AGATHIYAN ANBARASU

Abstract Drama

5  

AGATHIYAN ANBARASU

Abstract Drama

காத்திருப்பு

காத்திருப்பு

4 mins
109


காலம் - காத்திருப்பு 


“காத்திருந்து காத்திருந்து... காலங்கள் போகுதடி... பூத்திருந்து பூத்திருந்து....” வானொலியில் பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது அந்த தேனீர்க்கடையில். 


சுந்தரமும் மோகனும் அந்த கடையில் விடியற் காலையில் ஒன்றாய் அமர்ந்து தேனீர் அருந்துவது வழக்கம். இன்றும் அதே போல ஒரு தினசரி நாளிதழை புரட்டிக் கொண்டே இருவரும் வாதங்கள் புரிந்து கொண்டிருந்தனர்.


“மோகன், தினமும் நானும் பார்க்கிறேன். இந்த நாளிதழில் தினமும் ஒரு கற்பழிப்பு அல்லது பாலியல் பலாத்காரச் செய்தியாவது வந்துடுது. நம்ம நாடு ஏன் இப்படி மாறிப்போச்சு”


“சுந்தரா, நம்ம நாடு எப்படி மாறிப் போயிடுச்சுன்னு சொல்ற. இது ஒண்ணும் புதுச் செய்தியில்லையே. மகாபாரதம் காலத்துலையே இது நடந்திருக்கு. அப்படி இருக்கும்போது, இப்போ நடக்குறதுல என்னத்த புதுசா கண்டுட்ட”


“டேய் என்னடா சொல்ற, மகாபாரத காலத்துலையே இப்படி நடந்துருக்கா”


“மகாபாரதத்துல மட்டும் இல்ல, நம்ம சரித்திரத்திலையே நிறைய நடந்திருக்கு. அதாவது ஒரு 20 வருசத்திற்கு முன்னாடி வரைக்கும், நிறைய பேர்கிட்ட டிவி இல்லை, போன் இல்லை... அதனால நிறைய விசயங்கள் நமக்கு தெரிஞ்சுக்க முடியலை. ஆனா இப்போ, பல் தேய்க்குறத முதற்கொண்டு எல்லாத்தையும் சமூக வளைத்தளத்துல போட்டுறானுங்க. அதனால ஊரு உலகத்துல நடக்குற எல்லா விசயமும் சீக்கிரமா தெரிஞ்சு போயிடுது”


“ஆமாமா. நீ சொல்றதும் வாஸ்தவம்தான். அதுவும் டிக்டாக்னு ஏதோ ஓன்னு இருக்குதாமே, ஊரு உலகத்தில இருக்குற எல்லா பசங்க பொண்ணுகளும், தான்தான் ஏதோ எஸ்.பி.பீக்கு சீடன்ற மாதிரி பாட்டு பாடிட்டு திரியுறானுங்க. இன்னும் சில ஜென்மங்க இருக்கு. அதுங்க, குத்துப்பாட்டுக்கு சிவாஜி டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும், அந்த மாதிரி ஆடிக்கின்னு திரியுதுங்க. ஆமாம் மகாபாரதத்துல என்ன விசயமிருக்கு சொல்லு?”


“மகாபாரதத்துல பாஞ்சாலியை துச்சாதனன், சபை நடுவிலயே சேலையை உருவுனுது, பீஷ்மர் என்ற பிதாமகர், அம்பை, அம்பிகை, அம்பாலிகைன்ற இளவரசிங்கள நோய்வாய் பட்டுருக்குற அவரோட நாட்டு இளவரசருக்கு கல்யாணம் செய்ய தூக்கிகிட்டு வந்தது, பாஞ்சாலி வனவாசத்துல இருந்தப்ப செயத்ரதன் அவளை தூக்கிட்டு போய் செருப்படி பட்டது, ஏன், இராமாயணத்துல கூட இராவணன் சீதையை அவ சம்மதமில்லாம தூக்கிட்டு போனது, இதெல்லாம் கூட பாலியல் வன்கொடுமைல தான வரும்”


“என்ன கொடுமை சார் இது? மோகன், அப்போ இப்ப நடக்குற எல்லாத்துக்கும், அதுலாம்தான் காரணம்னு சொல்றியா?”


“நான் அப்படி சொல்ல வரலை. அதாவது அந்த காலத்துல நடந்த விசயத்தை புராணங்களா நமக்கு கொடுத்துருக்காங்க சுந்தரா. அதனால அதை வச்சு நாம பாடத்தை கத்துக்கணும். ஆனால், நாம என்ன பண்றோம்? அதையே காரணமா வச்சிகிருக்கோம். ஒரு பொண்ணை அவளோட விருப்பம் இல்லாத தொடக்கூடாது. அப்படி தொட்டா அவன் ஆம்பளையே இல்லை. ஒரு விசயத்தை பத்தி பயப்படுறவன் தான் அதையே நினைச்சிக்கிட்டு இருப்பான். அப்போ எப்பப் பார்த்தாலும், பொண்ணு காமம் இதையே நினைச்சிக்கிட்டு இருக்குறவனுக்குள்ள நிச்சயமா அதைப் பற்றின ஒரு பயம் இருக்குறதால தான் அதை செய்யிறான். அதனாலதான் அவன் அந்த தப்பையே பண்றான்”


மோகன் தொடர்ந்தான். “இதே ஒரு 20 வருசத்துக்கு முன்னாடி, தினமும் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புன்னு செய்தி படிச்சிக்கிட்டா இருந்தாங்க. இல்லையே... ஏன், அப்போ அதெல்லாம் நடக்கலையா? ஏன்னா பல விசயங்கள் அப்போ அவ்வளவு வேகமா பரவலை. முன்னவிட இப்போ கொஞ்சம் குறைஞ்சிருக்ககுமோன்னு கூட தோணுது. ஆனால் எதையும் சொல்றதுகில்லை”


“மோகன், அப்போ இது குறைவதற்கு என்னதான் வழி. விழிப்புணர்வு ஏற்படுத்தலாமா இதைப்பத்தி. அப்போ கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்குல்ல”


“சுந்தரா, விழிப்புணர்வு அப்படின்ற வார்த்தையே தவறு. விழிப்புணர்வுன்ற பேர்ல நீ என்ன சொல்லுவ மத்தவங்ககிட்ட... இனிமே இப்படியெல்லாம் யாரும் பண்ணாதீங்கண்ணா??? விழிப்புணர்வு என்ற வார்த்தையே பலரை ஏமாற்றும் யுக்திதான். நமக்கும் நம் மக்களுக்கும் தேவை விழிப்புணர்வு அல்ல, புரட்சி... புரட்சி மட்டுமே இது போன்ற குற்றச் செயல்களை தடுக்கும்”


“மோகன். நீ என்னடா திடீர்னு, பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி பேசுற புரட்சி அது இதுன்னு”


“சுந்தரா, மகாத்மா காந்தி போல அகிம்சையை கடைப்புடிச்சோம்னு வச்சுக்க, இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகும் இந்த பாலியல் குற்றங்களை தடுக்க. குற்றம் பண்ற அத்தனை பேரையும் பாரபட்சம் பாக்காம தண்டிக்கணும். குற்றம் செஞ்சவன் வயசு குறைச்சலு, அதனால தையல் இயந்திரம் கொடுத்து அனுப்பிவைச்சா, எப்படி இந்த மாதிரி குற்றங்களை நிறுத்த முடியும்”


“சரி தான். சில விசயங்களை தடுக்குறதுக்கு புரட்சிதான் தேவை”


“நாடு சுதந்திரம் அடைவதற்கு அகிம்சை தேவைப்பட்டது. நாட்டுக்கு சுதந்திரமும் கிடைத்தது. நம் பெண் சொந்தங்கள் சுதந்திரம் அடைய, புரட்சி ஒன்றே தேவையான ஒன்று. இனி வரும் ஆண்டுகளில் அவர்களுக்கு முழுச்சுதந்திரமும் கிடைக்கும், பாலியல் பலாத்காரம் மற்றும் வன்கொடுமையிலிருந்து. அந்த காலமும் வரத்தான் போகிறது கூடிய விரைவில்”


“சரியா சொன்ன மோகன். ப்பா.... என்னா வசனம்... என்னா வசனம்... பேசாம நீ படத்துக்கு கதை எழுத போயிடலாம். ஆமா மறந்தே போயிட்டேன், நாளைக்கு படத்துக்கு போலாம்னு கேட்ட. என்ன படம், எத்தனை மணிக்கு எதுவும் சொல்லவேயில்லை”


“சாயங்காலம் வேலையை முடிச்சிட்டு போன் பண்றேன் சுந்தரா. சரி. கிளம்பலாமா”


“கிளம்பலாம் டா. எனக்கும் நேரமாச்சு. வரேன் மோகன்”.


இன்றைய இளைஞர்களின் புரட்சிப் பேச்சுக்கள் வீணாய் இப்படித்தான் காற்றில் பறந்து விடுகிறது. உண்மையான புரட்சியை எக்காரணம் கொண்டும் திசை திருப்புதல் கூடாது. புரட்சி என்று கூறிவிட்டு அதைச் செயல்படுத்தாமல் போனால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.


பெண்களே நம் நாட்டின் செல்வங்கள் மற்றும் கண்கள். அதை காத்திட நினைக்காமல்கூட இருக்கலாம். ஆனால் கெடுக்க நினைக்கக்கூடாது. 


என்றாவது ஒருநாள் இந்த புரட்சி வெடிக்கும். அப்போது நிச்சயம் நம் சகோதரிகளுக்கு சுதந்திரம் கிடைக்கும். காலம் மாறும். காத்திருப்போம். 


“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி... பாடல் நேயர் விருப்பமாக மறுஒலிபரப்பு செய்யப்படுகிறது” என்று அந்த தேனீர் கடையின் வானோலி ஒலித்துக் கொண்டிருந்தது. 


Rate this content
Log in

Similar tamil story from Abstract