Dr.PadminiPhD Kumar

Classics

5  

Dr.PadminiPhD Kumar

Classics

காட்டு பங்களாவில்......

காட்டு பங்களாவில்......

5 mins
762மோகன் ஒரு வனத்துறை அதிகாரி. சிறு வயது முதலே மோகனுக்கு காடுகள் மீதும் காட்டு விலங்குகளின் மீது நிறைய ஆர்வம் உண்டு. அதற்குக் காரணம் அவரது தந்தை கருப்பையா தான். கருப்பையாவின் பேச்சும் செயலும் எப்பொழுதும் காட்டை பற்றியதாகத்தான் இருக்கும். அவரும் வனத்துறையில்தான் பணிபுரிந்தார். வனத்துறைப் பணி என்பதால் கருப்பையா தமிழ்நாட்டின் கர்நாடக எல்லையில் அமைந்த முதுமலை சரணாலயத்தின் பங்களாவில்தான் அவர் வாசம் இருந்தது. இதனாலேயே மோகனும் வனத்தோடு ஒன்றி வாழப் பழகிக் கொண்டான்.


 பள்ளிப்படிப்பு முடிந்ததும் மோகன் தன் கனவான ஐ.எஃப்.எஸ் எனும் இந்திய வனத்துறை மேலாண்மை( இந்தியன் பாரஸ்ட் சர்விஸ்) படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க ஆயத்தமானான். கனவு நனவானது. இளநிலை பட்டப்படிப்பு,முதுநிலை பட்டப்படிப்பு, ஐஎஃப்எஸ் என எல்லாவற்றையும் சிறப்புற முடித்து இன்று தகுதிபெற்ற வனத்துறை அதிகாரியாக இருப்பதற்கு மோகனின் தீவிர ஈடுபாடு தான் காரணம் எனலாம். ஓய்வுபெற்ற தன் தந்தை கருப்பையாவை தன்னுடன் தங்க வைத்துக் கொள்வதில் அவனுக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஏனென்றால் அப்பாவிற்கு காட்டு பங்களா பாசம் ஒன்றும் புதிதல்லவே.


மோகனுக்கும் திருமணமாகி இரண்டு பேரக் குழந்தைகளை கருப்பையா பார்த்து மிகவும் பூரித்துப் போனார். குழந்தைகள் பேத்தி பாரதியும், பேரன் சாரதியும் தாத்தா-அப்பாவை போல வனத்தின் மீது மிகுந்த ஈர்ப்போடு இருந்தனர்.ஆனால் மருமகள் வசந்திக்கு தான் அவ்வப்போது மனதில் சில நெருடல்கள் ஏற்படும். எப்போதும் சீராக செல்வது வாழ்க்கையில்லையே! கஷ்ட நஷ்டங்கள் அவ்வப்போது எட்டிப் பார்க்கத் தானே செய்யும்.


 70 வயதான கருப்பையாவிற்கு சர்க்கரை வியாதி.இதற்காக அவருக்கு தனிப்பட்ட முறையில் சமையல் செய்வது ,மாத்திரை மருந்துகளை வேளா வேளைக்கு சாப்பிட வைப்பது ,அவர் படுக்கை துணிமணிகள் போன்றவற்றை சுத்தம் செய்வது, வயதான காரணத்தால் அவரால் அவ்வப்போது ஏற்படும் மருத்துவச் செலவுகளை கவனிப்பது போன்ற நேரங்களில் அவள் முகம் சுளிக்காமல் இருந்ததில்லை.தாத்தாவிடம் கதை கேட்கும் ஆர்வத்தால் குழந்தைகள் சரியாக படிப்பது இல்லை எனக் கூறி அதையே சாக்காக வைத்துக்கொண்டு மாமனாரை முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்துவிட்டாள் மருமகள் வசந்தி. மோகனின் ஆபீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு மனமில்லாமல் புறப்பட்டுச் சென்றார் கருப்பையா.


 ஒரு மாதம் கழிந்தது. மோகனுக்கு பிரமோஷனுடன் டாப்ஸ்லிப்பிற்கு டிரான்ஸ்பர் கிடைத்தது.டாப்சிலிப் என்ற மலைப் பகுதியும் அதைச் சுற்றி அமைந்த வனப்பகுதியும் மோகனின் மனதிற்கு மிகவும் பிடித்த இடம். அதனால் உடனே அங்கு சென்று வேலையை ஏற்றுக் கொண்டான்.அவன் குடும்பத்திற்கு மலைமேல் காட்டின் நடுவே மிகவும் விசாலமாக கட்டப்பட்ட காட்டு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் அவர்கள் தங்குவதற்காக அவர்கள் பாணியில் கட்டப்பட்ட பங்களா அது. பார்ப்பதற்கு ஓட்டுவீடு என்பது போல் தோன்றினாலும் உள்ளே அரண்மனை போன்ற அமைப்பு பார்ப்போர் யாரையும் கவர்ந்து இழுத்துவிடும்.


 மோகனுக்கு அப்பாவின் நினைவு வந்தது. அவர் தற்போது தன்னுடன் தங்கினால் அவருக்கு மிகவும் பிடிக்குமே என்று தோன்றவும் உடனே அவரை முதியோர் இல்லத்தில் இருந்து அழைத்து வரப்புறப்பட்டான்.மருமகள் வசந்தி யோசிக்க ஆரம்பித்தாள்.வசந்தியைப் பொறுத்தவரை மாமனார் வருவது உசிதம் என்றேத் தோன்றியது.அதற்குக் காரணம் அந்த காட்டு பங்களாவுக்கு வரும் வானரங்கள். டாப்ஸ்லிப் வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கும் காட்டெருமைகளுக்கும் மட்டுமல்லாது வானர கூட்டங்களுக்கும் பெயர்பெற்றது. காட்டு யானைகளும் காட்டு எருமைகளும் அங்கே உள்ள உயரமான தேக்கு மரக்காட்டில் கூட்டம் கூட்டமாக வாழ்வதை அங்குள்ள அதிகாரிகளும் சுற்றுப்புற வாழ் மக்களும் கண்கூடாக பார்த்து வியந்திருக்கின்றனர்.


அதேபோல் அக்காட்டில் வாழும் வானரங்களும் அதன் அட்டகாசங்களும் அனைவரும் அனுபவிக்கும் பெரும் பிரச்சினையாகவே இருந்தது. தினமும் ஒரு முறையாவது காலையிலோ பகலிலோ அல்லது சாயங்காலத்திலோ அவைகள் காட்டு பங்களா பக்கம் வந்து, மரத்திற்கு மரம் தாவி, தங்கள் வீட்டைச்சுற்றி அமைக்கும் தோட்டத்தை நாசம் செய்து, அதிகாரி மற்றும் அவர்களுடன் பணிபுரியும் மற்ற பணியாளர்கள் வசிக்கும் இருப்பிடத்தைச் சுற்றி அவர்கள் குடும்பத்தினர்கள் ஆசை ஆசையாய் வளர்க்கும் கொய்யா, மா, பலா, வாழை மரங்களில் காய்க்கும் பழங்களைச் சாப்பிட்டு, தோட்டத்தைச் சுற்றி அவர்கள் போட்டிருக்கும் வேலிகளை உடைத்தெறிந்து சென்றுவிடுகின்றன. இது ஒரு நாள் பிரச்சனை அல்ல என்று வசந்திக்கும் புரிந்தது.


 காட்டு பங்களாவைச் சுற்றி வசிக்கும் குடும்பத்தினர்கள் வானரக்கூட்டம் வந்ததும் வீட்டின் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டு சமையல் பாத்திரங்களை கரண்டியால் தட்டி அதிக ஒலி எழுப்புவர். சிலர் தடிகளைக் கொண்டு ஜன்னல் கம்பிகளின் இடையே செலுத்தி அவைகளை விரட்ட முயல்வர். இதைப்பார்த்த வசந்தியும் குழந்தைகள் இருவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு ஜன்னல்வழியாக “சூ,சூ”என கத்தி வானரங்களை விரட்ட முயற்சித்தாள்.மாமனார் வரப்போகிறார் என்று சொன்னதுமே அவள் மனதில் உதித்த எண்ணமே வானரங்களை விரட்டும் பணி மாமனார் உடையது என்பதே.


மாமனார் வந்தாயிற்று.மகனையும் அவன் வாழும் காட்டு பங்களாவைச் சுற்றியுள்ள வனப் பகுதியையும் கண்டவுடன் மாமனாருக்கு புத்துயிர் வந்தது போல் உணர்ந்தார். பேரக் குழந்தைகளுக்கு இரவு படுக்கப்போகும் முன் காட்டைப்பற்றிய கதைகளைச் சொல்லி மகிழ்ந்தார். பேரக்குழந்தைகள் பாரதிக்கும் சாரதிக்கும் தாத்தா வந்ததில் மிகவும் சந்தோஷம்.


 மறுநாள் விடிந்தது.வழக்கம்போல் வானரக் கூட்டங்கள் வந்ததும் மாமனாரின் கையில் ஒரு தடி கை கொடுத்து அவரை மட்டும் வெளியே விட்டு கதவை பூட்டிவிட்டு ஜன்னல் வழியாக மாமனாரிடம் வானரங்களை அடித்து விரட்டும்படி சொல்லிக்கொண்டே இருந்தாள். வயதானதால் தளர்ந்துபோன கருப்பையா பூட்டிய வீட்டின் வெளியே நின்று சிறிது நேரம் சுற்றும்முற்றும் கவனிக்க ஆரம்பித்தார். பெரிதும் சிறிதுமாக மரங்களின் மீதும், வேலிகளின் மீதும், கேட்டின் மீதும் வானரங்கள் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் கருப்பையா.


காட்டின் நடுவே மாட்டிக் கொண்டது போன்ற உணர்வு அவருக்கு அப்போதைக்கு ஏற்பட்டது. தன்னை சுதாரித்துக் கொண்டு தடியை சுழற்றிக் கொண்டே “ராமா ,போய்விடு ; ராமா,போய்விடு “என கூறிக் கொண்டு முன்னேறினார்.பக்கத்து வீட்டுக்காரர்கள் வழக்கம்போல் தட்டு கரண்டிகளைத் தட்டி சத்தமாக ஒலி எழுப்பியதால் அரண்டு போன வானரங்கள் கருப்பையாவை தடியுடன் அங்கு எதிர்பார்க்காததால் அனைத்தும் ஒவ்வொன்றாக மரத்தின் மீது குதித்து குதித்து மறையத் தொடங்கின. வானரக்கூட்டம் மறைந்ததும் குழந்தைகள் இருவரும் குதூகலத்துடன்,” தாத்தா ஜெயிச்சுட்டார்! தாத்தா ஜெயிச்சுட்டார்! தாத்தா வீரத்தாத்தா! எங்க தாத்தா வீரத்தாத்தா!” என்று கும்மாளமிட்டனர்.


வசந்திக்கு நிம்மதிப் பெருமூச்சு உண்டாயிற்று. இனி வானரங்கள் பற்றிய கவலை இல்லை. மாமனார் பார்த்துக் கொள்வார் என்ற தைரியம் வந்தது. இரவில் படுக்கப் போகும் முன் குழந்தைகளுக்கு மட்டுமே பால் கொடுப்பவள் இன்று மாமனாருக்கு ஒரு டம்ளர் சூடான பால் கொடுத்து கவனித்துக் கொண்டாள். கருப்பையாவும தன் மருமகள் பிரச்சினையை தீர்க்க முடிந்தது என்று மனமகிழ்ந்து உறங்கினார். ஆனால் அவரிடம் அந்த குரங்குகளை அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லும்போதுதான் கருப்பையாவின் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது. குழந்தைகளிடம் நிதானமாக,” அவைகளை அடிக்கக் கூடாது” எனக் கூறினார். ராமாயணத்தில் வரும் அனுமனைப் பற்றி கூறினார்.


மறுநாள் விடிந்ததும் வானரங்கள் வந்துவிட்டன. வழக்கம்போல் வசந்தியும் மாமனாரிடம் தடி கொடுத்து வீட்டிற்கு வெளியே தள்ளி பூட்டி விட்டாள். இந்த முறை கருப்பையா தயங்கவில்லை; தள்ளாடவில்லை; தைரியமாக கம்பை தட்டிக்கொண்டே முன்னேறினார். வானரங்களும் அவரை பார்ப்பது போல் சிறிது நேரம் நின்று விட்டு பிறகு ஓடிவிட்டன. அக்கம்பக்கத்தார் தாத்தாவின் செயலைப் பாராட்டினர்.


அத்தோடு விட்டுவிட வசந்திக்கு மனமில்லை. வானரங்கள் துவம்சம் செய்து விட்டுச் சென்ற தோட்டத்தில் செடி கொடிகளை பராமரிக்கும் வேலையையும் மாமனாரிடம் ஒப்படைத்து விட்டாள். மாமனாருக்கும் தோட்ட வேலை மிகவும் பிடித்துப் போனதால் தன்னால் நாளை இனிமையாகக் கழிக்க வழி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். இவ்வாறு வானரங்கள் வருவதும் கருப்பையா விரட்டுவதும் வாடிக்கையான நிகழ்ச்சியானது.


 ஒருநாள் மோகனுக்கு தமிழக முதல்வரிடம் இருந்து அழைப்பு கடிதம் ஒன்று வந்தது. வனப் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதுமலைக்கு முதல்வர் வருகை தருவதால் முக்கியமான அதிகாரியான மோகனும் முதுமலை வந்து ஒரு வாரம் அங்கு தங்கி வேலைகளை கவனிக்க வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் மோகன் வசந்தியிடம் முதுமலையில் குடும்பத்துடன் தங்க ஏற்பாடாகி இருப்பதாகச் சொன்னான்.


வசந்திக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் சந்தோஷம். ஆனால் மாமனாரை உடன் அழைத்துச் செல்ல வசந்திக்கு மனம் இல்லை. எனவே மோகனிடம் ஒரு வாரம் வீட்டை கவனிக்க மாமனார் இங்கேயே இருப்பதுதான் நல்லது எனச் சொல்லி மாமனாரை காட்டு பங்களாவில் தனியாக விட்டுச் செல்ல ஏற்பாடு செய்துவிட்டாள். கருப்பையாவிற்கு மகனையும் பேரக் குழந்தைகளையும் ஒரு வாரத்திற்கு பார்க்க முடியாது என்ற ஏக்கம் இருந்தாலும் மருமகளுக்காக சம்மதித்தார்.


    முதுமலைக்கு புறப்படும் நாள் வந்தது. ஒரு வாரத்திற்குத் தேவையான துணிமணிகள், படுக்கைகள், குழந்தைகளுக்கு அங்கு போர் அடிக்காமல் இருக்க சில விளையாட்டு சாமான்கள் என அனைத்து பெட்டி படுக்கை காரில் ஏற்றி ஆயிற்று. வசந்தி மாமனாரிடம் அவரது சாப்பாட்டிற்காக பிரிட்ஜில் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லிச் சென்றாள். கார் கிளம்பிப் போனதும் கருப்பையாவிற்கு தனிமை மெல்லமெல்ல புரியலாயிற்று.


ஒரு வாரம் போனதே தெரியவில்லை. மோகனும் வசந்தியும் குழந்தைகளும் டாப்ஸ்லிப் திரும்பினார்கள். கார் கேட்டிற்குள் நுழைந்ததும் மோகனும் வசந்தியும் குழந்தைகளும் திகைத்துப் போய் நின்றனர். வீடு திறந்திருந்தது.வாசல்படியில் கருப்பையா உட்கார்ந்திருந்தார். அவரைச் சுற்றிலும் வீட்டின் உள்ளேயும் வானரங்கள் சிறிதும் பெரிதுமாக அனைத்தும் உட்கார்ந்து, திறந்து கிடந்த பிரிட்ஜில் இருந்து உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.


வீட்டின் வாசலில் ஒரு தட்டில் வேர்க்கடலை கொட்டி வைக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் சில வானரங்கள் அமர்ந்து கொண்டு அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. கருப்பையா தன் கையில் வேர்க்கடலையை வைத்துக்கொண்டு ஒரு பெரிய வானரங்கிற்கு ஊட்டிக் கொண்டிருந்தார். மோகனுக்கும் வசந்திக்கும் கருப்பையா ராமாயணத்தில் வரும் ராமரையும் அனுமனையும் வர்ணித்ததைப் போல் கருப்பையாவும் வானரமும் அமர்ந்திருந்த காட்சியை கண்டு வாயடைத்துப் போயினர்.Rate this content
Log in

Similar tamil story from Classics