anuradha nazeer

Classics

5.0  

anuradha nazeer

Classics

தண்டனை

தண்டனை

4 mins
1.1K


சூர்ப்பணகை ஏதோ, ராமர் மேல் மையல் கொண்டாள். அதன் விளைவாகத் தண்டிக்கப்பட்டாள் என்பவைகளை எல்லாம் ஓர் ஓரமாகத் தூக்கி வைத்து விட்டு, சூர்ப்பணகையின் செயல்பாடுகளின் காரணங்களைச் சற்று ஆழமாகப் பார்க்கலாம். சூர்ப்பணகை பிரம்மகுலம். பிரம்மதேவரின் சாட்சாத் கொள்ளுப்பேத்தி. பிரம்மதேவரின் மகன் புலஸ்திய மகரிஷி. புலஸ்திய மகரிஷியின் மகன் விச்ரவஸ் மகரிஷி. விச்ரவஸ் மகரிஷிக்கும் கைகசிக்கும் பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன்.


விபீஷணரின் மூத்த சகோதரி சூர்ப்பணகை. ஒரு பக்கம் ராவணன், மறு பக்கம் விபீஷணர். இம்மூவருக்கும் ஏதோ ஒரு சூட்சுமமான தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது என்ன? சூர்ப்பணகையின் கணவர் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. வித்யுச்சவன் என்றும் சொல்வர். இந்தத் தம்பதியர்க்கு ‘சம்பு குமாரன்’ என ஒரு மகன் இருந்தான்.சூர்ப்பணகையின் கணவர், காலகேய குலத்தைச்சேர்ந்தவர். போர் வெறிகொண்ட ராவணன் காலகேயர்களுடன் போரில் ஈடுபட்டிருந்த நேரம். சூர்ப்பணகையின் கணவரைக் கொன்று விட்டான்.


கணவரை இழந்த சூர்ப்பணகை, ராவணன் கதையை முடித்துவிட வேண்டும் என்று அன்றே தீர்மானித்தாள். மைத்துனனைக் கொன்றாயென்றே பல்லாலே இதழதுக்கும் கொடும்பாவி, அது கொண்டு உன்னை ஒழித்து விட்டாளோ? - என்று இத்தகவலைப் பின்னால் கூறினாலும், சூர்ப்பணகையை அறிமுகப்படுத்தும் போதே...

     

‘‘நீலமாமணி நிருதர் வேந்தனை

மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் - ’’


என ராவணனை அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவள் சூர்ப்பணகை என்று அறிமுகப் படுத்துகிறார். சரி! ராவணனைக் கொல்ல வேண்டுமானால், அவனைப் போலவே, ஆற்றல் கொண்ட ஒருவன் வேண்டுமே! சொல்லப் போனால், ராவணனைவிட கொஞ்சமாவது ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். ராவணன் ஆற்றலைப் பட்டியல் இடுவதைவிட, “ராவணன் சிவபெருமானிடம் வரங்கள் பெற்றவன்” என்று ஒரே வரியில் சொல்லி விடலாம்.


அப்படிப்பட்ட ராவணனைக் கொல்ல வேண்டுமானால், தன் பிள்ளையும் சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் என எண்ணினாள் சூர்ப்பணகை. சூர்ப்பணகையின் உள்ளம் புரியாத - தெரியாத ராவணன், கணவரை இழந்த மனவருத்தத்தில் இருந்த சூர்ப்பணகையை ஆறுதல் சொல்லித்தேற்றிய ராவணன், “சகோதரி! அறியாமல் நடந்தது இது. மனதில் வைத்துக் கொள்ளாதே!” என்று வேண்டி, தண்டகாரண்யத்தில் இருந்த கரன், திரிசிரன், தூஷணன் என்பவர்களின் பாதுகாப்பில் விட்டு வைத்தான்.


அதன் விளைவாகத் தண்டகாரண்யம் சென்ற சூர்ப்பணகை, அதற்காக ராவணன் மேலுள்ள வன்மத்தை மட்டும் விடவில்லை. ராவணனைக் கொல்லும் ஆற்றலைப் பெறுவதற்காகத் தன் மகன் சம்புகுமாரனை, சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய அனுப்பினாள். தாய் சொல்லைத் தட்டாமல் தவம் செய்யப்போன சம்புகுமாரன், தர்பைக்காட்டில் அமர்ந்து கடுந்தவம் மேற்கொண்டான். நன்கு வளர்ந்த தர்பைப் புற்களின் நடுவில் உட்கார்ந்து,சம்பு குமாரன் தவம்செய்வது யாருக்கும் தெரியாது. அவன் தவம் பலனளிக்கும் நேரம். ராமர் - சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசத்திற்கு வந்தார்கள்.


புல் அறுக்கப்போன லட்சுமணன், சம்புகுமாரன் தவம் செய்வதை அறியாமல் அவன் தலையை அறுத்து விட்டான். ராமன் - சீதை, லட்சுமணன் எனும் மூவர் காட்டிற்கு வந்தி ருக்கிறார்கள் அவர்களில் ஒருவனால், தவம் சித்தியாகும் நேரத்தில் தன்மகன் கொல்லப்பட்டான் எனும் தகவலறிந்த சூர்ப்பணகை துடித்தாள். ஏற்கனவே கணவரை இழந்து துயரத்தில் இருந்தவள், ஒரே மகனை இழந்ததும் துயரத்தின் எல்லையையே அடைந்தாள்.


“இனிமேல் நான் யாருக்காக வாழவேண்டும்?” என்று துயரத்தில் இருந்த சூர்ப்பணகையின் மனம், ஒரு முடிவிற்கு வந்தது; கணவரைக் கொன்றவனையும் மகனைக் கொன்றவர்களையும் மோதவிடத் தீர்மானித்தாள். தீர்மானித்தால் போதுமா? அதற்கான செயல்களில் இறங்க வேண்டாமா? இறங்கினாள். விளைவு? அங்கம் பங்கப்பட்டாள் சூர்ப்பணகை. அவள் தூண்டுதலால் கரன், திரி சிரன், தூஷணன் ஆகியோர் மாண்டார்கள்.


சூர்ப்பணகை அங்கம் பங்கப்பட்ட இந்த இடத்திலும், மலை துமித்தென ராவணன் மணியுடை மகுடத்தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்ததோர் தன்மை - என்கிறார். அதாவது, மணிமகுடங்கள் அணிந்த ராவணனின் வதத்திற்கு, நல்லநாள் பார்த்துத் தொடங்கி வைக்கப்பட்டதைப் போல இருந்ததாம். சூர்ப்பணகை ராவண சங்காரத்திற்காகவே வந்தவள் என்பதை மறவாமல், இங்கும் பதிவு செய்கிறார்.


அங்கம் பங்கப்பட்டிருந்த சூர்ப்பணகை, ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினாள் ராவணனை நோக்கி, அங்கே ராவணனிடம் சீதையின் அழகை விரிவாக வர்ணித்து, ஏற்கனவே அழுக்குப் படிந்திருந்த ராவணன் மனதைச் சாக்கடையாக ஆக்கினாள்.


சீதையின் அழகை வர்ணிக்கத்தொடங்கிய சூர்ப்பணகை, “தாமரை மலரில் இருக்கும் லட்சுமிதேவிக்கு, இந்தச் சீதைக்குப் பணிப்பெண்ணாக இருக்கக்கூடத் தகுதி கிடையாது” என்று சொல்லி, சீதையைப்பற்றி மேலும் வர்ணிக்கத் தொடங்குகிறாள். தாமரை இருந்த தையல் சேடியாம் தரமும் அல்லள் (கம்ப ராமாயணம்) ‘‘சசிதேவியை மனைவியாக அடைந்தான் தேவேந்திரன். ஆறுமுகனின் தந்தையான சிவபெருமான் உமையை அடைந்தார். புண்டரீகாட்சனான மகாவிஷ்ணு லட்சுமியை அடைந்தார். ஆனால், நீ சீதையை அடைந்தால்... அவர்களை விட நீ தான் பெரியவன் நன்மை மிகுந்தவன் என்றும் தெய்வங்களை விடப் பெரியவனாகலாம் நன்மையடையலாம்’’ என்கிறாள் சூர்ப்பணகை.

    

இத்துடன் நிறுத்தவில்லை சூர்ப்பணகை; ‘‘சிவபெருமான் அம்பாளைத்தன் பாதிமேனியில் வைத்துக்கொண்டார். தாமரை மலரில் இருக்கும் லட்சுமிதேவியை தன் மார்பில் வைத்துக் கொண்டார் மகாவிஷ்ணு. பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டார். சீதையைக் கொண்டு வந்தால், அவளை நீ எங்கே வைத்து வாழப்போகிறாய்?’’ எனக் கேட்கிறாள்.


இவ்வாறு சீதையைப்பற்றி விவரமாக வர்ணித்து, ராவணன் மனதில் ஆசையை விளைவித்த சூர்ப்பணகை போய் விடுகிறாள். தன் திறமையின் மீது அவளுக்கு அபாரமான நம்பிக்கை தான் சொன்னபடி, ராவணன்போய் சீதையைக் கொண்டுவந்து விடுவான். அவன்கதை முடிந்து விடும் என்னும் எண்ணத்தில், வெளியேறி விடுகிறாள். ஆர்ப்பாட்டமாக வந்த சூர்ப்பணகையைப் பற்றி, அதன்பின் பேச்சே இல்லை.


ராவணன் முடிவிற்குப் பெரும் காரணமாக இருந்தவள் சூர்ப்பணகை. சரி! சூர்ப்பணகைக்கு லட்சுமணன் மூலமாக ஏன் தண்டனை கிடைக்க வேண்டும்? அவளுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பை, ராமரே ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதா? இதற்கான பதிலை, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மிகவும் அழகாக விவரிப்பார். சத்தியவிரதன் எனும் மன்னருக்கு, சங்கசூடணன் என்ற மகன் இருந்தான். அவன் ஆனந்தகுரு என்ற குருநாதரிடம் போய்க் கல்வி கற்றான். குருநாதரின் மகள் பெயர் சுமுகி.


அவள், அரசகுமாரனான சங்கசூடணனை விரும்பினாள். சங்கசூடணனோ, ‘‘அம்மா! குருநாதரின் மகளான நீ, எனக்கு சகோதரியாக ஆவாய். உன்னை விரும்பினால், சகோதரியை விரும்பிய பாவம் வரும். மறுபிறவியானாலும் சரி! நீ என் சகோதரி தான். மனதாலும் உன்னைத்தீண்ட மாட்டேன்’’ என்றான். சமயம் பார்த்திருந்த சுமுகி, ஒருநாள் சங்கசூடணன் மீது வீண்பழி சுமத்தினாள். மகள் பேச்சைக் கேட்ட ஆனந்த குரு, மன்னரிடம்போய் முறையிட்டார்.


மன்னர் கொதித்தார். ‘‘சகோதரியாகக் கருத வேண்டியவளிடம் போய், சரசமாட நினைப்பதா? என் மகனாக இருப்பதால், அரசகுமாரன் எனும் ஆணவத்தில் இம்மாபெரும் தவறைச் செய்தானா சங்கசூடணன்?’’ என்று, மகனைத் தண்டிக்கத் தீர்மானித்தார் மன்னர். சங்கசூடணனைக் கூட்டிப் போய்,தண்டனை அளித்தார்கள்.சங்கசூடணன் தன் வழிபடுதெய்வமான ஆதிசேடனிடம் முறையிட்டுப் புலம்பினான். ‘‘ஆதிசேட பகவானே! உலகையே தாங்குபவன் நீ! உனக்குத் தெரியாதா? குருநாதரின் மகளை, நான் சகோதரியாகத் தானே நினைத்தேன்’’ என்று புலம்பி முறையிட்டான்.


அவனுக்குப் பதில் அளித்தார் ஆதிசேடன். ‘‘சங்க சூடணா! நீ சொன்னதைப்போல, மறுபிறவியில் உனக்கு அவள் சகோதரியாகவே வருவாள். அப்போது நான் அவளுக்குத் தண்டனை அளிப்பேன்’’ என்றார். அதன்படியே, சுமுகி சூர்ப்பணகையாக வந்து பிறந்தாள். சங்கசூடணன் விபீஷணராக வந்து பிறந்தார். ஆதிசேடன் லட்சுமணனாக அவதரித்து சூர்ப்பணகைக்குத் தண்டனை அளித்தார்.


லட்சுமணன் மூலம் சூர்ப்பணகைக்குத் தண்டனை அளிக்கப்பட இதுவே காரணம். சூர்ப்பணகையின் திறமை அளவிட முடியாதது. எண்ணியதை முடிக்கும் ஆற்றல்,சாகசம், பேச்சுத்திறமை, எனப் பலவிதமான திறமைகளும் பெற்றவள் சூர்ப்பணகை. பெண்மையின் பெரும் ஆக்க சக்தியாக ஜொலித்திருக்க வேண்டியவள், நாச சக்தியாக மாறிப்போனாள். யாரைச் சொல்வது?


Rate this content
Log in

Similar tamil story from Classics