மதுரை முரளி

Classics Inspirational Others

4.5  

மதுரை முரளி

Classics Inspirational Others

புது நிலவு

புது நிலவு

8 mins
27


        “ புது நிலவு “ – ‘மதுரை முரளி’

      ‘ சென்னை எழும்பூர் ’ இரயில் நிலையம் இரவு நேர உறக்கத்திற்குப் பின், சற்று சோம்பலாய் விழிக்கத் தொடங்கிய நேரம் காலை 8:00 மணி.  

       நடைமேடை நெடுகிலும் இருந்த நாற்காலிகளில், அரைகுறையாகத் தூங்கி, கண்கள் சிவந்த நிலையில் இரயில் பயணிகள் கூடவே இதர மக்கள்.  

      குப்பை தொட்டிகள் பிரசவ வேதனையில் வயிற்றை நிரப்பி நிற்க, அதைச் சுற்றி வீசப்பட்ட பாட்டில்கள், பேப்பர்களை ஒருங்கிணைத்து, சுத்தம் செய்யும் சுகாதார பணியாளர்கள் மட்டும் சுறுசுறுப்பாய்.

      ‘குருவாயூர்’ வண்டி ஒன்பது மணிக்கு ஓட்டத்தை தொடங்க, தயாராய் நடைமேடையில்.

      சற்று தளர்ச்சியாய் ஒரு சிறிய ட்ராலிப் பெட்டியுடன் வந்த ராஜேஷ்,

 பி- 2, பெட்டியை தேடி அடைந்து , தனது படுக்கை எண்13 – ஐ அடையாளம் கண்டு அமர்ந்து, சற்று அமைதியானான்.

      மனம் இன்னும் பெரிய அழுத்தத்தில்.

     அலுவலகப் பணி காரணமாய், நேற்று சென்னை வந்த ராஜேஷ் வேலையை முடித்து, இரவு தங்கி விட்டு, இன்று காலைப் பயணத்தில் வீட்டை நோக்கி மதுரைக்கு.

      இரயில் வண்டி நகரத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியான நிலைக்கு வந்தவனின் மனம்,

      சென்ற மாதம் வீட்டில் நடந்த நிகழ்வுகளை அசைப் போடத் தொடங்கியது. அவனுக்குள் கடந்த பத்து நாளாய்ப் புயல். காரணம் அப்பா கோவிந்தன்.

      ராஜேஷிற்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. மனைவி மாலா . மூன்று வயது பையன் கணேஷ் .

     அடிப்படையில் அப்பா வெகு நேர்த்தியானவர். ஆனால் , ஆழமானவர். அதுவும், தன் மனைவி பார்வதி ஒரு வருடத்திற்கு முன்பு மறைந்ததும், ரொம்ப அமைதியாகிப் போனார். உள்ளுக்குள் உறைந்து போனார் கோவிந்தன்.

     பையன், மருமகள் கூடவே பேரன் கணேஷ் என இவர்களுடன் இரசனையாய்ப் பேசி, பாசமாய் இருந்தவர், பார்வதியின் மறைவிற்குப்பின் பாதி இளைத்துப் போய் மௌனமாகி போனார்.

     அப்பாவின் நிலைக்கு அம்மாவின் இழப்பு காரணமாக இருக்கும், இன்னும் சில மாதங்களில் அப்பா சகஜமாகி விடுவார் என நம்பிய ராஜேஷிற்கு, அவருடைய சென்ற மாத அறிவிப்பு பெரிய அதிர்ச்சியைத் தந்தது .

     அன்று அவசர, அவசரமாய் அலுவலகம் கிளம்பும் பரபரப்பில் இருந்தான் ராஜேஷ்.

     “ டேய் ராஜேஷ், மாலையில அலுவலகம முடிஞ்சு எப்ப வருவே?” அப்பா கோவிந்தனின் குரலில் தெரிந்தது வருத்தம் கலந்த ஏக்கம்.

     ஒரு நிமிடம் திக்குமுக்காடிப் போனான் .

     சமீபகாலமாய் அப்பாவின் பேச்சுகளில் சுரத்து இல்லை. சொல்லப்போனால், மன அழுத்தம் தெளிவாய்த் தெரிந்தது.

     “ அப்பா, உங்களுக்கு என்ன வேணும்? “ வேகமாய் அப்பாவின் அருகே சென்றவன், ஆறுதலாய் அவரது உள்ளங்கையைப் பிடித்துக் கேட்டான்.   

     அவருடைய கையில் லேசாய் நடுக்கம். கண்களில் ஒரு துளி நீர் துளிர்த்தது போல் ஒரு காட்சி.

    “ சொல்லுப்பா. மாலை 6 மணிக்கு வந்திடுவேன்”

    “ மாமா, என்ன விஷயம்? “ அலுவலகம் கிளம்பும் பரபரப்புக்கிடையில் மருமகள் மாலாவும் வினவ,

    “ அ. அது., சாயந்திரம் பேசுவோமே. உங்க வாழ்க்கை, வேலை பரபரப்புக்கிடையே, இந்த வயசானவன் வேற ஒரு பாரமா? “ குரல் உடைந்தார் கோவிந்தன்.

    ‘ சட்’ டென மாலாவும், மாமனாரின் அருகில் வந்தாள்.

    “ மாமா, உடம்பு சுகம் இல்லையா? எப்ப டாக்டர் கிட்ட போகணும்? “ என்றவளாய் அவரின் மற்றொரு கையைத் தாங்கிப் பிடிக்க ,

   “ என் பேரன் கணேஷ் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சிட்டான். அதான், எனக்குப் பொழுது போகல. ஓ.கே, நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க .” சொன்னவர் சற்று நிதானமாக,

   “ என்னப்பா, நான் லீவு ஏதாவது போடணுமா?” மீண்டும் ராஜேஷ்.  

   “ இல்லைப்பா. ஒண்ணும் பிரச்சினை இல்ல. மாலா, நீயும் கிளம்பும்மா ” என அப்பா உறுதியாய்க் கூறி விட, இரண்டு பேரும் அலுவலகம் புறப்பட்டனர்.

    மாலைச்சூரியன், ஆறுமணி தொட்டும் இன்னும் தகிக்க, வீட்டுக்குள் யோசனை கலந்த கவலையுடன் நுழைந்தான் ராஜேஷ்.

    மாலா ஏற்கனவே பள்ளிக்கூடம் முடிந்து வந்து விட்டிருந்தாள்.  

   அப்பாவின் மடியில் குழந்தை கணேஷ் குதூகலமாய். தாத்தாவும், பேரனும் விளையாடுவதைப் பார்க்க மனசுக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது ராஜேஷிற்கு.

   சிறிது நேர தேநீர் இடைவெளி முடிய,

  “ மாலா , ராஜேஷ் இப்படி வாங்க. உட்காருங்க.” அப்பா கோவிந்தன் குரலில் தெளிவு இம்முறை.

  “ மாமா., இப்ப சரியாயிட்டீங்களா ? “ மருமகள் கவலையுடன் வினவ, அதைத் தானும் ஆமோதித்தான் ராஜேஷ்.

  “ நான் சொல்லப் போற விஷயம்.. நான் தெளிவா எடுத்த முடிவு. நான் தினமும் காலையில நடைபயிற்சி போகும்போது, அடுத்த பகுதியில் உள்ள ‘அன்பு இல்லம்’ வழியாகத்தான் போவேன். அங்கே, என் வயது நண்பர்களைப் பார்த்து பேசுவேன். “ அப்பா சற்று நிறுத்த,

  மாலாவும், ராஜேஷும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டனர்.  

  “ புரியலைப்பா..’ ராஜேஷ் நடுக்கமாய்.

  “ நான் சொல்றது என்னன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். ஆமா, நானும் அவங்களோட சேர்ந்துடலாம்னு..’

  “ அப்பா.. மாமா..” அதிர்ச்சியாய் மகனும், மருமகளும்.

  “ அடுத்த வாரம் சேர முடிவு பண்ணிட்டேன். உங்க கவனிப்புல , எனக்கு எவ்வித குறையுமில்ல. ஆனா, நான் தனி ஆளா இங்கே எப்படி அடங்கி, முடங்கி கிடக்கிறது? பேரனும், பள்ளிக்கூடம் போக தொடங்கிட்டான். எனக்கு பேசக் கூட யாரும் இல்லை. அதனால., “

  “ அப்பா, தயவுசெய்து இதைபத்தி இனிமே பேசாதீங்க “ 

   ‘பட்’ டென அப்பாவின் காலில் விழுந்தான் ராஜேஷ்.

   மருமகள் மாலாவும் கண்கலங்கி நிற்க,

  “ மீண்டும் சொல்றேன் . என் நிலைமையில, இந்த முடிவு சரியானது.   நீ வாரமிருமுறையோ, அல்லது விடுமுறையிலோ அல்லது உன் சௌகரியப்படியோ என்னை வந்து பார்த்து பேசலாம். தனிமையும், முதுமையும் மிகக் கொடுமையானது. அதுவும், முதுமையில தனிமை.. முடியலப்பா. எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் “ கண்களில் இருந்து ‘பொல பொல’வெனக் கொட்டிய கண்ணீருக்கிடையில் அப்பா கைக்கூப்பி வேண்ட,  

    வேறு வழியில்லாமல் தானும், மாலாவும் அடுத்த வாரமே , அப்பாவை ‘அன்பு இல்லத்தில்’ சேர்த்த காட்சி கண் முன்னே வர,

  ‘ குபுக்’ கென வந்த கண்ணீரைத் துடைத்தவாறு, ஜன்னல் வழியே பார்த்து, ராஜேஷ் தன் கவனத்தைத் திருப்ப முயல, இரயில் வண்டி ‘திண்டிவனத்தில்’ நின்றிருந்தது.

   இரண்டே நிமிடத்தில் இரயில் வண்டி கிளம்பி விட,

   தனது கையிலிருந்த அலைபேசி தொடுதிரையைத் தடவி, அதனை

உயிர்ப்பித்து, அமைதியான சூழலைத் தேடினான் ராஜேஷ். மனம் ஏனோ அதில் ஒன்றிப்போக மறுத்தது.

   மீண்டும் வெளியே, வயல்வெளியைப் பார்த்தான்.

   பசுமைப் போர்த்திய பூமி. பாரபட்சமில்லாமல் படர்ந்து இருந்தது.

   நாம் எதை நோக்கி ஓடுகிறோம்? வாழ்க்கை ஏன் இப்படி பரபரப்பாய் பற்றி கொண்ட நெருப்பாய்த் தகிக்கிறது? ” குழம்பியவன் மனதில் திடீரெனப் புத்தகம் படிக்கும் ஆசை வந்தது.

   ஒரு நல்ல புத்தகம், குருவிற்கு அடுத்து நம்மை குணம் உயர்த்துகிறது.

   சென்ற வார புத்தக விழாவில் தான் விரும்பி வாங்கி, பாதி படித்த அந்த சிறுகதைத் தொகுப்பு புத்தகம் நினைவில் வர,

  சற்று பதற்றத்துடன் பெட்டியில் தேடினான்.

 ‘ ஓ., நல்ல வேலை புத்தகம் இருக்கிறது ‘

  “ நெஞ்சோடு கலந்திடு “ அருமையான தலைப்பு.

  புத்தகத்தை எடுத்தவன், தன் நெஞ்சோடு அணைத்து ஒரு கதையைத் தேர்ந்தெடுக்க,

  “ பகல் நிலவு” சிறுகதை.ஆர்வமாய் படிப்பதில் இறங்க , அது முதியோர் இல்லம் பற்றிய கதை.

   உள்ளுக்குள் ஓர் சிலிர்ப்பு ராஜேஷிற்கு.

   முதுமை ஓர் வரம். இளமையில் ஆடி, ஓடி, ஓய்ந்தபின் அமைதியாய் வாழ்க்கையை இரசிக்க வைக்கும் பருவம்.

   ஆனால் வாரிசுகளின் சுடுசொல் வார்த்தைகளால் , காயம் பட்டு கடைசியில் முதியவர்கள் காணும் களம் ‘முதியோர் இல்லம்’

   ராஜேஷிற்கு கதையைப் படிக்க, படிக்க.. வாழ்க்கையின் அடுத்த பக்கம் கண்முன்னே வந்து நின்றது.

. கூடவே, பாடுபட்டு வளர்த்த பெற்றோர்களை, பரிதவிக்க விடும் சமூக விரோதிகள் மீது கோபம் கொப்பளித்தது.

  இவன் நிலையோ வேறு.

  தான் எத்தனையோ முறை அப்பாவிடம் கெஞ்சியும், அவர் விடாப்பிடியாய் ‘அன்பு இல்லம்’ போய் சேர்ந்து விட்டது இவனுக்கு பெரிய அதிர்ச்சி.   

  கதையின் சில கதாபாத்திரங்கள் சோகமாய், மகிழ்ச்சியாயும். ஏன்? யதார்த்தமாயும் நகர,வண்டி ‘விழுப்புரம்’ வந்தடைந்துவிட்டது.

 “ சாய்.. சாய் “ சத்தம் பெட்டிக்குள்ளும், பெட்டிக்கு வெளியேயும்.

 “ வாழ்க தமிழ். வளர்க தமிழ்” தனக்குள் சிரித்துக்கொண்டான் ராஜேஷ்.  

  மீண்டும் சில நிமிடங்களைத் தொலைத்து விட்டு, ரயில் வண்டியோடு தன் பயணத்தைத் தொடர்ந்தான் ராஜேஷ்.

  வண்டி புறப்பட்டவுடன்,கையில் சிறிய ட்ராவல் பேக்குடன் கருப்பு கண்ணாடி அணிந்த நடுத்தர வயது நபர் தனது பெர்த்தின் அருகே வந்து நிற்க,

  சற்றே எரிச்சலாய், விரித்திருந்த பெர்த்திலிருந்து எழுந்தான் ராஜேஷ்.

  “ தம்பி, என்னுடைய இருக்கை எண் 14.” சுட்டிக்காட்டியவர், பெர்த்தை மடக்கி அமர்ந்தார்.

  ‘ சே! இன்னும் கொஞ்ச நேரம் சுதந்திரமா போக முடியாமப்போச்சே.’  

   முதலில் சற்று சலிப்படைந்தவன், பின்னர்

  ‘ சரி, சரி . ஒரு பேச்சு துணைக்கு.. பொழுதுபோக்குக்கு ஒருத்தர் கிடைச்சிட்டாரு’ எனத் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு..

  “ வணக்கம் சார். நான் ராஜேஷ். கட்டுமானப்பொறியாளர். மதுரை வரை போறேன். நீங்க? “ என வணங்க,

  “ ஓ! மிக்க மகிழ்ச்சி தம்பி. நானும் மதுரை தான் போறேன். ஆ..ஆர்வமா நீங்க ஏதோ புத்தகம் படிச்சிக்கிட்டிருந்தப்போ நான் வந்துட்டேன். “ குறும்பாய்ச் சிரித்தார்.

  “ சார்., உங்க பேரு ? “

  “என் பேரு ரவிச்சந்திரன். நான் ஒரு ஆசிரியர். “ அவரும் வணங்க,கொஞ்ச நேரத்திலேயே பரஸ்பரம் நன்கு அறிமுகமாகிப் போனார்கள்.

  “ ராஜேஷ், உங்க தொழில் எப்படி போயிட்டிருக்கு? “ உரிமையாய் அவர்.  

  “ மணல் குவாரியை, இப்பதான் கடந்த வாரம் அரசாங்கம் அறிவிச்சிருக்காங்க. மண் கிடைக்கிறது ஒரு பொன் கிடைக்கிற மாதிரி ஆயிடுச்சு “ நகைச்சுவையாய் இவன் கூற,

   “ உண்மைதான். நம்ம ஊர்ல கனிம வளங்கள் நிறைய கொள்ளைப் போகுது... மண்ணுங்குற போர்வையில. “

  ‘பளிச்’ சென பதில் ரவியிடமிருந்து.

  “ ரொம்ப சரி சார். ஒரே வரியில உண்மையை உடைச்சிட்டிங்க சார். தப்பா நினைக்காதீங்க. ஒரு சிறுகதை படிச்சிட்டிருக்கேன். பத்து நிமிஷத்துல முடிச்சுட்டுவேன். அப்புறம், நாம பேச்சை தொடரலாமா?” மீண்டும் அவன் புத்தகத்தை கையில் எடுக்க,

  “ பரவாயில்லே தம்பி. உங்களை நான் பாராட்டுறேன். இந்த கால இளைஞர்கள் அதிகமா புத்தகம் படிக்கிறது கிடையாதுன்னு ஒரு கருத்து உலாவுது. ஆனா, நீங்க? “

   “ உங்க கருத்தோடு நானும் உடன்படறேன். எல்லாம் வேகம், எல்லாருக்கும் வேகம் தான் பிடிச்சிருக்கு...நான் உள்பட. ஆனா, இன்னிக்கு பகல் நேர பயணங்கிறதுனால புத்தகம் படிக்க நேரம் குறிப்பா மனசு சொல்லுச்சு. “

  “ ரொம்ப அருமை ராஜேஷ். எப்போதுமே நான் கடைபிடிக்கிற ஒரு விஷயத்தை சொல்றேன். அன்றாடம் ஒரு அரை மணி நேரத்தையாவது தனிமையில, உங்களுக்காகச் செலவு பண்ணுங்க. நான் கண்டிப்பா இதைக் கடைப்பிடிக்கிறேன். அது., புத்தகம் படிக்கிறது, நடைபயிற்சி, இசை கேட்கிறது.. இப்படி”

   கையில எடுத்த புத்தகத்தை மீண்டும் தன் மடியில் கவிழ்த்த ராஜேஷ்,

  “ பிரமாதம் சார். உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. நீங்க சொல்றதை கடைபிடிக்கிறதினால என்ன பலன் கிடைக்கும்? “

   “ ஹ.ஹ.ஹ., இதுதான்பா இப்பவுள்ள நவீன உலகம். எதிலேயும் பயன்,பலன் எதிர்பார்த்து செயல்படற உலகம். தப்பா நினைக்காதே.. பொதுவா சொல்றேன். “

  “ சார் ரொம்ப அசத்துறீங்க. இன்னும் சொல்லுங்க சார் “ உற்சாகமாய்த் தான் அமர்ந்திருந்த சீட்டின் நுனிக்கே நகர,

  “ ராஜேஷ் , என் பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கா? நான் ஓர் ஆசிரியன்.எனக்கு இதானே எல்லாம். ஓடுகின்ற நதி ,அசைகின்ற செடி, கொடி, தவழ்கின்ற தென்றல்.. இப்படி அசைகின்ற எல்லாவற்றையும் நாம அமைதியா, அசையாம ரசிச்சா எப்படியிருக்கும்? “

 “ பிரமாதம் சார். இதுநாள்வரை இப்படி நான் சிந்திச்சதே இல்லை. “  

  “ ராஜேஷ், இனிமே .. இப்பவே தொடங்குங்க. இந்த வினாடிதான் உங்க., நம்ம வினாடி. இது திரும்பக் கிடைக்காது. “ மீண்டும் ரவி சிரிக்க,

  “ சார், எனக்கு ஒரு தனிப்பட்ட பிரச்சினை. உங்க ஆலோசனையைக் கேட்கலாமா? “

  “ நிச்சயமா ராஜேஷ். உங்களுக்கு விருப்பம்னா நீங்க கேட்கலாம். ரொம்ப தனிப்பட்டதா? “ ரவி சற்று தயங்க,

  “ நட்புரீதியில இதை நான் கேட்கிறேன். இது எங்கப்பாவோட செயல்பாடு பற்றியது. எங்கப்பா ரொம்ப தெளிவா செயல்படக் கூடியவரு. எதிலும் நிதானமா முடிவு எடுப்பார். கொஞ்ச காலமா., சரியா சொல்லணும்னா.. எங்க அம்மா தவறிப்போனதிலிருந்து ஒருவித மன அழுத்தத்திலேயே, எங்க கூட சரியா பேச மாட்டேங்கிறாரு.” சொல்லி முடிக்குமுன், ராஜேஷின் குரல் உடைய,

 “ ஐய்யய்யோ . முதல்ல, உங்களை திடப்படுத்திக்கோங்க . நல்லாப் படிச்சு இருக்கீங்க தம்பி. அப்பா மேல இவ்வளவு பாசமா? உண்மையிலேயே அவர் ரொம்பக் கொடுத்து வைச்சவர் ” என்றவராய் ரவி, ராஜேஷைத் தட்டிக் கொடுக்க,

  தன்னுடைய அப்பா வலுக்கட்டாயமாய் ‘அன்பு இல்லம்’ போய் சேர்ந்ததை கூறியவன்,

  “ சார், நான் அப்படி என்ன தப்பு செய்திட்டேன்? எங்க அப்பா மேல, என் மனைவியும் ரொம்ப பாசமா இருக்காங்க. ஆனா, நாங்க ரெண்டு பேரும் இப்போது உள்ள பணம் தேவைக்காக, அவரை வீட்டில தனியா விட்டுட்டு வேலைக்கு போறோம். அது தப்பா? “ மேலும் ராஜேஷ் கண் கலங்க,

  “ சரி தம்பி. ரெண்டு நிமிஷம் நான் பேசுறேன். எது சரி? எது தப்பு? ன்னு பின்னாடி முடிவு எடுங்க. எந்தவொரு விஷயமும் அவங்க , அவங்க பார்வையில சரிதான். உங்க நிலைப்பாடு எதிர்காலத் தேவை அடிப்படையில சரி. நான் ஒத்துக்குறேன். ஆனா ஏத்துக்கல “ அதிர்ச்சியாய் ரவியைப் பார்த்தான் ராஜேஷ்.

  “ஆமா தம்பி. அப்பாவோட பார்வையில இருந்து பாருங்க. நீங்க அவருக்கு ஒரே வாரிசு . அவரோட முக்கால் வாழ்க்கை வரை ஓடி வந்த மனைவி இப்ப இல்லை. அவரோட ஆசையையும், தேவையையும் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்த உங்க அம்மா இப்ப அவங்களோட இல்லை. இது எவ்வளவு பெரிய இழப்பு. வாழ்க்கையில ஒவ்வொன்றும் ஒரு நிலை. அதை அனுபவித்து, கடந்து வரும்போதுதான் அதனுடைய வலி, அனுபவம் புரியும் . “

  “ சார், புரியுது சார். நீங்க நல்லா புரிய வைக்கிறீங்க. “ ‘ சட்’டென ராஜேஷ் கையெடுத்துக் கும்பிட,

  “ வேணாம் ராஜேஷ். நானும் உங்களை மாதிரி ஒரு சராசரி மனிதன்தான். எனக்குள்ள வாழ்க்கை பற்றிய புரிதலை உங்களுக்கு சொல்றேன். அதனால, அவர் எடுத்த முடிவு அவருடைய பார்வையிலே சரி. ஆனா, நீங்க அவரை அப்படியே விட்டுவிடாம , நல்லா அரவணைச்சுப் போகணும். காலம் ஒருவேளை மாறி, அவர் மனம் மாறி திரும்பி வர வாய்ப்பிருக்கு.”

  “ ரொம்ப மகிழ்ச்சி சார். இப்ப எனக்கு தெளிவு கிடைச்சிருக்கு. ரொம்ப நன்றி சார். இதுல என்ன ஆச்சரியம்னா, நான் படிச்சிக்கிட்டிருக்கிற இந்தக் கதையும் இதை ஒட்டியே இருக்கு. “ என்றவனாய் ரவியிடம் புத்தகத்தை நீட்டி,’ பகல் நிலவு’க்கதையைக் காட்டினான்.

  “ கதையை முழுசா படிச்சிட்டீங்களா ரவி? “ ரவி ஆர்வமாய்க் கேட்க,

  “ இல்லை சார். இதோ முழுசா படிச்சிட்டு, அதைப் பத்தியும் பேசுவோம்” எனப் பரபரப்பாய் மீதிக் கதையைப் படிக்கத் தொடங்கினான் ராஜேஷ்.

    எதிர்சீட்டிலிருந்த ரவி, அமைதியாய் ராஜேஷின் உணர்வுகளை, அவன் முகத்தில் படித்தார்.

   பலவித பாவங்களை அவன் முகம் வெளிக்காட்ட, ரவிக்குள் ஒரு ஆச்சரியம்.

   இரயில் வண்டி இப்போது ‘திருச்சி’ ஸ்டேஷனிற்குள் நுழைய, அவசர அவசரமாய்ப் புத்தகத்தை மடித்து, தன் இருக்கையின் மேல் வைத்த ராஜேஷ்,

  “ சார், நான் மதியச்சாப்பாடு வாங்க வெளில போறேன். உங்களுக்கும் வாங்கிடறேன் “ எனப் பாசமாய்க் கேட்டான் .

   “ இல்ல, இல்ல. எனக்கு நானே வாங்கிக்கிறேன். “ மறுத்தவாறு ரவி எழுந்திரிக்க,

  “ தயவுசெய்து மறுக்காதீங்க சார். நீங்க எனக்கு வாழ்க்கையோட புரிதலை கத்துக் கொடுத்திருக்கீங்க. சிறுகதையை படித்து முடிச்சிட்டேன். ரொம்ப சுவாரஸ்யமான முடிவு. இதோ நிமிஷத்தில சாப்பாட்டை வாங்கிட்டு வந்திடறேன். பேசிக்கிட்டே சாப்பிடலாம் “ எனப் பாய்ச்சலாய் நடைமேடைக்கு ஓடிய ராஜேஷைக் கண்டு ஆச்சரியப்பட்டான் ரவி.

  அடுத்து மீண்டும் இரயில் தனது பயணத்தை மதுரையை நோக்கி தொடங்க,

  “ ஆமா, ராஜேஷ்.,அப்படி என்ன சுவாரஸ்யமான முடிவு அந்த கதையில? “

  “ எங்கப்பா மாதிரி ஒரு அப்பா. ஒரு அனாதை இல்லத்தில. ஆனா, என்னைய மாதிரியில்ல அவர் பையன். சொத்துக்காக, தன் சுகத்துக்காக அப்பாவையே அனாதை இல்லத்தில் சேர்த்துட்டு, காசு தேவை வரும்போது அடிக்கடி அப்பாவை தேடி வர்றான்.”

  “ உண்மையிலேயே ரொம்ப சுவாரஸ்யம். ஆமா, முடிவு என்ன? “ ரவியும் ஆர்வத்துடிப்பில் ராஜேஷைப் பார்க்க,

  “ அவங்கப்பா தீர்மானமா, ஒரு சல்லிக்காசு கூட கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார். இதில, கதையோட கிளைமாக்ஸ் தான் கிரேட். “

   “ ராஜேஷ் , சொல்லுப்பா.. சொல்லு. “ உற்சாக உச்சத்தில் ரவி.

  “ தன்னை மாதிரியே, துணை இழந்த ஒரு பெண்ணை அன்போடு அரவணைத்து, திருமணம் செய்ய முடிவெடுத்திடறாரு அந்த அப்பா. “ சொல்லியவனாய் ராஜேஷ் கைதட்ட,

   “ உண்மையிலேயே ரொம்ப அருமை “ ரவியும் சேர்ந்து கொள்ள,

  “ ஒரு முக்கியமான, தனிப்பட்ட விஷயம் சொல்றேன். எங்க அப்பா கூட, நாளைக்கு ஒரு பெண்ணை, அவர் விருப்பப்படி திருமணம் செய்யப்போறாரு. முதல்ல, அவங்கள எங்க அம்மா நிலையில வைச்சு என்னால ஏத்துக்க, ஏன்? நினைச்சுக்கூட பார்க்க முடியலை. ஆனா, உங்களோட பழகினதுக்கப்புறம் , நீங்க எடுத்துச் சொன்னதைக் கேட்டதும், எனக்கு எங்க அப்பாவோட நிலைமைப் புரிஞ்சது . சார்., ஒரு விண்ணப்பம். நாளைக்கு, நீங்க கண்டிப்பா எங்க அப்பாவோட மறுமணத்துக்கு வரணும். “ என ரவியின் கைப்பிடித்துக் கேட்க,

  “ என்ன தம்பி ., இப்படி திடீர்னு கேட்டுட்டீங்க? ஆமா , இந்தக் கதையும், அதனோட முடிவும் உங்களை பாதிச்சது இல்லையா?”

  “ நிச்சயமா. இந்த புத்தகத்தோட கதாசிரியரை, நான் கண்டிப்பா பாராட்டணும்.” என ராஜேஷ் கூற,

 “ எப்பவுமே தம்பி, பாராட்டை தள்ளிப் போடவே கூடாது. அவருடைய அலைபேசி எண் ஏதாவது? “

 “ இருக்கு. இப்பவே..” முகம் முழுவதும் சந்தோஷ உற்சாகத்தில், தன் அலைபேசியில் ஆசிரியரின் எண்ணை தட்டினான் ராஜேஷ்.

  ‘ யார் அழைப்பது? யார் அழைப்பது? ’ பாடல் கேட்டது எதிர் சீட்டு ரவியின் அலைபேசியிருந்து.

  “ தம்பி.. வாழ்த்துக்கள். அது என்னுடைய எண் தான். இப்ப, மேலும் ஒரு சுவாரஸ்யமான முடிவு சொல்றேன்.. கதைக்கல்ல., உங்களுக்கு. திருமணம் செய்த கையோட, உங்க அப்பாவையும் உங்க அம்மாவையும் தனிக்குடித்தனம் வெச்சு அழகு பாருங்க .ஏன்னா., அவங்க ஓர்         ‘ ‘புதுநிலவு'. அதில கிடைக்கிற சந்தோஷம் அவங்களுக்கு மட்டுமில்ல உங்களுக்கும்தான். எனக்கும் இது மறக்க முடியாத புதுஅனுபவம் . மதுரை வந்திடுச்சு “ சொல்லிய கதாசிரியர் ரவிச்சந்திரன் உற்சாகமாய் வாய்விட்டு சிரித்தவாறே,

  “ நாளைக்கு அவசியம், உங்கப்பா கல்யாணத்துக்கு நான் வர்றேன்” என ராஜேஷின் கையைக் குலுக்க , பேச வார்த்தையில்லாது சிலையாகிப் போனான் ராஜேஷ்.

                -0-0-0



Rate this content
Log in

Similar tamil story from Classics