Deepa Sridharan

Abstract Romance

4.5  

Deepa Sridharan

Abstract Romance

டின்டர் முத்தம்(Part2)

டின்டர் முத்தம்(Part2)

5 mins
1.3K


வீட்டிற்குள் நுழைந்ததும், அவள் முகத்துக்காகவே ஒற்றைக் காலில் தவம் கிடக்கும் அந்த நிலைக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். அவள் வார்த்துவிட்டுப் போன அதே தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் இரட்டிப்பாய் மிளிர்ந்து கொண்டிருந்தது. சராசரி முத்தத்தின் நீளத்தை கூகுள் செய்து பார்க்கலாமா என்று ஒரு கணம் எண்ணினாள்.ஆனால் அந்த முத்தத்தின் அழுத்தத்தையும் இனிமையையும் காலச் சிறைக்குள் அடைத்து வைக்க அவள் விரும்பவில்லை. இதழுக்குள் இதழ் கிடக்கையில் நொடி முட்கள் நெருடுவதில்லை என்று நினைத்துக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

அடுத்த நாள் காலையில் அவள் எப்பொழுதும் போல் தன் அன்றாட வாழ்க்கையிலும், வேலையிலும் மூழ்கிப் போனாள்.எத்தனை ஆழத்தில் மூழ்கினாலும், அங்கும் அவன் குரலின் மென்மை சுனைநீர் போல இழையோடிக் கொண்டிருந்தது. அவன் அனுப்பி வைத்த அவன் பாடலை அடிக்கடி கேட்டுக் கொண்டாள். ஏதோ ஒன்று அவளை அவனிடம் ஈர்த்துக் கொண்டே இருந்தது. மாலையில் குளித்து விட்டு வெளியே வந்ததும் அவள் செல் போன் சினுங்கியது.அவனிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. அவள் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. 'வாட்ஸ் அப்?' என்று ஒற்றை வரியில் மெசேஜ் அனுப்பியிருந்தான். அவளுக்கு ஒரு கணம் தான் அவன் நினைவில் சிக்கித் தவிப்பதை சொல்லிவிட வேண்டும் போல தோன்றியது. எனினும் அதைச் சொல்லாமல், "நத்திங் மச்" எப்போதும் போல வேலை, வீடு என்று பதிலளித்தாள். ஏதோ ஃபார்மாலிட்டிக்காக இரண்டு பேரும் சில கேள்விகளையும் பதில்களையும் பரிமாறிக் கொண்டார்கள். அத்துடன் அந்த சம்பாஷணை முடிந்தது.

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களும் அவர்கள் இருவரும் இரண்டு மூன்று ஒற்றை வரி மெசேஜ்களை மட்டு மே பரிமாறிக் கொண்டார்கள். அதற்குள் அவள் அவன் அனுப்பிவைத்த அவனுடைய அத்தனை யூடியூப் பாடல் வீடியோவையும் கேட்டு வைத்திருந்தாள். அவனுடைய குரல் தனித்துவமாயிருந்தது. அவன் பாடலில் எப்பொழுதும் ஒரு நேர்மை மிளிரியது. அதைப்பற்றி அவனிடம் அவள் தெரிவித்தபோது, அவன் அவனுக்கே உரிய கர்வத்துடன் "அது எனக்கே தெரியுமே" என்றான்.அவர்கள் இருவரும் பர்சனலாக பேசிக் கொள்ள ஒன்றும் இல்லாதது போலிருந்தது. அதற்கான முயற்சியை அவனும் எடுக்கவில்லை, ஏனோ அவளும் செய்யவில்லை. அவனின் ஆணவப்பேச்சும், பிடிகொடுக்காத தன்மையும் அவளை அவனிடத்தில் நெருங்கவிடவில்லை. எதுவானாலும், அவனிடம் பேசவேண்டும் என்ற அவளின் ஆர்வம் மட்டும் குறையவில்லை. அவன் பாடிய "என்னவளே அடி என்னவளே" தினமும் அவள் இரவுகளை நிரைத்தது. அந்த வசீகரனின் (ஓ! அது அவன் பெயரல்ல! ஆனால்அவள் அப்படித்தான் அவனை தன் மனதிற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தாள்)  நினைவுகளோ அவள் சிந்தையை நிரப்பியது.

இதற்கிடையில் அவள் வேறு சில டின்டர் முகங்களுடன் ஆன்லைனில் பேசிக்கொண்டிருந்தாள். ஓரிருவரைத் தவிர்த்து மற்ற யாரும் அவளுக்கு சுவாரசியமாய்த் தோன்றவில்லை. அவர்களுள் ஓருவன் ரமேஷ். அவளுக்கும் அவனுக்கும் பேசுவதற்கு நிறைய பொதுவான விஷயங்கள் இருந்துகொண்டே இருந்தது. அவனின் ஆரவாரமில்லா பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவன் அவளை சந்திக்க முடியுமா என்று கேட்டான். அந்த சனிக்கிழமை அவள் ரமேஷை சந்திப்பதென்று முடிவு செய்திருந்தாள்.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் அவள் வசீகரனிடமிருந்து வாட்ஸ்அப் மெசேஜ் வந்திருந்தது. அவள் வழக்கம்போல் ஓரிரு மெசேஜ்களை அனுப்பிவிட்டு அமைதியாய் இருந்தாள். அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற தவிப்பு அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. அதனின்று மீண்டு வந்து அவள் கேட்டுவிட்டாள். "ஆர் வீ கோயின்ங் டு மீட் எகைன்?" என்று மெசெஜ் அனுப்பினாள். அவனிடமிருந்து வழக்கம்போல் பதில் சற்று நேரத்திற்குப் பிறகே வந்தது. "கண்டிப்பாக மீட் பண்ணலாம். எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்றால் முதல் சந்திப்பிலேயே உன்னிடம் சொல்லி இருப்பேன்" என்று அவன் கூறினான். அவள் மனதிற்குள் ஏதோ ஒரு சின்ன சந்தோஷம். "எப்பொழுது பார்க்க போகிறோம்?" என்று கேட்டாள். அவன், "இன்னும் நான்கைந்து நாட்கள் ரெக்கார்டிங் இருக்கு ரொம்ப பிஸி மிகவும் பிஸி" என்று கூறினான். "அடுத்த வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை சந்திக்கலாம்" என்று கூறியிருந்தான்.

அடுத்த நாள், சனிக்கிழமை காலையில் அவள் ரமேஷை சந்திப்பதற்காக ஒரு ரெஸ்டாரன்ட் உள்ளே நுழைந்தாள். அங்கே ரமேஷ் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். இருவரும் கைகுலுக்கி சிரித்துக் கொண்டனர். அவளுடைய ஆடை அவளுக்கு மிகவும் பொருத்தமாகவும் அழகாகவும் இருப்பதாகக் கூறினான் ரமேஷ். அவள், "தேங்க் யூ" என்று கூறிவிட்டு அமர்ந்தாள். இருவரும் மூவிஸ், ஆர்ட், சயின்ஸ் என்று பல விஷயங்களைப் பற்றி அலசிக் கொண்டிருந்தனர். அவன் தான் செய்யும் பிசினஸ் பற்றி அவளிடம் விளக்கமாக எடுத்துக் கூறினான். வாழ்க்கையில் பல வெற்றிகளை எட்டியும் ஏதோ ஒன்று மிஸ் ஆவதாக அவன் கூறினான். "வாழ்தலின் ஆதாரமே முழுமை அடையாமல் இருப்பதுதான்" என்று அவள் கூறினாள். 

இருவரும் சாப்பிட்டுக்கொண்டே பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்கள். அவனின் எளிமையும் வாழ்க்கையை அணுகும் முறையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு பல ஃபோன் கால்கள் வந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் அதை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு அவளிடம் பேச தொடங்கினான். அவனுடன் எவ்வளவு ஐக்கியமாகி பேசினாலும் 'என்னவளே அடி என்னவளே' அவள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த குரலுக்கான முகம் அவள் மனதில் தூரிகை திட்டிக்கொண்டே இருந்தது. அடுத்த வியாழன் வெள்ளிகாக அவள் மனம் காத்துக் கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. எனினும் ரமேஷுடன் இயல்பாக பேசிவிட்டு மீண்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட்டாள்.

ஒரு ஆணிடம் அவளுக்குப் பிடித்த, அவள் எதிர்ப்பார்க்கும் அத்தனை குணாதிசயங்களும் ரமேஷிடம் இருப்பதாக அவள் உணர்ந்தாள். எனினும் ஏனோ அவனை ஒரு நண்பனாக மட்டுமே அவள் மனம் உள்வாங்கிக்கொண்டது. ஆனால் ரமேஷிற்கோ, அவள் நட்பையும் தாண்டியதொரு ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். அடுத்த சில நாட்கள் ரமேஷும் அவளும் அலைபேசியில் நிறைய மெசேஜ் அனுப்பிக் கொண்டனர். இரண்டு மூன்று நாட்களில், ரமேஷ் அவள் தன்னை ஒரு நண்பனாக மட்டுமே பார்க்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். அதில் அவனுக்கு சிறிய வருத்தம் இருந்தும், அந்த நட்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டான். எந்தவித பதட்டமும் சஞ்சலமும் இன்றி அவளால் ரமேஷுடன் பேச முடிந்தது. இருவரும் அழகான ஒரு நட்பைப் பரிமாறிக்கொள்ள ஆரம்பித்தனர்.

ரமேஷிடம் அவளுக்கிருந்த அந்த ஒரு கம்ஃபர்ட் சோன் ஏனோ அவள் ஈர்க்கப்பட்ட வசியிடம் பேசும் பொழுது அவளுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஒரு மெசேஜ் அனுப்புவதற்கு முன் ஆயிரம் முறை யோசித்தாள். புதன்கிழமை இரவு அவள் அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்."நாளை நாம் சந்திக்கப் போகிறோமா?" என்று. அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. வியாழக்கிழமை இரவு அவனிடமிருந்து பதில் வந்தது. "நாளை மதியம் சந்திக்கலாம்" என்று. அடுத்த நாள் காலை அவள் ஆவலுடன் கிளம்பினாள். அவள் மனதிற்குள் படபடப்பு, ஏதோ ஒரு சந்தோஷம். என்னவென்றே புரியாத ஒரு உணர்வு. மதிய நேரம் நெருங்கியும் அவனிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அவள் காத்திருந்து சோர்வடைந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன், "தான் ஏதோ ஒரு வேலையில் சிக்கிக் கொண்டதாகவும் அன்று பார்க்க முடியாது" என்றும் மெசேஜ் அனுப்பினான்.அவள் அவன் வேலையின் நெருக்கடியைப் புரிந்து கொண்டாள். இருவரும் சனிக்கிழமை சந்திக்கலாம் என்று முடிவு செய்தார்கள். 

சனிக்கிழமை வழக்கம்போல் அவர்கள் பேசி வைத்த நேரத்திற்கு அவன் மெசேஜ் அனுப்பவில்லை. அது அவளுக்கு சற்று எரிச்சலைத் தந்தாலும், அவனை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மிதமிஞ்சி இருந்தது. கடைசியாக மத்தியம் மூன்று மணிக்கு அவன் அவளை கூட்டிச் செல்வதற்காக காரில் வந்தான். அவள் உள்ளே ஏறியதும் அவன் பாடத் துவங்கினான். அவள் எரிச்சல், கோபம் அத்தனையும் தாண்டி அவன் குரலில் ஒன்றிக் கிடந்தாள். எங்கே போகிறோம் என்று கேட்டாள். அவன் வீட்டிற்கு போவதாகச் சொன்னான்.

அவள், "நாம் வெளியே எங்கேயாவது சந்திக்கிறோம் என்று நினைத்தேன்" என்றாள். அவன், "நாட் இன்டிரஸ்டட்" என்றான். ஆனால் உன் வீட்டிற்கு வர எனக்கு விருப்பமில்லை என்று அவள் கூறினாள். அவன், தான் காலையில் இருந்து வெளியே இருப்பதாகவும், மீண்டும் வெளியே செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறினான். அவள் சற்றே தடுமாற்றத்துடன் " சரி உன் வீட்டிற்கு போ" என்று அலுத்துக் கொண்டே ஒத்துக் கொண்டாள். 

அவன் மீண்டும் பாடத் துவங்கினான். இடையில் பாட்டை நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. "மறந்துவிட்டாயா?" என்றான். "என்ன?" என்று கேட்டாள். "பாடினால் முத்தம் கொடுக்க வேண்டும் என்பதை மறந்துவிட்டாயா?" என்றான். அவள் அவனைப் பார்த்து புன்னகை பூத்தாள். அந்த சந்திப்பு செக்ஷூஅல் என்கௌன்டராகத்தான் இருக்கப்போகிறது என்று அவளுக்குத் தோன்றியது. அதற்கு அவள் தயாரில்லை என்று தெரிந்தாலும் ட்ரை பண்ணலாம் என்று முடிவு செய்தாள்.

அவன் வீடு வந்ததும் இருவரும் காரில் இருந்து இறங்கி லிஃப்டுக்குள் சென்றனர். அவன் "என்ன பெர்ஃபியூம் போட்டு இருக்க? மேல் பெர்ஃபியூமா?" என்று கேட்டான். "இல்லையே ஒய்ட் மஸ்க்" என்றாள். "வெரி ஸ்ட்ராங்" என்று அவன் சர்காஸ்டிக்காக கூறினான். அவன் பேச்சில் அட்டை போல ஒட்டிக் கொண்டிருக்கும் திமிர் அவன் முகத்திலும் அவ்வப்போது தெரியும். "ஹீ இஸ் சோ ரூஃட்" என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஆனாலும் அதில் அவனின் நேர்மை மேலோங்கித் தெரிந்தது. அவன் அவனாக இருந்தான். அதுவே அவளை அவனோடு ஈர்த்தது.

இருவரும் அவன் வீட்டிற்குள் நுழைந்தனர். அவன் அவளை நேரடியாக படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றான். "இங்க தான் என்னோட ரெக்கார்டிங் எல்லாம்" என்று கூறினான். அவன் படுக்கைக்கு மேலே ஒரு பெரிய செல்ஃப் இருந்தது. அதனுள் பலவிதமான புத்தகங்கள் நிரம்பி இருந்தது. அவள், "ஷிவா ட்ரையாலஜி புக் படித்துவிட்டாயா?" என்று கேட்க. "ஃபர்ஸ்ட் புக் படிச்சேன். செகண்ட் புக் கொஞ்சம் போராக இருந்தது அதனால படிக்கல ஸ்டாப் பண்ணிட்டேன்" என்றான். அவள் மற்ற புத்தகங்களை பார்ப்பதற்குள் அவன் பாடிக்கொண்டே அவளைத் தழுவினான். 

இருவரும் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டனர். மீண்டும் அந்த நீண்ட முத்தம். அவள் காது மடல்களை மொய்த்து பின் இதயத்தில் தேன் வார்த்துக்கொண்டிருந்தது அவனின் குரல். ஆனால் அவன் விரல் அத்தனை சுகத்தை வார்க்கவில்லை. எனினும் அவள் தன்னிலை மறந்தாள். அவன் அவளை அந்த படுக்கையில் கிடத்தினான். அவன் தீண்டலிலும், அவன் அவளை நடத்துவதிலும் அவளுக்கு ஏதோ ஏதோ ஒரு நெருடல் இருந்தது. அவன் தன்னை ஒரு செக்ஷூஅல் அப்பாரட்டஸ் ஆக மட்டும் பார்க்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது. அவனுடைய தீண்டலில் உணர்வுகள் இல்லை.

அவன் அவள் ஆடைகளை களையத் துவங்கினான். அவள் உடல் அதற்கு ஒத்துழைத்தாலும், மனம் ஒத்துழைக்காமல் இருந்தது. அவன் அவள் மேலிருந்தான்.   தன்மானம் சிலவேளைகளில் சுகத்தையும், தேவைகளையும், விருப்பங்களையும் தாண்டி தலைதூக்கும். அவளுக்கு அக்கணம் தலை மட்டுமல்லாமல் பாதம்வரை தூக்கியது தன்மானம். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் செயலற்று, அவன் செயலுக்கு இணங்காமல் அவனை வெறித்துப் பார்த்தாள். அதற்கு மேல் தொடர முடியாமல், "I don't think this is going to work out" என்று கூறிவிட்டு, அவன் எழுந்து சென்று தன் உடைகளை மாற்றிக்கொண்டான். அவளும் தன் உடைகளை அணிந்துகொண்டாள். 

அவன் முகத்தில் ஒரு சலிப்பு இருப்பதை அவளால் உணர முடிந்தது. அத்தகைய நெருக்கமான கட்டத்திற்கு சென்ற பின்னும் ஒரு ஆணால் தன் உணர்வுகளை புரிந்து கொண்டு விலகிக் கொள்ள முடிந்தது என்பது அவளுக்கு ஆச்சரியத்தைத்  தந்தது . அவனிடம் அவள் மீண்டும் ஈர்க்கப்பட்டாள், இம்முறை சற்றே கூடுதலாக! "கூடிப்பிரியாமலே ஓரிரவெல்லாம் கொஞ்சிக் குலவியங்கே" என்ற பாடல் வரிகளை ஏனோ அவள் நினைத்துக்கொண்டாள். இருவரும் சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உட்கார்ந்திருந்தனர். ஒருவிதமான ஆக்வார்ட் மோமென்ட் அது.

"ஏதாவது பேசு" என்று கூறினாள். 

அவன், "பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்றான். 

அவன் தன் மொபைலில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்களுக்கு மேல் அவளுக்கு அங்கே இருக்க முடியவில்லை. " பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றால் நான் கிளம்புகிறேன். என்னை ட்ராப் பண்ண முடியுமா?" என்று கேட்டாள். 

 "நோ பிராப்ளம்" என்று கூறி அவன் கிளம்பினான். இருவரும் காரில் ஏறி புறப்பட்டார்கள். அவன் அம்முறை ஏனோ பாடவில்லை. ஆனால் அவள் பல பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே வந்தாள். அவன் தனக்கானவன் அல்ல என்று அவள் தீர்மானித்தாள். அப்படியென்ன அவனிடம் ஈர்ப்பு, என்று பலமுறை அவள் சிந்தித்துப் பார்க்கிறாள். ஒருவேளை அவன் குரலோ? இருக்க வாய்ப்பில்லை. அவனைப் போன்றே வசீகரமான குரல் கொண்டு பாடும் சில ஆண்களுடன் அவளுக்கு கான்டக்ட் உண்டு. அவர்களிடம் இந்த ஈர்ப்பு ஏற்படவில்லையே! இன்டலெக்ட்சுவாலிட்டியோ? அதுவும் இருக்கலாமே ஒழிய அது மட்டுமே ஈர்ப்பிற்கு காரணமாயிருக்க இருக்க வாய்ப்பில்லை.  பொதுவாக அடக்கத்தோடு இணைந்த அறிவே அவளை சுண்டியிழுக்கும்.  தனக்கு முற்றிலும் பிடிக்காத குணாதிசயங்களைக் கொண்ட அவனின் ஈர்ப்பு அவளுக்கு வியப்பாக இருந்தது. 

ஒருவேளை தன்னை புதிருக்குள்ளாக்கும் அந்த வியப்புதான் ஈர்ப்போ? என்று நினைத்துக்கொள்கிறாள். ஆனால் அவன் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.  அவன், அவள் அருகில் இருப்பதை பற்றி கூட நினைத்திருப்பானா என்று தெரியவில்லை. அவள் வீடு வந்ததும் அவன் "குட் பை" என்று அழுத்தமாகக் கூறினான், அவள் முகத்தைக்கூடப் பார்க்காமல். அவள் "ஆல் தி பெஸ்ட்" என்று கூறி விட்டு கீழே இறங்கினாள். ஆனால் அவளுக்குள் ஏதோ ஒரு பொறி தட்டியது இது அவர்களுக்கான கடைசி குட் பை அல்ல என்று!


Rate this content
Log in

Similar tamil story from Abstract