மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 7
மலை உச்சியில் ஓர் மர்ம பங்களா -அத்தியாயம் 7
அத்தியாயம் 7
மலையாள மந்திரவாதி மாமா!
போலீஸ் தங்கள் கடமையைச் செய்ய ஆரம்பித்தனர். தடயங்கள் கலைக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி பங்களா மறுபடியும் பூட்டப்பட்டது. அம்மலைவாழ் மக்கள் இது பேய் உலவும் பங்களா என உறுதியாக நம்பினர். போலீஸ் அதிகாரிகள் பங்களாவில் தடயங்களைக் கொண்டு ஆராய்ந்தனர். ஸ்டீபன் மேஜை அல்லது நாற்காலியின் மேல் ஏறி நின்று கொண்டு மின் இணைப்புகளை சரி பார்க்கும் போது தவறுதலாக கவனக்குறைவால் ஷாக் அடித்து பால்கனியிலிருந்து கீழே விழுந்திருப்பானோ என்று போலீஸ்காரர்கள் நினைத்தனர்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் டாக்டர்கள் ஷாக் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் எதுவும் உடலில் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஸ்டீபன் உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் தலை அடிபட்டு மூளை சிதறி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் போலீஸ்காரர்கள் அவன் எப்படி கீழே விழுந்தான் என்று புரியாமல் திணறிப் போனார்கள்.
மதன்லாலின் நண்பர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். அந்த நண்பரின் மாமா கேரளாவில் மிகவும் பிரபலமான மாந்திரீகம் கற்றவர்; பில்லி , சூனியம் , ஏவல் , பேய் போன்றவைகளை விரட்டுவதில் வல்லுநர். கேரள நண்பர் அவர்தன் மாமாவுடன் சென்று ஆவிகளின் அட்டூழியங்களை நேரில் பார்த்து அனுபவப்பட்டவர். ஊருக்குச் சென்றபோது மாமாவிடம் ஸ்டீபனின் மரணத்தைப் பற்றி பேசினார்கள். ஊட்டி வந்து பங்களாவை ஒருமுறை வலம் வந்தால் தான் அங்குள்ள மர்மத்தைக் கண்டு பிடிக்க முடியும் என்று மாமா கூற , நண்பரும் ஊட்டி திரும்பும் போது மாமாவையும் உடன் அழைத்து வந்தார்.
&n
bsp;மதன்லால் முதலில் இதை நம்ப மறுத்தார். ஆனால் நண்பர்களும் உறவினர்களும் ஒரு முறை அவர் பேச்சைக்கேட்டு அதன்படி நடக்கச் சொல்லி வற்புறுத்தியதால் மாந்திரீக மாமாவை ஹோட்டலுக்கு அழைத்துப் போக முடிவாயிற்று. போலீஸ்காரர்களிடமும் அனுமதி பெற்று அவர்களும் தொடர அனைவரும் மாடர்ன் பங்களாவிற்குள் நுழைந்தனர்.
கேரள மாந்திரீகர் தன் கையில் ஒரு நூலைப் பிடித்துக் கொண்டு பங்களாவின் ஒவ்வொரு இடமாக நடக்க ஆரம்பித்தார். மற்றவர்கள் சிறிது இடைவெளி விட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். முதலில் வரவேற்பறையைக் கடந்து படிக்கட்டுகளில் இறங்கி பால்கனி வந்து சேர்ந்தார். அத்தளத்தில் ஒவ்வொரு அறையாக நுழைந்து வெளியே வந்தார். ஆனால் பால்கனி பக்கத்தில் சென்றபோது அவர் கையில் இருந்த நூல் வேகமாகச் சுழன்றது. அவர் உடனே சில மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.
அனைவரும் அமைதியாக அவரை கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போது பால்கனியில் வெள்ளை புகையென நிழல்கள் ஆடியதைப் பார்த்து அனைவரும் பயந்து இரண்டடி பின் சென்றனர். மாந்திரீகர் மந்திரங்களை கூறிக் கொண்டேயிருந்தார். சில நிமிடங்களில் நிழல்கள் மறைந்தன. கேரள மாந்திரீகர் தன் கண்களை மூடி சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
மதன்லாலும் மற்றவர்களும் அவரையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர் தன் கண்களைத் திறந்து மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். அவர் பேச்சை நண்பர் மொழிபெயர்த்து தமிழில் மதன்லாலிடமும், மற்றவர்களிடமும் தெரிவித்தார்.மாந்திரீகர் சொன்னது என்ன?
மர்மம் தொடரும்...........