மதுரை முரளி

Classics Inspirational Others

5  

மதுரை முரளி

Classics Inspirational Others

தப்புமா தலைமுறை

தப்புமா தலைமுறை

14 mins
421


                        “ தப்புமா தலைமுறை ? “  --- மதுரை முரளி 

            “கௌசல்யா சுப்ரஜா” பாடிய அலைபேசியை, இருட்டில்

தேடி எடுத்து,  சுருங்கிய கண்களை மேலும் சுருக்கிய பானுரேகா,  திரையில்  சிரித்த கிருஷ்ணரை வணங்கி ,

         அன்றைய காலைப் பொழுதைத் தொடங்க நினைத்து வலப்பக்கமாக திரும்ப,அருகே கணவன் கல்யாணராமன்.

         அரைகுறை இருட்டில் ,  காலை வணக்கத்தை ‘கடனே’ எனப் பலரும் அனுப்பியதை,  தன் அலைபேசியில் ரசித்துக் கொண்டிருந்தான்.       

         “ என்னங்க , எந்திரிச்சதும் படுக்கையை விட்டு எழுந்திருக்காம,  அப்படி என்னதான் தினமும் காலை செய்தி வாசிக்கறீங்க? “  சற்று எரிச்சலாய் பானுரேகா  வினவ,

        “  எல்லாம் காலை வணக்கம் செய்திதான். .. ஐயாவுக்கு . தினமும் குறைந்தது நூறு செய்தியாவது வரும்.  உனக்கு இதெல்லாம் வருமா? “ தற்பெருமையாய் கல்யாணராமன்.

        “  போதும்,  போதும் . நீங்களும் உங்க தற்பெருமையும். நீங்க ‘சுரேகா’ தகவல் தொழில்நுட்பக்கம்பெனி உரிமையாளர். அதனால,  ‘பாஸ்’ என்கிற பயத்தில.. நூறு செய்தி வருது.  ஒருநாள்,  பதவி இல்லாம இருந்தா உங்க ‘பல்ஸ்’  உங்களுக்கே தெரியும். “  என இலேசாகச் சிரித்துக் கொண்டே நடு ஹாலுக்கு அவள் நகர,

       “  அப்படிச் சொல்லாதே பானு.  மரியாதைங்கிறது மனசில தான் இருக்கணுங்கிறதைக் கடைப்பிடிப்பவன் நான்...கம்பெனியிலும்” பேசியவாறே மனைவியைத் தொடர்ந்தான் கல்யாணராமன்.

       “ ஆனா.,அப்பப்ப மறந்து போயிடறீங்க நீங்க... என்கிட்ட மட்டும். “  இலேசாய் வார்த்தைகளில் பானு ஊசியைக் குத்த,

      “ சீ! சீ! அப்படியெல்லாம் இல்லை.  கம்பெனி பொது மேலாளரே நீங்கதானே  அம்மணி. “ வழிந்தவன், 

      “ இன்னிக்கு வந்ததிலேயே சிறந்த  செய்தியை உனக்கு 

வாட்ஸ்-அப்பில அனுப்பியிருக்கேன். சொன்னவன், கூடவே அதைச்  சொல்லத் தொடங்கினான்.

                    “ என்னுடைய அப்பா, அம்மா 

                        அவங்க கஷ்டப்பட்டதைச்

                            சொன்னபோது 

                         கதையா தெரிஞ்சது !

                               இப்போ 

                         வாழும்போது தான் 

                                புரியுது..

                         அது கதை அல்ல...

                           வாழ்க்கைன்னு.

 ரொம்ப  யதார்த்தமா இல்ல பானு ? “

      “ நிச்சயமா.  எனக்கு அடுப்படி வேலை தொடங்கணும். இருந்தாலும், ஒண்ணு  சொல்றேன்.  நமக்கு இப்ப புரியறது., நம்ம பையன் ஸ்ரீதருக்குப் புரிய , உங்களுக்கும், உங்கப்பா வயசு ஆகணும்.” ‘பளிச்’  எனச் சொன்னவாறே அடுப்படிக்கு நகர,

       அடுத்த பத்து நிமிடங்களில் மணக்க , மணக்க காபியுடன் திரும்பி வந்தாள் பானு. 

      “ என்னங்க,  நம்ம பையன் ஸ்ரீதர் எப்ப மும்பையிலிருந்து திரும்பி வர்றான்?   “ 

      டைனிங் டேபிள்சேரை' சர்' ரென  நகர்த்தி அமர்ந்த கல்யாணராமன்,       

      “ ஒரு நிமிஷம் உட்காரு.  அவன் நம்ம  கம்பெனி ப்ராஜெக்ட் விஷயமா  மும்பை போய் மூணு நாளாச்சு . காலையில தான் வாட்ஸ் -அப்ல செய்தி போட்டிருக்கான்.  இன்னும் ரெண்டு நாள்ல விமானத்தில் திரும்பி வர்றதா. உனக்கும் போட்டிருப்பானே ? “ சொன்னவன் ,  பானுவின் அலைபேசியைத் தேட,

     “  நான் இன்னும் வாட்ஸ்-அப்பைப் பார்க்கலை.  சரி,  சரி நீங்க உங்க அப்பா கிட்ட பேசுலையா? “

       மாமனார் சுவாமிநாதனிடம்,  மிகுந்த மதிப்பு கொண்டவள் பானுரேகா.

       வாழ்வின் நெளிவு,சுளிவு உணர்ந்தவர் மட்டுமல்ல.. அதன்படி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

     “  அப்பா கிட்ட பேசலாம்னு பார்த்தேன் . ஆனா,  அவர் நேரம் தவறாது வாழ்றவர். இப்ப மணி 8 ஆகப் போகுது . ஊர்ல ஈஸ்வரன் கோவில் சன்னதி முன்னாடி நின்னுகிட்டுருப்பாரு.  அதுக்கப்புறம்,  கோயில் காரியங்கள் , பிரசாதம்ன்னு ரொம்ப பரபரப்பா இருப்பாரு.. அதுவும் இந்த 78 வயசுல. “  சலிப்பாய் கல்யாணராமன்.

       “ ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. பரபரப்பா நாம வாழற வாழ்க்கையில,  பதைபதைப்பு தான் அதிகம். அவரு,  உங்கம்மா சகிதம்,  பதட்டமே இல்லாமல் அமைதியாக வாழ்றாரு. நீங்க சொன்னா ஒத்துக்க மாட்டிங்க..ம் “  சற்று வருத்தமாய்ச் சொன்ன  பானு நகர, 

       தன் சொந்த கிராமமான ‘மதகரம்’ நினைவில்  வர, அங்கே உள்ள தன் அப்பா சுவாமிநாதனை நினைத்துக் கொண்டு , இங்கே தன் வேலையைத் தொடங்கினான் கல்யாணராமன்.

       ‘மதகரம்’  ஒரு இடைப்பட்ட கிராமம்.. பாபநாசம் திருக்கருகாவூர் இடையில்.  பணி ஓய்வுக்குப் பின் பலரும் விரும்பும், அமைதி தேடி அலையும் பக்குவமான சூழல்.

     சுவாமிநாதன் வீடு..ஒரு ஓட்டு வீடு . வாசலில் திண்ணை. அதனை ஒட்டி வாசலிலேயே ஒரு வேப்பமரம் .

     வசிக்க, சுவாசிக்கச் சுகந்தமான சூழல்.

     திண்ணையைத் தாண்டி ரேழி. அடுத்து கம்பி போட்ட முற்றம்         

     முற்றத்தின் மூலையில் நான்கு, ஐந்து அண்டாக்களில் தண்ணீர் எப்போதும். முற்றத்தை ஒட்டி ஓர் தாழ்வாரம்.

     அதையும் தாண்டி,  பூஜை அறை .

       தினந்தினம் தோட்டத்தில் பூக்கும் பவள மல்லி,மல்லி, செம்பருத்திப் பூக்கள் எல்லாம் புதிதாய்.. இறைவன் பாதத்தில் பணிந்து கிடக்கும் பூஜையறையில்.

       கொல்லைப்புறத்தில் பெரிய தோட்டம் , கிணறு அதன்அருகில்  அவசியம் துவைக்கும் கல். 

      அதில் வழியும் , வெளியேறும் நீர் கால்வாயில் ஓடி, ஏழெட்டு தென்னை மரங்களைத் தாண்டி,வேர்களைத் தீண்டி ஓடும்  காட்சி..அழகே அழகு.

     கூடவே, மா, பலா, வாழை மரம் என முக்கனிக்கூட்டணி.

     தான் சிறு வயதில் பாடி, ஓடி, படித்த வீடு.. தன் மனக்கண் முன்னால் விரிய,

    “என்ன செய்ய?  அப்பா சுவாமிநாதனும், அம்மா மல்லிகாவும் தன்னோடு சென்னை வர மறுத்ததற்கு காரணங்கள்  இவைதான்  எனப் புரிந்தும், மனம் ஏற்க மறுத்தது... கல்யாண ராமனுக்கு .

   அதேசமயம், கிராமத்தில் சுவாமிநாதன்.. படு சுறுசுறுப்பாய்.    

   தோட்டத்து வாய்க்காலை ஆழ, அகலப்படுதியவர், தோளில் கிடந்த துண்டால் வியர்வையை ஒற்றியேடுத்து ,

   வாசலுக்கு வந்தவாறே,

  “ மல்லி., மல்லி “  என மனைவிக்கு குரல் கொடுக்க,

  “  இதோ வந்துட்டேங்க. “ பித்தளைச் சொம்பில் நீராகாரம் நிரம்பித் தளும்பியது...மல்லிகாவின் கையில்.

  “  என்னங்க,  செய்தித்தாள் படிச்சீங்களா?  விசேஷம் ஏதாவது ? “ கணவனிடம் கொடுத்த சொம்பை ,திரும்பப் பெறும் சமயத்தில் அவள் வினவ,

   “ என்ன, வழக்கம்போல நம்ம தலைவர்களோட  ‘வழவழா’ப் பேச்சு தான்.  நாம உழைச்சாத்தான் நமக்கு  அடுத்த வேலைக்கு குடிக்கக் கூழ்..கஞ்சி “  சொன்னவர் ‘ஹாய்’ யாகச் சிரிக்க,

   “  என்னங்க,  நம்ம பையன் ராமனுக்கு பெரிய வருத்தம். நீங்க இந்த செல்போன்ல,  ஒரு நாளைக்கு,  அதுவும் இராத்திரிக்கு மட்டும் தான் கூப்பிடனும் சொன்னதில..”  மென்று விழுங்கினாள் மல்லிகா.     

   “ என்ன,  ஒண்ணை தூது  விட்டானா?  இதுவே,  உனக்காகத் தான் நான் சம்மதிச்சேன்.  கையில் அலைபேசியைப் பிடிச்சா, மனசு தான் அலைபாயும் . அந்த வலையில மாட்டி,  பயனற்ற பல வலைதளங்களில,  கண்டிப்பா மூழ்கக்கூடாதுன்னு தானே , இப்படி இயற்கையாக ஒதுங்கிட்டோம். நம்ம ஞாபகம் வந்தா.,அவன், அவன் குடும்பத்தோட இங்கே வந்து போகட்டும்” பேசியவாறே எழுந்தவர்,

   “ சரி, சரி. நான்,  நம்ம ஊரு ஈஸ்வரனைக் கும்பிட்டு  வரேன். அடுத்த மாதம் திருவாதிரை வர்றதினாலே, விமரிசையாகக் கொண்டாட ஒரு கூட்டம் “  பதிலுக்குக் காத்திராது,

    வெளியே பாய்ந்தோடும் கணவனைக் கடைக்கண்ணால் பார்த்து , பெருமிதப்பட்டாள் மல்லிகா.

   அன்றைய நாள் , சற்று விரைவாய் நகர்ந்து விட ,

    மாலைச் சூரியன் விடைபெற்று,  இருட்டு போர்வையாய்க் கிராமத்தை ஆக்கிரமிக்க.,விளக்கு கம்பங்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நின்று கண் சிமிட்டிக் கொண்டிருந்தன.

   “  மல்லிகா..”  அழைத்தவாறே,  சுவாமிநாதன் வீட்டினுள் நுழைய,        

    “ என்னங்க, இப்ப தான் நினைச்சேன் . என்னடா, மணி ஏழு தாண்டியும்  உங்களைக் காணலையேன்னு?  இட்லியை அவிச்சிட்டேன். நிமிஷத்துல,  தேங்காய்ச்சட்னி தயார்”  சொல்லியவாறு திண்ணைக்கு விரைய,

    “  சரி,  சரி தயாரானதும் சொல்லு.  இன்னிக்கு என்னமோ குறுக்கு இலேசா வலிக்குது. நான் கொஞ்ச நேரம் அப்படியே.. கயிற்றுக்கட்டிலில சாயறேன்” எனச் சுவாமிநாதன் சற்று சுணங்க,

    “ இருங்க. வென்னி வைச்சு ஒத்தடம் வைக்கிறேன். “  என்றவளாய் மல்லிகா பரபரக்க ,

   “ அடி போடி. ஆரம்பிச்சிடுவியே.. உன் கை வைத்தியத்தை என் மேல. “ என மறுத்தவர், 

   அடுத்த அரை மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து , மனைவி மல்லிகா சகிதம் வேப்பமரத்து அடியில்,  கயிற்றுக் கட்டிலில் அமர, சரியாய் அலைபேசி ஒலித்தது.

   “ என்னங்க , நம்ம பையன் இராமன். “ உற்சாகத்தோடு மல்லிகா அலைபேசியை எடுத்து நீட்ட,

    அலைபேசியில் ஸ்பீக்கரை அமுக்கினார்.

   “  அ., அப்பா, எப்படி இருக்கீங்க? “  கல்யாண ராமன் குரலில் உற்சாகச் சுருதி குறைந்திருந்தது.

    “ என்னகென்னடா?..உன்னைய  மாதிரி புராஜெக்ட்டு,  பேலன்ஸ் ஷீட் பிரச்சினையில்லாம,  நம்ம ஊரு ஈஸ்வரன் புண்ணியத்துல, நானும் அம்மாவும் சந்தோசமா , சௌக்கியமா தான் இருக்கோம். ஆமா.,  நீ ஏன் இழுக்கிறே? “  குரலிலேயே குணத்தைப் படித்தவர்,

   “  சரி,  சரி போனை பானுக்கிட்ட கொடு. “

   சில வினாடிகள் விழுங்கலுக்குப்பின், 

   “மாமா.. கும்பிடுறேன்.  மாமி கும்பிடறேன். “ மருமகள் மல்லிகாவின் குரல்.. மறுமுனையில். 

   “ இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.  என்னாச்சு கல்யாணராமனுக்கு?  குரல் கொஞ்சம் பிசிறு தட்டுதே? “ என மாமாவும்,  மாமியும் ஒரே குரலில் வினவ,

   “  அது காலையிலிருந்தே இலேசா தலைசுத்தல்ன்னாரு.   நான் டாக்டர்கிட்ட கூட்டிப் போனேன்.  இரத்த அழுத்த ரொம்பக் கூடிடுச்சு. சர்க்கரையும்  வேற ஏறிடுச்சு . அதனால,  நல்லா ஓய்வு எடுக்க டாக்டர் சொல்லிட்டாரு . “

   “ என்ன இப்படிச்  சொல்ற பானு?  ஏன் ஒழுங்கா நடைபயிற்சி எல்லாம் போகலையா இராமன்? “  மல்லிகா குறுக்கே வினவ,

   “  எங்கே கேட்கிறாரு?  வாங்க, ஊருக்குப் போகலாம். அப்பா,அம்மாவைப் பார்க்கக் கிளம்பலாம்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். ம்ஹூம்..”  புகார் புராணத்தைத் தொடங்கியவள்,

சில நிமிடங்கள் பாடினாள்.

   “  எங்கே பேரன் ஸ்ரீதர் ?” உற்சாகமாய்ச் சுவாமிநாதன் கேட்க,

    “ அவன்,  நம்ம கம்பெனி வேலை விஷயமா மும்பை போனவன் இன்னும் திரும்பலை. கேட்டா.,இன்னும் வேலை முடியலைன்னு சொல்லி திரும்பி வர்றதை தள்ளி போட்டுக்கிட்டேயிருக்கான். “ மல்லிகா முடிக்கும் முன்,

   “ ஹலோ, அம்மா.. அப்பா.  நான் இப்ப இங்கே “  திடீரென வீட்டில் நுழைந்த  ஸ்ரீதர், அலைபேசியின் பேச்சிலும் நுழைந்தான்  ஸ்ரீதர். 

    “ தாத்தா,பாட்டி..” என இருவரையும் இறுகக் கட்டிகொண்டு கத்த 

    பேரனின் திடீர் வருகையால் அங்கே ஆனந்தம் கரைபுரண்டு, கடந்து,  பேரானந்தக் கடலானது. 

    “ என்னடா ஸ்ரீதர்,  இங்கே வரேன்னு சொல்லிட்டு நேரே தாத்தா பாட்டியைப் பார்க்கப் போயிட்டியா? “  என அப்பா கல்யாணராமன் கேள்வி கேட்க, 

   “  ஆமா நீங்க தான் இங்கே வர மாட்டேங்கிறீங்க?  அதனால, ஒரு மாற்றத்துக்காக நான் நேரே இங்கே வந்துட்டேன் “  என்றான் ஸ்ரீதர்.

    “  ஒண்ணும் கவலைப்படாத கல்யாணராமா. நம்ம ஊருக்கு வந்து ஒரு வாரம் நீங்க இருந்தாலே போதும் . மனசெல்லாம் மகிழ்ச்சி ஆயிடும் . அதோட,  உனக்கு வயசு அறுபது பூர்த்தியாகுது.  அதனால,  எப்போதுமே இந்த நேரத்தில உடம்பு கஷ்டப்படுத்தும்.  “

    “ அட, விடுப்பா. உடனே ‘சாந்தி’ பண்ணணும்னு ஆரம்பிச்சிடுவியே. “  கல்யாணராமன் மறுக்க,

     “ பதில் பேசாதே.  பெரியவங்க எப்ப, எப்ப சாந்தி செய்ய சொன்னாங்கன்னு முதல்ல, சொல்றேன். “  சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார் சுவாமிநாதன். 

     “ குழந்தை பிறந்து ஒரு வயசு முடிவில, அதுக்கப்புறம் 60 வயசு முடிவில,  தொடர்ந்து.. எழுபது ஆரம்பிக்கும்போது,  அப்புறம் 80 முடிவில...இப்படி. இதெல்லாம் முக்கியமான சாந்திகள்.  வாழ்க்கையில ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் கண்டிப்பாக செய்ய வேண்டியது . இதன் மூலமா,  உடம்பும் , மனசும் ஆரோக்கியம் பெறும் . குடும்பத்தில, சாந்தி நிலவும். கூடவே,  நம்ம உறவு,  நட்புகாரங்க வரவும்,  வாழ்த்தும் பலமா கிடைக்கும் ..நல்ல பலனோட. “

       “ டேய் ஸ்ரீதர்.  நீ ஏண்டா எங்ககிட்ட  தகவல்  சொல்லவே இல்லையேடா  “ அம்மா பானுரேகா வினவ,

    “அது., ஒரு மாற்றதுக்குதான். அம்மா., ஒரு பெரிய புராஜக்ட் முடிச்சுட்டேன் . திடீர்னு ஒரு ஐடியா.  சரி தாத்தா பாட்டிக்கு, சஸ்பென்ஸ் கொடுக்கலாம்னு கிளம்பி வந்துட்டேன்.  நீங்களும் அப்பாவைக் கூட்டிட்டு, ஒரு வாரம் ஒய்வு எடுத்து , கிளம்பி வாங்க.”   உற்சாகமாய் மகன் ஸ்ரீதர் கூற ,

     “ நாங்க ஒரு வாரம் கழிச்சு வர்றோம். நீயும் அங்கே சந்தோசமா இரு .  “ மகனின் உற்சாகம், ஊர்விட்டு ஊர்தாண்டி கல்யாணராமனையும் தொற்றிக் கொள்ள,

    மனம் சற்று இலேசாக, வாய்விட்டுச் சிரித்தான் கல்யாணம் ராமன் மல்லிகாவுடன்.

     மதகரத்தின் அன்றைய காலை.,  வழக்கம் போல அமர்க்களமாய் புலர்ந்தது. 

     தென்னந்தோப்பில் பறவைகள் சப்தம். 

     இரை தேடப்  புறப்பட்ட தாய்ப் பறவைகள், பாசமாய்த் தன் மொழியில் குஞ்சுகளைக் கொஞ்சி  விடைபெற,

    கடந்த ஒரு வாரத்தில் ஸ்ரீதரின் வாழ்க்கை முறையில் ‘சுனாமி’ மாற்றம் .

    தாத்தா சுவாமிநாதனுக்கு ஒரு தோழனாய். 

    காலையில் எழுந்து பல் துலக்கியதும் , ஒரு சோம்பு நிறைய நீராகாரம் . அதன் பின்னால்.. தியானம் ,யோகா. தொடர்ந்து செய்தித்தாள் வாசிப்பு.

    அடுத்து, தோட்டப்பராமரிப்பிற்கு பின்னால், குளியல்.  கொஞ்ச நேரம் பூஜை.  தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் தரிசனம் .

    பதினோரு மணிக்குச் சாப்பாடு... இப்படி.

    இயற்கையோடு இசைந்து, இதமான இனிமையான வாழ்க்கை... அவனுக்குள் உடல் அளவிலும் ,மனதளவிலும் பெரிய மாற்றம்.     

   புதிது புதிதாய்ச் சிந்தனை.

   “ தாத்தா., இப்பதான் புரியுது . நீயும்,  பாட்டியும் நம்ம ஊரை விட்டு ஏன் நகர மாட்டேங்கிகிறது ? “ கையில் இருந்த லேப்டாப்புக்கு சற்று ஓய்வு கொடுத்தவாறே,  ஸ்ரீதரன் பேச ,

   “ எதையும் மத்தவங்க நிலையிலிருந்து பார்த்தா.. மாற்றுக் கோணமும்,  கருத்தும் புரியும் . நாம தான் சரிங்கிகிற எண்ணம் மாறினாலே , பலன்கள் படியில காத்து நிற்கும் . ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ உனக்கே தெரியும். இது உலக இயற்கை விதி.. விதி “ பாசமாய் அருகிலிருந்த பேரனின் தலையை சுவாமிநாதன் தடவி விட,

   “ என்ன பேரனைக் கட்டிப்பிடிச்சு ஒரே கொஞ்சல்!! .. ‘தலைமுறைகள் ‘ படம்  ரீமேக்கா ? “  சொன்னவாறே வந்த பாட்டி மல்லிகா,

   நீர்மோரை, ஒரு பெரிய சொம்பில் நீட்ட,

  “ அடடா!  என்ன பாட்டி இது?  வயிறு முட்ட,  முட்ட எவ்வளவு குடிக்கிறது ? “  செல்லமாய் ஸ்ரீதர் முரண்டு பிடிக்க,

   “  ஸ்ரீதர் , எங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஆனந்தம் தெரியுமா?..  இந்த ஒரு வாரமா. உங்க அப்பன் தான் சொன்னதைக் கேட்க மாட்டான்.   இங்கே வான்னா வரமாட்டான்.  நீயாவது வந்தியே? “ பேரனின் கன்னத்தை  ‘நெட்டி’ முறிச்சு பாட்டி மல்லிகா சொடக்கு போட,

    “ போதும்.ரொம்ப பூரிக்க்காதே.  உன் பேரன் எப்படியும் , ஒரு பத்து நாள்ல கிளம்பிடுவான். அப்புறம்.,  என்னை நீயும் ,உன்னை நானும் , மாத்தி மாத்திக் கொஞ்சிக்க வேண்டியதுதான் ..ம்,”எனத் தாத்தா முறைக்க,

   “  பாட்டி, தாத்தா சொல்றது புரியல ? அவரை நீ கொஞ்சலைன்னு கோபப்படறாரு.  “ எனப் பலமாய் வாய் விட்டுச் சிரித்தான் ஸ்ரீதர்.

   “ டே., டேய் “ எனத்  தாத்தா விரட்ட,

    பயந்த மாதிரி ஓடியவன், சற்று நின்று,

   “ பாட்டி,  ரெண்டு நாளா என் புது புராஜெக்ட் தொடர்பா தஞ்சாவூர் வந்திருக்கிறவங்களோட பேச்சு வார்த்தை போய்கிட்டு இருக்கு,.  இன்னிக்கு கள ஆய்வுக்கு போறோம்.  எப்படியும் ,  இராத்திரி ஆகிவிடும் . அதோட,  நாளைக்குக் காலையில , அப்பா-அம்மா வர்றதினால, இனிமே ரொம்ப ஜாலி தான் “  சொல்லி முடிக்க,      

     உண்மையான பாசம் இயற்கை உரமாய் அந்த குடும்பத் தோட்டத்தில். 

    மறுநாள்..

    சுவாமிநாதனும்,  மல்லிகாவும் மகன் மருமகளைக் காண வாசலிலேயே தவமிருக்க,

    காரில் இருந்து இறங்கிய கல்யாணராமன் , 

    பாசமாய் ஓடி வந்து, அம்மா அப்பாவை கட்டிப்பிடித்தான்.    

   பின்னாலேயே,  பழக்கூடைகள் சகிதம் இறங்கிய அம்மா பானுவை அழைத்து வந்தான் ஸ்ரீதர்.

    “ டேய்  ராமா, ரொம்ப இளைச்சமாதிரி தெரியற.  வேலையில,  அவ்வளவு பிரச்சினையா ? “  பாசமாய் அம்மா மல்லிகா தன் பையனின்  கல்யாணராமனின் கன்னத்தை தடவ,

    “ அப்படி ஒண்ணும்மில்லேம்மா.  காசு பண்றது  என்ன இலேசுப்பட்ட காரியமா ?  “சற்று சோகமாய் கல்யாணராமன்.

   “  சரியா கேட்டீங்க மாமி.  கம்பெனிய, இப்ப நம்ம ஸ்ரீதர் கவனிச்சுக்க ஆரம்பிச்சிட்டான்.  இருந்தாலும்,  என்னமோ.. இவரு”  முற்றுப்புள்ளி வைக்காது பானு முடிக்க,

    “ டேய் ராமா , அதான் பானு சொல்லிட்டால்ல ?  கவலையை விடு.  பேசாம எங்க கூடவே இருந்திடு .”   உற்சாகமாய் மகன் கல்யாணராமனைத் தோளில் தட்டினார் சுவாமிநாதன்.

    “ உண்மைதான் அப்பா.  ஒரு விஷயம். இன்னிக்குக் காலையில எங்களை வரவேற்க,  ஸ்ரீதர் தஞ்சாவூர் இரயில் சந்திப்பு வந்தப்ப, அவனைப் பார்த்தவுடன் எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.  ஒரே வாரத்தில் நல்ல உற்சாகம் , சுறுசுறுப்பாயிட்டான் “  மகனை அருகில் அழைத்து நெற்றியில் முத்தமிட்டான் கல்யாணராமன்.    

     பானுவின் கண்களில் சின்னதாய்க்  கண்ணீர் எட்டி பார்த்தது.

    “ சரி, சரி வேகமா பல்லைத் தேய். எனக்கு அடுத்தடுத்து வேலையிருக்கு “  என அப்பா அவசரப்படுத்த ,

    அவரை ஆச்சரியம் பொங்கப் பார்த்தான் கல்யாணராமன்.

    பத்து நிமிட இடைவெளியில் , அம்மா மல்லிகா ஒரு தட்டில் நாலைந்து  டம்ளர்களுடன்  வர,

    கையில் டம்ப்ளரை வாங்கியவன் ' ஜில்' ஆனான். 

    “ அம்மா.,  இது  என்ன குளிர்க்காப்பியா? “ 

    “ டேய்., இதுதாண்டா நீராகாரம்.  ரொம்ப மாசம் கழிச்சு வந்ததால மறந்திட்டே போல.”  என மகனின் கையில் திணிக்க ,

    “ எடுத்துக்கங்க..ம்.”   பானுவும் விரட்ட ,

     எடுத்து ’மடக்’ கெனக் குடித்த கல்யாணராமன்,வழக்கமான தன் வேலையில் மூழ்கினான். 

     காலை ஒன்பது  மணியை ஹால் கெடிகாரம் ஒலியெழுப்பி பதிவு செய்ய,     

     “அப்பா, அப்பா”  அழைத்தவனாய் வந்த ஸ்ரீதர்,  கல்யாணராமன்அருகில் அமர்ந்தான். 

     “ உன்ன பார்க்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. என்னோட புது ப்ராஜெக்ட் பத்தி விரிவா பேசணுமாம். “  சொன்ன ஸ்ரீதரைப் பார்த்து,

    “  இங்கேயா? “  எனக் கண்களைச் சுருக்கினான் கல்யாணராமன். 

     “ சார்.,  வணக்கம்.  நாங்க ‘ஜோஹோ’ தகவல்தொழில்நுட்ப கம்பெனியிலேந்து வர்றோம். “ என இருவர் ‘மட,மட’ வென விஷயங்களைச் சொல்ல ,

    அதிர்ச்சியும், குழப்பமானான் கல்யாணராமன் .

    “ஓ.கே.  நண்பர்களே,  நீங்க கொஞ்சம் வெளியில இருங்க.  நான் அப்பா கிட்ட பேசணும் ,என்ன? “  என  ஸ்ரீதர் குறுக்கிட,  அவர்கள் வெளியே நகர்ந்தனர் . 

    “ டேய் ஸ்ரீதர்,  இங்கே என்னதான் நடக்குது?  எல்லோரும் சென்னை,  ஹைதராபாத்னு,  பெரிய , பெரிய நகரங்களுக்கு கம்பெனி தொடங்க படையெடுக்க,  நீ இப்படி டயர் – 3  நகரத்தில போய் புது கம்பெனி தொடங்க போறதா சொல்றே.  “

     “ நல்ல கேள்வி கேட்டப்பா . தாத்தா, நீ,  எல்லாம் சொன்ன,  செஞ்ச எதிர்நீச்சல்  அணுகுமுறை தான் இது. ‘ஜோஹோ’ நிறுவனர் ஸ்ரீதர் சார் தான் எனக்கு இப்ப வழிகாட்டி.  வாழ்க்கையையும்,  தொழிலையும் பிரிச்சு பார்க்கணுங்கிறது பொதுவிதி. ஆனா,  கண்டிப்பா கூடாது.  அந்த இரண்டையும் கலந்து பண்ணினாத்தான் தான்  வெற்றி கிடைக்கும். அது  ரொம்ப மகிழ்ச்சியாவும்,  உற்சாகமாகவும் இருக்கும்..இது ,அவர் சொன்னதுப்பா. “  கல்யாணராமன் முகத்தில் தெரிந்த ஐயத்தைப் புரிந்து , படித்துத் தொடர்ந்தான் ஸ்ரீதர் .

     “ வாய்ப்பு இல்லாதவனுக்கு ,  வாய்ப்பைக் கொடுத்தா,  அவன் திரும்பி நமக்கு வாழ்க்கையையே தருவான். இதான்,  அவர்கிட்ட நான் படிச்சது..எனக்குப் பிடிச்சது.  எத்தனையோ கிராமப்புற  இளைஞர்கள்,  தங்கள் சக்தியை முழுமையாகப் பயன்படுத்தாம.. டாஸ்மாக் கடை , டிவிக்கு முன்னாடியும்,  கையில் உள்ள அலைபேசியிலும் நேரத்தை,  வாழ்க்கையைத் தொலைச்சிட்டிருக்காங்க. அப்படிப்பட்டவங்களுக்கு , வாய்ப்பு எட்டாக்கனியாக இருக்கு . அதனால , கிராமங்களிலேயே ஒரு கூட்டு நிறுவனம் தொடங்கறோம். இப்படி நாம செய்யலைன்னா.. இனி, வர்ற தலைமுறை தப்புமாங்கிறது மிகப்பெரிய கேள்விக்குறி. இனிமே ‘நகரமயமாக்கல்’ கிடையாது . எல்லாமே ‘கிராமமயமாக்கல்’ தான். “  மகன் ஸ்ரீதர் பேசப்பேச, பிரமித்துப் போனான் கல்யாணராமன். 

     “ சரி , முழுசாச் சொல்லு”  திருப்தி அடைந்தவனாய் மகனை, கல்யாணராமன் உற்சாகப்படுத்த,

    “  நான் சொன்ன விஷயத்தை ரொம்ப சரியா எடுத்திக்கிறப்பா. நம்ம தாத்தாவோட மூணு ஏக்கர் தோட்டம் தான் நம்ம புது அலுவலக இடம். இயற்கைச் சூழல்ல ... புது அலுவலகம். அதுக்கு,  பத்மஸ்ரீ ஸ்ரீதர்  சாரோட நான் புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் பண்ணிட்டேன். அதுக்குதான்  முன்னாடியே இங்கே வந்திட்டேன்.  நீங்க ரெண்டு பேரும் இப்ப... இங்கே. “  என ஒரே மூச்சில் முடிக்க, 

     “ டேய் அம்மாக் கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாமா?  தாத்தாகிட்ட அனுமதி வாங்க வேண்டாமா?  “ எனக் கல்யாணராமன் முடிக்கும் முன்,      

     சிரித்தவாறே,  சுவாமிநாதன், மல்லிகா மற்றும் பானுரேகா உள்ளே நுழைந்தனர் .

      “ டேய் கல்யாணராமா,  எங்க சம்மதம் எல்லாம் முன்னாடியே கொடுத்தாச்சு. நீ போன்ல, சொன்னா கேட்க மாட்டேடா. அதான்,  உன்ன நேர்ல, நாங்க எல்லாம் இங்கே வரவழைச்சோம்... " என உற்சாகமாக கைதட்டி ஸ்ரீதரை உற்சாகப்படுத்த, 

     “ ஓஹோ, அப்படியா சங்கதி ! “ எனத் தானும் சேர்ந்து கொண்டான் கல்யாணராமன்.

      அங்கே புது பாரதம் , புதுமையாய்,  புத்துணர்வோடு எல்லோர் கண்களிலும் புலப்பட்டது.

                                                  -௦-௦-௦-                 



Rate this content
Log in

Similar tamil story from Classics