ஒரு ரயிலின் இரு நிழல்கள்
ஒரு ரயிலின் இரு நிழல்கள்


அழகான ரயில் பயணங்கள் பல நாள் பல இடங்களுக்கு. ஊர்மாற்றமும் பெயர்மாற்றமும் கொண்ட பிறகு அப்பாவோடும் அம்மாவோடும் நிறைய பைகளோடும் சில முறை திருச்சிக்கு.
ஆனால் இப்போது நான் மட்டும் தான். ஒவ்வொரு ரயில் பயணமும் ஒரு பசுமையான அனுபவம். இந்த பயணத்தை மேற்கொள்ள எள்ளளவும் விரும்பவே இல்லை. ரயில் வருகையின் அறிவுப்பு மனதிற்கு அச்சுறுத்தலாகத்தான் இருந்தது.
பையை மேலே வைத்துவிட்டு என் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். சலசலப்போடும் அப்பாவின் வழியனுப்புதலோடும் நுழைந்த அந்த குடும்பம் என் எதிர் இருக்கையை வந்தடைந்தது. தம்பியோடு அடம்பிடுத்துவிட்டு ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டால் அந்த பதின் பருவத்து மழலை.
இப்போதெல்லாம் பயணங்களின் போது அறிமுகம் செய்துகொள்ள யாரும் பெரிதாய் முயற்சிப்பதில்லை. இருப்பினும் வேடிக்கை பார்த்து விஷயங்களை தெரிந்து கொள்வதை யாராலும் தடுக்கமுடிவதுமில்லை.
அவளுக்குத் தான் எத்தனை சந்தோசம் இந்த பயணத்தில். ஆறும் மலையும் -அவள் கண்களில் ஆச்சரியங்களாய் பிரதிபலித்தன.
எல்லாவற்றயும் மிகுதியாக ரசிக்க முடிந்த பருவம். அதை நான் ரசிக்கிறேன் என்று சொல்வதை விட அதைக் கண்டு என்னால் பொறாமைப் படத் தான் முடிகிறது.
மேலும் அவளது குதூகலம் பெறுக , கீச்செயின் விற்பவர் எங்கள் சீட்டின் முன்பு கீச்செயின் கொத்துக்களை மாட்டினார்.
அம்மாவிடம் இரண்டு கீச்செயின்கள் வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் அம்மா , ப்ளீஸ் இது மட்டும்” என்று அம்மாவிடம் கெஞ்சினாள்.
“அதெலாம் வாங்கிக் கொடுக்காதீங்க மா” என்று கொக்கானி காட்டியபடி சிரித்தான் தம்பி.
“விடுமா பரவலா இது மட்டும் வாங்கிகிட்டும்” என்று பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்தான் அண்ணன்.
“ஒரு கீச்செயின் போதுண்ணா” ன்று சொல்லி ரோஸ் கலர் பொம்மை கீச்செயினை தரச்சொல்லி விற்பவரிடம் கேட்டாள்
இப்போது ரயிலின் வேகத்திற்கு இணையாக அவள் மனம் தடதடவென கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருப்பதை உணர முடிந்தது. ஜன்னலுக்கு வெளியே கடந்து சென்று கொண்டிருக்கும் ஊரையும், தன் உள்ளங்கையில் இருக்கும் பொம்மையையும் மாறி மாறி ரசித்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது எதையோ நினைத்து தனக்குத் தானே
ஒரு புன்சிரிப்பு வேறு.
நானும் மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். வாழ்க்கையும் ஏன் இந்த ரயில் பயணம் போல் ஏன் குறுகிய காலத்திற்கு மட்டுமே இத்தனை அற்புதமாக இருக்கிறது?
கள்ளம் கபடமற்ற மழலைப் போல் வாழ எனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது. அனால் காலம் யாரையும் அப்படிச் சுதந்திரமாக திரிய விடுவதில்லையே. எத்தனையோ கனவுகளோடு அடியெடுத்து வைத்த எனக்குக் கிடைத்தது ஏமாற்றம் தான்.
அதற்காக நான் நியாயம் கூட கேட்கவில்லை, கொஞ்சும் தனிமைக்காகத் தான் வேண்டினேன். அதைக்கூட ஆபத்தாகப் பார்க்கிறது என் குடும்பம். நம்பிக்கையை உடைத்து மனம் நோகச் செய்தவனோடு ஒட்டிக்கொள்ளச் செல்வதை நினைத்தால் இன்னும் சலிப்பாக இருக்கிறது.
என் அன்பிற்கு அவன் தகுதியானவன் இல்லை என்று தெரிந்த பிறகும், இனி அனைத்தும் அவனோடு தான், எது நடந்தாலும் அனுசரித்துப் போக வேண்டும் என்று என் அன்புக்குரியவர்கள் அறிவுறுத்துவது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.
தாரத்திற்கு தரும் அன்பில் எப்படி பங்கு வைக்க முடியும்? அந்த அன்பை முழுமையாக பெறுவதும் திரும்ப உன் வழிக்குக் கொண்டுவருவதும் உன் சாமர்த்தியம் என்று சொல்வதை என்னால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.
போலியான அன்பால் முட்டாளாக்கப்படுவதை விட, அன்பு கிடைக்காமல் இருக்கும் ஏக்கத்தையே சகித்துக் கொள்ளலாம்.
இந்த குமுறல்களுக்கிடையே ஒரு கப் காபி என்ன செய்து விட முடியும் ? குழப்பங்களையும் கோபங்களையும் சற்று நேரத்திற்கு நிச்சயம் ஒத்திவைக்க முடியும்.
சுவையேதும் தெரியவில்லை. இருப்பினும் ஜன்னலோரக் காற்றும் நா வறலும் சூடும் மனதிற்கு இதமாக இருந்தது.
எதிரொலி : இந்த அக்கா பார்ப்பதற்கு எவ்வளவு லட்சணமாக இருக்கிறார்கள். அவர் கையில் இருக்கும் வளையல்களும் விரல்களின் மோதிரமும் எத்தனை எடுப்பாக இருக்கிறது.
அவர்களால் மனதிற்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் வாங்க முடியும். அவரது பர்சில் இருந்த சில நூறு ரூபாய் நோட்டுக்களும் பத்து ரூபாய் நோட்டுக்களும் கண்ணில் பட்டது.
நானும் சீக்கிரம் பெரியவளாக வேண்டும் இது போல அழகான புடவையும் நகையும் உடுத்திக்கொண்டு மனதிற்கு பிடித்ததையெல்லாம் வாங்க வேண்டும்.