ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 15 வேலைக்காரி இன்னைக்கு லீவு
ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 15 வேலைக்காரி இன்னைக்கு லீவு


தலைநகர் சென்னையின் புறநகர் பகுதியான ஆலப்பாக்கத்தில் மலிவான விலையில் தனி வீடு அமைந்ததால் அதை விலைக்கு வாங்கி குடும்பத்தினருடன் குடி புகுந்தாள் காவிரி. காவிரிக்கு நடுத்தர வயது; வீட்டில் ஸ்கூலுக்கு போகும் இரண்டு பிள்ளைகள்- சாகர், சுதா என்று. வீட்டு வேலைகளில் தனக்கு ஒத்தாசையாக ஒரு வேலைக்காரியை ஏற்பாடு செய்து கொண்டாள் காவிரி. வீட்டை துடைப்பது, பாத்திரம் கழுவி அடுக்கி வைப்பது, வாசல் பெருக்கி, நீர் தெளித்து, கோலம் போடுவது இவ்வேலைகளை செய்து கொடுக்க பேசியாயிற்று. ஆனால் வேலைக்காரியோ அடிக்கடி சொல்லாமல் கொள்ளாமல் லீவு எடுப்பவளாக இருந்தாள்.
காவிரி வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பங்கஜம் மாமி. காவிரியை விட வயதில் மூத்தவர் என்பது மட்டுமல்லாமல் அந்தத் தெருவில் வீடுகட்டி முதன்முதல் குடியேறியவர் என்பதால் அங்க மதிப்பும் மரியாதையும் ஆக இருப்பவர் பங்கஜமாமி. காவிரிக்கு இதனால் மட்டும் அவர் மீது பொறாமை ஏற்படுவதில்லை. தன் வீட்டில் வேலைக்காரி வராத நாட்களில் பக்கத்து பங்கஜம் மாமி வீட்டில் மட்டும் வேலைக்காரி வீட்டை சுத்தமாக தூசி தட்டி பெருக்குவதையும், பால்கனியில் அமர்ந்து பாத்திரங்களை எல்லாம் மினுமினுக்க கழுவி வைப்பதையும், வாஷிங் மெஷினிலிருந்து துவைத்த துணிகளை எடுத்து கொடியில் காயப் போடுவதையும் பார்க்கும் போதெல்லாம் அவள் மனம் பொறாமையில் வெதும்பும்.
காவிரி மும்பை நகரில் பிறந்து செல்லமாக வளர்ந்த ஒரே பெண். அவள் அம்மா அவளை வீட்டு வேலை செய்ய விடுவதில்லை. இதனால் திருமணத்திற்குப் பின் கணவருடன் சென்னையில் தனிக்குடித்தனம் வந்ததும் மிகவும் திணறித்தான் போனாள்.வேலைக்காரி ஏற்பாடு செய்து கொள்வது நடுத்தர வர்க்க குடும்பங்களில் வழக்கமாக இருப்பதால் அவளும் நல்ல வேலைக்காரியாகவே ஏற்பாடு செய்தாள்.
ஆனால் வேலைக்காரி லீவு எடுத்தால்…….. கேட்கவே வேண்டாம்…..வீடு அலங்கோலப்படும். கழுவாத பாத்திரங்கள் சிங்கிள் வழிய வழிய நிறைந்து குவிந்திருக்கும்;வீடு தூசியும் குப்பையும் ஆக இருக்கும்; காயப் போட்ட துணிகள் எடுக்கப்படாமல் கொடியிலேயே தொங்கிக்கொண்டிருக்கும்; வீட்டைச் சுற்றிலும் சருகுகள் நிறைந்து வாசல் தெளித்து கோலம் போடப்படாமல் வெறிச்சென்று இருக்கும். இதனாலேயே அவளுக்கு பங்கஜம் மாமி வீட்டை பார்த்து பார்த்து அங்கலாய்ப்பு தோன்றும்.
பண்டிகை தினங்களில் வேலைக்காரி லீவு எடுத்தால் பூஜையின்போது இறைவனிடம் தனக்காக குடும்பத்தலைவிகள்,” பட்டுப்புடவை வேண்டும்; நகை வேண்டும்;கார் வேண்டும்” என கேட்பதில்லை;”ஒரு நல்ல வேலைக்காரியை எனக்கு ஏற்பாடு செய்து கொடு, இறைவா!”என்று தான் கேட்பார்கள். இந்நிலையில் ஒருநாள் பங்கஜம் மாமி வீட்டிற்கு வேலைக்காரி வரவில்லை இது தெரிந்ததும் காவிரிக்கு ஒரே சந்தோஷம்; இன்று மாமி வீடு அலங்கோலமாக இருக்கும். அதைப் பார்க்க வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு.தன் வீட்டின் ஜன்னல் வழியாக மாமி வீட்டை நோட்டம் பார்க்க ஆரம்பித்தாள்.
அட, இது என்ன! அவள் நினைத்தது ஒன்று !.....ஆனால் காண்பது ஒன்று! அவள் திகைத்துப் போனாள். அங்கே பங்கஜம் மாமியும் அவரது பெண் பிள்ளைகளும் வேலைக்காரி இல்லை என கவலைப்படாமல் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டு ஆளுக்கொரு வேலையைப் பகிர்ந்து கொண்டு செய்துகொண்டிருந்தார்கள். மாமி வாஷிங்மெஷினில் துணிகளை போட்டுக்கொண்டிருந்தார். பெரிய பெண் வாசலை பெருக்க விளக்கமாறை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்; அவள் பின்னே அவள் தங்கைகள் இருவரும் ஒருத்தி கையில் நீர்வாளி, மற்றவள் கையில் கோலப்பொடி என சென்றார்கள்.
பங்கஜ மாமி சோபா,மேஜை என தூசி தட்ட ஆரம்பித்ததும் அவரது மகள்களில் ஒருத்தி பெருக்க,ஒருத்தி துடைக்க ஆரம்பித்தார்கள்.கடைக்குட்டி,”எல்லோருக்கும் நான் டீ போடுகிறேன்”எனச்சொல்லி சமையலறைக்குள் சென்றாள். டீ தயாரான நிலையில் அடுத்தவள் பாத்திரங்களை பால்கனியில் எடுத்துப்போட மூத்தவள் விளக்க ஆரம்பித்தாள். சூடான டீயை பருகிக் கொண்டு, சிரித்துப் பேசிக்கொண்டு துணியை காய போட்டார்கள். இறுதியில் கழுவிய பாத்திரங்களை கூடையில் எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டிற்குள் செல்லும்போது காவிரிக்கு அவர்கள் அனைவரும் வானில் பறந்து சென்று வெண்ணிலாவை கையில் ஏந்திக் கொண்டு வந்த அப்சரஸ் மாதிரி தோன்றினார்கள். எம்பிஏ படித்த காவிரிக்கு அப்போதுதான் ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘டிக்னிடி ஆஃப் லேபர்’(Dignity of Labour)என்ற வார்த்தையின் பொருள் புரிந்தது.