ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 17 திரைகடல் தாண்டி திரவியம் தேடு
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 17 திரைகடல் தாண்டி திரவியம் தேடு


கதையின் நாயகன் விக்னேஷ்.மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். கூட்டுக்குடும்பத்தில் உறவுகள் அதிகம்; அன்பும் பாசமும் கொட்டிக்கிடக்கும்; ஆனால் பணத் தட்டுப்பாடும் குறைவு இல்லாமல் இருக்கும்.வயதான தாத்தா வீட்டின் ஒரு மூலையில் கட்டிலில் படுத்து இருப்பார்; பெரியப்பா பெரியம்மாவின் குழந்தைகளும் கல்லூரிப் படிப்பு முடிந்து நல்ல வேலைக்காக அலைந்து கொண்டிருப்பார்கள்; அப்பா அம்மா இருவரும் பெரியவர்களின் சொல்படி அவர்களின் நிழலில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
குடும்பத்தின் பின்னணியை மனதில் வாங்கிய விக்னேஷ் படிப்பு முடிந்ததுமே, 'திரை கடல் தாண்டி திரவியம் தேடு' என்ற வார்த்தையை கவனத்தில் கொண்டு அமெரிக்கா பறந்தான். 10 வருடங்கள் போனதே தெரியவில்லை. அமெரிக்காவின் ஆடம்பர வாழ்க்கையால் மோகம் கொண்டு அங்கேயே செட்டில் ஆக விக்னேஷ் முடிவு செய்தான். கை நிறைய சம்பளம். கேட்கவா வேண்டும்…… வீட்டை மறந்தான்; குடும்பத்தை மறந்தான்; பெற்றோரை மறந்தான்.
தன்னுடன் வேலை செய்யும் அமெரிக்க பெண் எலிசாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அமெரிக்க வாழ்க்கை முறை தெரியாமல் எலிசாவிடம் தன் திருமண எண்ணத்தை வெளியிட அவளும் சம்மதித்தாள். வீட்டிற்கு விவரம் தெரிவித்தால் தலைமுழுகி விட்டதாக அப்பா பதில் எழுதினார். கவலைப்படாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டான்.
ஆரம்பத்தில் தன் கனவுகள் எல்லாமே நனவாகி வருவதாக எண்ணி ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான் விக்னேஷ். ஒரு வருடம் கடந்தது. தனக்கென ஒரு வாரிசு உருவாகி அதனுடன் தன் பெற்றோர் முன் மதிப்பாக சென்று நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆயிரம் ஆயிரமாக அமெரிக்க டாலர் சம்பாதித்தாலும் பத்தாண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்தாலும் விக்னேஷ் உள்ளத்தளவில் உணர்வால் ஒரு இந்தியனாகவே இருந்தான்.
இந்திய வாலிபர்களின் வாழ்க்கை கோட்பாடு ஒரு வரைமுறைக்குள் தான் இருக்கும்.கல்லூரி, படிப்பு, வேலை,கல்யாணம்,குழந்தை என்ற வட்டத்திற்குள் தான் அவர்கள் வாழ்க்கை. விக்னேஷும் அதற்கு விதிவிலக்கல்ல.தன் குழந்தைக்காக அவன் ஏங்க ஆரம்பித்தான். ஆனால் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எலிசாவின் எண்ணமோ வேறாக இருந்தது. தன்னைவிட அதிக சம்பளம் வாங்கும் விக்னேஷை மணந்தால் நல்ல வீடு, சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை என வாழலாம் என்ற எண்ணம் தான் எலிசாவிற்கு. கணவன், குழந்தை, குடும்ப பந்தம் என்ற எண்ணங்கள் அவளுக்குப் புரியவில்லை.
கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடின. விக்னேஷ் தன் எண்ணங்களுக்கு ஒத்து வர மாட்டான் என்பதாலும், விக்னேஷ் விட அதிக சம்பளம் வாங்கும் ஜோசப் கிடைத்ததாலும், எலிசா தயங்காமல் விவாகரத்து கேட்டாள். அதிர்ந்து போனான் விக்னேஷ். தோல்வி,ஏமாற்றம், நிராசை இதனால் துவண்டு நடைப்பிணமாக வாழ்ந்தான். அமெரிக்காவில் இருந்து சென்ற நண்பன் ஒருவன் மூலம் விபரம் அறிந்த குடும்பத்தினர் உடனே அவனை பாரதம் திரும்பும்படி தகவல் அனுப்பினர். தகவல் கிடைத்ததுமே,” இனி என் நாடு; எனது மண்; எனது உறவுகள் என்று நான் வாழப்போகிறேன்” என்று மனதில் தெளிவுடன் பாரதம் திரும்பினான்.
மதுரை ஏர்போர்ட்டில் இறங்கும்போது அனைவரும் அவனை வரவேற்க நிற்பதைப் பார்த்ததும் மிகவும் நெகிழ்ந்து போனான். பெரியப்பா, அப்பா, சித்தப்பா, அத்தை, மாமா அனைவரும்,” நாங்கள் இருக்கின்றோம். இனி நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே” எனச் சொல்லாமல் சொல்லி நின்றனர். அவர்களைக் கண்டதும் புதுப்பிறவி எடுத்தது போன்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது.
கிராமத்திற்கு செல்ல காரில் ஏற முற்பட்ட போது கவனித்தான் சித்தப்பாவும் மாமாவும் அப்பாவிடம்,” நாங்கள் பஸ்ஸில் வருகின்றோம். நீங்கள் முன்னால் போங்கள்”என சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் புறப்பட்டுச் சென்றார்கள். இந்த பத்தாண்டுகளில் கிராமமும் அவர்கள் வீடும் மாறவேயில்லை. அனைவரும் அவனைப் பாசமுடன் கவனித்தனர்.
சித்தப்பாவின் குழந்தைகள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்து பல கேள்விகள் கேட்டனர். நீங்கள் ப்ளேனிலா வந்தீர்கள்? அமெரிக்கா எப்படி இருக்கும்? அங்கே நிறைய காசு இருக்குமாமே உண்மையா? என்ற பல கேள்விகளில் அவர்களின் ஏக்கங்களையும் வெளிப்படுத்தினர். இரவில் மொட்டை மாடியில் குழந்தைகளுடன் பேசிக்கொண்டு படுத்து தூங்கினான்.
காலையில் பாத்ரூம் போகும் போதுதான் விக்னேஷ் வீட்டின் நிலையை கவனித்தான். 10 ஆண்டுகளாக பெயிண்ட் செய்யப்படாத சுவர்கள்; அங்கங்கே காரை பெயர்ந்து செங்கல்கள் தெரியும் சுவர்கள்; பாத்ரூமில் ஹோல்டர் உடைந்த வயருடன் ஊஞ்சல் ஆடிய பல்ப்; தண்ணீர் மொண்டு ஊற்ற பழைய டால்டா டப்பா; இவ்வாறு தன் வீட்டின் நிலையை அவன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.
ஒரே வாரத்தில் மீண்டும் புறப்பட தயாரானான் விக்னேஷ். பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு மதுரை சென்று பேங்க் பேலன்சை சரிபார்த்து அமெரிக்கா செல்ல விமான டிக்கெட் வாங்கிவிட்டு விட்டு செலவிற்காக கொடுக்க மீதி பணத்தை எடுத்துக்கொண்டு கிராமம் திரும்பினான். இவன் மனநிலையை அறிந்த நண்பர்கள் குடும்பத்தினரிடம் விவரம் சொன்னார்கள். பரணில் வைத்த சூட்கேஸை இறக்கி விக்னேஷ் துணிமணிகளை பேக் செய்யும்போது குடும்பத்தினர் அனைவரும் சுற்றி நின்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவன் அமைதியாக அப்பா அருகில் சென்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு பேச ஆரம்பித்தான்,” எனது தவறுகளை திருத்திக்கொள்ள இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.என்னை வாழ்த்தி அனுப்புங்கள்” எனச் சொன்னதும், அப்பா அம்மா இருவரும்,” நல்லபடியாகப் போய் வா” என்றனர். வீட்டு வாசலில் நின்று அனைவரும் கையசைக்க புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தான். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்து விக்னேஷ் தன் இலக்காக எந்த இடம், எந்த வேலை எனத் தெரியாதபோதும் அமெரிக்க நண்பர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் திரை கடல் தாண்டி இம்முறை திரவியம் மட்டுமே தன் இலக்காகும் என்ற உறுதியுடன் பறந்து கொண்டிருந்தான்.