Dr.Padmini Kumar

Romance

5  

Dr.Padmini Kumar

Romance

ஒரு பெண்ணின் புலம்பல்!

ஒரு பெண்ணின் புலம்பல்!

5 mins
37


மும்பை வாழ் கதாசிரியை சூரியபாலா அவர்கள் எழுதிய ஹிந்தி கதையின் மொழி பெயர்ப்பு இந்த

 'ஒரு பெண்ணின் புலம்பல்!'

நான் கிட்டத்தட்ட சராசரி உயரம் கொண்ட அழகான பெண் என்று என்னை வர்ணிப்பதை விட,நன்கு படித்த, கண்ணியமான, புத்திசாலியான , அறிவுஜீவி பெண் என்று சொல்வதே மிகவும் சரியாக இருக்கும்.எனக்கு திருமணமாகி விட்டது, நான் மிகவும் நிறமாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும், ஐந்தடி பதினொரு அங்குல உயரமும், இனிமையான பேச்சும்,மென்மையான பேச்சும், கண்ணியமும் கொண்ட கணவனின் மனைவி.

குழந்தைகள், இருக்காங்களா ! மகளும், மகன்களும். அதிர்ஷ்டவசமாக, சரியான நேரத்தில் மற்றும் வசதியாக பிறந்தவர்கள்,நன்றாக வளர்ந்தவர்கள்.கீழ்ப்படிதல் மற்றும் புத்திசாலி, அத்துடன் சரியான நேரத்தில் வீட்டுப்பாடம் செய்யும் குழந்தைகள்.ஒரு கணவன், இரண்டு பணிப்பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகளைக் கொண்ட இந்த கேரவன் கிட்டத்தட்ட ஒவ்வொரு அடியிலும் மகிழ்ச்சியின் பாடல்களைப் பாடி முன்னேறுகிறது.அதாவது படிப்பு, எழுத்து, ட்யூஷன், டெர்மினல் எல்லாம் ரொம்ப நாகரீகம், நாகரிகமோ நாகரிகமான வாழ்க்கை.

நான் எவ்வளவு பணம் கேட்டாலும் கணவர் உடனே கொடுத்து விடுவார்.நான் எங்கு செல்ல ஆசைப்பட்டாலும் என் கணவர் உடனே அனுப்பி வைப்பார். எந்த நேரத்திலும் என்னை நிறுத்தியதில்லை, நான் செல்வதைப் பற்றி கேள்வி கேட்டதில்லை. சில சமயங்களில் என்னுடன் வரச் சொன்னால் உடன் வருவார்.சில சமயங்களில் நான் வரச் சொல்லாவிட்டால் வரமாட்டார்.சாப்பாடு விஷயத்தில் கூட எப்பவுமே சாதாரண ஆரோக்கியமான உணவு தான் சாப்பிடுவார்.சில சமயங்களில் தொட்டுக்க திரும்பத்திரும்ப ஒரே காய் செய்ய நேரிடும், அதை சமாளிக்க மன்னிப்பு கேட்க நான் "ஸாரி"சொன்னால் அவர் பதிலுக்கு,"இட்ஸ் ஆல் ரைட்" என்று சொல்லி அதை பிரச்சினை பண்ணாமல் முடித்துவிடுவார். பொதுவான மக்கள் வீட்டில் உப்பு குறைவாகவோ, மிளகாய் காரம் கொஞ்சம் அதிகமாகவோ இருந்துவிட்டால் முதலில் சலசலப்பு, அப்புறம் கோபம் என்று பல கணவர்கள் குமுறுவதைப் பார்த்திருக்கிறேன். சண்டை , சச்சரவு என நீண்டு பிரச்சினை தீர ஒன்று, இரண்டு மணி நேரம் கழிந்துவிடும்.ஆனால் இன்றுவரை என் வீட்டில் இப்படி நடந்ததில்லை என்று சத்தியம் செய்கிறேன்.அதனால்தான் அனைவரும் என் கணவரை ,"இவர் மனிதர் அல்ல, தெய்வம் "என்று சொல்கிறார்கள்.

வீட்டில் மூன்று செய்தித்தாள்கள், இரண்டு போன்கள், ஒரு கலர் டி.வி., ஆனால் அலுவலக நேரத்தில் எல்லா செய்தித்தாள்களையும் வாசித்துவிடுவார்.டிவியும் இயங்கிக்கொண்டே தான் இருக்கும்.அதில் எந்த சேனல் ஓடி க்கொண்டிருந்தாலும் அதையே பார்ப்பார். ப்ரோக்ராம் மாறும்போது,தொடர்ந்து அதையே பார்ப்பார். எதற்கும் கவலைப்படமாட்டார். நேரத்தை கடத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை, அவர் முன்னால் அது எளிதாக கடந்து செல்கிறது. இல்லையெனில், பலர் நேரத்தை எப்படி கடத்துவது, எப்படி சேமிப்பது என்று அவசரகதியில் செயல்படுகிறார்கள்.என் கணவருக்கு அப்படியொரு நிலை இருந்ததே இல்லை.இதனால் அனைவரும் என் கணவரை "இவர் மனிதர் இல்லை, தெய்வம்" என்று சொல்கிறார்கள்.

ஆனால் என்னைப் பற்றி நான் என்ன சொல்வது ? அதைச் சொல்லக்கூட வெட்கப்படுகிறேன். அவர்களின் தெய்வீகத்தை கையாளும் திறன் எனக்கு இல்லை. அவர்கள் எவ்வளவு கடவுள்களாக மாறுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக நான் முட்டாள்தனம் கொண்டு செயல்படுகிறேன். சிரித்தால் அதிகப்படியாக சத்தம் போட்டு நான் சிரிக்கிறேன். நான் அழும் போது காட்டுமிராண்டித்தனமாக மூக்கைத் தேய்த்துக் கொள்வேன்.மேலும் கோபம்தான் மூக்கின் மேல் வரும் அதுவும் காரணமே இல்லாமல்.. காரணமே இல்லாமல் அதையே அடிக்கடி புலம்புவேன்.எந்த காரணமும் இல்லாமல், நான் அடிக்கடி என் கடவுள் போன்ற கணவனை காரணமின்றி குற்றம் சாட்டுகிறேன். அது என் தவறு என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் என்ன ஏது என்று தெரியாமல் என் புலம்பலை நிதானமாகக் கேட்டு, நான் சொல்வதைப் புரிந்துகொள்வார். சில சமயம்," பரவாயில்லை," சில சமயம், "ஓ, ஸாரி "என்று மிக அமைதியாகப் பதில் சொல்வார். அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர் இதுநாள் வரை இவரின் குரல் அவர்கள் வரை கேட்டதில்லை என . அது உண்மைதான்.. வீட்டினுள்ளேயே கேட்காத போது அது எப்படி வெளியில் வந்து சேரும் ? 

இன்று விடுமுறை என்று வைத்துக் கொள்வோம்.. அன்று அவன் வெளியே செல்வதைப் பார்த்ததும் என்னால் சும்மா இருக்க முடியாது,

"நீ எங்கேயும் போகிறாயா?"

"ஆமாம்."

"எங்கே ?"

"வெளியே."

"வெளியே,எங்கே ?"

"ஒருவரை சந்திக்க...."

"யாரை ?"

"அவரை உனக்குத் தெரியாது...."

"சரி,எப்போ திரும்ப வருவ ?"

"நான் சீக்கிரமும் வரலாம், லேட்டாகவும் ஆகலாம்."

அதேதான்.நான் ஏற்கனவே சொன்னேனல்லவா.... இனிமையாகப் பேசுவார், மென்மையாகப் பேசுவார் என்று .இப்ப சொல்லுங்க, நான் அவரைக் குறைகூற முடியுமா என்ன? முடியாது இல்லையா.... ஒரு முறை நான் நேரடியாக அவர் மேல் குறைகூற ஆரம்பித்தேன்,"நீங்கள் என்னிடம் பேசுவதே இல்லை, எல்லா நேரமும் நியூஸ் பேப்பர், டிவி, கம்ப்யூட்டர், போன்..."

உடனே அவர் நியூஸ் பேப்பரை மடித்து வைத்து விட்டு, டிவியை ஆப் செய்துவிட்டு புரிந்துகொண்ட பாவனையோடு கேட்டார்,"ஓ ஸாரி... சரி,இப்ப சொல், என்ன பேச வேண்டும்?"

இப்போதும் அவர் தனக்கு அனுகூலமான விதத்தில் தான் என்னிடம் கேட்கின்றார் என்னிடம் என்ன பேச வேண்டும் என்று நான் தான் சொல்லவேண்டுமாம்.

ஆனால் இந்த முறை என் புத்திசாலி திறமையை உபயோகித்து யோசிக்க ஆரம்பித்தேன், இவருக்கு என்னிடம் பேச எந்த விஷயத்தைச் சொல்வது என்று.அவரானால் காத்துக் கொண்டிருக்கிறார்;எனக்கோ ஒரு ஐடியாவும் தோன்றாததால் பயம் தோன்றியது.

நான் தடுமாறி, "அட, வேற ஒண்ணும் இல்லாம, இன்னைக்கு ஆபீஸ்ல நாள் முழுக்க எப்படி இருந்தது.. அந்த நாள் முழுக்க எவ்வளவோ பெரிய பெரிய விஷயங்கள் நடந்திருக்கும்.அதைப்பற்றித் தான்...." என்றேன். "ஓ...ஆமாம்..."அவர் எதையோ ஞாபகத்தில் கொண்டுவர முயற்சி செய்தார்.பிறகு அமைதியான குரலில் பேச ஆரம்பித்தார் . காலையில் அவர் அலுவலகம் வந்து சேர்ந்ததும் தான் அவருடைய பியூன் மாணிக்கம் வழக்கம்போல் மற்ற பியூன் வசந்தனிடம் சாப்பிட்டுவிட்டு வர கேட்கச் சென்றார். ஆபரேட்டரும் லேட்டாக வந்தார் .பேக்கிங் செக்ஷனில் 10:30 மணியிலிருந்து ஆட்டோமேட்டிக் மெஷின் 'மெதுவாகச் செல்' ஆரம்பித்து விட்டது.இதனால் முறைப்படி சரக்குகளை ஏற்றுவது 3:30 மணிக்கு முடிந்திருக்க வேண்டும், ஆனால் 5:30 மணி, இல்லையில்லை 5-45 வரை நீடித்தன.வண்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.இதனால்பேக்கிங் டிபார்ட்மெண்ட் மற்றும் லோடிங் செய்பவர்கள் இவர்களுக்கு இடையே காலதாமதம் காரணமாக பதற்றம் நிலவியது.கேஷியர் கந்தசாமி விடுமுறையை நீட்டித்திருந்தார். பல பில்கள் கட்டுவது நின்றுவிட்டது.ரசாயன ஆய்வக உதவியாளர் பரந்தாமன் இன்று மறுபடியும் தடுப்பூசியின் கல்ட்சரை திருடும் போது பிடிபட்டார். இடையில் ஒன்றரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ரஹீம் பாய் டேங்கர் ப்ரேக் பழுதடைந்து விட்டது. 3:30 முதல் பட்ஜெட் மீட்டிங்.அப்புறம்.... திடீரென்று என் சிஸ்டம் பழுதடைந்தது." கணவர் பேசிக்கொண்டே இருந்தார்,....

"நான் இன்னும் பேசவா ? அல்லது போதுமா ?"

அடடா, நான் மறந்தே போனேன் நான் தான் அவரைப் பேசச் சொன்னேன் என்பதையே. அவரும் இவ்வளவு நேரம் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு நாள் முழுவதும் அவரது ஆபீஸில் நடந்த விவரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.நான் அவ்வப்போது நடுவில் கவனிக்காததாலோ அல்லது வேறு எதையாவது யோசிக்கத் தொடங்கியதாலோ, என்னால் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களுக்கு மேல் எதையும் சரியாகக் கேட்கவும் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. இப்போது இது என்னுடைய அவமரியாதையான நடத்தை, ஏனென்றால் நான் கேட்ட கேள்விகளுக்கான பதில்களைக் கேட்பதற்குப் பதிலாக, நான் கொட்டாவி விட்டுக்கொண்டே இருந்தேன், வேறு எதையாவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அவர் இன்னும் எதையாவது பற்றிப் பேசவேண்டுமா என்று கேட்டார்.

தோல்வியடைந்த பின்னர்,பேச்சை மாற்ற,"சரி, விடுங்கள், நீங்க இப்போ களைப்பா இருப்பீங்க , நான் டீ போடுகிறேன், போடட்டுமா?"

ஆனால் அவர் நான் பேச்சை இடைமறித்துவிட்டதால் டிவி பார்க்க ஆரம்பித்தார். நான் சொன்னதை அவர் கவனிக்கவில்லை.நான் சிறிது நேரம் காத்திருந்தேன் அவர் பதில் சொல்வார் என்று.சிறிது நேரம் கழித்து மறுபடியும் கேட்டேன்,"நான் டீ போடட்டுமா ? குடிக்கறீங்களா ?"

இப்போது அவர் மிகவும் அமைதியாகச் சொன்னார்..."ஓகே, குடிக்கிறேன்."

"ஓகே, குடிக்கிறேன்...இது என்ன பதில்! கொஞ்சமாச்சும் அக்கறையா ,"ஆமாம், ஆமாம்.. எனக்கும் டீ குடிக்கணும் போல் இருக்கு."என்று சொல்லி இருக்கலாம்லே"

"இல்லை...இப்படியாச்சும் சொல்லி இருக்கலாமே "இப்படிப் பண்ணேன்...கொஞ்சம் இஞ்சி, மிளகு தட்டிப் போட்டு மசாலாடீ போடேன்....ஓகே ?"

விவேகமானவராக, எப்போதும் பிஸியாக இருப்பதாக மனதில் நினைப்பு...இப்படி ஒரே வார்த்தையில்,"ஓகே குடிக்கிறேன்"என்றுதான் சொல்ல வேண்டுமா என்ன..."

இது எல்லாமே என் மனசுக்குள்ளேயேகேட்டுக்கொண்டேன்.ஆனால் நான் சமையலறைக்கு சென்று கேஸ் அடுப்பில் டீ போட தண்ணீரைக் கொதிக்க வைத்தேன்.டிரேயில் சர்க்கரை கிண்ணம், பால் கிண்ணம், டீ கப்புகள் எல்லாவற்றையும் அழகாக அடுக்கி வைத்தேன்.

என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, திடீரென்று எனக்குள் என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று தோன்றியது.ஒரு பைத்தியக்காரத்தனம் போல், என் இதயம் மற்றும் மனதின் அனைத்து உணர்ச்சிகளும் நன்றாக மாற ஆரம்பித்தது போல், கொதிக்கும் நீரில் டீத்தூள், ஒரு துண்டு இஞ்சி போட்டவள் ஒரு முழு ஸ்பூன் அளவு மிளகுத்தூளையும் போட்டேன்.

உணர்ச்சிகளால் உள் மூச்சு,வெளி மூச்சு அதிகமாக அதை சமாளித்து, இதயத்துடிப்பை இயல்பான நிலையில் கொண்டு வந்து டீ கப்பை அவர் கையில் கொடுத்துவிட்டு காத்திருந்தேன்; என்னால் பொறுக்க முடியாது பார்த்துக்கொண்டு இருந்தேன்.இப்பவாவது பேசுங்களேன்....பேசுங்க...பேசுங்க...பேசுவீங்க இல்லையா!..

"ஏன்? என்னாச்சு..?"கடைசியில் வேறு வழியின்றி நானேதான் கேட்டேன்,"மிளகுத்தூள் அதிகமாப் போட்டுட்டேன் இல்லையா!..." பேசுங்களேன்.. இப்பவாவது பேசுங்களேன்...

"ஆமாம்...."

"அப்ப ?"என் இதயம் படபடக்க கேட்டேன்.

"பரவாயில்லை."

"என்ன.....?"என் காதுகளை என்னால் நம்பமுடியவில்லை.

ஆனால் நான் காத்திருந்தேன், புயல் வரும் என,வரவில்லை; மின்னலடிக்கவில்லை, மழை இல்லை, எதுவும் மாறவில்லை ! எப்படி பேச்சே இல்லையே? கட் அண்ட் கரெக்டா கேட்க வேண்டியது தானே,"டீயில் மிளகுத்தூளை அள்ளிக் கொட்டி விட்ட" என்று.இதென்ன டீயா, இல்லை மிளகுரசமா என்று.வேண்டுமென்றே தான் நான் மிளகுத்தூள் கொட்டி டீ போட்டேன்.பனி போல் உறைந்த உணர்வுகள் அப்போதாவது கரைந்து பேச்சில் வெளியேறாதா என்று நினைத்தேன்.நான் அமைதியாக எழுந்தேன்.பனி உருகி ஓடினால் தானே, நீர், மேகம், காற்று,இடி, மின்னல், மழை எதிர்பார்க்கலாம். இப்போதும் 'தெய்வப் பிறவி'ஆயாற்று. எப்படித்தான் இவர் இப்படி,"குடிக்கிறேன்", என்று ஒத்த சொல்லில் பதில் சொல்லலாம்! கொஞ்சமாவது பரிவு காட்டி,"சரி, சரி,போடும்மா,"என்றாவது சொல்லலாம் இல்லையா...

எனக்குள்ளேயே புலம்பிக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தேன் வேற டீ போட...

             _முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Romance