புதிய பயணம்
புதிய பயணம்
மத்தியான வேளையில் வான்வெளியில் கருமேகப் படை சூழ்ந்து மழைபொழியும் சூழல் நிலவிய நாள் அது.வேப்பமரத்திழையில் தவழும் மழை நீருடன் சாகசமின்றி தொட்டுச்செல்லும் காற்று மழைத்தூரல் விட்டதன் அறிகுறியை அவனுக்கு உள்ளுள் உணர்த்தியது.சூரியன் வானத்தில் தென்படாமல் மறைமுகமாகச் சாயத்தொடங்கியது.
மெதுவான தென்றலும் மிதமான குளிரும் உணர்ந்த அவன் மனம் ஊரைச்சுற்றி வரச்சொல்லி அவனை உற்சாகமூட்டியது.
தன் நண்பர்கள் கோடைகால விடுமுறையில் அலைந்து திரிந்து பெற்ற சில அனுபவங்களை தொலைபேசியில் அவனிடம் பகிர்ந்துகொள்ளும்போதெல்லாம் அவனது மனம் துரதிஷ்டவசத்தையே உணர்த்திக்காட்டியது.
அவன் அப்பா அவன் ஆசைப்பட்டபடியே புதிய சைக்கிளொன்றை அவனுக்கு வாங்கித்தந்தார்.தற்போது, அந்த சைக்கிளில் உடனடியாக ஊரைச்சுற்றி வரவே ஆசைப்பட்டான்.மழைகூடி அவனுடைய அந்த ஆசையை குளிறச்செய்திருந்தது.பல நாட்களை அம்மை வந்து வெறுப்போடு கழித்தவன் ,புதியதொரு பயணத்தை செய்ய நிறைவோடு தயாராகிவிட்டான்.
தன் சைக்கிள் சீட்டில் இருந்த மழைநீரை ஒரே அழுத்தாக துடைத்துவிட்டு மிதிக்கத்தொடங்கினான்.எதிர்க்காற்று அவனூடே தடவிக்கொண்டு வரத்தொடங்கியது.வேகமாக செல்ல அவனுக்கு மனப்பான்மை இல்லை.
அந்த மளிகை கடை பெரிய இரும்புக் கதவுகள் போடப்பட்டு புதிதாக காட்சியளித்தது.எதிரில் பாழடைந்த வீடும் மறைந்துபோய் ,புது வீட்டின் இரண்டாம் தள கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்தது."இத்தனை நாட்களில் எத்தனை மாற்றம்!" என அவன் வியந்தான்.இனி வரப்போகும் மாற்றங்களைக் காண அவன் மனம் துடித்தது.
ஆனாலும், வீட்டின் மொட்டை மாடிகளில் வந்து செல்லும் புறாக்களும் காகங்களும் குயில்களும் இன்னும் பெயர் தெரியாத பறவைகளும் முன்புபோல பறந்து பிரவேசித்துக் கொண்டுதான் இருந்தன.அங்கு குடியிருக்கும் மக்கள் டம்ப்ளர்களிலும் கிண்ணங்களிலும் தண்ணீர் வைப்பதும் காகத்துக்கு உணவு வைக்கும் பழக்கங்களும் மாறவில்லை.
அவன் செல்லும்போதெல்லாம் இடையூறு தரும் பன்னிகளும் நாய்களும் குட்டிகள் ஈண்டு கூட்டமாக இடையூறு தந்து கொண்டிருந்தன.அவைகளுக்கு குட்டிகளைத்தவிர பெரிதாக வேறெந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை.
கரடுமுரடாக பள்ளமேடுகளுடன் இருந்த அந்த ஊரின் நாற்பது அடி பிரதான சாலை ,புது ரோடு அமைக்கப்பட்டு பளீச்சிட்டுக் கொண்டிருந்தது.ஒரு மிதிக்கு நான்கடி தூரம் சக்கரம் தவழ்ந்து சென்றது."வா..,!வா..,!" என அச்சாலை அவனை அன்போடு அழைப்பது போலிருந்தது.புதிதாக ஒரு கரிக்கடை அமைக்கப்பட்டிருந்தது.பழைய சலவை கடை தற்போது நீராவி சலவை(steam ironing) கடையாக மாற்றம் கண்டுள்ளது.
அவன் அந்த மணத்தை உணர்ந்து பல நாட்களாகியிருக்கும்
. அந்த வீட்டிலேயே தயாரிக்கப்படும் பாப்கார்ன் அவன் நினைவிற்கு வந்தது. மாலை நேரத்தில் அவ்வழியே கடப்பவர்கள் அந்த காரசார மசாலா மணத்தில் அவ்வீட்டை திரும்பிப்பார்க்காமல் சென்றதில்லை. அங்கு தெருநாய்கள் அவனைப் பார்த்து குரைத்துக்கொண்டே பின்தொடர்ந்து பின்வாங்கியது.அவனைப் புது ஆளாக நினைத்திருக்கக் கூடும் என அவனுக்குப்பட்டது.
முள்செடிகள் நிறைந்த இடங்கள் யாவும் வெட்டப்பட்டு நிலம் மொட்டையாக காட்சியளித்தன.கோயிலுக்கு வலது புறத்தில் இருந்த அந்த புளியமரமும் மாயமானது போல் கவையினூடே காட்சியளித்தது.இவை யாவும் அவன் மனதில் மகிழ்சியும் வருத்த்தையும் விட விசிதிரத்தையே எழுப்பியது.பல கேள்விகள் கேட்டு புதிராக்கியது.
"இந்த ஊரில் மாற்றங்கள் நிகழத்தொடங்கியபொழுது தான் நான் வீட்டில் அடைபட்டேனா?அல்லது நான் வீட்டிலேயே அடைபட்டதனால் இவையாவும் மாற்றங்களாய் தோன்றுகிறதா?இப்படி தோன்றுவதற்கு என்ன காரணம்?நான் வீட்டில் அடைபடாதபோதெல்லாம் இம்மாறங்கள் நிகழவில்லையா?நிகழ்ந்திருந்தாலும் மாற்றமாய் தோன்றவில்லையா? மாற்றமே ஒரு மாயையா? அல்லது மாற்றத்தை மாயமாய் நான் எதிர்கொள்கிறேனா?" என மேலும் மேலும் வலுப்பட்ட கேள்விகள் எழுந்துகொண்டே இருந்தன.
தார் சாலை போட்டு முடித்திருந்தும் ஜல்லிக் கற்களை மைதானத்தில் கொட்டிவைத்திருந்தனர்.அதை மலையாக நினைத்து நான்கு சிறுவர்கள் 'ஏறி,ஏறி' 'சரிந்து சரிந்து' விளையாடிக்கொண்டிருந்தனர்.
ஓரத்தில் புதிதான சிமெண்ட் மேசையில் நான்கு அண்ணன்கள் வட்டமான மார்ப்பில் பொதித்த சிமெண்ட் சட்டத்தை சுற்றி உட்கார்ந்து 'கேரம்' விளையாடிக்கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் இவனுக்கு நெருக்கம்.
அவர் அவனை அழைத்தார். அவன் புருவத்தை இறக்கி வலது கை காட்டி மென்மையான பாவனையில் 'பரவாயில்லை' என்பது போல் செய்கை காட்டினான்.மைதானத்தின் மறுபக்கத்திலும் இதே போன்ற வடிவமைப்புடைய கட்டமைப்பு இருந்தது. அதில் இரண்டு அணில்கள் ஒன்றின் பின் ஒன்று ஓடி விளையாடிக்கொண்டிருந்தது.
வீட்டின் திசையில் செல்லத் துவங்கினான். அவன் நண்பன் வீடு பூட்டியிருந்தது அவனுக்கு தென்பட்டது.திரும்பவும் நாய்கள் விரட்டும் என சைக்கிளை நிப்பாட்டினான்.சுற்றி நான்கு நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தன. ஒரு வேலியில் இருந்து இறங்கிய ஓணான் ஒன்று 'சர சர' வென மின் கம்பத்தின் அடிவாரத்தில் இருந்த புதருக்குள் சென்று மறையமுற்பட்டபோது, வெள்ளை நாயொன்று அதை கண்டுணர்ந்து பின்னேயே விரு விருப்புடன் ஓடி அதன் நீண்ட வாலினைக் கவ்வி, சுழற்றி அதன் தலையை தரையில் அடித்து உயிர் நீங்காததால் மீண்டும் ஒரு முறை அதை குலுக்கி தரையில் அடித்துப் பிணமாக்கியது. மற்ற நாய்கள் அதனைப் பின் தொடர்ந்து புதருக்குள் ஓடி மறைந்தது.