STORYMIRROR

மதுரை முரளி

Classics Inspirational Others

4  

மதுரை முரளி

Classics Inspirational Others

கனவே கலையாதே

கனவே கலையாதே

9 mins
13

          “கனவே கலையாதே” -- மதுரை முரளி

      தென்மேற்கு பருவக்காற்றின் குளிமை காலையிலேயே காற்றில் கலந்திருக்க, தனது அன்றாட வாடிக்கையான காலை நடைபயிற்சிக்கு காலில் ஷூ மற்றும் ட்ராக் சூட் சகிதம் தயாராகி வீட்டிலிருந்து வண்டியில் கிளம்பினார் கதிரவன்.

     நடைப்பயணம் ஓர் நட்புப்பயணம்... நடக்கும் அனைவருக்கும். மனதுக்கும் சரி, உடலுக்கும் சரி ஒரு ஆரோக்கியப் பயணம்.

அதற்காகவே, தன் வீட்டை விட்டு வண்டியில் சில கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து, அமைதியான சூழலில் நடப்பது கதிரவனின் வழக்கம்.

    அன்றும் வழக்கமான நடைபயிற்சி இடம் வந்தும் , மனதில் ஏதோ ஓர் ஈடுபாடு இல்லாத உணர்வு வர, சட்டென தன் முடிவை மாற்றி வண்டியை மேலும் செலுத்தியவர் பார்வையில் பசுமையான கோமதிபுரம் கண்ணில் பட வண்டியை ஓரங்கட்டி நடக்கத் தொடங்கினார்.

    மனதின் ஓரத்தில் ஓர் சிறிய சிந்தனை. ‘ இங்கே தானே நண்பன் சந்திரன் வீடு..’ எண்ணி முடிப்பதற்குள், ‘பட்’டென ஒரு அடி முதுகில் இறங்க, சற்று கோபமாய்த் திரும்பியவன் பார்வையில் அதே நண்பன் சந்திரன்.

   “ அட, வாப்பா . உனக்கு ஆயுசு நூறு. ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாட்டு பாடியவனாய், தன் பங்குக்கு நண்பன் சந்திரனை திருப்பித் தாக்க

   “ அடப்பாவி! நானும் இப்பத்தான் உன்னைய நினச்சேன் . ஆமா, அடி ஒண்ணுன்னாலும் ‘கும்’முன்னு ஓங்கி இறக்கிறியேப்பா " வேதனையில் சந்திரன்.

    “ என்ன , இந்த நேரம் தான், உனக்கும் நடை பயிற்சி நேரமா? “ கதிரவன் வினவ,

   “ ஆமா, அதிசயமா எங்க பகுதிக்கு வந்திருக்க! அய்யா எப்போதும் எல்லை தாண்டாதவனாச்சே !"

   “ உண்மைதான் . எதிலேயும்.. ஹா ஹா ஹா” பேசியபடியே தங்கள் நடையை தொடர்ந்தனர் நண்பர்கள்.

   “ சந்திரா, உனக்கு என்ன கவலைப்பா? என்னை விட மூணே வயசு தான் மூத்தவன்..நீ. ஆனா, அரைச்சதம் அடிச்ச சில வருசத்திலேயே

பேரன், பேத்தியெல்லாம் பார்த்துட்ட..” கதிரவன் புலம்ப ,

    “ அட, நீ வேறப்பா. என் பொண்ணு வயித்துப் பேத்திய பார்த்திட்டேன் பேரனை தான் இன்னும் பார்க்கல.. பசங்ககிட்டேயிருந்து. ஆமா, உன் பொண்ணு இன்னும் காலேஜ் படிப்பு முடிக்கலையேன்னு கவலையா உனக்கு ? “

   “பின்னே என்னப்பா? இப்ப எல்லாமே, எல்லோருக்குமே வேகமான வாழ்க்கை தானே. நம்ம பொறுப்புகளைச் சீக்கிரம் முடிக்கணும். காலத்துக்கு ஏத்தமாதிரி நீயும் வாழ்க்கையில ரொம்ப சீக்கிரமே செட்டில் ஆயிட்டே. நான்தான் பின் தங்கிட்டேன். ஆமா, இதைப்பத்தி உன் கருத்து என்ன? “

  “ சரியா சொல்லணும்னா, வாழ்க்கையில் சீக்கிரமே ஓய்வு பெற்ற மாதிரி ஒரு உணர்வு . எப்படிச் சொல்ல? என்னுடைய பார்வையில ரொம்ப அவசரப்பட்டுட்டோமோன்னு சில சமயம் தோணும். இப்ப, நீ இன்னும் இளமையாத் தான் தெரியற. தலைமுடியும் சால்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கு. எனக்கு அதுக்குள்ள தாத்தா பட்டம் வந்திருச்சு. எதை செஞ்சாலும், மனசுல சின்னதா உறுத்தும். தலைக்கு ‘டை’ போடணும்னுனாலும் கூட... ஹாஹ்ஹா.".

   “ ஓ! இதுல, இப்படி ஒரு விஷயம் இருக்கா? ஆனா, பொறுப்புகளைச் சீக்கிரமா முடிச்சுட்டா, நமக்கு நல்லது தானே. வருங்காலத்தை மகிழ்ச்சியா , சுளுவா கடக்கலாமே ! "கதிரவன் கூற,

   “ அது உன் கருத்து. என் கருத்தும், முன்னாடி இப்படித்தான் இருந்தது. உன்னையவிட, நான் இந்த விஷயத்துல , வயசுல அனுபவசாலி என்கிற அடிப்படையில ஒண்ணு சொல்றேன் . எதிலயும் தேக்கம் கூடாது. நீர் ஓடினால் தான் ‘ஆறு’. தேங்கினா குட்டை. அது ஆரோக்கியம் இல்லை. அது போலத்தான் வாழ்க்கையும் நகர்ந்துக்கிட்டே இருக்கணும். பொறுப்பு இல்லைன்னா பொழுதும், மனசும் போர் அடிச்சுடும்"

  “ அப்படிச் சொல்றியா? போன வருடமே நீ விருப்ப ஒய்வு கொடுத்திட்டே‌. இப்ப என்னதான் செய்யற? “ கதிரவன் நண்பனிடம் கேட்க,

   “ நீ கேட்ட கேள்வியை எனக்குள்ள கேட்டு என்னைய நானே தேட ஆரம்பிச்சிருக்கேன். என்னுடைய கனவையும் , கடந்த காலத்தையும் ஒப்பிட்டு, நான் இப்ப எப்படின்னு? சுய பரிசோதனை பண்ணத் தொடங்கி யிருக்கேன் “ சந்திரன் முத்தாய்ப்பாக முடிக்க,

   “ யப்பப்பா நீ பேசறது பெரிய விஷயம் . எனக்கு அலுவலகம் கிளம்ப நேரமாயிடுச்சு. அப்புறமா நிதானமா இதைப் பத்தி பேசுவோம். பார்ப்போம்..” பரபரப்பாய்க் கதிரவன் வண்டியை நோக்கி பாய,

  “ ஓகே... “ என்றவனாய்த் தனக்குள் சிரித்துக் கொண்டான் சந்திரன்.

   “கிர்,கிர்..” அழைப்பு மணி அலற, எரிச்சலாய்த் தான் அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை நகர்த்தி எழுந்த கண்மணி ,

   “ இதோ வர்றேங்க..” குரலில் கோபத்துடன் கணவன் சந்திரனை வரவேற்க,

  “ என்ன கண்மணி, உன்னிடம் எப்போதும் இருக்கிற காந்தக்குரல் இன்னிக்கு ஏன் இப்படி காந்துது?” நக்கலாய்ச் சந்திரன்.

  “ ஆமா, உங்க ரசனை மட்டும் என்ன முன்னே மாதிரியா இருக்கு? பாதி நேரம் ‘சிடு, சிடு’ன்னு இருக்கீங்க. இதில, என்னையப் போய்..” கண்மணி கூற,

  “ இன்னிக்கு நடைபயிற்சி போனதில, என் நீண்ட கால நண்பன் கதிரவனைப் பார்த்தேன். அவன் என்னடான்னா, நம்ம நிலைமையைப் பார்த்து பொருமறான். நமக்கு எல்லா பொறுப்பும் முடிஞ்சிடுச்சுன்னு பேசறான். “

  " நம்ம நிலைமை நமக்குத்தான் தெரியும். ஹ., பொறுப்புன்னு உடனே இப்பதான் ஞாபகம் வருது. நம்ம மகள் கீதா பத்து நிமிசத்துக்கு முன்னாடிதான் போன் பண்ணினா. பேத்தி தீபிகாவுக்கு 80 பக்கம் கோடு போட்ட நோட்டும், ரெண்டு பென்சிலும் அவசரமா வேணும்னு. “

  “ அட, இப்பவே வா ! ஏன், அவங்க பக்கம் கடை இன்னும் திறக்கலையா? “ சந்திரனின் பேச்சை இடையில் வந்த கீதாவின் அலைபேசி அழைப்பு இடைமறிக்க,

  “ ஹ., என்னமா கீதா எப்படி இருக்க? பேத்தியும், மாப்பிள்ளையும் நலமா?" பாசமாய்ச் சந்திரன்.

   “ இங்கே பாருங்கப்பா., சும்மா ‘வளவள’ன்னு பேசாம , அம்மாகிட்ட சொன்ன மாதிரி நோட்டும், பென்சிலும் வாங்கிட்டு பத்து நிமிஷத்துல நீங்க எங்க வீட்ல இருக்கணும் . பேத்திக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு. “

  “ ஏம்மா., நீ கூடுதலா இரண்டு வாங்கி ஸ்பேர் பண்ணலையா? “

  “ இல்லைப்பா.என் அவசரத்தைப் புரிஞ்சுக்கப்பா. எங்க பகுதியில கடை திறக்க மணி ஒன்பதாயிடும் . நீ சொன்ன மாதிரி கூடுதலா நோட்டும் பென்சிலும் வாங்கி வைக்கிற பழக்கம் என்கிட்ட இல்ல. அதனால, அதைப் பத்தி பேச வேண்டாம். இப்பவே, மணி எட்டு தாண்டிடுச்சு. நான் வேற பேத்திய தயார் பண்ணனும். புரியுதா? கடைக்குச் சீக்கிரம் புறப்படுப்பா.” மறு பேச்சு பேசக்கூட வாய்ப்பில்லாமல், மகள் கீதா அழைப்பைத் துண்டித்து விட   

  “ என்ன ‘படபட’ ன்னு பொண்ணு பொறிஞ்சு தள்ளிட்டாளா? அதான் இப்ப , இந்த தலைமுறையோட அணுகுமுறை. இன்னமும், அவளைக் கவனிக்கிறது போறாதுன்னு இனி, பேத்திக்காகவும் ஓடுங்க... நோட்டு பென்சிலோட..ஹி..ஹி "கண்மணி கலகலப்பாய்ச் சிரிக்க,

  “ யாரைக் குறை சொல்ல? மற்றவர்களைச் சார்ந்து செயல்படுற குணம் நம் மகளோடது. அது, உடனே எப்படி மாறும் ? “ சலிப்பாய்ச் சந்திரன்.

  “ நீங்க சிறு வயதிலிருந்தே அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்ததோட பலன். நாம விதைச்சதைத் தானே நாம அறுவடை செய்ய முடியும். எனக்கும் சேர்த்து தான். இதோ ரெண்டு கிலோமீட்டர்ல அவளோட வீடு . ஒரு நாள் நாம போய், அங்கே தங்கினது இல்லை . அவளும் நம்மள தங்குங்கன்னு பாசமா சொன்னதில்லை. ஆனா, அவ வீட்டுச்சாமான் தேவையெல்லாம் கடைக்கு போய் வாங்கிக் கொடுத்து, நீங்க தான் கஷ்டப்படுறீங்க. மருமகனுக்கு எப்போதும் அலுவலகப்பணி தான். அவ வீட்டுக்கு போனதும், வேலை முடிஞ்சிதும், உடனே திரும்பிடுங்க “ மனைவி கண்மணி கறாராய்க் கூற,

   “ விடு, விடு. நம்ம பொண்ணு, பேத்திக்கு தானே செய்யறோம்..” மீண்டும் அலைபேசி அழைப்பு.

   கீதாவின் எண் அலைபேசியின் திரையில் வர.,

  “ ஐய்யய்யோ., இதோ கிளம்பிட்டேன். அவசரத்தில , போனை எடுக்க மறந்து , அப்பா கடைக்கு கிளம்பிப் போயிட்டாருன்னு சொல்லி சமாளி..”

 சொன்னவர் ,

   பேண்டைக் கூட மாட்டாது , கட்டியிருந்த கைலியோடு பையை எடுத்துக்கொண்டு பைக்கில் பறந்தார் சந்திரன்.

   மறுநாள் ,

   “ கொக்கரக்கோ..” கூடவே, “ கூக்கூ..” என சேவல்களும், குருவிகளும் புதிய நாள் பிறந்ததை உற்சாகமாக பூமிக்கு அறிவிக்க,

    ‘பரபர’ வென எழுந்த சந்திரன், தன்னுடைய அன்றாட ‘காபி’ தயாரிப்பில் இறங்கி, முதலில், அரை ஜீனியில் தனக்கு தயாரித்த காப்பியை ‘மடக்’கென முழுங்கிவிட்டு ,மனைவி கண்மணிக்கு நீட்டினார்.

  “ என்னங்க, நம்ம பையன் ஆனந்தன் மருமக ஆஷாவோட வெளிநாட்டு பயணம் போயிருக்கானே.. இப்ப எந்த நாட்டில இருக்காங்க? “

  “ நேத்திக்கு பாரீசில் இருந்ததா தகவல் போட்டான். அனேகமா நாளைக்கு சுவிஸ் போகணுமாம். “

  “ பரவாயில்லைங்க. நம்ம பையன் விவரமா கம்பெனி செலவிலேயே மருமகளைக் கூட்டிகிட்டு , ஒரு மாசம் ஐரோப்பா பயணம் கிளம்பிப் போய் ஒரு வாரம் ஓடிருச்சு. “

  “ உன் பையனுக்கென்ன? ரொம்ப விவரந்தான். நேத்தி தான் ஐயா வாட்ஸ்-அப்ல ஒரு தகவல் போட்டிருக்காரு. அதுவும், எதுக்கு தெரியுமா? அவனுக்கு செலவுக்கு 5 லட்சம் அவசரமா தேவைப்படுதாம். உடனே அனுப்பி வைங்கன்னு..” குத்தலாய்ச் சந்திரன்.

  “ என்ன பையன் இப்படி பண்றான்? கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. வாரிசு பற்றி யோசிக்காம, அப்பப்ப வெளிநாடு போறேன்னு ரெண்டு பேரும் கிளம்பிப்போயிடுறாங்க. இதுல, இப்படிப் பணத்த வேற அடிக்கடி நம்ம கிட்ட கேட்டு வாங்கிக்கிறான். “ சலிப்புடன் கண்மணி.

  “ ஒண்ணு புரிஞ்சுக்க கண்மணி. நான் மத்தியஅரசில, வாங்கற

ஓய்வூதியப்பலன் தான் அவங்க கண்களை உறுத்திக்கிட்டேயிருக்கு. நானும் எட்டு வருஷம் முன்னாடியே எழுதிக் கொடுத்துட்டு வந்து, வீட்ல சுகமாயிருக்கலாம்ம்னு நினைச்சா., இனிமே , நாம ரொம்ப உஷாரா இருக்கணும் போல . “ கவலையாய்ச் சந்திரன்.

  “ உண்மைதாங்க. பொண்ணு கீதா உள்ளூர்ல இருந்தும், நாம தான் அவளுக்கு எல்லாவித உதவியும் பண்ண வேண்டியிருக்கு. பையனும், மருமகளும் வீட்டோட, நம்ம கூட இருந்தும் ., வருஷத்துல பாதி நாள் ஊர் சுத்தப்போயிடறாங்க. நாம இந்த வீட்டைப் பாதுகாத்துக்கிட்டு இங்கேயே கிடக்கிறோம். எல்லாம் காலக்கொடுமைங்க. “

  “ நம்ம பசங்க அவங்கவங்க தேவைக்காக நம்மளைப் பயன்படுத்துறது நல்லாப்புரியுது கண்மணி . இனியாவது , நாம கொஞ்சம் விழிப்பா இருக்கணும். “

  “ஆனா, ஒண்ணுங்க. எனக்கென்னவோ, நாம காலம் கடந்து இதைப் பத்தி பேசறோமோன்னு தோணுது. நமக்கு ரெண்டு குழந்தைகள் பிறந்ததும் , உங்க கனவு கலந்த ஆசைன்னு ஒரு விஷயம் சொன்னீங்க. அது இப்பவும் சரிதான்னு எனக்கு மனசுல படுது . “

  “ அ..அது கண்மணி ., நம்ம ரெண்டு பேரோட விருப்பமான கனவு அது. காலப்போக்கில, அதை கவனத்தில் கொள்ளாம விட்டுட்டோம். அதுக்கு காரணம் கொஞ்சம் சுயநலம் தான். ஆனா, அந்தக்கனவு இன்னமும் நம்மளை விடாம துரத்துது பாரு. “

  “ எனக்கு இதான் தோணிச்சுங்க. நீங்களும் இதேயே சொல்லிட்டீங்க. சீக்கிரம் யோசிச்சு முடிவு பண்ணிடுங்க. சரி, சரி இப்பவே மணி ஏழு

தாண்டிடுச்சு. வாசல் கூட்ட நான் போறேன். “ மனைவி கண்மணி எழுந்து, காலைச் சாய்த்து, சாய்த்து நடக்க.. சங்கடமாய் அவளைப் பார்த்தார் சந்திரன்.

   மனதுக்குள் தோன்றிய பலவித சிந்தனைகள் கூட , அன்றைய செய்தித்தாளைப் புரட்டத் தொடங்க,

   முதல் பக்கத்தலைப்பே..” கவிழ்ந்தது. ”

   தொடர்ந்து, தன் பார்வையைச் சந்திரன் அடுத்தடுத்த பக்கங்களுக்கு நகர்த்த , எல்லாம் கொலை., கொள்ளை எனப் பதட்டமான செய்திகளே பக்கங்களின் பாதி இடத்தை நிரப்பி இருந்தன.

  “ சே! காலையில ஒரு நல்ல செய்தியாவது., தனிமனித சாதனையை பத்தியோ, நாட்டின் வளர்ச்சியைப் பத்தியோ காணுமே. எங்கே போகிறோம் நாம்? “ எனத் தனக்குள் கவலைப்பட்டவரை, கலங்க வைத்தது கண்மணியின் கதறல் .

  “ என்னங்க, நான் வாசற்படியில விழுந்துட்டேன்..” அலறல்.

  “ ஐயோ கண்மணி..” பதறியவராய் வாசல் நோக்கி விரைந்த சந்திரனின் கண்கள் கண்ட காட்சி ஒரு நிமிடம் அவரது இதயத்தையே உறைய வைத்தது.

   இரண்டாம் வாசல் படியில், குப்புற விழுந்த நிலையில் மனைவி கண்மணி .

   நெற்றிப்பொட்டு அகலமாய் வெட்டப்பட்டு, பெரிய கோடாய் இரத்தம் கொப்பளிக்கத் தொடங்கியிருந்தது.

   தடுமாறிய சந்திரன் தன் முழு பலத்தைப் பிரயோகித்து, கண்மணியைத் தூக்கி , வாசல் சுவற்றில் இலேசாய்ச் சாய்த்து அமர வைத்த அதே சமயம், கண்மணி தனது வலது காலைக்காட்டி ஏதோ சொல்ல,

   இலேசாய் அவளின் காலைத் தூக்கம் முயன்றவர், எலும்பு முறிவு ஏற்பட்டதை உணர்ந்து கொண்டார்.

  முதலில், பதட்டாமாய் மகள் கீதாவை அழைக்க நினைத்து, தன் செல்போனுக்காக வீட்டில் உள்ளே போக முயன்றார்.

  “ ஐயோ., வலி தாங்க முடியல. என்னை மருத்துவமனைக்கு..கூட்டுப் போங்க..” கண்மணியின் வார்த்தைகளில் வேதனை உச்சம் தொட்டது.

   சத்தம் கேட்டு எதிர் வீட்டு பையன் பரமசிவம் உதவிக்கு பாய்ந்து ஓடி வர,   

  “ ஐயா உடனே ஆம்புலன்ஸ் கூப்பிடுறேன். அம்மாவை கவனமாப் பாத்துக்கோங்க. “

  அவசர அவசரமாய்த் தோளில் துண்டை போத்திக் கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரியின் ஆம்புலன்சை அழைத்து வர நகர , தானும் கிளம்பத் தயாரானார் சந்திரன்.

   பத்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, அடுத்த பத்து நிமிஷத்தில் மருத்துவமனையை அடைந்தனர்.

  அடுத்த அரை மணி நேரம் அவசர சிகிச்சை பிரிவில் அவஸ்தையாய்க் கழிந்தது.

  அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர், ‘ நோயாளி கூட வந்தது யாரு?’ என வினவ,

  அவருடைய குரலில் தெரிந்தது சிறிய பதட்டம்.

  ”நா.. நான்., நான்தான் டாக்டர். என் மனைவி தான் கண்மணி ..”

ஒட்டிக்கொண்ட உதட்டைப் பிரித்துச் சொற்களை உதிர்த்தார் சந்திரன்.

  “பயப்பட பெரிசா ஒண்ணுமில்லை .. நெற்றியில் பெரிய வெட்டு.    ஆறு தையல் போட்டிருக்கோம். ஆனா , அவங்களுக்கு வலது கால் மூட்டு எலும்பு முறிவு. அதனால..” சற்று இடைவெளி விட,

  “ அ..அதற்கு ? “ பதட்டமாய்க் குரல் உடைந்தார் சந்திரன்.

  “ சீக்கிரமே அவங்களுக்கு அறுவைச்சிகிச்சை பண்றது நல்லது. இன்னிக்கு நோயாளிக்கு மத்த சோதனைகள் எல்லாம் எடுத்திட்டு , சீக்கிரமா முடிவு செய்யலாம். இன்னைக்கு மாலையில ஒரு ரிவ்யூ பார்க்கலாம் . “ சொன்ன மருத்துவர் சந்திரனின் தோளில் தட்டி, தைரியம் சொல்லிவிட்டு நகர,

ஓய்ந்து போய் உட்கார்ந்து விட்டார் சந்திரன்.

  “ ஐயா, தைரியமா இருங்க . நாங்க எதுக்கு இருக்கோம்? கவலைப்படாதீங்க. உங்க மகளுக்கு தகவல் சொன்னீங்களா? பையனுக்கும் சொல்லிடுங்க.” என எதிர்வீட்டு பையன் பரமசிவம் நினைவுபடுத்த,  சோகமாய்க் கீதாவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப் போனார் சந்திரன்.

  “ நீங்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் எண், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது. “ பதிவு செய்யப்பட்ட குரல் கேட்டு, பரிதாபமாகப் பரமசிவத்தைப் பார்த்தார் சந்திரன்.

  “ ஐயா, ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க மக வீட்டு முகவரியை கொடுங்க. நானே நேரிலேயே போய் தகவல் சொல்லிடுறேன். “

 பரமசிவம் கேட்க,

   தட்டு தடுமாறி வீட்டின் தெரு மற்றும் அடையாளத்தைப் பையனிடம் பகிர்ந்தார் சந்திரன்.

  அடுத்த வினாடியே அவன் வண்டியில் பறந்து விட, சந்திரனுக்குத் தீடீரென தான் அனாதையாகி விட்டது போன்ற உணர்வு.

  பெற்ற பையனைத் தொடர்பு கொண்டும் பயனில்லை.

  மனம் முழுதும் கவலையுடன், ஆஸ்பத்திரி வராண்டா சுவரில் கலங்கிய கண்களுடன் மௌனமாய்த் தலை சாய்த்தவர் நினைவில் வந்தான் நண்பன் கதிரவன்.

  அலைபேசியில் கதிரவனை அழைத்தவர்,

  “ க..கதிரவா, என் மனைவி..” தொண்டையில் சிக்கிக்கொண்ட சொற்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே விடுத்து , தன் வேதனையைக் கொட்ட, பத்து நிமிட நேரத்திற்குள் கண்ணெதிரே கதிரவன்.

  “ டே., டேய் கதிரவா., என் நிலைமையைப் பார்த்தியா? “ தாலையிலடித்துகொண்டு கதற, 

  “ சந்திரா, நடந்தது.. நடந்து போச்சு. அதான், அவங்களைப் பத்திரமா

மருத்துவமனையில சேர்த்திட்டேல்ல. இனி , அந்த மருத்துவர்களும் , ஆண்டவனும் பார்த்துப்பாங்க. நமக்கு மன தைரியம் தான் முக்கியம் . அதுவும் , குழப்பமான, கலக்கமான சமயத்துல முக்கியமா வேணும் . என்ன? நான் அடுத்த ரெண்டு நாளைக்கு உன் கூடவே இருக்கேன். வீட்டுக்கு போனதும் மத்ததை யோசிப்போம். “ எனச் சந்திரன் அருகிலமர்ந்து தோளைத்தட்டி கதிரவன் தைரியம் கொடுக்க,

  “ முடியலைடா. தாங்க முடியல. பையன் எட்டாத் தூரத்தில் இருக்கான். எதிர் வீட்டு பரமசிவத்தை என் பொண்ணு வீட்டுக்கு அனுப்பி வச்சேன். வீடு பூட்டியிருக்குன்னு சொன்னான். அலைபேசியில அழைச்சாக்கூட, இணைப்பு கிடைக்கலை. மக வீட்டுக்கு, பக்கத்து வீட்டை கூப்பிட்டுக் கேட்டேன். திடீர்னு காலையில தான், கார்ல என் பொண்ணு குடும்பத்தோட கிளம்பிப் போனதா சொல்றாங்க. என் நிலைமை இப்படி ஆகணுமா “ ? மீண்டும் துவண்ட சந்திரனை, தோளில் சாய்த்து ஆசுவாசப்படுத்தினார் கதிரவன்.

   அன்று மாலையே மனைவி கண்மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட, தீவிர சிகிச்சை பிரிவு கண்காணிப்பில் மனைவி.

  இரவு ஒன்பது மணியளவில் மகள் கீதாவின் அழைப்பு.

   “ அப்பா., எதுக்கு கூப்பிட்டீங்க? இவருக்கு கம்பெனியில சின்னதா ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணினதை சஸ்பென்சா நேற்றிரவு தான் சொன்னாரு. காலையிலேயே கிளம்பி ஊட்டிக்கு வந்திட்டோம். “

  “ ஏம்மா இப்படி பொறுப்பில்லாம போன? பேசற. இங்கே அம்மா

 வாசற்படியில வழுக்கி விழுந்து...” சந்திரன் முழு விபரத்தையும் சொல்லி முடிக்க கால் மணிக்கும் கூடுதல் ஆனது.

  “ இங்கே பாருப்பா. அதான் அறுவை சிகிச்சை முடிஞ்சிடுச்சில்ல. இனி, நான் வந்து என்ன செய்ய? நாங்களே எந்த வெளி ஊருக்கும் போனதில்லை. ரொம்ப புலம்பாம அம்மாவைப் பார்த்துக்க. இவருக்கு இங்கே மூன்று நாள் மீட்டிங் வேற. என்னால, தனியா பாப்பாவைக் கூட்டிட்டு அங்கே வர முடியாது. மீட்டிங் முடிஞ்சதும், ஊருக்கு புறப்பட்டு வரேன்... “மகள் பேசிய பேச்சும் விட்டுவிட்டு கேட்க, அழைப்பைத் துண்டித்து விட்டாள் கீதா.

   அடுத்த அரை மணி நேரத்தில் பையனிடமிருந்து வாட்ஸ்-அப் அழைப்பு.   

   மீண்டும் தன் கண்ணீர்க் கதையை சந்திரன் கொட்ட,

  “ அப்பா., இப்பத்தான் கீதாஅக்கா சொல்லிச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஆனா , எங்க நிலைமை வர முடியாது சூழ்நிலை. நான் அப்புறமா ஆஸ்பத்திரி டாக்டர் கிட்ட பேசி, விபரம் கேட்டுக்கிறேன். உடனே, நீ மெடிக்ளைம் பேப்பர் தயார் பண்ணிடு . இல்லைன்னா, பில் அதிகமா தீட்டிடுவாங்க. கவனமா இரு. “ தன் நிலைமையைப் பத்திக்கூட கேட்காது , கவலைப்படாது வாரிசுகள் இருவரும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள,

  தன் குழந்தைகளைச் சிறு வயதில் வளர்க்க தாங்கள் பட்ட கஷ்டங்கள், ஒவ்வொன்றாய் நினைவில் வந்து போயின.

  எத்தனையோ தடவை காய்ச்சல் தொடங்கி , பல இக்கட்டுகளில் வாரிசுகளைக் கட்டிக் காப்பாற்றியது தொடர்ந்து நினைவுக்கு வர,

   கூடவே தானும், மனைவி கண்மணியும் கண்ட அந்த ஆசைக்கனவும் நினைவுக்கு வந்தது.

   கண்மணியின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து, அடுத்த நாள் அவள் தனி அறைக்கு வந்துவிட, சற்று ஆசுவாசமானார் சந்திரன்.

   மனைவி கண்மணிக்கு உணவு, உதவி என முழுமையாய் கதிரவனின் மனைவி கவனித்துக்கொள்ள,

  சந்திரனின் பையனின் கவனம் முழுதும் மருத்துவமனை பில்லிலேயே இருந்து விட, மகள் கீதாவும் இரண்டு நாளில் வந்து விடுவதாய்ப் பொறுப்பு துறந்தாள்.

    இதுதான் தீர்மானிக்கும் தருணம் என உணர்ந்த சந்திரன்,

  தன் நண்பன் கதிரவனை அருகில் அழைத்து, தங்கள் ஆசைக் கனவைப்பற்றிச் சொல்லி, அதனைத் தாங்கள் செயல்படுத்தப் போவதாய்க் கூற, அதிர்ந்து போய் பின் வாங்கினார் கதிரவன்.

  “ கதிரவா, இப்ப இங்கே நடக்கிறது எல்லாமே, யார், எப்படி பொறுப்பை தட்டிக்கழிக்கலாங்கிற போட்டி. நீயும், உன் மனைவியும் இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் ஆதரவு அற்றவர்களாக வீதியில கிடந்திருப்போம். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடங்கிறதுக்கு முன்னாடி, முதல் தகவலா காட்டுற மாதிரி, பசங்க ஒவ்வொரு முறையும் பேசும் போதும் பொறுப்பு துறந்த பேச்சா தான் பேசுறாங்க . எதையும் அன்பா.. அனுபவிச்சு, உரிமையா எடுத்து செய்யணும் கதிரவா. அதுல கிடைக்கிற ஆனந்தம் பெரியது..அளப்பறியது. நம்ம சமூகத்துல, எப்பக் கூட்டுக்குடும்பம் மாறிச்சோ, அழிஞ்சுச்சோ , ஒரே வாரிசுன்னு வாழ்க்கை சுருங்க்கிச்சோ அப்பவே நமக்கு ஆபத்து தொடங்கிடுச்சு . ஆனா, எனக்கு ரெண்டு வாரிசுகள். இரண்டும் எங்களுடைய கடைசி காலத்துல, எங்களை அவங்க காப்பாத்துவாங்கங்கிற நம்பிக்கை எங்களுக்கு இல்லை . அதனால.. இந்த பேப்பரைப் பிடி..” எனச் சந்திரன் நீட்ட, அதை வேகமாய்ப் படித்த கதிரவன் முகம் மாறினார்.

  “ நீ சொல்றதை நான் முழுமையாக ஒத்துக்கிறேன். ஏத்துக்கறேன். இப்ப, வாழ்க்கைக்கு பொருள் தான் அடிப்படைன்னு, எல்லோருக்கும் மனசு மாறிப்போச்சு. இப்பவுள்ள காலகட்டத்தில, இதுதான் கோளாறுக்கு காரணம்.. இது மாறணும். மாறுமா? காலம்தான் பதில் சொல்லணும். நீ எதுக்கும் உன்னுடைய மகன், மகள் கிட்ட ஆலோசனை பண்ணிடறது தான் சரின்னு நான் நினைக்கிறேன். அதுவும், உன் மனைவி உடல்நிலை இப்பத்தான் கொஞ்சம் முன்னேறியிருக்கு..” கதிரவன் தயங்கி, தயங்கி பேச,

  தன் வலது கையைத் தூக்கி , அவரின் பேச்சை நிறுத்திய சந்திரன்,

  “ இது எங்க ரெண்டு பேரோட நீண்ட நாள் கனவு. ஆசைக்கனவு. நாங்க விருப்பப்பட்டு, ஒரு குழந்தையை மூணாவதா தத்தெடுக்க நினைச்சோம். ஒரு குழந்தையை 18 வயசுக்குள்ள தத்தெடுக்க பெற்றோருக்கு கூட்டு வயது 90. 18 வயசுக்குக்கு மேல,கூட்டு வயசு நூறுதான்னு இப்பதான் தெரிய வந்தது. இதை ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு இல்லத்துல போய் விசாரிச்சப்போ சொன்னாங்க. ஆனா, எங்க ரெண்டு பேருடைய கூட்டு வயது நூறைத் தாண்டிடுச்சு. எங்களோட தத்தெடுக்கற ஆசை ,இனி நிறைவேறாது. வாழ்க்கையில் எந்த ஒரு நல்ல முடிவையும், தள்ளிப்போடக்கூடாது . தயங்காம, உடனே செயல் வடிவம் கொடுக்கணும் இது உனக்கு நான் சொல்ற ஆலோசனை. ஒரு ஆதரவற்ற குழந்தையை ஆதரவாக வளர்க்கணும்னு நினைச்ச எங்க கனவு கலைந்து போக நாங்க விரும்பல. அதனால, எங்க மொத்த சொத்தையும் ஆதரவற்றோர் இல்லமா மாற்ற விரும்பறோம். நீ உடனே நாங்கள் எழுதியபடி உயிலைத் தயார் பண்ணி, உடனே கொண்டு வா. நாங்க உள்ளவரை பசங்களோட தேவைகளை கவனிச்சுக்கிறோம். எங்களுக்குப் பின்னாடி, இந்த

உயில்ப்படி...” எனக் கண்கள் கலங்கியபடி சந்திரன் பேச்சை நிறுத்த,   

   மீண்டும் ஒரு முறை கதிரவன், அந்த கடிதத்தின் வாசகத்தைப் படிக்க ஆரம்பித்தார்.

  “ என்னுடைய சுய சம்பாத்தியதில் கட்டிய இந்த வீடு, எங்களுடைய மற்ற அசையும் , அசையாப் பொருட்களை எங்கள் இருவரது இறப்பிற்கு பின், ‘கனவு இல்லம்’ என்கிற பெயரோடு பக்கத்து தெருவில் உள்ள

’சிறார் இல்ல’ த்திற்கு அர்ப்பணிக்கிறோம் . இந்த வீட்டைத் தவிர, மற்ற பொருட்களின் பண மதிப்பை ஒரு நிதியாக மாற்றி, இந்த இல்லப் பராமரிப்புக்கு பயன்படுத்த வேண்டும். இந்த வீட்டில் தான் சிறார் இல்லம் இயங்க வேண்டும் . இதில், என் மகனுக்கும், மகளுக்கும் யாதொரு உரிமையும் இல்லை. எங்களின் முழு சம்மதம் மற்றும் முழு நினைவுடன் இதை நாங்கள் எழுதுகிறோம்..” படிக்க, படிக்க கதிரவனின் கண்களும் கலங்கிப் போயின.

   அதில், கடைசி வரியில், 

   “ இதை நிறைவேற்றும் பொறுப்பு என் நண்பனான கதிரவனுடையது” எனச் சந்திரன் தன் கண் முன்னே எழுத, மீண்டும் உருகினார் கதிரவன்.

  “ கதிரவா, இதை நாங்கள் ஒப்பிட்டதும் , நீ பத்திரமாகப் பாதுகாத்து எங்க காலத்துக்கு பின்னாடி , பசங்க கிட்ட கொடுத்துடு. இப்ப , அவங்களுக்கு எக்காரணத்தைக்கொண்டும் இது தெரிய வேண்டாம் . வாழ்நாள் பூராவும், நீயும், உன் மனைவியும் இங்கே, இப்ப செய்யற, செய்யப்போற உதவியை நாங்க மறக்கவே மாட்டோம். “ என நண்பனின் கையைப் பிடித்து சந்திரன் கதற,

   நண்பன் சந்திரனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அவனின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் உயிலைத் தயாரிக்க கிளம்பினார் கதிரவன்.

                           -௦-௦-௦



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Classics