மதுரை முரளி

Classics Crime Inspirational

4  

மதுரை முரளி

Classics Crime Inspirational

ஆட்டோகிராப்

ஆட்டோகிராப்

15 mins
381


                            ”ஆட்டோகிராப் “ ---சிறுகதை

                                                        மதுரை முரளி

              தூங்கா நகரத்தின் எல்லையைத் தொட்டுப் படர்ந்த      ‘விசாலாட்சிபுரம்’ முற்றிலும் பரபரப்பு இல்லாமல் அமைதியாய் இருந்தது. பசுமை படர்ந்த பகுதி. 

             வீட்டுக்கு வீடு மரங்களின் அடர்த்தி.. சூரிய ஒளி கூட தன்னை சுருக்கி கொண்டு தான் வீட்டில் விழ வேண்டும்.

           அது..நடைப்பயிற்சி போவோர்களின் சொர்க்கம்.

            அதில்  முதல் வீதி முதன்மையாய். அடுத்து, குறுக்காய் அழகான ஐந்து வீதிகள்.

           நேரம் சரியாக காலை 6:30 மணி . வழக்கமான தன்னுடைய காலை நடைப்பயிற்சியை தொடங்கினான் பொறியாளர் அமுதன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எந்தவிதமான நடமாட்டமும் இல்லை.    

          மூன்றாம் வீதியில் தொடங்கி, அவன் முதன்மை வீதிக்கு திரும்ப... வரிசை வரிசையாக பங்களா வீடுகள். அதில், மதுரையின்  பிரபல மருத்துவர்கள் தொடங்கி , பெரிய பட்டையக்கணக்காளர்கள் வரை நிரம்பியிருக்க,

         முதன்மை வீதியில் நடுநாயகமாய் ஓர்  தனியார் ‘உயர்’நிலைப்பள்ளி.  

         பள்ளி வாகனங்கள் எல்லாம் அன்றைய பயணத்தைத் தொடங்க,  தத்தம் ஓட்டுநர்களின் வருகைக்கு வரிசையாய் காத்துக் கிடந்தன.

        அமுதன் தன்னுடைய தினசரி நடைப்பயணத்தில் சந்திக்கும் நபர்களின் ஒருவராய் இன்று...

        காதில் ‘ப்ளூடூத்’ மாட்டிக்கொண்டு ,இவனுக்கு முன்னால் நடந்து சென்ற சத்தியன். இப்பகுதி கவுன்சிலர். 

       அரசியலில் உள்குத்து பொதுவாய் பின்குத்து என்பதால் அண்ணனுக்கு பாதுகாப்புக காவலனாய் அவருடைய காரோட்டி, பின்னால் போய்க்கொண்டிருக்க,

      வேகமாய் நெருங்கி ‘காலை வணக்கம்’ செலுத்தினான் அமுதன்.

     தன் உரையாடலுக்கு ஓரிரு வினாடிகள் இடைவெளி விட்டு, பதில் வணக்கத்தைப் போட்டவர்,  தன் பேச்சை அலைபேசியில் தொடர்ந்தார்.

    “ அண்ணே.,  எப்ப நமக்கு அடுத்த வேலை வாய்ப்பு?” சொல்லிவிட்டு செயற்கையாகச் சிரிக்க,

   “  கூடிய சீக்கிரம்.  பங்கீடு இன்னும் சரியா படியலை.”—மறுமுனை.   

   “ கொஞ்சம் பாருங்க அண்ணே . ரொம்ப வறட்சியாயிருக்கு.  சாக்கடை கால்வாய் திட்டப் புள்ளிகளை சீக்கிரம் முடிங்க “  என்று தொடர்பை துண்டித்தவர்,

    “ அமுதண்ணனே.,  அப்புறம், நம்ம தொழில் நிலவரம் எப்படி?” என்றவாறு  இவனோடு சமநடை போட,

     “ முன்னாடி மாதிரியெல்லாம் பண பழக்கம் மக்கள் கிட்ட இப்ப இல்ல. அதுவும்,  இந்த கொரோனா கொடுமை இனியும்  விட்டபாடில்லை

அண்ணே . இரண்டு கட்டிடம் கட்டி முடிச்சு, கையில நிக்குது . இப்ப ஒரே ஒரு வீடு தான் ஓடிக்கிட்டிருக்கு.  என்னத்த சொல்ல? “ சொல்லி நிறுத்தினான் அமுதன். 

   “ கஷ்டந்தான்.  ஆமா,  இந்த மாசம்.. கோயில் அன்னதானம் எப்ப? உங்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யணுமே.  நீங்க செய்யற கோவில் அன்னதானத்தில என்னையும் சேர்த்து,  என் பாவத்தை பாதி குறைச்சு விடறீங்க அமுதண்ணே. “ சத்தமாய் சிரித்த சத்தியன்,

    பாசமாய்,  உரிமையாய் அமுதன் முதுகில் தட்ட,

   “ அண்ணே , நமக்கு தெரிஞ்ச விநாயகர் கோவிலில்ல அமாவாசை, பௌர்ணமிக்கு 50 பேருக்கு அன்னதானம் பண்றோம்.  எப்போதுமே கொடுக்குற மனசு வேணும்! மனசு இருந்தாலும் மார்க்கம் வேணுமே !! இதில முதல்ல நீங்க. தொடர்ந்து நான்..” பக்குவமாய்ப் பேசிய அமுதன்,    

   “ வர பத்தாம் தேதி பௌர்ணமி அண்ணே “ எனச் சொல்லி முடிக்க ,

   தன் வாகன ஒட்டியை பின்னால் திரும்பிப் பார்த்த சத்தியன்,

   “ தம்பி நினைவுபடுத்துங்க.  காலையில அலுவலகம் போனதும், முதல் வேலையா அன்னதானத்திற்கு பணம் போட்டுடுவோம். “

சொல்லிவிட்டு,

   தன் ‘பாணியில்’ கும்பிடு போட , அமுதனும் பதில் வணக்கம் போட்டு நடந்தான் .

  அடுத்த நாளும் , தன் காலை நடைப்பயிற்சியைத் தொடங்கி, தொடர்ந்த அமுதன் ,

   “ தம்பீ அமுதா..”  பின்னாலிருந்து குரல் கேட்க , திரும்பியவன் பார்வையில் ‘கந்துவட்டி’ கந்தசாமி.

  “  அ..அண்ணே...கந்துண்ணே. என்ன  இப்பெல்லாம் நேரத்துக்கு நடக்க வர்றதில்லையா? “

  “  முடியலை தம்பி . உங்களை மாதிரி எல்லாம் நேரத்துக்கு வர முடியுமா தம்பீ ? ஆமா., இப்பவும் என் ‘தொழிலை’ வச்சு ‘கந்துண்ணே’ ன்னு கூப்பிடறியேப்பா!... ரொம்ப லொள்ளு உனக்கு. “ அருகில் வந்தவர் செல்லமாய் அமுதன் முதுகில் தட்டினார்.

   “ அண்ணே.. பார்த்து.  தம்பிக்கு வலிக்கும்ல!” இலேசாய் வலித்தது போல் நடித்த அமுதன்,

   “  ஆமா.,  சில சமயம் அண்ணியும் உங்க கூட வருவாங்களே. இன்னைக்கு? “ கேள்வி கேட்டு நிறுத்தினான்.

   “ வயசானாலும் நம்ம வாய் கேட்கணுமே ! சும்மா இருக்க மாட்டேங்குது.  நோவு.. உடம்புக்குத்தானே ! நேத்து தெருமுனைக்கடை புரோட்டா, குஸ்கா வீட்ல கேட்டாப்புல . வாங்கிக் கொடுத்தேன். இதோ,  இன்னைக்கு ஒரே குமட்டலா இருக்கு,  காலைல வரலைன்னுட்டாங்க அண்ணி.” சொன்னவர் சிரித்து முடிக்க,

    “ இருந்தாலும் , உங்களுக்கு இம்புட்டு ‘குஷி’ கூடாதுண்ணே.  அண்ணிக்கிட்ட சொல்றேன் . “

   “ அட நீ வேறப்பா! மனுஷன் சுதந்திரமா சிரிக்கக் கூடாதா? ஆமா,

 இந்த மாசம் அன்னதானம் தேதி எப்ப? “  கேட்டவர் தேதியை மனதில் குறித்துக் கொண்டார்.

   “ தம்பி அப்புறமா,  ரூவா இரண்டாயிரம் உங்களுக்கு மாத்தி விடுறேன். “   

    “ என்ன இந்த மாசம் இரட்டிப்பா தர்றீங்க அண்ணே?  வாராதது , வசூல் ஆயிடுச்சா? “ கிண்டலாய் அமுதன்.

    “ஏம்பா.,  கந்துவட்டி தொழிலைப்பத்தி உனக்கே தெரியும். கறாராப் பேசி கசக்கினாத்தானே காசு திரும்பக் கிடைக்கும். ஏதோ.. நானும் அதிக வட்டிக்கு ஆசைப்படலைன்னாலும், சில சமயம் பிரச்சினை வரக்கூடாதுன்னு,  ரேட்டை ஏத்திப் பார்ட்டிய தவிர்க்க பார்ப்பேன். மீறி மாட்டியும் இருக்கேன்.  ரொம்ப மன அழுத்தமாயிருக்குப்பா. ஏதோ உன் வகையில , பாவத்தை போக்கலாமேன்னுதான்..இந்த இரண்டாயிரம்  இம்முறை ”  நீட்டிப்பேசி முழக்கியவர்,

    “ சரி தம்பி.,  பார்ப்போம் . பணம் வந்ததும், ஒரு  தகவலைத் தட்டி விடுங்க “  என்றுவாறு நகர,

    உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் அமுதன். 

    பல பேர்களின் பாவ மூட்டைகளை சுமக்க, தன்னை ஒரு சுமை தாங்கியாய் ஆக்கிய அந்த ஈஸ்வரனை நினைத்து மனசுக்குள் கும்பிடு போட்டான் அமுதன்.

    ரோட்டில் இருசக்கர வாகனம் ஒன்று பலமுறை இயங்க மறுத்து,  ‘கிர்..கிர் “ என சிக்கிச் சிரிக்க,

   எதிர் பக்கம் வந்த காய்கறி பாட்டியைப்  பார்த்து சிரித்தான் அமுதன்.

  “ தாயீ.. வணக்கம் . இப்பதான் வியாபாரத்துக்கு புறப்படறீங்களோ? “ என்றவனை,

  “ ஆமா.. அப்பு. என்னதான் தாயும் பிள்ளைன்னாலும் , வாயும் வயிறும் வேற தானே.  உடம்புல உசுரு இருக்கறவரைக்கும் ஓடிப்பொழைக்கணும். முடியலைன்னா,  கிடக்காமப் போயிடணும் . யாருக்கும் தொந்தரவு தர்றக்கூடாது. “ என்றவராய்  இடுப்பை அசைத்து, இளமை நடை போட..

  “ சரி தாயீ.  நல்லபடியா போய் வாங்க “ என அவரைக் கடந்து அன்றைய நடைப்பயிற்சியை முடித்தான் அமுதன்.

   தொடர்ந்த அமுதனின் அடுத்த நாள் நடைப்பயிற்சியில்,  வழக்கமாய் பள்ளிக்கு கிளம்பும் சிறுவனைப் பார்த்து ‘காலை வணக்கம்’ போட,   

   “குட்மார்னிங் அங்கிள்” பதிலளித்த பையன் அன்பாய்க் கையை ஆட்ட,   

    அதிலிருந்து  கிடைத்த உற்சாகம் இவனுக்குள்ளும் ஒட்டிக்கொண்டது. தொற்றிக்கொண்டது.

    பள்ளி பருவம்,  சில சமயம் பாடப்புத்தகங்களால் உடலில் சுமையாய் இருந்தாலும் , மனதிற்கு சுகமான சுமை அந்த பசுமை நினைவுகள் தான் இன்றளவும் .

  அவை.. பரவசமும்,  பரபரப்பும் பாதிப்பாதியாய் கழிந்த நாட்கள்.

  அந்த நாள் அனுபவத்தில் இப்போது மீந்திருப்பது பரபரப்பும் கூடவே, பதற்றமும் மட்டுமே. 

   மெல்ல தனக்குள் , தன்னை  இரசித்தவனாய் நடந்த அமுதன், 

  எதிரில் வந்த பெண் சாதனையாளர் , நடுத்தர வயது காவல்துறைத் துணை ஆணையர் சுகந்தியைப் பார்த்து,

   “ வணக்கம்மா. இடையிடையே வேற பக்கம் ஜாக்கிங் போறீங்களோ? “  என வினவ,

  “ ஆமா. சில சமயம் ஏதாவது அலுவல்பணிக்காரணமா வெளியூர் போக வேண்டியிருக்கு.  அப்ப வராம கூடப்போயிடுவேன்.  ஆமா., நீங்க எப்படி இருக்கீங்க? “ இலேசாய் தன்னை ஆசுவாசப்படுத்தி நின்றார் சுகந்தி.   

   “ நலந்தான்.  எல்லாம் இறைவன் செயல்.  அடுத்த வாரம் பௌர்ணமி..” முற்றுப்புள்ளி வைக்காது இவன் முடிக்க,

   “  ஓ!  ரொம்ப சந்தோசம் . அலுவலகம் போனதும் , பணப் பரிமாற்றம் செய்திடறேன். சரி அப்படியே என் கூட வாங்க.  இலேசா அரை ஓட்டமா பேசிக்கிட்டே போகலாம். “ என சுகந்தி அழைத்தார் .

   “ நிச்சயமா..”  அமுதன் தன் நடையை துரிதமாக்கி சுகந்திக்கு துணையாய் ஓடத்தொடங்கினான்.

  “அமுதன்., அங்கே பாருங்க. அந்தக்குப்பை தொட்டியின் நிலைமையை. குப்பைத்தொட்டியும் கிட்டத்தட்ட நிறைஞ்சு கிடக்குது. பொதுஜனம் வேற அதை சுத்தியே.. குப்பையை எறிஞ்சிட்டு போறாங்க. “ கோபமாகயும், வருத்தமாயும்  சுகந்தி கூற,

  “ பொறுப்பற்ற பொதுஜனம் “ பட்டம் வழங்கினான் அமுதன்.

  “ சரியான பட்டம்.  சமீபத்தில,  இதைப்பத்தி நீங்க எழுதி , பத்திரிகையில வெளிவந்த கவிதை தான் எனக்கு இப்ப நினைவுக்கு வருது.

              

                             “ ஊரே சுத்தமாக 

                               வியாதிக்காக நான்!

                               இருந்தும் நடக்கவில்லை

                              நிறைமாத பிரசவம் 

                                     எனக்கு!

                             குப்பைத்தொட்டி  “

    ஒவ்வொரு குடிமகனும், ஒழுங்கா, ஒழுக்கமா இருந்தால் தானே சமுதாயம் சரியாகும். சீராகும். “  உணர்ச்சியின் உச்சத்தில் சுகந்தி.

    “ உண்மைதாம்மா.  ஆனா,  தவறுக்கு குடிமகன் மட்டுமா காரணம் ? குடிக்கக் கொடுக்கிற அரசும் தானே காரணம் “ சிரிப்போடு அமுதன் சிலேடையாய்க் கூற,

    “ ஓ!  ரொம்ப எதார்த்தமான உணர்வுபூர்வமான பதில் . உங்க கிட்ட எனக்கு பிடிச்சது , இந்த நகைச்சுவை உணர்வு “  சொன்னவர்,

    இலேசாய் கைதட்டிப் பாராட்ட,

   “ ரொம்ப மகிழ்ச்சிம்மா.  கைதட்டிப் பாராட்டும் போது,  நாமளும் மற்றவங்களைப் போல  உற்சாகமாறோம் இல்லையா! “

   “ உண்மைதான். ஒரு நாள், என்னோட அலுவலகத்துக்கு வாங்க...ஒரு தேநீர் சந்திப்புக்கு. நிறைய நிதானமா பேசலாம். ‘

   “ உங்களுக்கு ஓய்வான நேரம் கிடைக்கணுமே “ அமுதன் கூ ற,

   “ வாழ்க்கையில எப்பவுமே சில நேரங்களை நமக்காக ஒதுக்கணும்.  குடும்பம் , தொழில்னு நேரமும் , நாட்களும் ஓடிக்கிட்டுதான் இருக்கும். காலந்தான் ஓர் நிற்காக் கெடிகாரம் ஆச்சே !"சொல்லி சிரித்தார் சுகந்தி.

   “ இதுவே புதுக்கவிதை தலைப்பு மாதிரியிருக்கு . “  இம்முறை இவன் கைதட்டிப் பாராட்ட,

   தலையசைத்து அதனை ஏற்றுக் கொண்ட காவல் துறை துணை ஆணையர் சுகந்தி,

  “ பார்க்கலாம் . “ என விடை பெற, 

   மனம் நிறைந்த மகிழ்ச்சி கலந்த நெகிழ்ச்சியுடன் மெல்ல நடைப்பயிற்சியை நிறைவு செய்தான் அமுதன்.

   அடுத்த நாளும் , வழக்கம்போல் விசாலாட்சிபுரம் வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

   நேரம் கிட்டத்தட்ட காலை 7 மணியை நெருங்கி நகர,

   மூன்றாம் குறுக்கு வீதியில்,  நெருக்கமாய் ஒருவன் மாணவன் தோற்றத்தில்.  கூடவே,  ஒரு மாணவி.  பள்ளிக்கூட பாதி சீருடையில்.

   “ போடா . வர,  வர ரொம்ப தொட்டு பேசுற நீ. “  என்றவளாய் சிணுங்கிச் சிரித்து அவன் தலை முடியைக் கலைத்து விட்டாள்.

   முன் மண்டையில் கொத்தாயும்,  உச்சந்தலையில் குடுமியாயும், வித்தியாசமான முடி வடிவமைப்பில்...அவன்.

   மதுரை நகர சிறப்பு உணவான கொத்து புரோட்டாவாய் சில முடிகள் முன் நெற்றியில் தொங்கிக்கொண்டிருந்தது.

   படு ஸ்டைலாய் தலையை சிலுப்பிக் கொண்டவன்,  காற்றில் கைகளை வித்தியாசமாய் அசைத்து,  அந்த மாணவியின் கன்னத்தை தட்டி,  கையை மெதுவாய் முதுகுக்கு கீழே இறக்கினான்.

  ‘சட்’டென தன் உச்சிக்கொண்டை முடியை,  ஒரு கை அழுத்தமாய் பிடிப்பதை உணர்ந்தவன் ,

  “ ஹே..ஹேய்.. விடுடி.  இலேசா என்னை மாதிரித் தொடு “  என்றவனாய் மாணவியின் முகத்திற்கு அருகில் , தன் முகத்தை நகர்த்த முயன்று தோற்றுப் போனான்.

   முதுகில் இறங்கிய அடியின் வீரியத்தில் அவன் வலியுடன் திரும்ப, கண்களில் கோபக்கனலாய் துணை ஆணையர் சுகந்தி.

   “ யா.. யார் நீ?  என்னைய வி..விடு  “ அவரின் கையை உதறி, அவன் ஓட எத்தனிக்க, 

   அருகில் இருந்த மாணவியின் கண்களில் பயம் கலந்த கண்ணீர்.    

   சுகந்தியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டவள், 

   “ அவனை விட்டுடுங்க.  நா... நாங்க.,”  அவளின் பேச்சு பிதற்றலாய்.

    “ எ.. என்ன இந்த வயதிலேயே காதலா? “  அவன் சட்டைக்காலரையும் கொத்தாய்ப் பிடித்த சுகந்தி,குரலை உயர்த்தி மிரட்ட ,

    சத்தம் கேட்டு வெளியே வந்தார் எதிர்வீட்டுக்காரர்.

   “  சார் நான் காவல்துறை துணை ஆணையர் . இந்த சின்னப்பொண்ணை உள்ளே கூட்டிக்கிட்டு போங்க” என்றவரிடம்,    

   “ வெ..வேணாம் . தெரியாம ..” அவள் ‘சட்’டென காலில் விழுந்தாள்.

   “  நீ முதல்ல உள்ளே போ.  கூட்டம் கூடுது.  இல்லை,  அவன் கூட உன்னையும் வண்டியில எத்தி, ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிடுவேன்.  “ சுகந்தியின் மிரட்டலான தொனியில் ,

   அவள் நடுங்கி நகர்ந்து,  எதிர் வீட்டுக்குள் போனாள்.

   துரிதமாய் தன் அலைபேசியில் , அந்தப்பகுதி நிலைய ஆய்வாளரை சுகந்தி அழைக்க,

   “ கு., குட் மார்னிங் மேம். சொல்லுங்க மேம் “  மறுமுனையில் வார்த்தைகள் மங்கலாய் ஒலித்தது. 

   மீண்டும் குரலை உயர்த்தியவர்,

   “ உடனே , ரோந்து வண்டியோட  இங்கே வாங்க ஒரு ‘தூள்’ பார்ட்டி சிக்கியிருக்கு . உங்க பகுதியில , ஏன் இப்படி நடக்குது?  இதைக் கூடவா கண்காணிக்காம,  கவனிக்காம விட்டு வச்சிருக்கீங்க ? “ சொல்லிய சுகந்தி தான் இருக்கும் இடத்தையும் கூறிவிட்டு,

   மீண்டும் அடியொன்றை இடியாய் இறக்கினார் அவன் மீது.

  “  என்னை விடுங்க.  நான் அப்படிப்பட்ட பையன் இல்லை..” சொன்னவனின் கால்சட்டையை வேகமாய் உருவி விட , பலான பல

பொட்டலங்கள் தெறித்தன  வீதியில். 

   சில நிமிடச்செலவுக்கு பின், 

  அங்கே..காவல்  அதிரடிப்படை வாகனம்,  கூடவே செய்தியாளர் இருவர் அலைபேசியுடன் சேர்ந்துக் கொள்ள,  பரபரப்பு பற்றிக்கொண்டது.

  மேலும் கூட்டம் கூடாது , அமைதியாய் கலைத்துவிட்ட துணை ஆணையர்  சுகந்தி,

   செய்தியாளர் இருவரை ,தன் அலுவலகத்திற்கு வரச் சொல்லிவிட்டு எதிர் வீட்டுக்குள் நுழைந்தார் .

  அங்கே,  அந்த மாணவி முகம் பொத்தி அழுத நிலையில். 

  நேராய் அவளை நெருங்கியவர்,  அவள் கைப்பிடித்து அழைத்து ஆசுவாசப்படுத்தியவறே, பேசத்தொடங்கினார்.

   “ அவன் யாருன்னு தெரியுமா உனக்கு ? அவனோடு எத்தனை நாள் பழக்கம்?  அவன் தேடப்பட்ட ஒரு குற்றவாளி.  உனக்குப் புரியற மாதிரி சொல்றேன். அவன்  ஒரு போதைப் பொருள் கடத்தி.  பல பள்ளி,  கல்லூரிகள் வாசல்ல போய் நின்னு,  இந்த அசிங்கமான வேலையை செய்யறவன். “ மீண்டும் சுகந்தி குரலில் உயர்த்த,

  “ நா., நான்,  நாலு நாளா பழக்கம். எங்க கல்லூரி வாசல்ல நின்னான். அதில., “  அவள் மேலும் அழுதாள். 

   “ வேற ஒண்ணும்..” சுகந்தி அவளின் முகத்தை நிமிர்த்தி முறைக்க,

   “  இ.. இல்லை .  எங்க அம்மா மேல சத்தியமா எதுவும் இல்லை “    

   கோபம் குறையாத சுகந்தி,

   அவள் கன்னத்தை  கிள்ளிவிட்டு,

   “  நல்ல வேளை, அவன்  என் கையில வசம்மா சிக்கினான்.

இல்லைன்னா , மொத்தமா உன்னைய அவன் நாசம் பண்ணியிருப்பான்.

பசங்களப் படிக்க வைக்க,  பெற்றோர்கள் எவ்வளவு பாடுபடறாங்க. அவங்க பாவம்,  உங்களையே நம்பியிருக்காங்க.  நீங்க இப்படி..” அவள் காதைத் திருகினார் சுகந்தி.

   “வா.,  உன்ன வீட்டில விட்டுடுறேன். “ எனக்  கைப்பிடித்து அழைக்க,

 ‘ பட்’டென  துணை ஆணையரின் காலில் விழுந்தவள்,

   “ என்னை விட்டுடுங்க . எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம். என்னைக் காப்பத்தினதுக்கு ரொம்ப நன்றி.”  கதறியழுதாள் அந்த மாணவி. 

   “ சரி,  சரி பயப்படாதே.  அதனால தான்,  உன்னைய முன்னாடியே இந்த வீட்டுக்குள்ள அனுப்பி வச்சேன்.  மீடியாகாரங்களையும் விரட்டி விட்டுட்டேன்.  சரி , இப்பச்  சொல்லு . உன்னைய எங்கே விடணும்? “

   “ எங்க  வீட்டு தெருப்பக்கமா விடுங்க. அது  போதும்.  ரொம்ப 

நன்றிம்மா “ மீண்டும் கும்பிட்டவளை,

 “  கவலைப்படாதே.  இந்தா என்னுடைய தொடர்பு எண். குறிச்சுவைச்சுக்க. இனிமே , இப்படி ஏமாறாதே “  என அன்பாய்  கூறியவர்,

   அடுத்து , வீட்டுக்காரரை பார்த்துப் பேசினார்.

  “  சார் , நீங்க இந்தப்பகுதி சங்கத் தலைவர்ன்னு,  வாசல்ல போர்டு பார்த்தேன் . கூடுதலா கவனமா இருங்க. “

  “  நல்ல காரியம் செஞ்சீங்கம்மா. பாராட்டுக்கள் . நாங்களும்,  

இந்தப்பகுதி முழுமையும் கண்காணிக்க,  கேமரா வெச்சிருக்கோம். இனி , கூடுதல் கவனத்தோட இருப்போம்  “ என்றவராய்,  வாசல் வரை வந்து வழியனுப்ப,

    துணை ஆணையர் சுகந்தி மாணவியுடன் பைக்கில் பயணப்பட்டார் கம்பீரமாய். 

                  “ பாரதி கண்ட புதுமைப்பெண் “ -- அடுத்த நாள் பெட்டி செய்தியாய்... தினசரிகளில்.  

    "துணை ஆனையர் சுகந்தியின் தீவிர முயற்சியால் பெயர் தெரியாத மாணவி தப்பிப்பிழைத்த செய்தி " 

    கூடவே,  துணை ஆணையர் சுகந்தியின் புகைப்படங்கள் கம்பீரமான போலீஸ் உடையில். 

    செய்தித்தாளைக் கண்டதும்  அமுதன்,  விசாலாட்சிபுரம் பகுதி சங்க தலைவரைச் சந்தித்து துணை ஆணையர் சுகந்திக்கு,  அந்த தனியார் பள்ளியில் பாராட்டு விழா ஏற்பாடு செய்தான் .

   முதலில் வர மறுத்த சுகந்தி,ஒரு விழிப்புணர்வு கலந்த கூட்டமாய் நடத்த அமுதன் வேண்டுகோள் விடுக்க,

   ஒரு இனிய மாலைப்பொழுது.. அதே “ பாரதி கண்ட புதுமைப்பெண் “ பேனருடன் விழா தொடங்கியது. 

   அந்தப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்ள,  பல மீடியாக்கள் பங்கு கொண்டன.

   சம்பிரதாய வரவேற்புரையைத் தொடர்ந்து , தன் பேச்சை தொடங்கிய சுகந்தி, 

   “ என் இனிய மாணவ,  மாணவிச் செல்வங்களே , வருங்காலமே,  விழாக்குழுவினர் மற்றும் திரளான பொதுமக்கள் மற்றும் மீடியாக்களுக்கும் வணக்கம். “ என்றவர்,

  “  முதல்ல பாராட்டு விழாவிற்கு மறுப்பு தெரிவிச்ச நான்,  உங்களை சந்திக்கிற வாய்ப்பா  இருந்ததினால ஒத்துக்கிட்டேன்.  என் நண்பர் எழுத்தாளர் அமுதன் இப்படியொரு இனிய அதிர்ச்சி எனக்கு தந்ததற்கு, அவருக்கு சிறப்பு நன்றி.  என்னுடைய பேச்சு ஐந்து நிமிடம் தான். வாழ்க்கை ஒர் வில். அதில் மனம் ஓர் நாண்.  அதை  உறுதியா, கெட்டியாக் கட்டி , முயற்சிங்கிற அம்பை எய்யணும்... தொடர்ச்சியா.  அதுக்கு இலட்சியம் தான் இலக்கு . நானும்,  எட்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு பள்ளியில ஆசிரியராத்தான் பணியை தொடங்கினேன்.  இப்ப , ஒரு சமுதாய நலன் பாதுகாப்பை நிலை நாட்டற, ஒரு காவல்துறை அதிகாரியா உங்க முன்னாடி இருக்கிறதுக்கு நான் மேலே சொன்ன அணுகுமுறை தான் காரணம். “ 

    “ பட,பட “ வென பாராட்டு கைதட்டல்களுக்கு  இடையே தொடர்ந்தவர்,

   “ இப்ப எல்லாம் பள்ளி,  கல்லூரிகள்ல, நீதி வகுப்புகள்,  மன ஒழுக்க, ஒழுங்குப்பயிற்சி வகுப்புகளை ரொம்ப குறைச்சிட்டாங்க. கல்வியைப் போல தனிமனித ஒழுக்கமும் இன்றியமையாதது . உங்கள் வருங்கால கனவை, தங்களோட கண்கள்ல கண்டு, உங்களை கரை சேர்ப்பவர்கள் ஆசிரியர்கள்.  அவர்களை நம்புங்க.  அவங்க சொல்றபடி நடங்க.நான் அப்படியிருந்தேன்..இன்னமும் இருக்கேன்.  மாதா, பிதா, குரு ,தெய்வம் இதை எப்போதுமே மனசுல வைங்க.  மரியாதை செலுத்துங்க.  இதோ நம்ம எழுத்தாளர் அமுதனின் ஒரு புதுக்கவிதை..

                    ‘ சுமையாய்

                      சுமந்தாள் 

                      புத்தக மூடையை!

                      மழைக்காகக்கூட

                      பள்ளி ஒதுங்காத 

                      தாய் ! ‘

எவ்வளவு அர்த்தம் பாருங்க...” கவிதை சொன்னவர் ,

      தான் கையோடு கொண்டு வந்திருந்த சால்வையை மேடையை விட்டு இறங்கி , அமுதனுக்குப் போட,

      கை தட்டல்களால் அரங்கமே அதிர்ந்தது.

 தொடர்ந்த சுகந்தி,

  “  எழுத்து ஓர் வரம். எழுத்தாளர்கள் ஒரு வரப் பிரசாதம்.  வாழ்க்கையில,  நாம போடறது எல்லாம் வெறும் கையெழுத்து . அதுவே வாழ்த்தொப்பம்மா ..ஆட்டோகிராப்பா மாறணும்.  அதுக்கு,  நாம நல்லா உழைக்கணும். உயரணும்.  ஏன்னா, ‘வாழ்த்தொப்பம்’ வாழும்போதும்,வாழ்ந்தபின்னும் வாழக்கூடியது. இப்ப உங்க எல்லோருக்கும் அவருடைய இந்த புதுக்கவிதை புத்தகங்களை என் அன்பளிப்பா தர்றேன்.  அதில , அவர் ,தன்னுடைய வாழ்த்தொப்பத்தை இடணும். கூடுதலான நேரம்  பேசிட்டேன்..மன்னிச்சுக்குங்க. முதல்ல, எனக்கு..” என முதல் ஆளாய் துணை ஆணையர் நீட்டிக் கேட்க,

     உள்ளப்பூரிப்பில், தடுமாறி மேடையேறி,  ஒலி வாங்கியை வாங்கிய அமுதன்,

    “  துணை ஆணையரம்மா,  எனக்கு இப்படி,  இன்ப அதிர்ச்சியை கொடுப்பாங்கன்னு  நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. தனக்கு கிடைச்ச மேடைப்பாராட்டை,  எனக்கு கொடுக்குறாங்கன்னா..  அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. அதை,  நாம  அனைவரும் பாராட்டுவோம் என்றாவது ஒரு நாள்,  என் எழுத்து பேசப்படும்னு நம்பினேன்.  அது,  இன்றே.. இங்கேயே.  அதுக்கு,  உங்கள் அனைவருக்கும் நன்றி . துணை ஆணையரம்மா, நீங்களும் சேர்ந்து , என்னோட இந்தப்புத்தகத்தில  வாழ்த்தொப்பத்தை போடணும் . “ என அமுதன் பேசி முடிக்க,

    அரங்கமே எழுந்து நின்று, சுற்றுவட்டாரமே அதிரக் கைதட்டியது.     

    வரிசையாய் வந்த பங்கேற்பாளர்கள்,  துணை ஆணையர் சுகந்தி மற்றும் அமுதம் வழங்கிய புத்தகங்களை பெற்றுக் கொள்ள,

    அங்கே வருங்காலத்தின் வாசல் திறந்தது.

                                              -0-0-0



Rate this content
Log in

Similar tamil story from Classics