இருக்கும்... ஆனால் இருக்காது!(ஒரு அனுபவம்)
இருக்கும்... ஆனால் இருக்காது!(ஒரு அனுபவம்)
19 ஆம் நூற்றாண்டில் எங்கள் ஊரில் ஆஸ்பத்திரி கிடையாது; பிரசவம் பார்க்கும் லேடி டாக்டர் கிடையாது; வீட்டில் தான் நான் பிறந்தேன். பருவமங்கையாகும் வரை 'இது என் அப்பா வீடு' என்று உள்ளம் பூரித்து அப்பா, அண்ணன்கள் தான் உலகம் என வாழ்ந்த காலம் அது.
திருமண பந்தம்.அப்பா வீட்டோடு என்னை இணைத்த சங்கிலியை தாலி என்ற தங்கச் சங்கிலியாக்கி கழுத்தில் போடவிட்டார்களோ.. அப்பா வீடு எனக்கு இல்லை என்றானது.
புகுந்த வீடு...
ரேடியோவில் பாடல் கேட்க ஆசைப்பட்டு அதை ஆன் செய்ய, வந்தார் மாமனார்."யாரைக் கேட்டு ரேடியோ ஆன் செய்தாய்?"என்ற கேள்வியில் புரிந்தது இது எனது வீடு அல்ல என்பது.
தனிக்குடித்தனம்..
60 வயது வரை வாடகை வீட்டு வாசம்.வீட்டின் சொந்தக்காரர் வரும் போது மனம் சொல்லியது 'இது என் வீடு அல்ல என்று. வயதானகாலம்..
பெற்ற பிள்ளைகளின் நிழலில் இளைப்பாறும் காலம்.மகள்வீடு, மகன் வீடு என வீடுகள் இருக்கும்... ஆனால் இருக்காது!
