மதுரை முரளி

Classics Inspirational Thriller

5  

மதுரை முரளி

Classics Inspirational Thriller

என்ன மாயம் செய்தாயோ?

என்ன மாயம் செய்தாயோ?

15 mins
488


                         “மாயம் செய்தாயோ?” -- சிறுகதை

                                                                   --மதுரை முரளி 

        மதுரை வடக்கு பகுதியும், கிழக்குத் தொகுதியும் இணைப்பாய்த் தேசத்தந்தை நினைவில் அமைந்த நகர்புறப்பகுதி ‘மகாத்மாகாந்தி நகர்’.    

       வாசனைக்காக மலர்களையும்,  நிலத்தடி நீருக்காக பாரத நதிகளையும் பெயராய்த் தெருக்களுக்குக் சூடி தேச ஒற்றுமைக்கு உதாரணமாய்ப் பெயரில்.. அந்த குடியிருப்புப்பகுதி.

      பாதாள சாக்கடைக்காகப் பாளம் , பாளமாக நடுவில் வெட்டப்பட்ட சாலையில், மண்ணும் புழுதியும் காற்றில் படலமாய்ப் பரவி வண்டியோட்டிகளையும், வசிப்பவர்களையும் வாயிலும், மூக்கிலும் சுவாசிக்கவைத்து திணற வைத்தது.

    ‘ சாம்பு துப்பறியகம் ‘ இரண்டடுக்கு கட்டிடத்தின் 

கீழ்த்தளத்தில் மையமாய் இருக்க, புதிதாக வடிவமைக்கப்பட்ட அடையாள அறிவிப்பு பலகையில் தனித்து தெரிந்தது.

   அலுவலகத்தின்  முன்அறை பத்துக்கு பத்து . கூடவே எட்டுக்கு எட்டு உள்ளறை. அதன்  சுவரைச் சுற்றிலும் அலுவலக சாதனையாய் புகைப்படச் செய்திகள் விதவிதமாய் அலங்கரித்தது .

    காலை 11 மணி ஆகியும் கேப்டன் நவீன் வராததால்,  தொண்டையில் தொடங்கிய கொட்டாவியை  வாயில் விடுத்து,  கைகளைப் பரபரப்பாய்த தேய்த்து சுறுசுறுப்பானாள் கவிதா. அந்த அலுவலகத்தின் ஒரே ஊழியர்.

     கேப்டன் நவீன் நடுத்தர வயது.  ஆங்கிலத் துப்பறிவாளன் உடை பாணியில் வரும் நேரம்.. அது.  

     அங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ந்த கவிதாவுக்கு இடையிடையே கணிப்பொறியில் ஆன்லைன் வேலை . ஆனால்,  வாடிக்கையாளராய் யாரையும் நேரில் வந்து பார்த்ததில்லை இவள்... இன்று வரை. 

     வேலைக்குச் சேர்ந்ததும் முதல் மாதச் சம்பளம் ஏழாம் தேதியே சரியாய் வழங்கப்பட,  கேப்டன் நவீன்  மீது இருந்த மதிப்பு உயர்ந்தது பல  மடங்காய்... கவிதாவின் மனதில் 

     “ குட் மார்னிங். “  தயக்கமாய் உள்ளே நுழைந்தவனை, கவிதா ஏறெடுத்துப் பார்க்க,  நாகரீக இளைஞன் நடுத்தர வயதில்.. வாசலில்.

    “ வணக்கம் . உள்ளே வாங்க.  சார் வர்ற நேரந்தான்.  இப்படி உட்காருங்க.  “ எனத் தனக்கு முன்பிருந்த இருக்கையைக் காட்ட,     நாற்காலியின் நுனியில் அமர்ந்தான் வசந்த்.

   “  என் பெயர் வசந்த் ...” வார்த்தைகளை வாயில் வாசித்தான்.

    கவிதா தன் கையிலிருந்த அலைபேசியின்  தொடு திரையை தொட்டு, உசுப்பினாள். 

   “ எஸ் கவிதா. இதோ பத்து நிமிஷம்..நான் அங்கேயிருப்பேன். புது வாடிக்கையாளரா? ‘  மறுமுனையில்  புரிந்து  சிரித்த கேப்டனின் புரிதல் கண்டு பூரிப்பானாள் கவிதா.

    ஒரு சிறிய படிவம் ஒன்றை எடுத்து  நீட்டிய கவிதா,

   “ தனிப்பட்ட தகவல்களை கேப்டன்  கிட்ட சொல்லிடுங்க . மற்றதை எல்லாம் இதுல பதிவு பண்ணுங்க  ‘ என எதிரிலிருந்த வசந்திடம் நீட்ட, யோசனையாய் வாங்கி , அதிலும் யோசனை எழுதி முடித்தான் வசந்த் .

    வாசலில் புல்லட் ஒன்று அதற்கே உரிய ஒலியை ஒலித்து, வந்து நின்றது . ‘வாரிசு ‘ பாணியில் கோட்டை இழுத்து விட்டவனாய்த் துடிப்பாய் கேப்டன் நவீன் உள்ளே நுழைய,

   “  வணக்கம் கேப்டன் . “ உற்சாகமாய் கவிதா.

     புன்முறுவலுடன் தலையசைத்த நவீன்,  வசந்தை தன் அறைக்கு அழைத்துச் செல்ல.. அந்த விசாரணை அறையின் செயற்கைத் தடுப்பு ' சரட்' டென நகர்ந்து மறைத்தது அவர்களை. 

    “ வணக்கம்  மிஸ்டர்.வசந்த். காலைல என் கூட அலைபேசியில் பேசினப்ப உங்க குரல்ல  தெரிஞ்ச  அதே பதட்டம் நேர்ல. இப்பவுமா?  அமைதியா இருங்க. நிதானமா உங்க விஷயத்தைச் சொல்லலாம்.  எங்க நிறுவனம் பற்றி எப்படி தெரிஞ்சுக்கிட்டீங்க? “  சுழல் நாற்காலியில் சுற்றியவனாய் நவீன்.

  “ அ..அது,  நான் அடிக்கடி இந்த பகுதியைக் கடந்து தான் என் வண்டியில போவேன்.  அப்படித்தான்..” என இலேசாய்  இழுக்க,  

   " சரி விஷயத்துக்கு வாங்க " சொன்ன நவீன், வசந்தைக் கண்ணோடு கண் உற்று நோக்கினான். 

   “ நான் ஒரு பொண்ணை தீவிரமா காதலிக்கிறேன் . நான் ஒரு தனியார் வங்கியில் வேலை செய்யறேன். அவளும் வேறு ஒரு தனியார் வங்கியில் வேலை செய்யறா. ஆறு மாசமா நாங்க பழகிட்டு இருக்கோம்.அவ பேரு ஸ்டெல்லா. “

   “ வெரி குட்.  நீங்க காதலிக்கறீங்க.  அவங்க பழகுறாங்க.. அப்படியா? “ இலேசாய் நவீன் வாய்விட்டு சிரித்து கேட்க,

   “ அதுதான் எனக்கு சந்தேகம் . சில சமயம்,  அவ என்னை விட்டு விலகுற மாதிரி தெரியுது. “

    “ ஒ..எப்படி? எதை வைச்சு சொல்றீங்க? “

    “ போன வாரம் ஒரு இடத்துல நாங்க சந்திக்க முடிவு பண்ணிட்டு,  நான் காத்திருந்தேன். ஆனா,  சொன்ன நேரத்துல அவகிட்ட இருந்து ஒரு அழைப்பு வந்தது. என்னால இன்னைக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டு இணைப்பை துண்டிச்சிட்டா. “     

    “அதனால ? ஒருவேளை அவங்களுக்கு திடீர்னு அலுவல் காரணமாகவோ அல்லது தனிப்பட்ட காரணத்தினாலோ வர முடியாது போயிருக்கலாமே ? “ தன் குறுந்தாடியைத் தடவினாய் நவீன் .

   “ ஆனா, நான் உடனே அங்கிருந்து வண்டியில  கிளம்பி பைக்கில புறப்பட்டு வரும்போது தல்லாகுளம் பக்கத்தில 

‘பட்’ டுனு வண்டியில என்னைய தாண்டிப் போனா...’

  “  சரி , கூப்பிட்டு பார்த்தீங்களா? “ அசுவாரஸ்யமாய் நவீன்.

  “ எ.. என்ன சொல்ல?  அவ வண்டியில போனது ஒரு பையனோட . அவன் ஹெல்மெட் போட்டிருந்தான். “ ‘சட்’டெனச் சீட்டின் நுனிக்கே நகர்ந்து வந்த நவீன் ,

   “ ரொம்ப ஆர்வமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கு . வண்டி எண் ஏதாவது பார்த்தீங்களா? “

   “ முடியலை. பல்சர் வண்டி.. பதிவு எண்ணை கவனிக்க முடியலை”  சோகமாய் வசந்த் .

   “ விசாரிப்போம் . ஆமா,  அது ஸ்டெல்லான்னு எப்படி  தீர்மானிச்சீங்க?.."

    “ சார்., வண்டி என்னைய தாண்டும்போது அவ முகத்தைப் பார்த்தேன். ‘ படக்’ குன்னு முகத்தை திருப்பிக்கிட்டா.”  வசந்தின் குரல் இலேசாய கம்ம,

  “  அவசரப்படாதீங்க... நீங்க. அவங்க போட்டோ மட்டும் எல்லா விவரத்தையும் புலனத்தில அனுப்பிடுங்க . நம்பிக்கையா வந்திருக்கீங்க.  உங்க நம்பிக்கை வீண் போகாது.  என்னுடைய பீஸை ஏற்கனவே சொல்லிட்டேன்.  ஜி பே பண்ணிடுங்க.  முதல் வாரம் அவங்கள நான் கவனிக்கிறேன்.  பின்னாடி,  நான் எப்படி சொல்றேனா அதுப்படி நடங்க . என்ன ? “ தோரணையாய் நவீன். 

  “  சார்.. பார்த்து கவனமா  அவளைப் பின் தொடருங்க.  எனக்கு ஸ்டெல்லாவோட காதல் ரொம்ப முக்கியம் . எப்படியாவது எங்க காதல் கைக்கூடணும் . “ கண்கள் கலங்கினான் வசந்த் .

   “ ப்ரோ.,  என்ன இது?  நல்லதே நடக்கும்... நம்புவோம்.  நீங்க புறப்படுங்க.  நாளைக்கே நான் இந்த வேலையை தொடங்கிறேன்.  தேவைப்படும்போது  நான் இடையில கூப்பிடுவேன்.  இந்தாங்க.. கொஞ்சம் தண்ணி குடிங்க “ மேஜையில் இருந்த கண்ணாடி டம்ளரை நீட்ட,

    இலேசான நடுக்கத்துடன் அதை வாங்கிய வசந்த்,  ஒவ்வொரு வாயாய் உறிஞ்சி தடுமாறி எழுந்தான். 

   மீண்டும் அந்த செயற்கைத் தடுப்பு விலக , வாசலுக்கு 

வந்த வசந்த்,  தன் வண்டியை உசுப்பிக் கிளம்பிப் போனான்.

     தன் கண்ணிலிருந்த குளிர்க்கண்ணாடியை கழட்டிய நவீன்,  கையில் இருந்த அலைபேசியை அரை நிமிடம் தட்டிவிட்டு ,  கவிதாவை ஓரக்கண்ணால் பார்க்க,

   அவள் முகத்தில் ஒரு பரபரப்பு கலந்த குறுகுறுப்பு.

   “  என்ன கவிதா,  உனக்கு வேலை ஒண்ணும் இல்லையேன்னு நினைக்கிற தானே ? “ புன்முறுவலுடன் நவீன் .

   “ ஆ..ஆமா சார். “ தடுமாறினாள் கவிதா.

   “  கவலைப்படாதே. வசந்த் பேசின எல்லா விவரத்தையும் என் அலைபேசியில பதிவு பண்ணியிருக்கேன் . உனக்கும் அனுப்பி வைச்சிட்டேன்.  நல்லாக் கேட்டு மனதில் பதிச்சுக்க. ஏன்னா,  நாளையிலிருந்து நீதான் வசந்த் விஷயத்தை துப்பறியப் போறே.  இது உன்னுடைய முதல் கேஸ்.  ஆல் த பெஸ்ட்.  நாளைக்கு , சில குறிப்புகளை நான் குறுஞ்செய்தியா தருவேன். அதுப்படி நீ நடக்கணும். இப்ப ,எனக்கு வெளியில வேலையிருக்கு. “ என்றவனாய் நவீனும், தன் வண்டியில் கிளம்பிப் போக,

     அதிர்ச்சியில் அப்படியே தன் சீட்டில் சரிந்தவள்,  தன் கையில் இருந்த அலைபேசியை தட்ட , அதில் வசந்தின் குரல் கூடவே, காதலி ஸ்டெல்லாவின் புகைப்படம் மற்ற விவரங்களுடன்.

    மதுரை நகரின் புதிய பறக்கும் பால பணிகள் முடிவடையும் நிலையிருந்த அந்த ‘விஷால் மால்’  வாசலில் கவிதா .

    மாலின் வாசலில் இருந்த டிரம்போலின் மீது குழந்தைகள் குதூகலமாய் குதித்து விளையாட, 

   வாசலில் நின்றிருந்த தனியார் போக்குவரத்துக் காவலாளி வாயில் விசிலை ஊதி, ஊதி மக்களை நகர்த்திக் கொண்டிருந்தார். 

   இலேசான யோசனையுடன் உள்ளே நுழைந்து,  பெண்களின் ‘ஸ்கிரீனிங்’  பகுதியைக் கடந்த கவிதா,   நேராய் இடது புறம் செல்ல... பலவித பலநிற ஐஸ்கிரீம் கடை கண்ணில் பட..

வினாடியில் மனதில் உருகினாள்.

     கூடவே, நேற்று தான் youtube-யில் படிச்ச ஐஸ்கிரீம் கவிதை மனதில் நினைவுக்கு வர, கவிதையை முணுமுணுத்தாள் கவிதா.

                               


                                 ஐஸ்கிரீம் 

                           உருகும் உருவம் !

                         உற்சாகத்தின் வடிவம் .

                         உலகையே ஈர்க்கும்

                         இணைக்கும்...

                        இனிப்பு பிணைப்பு !

                             “ஐஸ்கிரீம்” .

அதே உற்சாகத்துடன் ஓடிச்சென்று , வெண்ணிலா சாக்லேட் ஸ்கூப் வாங்கி,  வாயில் வைத்து நொடியில் உருகி மழலையானாள். 

    சில நிமிட இடைவெளியில் அலைபேசியில் அழைப்பு.. கேப்டன் நவீனிடமிருந்து.

   “  குட் மார்னிங் கேப்டன் . “ மரியாதை வார்த்தையாய்  வெளிப்பட்டது கவிதாவிடமிருந்து .

   “ எஸ்..எஸ்.  நான் சொன்ன இடத்துல தானே இருக்க? “

   “  ஆமா..”

   “  அப்படியே நகர்ந்து,  வலதுப்பக்கம் உள்ள குழந்தைகளோட பொம்மைக்கடை  உள்ளே நுழை.  உன் பார்வை, கவனம்  மட்டும் மாலோட வாசலை நோக்கி பார்த்தும் பார்க்காம இருக்கணும்.  முக்கியமா காதிலல ப்ளூடூத் மாட்டிக்க.

இன்னும் 15 , 20 நிமிஷத்துல வசந்த் மால் வாசல்ல நுழைவாரு .  அவரை அப்படியே நீ பின் தொடரணும் . அவர் உள்ளே நுழைஞ்சதும் , என்னையக் கூப்பிடு . “

   “ நிச்சயமா கேப்டன் . அப்புறம்.., நான் முதல்ல அந்த ஸ்டெல்லாவைத் தான்  பின் தொடர வேண்டியிருக்கும்னு நினைச்சேன். “ கவிதா குரலில் பிசிறடிக்க,

   “ ஹா.. ஹா.  எப்போதுமே அடிப்படையான  ஒரு லாஜிக் தெரிஞ்சுக்க.  பிரச்சினையை யாருக்கு கொண்டு வர்றாங்களோ,  அவங்கதான் பிரச்சினையின்  முதல் தொடக்கமாயிருப்பாங்க. என்ன புரியுதா?  அவங்க தான் விதை . இதுதான் உளவியல். இப்ப, நாம தொடங்க / தொட வேண்டிய முதல் புள்ளியே அவங்க தான். “ அமர்ததலாய்ச் சிரித்தான் நவீன் .

   அடுத்த பதினைந்து நிமிடங்கள் பரபரப்பாய் நகர , கவிதாவின் பார்வையில்... அதோ ’வசந்த்’ கண்ணில் பட்டான்.

  ‘குப்’பெனத் தலைக்கு ஏறிய இரத்த ஓட்டத்தில் , ஓட்டமும் நடையுமாய்  கடையை விட்டு வெளியே வந்த கவிதா,  வசந்திற்கு முதுகு திருப்பி,  ப்ளூடூத்தில் கேப்டனை அழைத்தவள்,    

   “ கேப்டன் அவர் வந்துட்டாரு. “

   “  நல்லா கவனி கவிதா.  அவர் மட்டுமா? “

    “ ஹி..ஹி.  கூட,  ஸ்டெல்லாவும். “  கிசுகிசுத்தாள்.

   “  வேகம்.  அவங்க அனேகமா மேல்மாடி ஃபுட் கோர்ட்டுக்கு தான்  போவாங்க.  எதிலேன்னு பாரு?  லிஃப்ட்லியா? இல்லை எஸ்கலேட்டரிலையா?

   "கேப்டன் , எஸ்கலேட்டர்ல தான். நானும்,  பின்னாலே ஏறிடுவா? “

   “  உடனே . ஆனா,  கொஞ்சம் இடைவெளி விட்டு ஏறு “

   “ இ..  இதோ ஏறிட்டேன் . நீங்க சொன்ன மாதிரி அடுத்த மாடிக்கு போறாங்க.  ஆனா,  ஏதோ காரசாரமான உரையாடல் அவங்களுக்குள்ள ஓடுது. “

   “  இன்னும் கொஞ்சம் நெருங்கிப்போ.  இப்போ என்னோட அழைப்பை நிறுத்திட்டு,  காதுல பாட்டு கேட்கிற மாதிரி பாவனை  பண்ணிகிட்டே, நெருங்கிப் போ.  அவங்க உட்கார சீட்டுக்கு பக்கத்து சீட்ல திரும்பி உட்கார்ந்து அவங்க பேச்சைக் கவனி.  கூடவே பேச்சையும்  பதிவு பண்ணு.  நடுநடுவுல பாட்டு கேட்கிறமாதிரி தலையாட்டி பாவனை பண்ணு.  ம்.,  வேகம் அப்புறமா என்கூடப் பேசு “  மறுமுனையில் கேப்டன் அழைப்பை நிறுத்த,

    நவீனின்  உத்தரவுப்படி,  வசந்த்- ஸ்டெல்லாவின் இருக்கையை ஒட்டி, முதுகு காட்டி அமர்ந்த கவிதா, தொடர்ந்து அவர்களின் பேச்சை பதியவும் ,கவனிக்கவும் தொடங்கினாள்.

     “ ஸ்டெல்லா., வர,வர என்கிட்ட இருந்து நீ விலகிப் போற மாதிரி நான் உணர்றேன்.  என்ன காரணம்? “  சோகமாய் வசந்த்.    

     ‘சட்’ டென கையை உயர்த்தி வசந்தின் பேச்சை தடுத்தவள்,     

     “ உங்களால எப்படி இப்படி பேச முடியுது?  இதை நீங்க சந்தேகமா சொல்றீங்களா?  இல்ல..” இடைநிறுத்தி கோபமாய் வசந்தை  முறைக்க,

   “ ப்ளீஸ்.,உன்மேல எனக்கு ச... சந்தேகம் ஏதுமில்லை. ஆமா ஏதாவது சாப்பிடலாமா? “  என அவளின் கையை இலேசாக தொட  வசந்த் முயல,

    ‘பட்’டென தன் கையை சுருக்கி கொண்டு, 

   “ வேணாம். நான் ஒண்ணும் சாப்பிடக்கூடிய மனநிலையில்லை. “ கோபமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ஸ்டெல்லா..

    “ நான் தப்பா ஏதாவது சொல்லியிருந்தா மனசில வச்சுக்காத.. ஸ்டெல்லா. நீ இங்கேயே இரு.  நான் போய் வாங்கிட்டு வரேன் . ம்., சொல்லு . உனக்கு என்ன வேணும்? ”  குனிந்து அவள் முகத்தருகே கேட்க,

    சில வினாடிகள் கண்களை இறுக மூடிய ஸ்டெல்லா,  ரெண்டு ஸ்கூப் வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாங்க.  இது என்னோட சாய்ஸ் . உங்களுக்கு எது விருப்பமோ அதை வாங்கிக்குங்க. “  சொன்னவள் எதிர்பாராது எழுந்து கவிதா டேபிளுக்கு முன் வர,

    வினாடி நேரம் தடுமாறிய கவிதா , அதிவேகமாய் தலையில் மாட்டியிருந்த குளிர்க்கண்ணாடியை கண்ணுக்கு இறக்கி விட்டவாறே,  அவசரமாய் பார்வையை சுற்றிலும் ஓட்டினாள்.   

   வசந்த் தூரத்தில் ஐஸ்கிரீமோடு  வரத்துவங்க,

மீண்டும் ‘ஐஸ்கிரீம்’ ஆசை கவிதாவை  துரத்தியது.

  “  சரி , எப்படியும்  இன்னும் கொஞ்ச நேரம் பொழுதைக் கடத்தணுமே? “ என  முடிவு எடுத்தவள் தானும்  வேகமாய் ஓடிச் சென்று ஐஸ்கிரீம் வாங்கி தன் இடத்தில் மீண்டும் அமர்ந்தாள்.

    தனக்கு  குளிர்க்காபி வாங்கிய வசந்த்,  மீண்டும் பேச்சை தொடங்கினான். 

   “ ஸ்டெல்லா,  நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத . கடைசி ரெண்டு தடவை நான் அலைபேசியில் அழைச்சும்,  நீ.. வேலையில ரொம்ப கெடுபிடின்னு.. குறுஞ்செய்தி போட்டுட்டே. அப்புறமாவது கூப்பிட்டிருக்கலாமே? “

   “ ஒண்ணு புரிஞ்சிக்க வசந்த். எங்க அலுவலகத்தில தலைமை அலுவலக அதிகாரிகள் ஒரு வாரத்துக்கு மேல ஆடிட்டிங் .இதோ இப்பவே நேரம் ஆயிடுச்சு .முதல்ல என்னை நம்பு. “ எனச் சொல்லியவாறே எழ,

   “ சரி, கிளம்பு.  அன்னிக்கு பூங்காவுக்கு வரச் சொல்லிட்டு  நீ வராம யாரோ ஒருத்தன் பின்னாடி வண்டியில..”

  “ நிறுத்துங்க வசந்த்..”  ஸ்டெல்லா உச்சஸ்தானியில் கத்த,

    அந்த உணவு வளாகமே சில வினாடிகள் அதிர்ந்து ஸ்தம்பித்தது. 

   “ நா.,நான் கிளம்பி வந்தது உண்மை. அதுவும், நீங்க அவசரம்னு சொன்னதால என் அலுவலக நண்பரோட பூங்கா வாசல்ல வந்து இறங்கினேன்.  ஆனா., நான் இப்ப சொன்ன ஆடிட்டிங் பற்றி பேச ஜி.எம். கிட்ட இருந்து திடீர் அழைப்பு.அப்ப, நான் என்ன செய்ய? ” கோபமாய் எழுந்து சேரை நகர்த்தியவள்,

    “ நீங்க மாறவே மாட்டீங்க.  எனக்கு இப்ப வேலை முக்கியம் . கிளம்புறேன் “ பதிலுக்குக் கூட காத்திராது வேகமாய்ப் படிக்கட்டை நோக்கி ஸ்டெல்லா நகர,

     செய்வதறியாது திகைத்து நின்றான் வசந்த்.  

    கவிதாவும் பேரதிர்ச்சியுடன்  மின்தூக்கியை நோக்கி நகர்ந்து,  அங்கு நின்ற காத்திருப்பு மக்களோடு கலந்து தன்னை மறைத்துக் கொண்டாள்.

   அடுத்து மின்தூக்கியில் இறங்கி தரைத்தளத்தை அடைந்து தான் பதிவு செய்திருந்ததை கேப்டனுக்கு பகிரவும் செய்தாள் கவிதா. 

   தொடர்ந்து , மேலும் ஒரு வாரம் வசந்தைத் தொடருமாறு கேப்டன் அறிவுறுத்த ,

   அடுத்து நடந்த ஸ்டெல்லா வசந்த் சந்திப்புகள் , அவர்களின் காதலை மோதலின் விளிம்பிற்கே இட்டுச் செல்ல,

   மனதிற்குள் மிகவும் வருந்தினாள் கவிதா.

   கவிதாவின் மூலையில் சின்னதாய் பொறி தட்டியது.    

   ஸ்டெல்லாவின்  செயல்பாடுகளில் ஏதோ ஒரு மாற்றம் புலப்பட ,

    சின்னதாய் புலனாய்வு சிந்தனை கவிதாவிற்கு.

  “  நாம.. ஏன் கவிதாவை நெருங்கிப்  பேசக்கூடாது ? அவளை இன்னிக்கு நாம ரகசியமாக தொடரணும். இந்த விஷயத்தை,  அடுத்த நிலையில  துப்பு துலக்கி,  கேப்டன் கிட்ட நல்ல பெயரும், பாராட்டும் வாங்கிடணும் . “

   சரியாய் ஸ்டெல்லாவின் அலுவலக நேரம் முடியும் தருவாயில் அவளது அலுவலகத்திற்கு எதிரில்  கவிதா காத்திருக்க,   

   பதட்டமாய் வெளியே வந்த ஸ்டெல்லா,  சுற்று மற்றும் பார்வையை செலுத்திவிட்டு,  தன் இருசக்கர வண்டியை உசுப்பி வேகமாய் உயிர் கொடுக்க,

   எதிர்பாராமல்  வேகமா கிளம்பிவிட்ட ஸ்டெல்லாவை,

சற்றே சிரமத்துடன் பின்  தொடர்ந்தாள் கவிதா. 

   மதுரை நகர பரபரப்பு வீதிகளை கடந்து , கட்டபொம்மன் சிலையை அடைந்து,  இடது பக்கம் திரும்பி, காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்டை ஸ்டெல்லா அடைய,

   குறுக்கே வந்த ‘ஷேர்’ ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷாக்களை லாவகமாக கடந்த கவிதா,  தொடர்ந்து  ஸ்டெல்லாவைத் துரத்தினாள். 

   அசுர கதியில் கூடலழகர் கோவில் பகுதியைக் கடந்த ஸ்டெல்லா,  மீண்டும் இடதுப்புறம் திரும்பி மேலமாசி வீதியில் நுழைய,

   கூடவே, பின்னால் விரட்டிய கவிதாவை, குறுக்கே வந்த ஆட்டோ ஓட்டுனர் மறித்து திட்டினார்.

   “ ஏம்மா.,  வண்டியா ஓட்டுற ? என்னமோ தலையை அங்கேயும் இங்கேயும் திருப்பிக்கிட்டு.. “ சொன்னவனை வினாடி நேரம் முறைத்துப் பார்த்துவிட்டு  தானும் திரும்ப ,

    ‘பச்’  மேல மாசி  வீதியில் பார்வைக்கு எட்டிய தூரம் வரை ஸ்டெல்லா கண்ணில் படவில்லை.

   “ அடச்சே! நொடியில் மறைந்திட்டாளே..” தன்னை நொந்தவளாய் வண்டியை போத்தீஸின் எதிரில் ஓரங்கட்டி,

  சுற்றும்முற்றும் பார்வையை ஓட விட்டாள் கவிதா. 

    அதோ ..  போத்தீஸ் கடை வாசலில் ஸ்டெல்லா. கூட வேற... ஓர் ஆண்.  

    அவசர அவசரமாக ஹெல்மெட்டை கழட்டியவாறு விநாடிக்கும் குறைவான நேரத்தில்  அவள் கைப்பிடித்து கடைக்குள் நுழைய ,

    உடம்பெல்லாம் பற்றிக்கொண்ட பரபரப்பில்,  தன் வண்டியை நடைபாதை ஓரத்தில் அப்படியே நிறுத்திவிட்டு,

   சில நிமிட இடைவெளியில் தானும் கடைக்குள் பாய்ந்தாள்.

   கிட்டத்தட்ட எல்லா பகுதிகளிலும் அலசி ஆராய்ந்தும்,  தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை கவிதாவால்.   

   மீண்டும்  மனம் நொந்து போன நிலையில்,  கேப்டன் நவீனிடமிருந்து அழைப்பு.

  “ என்ன கவிதா?  உன்னோட பதிவுகளை பார்த்தேன்.  எனக்கே வருத்தமாயிருக்கு.  அதோட...”  நவீன் முடிக்குமுன் ,

   “ கேப்டன்,  ஓர் திடீர் திருப்பம்.  வசந்த் சந்தேகப்பட்டது உண்மைதான்னு  நம்பற மாதிரி சில சம்பவங்கள் நடக்குது. தெளிவா ஆதாரம் கிடைக்கலை.”

  “ எ., என்ன சொல்ற?  வேற ஏதாவது புது தொடர்பா ஸ்டெல்லாவுக்கு? அப்ப,  அடுத்த வாரமே இதைப்பத்தி வசந்த் கிட்ட சொல்லி,  ஸ்டெல்லா தொடர்பாக  அவரை எச்சரிக்கலாம். நீ,  மீண்டும் வசந்தத்தை தொடரு. உடனே,  நான் ஸ்டெல்லாவை  கவனிக்கிறேன். “ கேப்டனின் குரலில் அதிக விரட்டல் தெரிந்தது. 

   மீண்டும் ‘ சாம்பு துப்பறியும்’ அலுவலகம்.

   வசந்த் மிகவும் சோகமாய் உள்ளே நுழைய,

  “ ஓ., வாங்க சார். கேப்டன் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருக்கார். “ சொன்ன கவிதா, வசந்த்தை உள்ளறைக்குள் அனுப்ப,

     “ வாங்க , வசந்த் சார். “ எழுந்து வரவேற்ற கேப்டன் நவீன்,    

    அடுத்த முப்பது  நிமிடங்களில்,  கடந்த பதினைந்து தினங்களாக நடந்த துப்பறிவு சம்பவங்களையும், கண்டுபிடிப்புகளையும்  கோர்வையாய் விவரித்தவன்,  ஸ்டெல்லா மற்றொரு ஆடவனோடு பழகுவது உண்மை என அவர்களின் காதலுக்கு முடிவுரை எழுதினான்.

    “ சார்., நான் சந்தேகப்பட்ட மாதிரி ஸ்டெல்லா ஒரே சமயத்தில் இரண்டு பேரோட பழகி , கடைசில என்னை கைவிட்டுட்டா. நான் நம்பி மோசம் போயிட்டேன் சார் “ கண்களில் கோர்த்த கண்ணீரைக் கைக்குட்டையால் ஒற்றியவாறு,  வசந்த் வெளியேறிவிட, 

     “ கவிதா , நீ சொன்ன சில தகவல்கள், ஸ்டெல்லா- வசந்தோட இரு வார காரமான சந்திப்புகள் அடிப்படையில , அவரை தன் காதலை தொடர வேண்டாம்னு சொல்லிட்டேன். பாவம் வசந்த் .”

எனக்  கேப்டன் நவீன் முடிக்குமுன்,

   'பட், பட்' எனக் கைகளைத் தட்டிய கவிதா,

   “  அவங்க காதலுக்கு முடிவுரை எழுதினது அவங்க இல்ல நீங்க..”  என ஆத்திரமாய் கேப்டனைச் சுட்டிக்காட்ட, 

    “ஹே.. ஹேய்.  நா.. நானா? “  முழித்தான் நவீன். 

    “ ஆமா.  உங்களை நம்பி வந்த வசந்த் மனசைக் குழப்பியதோடு,  அந்த ஸ்டெல்லாவையும்.  வசியமா பேசி கவிழ்த்து உங்க காதலியாக்கிட்டீங்க. “

   “ நிறுத்து . என்ன பேச்சு பேசற?  நான் ஸ்டெல்லாவை பார்த்து பேசினது உண்மைதான்.  அது , வசந்தோட அவங்களை சேர்த்து வைப்பதற்காகத்தான்..”  

    “ நிறுத்துங்க.. உங்க நாடகத்தை.  நாலு நாளைக்கு முன்னாடி நீங்க ஸ்டெல்லாவோட சுத்தின இடங்கள்,  பேசின பேச்சுகளை உங்களுக்கு இப்பதான் அனுப்பி வைச்சிருக்கேன்.  ஸ்டெல்லா மனசை மாத்த,  நீ அப்படி என்ன தான் மாயம் செய்தாயோ.. தெரியல? உன்னைய மாதிரி நம்பிக்கை துரோகி கிட்ட வேலை செய்யறது மட்டும் இல்ல,  உன்னைய பார்க்கிறதே  பாவம் . எனக்கு இந்த வேலை வேண்டாம் . “ எனத் தன் கழுத்திலிருந்த அடையாள அட்டையை நவீன் முகத்தில் விசிறி எறிய,

   “  நீ.. நீ  எப்படி ஆதாரம் காட்டுவே ? ..” வார்த்தை வராது தடுமாறினான்  நவீன். 

    “ நா.,நான் சொல்றது உனக்கு ஆச்சரியமாயிருக்குல்ல. நல்லாக் கேளு.  போத்திஸ் வாசல்லயே ஸ்டெல்லா கூட இருந்தவனை  பார்த்தப்போ நீதானோன்னு  சந்தேகம் எனக்கு. ஆனா..அப்ப,  நேரமில்லாததுனால என்கிட்டயிருந்து தப்பிச்சிட்டே. கூடவே , உன்னோட அழைப்பு வேற நடுவில வந்தது . நிச்சயமா என்னால உன்னைய நெருங்கிப் பிடிக்க முடியாதுங்கிறதுனால என் சிநேகிதியை ஸ்லீப்பர்செல்லா உங்க ரெண்டு பேர் கூடவே அனுப்பி,  நீங்க பேசின எல்லாத்தையும் பதிவு பண்ணிட்டேன்.  அதைத்தான் உனக்கு இப்ப அனுப்பி வச்சேன் . குட் பை  “ என ‘விருட்’ டென வெளியேறிய கவிதா வண்டியில் கிளம்பிவிட, 

    “கவி., கவிதா  “ எனக் கூச்சலிட்ட நவீன்,

    அலைபேசியில் அவளை அழைக்க ,

    “ மாயம் செய்தாயோ? “  பாடல் அழைப்பு ஒலிப்பானாக கேட்டது .

    அப்படியே அதிர்ச்சியில் உறைந்து தன் சீட்டில் மல்லாந்தான் நவீன்.

                                 -0-0-0



Rate this content
Log in

Similar tamil story from Classics