STORYMIRROR

Madurai Murali

Thriller

5.0  

Madurai Murali

Thriller

உஷ்! இரத்தம்

உஷ்! இரத்தம்

9 mins
926


                      “உஷ் !..இரத்தம் ”

                                                - மதுரை முரளி

               “தூங்காநகரம்”. அதன்  இதயமான மேல கோபுரத் தெரு...

               இரவுக் காட்சி ரசிகர்களை வரவேற்க, கொத்து புரோட்டா ஓசைகளாலும், மூக்கை துளைக்கும் ‘சால்னா’ வாசனையாலும் தயாராக, 

              "அமாவாசை ரத்தம்" திகில் படம்... நகரத்தின் அந்த ‘ மைய ’ சினிமா தியேட்டரில்.

              போஸ்டரில்.. ‘பலவீன இதயம் உள்ளவர்கள் படத்தை தவிர்க்கவும். ஆசைப்பட்டால்,  தகுந்த துணையுடன் வரவும் ‘ என அறிவிப்பு வேறு

 கூடுதலாய் மிரட்ட,

              இருளப்பன் சற்று திகிலோடுதான் தியேட்டரில் நுழைந்தான்...  தோளில் தோல் பை .

              உள்ளே  பல இலட்சங்கள். உடம்போடு  பையை  இறுக்கிப் பிடித்தபடி அவன்.

              “தட்”  உள்ளே நுழையும்போதே கல்லொன்று இடற, கால் தடுமாறி தரையில் லேசாக சரிந்தவன் கால் கட்டை விரலில் சின்னதாய் காயம். 

              இரத்தம் சொட்டுச் சொட்டாய்.

              சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பையோடு  எழுந்தவன், 

             ‘ இஸ்’  என வலியில் முனைகியபோது, உள்ளுக்குள் மனம் ஓர் அபசகுன ஓலமிட்டது.

               பேண்டில் இருந்து எடுத்த கைக்குட்டையால் விரல் இரத்தத்தை ஒத்தியவன்,   

               மீண்டும் அக்கம் பக்கம் பார்வையை ஓடவிட்டு விட்டு,  டிக்கெட் கவுண்டரை  அடைய,  உள்ளே ஆள் இல்லை.

              சிறிய கம்பித் தடுப்பு வழியே உள்ளே எட்டி பார்க்க,

              ‘திபுக்’கென தலை வரை போர்த்தியிருந்த போர்வையுடன் ஒருவன்,

கவுண்டரில் கீழேயிருந்து எழ,

               ‘சுர்’ என ரத்தம் தலைக்கு ஏறியது  இருளப்பனுக்கு பயத்தில்.

               “ஏ.. ஏப்பா,  இப்படியா’குபீர்’ ன்னு எழுந்திரிச்சு பயமுறுத்துவ? பதறிட்டேன்..நான் “ ஒட்டிக்கொண்ட நாக்கில் உளறினான்.

               ‘திகில்’  படம் பார்க்க வந்தவன்.. பயப்படலாமா?  ஹா...ஹா”  அவன் பேய்ச்சிரிப்பு ஒன்றை உதிர்க்க,

          “சே!  அவசியமில்லாம வந்திட்டேனா ? இல்ல, சிக்கிட்டேனா?” தனக்குள் பேசியவனாய், 

         டிக்கெட் ஒன்றை வாங்கி தியேட்டரில் நுழைய, திரையரங்கம் அரைஇருட்டில்.

        அங்கொன்றும் இங்கொன்றுமாய்... ஆட்கள்.

        பாதுகாப்பாய் ஓர சீட்டு பிடித்து உட்காரப் போனவன்,

       ‘ ஹேய்’  சத்தத்தில் நடுநடுங்கிப் போனான்.

       “ யா.. யாரு? “

        “உட்காருய்யா. உன்னய இல்ல...அவனை.” தொலைவில் கையைக் காட்ட,

         காட்டிய திசையில் யாருமே இல்லை .

        “அட,  எல்லாமே ஒரு மார்க்கமா இருக்கே. “ யோசனையாய்ச் சீட்டைத் தட்டி உட்கார்ந்தான்.

        ‘சர்’ எனப் பறந்த கரப்பான்பூச்சி முகத்தில் அமர,

        அடுத்த சில நிமிடங்கள் சொல்ல முடியாத அவஸ்தையில்  ஆடிப்போனான் இருளப்பன். 

        " ட..ட..ட்டட" பயமுறுத்தும் பின்னணி இசை .

         திரை விளக்குகள்  அனைத்தும் அணைந்து, பட அறிவிப்புகள் பலத்த மிரட்டலான இசைகளுக்கு இடையே வர,

         திகிலாய்க் கால்களைச் சீட்டில் மடக்கி, மிரட்சியாய் ஒரு கண்ணை மூடி காட்சிகளை பார்க்க தொடங்கினான் இருளப்பன்.

        ‘பட்’டெனப்  பின்னந்தலையில் அடி விழ,  தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு .

        “ எ.. என்ன?  யாரு?” தனக்குள்  வரவழைத்துக் கொண்ட தைரியத்தில் இருளப்பன் கத்த,

       “ ஒண்ணுமில்லே. பக்கத்து சீட்ல ஆள் இருக்கான்னு கேட்டேன். நீ உட்காரு”  மிரட்டிய அந்த ஆசாமி, 

       இவன் சீட்டுக்கு அருகில் சாக்குபையை வைத்துவிட்டு,

       சுத்தி வந்து அடுத்த சீட்டில் படாரென சாய,

       இவன் வரிசை சீட்டுகள் எல்லாம் அரை அடி குலுங்கியது முன்னும் பின்னும்.

       ஒரக்கண்ணால் அவனை இருளப்பன் பார்க்க,

       பற்ற வைத்த பீடிநெருப்பில் அவன் பாதி முகம் வித்தியாசமாக மிரட்டவே,

       மீண்டும் திரைக்குத் திருப்பினான் பார்வையை இருளப்பன்.

      திரையில், காட்சிகள் கும்மிருட்டில்.

      நடுநடுவே இரு ஜோடிக் கண்கள்.. அதன் குரூரமான பார்வை.

      ஆந்தை ஒன்று ‘சர்’ என பறந்து உடம்பை நடுநடுங்க வைத்தது.. கூடவே நள்ளிரவு குளிர் வேறு.

      எங்கிருந்தோ பறந்துவந்த கத்தி ‘சதக்!’இரத்தம் தெறித்தது.. திரையில்.     

      பயத்தில் முகத்தை இருளப்பன் துடைத்துக்கொள்ள, 

      தியேட்டர் திரை சில நிமிடங்கள் முழுதும் சிகப்பாகி பின் கருப்பானது மீண்டும்.

      “ ம்ஹூம்.. இனி கிளம்பிட வேண்டியதுதான். ” ஒரு நிமிடம் மனம் 

தடுமாற ,

      “வேண்டாம்.  இரயிலைப் பிடிக்க... நேரம் நிறைய இருக்கு., இன்னும்" எனத் தனக்குள் சொல்லிக் கொள்ளும்போது,

      “இந்தா,   இந்தச் சாக்குப்பையைப் பார்த்துக்க. நான் ‘ஒரு நிமிஷம்’ ”

ஒற்றை விரலைச் சைகையில் காட்டிய பக்கத்து சீட்டுக்காரன் ,

       அடுத்த சீட்டிலிருந்த பையை இவன் காலடியில் ' தொப்' பென  வைத்து

பதிலுக்குக் காத்திராது கரைந்து போனான்.. கும்மிருட்டில். 

       நொடிகள்..நிமிஷங்களாய் நகர,அவனைக் காணாது பதட்டமான இருளப்பன்.

       மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த, அங்கே...

       பூனையொன்று ‘மியாவ்’ என முறைத்து திரையில் பாய,

       காலில் , ‘ஏதோ’ பிசுக்கென ஒட்டியது தரையில்.

       எச்சரிக

்கை மணி எழுப்பி மனம் உசுப்ப,

       பதட்டமாய்க் கையிலிருந்த பட்டன் செல்லில் டார்ச்சை உசுப்பி ஒளிவெள்ளம் பாய்ச்சினான் தரையில்.

     ' ஆ' அலறல் இவனிடமிருந்து.

      சாக்குப்பையிலிருந்து சொட்டு, சொட்டாய் இரத்தம்..தரையில் கோடு போட்டு, கோலம் போடத் தொடங்கியது.

     சீட்டிலிருந்து துள்ளிக் குதித்த இருளப்பனின் கால் சாக்குப்பையைத்  தவறுதலாய் உதை விட,

      ஒரு கை., வெட்டப்பட்ட  துண்டுக்கை, விரல்களுடன் எட்டிப்பார்த்தது.    

      அலறியடித்து ஓட இருளப்பன் எத்தனிக்க,

      திடீரென இரண்டு ‘டார்ச்’ வெளிச்சங்கள் இவன் மீது விழுந்தது.

      அருகில் நெருங்கிய ஒரு வெளிச்சம் இவன் கண்களில் நேராய்.

      கூச்சம் அதிகமாகி, முகத்தை மூடிக்கொண்டவன்,

     “ நா..நான்., எனக்கு தெரியாது.” வார்த்தைகளை எழுத்துக்களாய் கக்கினான் வாயிலிருந்து.

      தப்பிக்கும் பொருட்டு இருளப்பன் வேகமாய் ஓட முயல,

     ‘ லபக்’ கென இவனைப் பிடித்த ஒரு கை,

     “டேய்,  எங்கே தப்பிக்கிற?”  முகத்தில் ஓங்கி அறைந்தது.

     “ ஐயா, என்னை விட்டுடுங்க.இ.. இது யாரோ வைச்ச பை. “

      அடுத்த வெளிச்சம் மீண்டும் சாக்குப்பை மீது.

     “ நாங்க போலீஸ்.  வெளியில வாடா. கொலை பண்ணிட்டு, தப்பிக்க நினைக்கிறியா?  அரை மணி நேரமா அலசி தேடினோம்... நாங்க. இப்ப,  இங்கே..சிக்கிக்கிட்ட..நீ. “

      ‘படக்’ கென மற்றொரு உருவம், இவனைக்  கழுத்தில் கைவைத்து தள்ள,     

      இருளப்பன் வேகமாய்த் தன் செல்போனைப் பாக்கெட்டில் இருந்து எடுக்க முயன்றான்.

     “ அந்த செல்போனைப் பிடுங்கப்பா.  இவன் கூட்டாளியைக் கூப்பிட்டு, அவன் யாருன்னு  பார்ப்போம். அவனையும் பிடிப்போம்”  சொல்ல  இருளப்பனின் செல்போனைப் பறித்துக் கொண்டான்..மற்றொருவன்.

      அடுத்த ஐந்து நிமிடத்தில் தியேட்டர் வாசலுக்கு இவனை நகர்த்தி, நின்ற ஒரு ஆட்டோவில் ஏற்றி, பக்கத்து முட்டுச்சந்தில் நிறுத்தி, ஒரு ஒதுக்குப்புறமான வீட்டிற்குள் குப்புறத் தள்ளினார்கள் இருளப்பனை.

       “ ஐயா,  நீங்க எல்லாம் யாரு?  என்னைய, என்ன செய்யப்போறீங்க?” கவலை கலந்த பயத்துடன் இருளப்பன் தடுமாறி பேச,

      “ டேய், முதல்ல, அவன் கையைக்காலை கட்டு.  வாயையும் கட்டு.” ஒருவன் சொல்ல,

        உடனே கூட இருந்தவன், திமிறிய இருளப்பனின்  வாயையும்,  

கை,கால்களையும்  கட்டினான்.

       சுற்றி நின்ற இரண்டு பேர் மீது இருளப்பன் பார்வையைப் பதியவிட,

       அதில் ஒருவன் முகம் லேசாய்.. மங்கலாய் நினைவில் வந்தது... அவன்   டிக்கெட் கவுண்டர் ஆசாமி.

        “ அடப்பாவிகளா,  என்ன வேணும் ? “ வாயில் கட்டியிருந்த துணி வழியே இருளப்பன் வார்த்தைகள் கசிய,

       “  அதுவா., இ.. இதுதான் ” இருளப்பன் தோளோடு பிடித்து வைத்திருந்த லெதர் பேக்கை பிடுங்கிய ஒருவன்,

        அதன் ‘நம்பர்’ லாக்கை உடைத்தெடுத்து, கையை உள்ளே விட்டு.. வெளியே எடுக்க,

       ‘ 2000’ ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாய்... லட்சக்கணக்கில்.

       கை கால்களை உதைத்து.. இருளப்பன் திமிர,

       பாக்கெட்டிலிருந்த கத்தியை எடுத்த மற்றொருவன்,

      ‘ சரக்’ கென கோடு போட்டான் இருளப்பன் காலில்.

      “ டேய்,  இனிமே நீ சத்தம் போட்டே.. அடுத்து,  இந்தக் கத்தி உன் கழுத்துக்குத்தான்” இருளப்பனிடம்  சொல்லியவன்,

        “ டேய் மாப்பிளை,  இவனை இங்கேயே விட்டு விடுவோம்.  நாம சீக்கிரமா இங்கிருந்து நகரணும்.  சினிமாவோட  இடைவெளி  விடற நேரம் நெருங்கிடுச்சு. சிலபேர் வெளில கூட  வரலாம். ம், சீக்கிரம் “ என வேகப்படுத்த,

       “ஆமாடா.  இவனை,  இதே அறையில அடைச்சிடுவோம்.

 கதவை வெளியில் பூட்டிவிட்டு போயிடலாம் “  அவனும் உஷாரானான்.

       “ஆ.. ஆ..”  வாய் விட்டு அழ முடியாது இருளப்பன் திணற,

       படபடவெனக் காரியத்தில் இறங்கி, கதவைப் பூட்டி பணப்பையை இன்னொரு பையில் போட்டு வாசலுக்கு வர,

       வெளியில் தயாராய்க்  காவல் வாகனம் ‘ பீப் ..பீப் ‘ ஒலியுடன் வரவேற்றது.

       சுற்றிவளைக்கப்பட்ட கொள்ளையர்கள் பிடிக்கப்பட,  அடுத்த நாள் செய்தித்தாளில் முன்பக்க புகைப்படத்தில்.. அவர்கள் தலைப்புச்செய்தியாய்.

       “விசித்திர,  விபரீத கொள்ளை.  காவல்துறையின் புயல் வேகத்தில் பிடிபட்டது “

        பாராட்டு மழையில் மதுரை நகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் குழு  படம்.  கூடவே,   அவருடைய பேட்டி.

       “ தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர்,  அலுவலக வேலைத் தொடர்பாய் ரயிலேறி சென்னை போவதற்கு முன், நேரம் செலவழிக்க 

இரவுக் காட்சி சினிமா பார்க்க போனவரை,  இரண்டு பேர் கொண்ட  கொள்ளைக் கும்பல் கடத்திட்டாங்க. “

     இடைமறித்த நிருபர்,

     “ நீங்க எப்படி  பிடிச்சீங்க? உங்களுக்குத் தகவல் எப்படி வந்தது?  ஏதோ., வெட்டப்பட்ட துண்டுக்கை கிடைச்சதா பரபரப்பு நிலவுதே ?  தகவல்  எதாவது? “

தொடர்ச்சியா கேள்விகளை  அவர் அடுக்க,

     “  வெட்டப்பட்ட துண்டுக்கை.,  உண்மையான கையல்ல.   அது, அந்த தனியார் ஊழியரை பயப்படுத்த,  பயன்படுத்திய இரப்பர் கை.  அது மேலே கோழி இரத்தம் தடவி சொட்ட விட்டுருக்காங்க. “ சொன்ன கமிஷனர்,

      சாக்குப்பையைத் தூக்கி நிருபரிடம் காட்ட ,

      ஒரு நிமிடம் தடுமாறிப் போனார் அவர்.

     “ அப்புறம் எங்களுக்குத் தகவல் எப்படிவந்ததுன்னு கேட்டீங்க?  நல்ல கேள்வி.  இருளப்பனை இவங்க  மிரட்டி, தியேட்டரிலிருந்து கடத்தும்போது அவர் சமயோஜிதமா உடனே அவசர எண்ணை,  செல்போன் ‘ஸ்பீடு’  கால் நம்பர் 1 இல் பதிவு செய்ததை,  'டக்' குனு அமுக்கி... நிறுவன மேலாளருக்கு தகவல் அனுப்பிட்டாரு. அதை இந்த கொள்ளைக்கூட்டக் கும்பல் கவனிக்கல. .”

      நிருபர் தொடர்ந்து,

      “  ஆனா, உங்களுக்குத் தகவல் எப்படி வந்தது?”   எனப் பரபரக்க,

      “ இருங்க.  நான் இனிமே தான் முக்கியமான விவரத்தை சொல்லப் போறேன். உடனே,  அவர் சுதாரிச்சு எங்களை உஷார் பண்ணிட்டாரு.  இதுல,  முக்கியமான விஷயம் என்னன்னா,  இருளப்பன்  கொண்டுபோன தோல் பையில,  தனியார் கம்பெனி ஒரு ‘ஜி.பி. எஸ்’  சிப்பை பாதுகாப்புக்காக பொறுத்தியிருக்காங்க. அது அந்த கும்பலுக்குத் தெரியாததால,  நாங்க  அதை  வைச்சு உடனே அங்கே போயிட்டோம்.  இப்ப அவங்க,  ஜெயிலில்ல கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க.  இதில,  சினிமா தியட்டர் கவுண்டரில,  டிக்கெட் கொடுத்தவன் தான்.. இந்த திட்டத்தோட,  சதியோட  மாஸ்டர் ப்ரைன். மற்றவன்,  அவன் கொடுத்த தகவல்படி,  சேர்ந்து வேலை செய்த  கூட்டாளி. என்னதான் காவல் துறை மக்களுடைய பாதுகாப்புக்காகச் செயல்பட்டாலும்,  தனிநபரும், நிறுவனங்களும் இந்த மாதிரி எச்சரிக்கையாக இருந்தால்,  எல்லாருக்குமே நல்லது “  என்ற மதுரை போலீஸ் கமிஷனரின் பேட்டியும், அறிவுரையும் பெரிய கட்டங்களுக்கு நடுவில்...அலங்கரித்தன.

                                              


Rate this content
Log in

Similar tamil story from Thriller