காணவில்லை
காணவில்லை
“காணவில்லை” சிறுகதை - மதுரை முரளி
"அஜந்தா" தனியார் கம்பெனியில் கடிகாரம் மாலை 5 மணியை இசைத்து அறிவிக்க, காலையில், இளவரசனுக்கு மேனேஜர் கொடுத்த சுறுசுறுப்பு ' கீ ' இன்னமும் அவனை இயக்கியது அதிவேகமாய்.
'கண்ணுக்கு மை அழகு' மனைவி பத்மாவின் அலைபேசி அழைப்பு.
“ ஹ., என்ன பத்மா? “
“ எ..என்னங்க, இப்பத்தான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்தேன். வீட்டு முன்வாசல் திறந்து கிடக்குது. உங்கப்பாவைக் காணும் “ சன்னமான குரலில் கூற,
“ அ., அப்பாவைக் காணோமா? அய்யய்யோ. மீண்டும் இரண்டாம் முறையா? “ ‘குப்’பென ஏறிய இரத்த அழுத்தத்தில் சற்றே நடுங்கினான் இளவரசன்.
“ ஆமாங்க. நல்லவேளை நான் முன் யோசனையா அவரை முன்அறையிலேயே விட்டுட்டு, மற்ற அறைகளை பூட்டிட்டு போனேன். இல்லேன்னா.. வீட்டில பொருட்கள் எல்லாமே களவு போயிருக்குமே? “ கவலையாய் பத்மா.
“ நீ.. நீ, என்ன பேசற? இப்ப அப்பா முக்கியமா? இல்ல, பொருட்களா? போனை வை. நான் உடனே முன் அனுமதி கேட்டுட்டு வீட்டுக்கு வரேன். “ வேகமாய் மனைவியின் அழைப்பை துண்டித்தவன் , அரைமணியில் வீட்டில்.
“ பத்மா, முன் அறைக்கதவை ஏன் திறந்து போட்டுட்டு போன? அப்பாவுக்குத் தான் ‘அல்சைமர்’ ஞாபக மறதி வியாதி உண்டே. ஆறு மாசத்துக்கு முன்னாடி, இதே மாதிரி அவர் பாதை மாறிப்போய் பத்து நாள் கழிச்சு தானே, நாம கண்டுபிடிச்சோம்..” நடுக்கமாய் இளவரசன் .
“ எனக்கும் பயமாயிருக்குங்க. நான் பள்ளிக்கூடம் கிளம்பும்போது வாசல் வந்து நின்னவர, நான் உள்ளே விரட்டிட்டா.. கதவைப் பூட்ட முடியும்? “
“ இப்ப , தம்பி முத்து ராசாவுக்கு வேற பதில் சொல்லணுமே. அண்ணங்கிற பொறுப்பில்லாம நடந்துகிட்டேன்னு ‘நறுக்’குன்னு கேட்பானே..” தன் வலதுகை கட்டைவிரல் நகத்தை பாதி கடித்து துப்ப ,
“ உண்மைதாங்க. அப்பா இங்கே வந்து ,அடுத்த மாசத்தோட ஆறு மாதம் முடியுது. அதுக்கப்புறம், அவர் அடுத்த ஆறு மாசம் உங்கள் தம்பி வீட்டில தான். ஆனா, நமக்கு இப்ப , இப்படி பிரச்சனை வந்துருச்சு. அது மட்டுமில்லைங்க. அவர் போகும் போது, தன் பர்ஸ்ஸையும் கொண்டு போயிட்டாரு” என்றவளாய் அலமாரியைக் குடைந்தாள்.
“ போச்சுடா. இன்னிக்கு காலையில தான் , அவசர தேவைக்கு அப்பாக் கிட்ட பணம் கேட்டேன். மாலைல தரேன்னாரு . இனி, என்ன செய்ய?” கவலைபட்டான் இளவரசன்.
“ மாசக்கடைசி வேற. உங்கப்பா, உங்கள நம்பி டெபிட் கார்டையும் தர மாட்டாரு. அவரோட மாநில அரசு ஓய்வூதியத்தை நம்பி தான் நம்ம பொழைப்பே ஓடுது. எனக்கும் சொற்ப சம்பளம் தான் உங்களை மாதிரி .” பத்மா மேலும் புலம்ப,
“ அய்யய்யோ வாயை மூடேன். இப்ப , அவரை எப்படி, எங்கே நான் தேடுவேன் ? “
“ இப்படியே, இங்கே நின்னா எப்படி? ‘படக்’குன்னு பைக்கை எடுங்க. உங்க நண்பர்களை கூட்டிக்கிட்டு நம்ம ஏரியா முழுசும் தேடுங்க. “ பத்மாவின் விரட்டலில் பைக்கோடு வெளியே பாய்ந்தான் இளவரசன்.
மூன்று நாட்கள் தொடர்ந்து பலமுறை தேடியும், இளவரசனால், தன் அப்பா ராஜப்பாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்பாவின் நண்பர்களைத் தேடி, தினமும் தன் அப்பா பால் வாங்கும் பூத் அருகில் ‘காணவில்லை’ போஸ்டர் அடித்து இளவரசன் காத்திருக்க, அப்பாவின் நண்பர் என ஒருவர் இவனை அணுகி,
“ தம்பி, என் பேரு சிவா. உங்கப்பா ராஜப்பா என்னுடைய நெருங்கிய நண்பன். அவரைக் 'காணவில்லை' ன்னு எதுக்கு போஸ்டர்அடிச்சிருக்கே? “ கலக்கமாய் வினவே,
“ ஐயா..அ., அது வந்து, கிட்டத்தட்ட நாலு நாளா எங்க அப்பாவைக் காணோம். இனி, தாமதிக்க வேண்டாம்னு, தகவல் தெரிஞ்சா தெரிவிக்கத்தான் இப்படி போஸ்டர் மற்றும் என் அலைபேசி எண்ணைப் போட்டேன்..” தடுமாறியவனாய் இளவரசன்.
“ அடடா! நான் அவனைப் பார்த்து, நாட்கள் பல ஆச்சு. அதான், விஷயம் தெரியல. நீ ஏதாவது அப்பாவை, கடுமையா பேசிட்டியா? இல்ல, வீட்ல யாராவது?..” ஆழமாக அப்பாவின் நண்பர் இவனை மேலும் கீழும் பார்க்க,
“ ஐயா, அதெல்லாம் இல்லை. அவருக்கு கொஞ்ச நாளா ஞாபகமறதி வியாதி. அதுக்கு மருந்துகள் சாப்பிடறாரு. அதோட, எங்கம்மா போனதும் தான் அனாதையானதா நினைக்கிறாரு. எங்களுக்கு அவர் வேணும் “ கண்கள் கலங்கியபடி இளவரசன்.
“ சரி, சரி வருத்தப்படாதீங்க தம்பி . இனிமே, அவன் சட்டைபையில, அவனைப் பத்திய தகவலை எழுதி மறக்காம வைச்சிடுங்க. அவன் கட்டாயம் திரும்பி வந்துவிடுவான். ” எனத் தைரியம் கொடுத்துவிட்டு செல்ல, யோசனையாய் வீடு திரும்பினான் இளவரசன்.
மறுநாள், நண்பர் சிவாவுக்கு அவருடைய அலைபேசி புலனத்தில் ராஜப்பாவிடமிருந்து 'காலை வணக்கம்' செய்தி வர, உடனடியாக ராஜப்பாவை அழைத்தார் சிவா.
“ எ..என்னப்பா, எங்கே இருக்க? நாங்க எல்லாம் உன்னைத் தேடிக்கிட்டு இருக்கோம். மறதியில பாதை மாறிப்போயிருக்கலாம்னு பையன் 'காணவில்லை'ன்னு போஸ்டர் அடிச்சு கலங்கி போயிருக்கான் .” என விவரங்களைக் கூற,
“இல்லை சிவா. என் மனசுல ஒரே குழப்பம். பெத்த பசங்களே, பாசத்தை விட பணத்தை தான் பெரிசா நினைக்கிறாங்க. என் பார்வையில, இப்பவுள்ள இளையசமுதாயம் தான் அதிகமா பாதை மாறிப்போகுது . பையன் அடிச்சது 'காணவில்லை' போஸ்டரா? உண்மையில, இப்ப பண்பு ,பாசம், உறவு , நட்பு இப்படி பலதும் காணவில்லை ! அதான் உண்மை." எனக் குரல் தழுதழுக்க சொல்லி வருத்தப்பட,
“ நீ சொன்னது முற்றிலும் உண்மை கிடையாது. நான் நேர்ல போய், உன் பையன் மருமகள் கிட்டப் பேசினேன். அவங்களோட பணத்தேவையை, மாதமாதம் நீ பூர்த்தி செய்யறதா சொன்னாலும், உண்மையிலேயே உன் மேல ரொம்ப பாசமாத்தான் இருக்காங்க. இது உறுதி. இப்பவுள்ள 'விரைவு வாழ்க்கை'யில, எல்லோருக்கும் புரிதல் ரொம்பக் குறைவாயிருக்கு . மனஅழுத்தம் மிக அதிகமாயிருக்கு. அதுக்கு, நமக்குள்ள உரிமையோட மனம் விட்டு பேசறது குறைஞ்சது தான் முக்கியக்காரணம். நாளைக்கு நேரா நாம , உங்க வீட்டுக்கு போவோம். நான் எல்லாத்தையும் பேசிப் புரிய வைக்கிறேன்.” என்றவராய் அலைபேசி அழைப்பை முடிக்க, மறுமுனையில் தன்னுடைய துணிமணிகளை எடுத்துக்கொண்டு, வீட்டுக்கு வரத் தயாரானார் ராஜப்பா மகிழ்ச்சியுடன்.
-0-0-0
