ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 2
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 2


கதை 2
நான் இனி எனக்காக வாழ்வேன்
வசந்தி நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சாதாரண பெண். கணவன் மோகன் கனடாவில் வேலை செய்கிறான். திருமணத்தின்போது இந்தியாவில் இருந்த கம்பெனி ஆபீஸில் தான் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். முதல் குழந்தை மனோகர் பிறந்த நேரமோ என்னவோ மோகனை கனடாவிற்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் சந்தோஷம் பிடிபடவில்லை.மோகன் கனடா சென்று நான்கு ஆண்டுகள் ஆயிற்று. குழந்தை மனோகர் உடன் வசந்தி இந்தியாவில் தனியாக வாழ வேண்டிய நிலை.
ஒவ்வொரு வாரமும் மோகன் காதல் ததும்ப கடிதம் எழுதுவான். கடிதத்தைப் படித்ததும் வசந்தி தன் தனிமையை மறந்து இருப்பாள். குழந்தை மனோகரின் மீது தன் கவனம் முழுவதையும் செலுத்தி அவனை நன்கு கவனித்து வளர்த்தாள்.ஆனால் நான்கு வருடங்களுக்கு பின் மோகனின் சுபாவத்தில் சில மாறுதல்கள் தென்பட ஆரம்பித்தன.
கடிதங்களில் காதல் இல்லை; மனோகரனை கவனித்து வளர்க்க மனைவிக்கு உபதேசங்கள் நிறைந்த கடிதமாக எழுத ஆரம்பித்தான்.சில நாட்களுக்குப் பின் ஒரு கடிதத்தில் தனக்கும் கனடாவில் வாழும் ஒரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிவித்து எழுதினான். பின்னர் பணம் மட்டும் அனுப்பினான்; கடிதம் எழுதுவதில்லை.
ஆரம்பத்தில் மனமுடைந்து காணப்பட்ட வசந்தி தன்னைத்தானே தைரியப்படுத்திக் கொண்டு தனக்கென ஒரு வேலையை தேடிக்கொண்டாள். தன் சம்பாத்தியத்தில் தனக்கென எதுவும் வாங்குவதில்லை. முழுவதையும் மனோகரனுக்காக செலவிட்டு அவனை அன்புடன் வளர்த்தாள். ஆனால் மனோகர் டீன் ஏஜை எட்டியதும் தன் தந்தை கனடாவுக்கு வருகிறாயா என கேட்டதுமே ப்ளைட்டை பிடித்து சென்று விட்டான்.
இப்போது வசந்தி மனமுடையவில்லை. வாழ்க்கை அவளுக்கு நிறைய கற்றுக் கொடுத்துவிட்டது. துணிச்சலாக முடிவெடுத்தாள்.போனில்,” ஓகே, மோகன், மனோகர் இருவரும் கேட்டுக் கொள்ளுங்கள். இனி என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் யாரோ பை,பை” என்று சொல்லி உறவை முறித்துக் கொண்டாள்.
மறுநாள் காலை புதுப்பிறவி எடுத்தது போல் எழுந்த வசந்தி தனக்குப் பிடித்த புடவை அணிந்து,தனக்குப் பிடித்த காலை உணவைத் தயாரித்து நிம்மதியுடன் உண்டாள்; தனக்குப் பிடித்த எப்எம் ரேடியோவில் பாட்டு கேட்டாள். ஆபீஸ் வேலை முடிந்ததும் சாயங்காலம் வெளியே வந்து நேரே வீட்டிற்கு ஓடவில்லை.
நிதானமாக நடந்து பக்கத்திலுள்ள கோவிலுக்கு சென்றாள்.சாமி தரிசனத்திற்கு பின் அருகிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து தனக்குப் பிடித்த காய்கறிகள் வாங்கினாள். தனக்கு பிடித்த பட சிடிக்களை வாங்கினாள்.
வீட்டை அலங்கரிக்க தன் மனதுக்கு பிடித்த சுவரில் ஒட்டும் ஸ்டிக்கர்கள்,ஷோகேஸ் சாமான்கள் என வாங்கி வீடு திரும்பினாள். ஆம்,அவள் மனதில் உறுதி கொண்டாள்_ நான் இனி எனக்காக வாழ்வேன் என்று.