Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

5  

Arivazhagan Subbarayan

Romance Classics Inspirational

முப்பரிமாண ராகம்

முப்பரிமாண ராகம்

10 mins
507



   காலை நேரத்துக் கோவை! ஆர்.எஸ் புரத்தில் அன்னபூர்ணா அருகே வரும்போதே பூரி மசாலா வாசனையும், நெய் ரோஸ்ட்டின் மணமும் நாசிக்குள் நுழைந்து வா, வா என்றது. இளம் வெயில்! கோவைக்கே உரித்தான இளம் தென்றல்! உலவுகின்ற மக்களின் கொங்கு தமிழ் காதுகளுக்கு விருந்தளிக்க, வயிற்றுக்கும் சிறிது ஈய, சித்தார்த் அன்னபூர்ணா வாசலில் பைக்கை நிறுத்தினான்.


   சித்தார்த்துக்கு இருபத்தெட்டு வயது.மாநிறம்.ஆறடி உயரத்தில், நல்ல உடல் வாகுடன் களையாக இருந்தான். மாலை வேளையில் ஜிம்மில் செய்யும் உடற்பயிற்சி அவன் உடலுக்கு உரமேற்றியிருந்தது. 


  கடந்த ஒருவருட காலமாக சித்தார்த் தன்னுடன் இன்ஃபோடெக்கில் வேலை பார்க்கும் கவிதாவை உயிருக்குயிராய்க் காதலிக்கிறான்.


கவிதாவும் அப்படியே!

 

  ஒரு நெய் ரோஸ்ட்டுடன் பூரி மசால் ஒரு செட்டையும் உள்ளே தள்ளி விட்டு, அதன் மேல் மணக்கும் காஃபியை ஊற்றிவிட்டு, பில் கேட்டு, கிரெடிட் கார்ட் கொடுத்து, பேமென்ட் ஆனவுடன் டிப்ஸ் வைத்து வெளியே வந்து பைக்கில் ஏறிப் பீளமேட்டில் இருக்கும் தன்னுடைய ஆஃபீஸ் கிளம்பினான். வ.உ.சி. பார்க் அருகில் ஒரு பேக்கிரியிலிருந்து கௌசிக் வெளியே வருவதைப் பார்த்தான்.


கௌசிக்கும் அவனைப் பார்த்தான். ஆனால், தன் முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். கௌசிக்கும் கவிதாவைக் காதலிக்கிறான். ஆனால், கவிதா சித்தார்த்தைத்தான் காதலிக்கிறாள். அதனால் கௌசிக்கிற்கு சித்தார்த்தைக் கண்டால் ஒரு எரிச்சல்! அவன் மீது ஒரு வெறுப்பு!


இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். கவிதாவும், சித்தார்த்தும் காதலிப்பதை அறிந்தவுடன் கௌசிக், சித்தார்த் மீது விரோதம் கொள்ள ஆரம்பித்தான். சித்தார்த் எவ்வளவு முறை அவனுடன் பேச முயன்றபோதும் அவன் முகம் கொடுக்கவில்லை.


சில நாட்களுக்கு முன்பிருந்து கௌசிக் தன்னைக் காதலிக்குமாறு கவிதாவை வற்புறுத்த ஆரம்பித்தான். அது கவிதாவிற்கும் சித்தார்த்திற்கும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், இப்போது சித்தார்த்தும் கௌசிக் மீது விரோதத்தை வளர்த்துக் கொண்டதால், இருவரும் எதிரிகளாகி விட்டார்கள்!


   சித்தார்த் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தான். எதிர் இருக்கையில் கவிதா! கவிதாவின் பக்கத்து இருக்கையில் கௌசிக்! தற்செயலாகப் பார்ப்பது போல் கௌசிக்கைப் பார்த்தான். அவன் தற்செயலாகப் பார்ப்பது போல் கவிதாவைப் பார்த்தான்.


'இடியட்' இவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குதே!

  

"ஹாய் சித்து, குட்மார்னிங்!" கவிதாவின் தேன்குரல்.


  "மார்னிங் கவி, என்ன பண்றே?"


  "இந்த புராஜக்ட் என்னை ரொம்பப் படுத்துது!"


  "கமான், கூல் டௌன்! எந்தப் புராஜக்ட் தான் நம்மைப் படுத்தாம விட்ருக்கு?"


  "இது ஜாவால இருக்கு. உனக்கே தெரியும் ஜாவால நான் கொஞ்சம் வீக்!" 


   "உன்னோட புராஜெக்ட முடிச்சுக் கொடுத்துட்டா சீக்கிரம் என்னக் கல்யாணம் பண்ணிக்குவியா?" சித்தார்த்தின் இந்தக் கேள்வியால் பக்கத்து சீட்டில் இருந்த கௌசிக் முகத்தில் எரிச்சல் காட்டினான்!'


இதென்ன ஆஃபீஸா காதலர்கள் பார்க்கா?'

  

அதை உணராத கவிதா,"இத முடிச்சுக் கொடுத்திட்டா கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துக்கிறேன்" எனக் குயிலாய் மொழிந்தாள். 


  "ஓ.கே. டன் இன்னும் ரெண்டு நாள்ல உன் புராஜெக்ட் முடிஞ்சிரும்!" சித்தார்த் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்தாள்!


  இரண்டு நாட்களும் சித்தார்த்திற்கு

வேலை இடுப்பை ஒடித்தது. அவனால் கவிதாவின் புராஜெக்டை முடிக்க முடியவில்லை! இரண்டுநாள் கழித்து ஆஃபீஸ் வந்தவுடன் கவிதா,"சித்து, என்னோட புராெஜெக்ட் என்னாச்சு?"


  "சாரி கவிதா! இன்னும் ஒன் அவர்ல முடிச்சிர்றேன்!"


  "சீக்கிரம்! இன்னும் கொஞ்ச நேரத்தில டீம் மேனேஜர் வந்துருவாரு. நான் சப்மிட் பண்ணனும்!" என்று கவிதா டென்ஷனாகும் போது, அப்போது அங்கு வந்த கௌசிக் ஒரு பென் ட்ரைவை கவிதாவின் டேபிளில் தூக்கிப் போட்டு,"உன்னோட புராஜெக்ட் முடிச்சாச்சு! சொன்னபடி நீ என்னத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்!" என்று கண்ணடித்தான். 


  "டாம் யூ கௌசிக், நான் புராஜெக்ட் முடிச்சுக் கொடுத்தால் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சித்தார்த் கிட்டேதான் சொன்னேன். பொதுவா சொல்லலை! நானும், சித்துவும் லவ் பண்றது தெரிஞ்சும் ஏன் இப்படிப் படுத்தறே! எனிவே, புராஜெக்ட முடிச்சுக் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்!" என்ன இருந்தாலும் கௌசிக்கும் ஒரே ஆஃபீஸில் வேலை செய்யும் நண்பன் தானே!


  "உன்னை நான் சித்தார்த்தை விட ஆழமாகக் காதிலிக்கிறேன் என்பது உனக்குப் புரியவில்லையா?"

  "நான் உனக்கு எப்படிச் சொல்லிப் புரியவைப்பதுன்னு தெரியல!"


  "கவி, கமான் லெடஸ் ஹேவ் எ காஃபி" என்று சித்தார்த் அழைக்க கவிதாவும் அவனுடன் கேண்டீன் செல்ல ஆயத்தமாக, அதற்குள் புரஜெக்ட் மேனேஜர் வந்து,


  "கவிதா, வாட் அபௌட் தி புராஜெக்ட்?"


  "கம்ப்ளீட்டட் சார்"

  

"கம் டூ மை கேபின்!"


  கவிதா மேனேஜரின் கேபின் சென்று, ரிப்போர்ட்டை சப்மிட் செய்தபின், சித்துவுடன் கேண்டீன் செல்வதை வெறிக்கப் பார்த்தான் கௌசிக்!


   கேண்டீனில் ஒரு டேபிளில் அமர்ந்து, கவிதாவும் சித்தார்த்தும் காஃபியை ஸிப்பினார்கள்!


   "இந்தக் கௌசிக் ஏன் இப்டி இருக்கான்னு தெரியலை சித்து!"


  "கொஞ்ச நாள் பார்த்துட்டு விட்ருவான். அத வுடு. எனக்கு இருந்த வேலையில உன்னோட புராஜெக்ட முடிக்க முடியாம போச்சு! அது அவனுக்கு ஒரு சான்ஸா போச்சு!"


  "நான் உங்கிட்ட தானே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்! அவன் ஏதோ நான் பொதுவா ஆஃபீஸூக்கே சொன்ன மாதிரி நடந்துக்கிறான்! எரிச்சலா இருக்கு சித்து!"


  "மேனேஜர் கிட்ட சொல்லி உன்னோட இடத்தை மாத்திடுவோமா?"


  "அப்ப உன்னை நான் எப்டிப் பார்க்கிறது?"


  "சரி கவி, டோன்ட் ட்வெல் ஆன் தட். சீக்கிரம் சரியாய்டும்! வா போலாம். நெறைய வேலை இருக்கு!"


    வெள்ளிக்கிழமை இரவு ஒன்பதரை! கவிதாவும், சித்தார்த்தும் ப்ரூக் ஃபீல்ட் மாலில் உள்ள மல்டிபிளக்ஸில் நோட்டா பார்த்துவிட்டு, ஆர்.எஸ் புரம் அன்னபூர்ணாவில் டின்னர் முடித்துக் கொண்டு, பைக்கில் கவிதாவை அவளுடைய வீட்டில் இறக்கிவிட்டான். 


   "உள்ளே வா சித்து. மம்மியும், டாடியும் உன்னைப் பார்த்தால் சந்தோஷப் படுவார்கள்!"


   "இன்னொரு நாள் வர்றேன் கவி! இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு!"


  "நாளைக்கு என்ன புரோகிராம்?"


  "நாளைக்கு அம்மாவை திருப்பூர்ல இருக்கற மாமா வீட்ல கொண்டு போய் விடணும்!"


  "ஏய் மாமா பொண்ணுங்களப் பார்க்கத்தானே போறே!"


  "மாமாவுக்கு ரெண்டு பொண்ணுங்க. குட்டிக்குட்டியா டென்த் படிக்குதுங்க. போனவுடன் 'அங்கிள் சாக்லெட் வாங்கிட்டு வந்தியான்னு' கேக்கற வயசு!ட்வின்ஸ். இப்டி உன்ன மாதிரி அழகா, அம்சமா, தேவதை மாதிரி மெச்சூர்டா இருக்கற வயசில்லை அவங்களுக்கு!"


  "சரி போதும் போதும் ரொம்ப ஐஸ் வைக்காத! கௌம்பு!"


  "ஏதாவது ரொமான்டிக்கா ஒரு முத்தம் கேட்டாக்கூட எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு லெக்சர் அடிப்பே!"


  "இப்ப மனசு ஒண்ணே ஒண்ணு கேட்கும். பிறகு, அது தரும் இன்பத்தை நினைவில் கொண்டு மீண்டும் மீண்டும் கேட்கும். அப்புறம் அத்துடன் நிற்காது. வேறு அதிகமாகக் கேட்கும். அதனால்தான் சொல்கிறேன் எல்லாம் திருமணத்திற்குப் பிறகுதான்!" இப்படிச் சொல்லிவிட்டாலேயொழிய, கவிதாவிற்கும் சித்தார்த்தைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது.


  "சரிங்க மேடம்! தேங்க்ஸ் ஃபார் யுவர் லெக்சர்" என்று கிண்டலடித்த சித்தார்த்தின் கன்னத்தில் அவன் எதிர்பாராத வினாடி, தன்னுடைய மென்மையான இதழ்களை ஒற்றியெடுத்தாள்! சற்று நேரம் இந்த இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனான் சித்தார்த்! இரவு நேர அமைதியில் அந்த முத்தத்தின் மென் ஒலியும், கவிதாவின் மெல்லிய இதழ்களின் ஸ்பரிசமும் அவன் இதயச் சுவர்களில் அட்ரீனலினை வேகமாக இயங்க வைக்க, அவன் இதயம் திகைப்பில் பட படவென அடிக்க, உடல் முழுதும் 'ஜிவ்' வென்று மகிழ்ச்சி இரத்தம் பாய உடம்பு சூடாகி, சித்தார்த்தின் தலை கிறுகிறுத்தது.


  "பாரத்து பைக்கை ஓட்டிக்கிட்டுப் போய் ஒழுங்கா வீடு போய்ச் சேருடா!" என்றவாறு சிரித்துக் கொண்டே உள்ளே ஓடினாள் கவிதா!


  ஒருவாறு மயக்கம் தெளிந்தபின், வ.உ.சி ஸ்டீரீட்டிலிருந்து, பொன்னுரங்கம் ஸ்ட்ரீட்டிலுள்ள சித்தார்த்தின் வீட்டிற்குச் செல்ல, தடாகம் ரோட்டில் ரைட்டில் திரும்பினான். தடாகம் ரோடு முழுவதும் ஏதோ வேலை காரணமாக ப்ளாக் பண்ணியிருந்தார்கள். எனவே, லெஃப்டில் திரும்பி ஆசாத் ரோடு வழியாகத்தான் இவன் செல்ல வேண்டும். ஆசாத் ரோட்டில் தான் கௌசிக்கின் வீடு இருக்கிறது.


கௌசிக் வீட்டைத்தாண்டி ஒரு நூறு மீட்டர் தள்ளி இருட்டான ஒரு ஒதுக்குப்புறத்தில், யாரோ ஒரு ரவுடி பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் வாயைப் பொத்திக் கொண்டு இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் திமிறிக் கொண்டிருந்தது.


இன்னொரு ரவுடி, ஓ மை காட், தன் ஒரு கையில் கௌசிக்கின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான். அந்த ரவுடியின் இன்னொரு கையில் பள பளவென ஒரு கத்தி மின்னியது. சித்தார்த் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கை விரட்டி, கத்தி வைத்திருந்தவனின் மேல் அசுர வேகத்தில் மோதியவுடன், அவன் கீழே விழ, அவன் மர்மஸ்தானத்தில் புயலாக ஒரு உதைவிட, அவன் கத்த முடியாமல் உடனடியாக ஒரு மயக்கத்திற்குப் போனான்.


அதைப்பார்த்து, அந்தப்பெண்ணை இறுக்கிப்பிடித்திருந்தவன், பேஸ்தாகி ஓட்டமெடுத்தான். சித்தார்த் அந்தப் பெண்னைப் பார்த்து,"இந்த நேரத்துக்கு இந்த இடத்துக்கு ஏம்மா வந்தே!"


  "என்..என்... ஃபிரண்ட் கிட்ட நோட்ஸ் வாங்க வந்தனுங்கண்ணா!"


   லேசான மயக்கத்திலிருந்த கௌசிக்கைக் காட்டி, "இவன் எப்டி இங்க?" என்றான்.


  "இந்தண்ணந்தாங்னா அந்த ரவுடிங்க கிட்டருந்து என்னக் காப்பாத்த வந்தவருங்ணா!"

 

 "தண்ணீர் வச்சிருக்கியாம்மா?"


அந்தப்பெண் தன் பேகைத் திறந்து வாட்டர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தது. சற்று நேரம் கடந்திருந்தபடியால் ஓரளவுக்குத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது. 


   "இந்தாங்ணா!"


   சித்தார்த், கௌசிக்கின் முகத்தில் தண்ணீர் தெளித்து,"கௌசிக், கௌசிக் கண்ணத் தெறடா" என்று உலுக்கினான். சற்று நேரத்தில் கண்களைத் திறந்த கௌசிக், சித்தார்த்தைப் பார்த்து, பின் கீழே அலங்கோலமாகக் கிடந்த ரவுடியைப் பார்த்து, என்ன நடந்திருக்கும் என யூகித்து,"அந்தப் பெண் எங்கே?" என்றான்.


  "நான் இங்கதாங்ணா இருக்கேன். இந்தண்ணந்தாங்ணா வந்து நம்மளக் காப்பாத்திருங்ணா. அந்தாள் உங்களக் கத்தில குத்த வந்துட்டாருங்ணா!" பதட்டம் குறைந்ததால் தெளிவாகப் பேசினாள் அந்தப் பெண். 


   "கௌசிக், உன்னால நடக்கமுடியுமாடா?"


  "நா வீட்டுக்குப் போயிடறேன். நீ இந்தப் பாப்பாவை அவங்க வீட்ல விட்டுடு!"


  "நோ! ரெண்டு பேரும் போய் இந்தப் பாப்பாவை விட்டுட்டு, நீ என்னோட ஹாஸ்பிடல் வந்தபிறகு, உன்ன வீட்ல விட்டுட்றேன்!"


  "இந்தக் குப்பைய என்ன செய்றது?"


  சித்தார்த் அந்த ரவுடியின் பாக்கெட்டைக் குடைந்து, ஒரு க்வாட்டர் பாட்டில் விஸ்கியைக் கண்டெடுத்து, திறந்து அவன் வாயிலும், உடம்பிலும் ஊற்றினான். பின் அவன் கையில் மீதி பாட்டிலை வைத்தான். அருகே கிடந்த கத்தியை எடுத்து வளைத்து உடைத்துக் குப்பைத் தொட்டியில் போட்டான். 


   "இனி இந்தக் குப்பையை காலையில் ஏதாவதொரு டிபார்ட்மெண்ட் வந்து அள்ளிக் கொள்ளும்! வா போகலாம்!"

  சித்தார்த் பைக்கை ஸ்டார்ட் பண்ண, இருவரும் பின்னால் தொற்றிக்கொள்ள, அந்தப் பெண்ணின் வீட்டின் முன் நிறுத்தி அவளை இறக்கி விட்டு,


  "பாப்பா, இதை வீட்ல சொல்லாதே! உன் அம்மா, அப்பா ரொம்பக் கஷ்டப் படுவாங்க!"


  "சரிங்ணா! தேங்க்ஸ்ங்ணா!" கொங்கு தமிழிலில் கூவி விட்டு அந்தப்பெண் உள்ளே ஓடியது. பின் கௌசிக்கை பக்கத்தில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று, இன்ஜெக்சன் போட்டு, காயங்களுக்கு ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன், அவன் வீட்டில் இறக்கிவிட்டான் சித்தார்த். அப்போது சொன்னான் கௌசிக்!


  "சித்தார்த், நீ என் உயிரைக் காப்பாற்றியதால், நான் மனம் மாறி கவிதாவை உனக்கு விட்டுக் கொடுப்பேன் என்று மட்டும் நினைக்காதே! எனக்குத் திருமணம் என்று நடந்தால் அவளுடன் தான்!"


  "காட் டாமிட்! கௌசிக்,நீ திருந்தவே மாட்டியா?"


  "போடா என் அன்பான எதிரியே!"


  கோபத்தில் கிக்கரை உதைத்து, பைக்கைக் கிளப்பித் தன் வீடு போய்ச் சேர்ந்தான் சித்தார்த்!

    

  திங்கட்கிழமை காலை! ஆஃபீஸில் நுழைந்த கௌசிக், கவிதாவைப் பார்த்து,"என்ன கவிதா, உன்னோட ஆள ஒருவாரம் புனேக்கு அனுப்பிச்சிட்டாங்களாம்! அது வரைக்கும் என்ன லவ் பண்றியா?"


  "போடா எரும!"


  "இந்த எருமைக்கு முகத்தில காயம் எப்டி வந்துச்சுன்னு கேக்க மாட்டியா?"


  "எங்கியாவது சுவத்தில முட்டியிருப்ப!"


  சித்தார்த் கண்டிப்பாக இவளிடம் சொல்லியிருப்பான். ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிறாள், கிராதகி!

  லஞ்ச் டைமில், டைனிங் ஹாலில் கவிதாவின் எதிரில் வந்தமர்ந்தான் கௌசிக்! 


  "உன் டிஃபன் பாகஸ்ல என்ன வச்சிருக்கே தேவதையே!"


  "இந்தா, நீயே கொட்டிக்க!" பாக்ஸை அவனை நோக்கித் தள்ளினாள்.


   "வாவ்,யம்மி! என்னோட அத்தையோட க்யூலினரி ஸ்கில்ஸ் உனக்கும் கண்டிப்பா இருக்கும்!"


  எல்லாவற்றையும் கௌசிக் காலி பண்ணிவிட்டதால், கேண்டீனில் ஒரு தயிர்சாதம் மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டுத் தன் சீட்டிற்கு வந்தாள். பக்கத்தில் கௌசிக் ஒன்றுமே நடக்காதது போல தன் வேலையில் மூழ்கியிருந்தான்! 'அப்பாடா' என்று நிம்மதியுடன் கவிதாவும் தன் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள். 

   

   மாலை ஆறு மணி! மறுபடியும் கவிதாவுடன் ஒட்டிக்கொண்டான் கௌசிக்! இருவரும் லிஃப்டில் கீழே பயணித்தார்கள். 


  "கவிதா, நம்ம ரெண்டு பேரோட வீடும் ஆர்.எஸ் புரத்தில் தானே இருக்கு! ஒரு வாரத்துக்கு என்னோட பைக்லயே வந்துடேன்!"


  "உன்னோடவா? ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் கிண்டலாக!


  இருவரும் வெளியே வந்தபின், கௌசிக் தன்னுடைய நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்க, கவிதா தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வெளியே வரும் போது எதிர்பக்கத்திலிருந்து திடீரென்று ஒரு கார் தறிகெட்டு வலதுபுறமாக அதிவேகத்தில் வர, அதைப்பார்த்த கௌசிக்,"கவிதா!" வென அலறியபடியே ஓடி கவிதாவை இழுக்க முயல இருவரும் விசிறியெறியப் பட்டார்கள்!


"கௌசிக்" என்று கதறியபடியே கவிதா ஒரு மயக்கத்திற்குப் போனாள். கௌசிக் சிறிது நேரத்தில் எழுந்து கவிதாவை நோக்கி ஓடினான். அவன் கை கால் முழுதும் சிராய்ப்புகள். உடம்பில் ஒவ்வொரு அணுவும் வலித்தது. எதையும் பொருட்படுத்தாது, ஒரு நண்பனின் காரில் கவிதாவைத் தூக்கிப் போட்டுக் கொண்டு பீளமேட்டில் இருந்த அந்தப் பெரிய ஹாஸ்பிடலின் ட்ராமா யூனிட்டில் அட்மிட் செய்து விட்டு, கவிதாவின் பெற்றோருக்கு ஃபோன் செய்து, தன் நண்பனுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்து, பதட்டமாக வெயிட்டிங் ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்! அரை மணி நேரத்தில் கவிதாவின் பெற்றோர் மிகுந்த பரபரப்புடன் வந்துசேர, என்ன நடந்தது என்று விளக்கிச் சொன்னான்.


  கவிதாவின் அம்மா ஒரு அழுகைக்குப் போக,"கவலைப் படாதீர்கள் ஆன்ட்டி! கவிதா ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒன்றும் ஆகியிருக்காது!"


   ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் அவர்கள் மூவரையும் தன் அறைக்குள் அழைத்தார்.


  "பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஸ்கேன் பார்த்ததுல சாதாரண ப்ரெய்ன் கன்கஷன் தான். சீக்கிரம் நினைவு திரும்பிவிடும். ரூமிற்கு ஷிஃப்ட் பண்ணிட்டோம். நீங்க ரூமில் உங்கள் பெண்ணுடன் இருக்கலாம்!"


  கவிதாவின் அறையில் மூவரும் ஓரளவு நிம்மதியாக அமர்ந்திருந்தார்கள். சரியாக அரைமணி நேரம் கழித்து, கௌசிக்,"ஆன்ட்டி, அங்கிள் உங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?"என்று கேட்கும் போது, கவிதா அரைகுறை நினைவில் 'கௌசிக், கௌசிக்' என்று அரற்றினாள். 


  "ஒண்ணும் வேண்டாம் தம்பி! கவிதாவுக்கு இப்ப நினைவு வந்திடும். அந்த சமயத்தில் நீ இங்கு இருந்தால் நல்லது!" என்று கவிதாவின் அம்மா சொல்லும் போது தெளிவாகக் கண் திறந்து பார்த்தாள் கவிதா! அருகில் தன் தாய், தந்தையையைப் பார்த்து ஓரளவுக்கு நிலைமையைப் புரிந்து கொண்ட கவிதா,"கௌசிக்கிற்கு என்னாச்சு? அவன் எப்டியிருக்கான்? என்னைக் காப்பாத்த வந்த அவன் நல்லாருக்கானா?"


   "கவிதா, கவலைப்படாதே நான் நல்லாருக்கேன். இங்கதான் இருக்கேன்" என்ற கௌசிக் கவிதாவின் அருகே வந்தான். கவிதா ஆதரவுடன் அவன் கையைப் பற்றிக் கொண்டு,"தேங்க் காட்! நல்லவேளையாக உனக்கு ஒன்றும் ஆகவில்லை!"


  அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. கௌசிக்கின் விழிகளிலும் நீர் கசிந்தது. 


  "நான் போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வர்றேன். நீங்க பேசிக்கிட்டிருங்க!" 


  "நீயும் ஏதாவது சாப்ட்டு வந்துடு தம்பி!"


  "சரி ஆன்ட்டி!"


  கௌசிக் கேண்டீன் வந்து இரண்டு இட்லி ஆர்டர் செய்துவிட்டு

அமர்ந்தான். பக்கத்து டேபிளில் டாக்டர் ஒருவர் அவரது கிளையண்ட்டிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.


   "பயப்படாதீங்க மாதவன்! உங்களுக்கு இருக்கிறது ஒரு சைக்கோ சொமாட்டிக் டிஸ்ஆர்டர் தான். இதுக்கு சைக்கோதெரபிதான் கொடுக்ணும்!"


  "அப்படின்னா என்ன டாக்டர்?"


  "அப்டின்ன்னா உங்க ஸட்ரெஸ், ஆங்கசைட்டி எல்லாம் சேர்ந்து உங்க உடம்பப் படுத்துது. இதனால உங்க இம்யூன் சிஸ்டம் சரியா வேலை செய்யாம அடிக்கடி இன்ஃபெக்சன்ஸ், அல்சர், பாடி பெய்ன் ஏன் ஹார்ட் ப்ராப்ளம்ஸ் கூட வரலாம். அதனால நீங்க சைக்கியாட்ரிஸ்டைப் பாருங்க!"


  கௌசிக் காதில் இது தெளிவாக விழுந்தது. 'ஓ மை காட்! கவிதாவைக் காப்பாற்ற வேண்டும், அவளுடைய உடம்பு குணமாகவேண்டும் என்ற நான் அவளுடைய மனதைப் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே!


என்னால் அவளுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகத்தானே இருக்கும். அவள் மனதில் இருக்கும் சித்தார்த்தை விட்டு என்னைக் காதலிக்கச் சொல்வது எவ்வளவு சுயநலம்' கௌசிக் டிஃபனை முடித்துவிட்டு ஒரு தெளிவுடன் எழுந்தான். கவிதாவின் பேரண்ட்ஸிற்கும் கேண்டீனில் சாப்பிட வாங்கிக் கொண்டு, கவிதாவின் ரூமிற்கு வநதான். 


   "கௌசிக், அதுக்குள்ள எங்கபோயிட்ட?"


   "உனக்கு குடிக்க ஏதாவது வேணுமா கவிதா?" 


  "எனக்கு ஒண்ணும் வேணாம். நீ உக்காரு!"


  "சித்தார்திற்கு சொல்லட்டுமா கவிதா?"


  "அதெல்லாம் வேண்டாம். அவன் ரொம்பக் கவலைப் படுவான்!"


  "சாரி கவி, உன்னையும் சித்துவையும் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்!"


  கவிதாவின் பேரண்ட்ஸ் அடுத்த அறையில் இருந்ததால் இவர்களால் பேச முடிந்தது. 


  "என்ன கௌசிக், நாமெல்லாம் ஃபிரண்ட்ஸ் தானே!"


  "இனி மேல் உனக்கும், சித்துவுக்கும் நடுவில நான் வரமாட்டேன் கவிதா!"


  "கௌசிக், நான் ஒன்று கேட்டால் தப்பாய் நினைக்க மாட்டாயே! ஒரே சமயத்தில் ஒரு பெண்ணிற்கு இருவர் மீது காதல் ஏற்படுமா?"


  கௌசிக் அதிர்ச்சியுடன் கவிதாவைப் பார்த்தான். 

  

   ஒரு வாரம் கழித்து, ஆஃபீஸ் லஞ்ச் டைமில் கவிதா, சித்தார்த், கௌசிக் மூவரும் ஒரே டேபிளில்! கவிதா அதே கேள்வியை சித்தார்த்திடம் கேட்டான்.


  "சித்து, நான் ஒன்று கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டாயே!"


  "என்ன வேண்டுமானாலும் கேள்! உனது உரிமையை விட்டுக் கொடுக்காதே! உன் எண்ணங்களை வெளிப்படுத்தத் தயங்காதே!"


  "ஒரே சமயத்தில் இருவர் மீது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ காதல் வருமா?"


  "கவிதா! நேரடியாகக் கேள்!"


  "என்னைக் காப்பாற்றியதிலிருந்து கௌசிக் மேலும் காதலை உணர்கிறேன்!"


  "கவிதா என்ன உளறுகிறாய்? நீ ஆரம்பத்திலிருந்தே சித்துவைத்தானே காதலித்தாய்? இப்போது இடையில் என்ன குழப்பம்?"


  "இரு கௌசிக், சித்து பதில் சொல்லட்டும்!"


  "கவி, இதற்கு நான் பதில் சொன்னால், அந்த பதிலில் என் சுயநலத் தாக்கம் இருக்கும்! அதனால், நாம் ஒரு சைக்கியாட்ரிஸ்டைப் பார்ப்போம்!"


   மாலை ஆறு மணி! டாக்டர். யோகிதா வின் கிளினிக். மூவரும் டாக்டரின் எதிரே அமர்ந்திருக்கிறார்கள். 

கவிதா டாக்டரைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்கிறாள்!


  "நான் பதிலை இறுதியில் சொல்கிறேன். முதலில் உங்கள் கதையைக் கூறுங்கள்! இங்கே யாருக்கு இருவர் மேல் காதல் வந்திருக்கு?"


  கவிதா முழுக் கதையையும் சொன்னாள்.


  "நீ சித்தார்த்தை எவ்வளவு நாளா லவ் பண்றே?"


  "ஒரு வருஷமா டாக்டர்"


  "கௌசிக்கை எவ்வளவு நாளா?"


  "ஒரு வாரமா டாக்டர்!"


  "அதாவது, கௌசிக் உன் உயிரைக் காப்பாற்றியதிலிருந்து என்று சொல்!"


  "ஆமாம் டாக்டர்!"


  "கௌசிக், பத்து நாளைக்கு முன்னால் இன்னொரு பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறார்! அந்தப் பெண்ணிற்கும் இவர் மேல் காதல் இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா?"


  "இது எனக்குத் தெரியாது டாக்டர்!"


  "அப்படியா! அந்தப் பெண்ணைக் காப்பாற்றும் போது, ரவுடிகளிடமிருந்து மாட்டிக் கொண்ட கௌசிக்கை, சித்தார்த் தான் காப்பாற்றினார்! இது தெரியுமா உனக்கு?"


  "இதுவும் தெரியாது டாக்டர். சித்து என்னிடம் சொல்லவில்லை!"


  டாக்டர் கௌசிக் பக்கம் திரும்பி,"ஏம்ப்பா கௌசிக், சித்தார்த் உன்னைக் காப்பாற்றியதால் நீ அவனை லவ் பண்றியா?"


  இந்தச் சமயத்தில் சித்தார்த்தும், கௌசிக்கும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்தனர். 


  "ஒரு வகையில் பார்த்தால் கௌசிக் உன்னைக் காப்பாற்றுவற்காகவே, சித்தார்த்தால் காப்பாற்றப்பட்டான் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? இரண்டு நிகழ்வுகளும் சக மனிதனைக் காப்பாற்றும் உணர்வுதானேயொழிய, அதற்குக் காதல் என்ற முக்கியத்துவம் இல்லை!"


  "நீங்கள் சொல்வது ஓரளவு புரிகிறது டாக்டர்!"


  "பரிணாம வளர்ச்சியில் பெண்தான் தனக்குரிய துணையைத் தேர்ந்தெடுக்கிறாள். இந்த ஆண் நம்மைப் பாதுகாப்பானா? நம்முடைய குழந்தைகளை நல்ல முறையில் காப்பாற்றுவானா? என்றெல்லாம் பெண்ணின் மூளை யோசித்துதான் தன்னுடைய இணையைத் தேர்ந்தெடுக்கும். இதன் படிதான் நீ சித்தார்த்தைத் தேர்ந்தெடுத்து லவ் பண்ணுகிறாய்.


இடையில், கௌசிக், உன்னைக் காப்பாற்றியதால், உன் மூளை பரிணாமப்படி இவனும் நம்மைக் காப்பாற்றுவான் என்று கணக்கிட்டு விட்டது. அந்தச் சமயத்தில் உன் தலையில் அடிபட்டிருந்ததால், உன் நியூரான் செயலிகள் கொஞ்சம் முறையற்று வேலை செய்யும்.


ஒவ்வொரு , மனிதனும், இன்னொரு மனிதனுடைய நீட்சி! ஆபத்துச் சமயங்களில், ஒரு மனிதனை இன்னொருவன் காப்பாற்றுவதென்பது பரிணாம நியதி! அப்பொழுதுதான் மனித சமுதாயம் இந்தப் பிரபஞ்சத்தில் வாழமுடியும்! இதைக் காதல் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதே!


இப்பொழுது உன் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஒரு ஆணோ பெண்ணே ஒரு சமயத்தில் ஒருவரை மட்டுமே காதலிக்க முடியும். காதல் என்பதன் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்திருந்தால் இதை நீ ஒப்புக் கொள்வாய். காதல் என்பது தன்னை முழுமையாக ஒருவருக்கு அர்ப்பணிப்பது.


காதலானது அன்பு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு போன்ற முப்பரிமாணங்களைக் கொண்டது! அப்படி ஒருவருக்கு உன்னை அர்ப்பணித்தவுடன், இன்னொருவருக்கு உன்னுடைய எந்த முழுமையைக் கொடுப்பாய்? ஒருவருடனான காதல் முறிந்து விட்ட பின் வேண்டுமானால், இன்னொரு காதல் தோன்றலாம்! அது தவறில்லை! ஆனால், ஒரே சமயத்தில் இருவரைக் காதலிப்பது மனித மனதினால் சாத்தியமில்லை! அதனால், நீயே யார் என்று முடிவு செய்து கொள்!"


   கவிதாவின் உள்ளே டாக்டர் பேசப்பேச வேகவேகமாக மாற்றங்கள் நிகழ்ந்தது. டாக்டருக்கு மானசீகமாக நன்றி சொல்லி மூவரும் வெளியே வந்தார்கள்!


  "சித்தார்த், நான் உன்னை ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன்! எனனை மன்னித்துவிடு!" கண்கலங்கினாள் கவிதா!

  சித்தார்த், அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு அவளுடைய கண்ணீரைத் துடைத்தான். "உன்னுடைய சந்தோஷம் தான் கண்ணம்மா எனக்கு முக்கியம்!"


  "ஹலோ, லவ் பேர்ட்ஸ், நான் ஒருத்தன் இங்க இருக்கேன்! என்னையும் வீட்ல ட்ராப் பண்ணிடுங்க!"


   "உன்னால தான்டா இத்தனை குழப்பமும்!"


   "சாரி கவிதா! இப்ப இன்னொன்று சொல்றேன். சித்தார்த் என்னைக் காப்பாத்தினப்ப, நான் அவனை(கிண்டலாக) லவ் பண்ணலை! ஆனால், இன்னொன்று சொன்னேன்!"


  "என்ன சொன்னே?"


  "நீ என்னக் காப்பாத்தினதுனால கவிதாவை உனக்கு நான் விட்டுக் கொடுத்துருவேன்னு நினைக்காதே! அவ எனக்குத்தான்! என்று சொன்னேன்!"


  "சித்தார்த், இதை ஏன் நீ என்கிட்டே சொல்லலை!"


  "அது அவனோட பெருந்தன்மை கவிதா! அத நானும் புரிஞ்சுக்கலை! சாரிடா சித்து!" கௌசிக்கும் இப்போது கண் கலங்கினான்.


  கவிதா சித்தார்த்தை இறுக்கிக் கொண்டாள். அந்த இறுக்கத்தில் அவளுடைய அன்பு, ஒழுக்கம், முழுமையான அர்ப்பணிப்பு என்னும் காதலின் முப்பரிமாணங்களும் இருந்ததை சித்தார்த்தால் உணர முடிந்தது!




Rate this content
Log in

Similar tamil story from Romance