Logesh Kanakaraj

Abstract

4.8  

Logesh Kanakaraj

Abstract

தேவதைக் கதைகள்

தேவதைக் கதைகள்

4 mins
347


பள்ளி நினைவுகளில் நண்பர்களை விட ஆசிரியர்களே எனக்கு அதிகம் நினைவுக்கு வருகிறார்கள்.பள்ளி ஆசிரியர்களை தான் நாம் மிஸ் என்று கூப்பிட முடியும் இப்பொழுதும்..அவர்களை தான் miss செய்வதாக உணரவும் முடியும்.இது எனது அனுபவத்தில் நான் கூறுவது...வேறு சிலருக்கு வேறு அனுபவங்கள் இருக்கலாம்.


பிடிக்காத சில பாடங்கள் பிடித்து போனது பிடித்து போன ஆசிரியர்களால் தான். நான் தமிழை தாண்டி ஆங்கிலத்தில் ஓரளவாவது நாட்டம் செலுத்தியதிற்கு காரணம் எனது ஆங்கில ஆசிரியரான கலா மிஸ் தான். கணக்கு பாடம் கைவசம் ஆனது ஒன்பதாம் வகுப்பில் மீனாட்சி மிஸ்ஸை பார்த்த பிறகே..


தமிழ் தான் என்னை மேடையில் ஏற்றிய மொழி.ஆனால் இன்னும் ழகரம் உச்சரிப்பதற்கு மெனக்கெடுகிறேன்.


ஆறாம் வகுப்பு புதிய பள்ளி அது....சுதந்திர தின விழாவையொட்டி பேச்சு போட்டி...நீடு துயில் நீக்கி பாடி வந்த நிலா என்று பாரதியை பற்றியே பேச வேண்டும்.....பேச்சு போட்டி தொடங்கி விட்டது...மேடையின் பின் பகுதியில் நான் இருக்க வேண்டும்.ஆனால் நானோ பயத்தில் பார்வையாளர்கள் கூட்டத்தில் சென்று அமர்ந்துவிட்டேன். என் தமிழ் ஆசிரியர் கண்ணகி மிஸ் என்னை அங்கே வந்து சரசர வென்று கூட்டி போய் மேடையில் ஏற்றிவிட்டார்,...கை கால் உதறினாலும் ..லப்டப் சற்று அதிகமாக இருந்தது..அது மைக்கில் கேட்டு விடுமோ என்கிற அளவிற்கு....இருப்பினும் தினறாமல் பேசிவிட்டேன். அவர் சரசர வென்று என்னை இழுத்து சென்றதை நான் இன்னும் மறக்க முடியாது.


எத்தனை பேர் என்னை விட நன்றாக பேசினாலும்....நீ பேசுவது ஏனோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா என்று கூறிய புஸ்பவேனி மிஸ் மறக்க முடியாது.


தமிழ் மட்டும் சொல்லித் தரவில்லை...அதை தாண்டி நிறைய கதை பேசும் திலகவதி மிஸ் வகுப்புக்கு மாணவர்கள் எல்லோருமே காத்து கிடப்பார்கள்....அவரே நாங்கள் அன்போடு கொண்டாடிய தமிழம்மா.....எனக்கு ழகர உச்சரிப்பை ஏற்படுத்த அவர் பட்ட பாடு சொல்லி மாளாது.


எனக்கு கிண்டர் கார்டனில் முதலில் அ சொல்லி தந்தது மேரி மிஸ்... A சொல்லி தந்தது டெல்பைன் மிஸ். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இவர்களுக்கு தான் முதல் நன்றியை சொல்ல வேண்டும்.


வசந்தி மிஸ்ஸை பற்றி எழுத பக்கங்கள் பத்தாது.அவருடன் சென்ற பயணங்கள் அதிகம்.நீங்க எல்லாரும் தெய்வங்கடா என்று திட்டுவார்....அப்படி அழகாக திட்டும் ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை.....அந்த வசனத்தை கேட்பதற்காகவே ஏதேனும் சேட்டை செய்ய தோன்றும்.....அந்த வசனத்தை அவ்வப்போது நானும் இப்போது உபயோகிக்கிறேன்....நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போதிருந்தே அவர் அந்த பள்ளியில் உள்ளார்,,,ஆனால் அப்போது அவர் 9A 10A வகுப்பிற்கே பயலாஜி எடுத்து கொண்டிருந்தார்.D வகுப்பில் இருந்த எனக்கு குடுத்து வைக்கவில்லை...ஆனால் பதினொன்றாம் வகுப்பில் அவரே தாவரவியல் ஆசிரியை.


பதினொன்றாம் வகுப்பில் நான் இருந்த போது தேசிய இளம் விஞ்ஞானிகள் மாநாடு நடந்தது பூனேவில்....அதில் பங்கு பெற முதலில் மாவட்ட அளவில் தகுதி பெற்று பின்னர் மாநில அளவில் வென்று தேசிய மாநாட்டிற்கு செல்ல வேண்டும்.நாங்கள் ஒரு ஐந்து பேருக்கு அவரே ப்ராஜக்ட் கைடு.பதினொன்றாம் வகுப்பில் பாதி நாள் வகுப்பிற்கு வெளியே தான் ப்ராஜக்ட் என்று பர்மிஷன் சொல்லிவிட்டு.


தலைப்பு மூங்கிலை பற்றி....பல ஊர் சுற்றினோம் வசந்தி மிஸ்ஸோடு....வன அதிகாரியின் துணையோடு மூங்கில் அதிகம் காணப்படும் ஆசனூர் வனப்பகுதிக்கு சென்று கள ஆய்வு மறக்க முடியாத ஒன்று....மாவட்ட அளவில் முதலிடம் பெற்று...மாநில அளவில் பங்கு பெற சென்னை வண்டலூரில் உள்ள cresent கல்லூரி சென்றது ஓர் அற்புதமான அனுபவம்.மாநில அளவிலும் தகுதி பெற்று அந்த ஆய்வு கட்டுரை தேசிய மாநாட்டிற்கு சென்றதற்கு ஒரே காரணம் வசந்தி மிஸ்.


அப்பொழுது பயணித்த இடங்களில் எல்லாம் குல்பி அது இது என அவர் வாங்கி கொடுத்து கொண்டே இருப்பார்.

பதினொன்றாம் வகுப்பில் நான் வேண்டுலின் பெயரில் மொட்டை அடித்திருந்தேன்....அப்போது கிளாஸில் motile flagella என்று வசந்தி மிஸ் எடுத்து கொண்டிருந்தபோது,..motile motile என்று வசந்தி நான்கு முறை சொல்ல என் நண்பன் என் மொட்டையை பார்க்க, அதை பார்த்து அவர் முறைத்தாலும்...அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.


அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்கு போக்குவரத்தை எளிமையாக்க ரயில் திட்டம் நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கு ஆதரவாக என் பள்ளியின் சார்பிலும் சுற்றுவட்டார பள்ளிகளில் சார்பிலும் பேரணி நடைபெற்றது. ரயில் வேண்டும் ரயில் வேண்டும் என்று முழங்கிக் கொண்டு மூச்சு வாங்கி நடந்து கொண்டிருந்த எங்களுக்கு உண்மையில் அத்திட்டத்தை பற்றி எதுவும் தெரியாது.

அதை முடித்துவிட்டு வந்த பிறகு பயாலஜி வகுப்பில் வசந்தி மிஸ் தான் சற்று கோபமாக கூறினார் இந்த ரயில் திட்டம் நம் வனப்பகுதியை அழித்துவிடும்....விலங்குகளுக்கும் மனிதனுக்கும் போர் ஏற்படும்.... யானைகள் அழியும் என்று. இப்பொழுதும் ஜெயமோகனின் யானை டாக்டரை படிக்கும் போது வசந்தி மிஸ் சொன்னது தான் நினைவுக்கு வரும். மாற்றாக சிந்திக்க வேண்டும் என்று எப்போதும் உணர்த்தியவர் வசந்தி மிஸ் தான்.


பன்னிரெண்டாம் வகுப்பின் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணமாகி அவர் வேறு இடத்திற்கு சென்று விட்டார்.அவரை திருமணத்தில் தான் கடைசியாக பார்த்து.பின்னர் ப்ளஸ் 2 தேர்வு வந்த பிறகு அவருக்கு கால் செய்து பேசினேன்.பின் அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியே போய் இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று ஆகிவிட்டது,..இருந்தும் அந்த நம்பர் அப்படியே saved list ல் உள்ளது.


வசந்த குமாரி என்று முகபுத்தகத்தில் அடிக்கடி தேட செய்திருக்கிறேன்...நான் தேடிய அவர் இல்லை.

கோயம்பத்தூரிலோ...நாகர்கோவிலிலோ....நான் பஸ்ஸில் செல்லும் போதோ..ரயில் பயணத்தின் போதோ...ஹேண்ட் பேக் மற்றும் சேரியுடன் 30-40க்குள் இருக்கும் யாரையாவது தூரத்தில் இருந்து பார்க்க நேர்ந்தால் வசந்தி மிஸ்ஸாக இருக்குமோ என்று இந்த பத்து வருடங்களில் பலமுறை நினைத்ததுண்டு...


எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு ....சற்றே மீசை முளைக்க தொடங்கும் தருணம்,..ஏழாம் வகுப்பு வரை முதல் ரேங்க் தவிர வேறு எந்த ரேங்கையும் பார்த்ததில்லை நான்...எட்டாம் வகுப்பிலிருந்து முதல் ரேங்கை நான் பார்க்கவே இல்லை...முதல் ரேங்க் இரண்டாம் ரேங்க் எடுத்தவர்கள் எல்லாம் என்னை பார்த்து கொக்கானி காண்பிப்பது போல பார்த்த தருணங்கள் அவை.ஆனால் அப்போது முதல் ரேங்க் என்பதை எல்லாம் மனம் நாடவே இல்லை.மனம் ஹீரோயிஸம் விரும்பிய தருணம் அது. வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது hand cricket, book cricket, rock paper scissor விளையாடுவதில் ஒரு ஹுரோயிஸம் ஒரு பெருமிதம்....ஏனெனில் அது கோ-எட்(coeducation) பள்ளி....ஒருமுறை வரலாறு வகுப்பின் போது நான் ஆடும் போது ஆசிரியர் பார்த்து விட்டார்...பளார் என்று ஒரு அறை ....அதுவரை யாரிடமும் நான் அப்படி அடி வாங்கியதே இல்லை,..சிறிது அழுகை வந்தாலும் அடக்கிக் கொண்டு விட்டேன்...அழுதால் என் ஹுரோயிஸம் என்ன ஆவது?....நான் அப்போது பார்த்த படங்கள் இதை தான் ஹுரோயிஸம் என காண்பித்தன.அழுவது அவமானம் அதுவும் பெண்கள் முன்னிலையில் அழுதால் அவமானம் என்று தானே கற்பிக்கப்படுகிறது.அந்த அறை என்னை அந்த நாள் தூங்க விடவில்லை.உண்மையில் அந்த அறை என் மீசையில் ஏறி கொண்டிருந்த அந்த ஆண் திமிறை அடக்கியது...என்னை மாற்றியது அது.


காதுகளும் மனமும் திறந்திருந்தால் யாரிடமிருந்தும் ஏதோ ஒன்றை கற்று கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் இருந்தபோது தேர்வு தாள் திருத்தி கொடுத்த ஆங்கில ஆசிரியரை பார்த்து தேர்வு தாள் திருத்த கூட தெரியவில்லை என்று மதிப்பெண் குறைவாக இருந்த கடுப்பில் என் வகுப்பு தோழன் ஒருவன் கேட்டுவிட்டான். இதனை அறிந்து அதன் பிறகு வந்த வகுப்பாசிரியர் என்னை பார்த்து "நீங்கள் எல்லாம் பெரிய ஆள் ஆயிட்டீங்க டா" என்று சொல்ல நான் என்னை அறியாமல் தலை குனிந்தேன். அந்த நொடி அவர் சொன்னார் "பரவாயில்லை தலை குனிகிறாய் நல்லவனா இருக்க" என்று. நான் தலை குனிந்தேன் என்று என்னையும் உணர வைத்து தலை குனிவதன் அர்த்தத்தை அழகாக உணர வைத்த நொடிகள் மறக்க முடியாதவை.


இன்னும் பலவற்றை சொல்லி கொண்டே போகலாம். சிவசுப்பிரமணியம் சார், மகேஷ் சார், வாகிதா பானு மிஸ் என இன்னும் சொல்லாமல் பல ஆசிரியர்கள்..அவர்கள் காட்டிய அன்பும் அக்கறையும் திருப்பி தர முடியாத கடன்கள்.


இந்த தேவதை கதைகளை யார் யாரெல்லாம் படிக்க போகிறார்கள் என்று தெரியாது. எங்கேயாவது யார் மூலமாவது பகிரபட்டு அதை என் வசந்தி மிஸ் படித்தால் எப்படி இருக்கும். அவருக்கு மட்டுமல்ல அவரை போன்ற எல்லா வசந்தி மிஸ்களுக்கும் இந்த தேவதைக் கதைகள் சமர்ப்பணம்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract