DEENADAYALAN N

Classics

4.0  

DEENADAYALAN N

Classics

அமெரிக்கப் பயண தொடர் - ஒன்று

அமெரிக்கப் பயண தொடர் - ஒன்று

4 mins
23.6K


அன்பு வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்!


தற்போது ஒரு வித்தியாசமான படைப்பினை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். இந்தப் படைப்பு உங்களை வசீகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். காரணம் இது முழுக்க முழுக்க என் அமெரிக்கப் பயண சுவாரஸ்யமான அனுபவங்கள். அதிலும் குறிப்பாக சுமார் ஒரு வருட (இரண்டு முறை ஆறாறு மாதங்கள்) அனுவங்கள். 


நினைவில் கொள்ளுங்கள். இது கொரோனாவிற்கு வெகு முந்தைய கால அமெரிக்க அனுபவங்கள்!


என்றாலும் இந்த கொரோனா சமயத்தில் உங்கள் எண்ணங்களை மொத்தமாக ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்.


ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு அத்தியாயம் என்று, ஒரு தொடராக தொடர்ந்து பிரசுரிக்க நினைத்திருக்கிறேன்.


தங்களின் கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு உற்சாகமூட்ட வேண்டுகிறேன்.


நன்றி!


கோவை என். தீனதயாளன்  

9994291880; 7904178038

deenajamuna@yahoo.co.in






அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஒன்று


      ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்

 (கோவை என். தீனதயாளன்)


அது அந்தக் காலம்!


யிலு எப்பிடிப் போகுது தெரியுமா..?’


‘ஓ.. தெரியுமே.. அதுக்கு முன்னாடி ரெண்டு பெரிய்ய்ய்ய எருமை மாட்டைக் கட்டியிருப்பாங்க.. அதுதான் ரயிலை இழுத்துகிட்டு போகும்..!’


என் அண்ணன் தன் பதினைந்தாவது வயது வரை இப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பாராம்! அவர் பிறந்து அவர் செய்த முதல் ரயில் பிரயாணம் அவருடைய இருபத்தைந்தாவது வயதில்! இது எல்லாம் அந்தக் காலம்!


ஆனால் இன்று…!


நம் குழந்தைகள் படித்து கணினி உலகத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் விமானப் பிராயாணம் என்பதும் அயல் நாட்டுப் பயணம் என்பதும் நடுத்தர / கீழ்நடுத்தர மக்களுக்குக் கூட மிக மிக சாதாரணமான ஒன்றாகி விட்டது. நம் குழந்தைள் மட்டுமல்ல! பெற்றோர்களாகிய நம்மையும் அந்த அனுபவத்திற்கு ஆட்படுத்தி விடுகிறார்கள்! (கொரோனாவிற்கு பிறகு எப்படி இருக்கப் போகிறதோ தெரியவில்லை!)


அந்த வகையில் நானும் என் மனைவியும் மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தில் சுமார் ஐந்தரை மாதங்கள் அமெரிக்காவில் தங்கி இருக்க நேர்ந்தது. ‘வெறுமனே கண்டு களித்து உண்டு உறங்காமல் ஏதாவது உருப்படியாக செய்’ என்று என்னுள் படர்ந்திருந்த எழுத்தாளன் உத்தரவிட்டான்.


அதன் விளைவாக, அமெரிக்காவில் தங்கி இருந்த காலத்தில் இதோ இப்பொழுது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் ‘ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்’ என்பது உருவாகியது. சரி வாருங்கள். மற்ற விவரங்களைப் பார்ப்போம்.





யாரங்கே? விமானம் உயரட்டும்! வானத்தில் பறக்கட்டும்! (Take Off)









மெரிக்கப் பயணம் முடிவானவுடன் எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்டது ஒரு கலவையான உணர்வுதான் (mixed feelings). திருமணமாகி எங்கள் இளைய மகன் விமலும் இளைய மருமகள் அஸ்வினியும் புறப்பட்டு சென்று பல மாதங்கள் ஆகியிருந்த நிலை. எப்போதடா அவர்களைப் பார்ப்போம் என்று எங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த எங்கள் ஏக்கத்திற்கான பெருமருந்தாக அறுவிருந்தாக அமையப் போகிறது இந்தப் பயணம்.


அதே சமயம் சுமார் இரண்டு வருடங்களாக எங்கள் உயிரிலும் உணர்விலும் கலந்து விட்ட அன்புச் செல்வம் – ஆசைக் குருத்து – நாங்கள் உயிர் வாழ்வதற்கான உந்து சக்தி – எங்கள் அழகுப் பேரன் (மூத்த மகன் ஜெய் – மருமகள் சத்யா ஆகியோரின் குழந்தை) விவானை விட்டு சுமார் ஐந்து மாதங்கள் பிரிந்திருக்க வேண்டுமே என்கிற எங்களின் ஏக்கம் அளவிடற்கரியதாக இருந்தது.


(அப்போது எங்களுக்கு (விவான்) ஒரே ஒரு பேரன்தான். இப்போது விவான், அவ்யுக்த், ரிஷி என்று எங்களுக்கு மூன்று அழகுப் பேரன்கள் இருக்கிறார்கள்)


என்றாலும் எதார்த்தத்தை ஏற்று, இளைய மகன் – மருமகளைப் பார்க்கப் போகிறோம் என்கிற பெரும் லாபத்தை முன் நிறுத்தி – எப்படியும் ஐந்து மாதங்கள் கழிந்து பேரனின் காலடியில் தானே வந்து விழப்போகிறோம் என்கிற நியாயமான சமாதானத்தை பின் நிறுத்திக் கொண்டு பிரயாணத்திற்கான ஏற்பாடுகளை செய்யலானோம்.


அமெரிக்க கான்சுலேட் நேர் காணல் – விசா - விமான டிக்கட் - இதற்காக ஒரு சில நாட்கள் செலவளித்தோம்.


புதுத்துணிகள்/பொருள்கள் வாங்குதல் – இட்லி/ சாம்பார்/ ரசம்/ மல்லி/ மிளகாய்/ பொடிகள் - வற்றல்/வடகம் முதலிய பொருள்கள் தயார் செய்தல்,

இவைகளையெல்லம் எடை பார்த்து நான்கு ராட்சச வடிவ பெட்டிகளில் பேக்கிங் செய்தல் - இதற்காக மறு சில நாட்கள் செலவளித்தோம்.


கேஸ் இணைப்பு தற்காலிக நிறுத்தம் – இணைய இணைப்பு தற்காலிக நிறுத்தம் – ரேஷன் கார்டு தகவல் தெரிவித்தல்  என இன்னும் ஏகப்பட்ட செயல்களை முடித்தோம்.


அதன் பின் எங்கள் மூத்த மகனும் மருமகளும் பெங்களூரு ஏர்போர்ட்டில் அதிகாலை நான்கு மணிக்கு எங்களை ட்ராப் செய்தார்கள்! நாங்கள் நான்கு ராட்சச சூட்கேசுகளையும் இரண்டு சிறிய சூட்கேசுகளையும் (hand லக்கேஜ்) வண்டியில் வைத்துத் தள்ளிக்கொண்டு கம்பீரமாக விமான நிலையத்துக்குள் நுழைந்தோம்.



செக்-இன்

அமெரிக்கா போகும்போது அதை எடுத்துப் போகாதீர்கள், இதை எடுத்துப் போகாதீர்கள் என்று பல பொருள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நிறைய சொல்லி இருந்தார்கள். குறிப்பிட்ட எடைக்கு மேல் இருந்தால் குப்பையில் போட்டு விடுவார்கள் என்றும் எச்சரித்திருந்தார்கள். நாங்களும் எங்களுக்கு தெரிந்த வரையில் தவிர்க்க வேண்டிய பொருள்களைத் தவிர்த்து விட்டோம். குறிப்பிட்ட எடைக்கு ஓரிரண்டு கிலோ குறைவாகவே பேக் செய்திருந்தோம். எனவே எந்த வித பிரச்சினையும் இல்லாமல் எங்கள் லக்கேஜுகளை செக்-இன் செய்ய முடிந்தது.


செக்-இன் என்பது நமது பெரும் எடையுள்ள சூட் கேஸ் மற்றும் பைகளை விமான நிலையத்தில் நாம் பயணம் மேற்கொள்ளவிருக்கும் விமான அலுவலகத்தாரிடம் ஒப்படைப்பதாகும். மொத்த எடை ஒரு ஆளுக்கு (23+23=) 46 கிலோவிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


(குறிப்பு: இந்த பயணத்தில் குறிப்பிடப்படும் புள்ளி விவரங்கள் பயணம் மேற்கொண்ட போது இருந்தவை. இந்த புள்ளி விவரங்களில் தற்போது ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே சரியான புள்ளி விவரங்கள் தேவைப்படுவோர் அதை அந்த சமயத்தில் சேகரித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்படும் எல்லா புள்ளி விவரங்களுக்கும் இது பொருந்தும்)


அதன் பிறகு அந்த லக்கேஜுகளை நாம் எந்த நாட்டிற்கு போகிறோமோ அந்த நாட்டு விமான நிலையத்தில்தான் பெற்றுக் கொள்ள முடியும். அந்த லக்கேஜுகள் நாம் பயணம் செய்யும் விமானத்திலேயே அதற்கென உள்ள இடத்தில் வைக்கப் பட்டு எடுத்து வந்து விடுவார்கள். இதைத் தவிர நபர் ஒன்றுக்கு (ஏழு கிலோ எடைக்குக் கீழ் உள்ள) ஒரு சிறு கைப்பயை வைத்துக் கொள்ளவும் அனுமதிப்பார்கள். இதை ஹேண்ட் லக்கேஜ் என்பார்கள்.


தொடர்ந்து போர்டிங் பாஸ் (விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு),  செக்யூரிட்டி செக் (நம்மை, நம் கைப்பையை சோதனை இடுவது) போன்ற நடைமுறைகளை முடித்து காலை ஏழு மணிக்கு ‘ப்ரிட்டிஷ் ஏர்வேஸ்’ விமானத்தில் ஏறினோம்.


பெங்களூரிலிருந்து லண்டன் செல்வது. லண்டனில் மாற்று விமானம் பிடித்து நியூயார்க் செல்வது. நியூயார்க்கில் நான்கு நாட்கள் தங்கி சுற்றிப் பார்ப்பது. பின் அங்கிருந்து எங்கள் மகன் வாசம் செய்யும் லாஸ்வேகாஸ்

அடைவது இதுதான் எங்கள் பிரயாணத்திட்டம்!


(அமெரிக்கா செல்பவர்கள் எதை வேண்டுமானாலும் பார்க்காமல் வருவார்கள்.. ஆனால்.. லாஸ்வேகாஸைப் பார்க்காமல் வரவே மாட்டார்கள்! அது பற்றி நிறைய பார்க்கத்தானே போகிறோம்!)





Rate this content
Log in

Similar tamil story from Classics