STORYMIRROR

Dr.Padmini Kumar

Comedy

4  

Dr.Padmini Kumar

Comedy

எமதர்பாரில் ஒரு நாள்....

எமதர்பாரில் ஒரு நாள்....

3 mins
262

கண்விழித்துப் பார்த்தேன் ஏதோ ஒரு புது இடத்தில் இருப்பதாக உணர்ந்தேன். நான் நின்று கொண்டிருந்தது ஒரு விசாரணை கூண்டில். நான் ஏன் இங்கே?...... யோசிப்பதற்குள், " சித்ரகுப்தா இந்த அம்மையாரின் கணக்கு என்ன விபரம்? சொல். " என்ற குரல் கேட்ட திக்கில் பார்த்தேன். எதிரே சிம்மாசனத்தில் கருகருவென எமராஜர்; பக்கத்தில் ஒரு எருமை மாடு; இரண்டு பக்கமும் பெண் பூதகணங்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். ஒரு டேபிள், நாற்காலி, கம்ப்யூட்டர் என அமர்ந்திருந்தவர் தான் சித்திரகுப்தர் போல் தெரிந்தது. அவர் உடனே பதில் கொடுத்தார், " எமராஜா, இந்த அம்மையாரின் ஆயுட்காலம் 90 வயது. ஆனால் இவரை கிங்கரனும், சிங்கரனும் 70 வயதிலேயே இவரை இங்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். அதுதான் விசாரணை. " "கிங்கி, சிங்கி,இருவரும் இங்கே வாருங்கள்." எமதர்மர் கத்தவும் இருவரும் எமதர்மர் முன்னே வந்து நின்றனர். " வர வர உங்கள் வேலையே சரியில்லை. இந்த அம்மையாரை ஏன் முன்கூட்டியே எமலோகம் அழைத்து வந்தீர்கள்? "

" இந்த அம்மையாரால் ஏற்பட்ட குழப்பம் தான் எல்லாவற்றும் காரணம், யுவர் ஆனர் "

"என்ன! இந்த வயதில் இந்த அம்மையாரால் குழப்பமா?... புரிகிறது.. இந்தியாவில் வயதானவர்கள் தான் எல்லோரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். என்ன குழப்பம்? தெளிவாகச் சொல்லுங்கள்."

 இருவரும் ஒருமித்த குரலில், "இந்த அம்மையார் ஈஸ்வரனுக்கு ஒரு அப்ளிகேஷன் லெட்டர் எழுதி போஸ்ட் செய்து இருக்கின்றார்." 

"ஓ,பித்தனுக்கு... அப்ளிகேஷன்!அப்ப.... நிச்சயம் குழப்பம்தான். எதற்காக அப்ளிகேஷன் போட்டீர்கள் அம்மா?" என்னைப் பார்த்து எமதர்மர் கேட்டார். நான் தெளிவாக, " யுவர் ஆனர், நான் தவறாக எதுவும் கேட்டு விடவில்லை. எனக்கு ஒரு அட்ரஸ் ஃப்ரூப்பிற்கு ஏற்பாடு செய்து கொடுக்கத்தான் அப்ளிகேஷன் போட்டேன். "

" இதில் குழப்பம் தேவையில்லையே, சித்திரகுப்தா!" எமதர்மர் தற்போது தன் அசிஸ்டன்ட்டிடம் விவரம் கேட்க அவரும், " அங்கேதான் குழப்பமே ஆரம்பமாகிவிட்டது,யுவர் ஆனர். " விவரம் தெரிவிக்கலானார். " இந்த அம்மையார் பிறந்த வருடம் 1953. இவர் பிறந்த காலத்தில் ஆஸ்பத்திரி, டாக்டர், பிறந்தநாள் சான்றிதழ் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. இவருடைய ஐடி ப்ரூப் இவரது ஜாதகம் மட்டும் தான். அதில் அட்ரஸ் இருக்காது. 1960 இல் இவரது குடும்ப அட்டை,அதாவது, ரேஷன் கார்டு தான் இவரது அட்ரஸ் ப்ரூப். இந்தக் குடும்ப அட்டை மட்டும்தான் இந்தியா பூராவும் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால்,யுவர் ஆனர்,உங்களுக்கே தெரியும்...தற்போது இந்தியாவில் வோட்டர் கார்ட், பான் கார்டு,ஆதார் கார்டு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு என பல கார்டுகள் புழக்கத்தில் உள்ளன.இந்த அம்மையார் ஒரு பெண் என்பதால் அந்தக் கால வழக்கப்படி இவரது திருமணத்திற்கு பின் மறு வீடு என்று இவரை மாமனார் மாமியார் வாழும் வீட்டிற்கு இவரது பெற்றோர்களும் உடன் பிறப்புகளும் அனுப்பி வைத்து விட்டனர். எனவே திருமணத்திற்குப் பின் இவரது அட்ரஸ் மாறிவிட்டது.

 எமதர்மர் இடைமறித்து, "சத்யவான் சாவித்திரி போல் இவரும் இங்கே வந்து மாமனார் மாமியாருக்காக ஏதாவது வரம் வாங்க வந்து விட்டாரா என்ன?"

 நான் உடனே வேகமாக தலையையும் கையையும் அசைத்து, "யுவர் ஆனர், நான் அப்படியெல்லாம் எதுவும் தங்களிடம் கேட்டு தங்களை தொந்தரவு செய்ய வரவில்லை. மாமனார் 90 வயது வரை மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்துதான் இறந்தார். அத்தையையும் நான்தான் இறுதி மூச்சு வரை கவனித்துக் கொண்டேன். அவர்கள் இருவரும் அட்ரஸுக்காக போராட வேண்டிய அவசியமே ஏற்படவில்லை."

 எமதர்மர், " அப்படியானால் அவர்கள் மருமகளான உனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நீ ஏன் ஈஸ்வரனிடம் அட்ரஸ் ஃப்ரூப்பிற்கு அப்ளை செய்தாய்? " என உறுமலாகக் கேட்டார். அவர் கோபப்படுவதைக் கண்டதும் நான் பயத்தில் அழ ஆரம்பித்து விட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பித்தது. உடனே எமதர்மர், " சித்திரகுப்தா, இந்த அம்மையார் முதலைக்கண்ணீர் வடிக்கிறாரா, என்ன? உடனே விசாரணை கமிஷன் அமைக்க ஏற்பாடு செய். " உடனே நானும் சித்திரகுப்தரும் ஒரே குரலில்,"யுவர் ஆனர்,அது மட்டும் வேண்டாம். " என்று அலறினோம்.

 எமதர்மர், "விசாரணை கமிஷன் என்றாலே ஏன் இப்படி அலறுகின்றீர்கள்? அதென்ன அவ்வளவு கொடிய விஷயமா?"

சித்திரகுப்தர் அமைதியாக தன் நாற்காலியில் இருந்து எழுந்து வந்து, என் அருகில்,அதாவது,விசாரணைக் கூண்டிற்கு அருகில் வந்து நின்று, எமதர்மரிடம் பேச ஆரம்பித்தார், "இந்த அம்மையாரின் கணவர் 6 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மாமனார் மாமியார் இவருக்கு முதல் குழந்தை பிறந்த உடன் தனிக்குடித்தனம் வைத்துவிட்டனர். அப்போதிருந்து இவர் தன் கணவர் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கணவர் தன் பெயரில் குடும்பத் தலைவன் என்ற காரணத்தால் ரேஷன் கார்டு,ஆதார் கார்டு,ஓட்டர் கார்டு எல்லாவற்றிற்கும் தான் வசிக்கும் வாடகை வீட்டு அட்ரஸில் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். இருவரும் தங்களது 50 வருட தாம்பத்திய வாழ்க்கையில் தனிக் கொடுத்தனத்திற்குப் பின் இதுவரை 15 முறை வாடகை வீட்டை மாற்றி மாற்றி வாழ்ந்திருக்கின்றனர். இதனால் ஒவ்வொரு முறையும் கேஸ் கனெக்சன்,ரேஷன் கார்டு,ஓட்டர் கார்டு, ஆதார் கார்டு,பேங்க் பாஸ்புக் என எல்லாவற்றிலும் சேஞ்ச் ஆப் அட்ரஸ் மாற்றி மாற்றி களைத்து விட்டனர். தன் கணவர் இறந்த பின் தான் இந்த அம்மையாருக்கு தான் அட்ரஸ் இல்லா பெண்ணாக வாழ்வது உறுத்தியுள்ளது. எனவே சிவகாசியில் பிறந்து வளர்ந்த இந்த அம்மையார் சிவன் இடமே தனக்கென ஒரு அட்ரஸ் ப்ரூப் வேண்டுமென அப்ளிகேஷன் போட்டு விட்டார். இதுதான் நடந்த கதை, யுவர்ஆனர்."

உடனே எமதர்மர், " எனக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. சித்திரகுப்தா, இப்பவே இந்தியாவில், " ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு ","ஒரே நாடு- ஒரே தேர்தல் ",என்பதுபோல "ஒரே நாடு- ஒரே அட்ரஸ் "என்ற சட்டத்தை கொண்டு வர ஏற்பாடு செய். இதுவே என் கட்டளை ; இதுவே என் சாசனம்." எனக் கூற நான் மூர்ச்சியானேன். 

கண் விழித்து எழுந்த போது நான் சென்னையில் என் மகள் வீட்டில் கட்டிலில் படுத்திருந்தேன். மாலை மணி 5. பக்கத்தில் கையில் காபியுடன் என் மகளும்,அவள் அருகில் பேத்தியும் நின்றிருந்தனர்.பேத்தி, " கனவு கண்டீர்களா... பாட்டி? பயந்து அலறினீர்களே! உங்களை ஸ்ரீ படம் பார்க்காதீர்கள் என்று எத்தனை தடவை சொன்னோம். "

ஸ்ரீ ஒரு மொக்கை படம் அதை பார்த்தா நான் பயந்துவிட்டேன்! ஸ்ரீயான எனக்கு உண்டான பிரச்சனைகள் யாருக்கு புரியும்.இந்த கணம் தான் நிரந்தரம் என்ற எண்ணத்தில் அமைதியாக காப்பியை ருசித்து குடிக்க ஆரம்பித்தேன்.

                சுபம்


ಈ ವಿಷಯವನ್ನು ರೇಟ್ ಮಾಡಿ
ಲಾಗ್ ಇನ್ ಮಾಡಿ

Similar tamil story from Comedy