இங்கே பாரு. ஒரு ஜோடியைப் பிரிக்கிறது பெரிய பாவம். என் பொண்ணு ரேணு, அவ ஆசைப்படி தன் காதலனை மணக்கறது தப்பா? உங்க அக்காவை தப்பா வழி நடத்தாதே உன் சுயநலத்துக்காக. “

  “ நிறுத்துங்க . நீங்க கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வாங்க. நாங்க பேசுவது உங்களுக்குப் புரியாது. பிடிக்காது “ எனத் தன் கணவனைச் சாதுரியமாய் பேசி சிந்து வெளியேற்றினாள்.

   கோபமாய் குமரன் புறப்பட்டதும், மகி- ரேணு காதலைப் பிரிக்க சகுனி ஆட்டத்தை தொடங்கினார்கள் சிந்துவும் விமலும் .

   தொடர்ந்த அவர்களது இந்தப் பேச்சு சதி திட்டமாய்த் தீவிரம் பெற்றது.

   “ விமல், நீ சொன்னேங்கிறதுக்காகத்தான் நம்ம ரேணுவை பைசா பிரயோஜனம் இல்லாத அந்த பயலுக்கு, வெட்டிப்பய மகேஷுக்கு நிச்சயம் பண்ணினோம். இப்ப உன்னோட திட்டம் தான் என்ன ? “ குழப்பமாய்ச் சிந்து வினவ, 

   “ அக்கா., ஒண்ணு புரிஞ்சுக்க. நம்ம கால வாழ்க்கை வேற . உன்னையும், என்னையும் மாதிரி, ‘பெத்தவங்க வாக்கே.. வேத வாக்கு’ அப்படின்னு மதிக்கிற காலம் மாறி , மாறி இப்ப மறைஞ்சுகிட்டு வருது. நான் அதிகமா வெளியுலக தொடர்பில உள்ளவன் . அதனால தான் சொல்றேன். ரேணுவோட வயசு அப்படி. அவ கருத்தையே தான் உறுதிப்படுத்தி பேசுவா. அதனாலதான், முதல்ல அவ, அந்த மகேசை, தன் காதலனா அழைச்சிட்டு 

வந்தப்போ.. நல்ல வேலை நான் வீட்ல இருந்தேன் . சூழ்நிலையைப் புரிஞ்சு, அவளை, அவ கருத்தை, உன்னைய ஏத்துக்கச் சொன்னேன். இல்லை, அவங்க ஓடிப்போயிருப்பாங்க. “

    “ ஆனா, இப்ப நிச்சயமே முடிஞ்சிடுச்சுசே. நம்ம அந்தஸ்து என்ன? அவன் வெறும் பய. இப்போ எப்படி? “ கலக்கமாய் சிந்து.

    “ புரியுது. அதான், அவ கிட்ட கல்யாணத்துக்கு நேரம் , காலம் பாக்கணும்னு அப்பவே சொல்லிட்டேன். இவங்க ரெண்டு பேரோட ஜாதகத்திலும் பொருத்தம் ரொம்பக்குறைவு. அதையே , நாம , நமக்கு சாதகமாக மாத்தி..’

   “ மாத்தி? ..” புரியாது முழித்தாள் சிந்து.

   “ இவளோட, அதாவது ரேணுவோட உயிருக்கு ஆபத்துன்னு ஒரு விபரீத வாக்குப்பலனை தயார் பண்ணிட்டேன். அதுக்கும், ஒருத்தரை பேசி வைச்சிட்டேன் “ எனத் தன்னுடைய பகடையை உருட்டத் தொடங்க,

சிந்து, தம்பி விமலின் விபரீதச் சிந்தனையில் மெல்லச் சரிந்தாள்.

    கொடைக்கானல் போய் வந்த களைப்பில், பூரிப்பில் ரேணுவின் இரண்டு நாட்கள் நீண்டு நகர்ந்தன. 

   “ ரேணு, என்ன ரொம்ப பரபரப்பா தெரியற. பக்கத்தில வாம்மா “ விமலின் வினாவிற்கு , மழுப்பலாய்ச் சிரித்தாள் ரேணு.

   “ சரி, சரி ஒரு முக்கியமான விஷயம். நம்ம குடும்பத்துக்கே பிரசன்ன பலன் பார்க்கிறவரை நாம நேர்ல பார்க்கணும். இன்னைக்கு கல்லூரி முடிந்ததும், நாம அங்கே போறோம் “ விமலின் வார்த்தையில் இருந்த பாசமான அழைப்பில் கட்டுண்ட ரேணு,

  “ அம்மா வருவாங்கல்ல ? ” வினவவே,

  “ என்ன இப்படிக் கேட்டுட்ட? அக்கா இல்லாமலா ? அப்பாவுக்கு, இது தெரிய வேண்டாம் . அவருக்கு இதெல்லாம் பிடிக்காது. “ என முளையிலேயே அவரைக் கிள்ளி எடுத்து விட்டான் விமல்.

   அரை மனதாய்ச் சம்மதித்த ரேணு, அம்மா மற்றும் மாமா சகிதம் ஜோதிடரைச் சந்தித்தாள்.

   பதினைந்து, இருபது நிமிடச் சோழி உருட்டலுக்குப் பின், விமலின் விருப்பம் அதில் பலனாய் வந்தது.

   “ இதோ பாரு மகளே. நான் பல காலம் இந்த சக்தியைக் கை கூடினவன். ஒரு விஷயம் சொல்றேன். தீர்க்கமாச் சொல்றேன். நீ மனசுல வரிச்ச ஆளு நல்லவன் தான். ஆனா, இதனால உனக்கு ஒரு பெரிய சம்பவமே நடக்க போகுது . “ அவரின் வார்த்தை விவரிப்புகள் ரேணுவை மிரளும் நிலைக்கு நகர்த்தத் தொடங்கியது.

   “ என்ன இப்படி, எங்க பொண்ணைப் பயப்படுத்தறீங்க? நாங்க நிச்சயம் முடிச்சு, கல்யாண தேதி கேட்க வந்திருக்கோம். “ சற்று பதைபதைப்பை பேச்சில்க் கூட்டி, விமல் வினவ,

  “ பெரியவங்க நீங்களும் கவனிங்க . யாராவது குடியிருக்க வீட்டை அன்னிய ஆளுக்காக கொளுத்துவாங்களா?அப்படி இங்கே சகுனம் காட்டுது... மகளே . அந்த ஆளை நீ மனசுல வரிச்ச நேரம், உனக்கு 

ஜீவதோஷம் உண்டாயிடுச்சு . “ அவர் தன் வாக்கை நிறுத்தி, தன் பெரிய கண்களை உருட்ட,

   சிந்து உள்பட அனைவரும் மிரண்டு போனார்கள்.

   “ எ., என்னச் சொன்னீங்க?” சிந்துவும், ரேணுவும் ஒரு சேரப் பதற,

   “ ஆமாம் மகளே. உன் வாழ்க்கை தடை மட்டுமல்ல இடப்பட்டு போகும். புரியுதா? இடையில, பட்டுப்போகும் “ தொடர்ந்த அவரின் மிரட்டலின் முடிவில், விமல் விரித்த வலையில் விழுந்தாள் ரேணு. 

   அடுத்த பதினைந்து நாட்களில் ரேணுவும் , மனசுக்குள் கலைந்து போனாள்.

   விமல் மற்றும் சிந்துவின் முகங்களின் நல்ல தெளிர்ச்சி.

   ரேணுவின் அப்பா குமாரும் , தனது மகளின் உயிர் பயத்தில் வாய் திறக்காது போக,

   அடுத்த கட்ட ‘சதுரங்க காய் வெட்டு’ க்கு ரேணுவைத் தயாராக்க தொடங்கினான் விமல் .

   “ ரேணு, மாமா சொல்றதில உனக்கு ஏதாவது மன வருத்தமிருந்தா நேரடியா என்கிட்டச் சொல்லிடு. “ என்றவனாய் அவள் கையைப் பிடித்து அழுத்தினான் விமல்.

   “ ஆமாடா செல்லம். நீ உன் காதலை சொன்னப்ப, மாமா சொல்லித்தானே நான் ஒத்துகிட்டேன். அதனால, நானும், மாமாவும் சொல்றது, எப்போதும் உன் நல்லதுக்கு தான் . இப்பப்பாரு, நம்ம அப்பாவும் இதற்கு சம்மதிச்சிருக்காரு. “ குமார் அலுவலகம் போய்விட்டச் சூழ்நிலையை, நன்றாக சிந்து பயன்படுத்திக் கொண்டாள்.

  “ அ., அது, நான் அவரை எப்படிப் பிரிவேன்? அதுக்கு அவர் சம்மதிக்க மாட்டேங்குறாரு. நேர்ல, உங்களைப் பார்க்க வர்றதாச் சொன்னாரு. “ குழம்பியவளாய் ரேணு. 

  “ கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப் பயிரு. நீயும் சரி, அந்தப்பையனும் நல்லாருக்கணும். அதானே முக்கியம். இப்ப நடந்தது, வெறும் நிச்சயம் தானே. அவங்க பக்கம் , அந்த அம்மா மட்டும் தானே. சுலபமா சரிக்கட்டிடலாம். ஆனா, அதுக்கு முன்னாடி, மகி கூட நீ நெருக்கமா இருந்த போட்டோக்களை அழிச்சிடு. அவன்கிட்டயும் சொல்லி, அதை அழிக்க வைக்கணும் . கூடிய சீக்கிரமே , அவனை நீ மறக்கணும். “ விமல் விவரிக்க, விவரிக்க,

   பதட்டமான ரேணு, “ அவர் இதுக்கு முடியாதுங்கிறாரு. என்னையப் போய் இப்படி மாட்டி விடுறீங்களே?” ரேணு கண் கலங்க,

   கோபத்தின் உச்சிக்குப் போனாள் சிந்து.

   “ முடியாதா? அவன் என்ன பெரிய ஹீரோவா? நம்ம முடிவை அவன் ஏத்துக்கலைன்னா, அவன் கதையை முடிச்சிடுவோம் “ ஆவேசமாய்க் கத்த,    

   “ஐயோ” என அலறிய ரேணுகா, காதைப் பொத்திக் கொண்டாள்.

   “ இ.. இங்கே பாரு ரேணு, அந்த போட்டோக்களை அவன் சமூக வலைதளங்களில, பதிவு செய்திட்டா, அப்புறம் பெரிய சிக்கல்ல, நாம மாட்டிக்கணும் “ விமல் சொன்னதும் 

   “ அப்படித்தான் சொன்னாரு. எல்லா போட்டோவையும் சமூக வலைதளங்களில போடுவேன் . உன்னை எப்படியாவது அடைந்தே தீருவேங்கிறாரு” மீண்டும் ரேணு அழத்தொடங்க,

   ‘சட்’டெனத் தன் பார்வையால் சிந்துவை அமைதிப்படுத்திய விமல்,

   “ இப்ப புரியுதா அவன் எவ்வளவு ஆபத்தானவன்னு? . இனிமே, நாம ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும். இனிமே, நாங்க சொல்றத மட்டும் நீ கேளு, அதையே செய். அடுத்து என்ன செய்யறதுன்னு சீக்கிரத்திலேயே முடிவு பண்ணிடுறேன் “ என அவசரமாய் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த விமல்,

    மேலும் நான்கு நாட்களை கடத்தினான்.

    இதற்கிடையில், செய்தித்தாள் ஒன்றில் , காதலன் ஒருவன், காதலியின் தகவல்களை தவறாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த சம்பவம் ஒன்று பரபரப்பாய் வெளிவர, சுறுசுறுப்பானான் விமல்.

    அக்கா சிந்துவை சந்தித்தவன் , அடுத்த, இறுதிக்கட்ட ஆலோசனையில் இறங்கினான் .

    “ டேய் விமல், என்னடா ரேணு, அவ்வளவு சீக்கிரம் மனசு மார்றமாதிரி தெரியலையே. அடுத்தாப்புல, எப்படி அவளை? “ சிந்து முடிக்கும் முன்,    

    “ புரியுது உன் கவலை. இதோ , இந்த செய்தித்தாள் செய்தி பார்த்திருப்பியே .இதை காட்டி ரேணுக் கிட்டப் பேசப்போறேன். இனிமே, இதுதான் ரேணுகிட்டப் பேசும் . அவளை, நாம நினைக்கிற மாதிரி மாத்தும். அதுக்கப்புறம், நான் சொன்னபடி சில மாசம் கழிச்சு, கையில உள்ள அந்த வளைகுடாப் பையனுக்கே ரேணுவை மணமுடிச்சு, நம்ம நாட்டில இருந்து அவளை வெளியே நகர்த்திட்டா, எல்லாம் முடிஞ்சிடும் “ என விமல் சொல்லிவிட்டு,

     தன்னுடைய ரகசியத்திட்டத்தை அக்கா சிந்துவிடம் விவரித்தான்.   

     முதலில் பயந்த சிந்து, அடுத்து விமலின் பணம் மற்றும் வசதி வளையில் விழ, 

    அக்கா, தம்பி இரண்டு பேரும் சேர்ந்து ரேணுவை சதி வலையில் சிக்க வைத்தனர்.

    அதுவும், ரேணுவுக்கு தெரியாமலேயே, மகேஷிற்கு கொடுத்து அனுப்பிய குளிர்பான பாட்டிலில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர்.   

    ஆனால், அந்த கொலை முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடையவே,

தீவிரமான மருந்து ஒன்றை அதே முறையில் கலந்து கொடுத்தனர் மீண்டும்.

    அந்த நாளும் வந்தது .

    ரேணுவும், மகேசும் வழக்கமான ‘ஊத்து’ நிறுத்தத்தில் நிற்க,

    அவசரமாய் இயற்கை உபாதைக்காக பஞ்சாயத்து கட்டணக் கழிப்பறைக்கு போனாள் ரேணு.

    மகேஷிற்கும் , கொஞ்ச நாட்களாய் ரேணுவின் செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்தது.

   ரேணுவோடு ஒவ்வொரு முறையும், தான் வெளியே பயணித்து திரும்பியதும், ஏதோ ஒரு மாற்றம் தன் உடல் நிலையில் வருவதை உணர்ந்தான் மகேஷ்.  

   இருப்பினும், ரேணுவின் மீது இருந்த காதலில் மாற்றம் இல்லாதிருந்தான். அதுபோல ரேணுவும் மாறவில்லை என்று முழுமையாய் நம்பினான்.

   'சட ,சட’ வென கொட்டிய மழைத்தூறல்கள், பணியின் குளிர்ச்சியை உடம்பில் கொட்டியது.

   யோசனையாக் காத்திருந்த மகேஷ், அவளது செல்போனில் குறுந்தகவல் வந்த ‘எச்சரிக்கை மணி ’ கேட்டுத் திரும்ப , ரேணுவின் அலைபேசி அவளது கைப்பையோடு வண்டியிலேயே தொங்கியது கண்ணில் பட்டது.

   அவசரமாய் ,அந்த அலைபேசி மழையிலிருந்து நனைவதைத் தடுக்க கையில் எடுத்தவன்,

   எதேச்சையாக அந்த குறுந்தகவலைப் பார்க்க..

  “ அழி. இதயம் அழி. இதையும் அழி “ வாசகம் சிவப்பாய்க் கண் சிமிட்டியது.

   பதட்டத்தில் சில நிமிடங்கள் உறைந்தவன், ‘பட்’டென அதை அழித்து, உள்ளேயும், வெளியேயும் சுனாமியாய்ச் சுதாரித்தான்.

   ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் படபடப்பாய், பரபரப்பாய் நகர, அதோ... ரேணு. 

   நடையில் எப்போதும் உள்ள துள்ளல்கள் தொலைந்திருந்தது.

  மெல்ல மகியின் அருகில் வந்தவள்,

  “ எனக்கு ரொம்ப கிறக்கமா இருக்கு மகி. நாம குளிர்பானம் குடிக்கலாம் இந்தாப் பிடி. “ 

   தயாராய், தயாரித்து வைத்திருந்த குளிர்பானப் பாட்டிலை எடுத்து நீட்டினாள்.

   “ எ.. என்ன ரேணு? உடம்பு சரியில்லையா? உன் கை ஏன் இப்படி நடுங்குது? “ கேட்டவாறே அவள் கையில் இருந்து அதை வாங்கினான் மகேஷ்.

   “ அ.. அது , குளிரு. நானே இதை முதல்ல இதை குடிக்கிறேன். அப்புறம் நீ குடி “ சொன்ன ரேணு திடீர் திருப்பமாய் ‘மடமட’வென குளிர் பானத்தைக் குடித்து விட, 

   துடிதுடித்துப் போனான் மகேஷ். 

    “ மகி, என்னால முடியல. எங்க வீட்டுல உன்னை தல முழுகச் சொன்னாங்க. அதோட உன் கதையை முடிக்கச் சொன்னாங்க. நான் மறுத்துப் பார்த்தேன். இப்ப நான் குடிச்சதுது, விஷம் கலந்து, கொண்டு வந்த குளிர்பானம். உன் கையிலேயும் அதுதான். நம்ம காதல் உண்மைன்னா.. நீ விரும்பினா, இதைக் குடிக்கலாம். என்னைய மன்னிச்சிடு. “ கண்ணீர் மல்க , மகேஷின் காலில் விழுந்து கதறினாள். ரேணுகா. 

   “ ஐயோ ரேணு என்னக் காரியம் பண்ணிட்டே? நாம வாழப்பிறந்தோமா? இல்லை இப்படி சாகப் பிறந்தோமா? உண்மையானக் காதல் எந்த காலத்திலும் சாகாது. நம்ம காதலும், காலம் கடந்து நிற்கும். உன்னைய நானும் கொஞ்சம் சந்தேகப்பட்டது உண்மைதான். என்னைய மன்னிச்சிடு. நம்ம காதலுக்கு அழிவே கிடையாது . “ சொல்லியவாறு மகேசும், 

    ‘மடமட’ வென ரேணு கொடுத்த குளிர்பானத்தை குடித்தவாறே அவள் மீது சரிந்தான்.

    இடையில் சற்று நின்றிருந்த மழை , மீண்டும் தொடங்கி இவர்களை நனைக்க,

    ரேணுவை அப்படியே தன்னுடைய ஜெர்கினில் கட்டியணைத்தவன்,

   “ அட அசடே ! நீ கொண்டு வந்த விஷ மருந்து குளிர்பான பாட்டிலை ஐயா மாத்திட்டேன். பதட்டத்தில, நீ அதை கவனிக்கலை. இப்ப, நீயும் நானும் குடிச்சது வெறும் குளிர்பானம் தான். இனி, நம்மளை எந்த சக்தியும் பிரிக்க முடியாது. நான் எப்படி சுதாரிச்சேங்கிற விவரத்தை அப்புறமா சொல்றேன். இனிமே தான் , நம்முடைய இந்த காதல் , கல்யாணப்பயணம் வெற்றிகரமாய்த் தொடங்கப்போகுது . “ என்றவனாய்ச் சிரித்தவாறே செல்லமாய் அவள் காதைக் கடிக்க ,

   அதிர்ச்சியும், ஆனந்தமுமாய் முழித்த ரேணு,

   “ போடா., பொறு..” மீண்டும் சொல்லி, அவன் மார்பில் தன் தலையால் முட்ட,

     இரண்டு பேரும் ஒரு சேர உருண்டார்கள் ரோட்டில்..’ ஊத்தில்’. அங்கே காதல் ஊற்றெடுத்து, அருவியானது. 

      

 



Rate this content
Log in

Similar tamil story from Romance