Dr.Padmini Kumar

Thriller

5  

Dr.Padmini Kumar

Thriller

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 10)

தாய் மண்ணே வணக்கம் ( பாகம் 10)

3 mins
506


கண்ணன் தன் கையில் வாங்கிய கவரைப் பிரித்தான். தென்கொலம்பியாவில் தன் வீட்டில் விடுமுறையை கழிப்பதற்காக வந்த டாக்டர் மார்ட்டின் அவனை அழைத்து எழுதப்பட்ட கடிதம் அது. அவருக்கு குழந்தைகளின் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட தனது புதிய திட்டத்திற்கு டாக்டர் கண்ணனின் உதவி தேவைப்படுகிறது. ஒரு பக்கத்தில் பார்த்தால், இந்த திட்டம் டாக்டர் கண்ணனின் கனவுகள், அவனது இலக்குகளை முன்னேற்றும் விதமானது. இந்த திட்டத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள பலரும் முயற்சி கொண்டிருக்கின்றனர். ஆனால் டாக்டர் மார்ட்டினுக்கு கண்ணனின் உதவியையே விரும்புகிறார். கண்ணனின் பதில் கிடைத்த பின் தான் அவர் முடிவு எடுப்பார். இதனாலேயே சென்டரில் இருந்து அதிகாரப்பூர்வமான கடிதமாக எழுதாமல், தன் வீட்டில் இருந்து பர்சனல் கடிதமாக அதை எழுதி அனுப்பி இருந்தார். மேலும் கண்ணனை இதற்கிடையில் ஏதேனும் வேலையில் சேர்ந்து விட்டாயா என்றும் கேட்டிருந்தார். கடிதத்தை முழுவதும் படிக்காமலேயே கையில் பிடித்தபடி அப்படியே நின்று விட்டான் கண்ணன். இது ஓர் அற்புதமான கடிதம். அவன் உணர்ச்சிகளால் மயங்கிய நிலையில் இருந்தான்; பெருமைப்பட்டான்; சங்கடப்பட்டான்; வெட்கப்படவும் செய்தான். அவன் டாக்டர் மார்டினுக்கு பொய் எழுத முடியாது; உண்மையையும் தான். முதலில் அவனது பழக்கவழக்கங்கள், மரியாதைகளில் எந்தவிதமான பாதிப்பும் இல்லாதபடி கடிதம் எழுத வேண்டும். அடுத்ததாக, அவன் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவன் எப்படித்தான் டாக்டர் மார்டினுக்கு எழுதுவான்- அவன் எந்த தாய் மண்ணின் ஆத்மாவை, பாரம்பரியத்தை, கலாச்சாரத்தைப் பற்றிப் பெருமையாக பேசிப் பேசி புளகாங்கிதம் அடைவானோ, அந்தத்தாய் மண்ணில் அவன் கால் பதிக்க முடியவில்லை என்று. அங்கே அவன் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டான். விரும்பத்தகாதவன்(unwanted ).

ஒரு முறை டாக்டர் மார்ட்டின் அவனது குழந்தைத்தனமான பேச்சைக் கேட்டுக் கேட்டு சொன்னார்-" கண்ணா, எனக்கு பாரதம் பற்றித் தெரியாது. பாரதத்தைப் பற்றி நான் படித்தும், கேட்டும் தெரிந்து கொண்ட விஷயங்கள் எனக்குள் ஒருவித நெகட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்தின. ஆனால் உன்னால் தெரிந்து கொண்டபின் உன்னைப் போலவே பாரதத்தை நானும் அன்பு கொள்ள ஆரம்பித்து விட்டேன்." இவ்வாறு டாக்டர் மார்ட்டினின் இதயத்தில் பாரதத்திற்காக உதயமான அன்பு கண்ணனின் முயற்சியால் தான். அந்த அன்பு எந்த நிலையிலும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அப்படியானால் எப்படித்தான் மாறிய இந்த உண்மையை ஒளிக்கப் போகிறான் கண்ணன் ?

டாக்டர் மார்ட்டின் எழுதி இருந்தார் - "எனக்கு ஒரு உயரிய கொள்கை உடைய, கடின உழைப்பாளியான, ஆராய்ச்சியாளர் மட்டும் தேவையில்லை; ஒரு சாதாரண ஆய்வாளர் மட்டும் தேவை இல்லை; எனக்குத் தேவை ஒரு நண்பன்... அப்பா மாதிரி... தம்பி மாதிரி ....மூத்த மகன் மாதிரி..... ஆம், எல்லாம் ஒன்றாக சேர்ந்தது போல்.... எப்படி உங்கள் பாரதத்தில் மிக நெருக்கமான இத்தகைய சொந்தங்களை உரிமையோடு அழைப்பீர்களோ... அந்த சொந்தங்கள் எல்லாம் கொண்டு வந்தது போல்.." கடிதம் இன்னும் முடியவில்லை..... கண்ணை திறந்து கொண்டே கண்ணன் கனவு காணத் தொடங்கினான்_ டாக்டர் மார்டினுடன் அவன் பாரதத்தில் குழந்தை நோய்களைப் பற்றிய ஒரு பன்னாட்டு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, பேச்சாளராக கலந்து கொள்கிறான். அவன் கருத்தரங்கில் படித்த அவனுடைய ஆராய்ச்சி கட்டுரை மிகவும் பாராட்டப்பட்டது; உள்நாட்டு, வெளிநாட்டின் பலப்பல மருத்துவ சிகிச்சை மையங்களின் பிரதிநிதிகள், உயர் அதிகாரிகள் அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவனை தங்கள் மையங்களுக்கு, பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்; அவனுக்கு மாலைகள், பூங்கொத்துக்களால் மரியாதை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்; சுகாதார மந்திரி குழந்தைகளின் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அவனது ஆராய்ச்சி கட்டுரையின் பன்முக சாதனைகளின் மூலம் அவனை குழந்தைகளின் தேவ தூதர் எனவும், பாரதத்தின் கௌரவம் என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்..... மல்லிகா கனவைக் கலைத்தாள்," தம்பி... இந்தா....டீ..."

 திடுக்கிட்ட கண்ணன் தனக்குள் வெட்கப்பட்டான். "வாழ்த்துக்கள் ...தம்பி!" "எதற்காகவோ? துடுக்கு அக்காவே ?"

"எதற்காகவா.... எதற்கென்றால் தம்பி, உனக்கு கிடைத்த இந்த மண்வாசனைக்காக...(கடிதத்தை சுட்டிக்காட்டி)...தாய்மண் வாசனை இல்லை.... ஆனாலும் வெளிநாட்டு மண்வாசனை உன்னை நோக்கி வந்திருக்கிறதே.." இருவரும் கண்ணீர் துளிர்க்க சிரித்தனர். "தம்பி, மேலும் படி.... இன்னும் என்ன எழுதி இருக்கிறார் டாக்டர் மார்ட்டின் ?"

எழுதி இருக்கிறார்_" நான் உனக்கு உறுதி அளிக்கிறேன்... என் திட்டம் முழுமை அடைந்ததும் நான் உன்னை உன் தாய் மண்ணுக்கே திருப்பி அனுப்பி விடுவேன். உன்னை உன் தாய் மண்ணிலிருந்து பிரித்து விட மாட்டேன்."

அத்துடன் மேலும் இதை எழுதியிருக்கிறார்," நான் உனக்காகவே காத்திருப்பேன்..." இக்கடிதம் கிடைத்த மூன்று வாரங்களுக்குப் பின் கண்ணனுக்கு டிக்கெட் கிடைத்தது. விமானத்தில் ஏறும் முன் கண்ணன் திரும்பி நாலா பக்கமும் பார்த்து, தன் மனதில் சொல்லிக் கொண்டான்,"நான் காத்திருக்கட்டுமா.... காலம் வரும்வரை....... தாய் மண்ணே! வணக்கம்.

         முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Thriller