மதுரை முரளி

Classics Inspirational Others

5  

மதுரை முரளி

Classics Inspirational Others

பேச்சு Vs மூச்சு

பேச்சு Vs மூச்சு

15 mins
475


                  “ பேச்சு Vs மூச்சு” -- சிறுகதை 

                                                           -- மதுரை முரளி 

           “மாதவா”  இருபாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நகரின் வெளி விளிம்பில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து இருந்தது. 

          கல்லூரி தொடங்கிய காலத்தில் விவசாய கல்லூரி களையில் முற்றிலும் பச்சை பசேல் என விவசாய பூமி .

         எப்போதுமே மண் மனம் பரப்பும் சுற்றுச்சூழலாய் ஓர் அழகிய நெல்லை சுந்தரபாண்டியபுரம்.  

        இப்போது கான்கிரீட் கட்டிடங்களில் அடித்தளமாய் விவசாய நிலங்கள் அமுங்கி போய் அழுகிப்போனது.

       வாசலில் சிறிய’ ப்ளக்ஸ்’ அறிவிப்பு. கல்லூரி ஆண்டு விழா அழைப்பிதழ்.     

       நிகழ்ச்சி நிழல்கள் பட்டியலில் இன்றைய நிகழ்வின் தலைப்பு              

                           ‘தன்னம்பிக்கை ஓர் வரம்’ 

 உரை:  நட்சத்திரப பேச்சாளர் ஸ்ரீதரன். அவர் போட்டோவில் பலமான சிரிப்பில் ஓரமாய்ப் பேனரைஅலங்கரிக்க,

        தன்னுடைய போட்டோவைத் தன் நண்பன் விவேகனுக்கு காட்டியவனாய் காரில் கல்லூரிக்குள் நுழைந்தான் ஸ்ரீதரன்.

      “  டேய் விவேகா, பாத்தியாடா?  ஒரு பேச்சாளரான எனக்கு எவ்வளவு வரவேற்பு பார்த்தியா?  ஆனா,  பாவம்டா நீ !  பல வருஷங்களா எழுதியும்,  கொஞ்சம்  கூட பிரபலமாகலேயே..நீ. “ நக்கலாய்க் கூறினான்.

       “ உண்மைதான் . பொதுவா,  நம்ம நாட்டுல பேச்சாளர்களுக்கு கிடைக்கிற மதிப்பும் அங்கீகாரமும்  ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கிறது இல்லை. இது தான்  நம்ம சமூகத்தில ஒரு  வேதனையான விஷயம்.  உன்னுடைய இன்றைய நிகழ்வுக்கு,  என்னுடைய உளமாற வாழ்த்துக்கள்  “ சொன்ன விவேகன் தன் நண்பனின் கையைக் குலுக்க, 

      ‘ சட்’டென நண்பனை அணைத்துக்கொண்ட ஸ்ரீதரன்,

     “  அதனால்தான் சொல்றேன் . நீயும் மெல்ல, மெல்ல பேச்சாளனா பரிமாற்றம் அடையணும் . குறிப்பா,  உன் வாழ்க்கையின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய . என்ன சரியா? “  கேள்விக்கணையோடு நண்பனைப் பார்க்க,

    “  முயற்சிக்கிறேன்.  இருந்தாலும் நான் எப்போதுமே எழுத்தாளன் தான். உன்னையப பொறுத்த வரைக்கும் உன்னுடைய பெயரிலேயே ‘ஸ்ரீ’ அதான் லட்சுமி தேவி தங்கியிருக்கா.”  என நகைச்சுவையாய்க் கூறிச் சிரிக்க,     

    “ அடப்பாவி! விட்டால் எனக்கே போட்டியா அதுவும் இங்கேயே இந்த கல்லூரியிலேயே மேடையேறிடுவே போல..”  என ஸ்ரீதரன் நண்பன் விவேகனை தட்டிக் கொடுக்க,

      ஸ்ரீதரின் கைகளைப் பற்றிய விவேகன்,

    “ இதோ கல்லூரி பேச்சுஅரங்கம் வந்திடுச்சு . வாசல்லயே அழைப்பு தட்டுகளோட மாணவ,  மாணவிகள் . இனி,  உன் பேச்சுக்கச்சேரியை தொடங்கலாம். "என்றவன் முதலில் ஸ்ரீதரன் காரில் இருந்து இறங்க காத்திருக்க,

      பலத்த வரவேற்பு,  கைதட்டல்,  மாலை மரியாதைகளுக்கிடையே,  ஸ்ரீதரன் மேடையை நோக்கி நடக்க,

     பின்னால் விவேகன்  பின்தங்கிப் போனான்.

     விழா மேடையின் உற்சாக வரவேற்பு அறிவிப்புகள் ‘நட்சத்திர பேச்சாளர் ஸ்ரீதரன் அவர்களே, வருக! வருக!’ என முழங்க,

     கம்பீரமாய் மேடை ஏறி அங்கிருந்த மூன்று இருக்கைகளின் மத்தியில் நடுநாயகமாய் அமர்ந்தான் ஸ்ரீதரன்.

    அடுத்தடுத்து,  மாலை மற்றும் பொன்னாடை மரியாதைகள் முடிந்து விழா தொடங்க,

     தொண்டையைச் செருமிக் கொண்டு மேடையில் மைக்கைப் பிடித்த ஸ்ரீதரின் கண்கள் நண்பன் விவேகனை தேடி, 

    ஆறாம் வரிசையில் அமர்ந்திருந்தவனை அடையாளம் கண்டு விட,  அவனை கையசைப்பில் மேடைக்கு அழைத்தான்.

    விவேகன் சங்கடமாய் எழுந்து மறுக்க,  விழா அமைப்பாளர்களில் ஒரு மாணவன் ஓடிச் சென்று, விவேகனை மேடைக்கு முன்னால் அழைத்து வந்தான் .

   எனினும்,  விவேகன் மேடை இருக்கையை மறுத்து,  முன் வரிசையில் அமர்ந்து விட,

   ஒரு மகிழ்ச்சி சிரிப்புடன் பேச்சை தொடங்கினான் ஸ்ரீதரன்.    

   “ அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.  எனக்கு வாழ்வளித்த இறைவனுக்கும்,  எனது பெற்றோருக்கும் எனது வணக்கங்கள்.  கூடவே , இந்த கல்லூரி நிர்வாகத்திற்கும். இளைய பாரதமே !  வாழ்க்கையில் நீங்கள் என்றும் வணங்க வேண்டியது முதலில் பெற்றோர்களை தான்.  எதற்காக?  எல்லா வளங்களையும் பெற.  சரியா? “  கேள்வியைச் சபையை நோக்கி வீச,

     “  சரி.. “  பதிலில் அரங்கம் அதிர்ந்தது .

    தொடர்ந்து,  பல தன்னம்பிக்கை வாசகங்களை முழங்கியவன்,

   “  உங்கள் அனைவருக்கும் நமது முன்னாள் ஜனாதிபதி டாக்டர். கலாம் ஐயாவின் வாசகம் தெரியுமே..

    ‘ நமது பிறப்பு சம்பவமாக இருக்கலாம்.  ஆனால்,  இறப்பு ஓர்...”   சற்று நிறுத்தி சபையை நோக்கி கையைச சுழற்ற,

    “  சரித்திரமாக”  பதிலுடன்,  பலத்த கைதட்டல்கள் மீண்டும்.

    “  பொதுவாக,  மூன்று விதமான வாழ்க்கை. மூன்று விதமான  மனிதர்கள்... என் பார்வையில்.

     முதலாவதாக – “ வந்தார்கள்.. சென்றார்கள்” -- இவர்கள் சாமானியர்கள்.    

     இரண்டாவதாக --  “ வந்தார்கள்.. வென்றார்கள்.. சென்றார்கள்” -- இவர்கள் சாதனையாளர்கள்.

   மூன்றாவதாக--  “  வந்தார்கள்.. வென்றார்கள்.. நின்றார்கள்”  ஏன்?.. நிலைத்தார்கள்... பூமியில் . இவர்களே சரித்திரமானவர்கள்.

    மீண்டும் கைத்தட்டல்களும்,  விசில் சத்தங்களும் அரங்கம் முழுதும் வெடித்து எதிரொலிக்க,

    “ இனியவர்களே,  உங்களின் வாய், மெய் மொழிக்கு மிக்க நன்றி.  இதை நான் கூறியது வெறும் கைதட்டலுக்காக அல்ல!  இம்மூன்றில் எதுவாய் மாற உங்களுக்கு எண்ணம் ? “

    “மூன்றாவதாய்..”  முத்தாய் உதிர்த்தனர் சிலர்.

    வெகு வேகமாய் எழுந்த கல்லூரி தமிழ்த்துறை தலைவர்,

  “ சத்தமாய்ச் சொல்லுங்கள்..மூன்றாவதாய்.”  என முழக்கமிட , 

   அரங்கத்தில் எழுந்த உற்சாகமான உறுதியில்,  மின்சாரம் பாய்ந்த உணர்வு..அதிர்வு அனைவர் மத்தியிலும்.

   “  மிக்க மகிழ்ச்சி . நம் வாழ்வில் மிக முக்கியமான வித்தியாசம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். 

வாழ்க்கையில்

தேவை வேறு..

தேடல் வேறு.

தேவை என்பது

இலக்கு.

தேடல் என்பது

இலட்சியம்.

       இம்முறை எழுத்தாளர் நண்பன் விவேகன் எழுந்து நின்று, பலமாய்க் கைதட்ட ,

      நண்பனை மேடையிலிருந்து வணங்கிய ஸ்ரீதரன்,

     “  என் இனிய வாழ்நாள் நண்பன் விவேகன்.  பிரபல எழுத்தாளர்”  எனச் சுட்டிக்காட்டி அறிவிக்க,

     மேடைக்கு வர, இரண்டாம் முறை அழைப்பு வந்தது தமிழ் துறை தலையிடமிருந்து.. இம்முறை.

     மீண்டும் நாகரீகமாய் தலை மற்றும் கை அசைத்து மறுத்துவிட்டான் விவேகன்.

    கிட்டத்தட்ட ஒரு மணி நேர ஸ்ரீதரின் உரை நிறைவு பெற,

    வீட்டை நோக்கி மீண்டும் கார் பயணம்.

   “  டேய் விவேகா,  எப்படி இருந்தது எனது உரை? “  எனப் பெருமிதமாய் வினவ, 

    “ எப்போதுமே புதுசா ஒரு முத்திரை வாசகத்தை பதிச்சிடறேயப்பா! பாராட்டுக்கள். ம்., இதோ எங்க வீட்டு முட்டுச்சந்து வந்திடுச்சு. உன் கார் இனியும் போனா,  திரும்ப முடியாது”  என அவசரமாய் ஸ்ரீதரனை எச்சரித்து காரை நிறுத்த சொல்ல,

    'பட்' டென பிரேக் அடித்த ஸ்ரீதரின் பார்வையில் நேராய் ஒரு ஓட்டு வீடு.. பல குடித்தனங்களுக்கு நடுவில் பட்டது.

    “ஓ.கே.டா.  நான் வரேன் .  எப்படித்தான் இங்கே சமாளிக்கிறேயோ? ம்.,”  என மூக்கைப் பிடித்தவனாய் கதவு கண்ணாடியை வேகமாக ஏற்றிக் காரைக் கிளப்ப,

     வறட்சியாய்ச் சிரித்துவிட்டு , வாசலில் ஓடிய சாக்கடையைத் தாண்டி வீட்டினுள் நுழைந்தான் விவேகன்.

     மூன்று பத்திகளைக்ளைக் கொண்ட அந்த ஓட்டு வீடு, எட்டு குடித்தனங்களுக்கு இடையே நடுவில் இருந்தது. வீட்டில் நுழைந்ததும்,  ஓர் வராண்டா.  அடுத்து ஹால் மற்றும் கடைசியாக சமையலறை.  மொத்த வீட்டின் பரப்பே 200 சதுர அடி தான் . அதுவும்,  சமையல் அறையின் நிலைதான் பரிதாபத்துக்குரியது. 

     பாதியறை முழுவதும் ஆறு குடங்களில் மாநகராட்சி குடிநீர்.  இரண்டு மூன்று நாட்களுக்கான சேமிப்பு.. இப்படி.

   “  என்ன சுசிலா ரொம்ப யோசனையா இருக்கே?  “ என்றவனாய் விவேகன்.

    “ உங்க நண்பர் ஸ்ரீதரோட, ஏதோ கல்லூரி விழான்னு கிளம்பிப் போனீங்க. அலைபேசியில கூப்பிட்டா,  பதிலில்லை .”  மனைவி சற்றுச் சோகமாய் .

    “ ஒரு நிகழ்ச்சிக்கு நடுவில,  அலைபேசியில பேசறது முறையில்லை.  எதுக்கு கூப்பிட்ட சுசி ?”

    “ முதல் விஷயம்  வீட்ல சமைக்க சுத்தமா அரிசி இல்லை.  ரேஷன்ல வாங்கலாம்னு நினைச்சா கையில காசு இல்லை.  இந்த நிலைமையில..”   ‘குபுக்’ கெனக் கண்ணில் பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், சேலைத் தலைப்பால் முகத்தை மறைத்தாள் சுசீலா.

    “  ஓ.. கையில ஒரே ஒரு நூறு ரூபாய் இருந்துச்சு.  அவசரத்தில, உங்கிட்ட கொடுக்க மறந்துட்டேன்.. சுசி . மன்னிச்சுக்க  “ மனைவியின் முந்தானையை விடுத்து, அவள் கண்களைத் துடைத்து பாசமாய்க் கட்டி அணைத்தான் விவேகன்.

    “ சரி, சரி.  பக்கத்து கடையில நூடுல்ஸ் வாங்கிட்டு வாங்க.  நாளைக்கு ரேசனுக்கு போய்க்கலாம். ஆனா, ஒண்ணு.  உங்க நண்பர் பிரபல பேச்சாளராக இருந்தும்,  உங்களுக்கு உதவின்னு..” 

    “ அடடே! அவன் பலமுறை கேட்டும்,  நான் தான் மறுத்திட்டேன் . நமக்கு உரிமை இல்லாததை,  உரிமை கோருவதும்,  உரிமையுள்ளதை உதறி தள்ளுவதும் பெரும் தவறு.  இது என் கொள்கை.  என் திறமைக்கேற்ற அங்கீகாரம் நிச்சயம் என்னைத் தேடி வரும். காலம் கனியும். “  உத்திரவாதமாய் விவேகன்.

     “ நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.  இப்படி வறட்டு பிடிவாதத்தினால தான் பாதி எழுத்தாளர்கள் பாதி பட்டினியாக் கிடக்கறாங்க.”

            ‘ மரக்கிளை முறிந்து விழுந்து வீணாவதை விட,

              வளைந்து கொடுத்து வாழ்வதே புத்திசாலித்தனம்’

    இது அனைவருக்கும் பொருந்தும். “

   “  அப்படி போடு சக்கரைக்கட்டி . இனிமேல,  உன்கிட்ட நிறையப் பேசினாலே எனக்குக் கருத்தும், கருவும் கிடைக்கும் போல !” வேதனையாய்ச சிரித்தான் விவேகன். 

    “ முடியலைங்க.  என்னால சிரிக்க முடியல.பசி அடிவயிற்றைக் கிள்ளுது. ” எனச் சுசிலா பசியில் சுருண்டு , மயங்கிப் போனாள். 

    “  இதோ நிமிஷத்துல வரேன் “ என்றவனாய்ப் பக்கத்து கடைக்கு ஓடினான் விவேகமன்.

     பத்து நிமிட இடைவெளியில் வீட்டுக்கு திரும்பிய விவேகன், 

    அடுத்து சில நிமிட செலவழிப்புக்குப் பின்.  மனைவி சுசீலாவின் முதுகைத் தொட்டு எழுப்ப,

    “  ஹ..ஹ, எ.. என்னங்க?”  ஈனஸ்வரத்தில் பேசியவளாய்ப் பதறி எழுந்தாள்.    

     “ இந்தாம்மா நூடுல்ஸ். சாப்பிடு  “ எனச்  சாப்பாட்டு தட்டை நீட்டினான்.    

     “ என்னங்க,  நீங்க போய்...எதுக்கு ? “  மேலே அவளை பேச விடாது வாயில் ஊட்டவும் முனைந்தான்.

     “  விடுங்க. எனக்கு  வெட்கமாயிருக்கு.  நீங்களும் உட்காருங்க. “  கணவரின் கைப்பிடித்து இழுக்க,

        விவேகனும் அருகில்  அமர்ந்து கொண்டான். 

      “ஹ., என்னங்க மறந்தே போயிட்டேன்.  உங்க பிஸ்கட் கம்பெனியிலிருந்து லைன் பையன் வந்தான்.  சூப்பர்வைசர்.. அதான் உங்களை முதலாளி ஏன் வரலைன்னு ? கேட்டு கூட்டிட்டு வரச் சொன்னாராம் . “

     “  ஆமா,  பெரிய ஐ.டி.  கம்பெனி பாரு.  ஒரே ஒரு நாள் போகலைன்னா  இப்படியா ஆளை விட்டு தேடறது?  என்னிக்குத்தான் என் நிலைமை மாறுமோ? “  சோகமாய் விவேகன்.

    “  அது இல்லைங்க.  உங்க அலைபேசிய வேற அணைச்சு வச்சிட்டீங்களே. வீட்டுக்கு வந்ததும்,  உடனே உங்களைப் பேச சொன்னாராம்.  சீக்கிரம் பேசுங்க.அவர்  கோபப்படப்போறாரு. “  கவலையாய்ச் சுசிலா.

   “  ஆமா.,  நான் ஒண்ணும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கல . எனக்கு நாள் ஒன்றுக்கு வெறும் 400 ரூபாய் சம்பளம். “ சலிப்புடன் முதலாளியை  அலைபேசியில் அழைத்தவன்,

   “  வணக்கம் ஐயா.  அவசர வேலையாயிடுச்சு அதான்,இன்னிக்கு வேலைக்கு  வர முடியல, மன்னிச்சிடுங்க. “

   “  சரி,  சரி விவேகா. நான் கூப்பிட்டது முக்கியமா.. அடுத்த வாரம் நம்ம ‘மாவட்ட நூலகவிழா ’ . அதுக்கு பெரிய புத்தக பதிப்பாளர்’ மல்லிகை மன்னன்’ வர்றாரு. அவர்கிட்ட , நீ எழுதி இருக்கிற ரெண்டு, மூணு கதைகளை காண்பி. பிரதிகளைக் கையில கொடு. அவருக்குத்  திரையுலக தொடர்புகள் அதிகம். நம்ம நூலகரே இந்தத் தகவலை என்கிட்ட சொன்னாரு.  உன்னையும் தான் நூலகருக்கு நல்லா தெரியுமே. அவசியம் வரச் சொன்னாரூ . ”

    “  ரொம்ப நன்றி ஐயா.  நிச்சயமா நேர்ல போய் பார்க்கிறேன்.  வாழ்க்கைல வாய்ப்பு எந்த வாசல்வழி  வரும்னு யாருக்குத் தெரியும்? “ பேசி முடிக்க,

    “  என்னங்க,  நல்லா முயற்சி பண்ணுங்க.  நீங்க இப்படி இராப்பகலா எழுதியும் பிரபலம் ஆக முடியலை. “ கணவனின் கன்னத்தைப் பிடித்து சுசீலா கெஞ்ச,

    “  எனக்காக இல்லாட்டியும்,   என் சக்கரைக்கட்டிக்காவது விடாமல் நான் போராடுவேன். என்ன? “  உற்சாகமாய்ப் பதில் சொல்லிவிட்டு உறங்கப் போனான் ஸ்ரீதரன்.

      நாட்களெல்லாம் மணிக்கணக்கில் ஓடி , மூன்று மாதம் பறந்து போயின     

      விவேகனுக்கு நண்பன் ஸ்ரீதரிடம் ஒரு மாற்றம் தெரிந்தது.  முன்பு போல் தன்னை விழாவிற்கு அழைக்காமல்,   தன்னை அவன்  தவிர்ப்பதாய் உணர்ந்தான். 

      இதற்கிடையில் நூலக விழா மூலம் பழக்கமான ‘மல்லிகை’ மன்னன் இவனது கதைகளால் அதிகம் கவரப்பட்டு,  இவனது முக்கியமான  கதைகளை தொகுப்பாய் வெளியிட,  இவனிடம் உறுதிமொழி வாங்கி ராயல்டியும் தரத் தொடங்க.,

      விவேகனுக்கும் ‘விடியல்’ கிடைத்தது.

      தொடர்ந்து, புதுப்படங்களின் கதை - வசனகர்த்தா வேலையும் சேர,  வெகு வேகமாய் பரபரப்பான விவேகன், 

      மனைவி சுசீலாவின் ஆசைப்படி புது வீடு மாறி,  வளர்ச்சி ஏணிப்படிகளில் 'படபட' வெனத் தாவி  ஏறினான். 

     மீண்டும் நண்பன் ஸ்ரீதரன் நினைவு வர,  அலைபேசியில் நண்பனை அழைத்தவனுக்கு,  சரியான பதில் கிடைக்காது போகவே, உள்ளத்தளவில் கொதித்துப் போனான் விவேகன்.

    “  சுசீலா, இந்த ஸ்ரீதரன்  ஏன் இப்படி மாறிட்டான்?  என்னுடைய இந்த வளர்ச்சி அவனுக்கு பிடிக்கலையோ? “

    “  தெரியலைங்க.  எனக்கும் அப்படி ஒரு ஐயம் உண்டு . கொஞ்ச நாளா அவர் உங்ககிட்டயிருந்து விலகிப் போறமாதிரியிருக்கு.  உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?  இப்பதான் தொலைக்காட்சி செய்தி பார்த்தேன்.  அவருக்கு இவ்வருடம், தமிழக அரசு பட்டம் வழங்கி கௌரவம் செய்யப் போறதா அரசாங்க அறிவிப்பு. “

    “ ஆஹா.,அரசு  அங்கீகாரம்னா சும்மாவா?  உடனே,  நான் நேர்ல போய் அவனைப் பாராட்டிப் பேசணும்.  நீயும் வாயேன்” 

    “ ஏன், நீங்க இன்னும்  மாறாமலேயே இருக்கீங்க? சொன்னா கேக்க மாட்டீங்க.  சூழ்நிலைக்கு தக்கவாறு நாம நடக்கலைன்னா, இந்தச் சமுகத்தில சுதாரிப்பில்லாதவனா ஆயிடுவோம். “ மனைவி சுசிலாவின் சொல்லை மீறி ஸ்ரீதரனின்  வீட்டை விவேகன் அடைய,

     வெளியில் கிளம்புகிற அவசரத்திலிருந்த ஸ்ரீதரன்,

    “  வாப்பா விவேகா. உனக்கு புதுப்படங்கள் ‘புக்கிங்’ எல்லாம்  வருதாமே! நீயும் கூட பிரபலமாகிட்டு வர்ற மாதிரி தெரியுது . ஆமா,  வீடு கூட மாறிட்டேன்னு கேள்வி. “  வீட்டை விட்டு வெளியே வந்தபடி இவன் அருகே வந்த ஸ்ரீதரன்,

     “ அவசரமா ஒரு வெளி வேலை.  நீ கூட ரெண்டு,  மூணு முறை தொலைபேசியில என்னை  அழைச்சிருக்கே. தப்பா நினைக்காதே.  நான் இப்ப ரொம்ப பிசி.  பின்னாடி சந்திப்போம் “  என விவேகனை வீட்டு வாசலிலேயே விரட்ட,

     தான் அவமானப்பட்ட, அசிங்கப்பட்ட உணர்வு உள்ளுக்குள் விவேகனுக்கு. 

    “ டேய்..ஓ.. மன்னிச்சுக்கப்பா.  பழக்க தோஷத்தில் அப்படிக் கூப்பிட்டுட்டேன்.  இன்னிக்கு என்னைய ஏதோ புதுசா பாக்குற மாதிரி பேசுற.  உனக்கு அரசாங்க விருதுன்னு கேள்விப்பட்டு நேர்ல பாராட்ட வந்தேன். ஆனா, என்னைய நீ உதாசீனப்படுத்திட்ட .  நானும் , என் சுய முயற்சியால வளர்ந்துகிட்டு தான் இருக்கேன்.  எனக்கும் ஒரு நாள் விருது கிடைக்கும் . ஆனா, அப்ப உன்னைய கூப்பிட்டு,  உன் கையாலே தான்  வாங்குவேன் பாரு . “ என ரோஷமாய்ச் சவால் விட்டுக் கிளம்ப,

    “ அதுக்கு இப்பவே என்னுடைய பாராட்டுக்கள்.  ஆமா,  அதுக்குள்ள ஏன் கிளம்பற?  நீ ரொம்ப தன்மான்காரன்.  என் மேடையில,  உன்னை பலமுறை  ஏறச் சொன்னப்பக் கூட , அதை மறுத்து என்னை பல முறை அசிங்கப்படுத்தி இருக்கியே.”  ஸ்ரீதரனும் வேகப்பட,

    “  அது என்னமோ உண்மைதான்.  உனக்கு உரிமையான மேடையே நான் எப்படி பகிர்ந்துக்கிறது? அது பெரிய தப்பு.  ஒரு நாள் எனக்கும் மேடை வரும் ஆனா,  அதுக்கு நீ கண்டிப்பா வரணும். “

    “  எப்படி, எப்படி?  நீ மாற மாட்ட.  நான் மட்டும் மாறாம அப்படியே இருக்கணும் . இது என்ன பேச்சு?  ஆனா,  உனக்கு சீக்கிரம் மேடை வாய்ப்பு கிடைக்க அந்த ஆண்டவன் அருள் புரியட்டும்” என  'விருட்'டென ஸ்ரீதரன் காரில் கிளம்பிப் போக,

      அடிபட்ட வேங்கையாய் நண்பனின் வீட்டை விட்டு வெளியே பாய்ந்தான் விவேகன்.

      மீண்டும் அதே “மாதவா ” இரு பாலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.    

     ஆனால் காட்சி மாற்றம்.  வாசலில் இருந்த பிளக்ஸ்ஸில் எழுத்தாளர் விவேகன் கைகளை உயர்த்தியபடி வெற்றி முத்திரையோடு  நிற்க, அதனடியில்..

     “ இவ்வருட கல்லூரி  ஆண்டு விழாவில் கலந்துக்கொள்ள வரும்  

‘எழுத்து வேந்தன்’ விவேகன் அவர்களே வருக! வருக! “ என வாசகம்.

     அதனை ஓரப்பார்வையில் பார்த்து,  சிரித்து ரசித்தபடி,  மனைவி சுசிலாவுடன் கல்லூரி பேச்சரங்கில் விவேகன் நுழைய..

      கைதட்டல்களால் அரங்கம் அதிர்ந்தது. 

      சம்பிரதாய வரவேற்பு மற்றும் பொன்னாடை மரியாதைகளுக்குப் பின் மேடை ஏறினான் விவேகன். 

     “ அன்பு இளைய பாரதமே ! வாழ்த்தி வணங்குகிறேன். “  மீண்டும் கைதட்டல்.

     “ மிக்க நன்றி . இந்த வாய்ப்புக்காக,  இங்கு உள்ள அனைவருக்கும் மீண்டும் நன்றி . அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். இப்போது ஓர் அங்கீகரிக்கப்பட்ட பேச்சாளனாய் உங்கள் முன் நிற்கிறேன்.  நான் அடிக்கடி சொல்வதுண்டு.. என் எழுத்து தான் பேச வேண்டும். பேசப்பட வேண்டும் ஏனென்றால்,  அடிப்படையில் நான்...”  இடைவெளி விட,

       அரங்கமே “ எழுத்தாளர் “  என முழங்க , மகிழ்ச்சிப்பெருக்கில் உள்ளம் உருகினான் விவேகன். 

       “ எழுத்து எப்போதும் கல்வெட்டு போல.  காலம் கடந்தும் நிற்கும்.  பேச்சு காற்றில் கலந்து , காதில் கரைந்து போகும் . அன்பு உள்ளங்களே என்னுடைய சமீபத்திய நூல் வெளியீடுகளும்,  இரு திரைப்பட கதை வசனகர்த்தா என்ற மாபெரும் வெற்றியும் என்னை இங்கே உங்கள் முன் நிறுத்தியிருக்கின்றன . இதற்கு முன்,  நான் அடைந்த அவமானங்களே , இன்றைய என் வெகுமானத்திற்கு அடித்தளங்கள்.  எனக்கு வாய்ப்பளித்து,  என்னை உயர்த்திய புத்தக பதிப்பாளர் ‘ மல்லிகை மன்னனை’ உங்கள் முன்னிலையில் நான் கௌரவப்படுத்துகிறேன்”  சொன்ன விவேகன்,

        வேகமாய் ஓடிச் சென்று,  பொன்னாடை ஒன்றை எடுத்து அவருக்குப் போர்த்தி மரியாதை நிமித்தம் குனிந்து வணங்கி, மீண்டும் பேச்சை தொடர்ந்தான். 

      “உங்கள் முன் இரண்டு விஷயங்களை வைக்க விழைகிறேன். அறுசுவை உணவு என்னென்ன? “  கேட்டுவிட்டு சபையோரை நோக்கி கையைக் காட்ட,

       பதில் பலரிடமிருந்து வந்து சேர்ந்தது.

    “  பாராட்டுக்கள்.  நீங்கள் கூறியது உணவின் அறுசுவை... உடலுக்கு.  நாம் நாமாக வாழ வேண்டுமென்றால் மேலும் ஒரு சுவையை இதோடு சேருங்கள் . அது ’இரசிப்பு’. “

     அரங்கம் மீண்டும் அதிர்ந்தது.

     “ ஆமாம்..இரசியுங்கள். உலகை மட்டுமல்ல , உங்களையும்... நீங்களே இரசியுங்கள்.  இரசிப்பு மட்டுமே உங்களை படைப்பாளியாக்க முடியும்.  படிப்பு போன்று படைப்பும் இருந்தால், பாதி இறைவன் ஆகிறீர்கள்... நீங்கள்.”

   “ அடுத்து,  பில்கேட்ஸ் அவர்களின் ஒரு வாசகம் உங்களுக்காக..

     ‘ நீ ஏழையாக பிறந்திருந்தால் அது உன் பெற்றோரின் அறியாமை.

       நீ ஏழையாக இறந்து போனால் அது நிச்சயம் உன் முயலாமை “  சொல்லியவன், தன் பேச்சில் சற்று இடைவெளி விட,

   “ பட், பட்”  டென ஓர் ஒற்றைக் கைதட்டலுடன்  நண்பன் ஸ்ரீதரன்  கடைசி வரிசையில் இருந்து எழுந்து,  மேடையை நோக்கி வந்தான்.

     வினாடி நேரத்தில்,  முழுமையாய் முகம் சிவந்து போன விவேகன், அடுத்துப் பேச,  சற்று தடுமாறியவனாய்,

     நண்பன் ஸ்ரீதரனை மேடைக்கு வர ஜாடையிலே அழைப்பு விட ,     

     நாகரிகமாய் மறுத்து தலையசைத்து விட்டான் ஸ்ரீதரன்.

    ‘சட்’ டென எழுந்த ‘மல்லிகை’ மன்னன்,  விவேகனிடம் அனுமதி பெற்று ஸ்ரீதரை மேடைக்கு வருமாறு அரங்க அங்கத்தினர் சார்பாக அழைக்க,

    வேறு வழியின்றி மேடையில் ஏறிய ஸ்ரீதரன்,  நண்பன் விவேகனுக்கு பொன்னாடை போர்த்தி கட்டியணைத்து அமர்ந்தான்.

    மேற்கொண்டு சில வார்த்தைகள் பேசிய விவேகன்,  மல்லிகை மன்னனை பேச அழைத்தான்.

   “  அனைவருக்கும் வணக்கம்.  இங்கு  நாம் காண்பது வாழ்வில் வெற்றி பெற்ற இரு நண்பர்களை.  எழுத்தாளர் விவேகன் மற்றும் பேச்சாளர் ஸ்ரீதரன் அவர்களை.  ஆனால்,  விவேகன் அவர்கள் தான் ஒரு சிறந்த பேச்சாளனும் கூட,  என நம் கண் முன்னே நிரூபித்து விட்டார். “

     மீண்டும் கைதட்டல்.

    கர்வமாய் முகம் திருப்பி,  நண்பன் ஸ்ரீதரனை விவேகன் பார்க்க, கையெடுத்து கும்பிட்டு கைதட்டிப் பாராட்டினான் ஸ்ரீதரன்.

   “ இங்கே ,  நான் ஒரு உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் எழுத்தாளர் விவேகன்  மிகத் திறமை மிக்கவர்.  பன்முக திறமைசாலி . ஆனால்,  தன் வழி தனி வழி என இருந்தவர்.  வாழ்ந்தவர்., வாழ்பவரும் கூட.  அவருடைய அந்த அரிய திறமை என் கவனத்திற்கு வந்தபோது,  அதை இவ்வுலகில் கொண்டுவரக்கூடிய கருவியானேன். “

     விவேகன் எழுந்து மீண்டும் ‘மல்லிகை’ மன்னனை வணங்க,

    “  உங்கள் வளர்ச்சியில் நான் ஒரு அம்பு மட்டுமே.  ஆமாம்.,  வில் யாரென்று தெரியுமா ? உங்களுடைய ஆத்ம நண்பர் ஸ்ரீதரன் தான். “  என ஸ்ரீதரனைக் காட்ட,

     அனைவரும் எழுந்து நின்று பாராட்டினார்கள்.

    குழப்பத்தின் உச்சிக்கே விவேகன் செல்ல,

     “ ஆமாம் விவேகன். உங்களுடைய இந்த வளர்ச்சிக்கு மறைமுகமாய் ஸ்ரீதரன் தான் காரணம்.  அவருக்கும், எனக்கும் நெருங்கிய நட்பு உண்டு எழுத்தாளர் விவேகன் எந்த ஒரு சிபாரிசையும் ஏற்காத குணம் உடையவர் என்பதால்,  ஸ்ரீதரன்  என்னைத் தொடர்பு கொண்டு,  அவரைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.  அதோடு கடந்த பத்து மாதங்களாக அவரோடு பிணக்கு ஏற்பட்டது போல் நடித்து,  அவரை உள்ளத்தளவில் உத்வேக படுத்தினார் என்பதுதான் முக்கிய விஷயம். நான் மட்டுமே அறிந்த ஓர் இரகசியம் இது. இவர்களே நட்பின் ‘தராசுத்தட்டுக்கள்’ “ மல்லிகை மன்னன் பேசப் பேச,

     விவேகனுக்கு கண்களில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது.

     ஓடிப்போய் ஸ்ரீதரனை அள்ளியணைத்த விவேகன், தனக்குப் போடப்பட்ட பொன்னாடையை,  ஸ்ரீதரனுக்குப் எடுத்துப் போர்த்த,

     நண்பனைக் கட்டிக்கொண்ட ஸ்ரீதரன்,  அந்த பொன்னாடைக்குள் விவேகனையும் உள்ளே சேர்த்து அணைத்துக்கொள்ள,

     அங்கே அரங்கத்தோடு,  வானமும் இடியாய் இடித்து மகிழ்ச்சி மழையைக் கொட்டியது

                                                     -0-0-0-



Rate this content
Log in

Similar tamil story from Classics