Logesh Kanakaraj

Abstract Drama Classics

4.9  

Logesh Kanakaraj

Abstract Drama Classics

இரயில் விட போலாமா..

இரயில் விட போலாமா..

6 mins
334


நன்றி- வா ரயில் விட போலாமா பாடலுக்கு...அப்பாடலை கேட்டு கொண்டிருந்தபோதே இக்கதையும் உருவானது.
மன்னிக்கவும்- ஆங்கில கலப்பிற்கு


சமூக விலகல் social distancing கடைபிடிக்க வேண்டும் என்று இன்று அரசாங்கம் அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கும் இதே நாட்டில் கொரோனாவிற்கு முன்னரும் அதன் பின்னும் சமூக விலகலை கடைபிடிக்க முடியாத இடம் ஒன்றுண்டு என்பதை அரசாங்கம் அறிந்தாலும் எதுவும் பயனில்லை..


மும்பை தாராவியில் சமூக விலகலை கடைபிடியுங்கள் என்றால் பாவம் அம்மக்கள் என்ன செய்ய முடியும். நான்கு சென்ட் நிலத்தில் இரண்டு பேர் வாழும் இதே சமூகத்தில் தான் நான்கு சென்ட் நிலத்தில் நாற்பது பேர் வாழ வேண்டிய கட்டாயமும் உண்டு என்பதை அரசாங்கம் எத்தனை கொரோனா வந்தாலும் உணர போவதில்லை.


ஆனால் நான் இங்கு பேச போகும் சமூக விலகலை கடைபிடிக்க முடியாத இடம் வேறெதுவும் இல்லை.. ரயிலின் முன்பதிவு செய்யபடாத பெட்டி- அன்ரிசர்வுடு பெட்டி.


இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 ஏப்ரல் 16 ஆம் தேதி மும்பையில் இருந்து தானேவுக்கு புறப்பட்டதாகவே வரலாறு சொல்கிறது. ஆனால் எனது முதல் ரயில் பயணம் எனது ஆறாம் வகுப்பிலோ இல்லை ஏழாம் வகுப்பிலோ என்பதாக ஞாபகம். முதல் ரயில் பயணம் சென்னைக்கு உறவில் ஒரு திருமணத்திற்காக குடும்பத்துடன்... இந்த பயணத்திற்கு முன் தினம் மிகுந்த உற்சாகத்தில் "சந்தோச பயணம் மெட்ராசு உல்லாச பயணம் நடராசு" என்று என் அண்ணன் எழுதிய கவிதை இன்னும் நினைவில்..ஏனெனில் அதற்கு முன்னர் ரயிலை ரசித்தது தளபதி படத்தில் சின்ன தாயவள் பாட்டிலும்..உயிரே படத்தில் தக்க தய்யா பாட்டிலும்.


அந்த பயணத்தில் எனக்கு இன்னும் நினைவில் இருப்பது ஒன்றுதான். நாங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்திருக்க எங்கள் அருகில் அமர்ந்து பயணம் செய்து எங்களின் பொழுதுகளை போக்கிய ரோகினி ஆன்டியை தான். அந்த பத்து மணி நேர பயணத்தில் மட்டுமே அந்த சந்திப்பு. ஆனாலும் அவரது பெயரும் முக சாயலும் இன்னும் நினைவில். சில மனிதர்கள் ஏனோ மனதில் அப்படியே தங்கி விடுகிறார்கள். சில நேரங்களில் நாம் ஏன் இம்மனிதர்களை எதேச்சையாக சந்தித்தோம் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. ஒருவேளே இப்படி ஒரு கதையில் அதை எழுதுவதற்காகவே அச்சந்திப்பு நிகழ்ந்ததோ..?


சில வாசகர்களின் பின்குரலில் இருந்து இவன் என்ன மொக்கை போடுகிறான் என்று வருவதற்குள் நான் கதைக்குள் சென்றுவிடுகிறேன்.


என் கல்லூரி நாட்களில் நாகர்கோவிலில் இருந்து என் ஊரான சத்தியமங்கலத்திற்கு செல்ல கோயம்பத்தூர் செல்லும் ஆம்னி பேருந்துகளில் செல்வதே வழக்கம். சில நேரங்களில் டிக்கெட் கிடைத்தால் ரயிலில் செல்வதும் உண்டு. இவை எல்லாம் பெரும்பாலும் நண்பர்களுடன் செல்லும்போது. நான் மட்டும் தனியாக சில வேலையாக ஊருக்கு செல்லும் சூழ்நிலை வரும்போது அன்ரிசர்வுடு பெட்டியில் பயணிப்பதும் ஒரு வாடிக்கை..


பத்து மணிநேர பயணம் அது. நாகர்கோவில் கோயம்பத்தூர் எக்ஸ்பிரஸ். என் கல்லூரியில் இருந்து நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு வரவே ஒன்றரை மணி நேரம் பிடிக்கும். அங்கு வேகமாக சாப்பிட்டுவிட்டு கோட்டாறு ரயில்வே ஸ்டேசன் செல்ல வேண்டும். வேகமாக சென்றால்தான் இருக்கை கிடைக்கும். ஒருவேளை அன்று உங்களுக்கு ஒற்றை இருக்கை கிடைத்துவிட்டால்..வழியில் திண்டுக்கல் ஸ்டேனசனிலிருந்து பழனி ஆண்டவருக்கு மொட்டை போடுவதாக வேண்டி கொள்ளலாம்.


வேகவேகமாக வந்து டிக்கெட் எடுத்து நுழைவு வாயிலுக்குள் நுழைந்தால் ப்ளாட்பாரம் 1ல் ரயில் நின்று கொண்டிருக்கும். நுழைவு வாயிலில் இருந்து அன்ரிசர்வுடு பெட்டியை அடைய இன்னொரு அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டியிருக்கும்.

எனக்கு மட்டும் அந்த நிலைமை இல்லை. உடல் ஊனமுற்றவர்களுக்கான பெட்டியும் ரயிலின் அந்தரந்தில் தான். நுழைந்தவுடன் கண்ணுக்கு படுவதோ 3tier 2tier AC பெட்டிகள்தான். இதுவே சுதந்திர இந்தியாவின் ரயில் சாதி கட்டமைப்பு முறை.

நான் ரயிலின் கட்டமைப்பை மாற்ற சொல்லவில்லை. ஆங்காங்கே இரண்டு மூன்று நுழைவு வாயில்களை வைத்தால் போதும்.


நீ என்ன புத்திசாலியா இப்படி யோசிக்கிறாய் என்று என்னை கலாய்க்க வேண்டாம். சாதாரணமாகவே ரயிலில் பயணிக்கும் எல்லோருக்கும் இந்த யோசனை வரதான் செய்யும். ஆனால் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அதிபுத்திசாலிகள் போல அவர்கள் மூளையில் இந்த யோசனைகளுக்கு இடம் இல்லை போல்.


அன்ரிசர்வுடு பெட்டியில் பயணம் செய்வதென்றால் அன்று நீங்கள் தண்ணீர் குறைவாக குடித்து கொள்ள வேண்டும். காபி டீ தவிர்த்து கொள்வது நல்லது.இரவு நீங்கள் உண்ணும் உணவில் கவனம் தேவை. ஏனெனில் ஏறி உட்கார்ந்து விட்டால் பின்னர் அவசரத்திற்கு அங்கே எதுவும் செய்ய முடியாது. பின்னர் உங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் முன்னரே வாங்கி வைத்து கொள்வது நல்லது. இல்லையென்றால் மீண்டும் அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டி வரும். அப்படியே நீங்கள் நடந்து சென்று வந்தாலும் அப்பொழுது வேறொருவர் உங்கள் சீட்டில் வாடகைக்கு வந்திருப்பார்.


இவ்வளவு மெனக்கெடல் எதற்கு..பேசாமல் புக் சேய்து ஸ்லீப்பரிலேயே போய்விடலாமே..?


ஏறி படுத்துவிட்டால் காலையில் எழுந்து போவதில் எந்த சுவாரசியமும் இருக்க போவதில்லை..அதை தானே தினமும் செய்து கொண்டிருக்கிறேன்..


டிக்கெட் 99 ரூபாய் என்றே ஞாபகம். ஆனால் பெட்டியில் டிக்கெட் எடுக்காதவர்கள் அதைவிட அதிகமாக இருக்கலாம். டிக்கெட் பரிசோதகர் இங்கு வரவா போகிறார்?.

ஒரு பயணி டிக்கெட் எடுக்காதது அரசாங்கத்திற்கு இழப்பே என்றாலும் அந்த டிக்கெட்டை விட அதிகமான விலையை அந்த பயணிகளிடமிருந்து வேறு வழியில் வசூலித்துவிடுகிறது அதிபுத்திசாலி அரசு.


என்ன புரியவில்லையா?


அப்பர் க்ளாஸ் அப்பர் மிடில் க்ளாஸ் மட்டுமா வரி கட்டுகிறார்கள் நம் நாட்டில். அதை விட அதிகமான வரியை டாஸ்மாக் செல்லும் ஒவ்வொரு சாமானியனும் கட்டுகிறானே .

எப்படி பார்த்தாலும் சுரண்டப்படுவது சாமானியன் தான்.


ரயில் புறப்பட்டு ஒரு ஒரு மணி நேரம் சற்று சத்தமில்லாமல் இருக்கும். ரயில் மட்டுமே தடக் தடக் என்று முழித்து கொண்டிருக்கும்.திருநெல்வேலி வந்துவிட்டால் அந்த பெட்டி தன்னை தயார்படுத்தி கொள்ளும். கூட்டத்தில் அந்த ரயில் பெட்டி ஒரு பக்கம் சாய்ந்திருப்பது போல் பிரம்மை ஏற்படும். உன் கால்களுக்கு அடியில் இருக்கும் இடம் மட்டும் தான் உனக்கு சொந்தம் என்ற நியதி இங்கே இந்த கூட்டத்தில் மட்டும்தான். திருநெல்வேலிக்கு பிறகு ரயிலின் தடக் தடக் சத்தம் எல்லாம் தோற்றுவிடும்.


ஒரு வயதானவர் வந்து உங்கள் ஒற்றை சீட்டின் அருகில் நின்றுவிட்டால் எப்படியும் குற்ற உணர்வு பெருக்கெடுத்து உங்கள் சீட்டின் முக்கால் பாகத்தை அவருக்கு விற்றுவிட்டு கால் பாகத்தை நீங்கள் ஆக்கிரமித்து கொள்வீர்கள். என்னை போன்று ஒல்லியாக இருப்பவார்கள் பெருமைப்பட்டு கொள்ளும் தருணம் அது மட்டுமே.


வயதான யாரும் இல்லை என்றால் கண்டிப்பாக ஒரு கண்ணனும் ஒரு கண்ணம்மாவும் உங்களது இரு பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார்கள். உங்கள் இரு கால்களுக்கு நடுவில் இருக்கும் சந்தில் இன்னமும் பால் வேறுபடுத்தபடாத இன்னொரு வாண்டு அமர்ந்துகொள்ளும். குழந்தைகளை குழந்தைகளாக பார்க்காமல் கண்ணன் கண்ணம்மா என்று வேறுபடுத்துவதே ஒருவித அபத்தம் தான்.


அதுமட்டுமல்ல மூன்றாவதாக ஒன்று இருப்பதும் இயற்கை என்று நாம் எப்போது தான் ஏற்றுக் கொள்ள போகிறோமோ...எல்லாவற்றிலும் இரண்டு தான் நமக்கு ..ஆண் பெண், சரி தவறு, நல்லது கெட்டது இவை தானே நமக்கு தெரிந்தது.


அருகில் குழந்தைகள் அமர்வது சந்தோசம் தான். ஆனால் நடுவில் இருக்கும் அந்த வாண்டை நினைத்து தான் பீதி. அதுவும் அது தீடீரென்று அமைதியாக வந்தால் இன்னமும் பீதி.


புரியவில்லையா....


எனக்கு சமீபத்தில் நடந்த சம்பவத்தை வைத்து புரிய வைக்கிறேன். எனது மகள் ( அண்ணன் மகள்) காரில் வந்து கொண்டிருக்கும் போது என் மேல் அமர்ந்து கொண்டு வந்தாள். வெகு தூரம் குஷியாக பாடி கொண்டும் ஆடி கொண்டும் வந்த அவள் தீடிரென்று அமைதி ஆனாள். நானும் தூக்கம் வரும் போல் என்று நினைத்து கொண்டேன்.வீடு வந்த பிறகு அவளை தூக்குகிறேன் என் பேண்ட் ஈரமாக இருந்தது. நான் அவளை ஒரு பார்வை பார்த்தேன்...ஒரே சிரிப்பு அவளிடமிருந்து...


இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் நான் அடைந்த பீதியை..இப்போது முருகருக்கு மொட்டை என்ன...அலகு குத்தி கொள்வதாகவே வேண்டி கொள்ளலாம். என் மானத்தை அந்த வாண்டு வாங்காமல் இருந்தால் போதும்...


இன்னொரு பக்கம் சொத்து சண்டை ஆரம்பித்திருக்கும்.."இந்த சீட்டு என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா ..உனக்கு தான் சொந்தமா" என்று ஒருவன் ஆரம்பிப்பான்...பின்னர் என்ன தமிழில் உள்ள எல்லா இன்சொற்களும் இசையாய் பறக்கும்...


இது நடந்து கொண்டிருக்க லக்கேஜ் வைப்பதற்காக மேலிருக்கும் கம்பி சீட்டில் இது எதுவும் கேட்காதது போல் ஒருவன் மல்லாக்காக படுத்திருப்பான். முதலில் யாராவது நிதானமாக மரியாதையாக அவரை எழுப்புவார்கள். அவனும் தூங்குவது போல நடிக்க அவன் தொடையில் சட் என்று ஒன்று விழும்..முழித்து கொண்டவன் முறைத்து மட்டும் பார்த்துவிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டதால் சண்டை முற்றவில்லை..


இத்தனையும் ரயிலில் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு ஜீவன் மட்டும் காதில் ஹெட்செட் மாட்டி கொண்டு கண்களை சிறிது மூடியவாறு அமர்ந்திருக்கும். பாட்டு கேட்பதற்காக நிச்சயம் இல்லை..இரைச்சலை குறைக்கவே.

பின்னர் என்ன ஏதோ ஒரு நாள் வரும் எனக்கு இச்சம்பவங்களும் வசைச் சொற்களும் சுவாரசியமாக இருக்கலாம்..தினசரி இதிலே வந்து செல்லும் ஒருவருக்கு இது இரைச்சலாக இருக்கலாம் அல்லவா?...


௧ண்டிப்பாக ஒரு பெரிய குடும்பம் ஒன்று ஏறியிருக்கும்..எப்படியும் அதில் ஓரிரு அம்மாக்களுக்கு சீட் கிடைத்துவிடும்...மீதி பேர் நின்று கொண்டு சவாரி..அந்த அம்மாக்கள் பையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக எடுக்க எடுக்க...பிரிக்க பிரிக்க..பல சரக்குகள் கைமாறும்...அப்போது வரை இருந்த வியர்வை மணம் போய் ஒரு அருமையான வாசம் வீசும்..அதை நான் கொஞ்சம் உற்று பார்த்தால் அந்த அம்மா சிரித்து கொண்டே "டேய் அந்த தம்பிக்கு கொஞ்சம் குடுறா" னு சொல்லும்..

நான் எப்படியாவது சமாளித்து சாப்பிடாமல் இருந்தே ஆக வேண்டும்..சாப்பிட்டு விட்டால் தண்ணீர் தாகம் எடுக்கும்..தண்ணீர் குடித்தால்...பின்னர் அந்த வாண்டு செய்வதை நானே செய்ய நேரலாம்..


எல்லாவற்றையும் சொல்கிறீர்களே.. அந்த பெட்டியில் அழகான இளவயது பெண்களோ ஆண்களோ இருந்தார்களா என்று வாசர்களின் பின்குரல் ஒலிக்கலாம்...கண்டிப்பாக இளவயது பெண்களும் ஆண்களும் உண்டு...ஆனால் அழகு என்று நீங்கள் எதை வைத்து கணிக்கிறீர்கள் என்று எனக்கு தெர்ந்தாலொழிய என்னால் அழகான பெண்கள் இருந்தார்களா என்ற கேள்விக்கு பதில் தர முடியாது.....

பெரும்பாலும் நிறம் முகம் உடலமைப்பு என இதை வைத்தே அழகை அளவிடுகிற இச்சமூகத்தில் வளர்க்கப்பட்ட நமக்கு..அதை தாண்டிய அழகை பற்றிய புரிதல் இருக்க வாய்ப்பு இல்லை,..

அழகு என்ற வார்த்தை ஏற்புடையது தானா...?

ஒன்றை அழகு என்று நீங்கள் குறிப்பிட்டுவிட்டால்...மற்றவை அனைத்தும் அழகில்லாதவையா..மற்றவை அனைத்தும் அசிங்கமானதா,,.?அழகு என்ற வார்த்தை படைப்பை கொச்சைபடுத்துகிறதா..?

இது ஒரு நீண்ட கேள்வி...இந்த கேள்விக்கு பதிலை இக்கதையை படித்த பிறகு தேடுங்கள்...


1 மணிக்கு மதுரை ஜங்சன். அப்போது வரை ஒரு பக்கமாக சாய்ந்திருப்பது போல இருந்த பெட்டி மதுரையின் கூட்டத்தில் சமநிலை அடையும்..கொஞ்சம் அப்போது தான் கண் அசைந்தவர்கள் எல்லாம் முழித்து கொள்வார்கள். .தூங்கா நகரத்தில் ஏறுபவர்கள் தூங்கவா போகிறார்கள்..கச்சேரி கலை கட்டுவதே மதுரைக்கு பிறகு தான்.


உங்களுக்கு அரசியலே தெரியாவிட்டாலும் ..நீங்கள் இறங்கும் போது உங்களின் அரசியல் ஞானம் அதிகரித்திருக்கும்...இல்லை ஆர்வமாவது அதிகரித்திருக்கும்..


திரைக்கு வராத பல வடிவேலுக்களும் கருணாஸ்களும் டைம்மிங் ஜோக் அடித்து கொண்டிருப்பார்கள்..


பல இளையராஜாக்கள் பாடிக் கொண்டிருப்பார்கள்...


இது எதுவுமே வராத என்னை போன்ற சிலர் கொட்டாவி விட்டு கொண்டிருப்பார்கள்..


அன்ரிசர்வுடு பெட்டியில் நீங்கள் எதை தேடி கொண்டிருக்கிறீர்களோ அது கிடைக்கலாம்,.பாட்டை தேடினால் அது கிடைக்கும்...நகைச்சுவை தேடினால் அது கிடைக்கும்...நீங்கள் நல்ல நட்பை தேடி கொண்டிருந்தால் அதுவும் கிடைக்கலாம்...உங்கள் காதலை தேடி கொண்டிருந்தால் அதுவும் கிடைக்கலாம்..

நீங்கள் யாராவது ஒருவருடைய பர்ஸை தேடினாலும் அதுவும் கிடைக்கும்....


5.30 அல்லது 6 மணிக்கு ஈரோட்டை சென்றடையும் அந்த ரயில். அப்போது அலாரம் அடிக்கிறதோ இல்லையோ,.அம்மாவின் போன்கால் வரும்..."டேய் எழுந்துத்திட்டயா..ஸ்டேசன் வந்துருச்சா...தூங்கினயா.."


"அம்மா ஸ்லீப்பர் தானே,. அப்பர் பர்த்..ஜம்முனு தூங்கிட்டேன்,...இப்போ இறங்கிட்டேன்"


தடக் தடக்,,தடக் தடக்...தடக்,.தடக்...

அந்த இரண்டு வாண்டுகள் எனக்கு கையசைத்து டாடா சொல்வதை பார்க்க முடிந்தது.....


........................................................................................

அடுத்த பயணத்தில் சந்திப்போம்Rate this content
Log in

Similar tamil story from Abstract