DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

ஞாயம்தானா? – பதினாறு

ஞாயம்தானா? – பதினாறு

2 mins
570அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


குழந்தைகள் படிக்கும் காலங்களில், பெற்றோர்கள் அவர்களுக்கு நிறைய உதவுவார்கள். புத்தகங்களுக்கு / நோட்டுப் புத்தகங்களுக்கு அட்டை போடுதல், விவரச்சீட்டு (லேபிள்) ஒட்டுதல், பெயர் எழுதுதல், வீட்டுப் பாடங்களில் உதவுதல் இதில் அடங்கும்.


இன்னும் சில பெற்றோர் பள்ளிகளில் நடக்கும் பேச்சு, கட்டுரை, பாட்டு, ஒவியம் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்து நல்ல முறையில் தங்கள் குழந்தைகளின் செயல் திறனை வெளிப் படுத்த பயிற்சி கொடுத்து உதவுவார்கள்.


என் நண்பர் ஒருவர், அவரது குழந்தைகள் படிக்கும் காலங்களில் பள்ளியில் நடக்கும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு உதவி புரிவார். தலைப்பிற்கு பொருத்தமான நிகழ்வுகள், சம்பவங்கள் போன்றவற்றை சேகரித்து அல்லது தானே கற்பனை செய்து ஆர்வமூட்டும் வகையில் அவற்றை எழுதிக் கொடுப்பார். அவைகளை எப்படி வழங்குவது என்று பயிற்சியும் கொடுப்பார்.


உதாரணமாக, எல்லா மதங்களும் கடவுளை அடைய வேறு வேறு வழிகளை சொன்னாலும் இறுதியில் நாம் அடையப்போவது ஒரே கடவுளைத்தான் என்பதை விளக்க – ‘நம் ஊரிலிருந்து சென்னை சென்றடைவது நம் நோக்கம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு, கடற்கரைச் சாலை வழியாகப் போகலாம். பழைய மகாபலிபுரம் சாலை வழியாக போகலாம். அல்லது செங்கல் பட்டு வழியாகவும் போகலாம். ஆனால் எப்படிப் போனாலும் நம் இறுதி இலக்கு சென்னையை அடைவதுதான். அதைப்போலத்தான், எல்லா மதங்களும் கடவுளை அடைய வேறு வேறு வழிகளை சொன்னாலும் இறுதியில் நாம் அடையப்போவது ஒரே கடவுளைத்தான்!’ என்று அவர் வாழும் சூழலை வைத்தே எழுதிக் கொடுப்பார்.


இதனால், இத்தகைய போட்டிகளில், அவரது குழந்தைகள் பெரும்பாலும் முதல் / இரண்டாம் பரிசுகளை பெற்று விடுவார்கள். பள்ளி சார்பாக வேறு இடங்களுக்கும் சென்று இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள பள்ளியில் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதிலும் குழந்தைகள் நல்ல நிலைகளில் வென்று வருவார்கள்.


இதனால் பள்ளியில் குழந்தைகளுக்கு நல்ல பெயர். என் நண்பரையும் பள்ளி ஆசிரியர்கள் சந்திக்கும்போது பாராட்டுவார்கள்.


ஒரு முறை பள்ளியின் ஆசிரியர்களுள் குறிப்பிட்ட ஒருவர் என் நண்பரை சந்தித்த போது வித்தியாசமான ஒரு கருத்தை வைத்திருக்கிறார்.

 

‘எல்லாம் சரிதான் சார்.. உங்கள் குழந்தைகள் பெறும் வெற்றி பாராட்டத்தக்கதுதான். ஆனால் ஒரு விஷயம் பாருங்கள். பெரும்பாலும் இதற்கு காரணம் நீங்கள்தான். இலக்கிய ஆர்வம் நிறைய உள்ள நீங்கள், போட்டிகளுக்கு தேவையானவற்றை பொருத்தமாக தேர்ந்தெடுத்து, கற்பனையை சேர்த்து சிறந்த முறையில் அளிப்பதற்கு பயிற்சியும் கொடுத்து விடுகிறீர்கள். எனவே உங்கள் குழந்தைகள் நல்ல முறையில் அதை வெளிப்படுத்தி வெல்கிறார்கள். ஆனால் உங்களுடைய உதவி இல்லாத பட்சத்தில் அவர்கள் இதே போல் செயல் பட முடியுமா? இதனால் அவர்களின் படைப்பாற்றல் குறைந்து விடாதா? எல்லாவற்றையும் அவர்களை செய்ய விட்டால்தானே அவர்களுடைய படைப்பாற்றல் உயர்ந்த நிலைக்கு செல்லும்?’ என்று கேட்டிருக்கிறார்..


என் நண்பர் யோசித்தார். அந்த ஆசிரியர் சொல்வது ஓரளவு உண்மைதான். அதில் ஞாயம் இருக்கிறது. சந்தேகமில்லை. ஆனால், மற்றொரு புறம் யோசித்தால், முழுப் பொறுப்பும் குழந்தைகள் கைகளிலேயே விட்டு விட்டால், தோல்விகளால் துவண்டு, ஆர்வம் குறைந்து போட்டிகளிலேயே கலந்து கொள்ளாமல் போகக் கூடும். பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ளாமல் போவதற்கு பெற்றோர்களின் உதவி இல்லாமை கூட ஒரு காரணமாக இருக்கலாம்.


அதன் பிறகு என் நண்பர் தன்னை மாற்றிக் கொண்டார். தலைப்புகளுக்கேற்ப, ஒரு கருத்துப் பரிமாற்றத்தில் மட்டும் அவரது குழந்தைகளோடு ஈடுபட்டு, அவர்களையே படைப்புகளை வடிவமைக்க சொல்லி அந்த வடிவங்களில் இருக்கும் பெரும் குறைகளை மட்டும் சுட்டிக் காட்டுதல், நுண்மையான புதுமையான முறைகளை அவர்களையே யோசித்து கையாளச் சொல்லுதல் போன்றவற்றோடு நிறுத்திக் கொண்டார்.நண்பரின் இந்த அனுபவத்தில் இருந்து ஒன்று புரிகிறது. ‘ஒரே அடியாக விலகி இருக்காமலும், முழு உதவியையும் பெற்றோரே ஈடுபட்டு செய்யாமலும், குழந்தைகளுக்கு வழிகாட்டியாக மட்டும் இருத்தல்’ என்பது ஒரு வேளை குழந்தைகளின் படைப்பாற்றல்கள் பெருக உதவியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Rate this content
Log in

Similar tamil story from Classics