Dr.PadminiPhD Kumar

Thriller

5.0  

Dr.PadminiPhD Kumar

Thriller

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா

மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா

2 mins
561


                                        மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா! (மர்மத்தொடர் நாவல்)

அத்தியாயம் ஒன்று - 

                                             மாடர்ன் பங்களா 

          மலைகளின் அரசி ஊட்டி . ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயர்கள் இந்த மலை ராணியைத் தங்கள் விக்டோரியா மகாராணியைப்போல் நேசித்தனர் என்றே சொல்லலாம். ஏனென்றால் இன்றும் ஊட்டி மலைத்தொடர்களில் அமைந்த மலை உச்சிகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் அமைந்த பங்களாக்கள் ஆங்கிலேயர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படி அமைந்த ஒரு பங்களா தான் மாடர்ன் பங்களா.

           ஊட்டி நகரத்தின் மேற்கே உள்ள ஒரு மலை முத்து நாடுபெட்டா. இந்த மலை ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஊட்டியில் இருந்து மைசூர் செல்லும் பாதை இம்மலை அடிவாரத்தில் ஆரம்பித்து மேல் நோக்கிச் சென்று அங்கு மலை உச்சியில் இருந்து ஊட்டி பள்ளத்தாக்கை கண்டுகளிக்க பாதையை ஒட்டி வளைவில் ஓர் இடம் அமைந்துள்ளது. பொதுவாக மைசூர் செல்பவர்கள் மலை மேல் ஏறி அந்த இடத்தில் நின்று பள்ளத்தாக்கின் அழகை ரசித்த பின்னரே கீழிறங்கி மைசூர் செல்வார்கள். பிரபல ஆங்கில கட்டிடக் கலைஞர் ஒருவரின் பார்வை அந்த இடத்தில் பட்டது.

                   பொதுவாக கட்டிடங்கள் தரை தளம், முதல் மாடி, இரண்டாம் மாடியென கீழிருந்து மேல்நோக்கிப் போகும் நிலையில்தான் கட்டப்படும். அதுமட்டுமின்றி மலைப்பிரதேசத்தில் கட்டிடங்கள் சிமெண்ட், இரும்பு பயன்படுத்தாமல் மரம்,ஓடு இவைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டன. ஆனால் இந்த மலை மச்சி பங்களா புதுமையான முறையில் கட்டப்பட்டதால் இதற்கு மாடர்ன் பங்களா எனப் பெயரிட்டனர். கட்டிடக்கலைஞர் வடிவமைத்த மாடர்ன் பங்களா புதுமையான வடிவமைப்பில் மலை உச்சியில் இருந்து கீழிறங்கும் வண்ணம் படிக்கட்டுகளும் அடுக்கடுக்காக தளங்களும் மலை அடிவாரம் வரையில் அமைக்கப்பட்டது.

               இங்கிலாந்தில் உள்ள விக்டோரியா மகாராணி பல துரைகளை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். அப்படி ராணியின் முத்திரையிடப்பட்ட அரசாணையைப் பெற்றுக் கொண்டு ஊட்டி மலைக்கு தன் குடும்பத்துடன் வந்து இறங்கினார் துரை ஜான்சன்.அவர் மனைவி எமிலியுடனும், அழகு மகள் ஏஞ்ஜெலாவுடனும் வருவதற்கு முன்பாகவே அவர்களுக்கெனவே கட்டப்பட்டது தான் மாடர்ன் பங்களா. பங்களாவின் கட்டமைப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மலை உச்சியில் வரவேற்பறை மற்றும் போர்டிகோ, வரவேற்பறையில் இருந்து கீழே இறங்கிச் செல்ல படிக்கட்டுகள், வரவேற்பறையின் கீழ்தளத்தில் அமைந்தது பால்ரூம் என அழைக்கப்படும் நடனம் ஆடும் அறை, அதற்குக் கீழே உள்ள தளத்தில் அமைந்தது சாப்பாட்டு அறையும் படுக்கை அறைகளும், அடிவார தரைத்தளத்தில் அமைந்தது சமையலறை, இதன் முன்புறத்தில் அமைந்ததுதான் மலர் தோட்டங்களும், கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃபிளவர் தோட்டங்கள். பால்ரூமில் மலையை அணைத்தது போல் அரை வட்ட வடிவில் பால்கனி உள்ளது. அரண்மனையின் உப்பரிகை போன்ற பால் கனியில் நின்று துரையும் துரைசானியும் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் வேலை செய்யும் மலைவாழ் மக்களுக்கு கை அசைத்து குட் மார்னிங் சொல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமைகளில் துரை தனது நண்பர்கள் குடும்பத்தினருடன் சர்ச்சுக்கு சென்று பிரார்த்தனை முடிந்த உடன் மாடர்ன் பங்களாவிற்கு அனைவரையும் அழைத்து வந்து விருந்து கொடுத்து இரவு வரை நடனம் ஆடுவது வழக்கம்.

              முத்து நாடுபெட்டாவில் வாழும் மலைவாழ் மக்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் மாடர்ன் பங்களாவின் தரைத்தளத்தில் ஒன்றுகூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அப்போது துரையும், துரைசானியும் தன் நண்பர்களுடன் பெரிய பால்கனியில் நின்று ஐரோப்பிய நாடுகளின் மிகப் பிரபலமான சாக்லேட்டுகளை கீழேயுள்ள குழந்தைகளுக்கும் மக்களுக்கும் அள்ளி அள்ளி வீசுவார்கள். தங்கள் வாழ்நாளில் சுவைத்தறியாத சாக்லேட்டுகளை குழந்தைகளும் பெரியவர்களும் பொறுக்கி எடுத்து ,"துரை வாழ்க! துரைசானி வாழ்க!"என்ற கோஷத்துடன் கலைந்து செல்வார்கள். மாடர்ன் பங்களாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு வாரந்தோறும் நடைபெற்றது. இவ்வாறு ஜேஜே என திருவிழா களையுடன் இருந்த மாடன் பங்களா சுதந்திர இந்தியாவில் 'பேய்ப்பங்களா' என அழைக்கப்பட்டது. ஏன் ? நடந்தது என்ன ?

                           தொடரும்.......


Rate this content
Log in

Similar tamil story from Thriller