உதிராப் பூக்கள்
உதிராப் பூக்கள்


உதிராப் பூக்கள் / நறுமணம்!!!
“சுகுணா, ஆபீஸ்க்கு நேரமாச்சு. இன்னும் என்ன பண்ணிட்டிருக்க” அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது.
“இதோ. ரெடியாயிட்டேன்மா” என்றவாறு தான் புதிதாய் வாங்கி வைத்திருந்த சுடிதாரை உடுத்திக்கொண்டு, ஒருமுறை கண்ணாடி முன் நின்று சரிப்பார்த்துக் கொண்டாள்.
சமையலறையை ஒட்டிய டைனிங் டேபிளில் அவள் வந்தமர்ந்தாள் காலைச் சிற்றுண்டியை உண்பதற்கு. அம்மா சமையலறையிலிருந்து வெளிவந்து சுகுணாவை உற்றுப் பார்த்தாள். அவள் தன் கண்கள் கலங்கியதை மறைத்துக் கொண்டு, தட்டை வைத்து, இரண்டு இட்லியும், சட்னியும் வைத்துவிட்டு சுகுணாவின் அருகில் அமர்ந்தாள். அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அவளையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். சுகுணா சாப்பிட்டு முடித்து கையை கழுவிவிட்டு, டைனிங் டேபிளிலிருந்த மதிய உணவை எடுத்து ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டு “போயிட்டு வரேன்மா. சாயந்திரம் சீக்கிரம் வந்துடுவேன். ரெடியாயிருங்க. வந்தவுடனே பக்கத்தில் இருக்கிற சிவன் கோயிலுக்கு போயிட்டு வந்துரலாம்” என்று சொன்னபடியே, வாசலில் நிறுத்தியிருந்த தனது காரை உறுமவிட்டு கிளம்பினாள் தன் அலுவலகத்துக்கு.
சுகுணா வாழ்க்கையின் சுக துக்கங்களை எல்லாம் தன் இருபத்து மூன்று வயதிற்குள்ளேயே பார்த்தவள். தன் இருபத்தோராவது வயதில் அவளுக்கு திருமணம் நடந்தது. திருமணமான முதல் இரு வருடங்களும் அவளின் வாழ்க்கை போல வேறு எவருக்கும் அமைந்திருக்காது என்றே சொல்லலாம். உலகத்தில் உள்ள அத்தனை சுற்றுலா தளங்களையும் கண்டு ரசித்தனர் சுகுணாவும், அவளது கணவருமான சேகரும்.
சேகர் நல்ல வளமான, செழுமையான, அன்பான குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டிற்கு அவன் ஒரே பிள்ளை. அதை நல்ல முறையில் பயன்படுத்தி, அவனுக்கென தனித்ததொரு நிறுவனம் தொடங்கி அந்த வியாபாரத்தில் வெற்றியும் பெற்றான். அவனின் நிறுவனத்தில் இளம் கணக்காளராய் பணிப்புரிந்த பெண்தான் சுகுணா.
சுகுணாவின் குடும்பமோ மிக ஏழைப்பட்ட குடும்பம் என்று சொல்ல முடியாது. வரும் வருமானத்தில் அவளின் தந்தை, தாய், அண்ணன் மூவரும் வாழ்ந்து வந்தனர். அண்ணன் கார்த்திக் மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி கிடைத்து, அங்கேயே ஒரு பெண்ணை விரும்பி திருமணம் செய்துக் கொண்டான். மாதா மாதம் வீட்டுக்கு சரியான தேதியில் அவன் சம்பளத்தின் ஒரு பாதியை அனுப்பிவிடுவதோடு அவன் கடமை முடிந்தது என்று எண்ணிக் கொண்டான்.
சுகுணா தன் பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே, சேகரின் புதிதாய் தொடங்கிய நிறுவனத்தில் இளம் கணக்காளராய் பணியில் சேர்ந்தாள். அங்கே தான் இருவருக்கும் மனமொன்று பட்டு, பெற்றோர்களின் ஆசியோடு திருமணமும் நடைபெற்றது. தொடர்ந்து மேற்படிப்பை அஞ்சல் வழிக்கல்வியில் படித்தும் வந்தாள்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து, மூன்றாம் ஆண்டு தொடங்கிய நாளன்று அவர்கள் வழக்கம்போல உலக சுற்றுலா பயணத்தை மேற்கொண்டனர். ஸ்விட்சர்லாந்து, இந்த உலகத்திலேயே அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம். முழுக்க முழுக்க பனிப்பிரதேசமான அந்த ஊர்தான் சுகுணாவின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு இடமாய் அமைந்தது.
அவர்கள் அங்கு போன இரண்டாம் நாளிலேயே, சேகருக்கு கடும் குளிர்க்காய்ச்சல் ஏற்பட்டது. உலகின் முன்னணி மருத்துவமனையின் உதவியும் வழங்கப்பட்டது. ஆனால் எதுவும் பயனளிக்காமல் மிக இளம் வயதிலேயே, அதுவும் திருமணமான இரண்டு ஆண்டுகளிலேயே, அவன் உயிர் இவ்வுலகைப் பிரிந்தது.
இது நடந்து ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவள் தன் கணவரின் வீட்டில்தான் இருந்து வருகிறாள். தன் கணவரின் தாயை, தன் தாயாக எண்ணி, அவளைத்தான் இவள் அம்மா என்று அழைத்துக்கொண்டிருக்கிறாள்.
எத்தனையோ முறை தன் மாமியார், சுகுணாவை மறுமணம் செய்துக்கொண்டு வாழுமாறு வேண்டிக் கொண்டாள். ஆனால் அவள் எதற்கும் தலையசைக்கவில்லை. இதுவே அவர்களின் வருத்தத்துக்கு மிக முக்கிய காரணம்.
சுகுணா என்றுமில்லாது, பல வருடங்கள் கழித்து சுடிதார் போட்டு தன்னை அழகுப்படுத்தி கொண்டதே, அவளின் மாமியாரின் ஆனந்தக் கண்ணீருக்கு காரணம். சுகுணா இன்னமும், சேகரின் நிறுவனத்தை தன் நிறுவனமாக எடுத்து நடத்தி இலாபம் சம்பாத்தித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.
மறுமணம் பற்றி பலரும் பலவிதமாக கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எவரும் அதை ஒரு புரட்சியாய் முன்னிறுத்தியதில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. இந்த சமூகத்தின் பார்வையில் இருக்கும் கோளாறுகளே இதன் அடிப்படை பிரச்சினைக்கு காரணம். மதம், கலாச்சாரம் போன்ற காரணங்களை மறுமணங்களின் மீது திணிக்கப்பட்டு, அது ஏதோ தீண்டத்தகாத விசயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
ஒரு ஆண், தன் மனைவியை இழந்தால் மறுமணத்திற்கு சம்மதிக்கும் இந்த சமூகம், ஒரு பெண் தன் கணவணை இழந்தால், மறுமணத்திற்கு ஆயிரத்தெட்டு குற்றங்களை கண்டறிந்து, அந்த பெண்ணின் வாழ்க்கை அந்த வயதிலேயே முடிந்துவிட்டதொரு பிம்பத்தை ஏற்படுத்திவிடுகிறது.
பெண்ணுக்கு பொட்டு, பூ, ஆடை அணிகலன்கள் எல்லாம் பிறந்தது முதலே அடையாள சின்னங்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட ஆசைகள். கணவனை இழந்ததும் இதையெல்லாம் துறக்க வேண்டுமென்பது சமூக கொடுமையின் உச்சக்கட்டம்.
சுகுணாவிற்கும் இந்த சமூகத்தைக் கண்டுதான் பயமேயோழிய, அவளின் மாமியாரும் சரி, அவளின் பெற்றோர்களும் சரி, அவளின் மறுமணத்திற்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுகுணாவிற்கு சேகருடன் வாழ்ந்த அந்த இரு வருடங்களே தன் வாழ்க்கைக்கு போதும் என்று தோன்றியிருந்ததும் ஒரு காரணம் தான்.
அந்த நேரத்தில் தான், தன்னுடன் படித்தவனுமான, பள்ளியில் சக நண்பனான செழியன் அவளின் அலுவலகத்துக்கு வேலைத் தேடி வந்திருந்தான். நேர்முகத் தேர்வின்போது தான் அவனை அடையாளம் கண்டு கொண்டு, அங்கேயே பணியமர்த்தினாள் சுகுணா.
செழியன், சுகுணாவின் வாழ்க்கைப் பற்றி அந்த அலுவலகத்தில் பணியாற்றிய சக ஊழியர்களின் மூலம் தெரிந்து மனம் உடைந்துப் போனான். அவ்வப்ப
ோது அவளுக்கு தன்னாலான உதவியும் செய்து வந்தான். சில மாதங்களுக்குள், அவர்கள் இருவரும் மிகவும் நட்பாக நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.
அலுவலக அலுவல் காரணமாக சுகுணாவும், செழியனும் வெளியூர் செல்ல நேர்ந்தது. வேலை முடிந்து அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலுக்கு வந்து சேர்ந்தனர். அப்போது, செழியன் சுகுணாவிடம், தான் தனிப்பட்ட முறையில் பேச வேண்டுமென்று கூறினான்.
சுகுணாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. “என்ன திடீரென்று” என்று கேட்டாள்.
“அது ஒண்ணுமில்லை சுகுணா. நீங்க உன் கணவனை இழந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாயிடுச்சு. உங்க வீட்டுலையும் ஒரு ஆண் துணையும் இல்ல... ரொம்ப நாளாவே இதப் பத்தி உங்ககிட்ட பேசனும்னு தோணும். ஆனா, சரியான சந்தர்ப்பம் அமையலை. அதனால தான் இப்போ......” என்று இழுத்துப் பேசினான்.
சுகுணாவுக்கோ செழியன் எதைப்பற்றி பேச போகிறான் என்பது கொஞ்சம் விளங்கியது. அவளுக்கு நெஞ்சில் பதற்றம் ஏற்பட்டு இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. “அதனால...” என்று கேட்டாள்.
“நீங்க ஏன், ஒரு குழந்தையை தத்தெடுத்துக்க கூடாது சுகுணா. உங்க வீட்டுலயும் உங்களுக்கு அப்புறம் யாருமேயில்லை. அதனால உங்களுக்கும் எதிர்காலத்துல ஒரு துணையிருக்குமில்லையா? அதனால தான் சொன்னேன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க, நான் சொன்னது பிடிக்கலைன்னா”
சுகுணாவிற்கு தன் வயிற்றில் பால்வார்த்ததுப் போல் இருந்தது. இதுவரை மறுமணம் என்ற பேச்சை மட்டுமே எல்லோரிடத்திலும் கேட்டு புளித்துப் போன ஒரு விசயமாய் இல்லாமல், செழியனின் பேச்சு அவளுக்கு ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. செழியனின் மேல் அவளுக்கு ஒரு புதிய நம்பிக்கையும் ஆறுதலும் கிடைக்கும் எண்ணம் மேலோங்கி, வார்த்தைகளினால் சொல்ல முடியாத ஒரு மரியாதையையும் அவன் மேல் ஏற்பட்டது.
“நீங்க எதுவும் தப்பாக சொல்லவில்லை செழியன். நான் இதுப்பற்றி, இதுவரை எதுவும் யோசித்ததில்லை. உங்கள் கருத்து யோசிக்கப் படவேண்டிய ஒன்று தான். நிச்சயம் ஊருக்கு போனவுடன் இதைப்பற்றி அம்மாவிடம் பேசிவிட்டு சொல்கிறேன்” என்று கூறிவிட்டு இதுவரையில்லாத ஏதோ ஒரு மகிழ்ச்சி மனதில் ஏற்படுவதை சுகுணா உணர்ந்தாள்.
அடுத்த வாரம், ஊருக்கு வந்தது முதல் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த மாற்றம் என்ன என்பது அந்த அம்மாவுக்கு தெரியவில்லை. ஒருவேளை மறுமகள் யாரையாவது விரும்புகிறாளா என்ற சந்தேகம் வந்தது. அப்படியாவது இந்த பெண்ணுக்கு ஒரு விமோட்சனம் வராதா என்று ஏங்கிக்கொண்டு தான் இருந்தாள்.
அன்று தான், புதிதாய் சுடிதார் அணிந்துக்கொண்டு அழகாக தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு அவள் வேலைக்கு புறப்பட்டது. அன்று மாலை அவள் வீட்டுக்கு வந்தவுடன், அவளும் அம்மாவும் கோவிலுக்குச் சென்று சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, சுகுணா அம்மாவிடம் “அம்மா, என்னோட எதிர்காலத்தை பத்தி உங்கக்கூட கொஞ்சம் பேசலாம்னு தான் கோவிலுக்கு வந்தேன்” என்று ஆரம்பித்தாள். அம்மாவுக்கு மனதில் சந்தோசம் அதிகமாகியது.
“அம்மா, நம்ம நிறுவனுத்துல வேலை பார்க்கிறாரே செழியன், அன்னைக்கு கூட செக்குல கையெழுத்து வாங்க வீட்டுக்கு வந்தாரே, அவர் தான் ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்” என்றவுடன் அம்மாவுக்கு இருப்பு கொள்ளவில்லை. உடனே, தன் மருமகள் அவனை விரும்புவதாகவும், திருமணம் செய்துக் கொண்டு காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது போலவும் கனவு காண தொடங்கிவிட்டாள் சந்தோஷத்தில்.
“தயங்காம சொல்லுமா?” என்று ஆவல் தீராமல் கேட்டாள்.
“அவர் தான் ஊருக்கு போயிருந்த போது சொன்னார். எத்தனை நாள்தான் தனியாக இருக்கப் போகிறீர்கள் என்று. அதனால், ஒரு குழந்தையை தத்தெடுக்கலாமே என்றார்”
அவள் அப்படி கூறியதும், அம்மாவுக்கு கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. “உன் இஷ்டப்படி செய்யுமா” என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சுகுணாவைப் பற்றியும், செழியனைப் பற்றியும் அம்மா தன் இதயத்தில் ஒரு கோவிலே கட்டிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.
மறுநாள், “அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில்” சுகுணாவும் செழியனும் சென்று தேவையான தகவல்களையெல்லாம் கொடுத்துவிட்டு, மூன்று மாதங்களே ஆன ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வந்தனர்.
ஒரு பூ உதிர்ந்துவிடுவதாலும், பறிக்கப் பட்டாலும் அந்த செடியும் கொடிகளும் தன் கடமையிலிருந்து தவறுவதில்லை. அடுத்த பூவும் அதில் பூக்கத்தான் செய்யும். நல்ல வாசமும் கொடுக்கத்தான் செய்யும்.
அதுபோல ஒரு வாழ்க்கை முறிந்தால் அடுத்த வாழ்க்கை என்று ஒன்று உண்டு. அதை தேர்ந்தெடுப்பது நம் கையில் தான் உள்ளது. உலகத்தில் ஆதரவற்ற எத்தனையோ பேர் இன்னும் வளர்ந்தும் வாழ்ந்தும்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வு வளம்பெறவும் மனிதர்களாகிய நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கணவனால் கைவிடப்பட்டவர்களும், கணவன் அல்லது மனைவி இறந்துபோனவர்களும், மறுமணம் புரிந்துக் கொள்வது தவறே இல்லை. அது அவரவர்களின் மனநிலையைப் பொறுத்தது. அதனால், அப்படிப்பட்டவர்கள், ஆதரவற்ற எத்தனையோ பேர் இருக்க அதில் ஓரிருவரையாவது தத்தெடுத்துக் கொண்டால், அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு நல்ல தாய், தந்தை கிடைக்கும் மற்றும் அவர்கள் வாழ்விலும் வசந்தம் ஏற்படும்.
பூக்கள் உதிர்வதும் மீண்டும் பூப்பதும் இயற்கையே. உதிர்ந்த பூக்களெல்லாம் மாலையானாலும், கீழே வீணாய் கிடந்தாலும் அதன் வாசம் மாறப்போவதில்லை. பூக்கள் பறிக்கப்படவில்லையெனில் அதன் அழகே தனி தான். அந்த இடத்தை சுற்றிலும் நறுமணம் வீசிக்கொண்டே இருக்கும். அதுவே இந்த உதிராப் பூக்கள்.
சுகுணா மற்றும் செழியனின் செயலால், ஒரு குழந்தைக்கு இன்று ஆதரவு கிடைத்திருக்கிறது. அந்த குழந்தையின் நறுமணம் அந்த வீட்டில் இனி நிரந்தரமாய் இருக்கும். இதைவிட நறுமணம் வாழ்வில் வேண்டுமா என்ன?