சிறுவாடு
சிறுவாடு
தங்கம் அவசர அவசரமாக மதிய தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து மாலை 5 மணிக்கு ஆபீஸ் வேலை முடிந்ததும் மாமா நேரா வீட்டிற்கு வந்துவிடுவார் என்பதால் நன்கு சோப் போட்டு முகம் கழுவி, தலைவாரி, பூக்காரம்மா வாசலில் தொங்கவிட்டுப் போன ஒரு முழம் மதுரை மல்லியில் சிறிது கிள்ளி சாமி படத்திற்கு வைத்துவிட்டு,மீதியைத் தன் தலையில் சூடிக் கொண்டு தயாரானாள்.திருச்சி கல்லூரிவிடுதியில் தங்கிப்படிக்கும் அவளின் நாத்தனார் விடுமுறைக்காக வந்தவளை முதலில் இங்கு வரச் சொல்லி அவள் அண்ணன் கடிதம் எழுதியதால் சிவகாசியில் இருக்கும் அப்பா அம்மா வீட்டுக்குக் கூட போகாமல் வழியில் விருதுநகரில் இறங்கி அண்ணன் வீட்டிற்கு வந்திருக்கின்றாள். நாத்தனாரையும், "முகம் கழுவிக்கொள்", என்றதும் அவள், "எதுக்கு?" எனக் கேட்க," இது என்ன கேள்வி? பொம்பள புள்ளைங்க சாயந்திரம் ஆனால் முகம் கழுவி தலைவாரி சாமி படத்துக்கு முன்னால விளக்கு ஏத்தணும்.... தெரியுமா?" என்றதும்,ஏதோ ஒரு கதை புத்தகத்தை மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்த நாத்தனார் புத்தகத்தை கீழே வைக்க மனம் இல்லாமல்," அதான் நீங்க பண்ணிட்டீங்கள்ல... அப்புறம் நான் எதுக்கு?" எனச் சொல்லி படிப்பதில் மூழ்கி விட்டாள். கல்யாணமாகி புருஷன் வீடு போற பொண்ணு... இப்படி இருக்காளே... என்று மனதிற்குள் சொல்லிக்கிட்டு வாசலை நோக்கினாள் தங்கம்.
மாமா வந்துவிட்டார். சட்டையைக் கழட்டி ஹாங்கரில் தொங்கவிட்டு, கை, கால் ,முகம் கழுவியவரிடம் தங்கம் டவல் எடுத்துக் கொடுக்க, முகத்தைத் துடைத்தவாறு தன் தங்கையின் அருகில் அமர்ந்து பாசத்துடன்," என்னம்மா... இன்னைக்கு பொழுது நல்லா போச்சா..." எனக் கேட்டதும், தங்கையும்," நீங்க நிறைய புத்தகங்கள் வாங்கி வைத்திருக்கின்றீர்கள். கயல்விழி மிக அற்புதமாக உள்ளது." எனக் கூறவும் தங்கம்," நீ உண்மையிலேயே புத்தகம் பூராவும் படித்து விடுவாயா? நாங்கல்லாம் அங்கங்க படித்துவிட்டு கடைசி பக்கத்தை படித்து விட்டால் கதை முடிவு தெரிந்துவிடும். மூடி வைத்து விடுவேன்..." என்று கூற, அவரது மனம் திறந்த பேச்சைக் கேட்டு அண்ணனும் தங்கையும் சிரித்தார்கள். மாமாவிற்கு காபி கலந்து கொடுத்தாள் தங்கம். அவள் எப்பவும் ஏனோதானோ என்று காபி கலக்க மாட்டாள். பில்டரில் டிகாஷன் இறக்கி, அளவான பால், அளவான சர்க்கரை, எனப் பார்த்துப் பார்த்து காபி பாடுவாள். அது மட்டுமல்ல, காபி கலந்து கொடுக்கும் முன் தான் ஒருவாய் டேஸ்ட் செய்த பின்பு தான் மாமாவிற்கு கொடுப்பாள். அவளது அம்மாவும் சரி, மாமியாரும் சரி,... எத்தனையோ முறை," காப்பியை எச்சி பண்ணி குடுக்குறியே" எனச் சொன்னாலும்," சூடு சரியா இருக்கான்னு பார்க்க வேண்டாமா" எனக் கூறும் போது அவர்களால் அதற்கு மேல் பேச முடியாது. அண்ணனும் காலையில் படித்து முடிக்காத பேப்பரை கையில் எடுக்கவும், மெதுவாக அருகில் வந்து அமர்ந்த தங்கம்," மாமா, புடவைக்காரம்மா வீட்டுக்கு பணம் கொடுக்கணும். நீங்க தான் போன தடவை நான் எடுத்து வந்த புடவை கலர் பிடிக்கலைன்னு சொல்லிட்டீங்களே... அதை மாற்றி விட்டு வந்திடட்டுமா?" எனக் கேட்டதும்," போயிட்டு வா. கணக்கு எவ்வளவு என்று கேட்டுவிட்டு வா .பணம் பிறகு தருகிறேன்." என்றதும்," சரி மாமா ",எனக் கூறிவிட்டு, நாத்தனார் பக்கம் திரும்பி," நீயும் வர்றியா?" என ஆவலுடன் கேட்க, அண்ணனும்," போயிட்டு வாம்மா" எனக் கூறவும்," நான் என்ன புடவை வாங்கப் போகிறேனா, என்ன ? நான் எதற்கு?" என நாத்தனார் மறுக்க அண்ணனும் அண்ணியும் ஒரே குரலில், "வீட்டுக்குள்ளேயே இருக்க... சும்மா துணைக்கு..." எனச் சொல்லவும், தன் கையில் இருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு தங்கத்துடன் கிளம்பினாள் நாத்தனார். இருவருமாக தெருவில் இறங்கி நடந்தனர். இரண்டு தெரு தள்ளி ஒரு வீட்டின் கிரில் கேட்டைத் திறந்துஉள்ளே நுழைந்த தங்கம் நாத்தனாரையும் அழைத்துக்கொண்டு வீட்டினுள்ளே சென்றார். அங்கே ஹாலில் சோபா செட் போடப்பட்டிருந்தது. சுவரில் ஒரு பெரிய அலமாரி இருந்தது. அந்த காலத்தில் டிவி என்பது பலருக்கும் தெரியாது.அலமாரியில் அழகாக புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன. தங்கம் தன் கையோடு கொண்டு வந்திருந்த புடவையை அவர்களை வரவேற்ற நடுத்தர வயது பெண்மணியிடம் கொடுத்து," கலர் பிடிக்கலைன்னு சொல்லிவிட்டாங்கக்கா, வேற மாத்திக்கட்டுமா?" எனக் கேட்டதும், "தாராளமா மாத்திக்க.... பிடிச்சதை எடுத்துக்கோ.... நீ வழக்கமா வாங்கறவ. உன்னை நான் என்ன சொல்லப் போறேன்." என்று சொல்லி அதே நேரத்தில்," இவள் தான் உன் நாத்தனாரா ?திருச்சியில் காலேஜில் படிக்கிறதா சொல்லுவியே ..."எனக் கேட்க," ஆமாக்கா... லீவுக்கு வந்திருக்கா.." எனத் தங்கம் பதில் சொல்ல,இருவரும் பேசிக்கொண்டு அலமாரி இருக்கும் புடவைகளை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.
டிவி இல்லாத அந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற தமிழ் வார பத்திரிகைகள் தவறாமல் இருக்கும்.டீபாயின் மேல் ஒரு வாரப்பத்திரிக்கை இருக்க நாத்தனார் கை தானாகவே பத்திரிக்கையை எடுத்து புரட்ட ஆரம்பித்தது. தன் பின்னாலே வந்து சேலையை பார்ப்பாள் என்று எதிர்பார்த்தால் நாத்தனார் புத்தகத்தை எடுத்து படிக்க உட்கார்ந்து விட்டாளே...இனி இவளுக்கு கண்ணும் தெரியாது... காதும் கேட்காதே... என மனதுக்குள் சலித்துக் கொண்டு தங்கம் வேறு கலர் புடவை எடுத்தாள்.புடவையைத் தேர்ந்தபின் அதைப் பையில் போட்டுக்கொண்டு நாத்தனாரைப் பார்த்து," போலாமா ?"என்றதும் நாத்தனார் டக்கெனப் புத்தகத்தை வைத்து விட்டு எழுந்து கொண்டாள். அப்போது அந்த வீட்டுப் பெண்மணி ஒரு நோட்டை கொண்டு வந்து விரித்து காட்டி அண்ணியிடம் கணக்கு சொல்வதை கவனித்தாள். கணக்கு என்றாலே நாத்தனாரின் காதும் மூளையும் கூராகிவிடும். நோட்டை மூடி வைத்துவிட்டு பெண்மணி தொடர, வாசல் கேட் வரை வந்தபின் தங்கம், "அப்ப... அக்கா... என் கணக்கு இன்னும் 200 ரூபாய் தான் இருக்கு. சரியா?" எனக் கேட்கவும், பெண்மணி," ஆமாம்... தங்கம் ...200 தான்... அதான் நோட்டைக் காண்பித்தேனே... எனக் கூறவும், "அப்ப... வரோம்க்கா" எனத் தங்கம் சொல்ல ,இருவரும் மீண்டும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். வீட்டிற்குத் திரும்பியவுடன் தங்கம், "மாமா இந்த கலர் பிடிக்குதான்னு பாருங்க..." என்று சொல்லி பையில் இருந்து புடவையை எடுத்து காண்பித்தாள்." இது நல்லா இருக்கு. போனதடவை கழுதைக் கலரைப் போய் எடுத்து வந்திருந்தாயே..." எனக் கூறவும், தங்கம் புடவையை அலமாரியில் வைக்க திரும்பினாள். அண்ணன் தங்கையிடம்," இன்னும் எவ்வளவு கொடுக்கணும்னு அவங்க சொன்னாங்கம்மா?" என்று கேட்க, எதார்த்தமாக தங்கையும்," ஏதோ இன்னும் 200 கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்", என்று சொன்னதுதான் தாமதம்.....
அண்ணா தன் பளீரென்ற பற்கள் தெரிய கலகலவென சிரித்தார். தங்கமும் அலமாரியைக் கூடச் சரியாக மூடாமல் ஓடி வந்து ,"அச்சச்சோ... மாமா! அவளுக்கு எங்க கணக்கு தெரியாமப் பேசுறா... 500 தான் கொடுக்கணும்." என்று கூறிவிட்டு, நாத்தரைப் பார்த்து, "நீ எப்ப நாங்கள் பேசுனதைக் கவனிச்ச? அப்புராணி மாதிரி தானே உட்கார்ந்து புத்தகம் படிச்சிட்டு இருந்த.." என அழ ஆரம்பிக்கப்போவது போல் பேசவும் நாத்தனார் ஒன்றும் புரியாமல் விழித்தாள்.
அண்ணனும் விடாமல் சிரித்துக் கொண்டு," மாட்டிகிட்டியா!" எனத் தங்கத்திடம் சொல்லவும், என்ன ஏதென்று புரியாமல் நாத்தனார் முழித்தாள். தங்கம் மாமாவின் அருகில் அமர்ந்து கெஞ்சும் பாவனையில்," மாமா... அது என் சிறுவாடு மாமா... அதில கை வைச்சிடாத மாமா..." எனக் கூறவும், அண்ணன் தங்கையிடம், "இவள் இப்படித்தான் செய்வாள். அங்கு இருக்கும் கணக்க என்னிடம் சொல்லவே மாட்டாள். இன்று நல்லா மாட்டிக்கிட்டா ..." எனச் சொல்லிச் சொல்லிச் சிரிக்க, தங்கம்," மாமா... மாமா..." என்று கெஞ்ச ,அண்ணனும் அண்ணியும் சிறுவாடை வைத்து விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தாள் நாத்தனார். கடைசியில் ஒரு வழியாக அண்ணன் தங்கையிடம்," என் சட்டைப் பையில் பர்ஸ் இருக்கு.அதை எடுத்துட்டு வாம்மா." என சிரித்துக் கொண்டே சொல்ல, தங்கம்," நானே எடுக்கிறேன். அவா எதுக்கு? அவளை கூட்டிக்கொண்டு போனதற்கு என்னை நல்லா கொஞ்ச நேரம் அலைக்கழிச்சிட்டா..." என்று சொல்லிக்கொண்டு சட்டை பையில் இருந்த பர்சை எடுத்து வந்தாள். அதிலிருந்து 500 ரூபாய் நோட்டை எடுத்து அண்ணன் தங்கத்திடம் கொடுக்க சிறுவாடு தன் சிறு நாடகம் சிறப்பாக முடிய நாத்தனாரின் கலகம் நன்மையில் முடிந்தது.
