ஞாயம்தானா? – பதினைந்து
ஞாயம்தானா? – பதினைந்து


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
பறவைகளும் மனித வாழ்வின் ஓர் அங்கம்தான்! ஆனால் அவற்றை எந்த அளவிற்கு நாம் உபசரிக்க முடியும்?
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, நாங்கள் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் மூன்றாம் தளத்தில் வசிக்கிறோம். 10 x 3 சதுர அடி அளவில் ஒரு ‘பால்கனி’ இருக்கிறது. தெருவை நோக்கி ‘பால்கனி’ இருப்பதால் நன்றாக வேடிக்கைப் பார்க்கலாம் என்று மகிழ்ந்தோம். ஆனால் புறாக்களின் தொல்லை அதிகமாக இருந்தது. எனவே ‘பால்கனி’க்கு ‘பறவைத் தடுப்பு வலை’ ஒன்று போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் அதற்குள் ஒரு ஜோடிப்புறா நிறைய சுள்ளிகள், சன்னமான வேர்கள் என்று பால்கனியின் ஒரு மூலையில் சேர்த்து வைத்திருந்தது. கூடு கட்டி முட்டை போட்டு, அடை காத்து, குஞ்சு பொரிப்பதற்கான ஏற்பாடுகளை புறா செய்திருக்கிறது என்று கூறினார்கள். கூடு கட்டுவதற்கான அந்த பொருள்களை வெளியே தூக்கி வீச ஏனோ மனம் வரவில்லை. ‘எவ்வளவு கஷ்டப்பட்டு, எவ்வளவு நாட்கள் உழைத்து, அவைகளை கொண்டு வந்து சேர்த்து வைத்திருக்கின்றனவோ’ என்று பாவமாக இருந்தது. எனவே அந்த ஒரு முறை புறா பயன் படுத்திக் கொள்ளட்டு ம் என்று விட்டு விட்டோம்.
அதன் பிறகு அது முட்டையிட்டு, அடை காத்து, குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இறக்கை முளைக்கும் வரை பராமரித்து, அந்தக் குஞ்சுகள் வெளியே பறந்து செல்ல ஏறத்தாழ இரண்டரை மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. ஆனால் இந்த காலங்களில் எங்களால் பால்கனியை உபயோகப் படுத்தவே முடியவில்லை.
அதன் பிறகு பால்கனியை சுத்தம் செய்தோம். வலை போடுவதற்காக சொல்லி இருந்தோம். ஆனால் அதற்
குள் மீண்டும் புறாக்கள் பால்கனியில் உலா வர ஆரம்பித்தன. முடிந்தவரை அவற்றை துரத்தி விட்டோம். எப்படியோ அவை அடுத்த பிரசவத்திற்கான ஏற்பாடுகளை செய்து விட்டன. மீண்டும் பரிதாபப்பட்டு விட்டுக் கொடுத்தோம்.
மீண்டும் இரண்டு மூன்று மாதங்கள் ‘பால்கனி’ புறாவுக்கே சொந்தமாக இருந்தது.
அடுத்து ‘கொரோனா’ போன்ற காரணங்களுக்காக, வலை போடுவதில் தாமதம் ஏற்பட, மீண்டும் புறாக்களின் ராஜ்ஜியமே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.
(இதை எழுதி முடிக்கும் இதே சமயம், இரண்டு புறா குஞ்சுகள், நன்கு வளர்ச்சி பெற்று, என்றைக்கு வேண்டுமானாலும் பறந்து விடலாம் என்று இருக்கும் இந்த நிலையில், இன்னொரு புறா வந்து ஒரு முட்டை வைத்து அடை காக்க ஆரம்பித்து விட்டது.)
அவை நம்பிக்கையுடன் செயல் படுவது, சுதந்திரமாக பால்கனியில் சுற்றித் திரிவது, அதீத பாதுகாப்பு உணர்வுகளை வெளிப்படுத்துவது, அதற்கும் மேல் ‘பிள்ளைப் பேறுக்கு வருகிறதே’ என்கிற எங்களின் மிகை உணர்வு (‘sentiments) ஒரு பக்கம் நிற்கிறது.
அவை செய்யும் அசிங்கங்கள், அந்த அசிங்கங்களை அவ்வளவு எளிதாக சுத்தப் படுத்த முடியாமை, அவை அங்கே இருப்பதனால் மனிதர்களாகிய நமக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்கிற அச்சம், ஒரு முறை குஞ்சு பொரிக்காமல் அதன் இரண்டு முட்டைகளும் பயனின்றி போனது, ஒரு முறை அதன் ஒரு குஞ்சு இறந்து போனது, பால்கனியை நாங்கள் சுத்தமாக பயன் படுத்த முடியாமல் இருப்பது போன்றவை இன்னொரு பக்கம் நிற்கிறது.
மிகுந்த யோசனை செய்து, விரைவில் வலை போடுவதற்குதான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். சரிதானே!