மதுரை முரளி

Romance Classics Inspirational

5  

மதுரை முரளி

Romance Classics Inspirational

நெஞ்சோடு கலந்திடு

நெஞ்சோடு கலந்திடு

13 mins
462


                               “நெஞ்சோடு கலந்திடு” -- மதுரை முரளி

         சென்னை - மதுரை பயணத்தில் , அந்த தனியார் மிதவைப் பேருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சற்று நேரம் இளைப்பாறி விட்டு , விடுபட்டு இருந்த தன் இருக்கைகளை முழுவதுமாய் பூர்த்தி செய்து கொண்டு பேருந்து நிலையத்தின் முன் வாசல் வழி வெளியே வந்தது.

        நேராக ‘கலையரங்கம்’ திரையரங்கத்தை கடந்து,  பாலக்கரையில் நுழைந்து,  மதுரை செல்லும் நான்கு வழிப் பாதையில் தன்  பயணத்தை பத்து நிமிடத்தில் பிடிக்க,

        பகலவன் பகல் பொழுதை முடித்து பூமிப்பந்தின் மீதிப்பகுதிக்கு கடமையாற்ற , மறையத் தொடங்கிய அந்திசந்தி நேரம் அது.

       மிதுன் தனது இருக்கையை சாய்வான நிலைக்கு நகர்த்தியவனாய்,   வாயில் வந்த கொட்டாவியை அரைகுறையாய் விடுவித்தான்.

       மிதுன் கால் நூற்றாண்டை கடந்த மாதம் தான் கடந்தவன். 

       நீலவானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோடை மேகங்கள் ‘சடசட’ வென குளிர்ந்து,  பூமியை குளிப்பாட்ட தொடங்கின.

       “ ம்..” ரம்மியமான மண்வாசனை ஆசை மூக்கில் அடித்து மிதுனை, ‘குஷி’ மன நிலைக்கு மாற்ற,  மனதில் பரவிய உற்சாகத்தை உதட்டில் பரப்பி ரசித்தான்.

       மழை.. மண்ணிற்கு உயிர் தரும்., மனதிற்கு மகிழ்ச்சி மட்டற்ற மகிழ்ச்சி தரும்.

      தனக்குள் சிரித்தவனாய் வெளியே ரசித்து வந்த மிதுனை, 

     பேருந்தில் பாடத் தொடங்கிய பாடல் உள்ளே அழைத்து காதல் உற்சாகத்தை ஊட்டியது.

                     “ எங்கேயும் காதல்

                       விழிகளில் வந்து

                      ஒவ்வொன்றும் பேச

                      வெண்காலை சாரல் ” – பாட்டு , குளிர்ச்சியை கண்ணில் பரப்பி நிரப்பியது.

     ‘ சட, சட’ வென சறுக்கி,  தன் தொடக்ககல்வி நாட்களில் போய் நின்றான் மிதுன்.

     “ மாடல்”  பள்ளிக்கூடம்... ஆரம்பபள்ளி.  ஐந்தாம் நிலை வரை.,  தான் படித்தது நினைவுக்கு பசுமையாய் வந்து நின்றது.

     பள்ளியில் படித்த பாடங்களை விட,  அவள் மதுமிதா.. நான்காம் வகுப்பில் புதிதாய் நுழைந்தவள்.. புயலாய்  மனதில் வந்து நின்றாள்.

    அவள் அப்பா ‘ஏதோ’ தமிழக அரசுப் பணியில் வேலை.  அவர் மாற்றலாகி வர,  அவளும் கிடைத்தாள் பள்ளிக்கு.

                       “  என்ன இந்த மாற்றமோ?

                          என் மனசு வலிக்குதே

                                   கண்ணு 

                         ரெண்டும் காந்தமோ? “ - அடுத்த பாட்டு டிவி திரையில்.

      மிதுன் மாறித்தான் போனான்.

     ‘ ஏனோதானோ’ வென்று சீருடை மாட்டி,  கடைசி நிமிட நேரத்தில் பள்ளி மணி அடிக்கும் முன் பாயும் மிதுன்,  ஒழுங்காய் தலைசீவி,  பள்ளிக்கு 15 நிமிடத்திற்கு முன்பே, வர ஆரம்பித்தான்.

       பள்ளிக்கூட பெரிய இரும்பு கதவின் ஓரமாய் பதுங்கி,  தெருமுனை நோக்கி தவமாய் பர்கதொடன்கிணன்..நட்பாய் மதுமிதாவை.

       தூரப் பார்வையில் மதுமிதா.

       வெள்ளை சீருடையில்.. சிவப்பு ரோஜா.  உச்சந்தலையில் தினந்தினம் பல விதங்களில் தலை பிடிப்பான்கள்.

      ‘ அடடா,  அழகுக்கு அழகு’  தான் முணுமுணுத்த நாட்கள் நினைவுக்கு வந்தது இப்போதும்.

      ஒருமுறை பள்ளி ஆண்டுவிழாவில், மிதுனும்,  மதுமிதாவும் ,

                     “ அன்று வந்ததும் இதே நிலா 

                       இன்று வந்ததும் அதே நிலா “ பாடியவாறு , மேடையில் கைகோர்த்து ‘டூயட்’ பாடி தாங்கள் சுற்றிச்சுற்றி வந்தது நினைவுக்கு வர,  விழியோரம் துளிர்த்த நீரை இலேசாய் சுண்டியவன்,

       தனது நினைவுகளுக்கு சற்று வேகம் கூட்டி, அதை உயர்நிலைப்பள்ளிக்கு உயர்த்தினான் மிதுன்.

      ஆரம்ப பள்ளி முடிந்ததும் , அதே பகுதியில் மிதுன் தனி மாணவன் பள்ளிக்கும்,  மதுமிதா அவளது பள்ளிக்கும் பிரிந்ததும்,  தொடர்கதையாய் இருந்த இவர்களது தொடர்புகள்,  சிறு கதையாய் முடிவுக்கு வந்துவிட,

       ஒரு நாள் எதிர்பாராத சந்திப்பு.. கோவில் வாசலில்.

       நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டே மிதுன்,  கோவில் படியேற,

       “ ஏ..ஏய்..” மதுமிதாவின் குரல் கேட்டு,  இவன் சுதாரிக்கும் முன்,  அவள் தலையில்  மோதிவிட,

      நிமிடங்கள் சில அங்கே தடுமாறின.

     “ ஓ.,ம.. மன்னிசுங்கங்க. தெரியாம”  பதட்டமாய் மிதுன்.

     “ பரவாயில்லை.  தெரியாமத் தானே மோதினீங்க. “

      முதன்முதலாய் மதுவின் குரலில் சற்று போதை தூக்கலாய் உணர்ந்தான் மிதுன்.

      மெல்ல சிரித்தவாறே , அவளும் தன் சினேகிதியோடு நகர,

     “  அட இங்கே பாருடா! அப்ப,  தெரிஞ்சும் மோதலாம் போல? “  கூட இருந்த மாணவன் குறும்பாய் கொக்கரிக்க,

     “ டே.. டேய் “  பேச்சை இடைமறித்தவனாய் பின்னால் திரும்ப, 

     ‘அதே’ நேரத்தில் அவளும் திரும்பி , வெட்கிச் சிரித்தாள்.

    அந்த ஒரு வினாடி தான் மட்டும் உயரப் பறப்பதுபோல் உணர்ந்தவன்,  உற்சாகத்தில் அரை அடி  எம்பிப் பறந்து காற்றில் குத்து விட்டான்  மிதுன்.

     தொடர்ந்து இரண்டு நாட்கள் அந்தக் கோயிலில் பக்தனாய் மாதிரி பல முறை படையெடுத்தும், மதுமிதா கண்ணில் படவில்லை.

    ‘ சே! ஒரு வார்த்தை கூட பேச முடியாம போயிடுச்சே.  வீடு வேற சரியா தெரியலை . ஆனா,  கொஞ்சம் தொலைவில போல . தெரிஞ்சா ஒரு அலசு அலசலாம்.”  கன்னத்தில் கை குத்தி , தான் அமர்ந்த காட்சி இப்போது நினைவுக்கு வர,

     பஸ்ஸில் அடுத்த பாட்டு..

                   “ உன்னை இப்ப பார்க்கணும் 

                            ஒண்ணு பேசணும்

                     என்ன கொட்டி தீர்க்கணும்

                     அன்பே காட்டணும்.

     ‘ குப்’ பென தன்னையும் மீறி மிதுன் சிரித்துவிட,  

      பஸ்ஸில் இருந்த பலரும் இவனை குழப்பமாய்ப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக் கொள்ள,  மீண்டும் சிரித்தான் சன்னமாய் தனக்குள் இம்முறை மிதுன்.

      பலகட்ட முயற்சியின் பின்னணியில்,  மதுமிதா கோவிலுக்கு வரும் நாள், நேரம்,  இவனுக்கு பிடிபட்டுப் போக,

     தொடர்ந்து தொடர்ந்தான் அவளை.

     “  என்னங்க,  என்னைய ஏன் தவிர்க்கறீங்க? “  பாதி ‘தனுஷாய்’ பரிதாப பாவம் காட்ட,

     “ இல்லைங்க., வேணாம் . “ ஓட்டமும்,  நடையுமாய் நகர்ந்தவளைப் பார்த்து,  தான் முணுமுணுத்த பாடல் நினைவுக்கு வந்தது.


               “  உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

                  உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்”  மீண்டும் டிவியில் அதே பாட்டு.

       இம்முறை சுதாரிப்பு வாய்மூடி சிரித்தவன், பாட்டில் ஒன்றிப் போனான்.

       மதுமிதா இவனை தவிர்த்த போதெல்லாம் தவித்துப் போவான்.         

       ஒருமுறை அவளை அறியாமல் பின் தொடர்ந்த மிதுன்,  வீட்டை கண்டுபிடித்து விட , அடுத்த முறை தொடங்கினான் கோவில் தரிசனத்தை அவள் வீட்டிலிருந்து.

       அன்றும்,  தனது மிதிவண்டியை மிதித்து மதுமிதாவின்தெருமுனையில்  நுழைய,

        அவள் , தேவதையாய்  புது பட்டுத்தாவணியில்,  கதவு திறந்து வெளிவர,  வினாடி நேரத்தில் மிதிவண்டியை பின்னோக்கி நகர்த்தி பதுங்கி எட்டிப்பார்த்தான் அவளை.

        மதுமிதா கதவை அடைத்துவிட்டு,  சாலைக்கு வந்து,  தன்னைத் தேடி நேரம் கடத்துவது புரிந்ததும், புல்லரித்துப் போனான் மிதுன்.

        ஏறக்குறைய ஐந்து நிமிடத்திற்குப் பின்,  வீட்டினுள் சென்றவள்,  மீண்டும் ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின்.. அதே காட்சி  மறு ஒத்திகையாய்.

       இம்முறை அவள் சற்று கோபமும்,  பதட்டமுமாய் இருப்பதை உணர்ந்த மிதுன்,  அவளுடைய தவிப்பை ரசித்தான் உள்ளுக்குள்.

       ‘ சடாரென’  நடக்கத் தொடங்கியவள்,  கோவிலை  வேகமாய்அடைய, தானும் தொடர்ந்தான் மிதுன்.

      அடுத்த பத்து நிமிடங்களில் வெளியே வந்தவள், மிகக் கூடுதலான அவசரம் கலந்த பரிதவிப்பில் தன் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்.

      “மது.,  மது”  இனியும் தாமதிக்க விரும்பாது மிதுன் அவளை விரட்டி தொடர,

      “  என்கிட்ட பேசாதே . “ஒருமுறை திரும்பி இவனை முறைத்தவள்,  முறுக்கிக்கொண்டாள்.

       “நா.. நான் அப்பவே வந்துட்டேன்.  கோயில்ல பேச வேணாம்னு “ மிதுன் கூற, 

      ‘ இடது’  ஆள்காட்டி விரல் எழுப்பி, ‘உஷ்’ ஒலி எழுப்பியவள்,

      “  நானும் உன்னை கோவிலிலிருந்து கவனிச்சேன்.  ஏன் இப்படி? “  குரலில் சற்று நடுக்கம்.

     “ ம..மன்னிச்சுக்க.  நீ இந்த கெட்டப்பில தேவதையா தெரியற. அதனால மயங்கிப் போய் தூரத்திலேயே நின்னு ரசிச்சேன்.  இது தப்பா? “ நெருக்கமாய் மிதி வண்டியை ஓட்டி,

      அவள் கையை பிடிக்க முயல,

     “  சீ! போடா. “  செல்லமாய் ஓடி,  வீட்டின் தெருவை அடைந்து தன் முத்தத்தை தூதாய் அனுப்பி,  காதலை பறக்க விட்டாள் காற்றில் .

      இவனும் அதைப் பிடித்து போட்டான் நெஞ்சில் .

      காதல் நினைவுகளில் சஞ்சரித்த மிதுனை,  பேருந்தின் அடுத்த பாடல் தன் கல்லூரி காலத்திற்கு இட்டுச் சென்றது.

                 “ முதலில் யார் சொல்வது? யார் சொல்வது அன்பை?

                   முதலில் யார் எய்வது?  யார் எய்வது அம்பை? “

     சின்ன, சின்ன சந்திப்புகள்... மிதுன் - மதுமிதாவுக்கு இடையே.

     காய்கறிச்சந்தை,  மொத்த விற்பனை அங்காடி என அடிக்கடி நிகழ்ந்த அதே சமயம்,  இருவரும் படிப்பில், பட்டத்தில் பாதிப்பு வராது தங்கள் காதலை தொடர்ந்தனர்.

     ஆண்டு இறுதியில், கல்லூரிகளுக்கிடையே நடந்த கலாசார நிகழ்வும் மிதுன்  நினைவை வந்து  நிறைக்க,

     இருவரும் தங்கள் கல்லூரிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டனர்.

     சற்றே வித்தியாசமான ’பாட்டுக்குப்பாட்டு’ போட்டி .

     பல்வேறு தகுதி சுற்றில் வெற்றி பெற்ற மிதுன்  மற்றும் மதுமிதா தான் இறுதி சுற்று நிலையில் .

     தலைப்பு: “ காதல் காதல் “

     முதலில் , மிதுன் போட்டியை மதுமிதாவை  மனதில் வரித்து  தொடங்கி பாடிய பாட்டு..

                        “ நீ பாதி, நான் பாதி கண்ணே 

                          அருகில் நீயின்றி தூங்காது கண்ணே ” 

     விசில் சத்தம் ஊரைக் கூட்டியது.

     மாணவிகள் தரப்பில் மதுமிதாவை உற்சாகப்படுத்த, பறந்தது விசில்கள்!       

     மேடையேறிய மதுமிதா ரசிகர்களின் ஆரவாரம் அடங்கியதும்,

மீண்டும்  கை தட்டச் சொல்ல..,

                      “  கண்ணாடி நீ , கண் ஜாடை நான்

                         என் வீடு நீ,  உன் ஜன்னல் நான். “  அரங்கமே அதிர்ந்தது.

      மதுமிதா குரல் பாடகி சுவர்ணலதாவின் குரல் உயரத்தில் ஒலிக்க, மீண்டும் மீண்டும் இருமுறை பாட கேட்கப்பட்டது .

     கடைசி சுற்றில் பாடல்  போட்டி வந்து நிற்க,

     மேடையேறிய மிதுன்,  அந்த ‘உச்சகட்ட’ பாட்டை அவன் தரப்பில் பாடினான் . 

                       “ நீதானே நீதானே 

                         என் நெஞ்சை தட்டும் சத்தம்

                        அழகாய் உடைந்தேன்

                         நீயே அர்த்தம் “

      அரங்கமே ஆட்டம் , பாட்டம்  என ஆர்பாட்டமாய் அதிர்ந்தது.

      மீண்டும் மூன்று முறை பாட கோரிக்கை அரங்கில்  வர, ஒவ்வொரு வரியையும் மிதுன் அவளை காட்டி பாடப்பாட,  மதுமிதா முகம் மட்டுமல்லாமல் உடல் முழுக்க சிவந்தாள்.

       அந்த காட்சியின் நினைவுப் பதிவுகள் வந்து நின்றன மிதுனுக்கு.

       கல்லூரி பருவம்.. கனவுப் பருவம்.  அது விரைவாக கரைந்து  போய் விட்டதே என  மனம் வேதனை.

       மீண்டும் மனதை மாற்ற,  வெளியே பார்வையை ஓட்டினான் மிதுன்.

      இருட்டு கிட்டதட்ட தன் ஆக்கிரமிப்பை தொடங்கியிருந்தது.

      அமாவாசை முடிந்த ‘மூன்றாம் பிறை’  சன்னமாய் முகம் காட்டி மினுமினுக்க,

      கண்ணில் மினுமினுத்த கண்ணீரை,  தலையை நிமிர்த்தி முகத்தில் 

தேக்கினான்  மிதுன்.

     பேருந்தில் அடுத்து வந்த பாடல்.. ஆச்சர்யம். 

     மதுமிதா பாடிய வெற்றி பாடல்.

     பார்வை பாட்டில் பதிந்தாலும்,  பாடல் காட்சி என்னவோ அன்றைய கல்லூரி போட்டிச் சூழலுக்கு மாறியது.

    மதுமிதாவின் பதில் பாட்டுக்கு அரங்கமே  விரல்நுனியில் எழுந்து நிற்க,

    அனைவரையும் வணங்கி மிதுனைப்  பார்த்து சிரித்து  பாடத்தொடங்கினாள் .

                   “ உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே 

                     சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே”  பாடலை பாட முடியாமல் நண்பர்கள் இருதரப்பிலும் கைதட்டி விசில் விண்ணை முட்ட,

     அமைதி காக்க போட்டியிடுவார்கள் வேண்டுகோள் விட வேண்டி வந்தது.

     சில வினாடி அமைதிப் பின்னணியில்,  அவள் பாட்டை  முழுமையாய் பாடி வெற்றிபெற,

மீண்டும் கேட்க கோரிக்கை விடப்பட்டு, அவளும் பாடி முடித்து     வெற்றியாளர் ஆனாள்.

     அவள் கோப்பையை பெறும் தருணத்தில் மிதுனையும் அழைக்க,  இவன் மறுக்க,

     அரங்கத்தினரின் ஏகோபித்த அழைப்பில்,  தாங்கள் இருவரும் கேடயத்தை தாங்கிப் பிடித்த அந்த  தங்கத்தருணம்.. 

     கூடவே, இருவரும் இணைந்து பாட பார்வையாளர்கள் விருப்பம் தெரிவிக்க, 

                       “நெஞ்சோடு கலந்திடு உறவாலே

                         காலங்கள் மறந்திடு அன்பே “  எனப் பாடி முடித்தார்கள். 

     மீண்டும் வந்த நினைவுகளால், உணர்ச்சி தடுமாற்றத்தில் பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைக்குட்டையால்,  முகத்தைப் பொத்தி  ஆழமாய் விசும்பினான் மிதுன்.

     பேருந்தின் வேகம் குறைந்து நான்கு வழிச் சாலையில் இருந்து இடப்புறம் திரும்ப,

    ‘ ஹோட்டல் அபூர்வா’ அழகிய போர்டு வரவேற்றது.

     பஸ் தன் பயணத்திற்கு ஓய்வு கொடுக்க,  பயணிகள் பலரும் சற்று நேரம் இளைப்பாற வரிசையாக ஹோட்டல்  வாசல்  தொட்டனர்.

    மிதுனும் இறங்கி  நடந்தவாறே காப்பி குடித்தவன் , நேரம் செலவிட உணவகத்தில் நுழைந்தான்.

     ‘பாதி சுத்தம்,  பாதி மிச்சம்’ என சாப்பாடு மேசையில் ஈக்கள் பல்லிளிக்க,  முகம் சுளித்தவன் பார்வையில்..அவள்.

     வினாடி நேரம் வக்கித்துப்போனான் மிதுன்.

     ஏறக்குறைய மதுமிதா சாயலில் அவள் .

     ‘பட்’ டென சற்று நெருங்கியவன்,  கண்டும் காணாதவனாய்,  அவளின் அசைவுகளை அசை போட்டான்.

     நிறம்  மட்டும் சற்று கூடுதலாக இருந்தால்,  சற்று மெலிந்திருந்தால் அச்சு அசல் அவளே.. மதுமிதா தான்.

     பேருந்து ஓட்டுநர் ஓசை எழுப்பி துரிதப்படுத்த,  அவள் ஒரு பக்கம்.. இவன் ஒரு பக்கம் பிரிந்தார்கள்.

     பேருந்தில் ஏறியவுடன் விளக்குகள் அணைக்கப்பட,

     கிட்டத்தட்ட முழு இருட்டு..இவன்  மனதையும் நிரப்பியது.

     மதுமிதா ஒரு கடல் பைத்தியம். அதுவும் , அலைகளோடு ஆடி, ஓடிப் படுவதில்  அதில் ஒரு அலாதி ஆனந்தம் அவளுக்குள் .

    ஒரு முறை தானும்,  அவளும் கடற்கரைக்கு போன நினைவு வந்தது.

    கடற்கரை மணலில்  ஜோடியாய், தாங்கள் இருவரும் கால்பதித்து நடந்தது...

    அவள் பாத பதிவில், தான் காலைப் பதித்து நடந்த,  கடந்தகால  வழிக்குத்தியது உள்மனதில்.

    அன்று அவளுக்காக தான் வாசித்த கவிதை..

                     உன் பாதம்

                  பதித்த சுவடுகளில்..

                     புதைய ஆசை!

                  புதையலாய் மேலே

                     நீ நிற்பதால்

                        எனக்கு!!

கவிதை கேட்டவள்,  அப்படியே தன்னை கட்டி அணைத்தாள்.

      சற்று நேரம் அதை பற்றியே சிந்தித்த மிதுன், 

      “ சே! அந்த கடல் மீது  அவள் ஆசை,  இறுதியில் ,அவள் நேசித்த கடல் அலையோடு அலையாய்..”

      கல்லூரி சார்பில் விசாகப்பட்டினம் இன்பச்சுற்றுலா போவதாய் ஓடிவந்து  மதுமிதா இவனிடம் கூறியபோது ,

     அவள் கண்ணில் தெரிந்த குதூகலம்,  இவன் கண்ணில் கலவரத்தை உண்டு பண்ணியது .

      “ மது., நீ எனக்கு போதை . அதே சமயம் , உன் போதை எனக்குப் புரியுது.  ஆனா,  கடலைக் கண்டதும் கட்டுப்பாடு இல்லாம நீ ஓடறது,  குதிக்கிறது எல்லாம் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு.  சொல்லப்போனா ரொம்ப கவரமாயிருக்கு. “ மதுவின் கரம்பற்றி மிதுன் கவலைப்பட,

      “ சீ!  போங்க.  இங்கே பாருங்க. இன்னும்  இரண்டே நாள்ல,  நான் சுற்றுலாத் போய் திரும்பி  வந்ததும், எனக்கு  கடைசிப் பருவத்தேர்வு. அதுக்கப்புறம் சுதந்திரம் தான் நமக்கு. “ சொல்லிவிட்டு அடையாளமாய் இவன் நெற்றியில் ‘இச்’ பதிக்க ,

      “ புரியுது . நானும் அதுக்கு தான் காத்துகிட்டிருக்கேன்.  எனக்காக,  எங்க அப்பா தன் சொந்த தொழிலை, என்னிடம் ஒப்படைக்க காத்துகிட்டிருக்காரு.”      

       சோகமாய் அவளைப் பிரிந்து,  இவன் கடற்கரை மணலை தட்டி விட்டு எழுந்த அந்த நாள்,  நெஞ்சில் என்றும் கணமாய்.

       விசாகபட்டினம் கடற்கரையில் மதுமிதா கடல் அலையோடு அலையாய் விளையாடப்போய்... திரும்பவே இல்லை.

          மிதுனும், அவளைத் தேடி பார்த்து,  இப்போதுதான் திரும்பி இருக்கிறான்.

          இனியும் போய் தேடுவான்,  டைம் லூப் நினைவில்.

                               “டைம் லூப்”  

                            முதலும் முடிவும்

                            வட்டமிடும்...

                            கற்பனைக்களம்!

                            இறுதிச்சுற்றை நோக்கி !

                            வரம்பிலா வாய்ப்போடு !!!

                                                     -- மதுரை முரளி 

          இப்போது பேருந்தில் பாட்டு...

                   “ நினைவோ ஒரு பறவை 

                     விரிக்கும் அதன் சிறகை.

                     பறக்கும் அது கலக்கும்

                            தன் உறவை. “

                                                    -௦-௦-௦



Rate this content
Log in

Similar tamil story from Romance