DEENADAYALAN N

Classics

3.6  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயணத் தொடர்-இரண்டு

அமெரிக்கப் பயணத் தொடர்-இரண்டு

4 mins
23.5K



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் இரண்டு



சன்னலோர இருக்கை.. வரமா?… சாபமா?





ன் மனைவி - அடிக்கடி பெங்களூரு-கோவை ரயிலில் பிரயாணம் செய்த அனுபவம் உடையவள். அதே பழக்க தோஷத்தில் விமானத்திலும் சன்னலோர இருக்கையை விரும்பினாள். ஆனால் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் சன்னலோரம் இருக்கவில்லை.


எனவே எங்கள் இருக்கைகளுக்கு அடுத்து சன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வெளிநாட்டு பயணியிடம் தனக்கிருந்த சொற்ப ஆங்கிலப் புலமையை ‘எடுத்துவிட்டு’ சன்னலோர இருக்கையை தானமாக பெற்று – ஏதோ பேரரசன் ஒருவனிடமிருந்து பெரும் சன்மானத்தைப் பெற்ற ஒரு புலவனைப் போல - வெற்றிக் களிப்புடன் மிகுந்த பெருமையுடன் என்னை ஒரு பார்வை பார்த்தாள். அந்த நபரும் அவ்வளவு எளிதாக உடனடியாக ஏன் தன் சன்னலோர இருக்கையை தானம் வார்த்தார் என்பது அப்போதைக்கு ஆச்சரியமாக தெரிந்தாலும், பிற்பாடுதான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.


லண்டன் வரையிலான சுமார் பத்தரை மணி நேர தொடர் பயணத்தில் மணிக்கு ஒரு முறை பாத் ரூம் செல்ல எழுந்த என் மனைவி, ஒவ்வொரு முறையும் பக்கத்தில் இருந்த என்னை தாண்டி, என் பக்கத்தில் இருந்த அவரைத் தாண்டி (ஏழு கடல் தாண்டி.. ஏழு மலை தாண்டி என்பது போல்) போய் வருவற்குள் படாத பாடு பட்டுப் போனாள். ஒவ்வொரு முறையும் என்னை முறைத்துப் பார்த்து தன் கோபத்தை தணித்துக் கொண்டாள். அந்த வெளி நாட்டு பயணியோ ஓர இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருந்ததால், நினைத்த போதெல்லாம் எழுந்து, ஜாலியாக விமானத்தில் ஒரு சுற்று சுற்றி வந்து – நெட்டி முறித்து – my goodness – என்ற படியே என் மனைவியை நோக்கி ஒரு புன்னைகையை வீசி வெறுப்பேற்றி விட்டு அமரும்போது – என் மனைவி என்னைப் பார்ப்பாள். நான் கண்களை மூடிக் கொண்டு தூங்குவதைப் போல பாவனை செய்ய ஆரம்பிப்பேன்.





பீர் வாங்கலையோ பீரு பீரூ..!


விமானத்தில் அவ்வப்போது பழச்சாறூகளும், காபி/டீ தூள்கள், பால்பவுடர், சர்க்கரை, மற்றும் வண்ண வண்ண தீனிகளும் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் அளவில்லா ஆசையும் ஆர்வமும் இருந்தாலும், பிரயாணங்களில் வயிற்றை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் மிக சொற்பமாகவே அவற்றைப் பயன் படுத்தினோம்.

 

அப்போதுதான் எதிர்பாரத விதமாக அது நடந்தது!

 

(உடனே நீங்கள் ‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை..’ என்று தத்துவார்த்துவமாகவோ அல்லது கடத்தல்/விபத்து அது இது என்று கண்களை விரித்துக் கொண்டு முன் சீட்டிற்கு வந்து படிக்கவோ ஆரம்பிக்க வேண்டாம். நடை சுவாரஸ்யத்திற்காக அவ்வப்போது நான் இப்படி ஏதாவது எழுதித்தான் ஆக வேண்டும்!)


‘மேடம்.. யூ வான்ட் விஸ்கி ஆர் ரம் ஆர் வைன் ஆர் பீர்’ என்கிற சன்னமான விமானப் பெண்ணின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் பார்த்தாள் என் மனைவி. கண்களை மூடி தூங்குவதைப் போல் இருந்த நானும் துணுக்குற்று கண் திறந்தேன். (விமானத்தில் இதெல்லாம் கொடுப்பார்கள் என்று என் மகன் ‘சொல்..லவே இல்ல!’)


‘இல்லை இல்லை அவள் குடிக்க மாட்டாள்.. எனக்கு மட்டும் ஒரு பீர்ர்…’ என்று நான் சற்றே இழுக்க – என் மனைவி கோபத்துடன் என்னை முறைத்தாள். ‘சும்மா ஃப்ரீ தான்டி – காசெல்லாம் குடுக்க வேண்டியது இல்லே’ என்று நான் கெஞ்ச, ‘என்னமோ செஞ்சித் தொலைங்க’ என்று அவள் அந்தப் பக்கமாக தலையைத்திருப்பிக் கொள்ள – ஏதோ புரிந்து கொண்டதைப் போல பரிதாபமாக என்னைப் பார்த்துக் கொண்டே ஒரே ஒரு பீர் டின்னை என் கையில் திணித்து விட்டு கடந்து போனாள் விமானப் பணிப் பெண்.


‘என்னை என் மகன்கிட்டெ ஒழுங்கா கொண்டு போய் சேப்பீங்களா – இல்லே குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடப்பீங்களா‘ ஆத்திரமும் கோபமுமாக என் மனைவி முணுமுணுத்தாள்.


(அடிப்பாவி! நான் என்னைக்கிடி குடிச்சிட்டு விழுந்து கிடந்தேன்!) வில்-அம்புகளுடன் சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யூவைப் போல் – கையில் இருந்த பீர் டின்னை வைப்பதா விடுப்பதா என்று குழம்பி - ‘ஏண்டா வாங்கினோம்?’ என்று என்னை நானே நொந்து – எதிரில் இருந்த வலைப்பையில் அந்த பீர் டின்னை திணித்து விட்டு பரிதாபமாக கண்ணை மூடிக் கொண்டு தூங்குவதைப் போல மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன்!



 ‘ஙே’ விழி மாலி ஓவியம்!


பெரும்பாலும் அமெரிக்கர்களால் நிறைந்திருந்த அந்த விமானத்தில் சிற்சில இந்தியர்களும் இடையில் லண்டனில் இறங்கும் ஓரிரு பிரிடிஷ்காரர்களும் இருந்தனர். பெரும்பாலான இந்தியர்களுக்கு இது முதல் பயணமாகத்தான் இருக்க வேண்டும். கணவனைப் பார்க்கப் போகும் ஒரு பெண், குழந்தை குட்டிகளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கணவனை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் பெண். மாணவ விசாவில் படிக்க செல்லும் இளைஞர் – இளைஞிகள், கணினிப் பணி புரிய செல்லும் மென்பொருளாளர்கள்…


‘தட்.. தட்.. தட்..’


திடீரென்று யாரோ ஏதோ கதவை இடிக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் திரும்பினோம். விமான கழிவறையை உள்ளிருந்து திறக்கத் தெரியாமல் யாரோ ஒருவர் தட்டிக் கொண்டிருந்தார்.


அருகில் பார்த்தால் பகீரென்றது. என் மனைவியின் இருக்கை காலியாக இருந்தது. ‘ஐயோ ராமா.. ‘ என்று நான் விரைந்து எழுந்து சென்றுப் பார்த்தேன். ஆனால் விமானத்தில் ஒரு சிறிய நடை போய் விட்டு என் மனைவியும் கழிவறையை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் ‘உள்ளே மாட்டிக் கொண்டது என் மனைவி இல்லை’ என்று எனக்கு நிம்மதி வந்தது.


ஒருவாறாக விமானப் பெண் வந்து கதவைத் திறக்க உதவ – உள்ளிருந்து - இரண்டு மூன்று முடிகள் மட்டும் தூக்கிக் கொண்டு - அந்தக்கால மாலியின் கார்ட்டூன் படத்தை நினைவூட்டிய படி – எழுத்தாளர் சுஜாதா அடிக்கடி வர்ணிப்பதைப் போல் ‘ஙே..’ என்று முழித்துக் கொண்டு - ஒரு நடுத்தர வயது ஆசாமி வெளிறிப் போய் வெளியில் வந்தார். ‘டோரு .. டைட்டூ..’ என்று டன் கணக்கில் வழிந்தார்! (ஓ.. இதற்குப் பெயர்தான் அசடோ!)







முன்னாடி.. பின்னாடி.. இப்பொ.. அம்மாடீ..!


தென்னங்க.. கொஞ்ச பேர மட்டும் ப்ளேன்ல முன்னாடி உக்கார வெச்சி ஸ்க்ரீன் எல்லாம் போட்டு மறைச்சிருக்காங்க. அவங்க மட்டும் என்ன ஸ்பெஷல்’ என்று கேட்டாள் மனைவி.


‘அவங்கெல்லாம் பிசினஸ் க்ளாஸ்’ என்றேன்.


‘அப்படீன்னா..’


‘அப்படின்னா அவங்கெல்லாம் அதிக பணம் குடுத்து டிக்கெட் வாங்கி இருப்பாங்க. அதுக்கு தகுந்த மாதிரி அவங்க இருக்கை எல்லாம் நம்மளை விட கொஞ்சம் வசதியா இருக்கும்’ என்றேன்.


‘அப்பொ நாம’


‘நாமெல்லாம் எகானமி க்ளாஸ்’


சற்று நேர அமைதிக்குப் பின் என் மனைவி ‘களுக்’ என்று சிரித்தாள்.


‘என்னங்க இது.. நம்ம ஊர்ல சினிமா தியேட்டர்லதான் பின்னாடி உட்கார அதிகமா காசு வாங்குவான்.. இங்க எதுக்கு முன்னாடி உட்கார.. ‘ என்று என்னைப் பார்த்தாள்.


நான் தூங்கி விட்டிருந்தேன்….!!!


(நீங்களும் சற்று ஓய்வெடுங்கள்! லண்டனில் சந்திப்போம்!)







Rate this content
Log in

Similar tamil story from Classics