AGATHIYAN ANBARASU

Drama Tragedy Inspirational

4.5  

AGATHIYAN ANBARASU

Drama Tragedy Inspirational

அவமானம் - முதுமையில்

அவமானம் - முதுமையில்

6 mins
178சென்னையிலுள்ள ஒரு பெரிய ஓட்டலின் அரங்கம் முழுதும் மக்கள் கூட்டம். காண்போரைக் கண் கூச்சச் செய்யும் வண்ண விளக்குகள். மேடையில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் சில முக்கிய அமைச்சர்கள். இவர்களுக்கு மத்தியில், வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டும் காலில் கருப்பு நிற ஷூவும், அணிந்து மிக மரியாதையுடன் மேடையில் அமர்ந்திருந்தார் சமூக சேவகர் செழியன்.


“பாராட்டு விழா. சமூக சேவகர் செழியனுக்கு பாராட்டு விழா. நாள்தோறும் தொலைக்காட்சியில் இடம் பெறும் ஒரு முக்கிய செய்தியாக மாறிய சமூக சேவகர் செழியனுக்கு நம் மாநில முதல்வரால் பாராட்டு விழா நடைபெறுகிறது” என்று விழா அமைப்பாளர் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார். 


“சமூக சிந்தனையே சிறந்தது என்று தான் படிக்கும் காலத்திலிருந்தே பல சேவைகளில் ஈடுபட்டு, ஈடுபட்ட அத்தனை சேவைகளிலும் வெற்றிப் பெற்று, உழைப்பால் அனைவரையும் தன்பால் ஈர்த்த மாமனிதர் செழியனுக்கு இந்த தங்கப்பதக்கத்தை ஆளுநர் வழங்குவார் மற்றும் தமிழக முதல்வர், செழியனுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவிப்பார்” என்றவுடன் விண்ணை அதிரும் கர ஒலி பிறந்தது. இடி இடித்தது போன்று விண்ணை முட்டும் வாழ்த்தொலிகள் “செழியன் வாழ்க! செழியன் வாழ்க” என்று அந்த ஓட்டல் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது. 


திடீரென்று காதை அடைக்கும் ஒரு சத்தம் ஏற்பட்டதால் பதறி எழுந்த செழியனுக்கு தான் கண்டது கனவு என்று அப்போதுதான் உரைத்தது. 

“விடியற்காலையில் என்ன இப்படியொரு கனவு, விடியற் காலைக் கண்ட கனவுகள் எப்படியும் ஒரு வாரத்திற்குள் பலிக்குமாம்; நல்லது நடந்தால் சரி” என்று படுக்கையிலிருந்து எழுந்து தன் இரண்டு கைகளையும் ஒன்றாய் இணைத்து, நன்கு தேய்த்துவிட்டு முகம் முழுக்க அந்த சூட்டைப் பரப்பி கண்களை மெதுவாக திறந்து அலைபேசியை ஒளிரச் செய்து நேரத்தைப் பார்த்தான். மணி காலை 5.30 நிமிடம் என்றிருந்தது. “இன்று சற்று அதிக நேரம் தூங்கிவிட்டோமோ” என்று நினைத்துக்கொண்டே உடனே படுக்கையை உதறி எழுந்துவிட்டு, பல் தேய்த்து முகம் அலம்பி, அரை நிக்கரை எடுத்து அணிந்துக்கொண்டு, வழக்கமாக போகும் அருகிலுள்ள பூங்காவில் நடைபயணத்தை மேற்கொண்டான். 


நடைப்பயிற்சிக்கு பின்பு சிறிது நேரம் மூச்சுப்பயிற்சி என்று முடித்துவிட்டு வீட்டை அடைந்து, குளித்து உணவருந்தி, உடையணிந்து கிளம்புவதற்கு மணி எட்டு ஆகியிருந்தது. 


செழியன் ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞரிடம் ஜூனியராக பணிப்புரிந்து வருகிறான். கூடவே மாலையில் தனியாக, ஒரு இலவச சட்ட மையமும் வைத்து நடத்திக் கொண்டு வருகிறான். 


அன்று மாலை பணியைவிட்டு இருச்சக்கர வாகனத்தில் வரும்போது எதிரே ஒரு முதியவரை இரண்டு இளைஞர்கள் வழிமறித்து தகராறில் ஈடுப்பட்டிருந்தனர். அதனை கண்டும் காணாததுப் போல பலர் சென்று கொண்டிருந்தனர். செழியனுக்கு இயற்கையிலேயே கொஞ்சம் இரக்கக் குணம் அதிகம். அதனால், இந்த இரண்டு இளைஞர்களையும் விலக்கிவிட்டு முதியவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சாலையில் ஓரத்தில் உட்கார வைத்தான். அந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் அவர்களிடம் சென்ற செழியன் “ஏன் இந்த பெரியவரிடம் தகராறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டான். 


அதற்கு அவர்களில் ஒருவனான ராமு “நீ யார்? உனக்கு என்ன பிரச்சினை” என்று செழியனை நோக்கி கேட்டான். 


“நடுரோட்டிலே ஒரு முதியவரிடம் தகராறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள். என்ன என்று கேட்டால், நீ யாரென்று என்னை எதிர் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். ஏன் இந்தப் பெரியவரிடம் தகராறு செய்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று மீண்டும் சற்று அதட்டலாக கேட்டான் செழியன்.


“அவர் எங்கள் தாத்தா, நாங்கள் இருவரும் அவரின் பேரன்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார். அதனால், நாங்கள் அவரை வலுக்கட்டாயமாக எங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரை கூப்பிட்டுக் கொண்டிருந்தோம்” என்றனர் அதில் ஒருவனான சோமு. 


“தாத்தா என்கிறீர்கள். அதற்காக அவரை ஏன் இப்படி கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும். சரி. கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான் என்னவென்று விசாரித்து பிறகு உங்களுடன் அனுப்புவதா வேண்டாமா என்று தீர்மானிக்கிறேன்” என்று கூறிவிட்டு அந்த முதியவர் அமர்ந்திருந்த இடம் நோக்கிச் சென்றான் செழியன்.


“தாத்தா என் பேரு செழியன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். இவர்கள் இருவரும் உங்களை தங்கள் தாத்தா என்று சொல்கின்றனர். ஆனால், நடுரோட்டில் நடந்துக் கொள்ளும் முறை கொஞ்சமும் சரியில்லை. நீங்கள் சொல்லுங்கள் அவர்கள் உங்கள் பேரன்களா?” என்று வினாவைத் தொடுத்தான். 


அந்த முதியவர் சற்று தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்துக் கொண்டு விம்மத் தொடங்கினார். அவர் ஏன் இப்போது அழுகிறார் என்று செழியனுக்கு புலப்படாமல் போகவே, “தாத்தா என்ன ஆச்சு உங்களுக்கு. ஏன் இப்ப அழறீங்க” என்று பொறுமையாக கேட்டான். 


அதற்குள் ராமுவும் சோமுவும் செழியனை நெருங்கி “பாஸ், அவர் எங்க தாத்தா தான். அதற்காக உங்களுக்கு எங்க வீட்டு ரேசன் கார்டெல்லாம் காமிச்சுதான் நீரூபிக்கணும்னு அவசியமில்லை. தாத்தா ஏந்துரி, கண்டவன் கிட்டல்லாம் என்னை பேச்சு வாங்க வச்சுகிட்டு. ஒழுங்கா விட்லயே இரு. எங்கனாவது ரோடுல போய் திரிஞ்சுகிட்டுருந்தன்னு வை, கால கைய ஒடச்சி உக்கார வச்சிடுவேன். ஜாக்கிரதை” என்று கூறிவிட்டு “ரோட்டுல எவனாவது எப்படியாவது போறான் உனக்கென்ன, மூடிக்கிட்டு கிளம்பு” என்று செழியனைப் பார்த்து சொன்ன நொடியில் சோமுவின் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்தது. செழியனின் கைக்கு லேசாக வலியும் எடுத்தது. 


“தம்பி, தம்பி... ஏன் அடிக்கிறீங்க அவங்களை. அவனுங்க என் பேரன்தான்” என்றார் முதியவர்.


“தாத்தா, என்ன ஆச்சுன்னு நீங்க சொன்னீங்கன்னா தான் தெரியும். சொல்லுங்க?”என்றான் செழியன்.


“என்னத்த சொல்ல தம்பி. வாழுகிற காலம் வரைக்கும் இவனுங்க கிட்டயும், நான் பெத்துவச்சிருக்கிற புள்ளைக கிட்டயும், என் மருமகள்க கிட்டயும் நான் படணும்னு என் தலைல எழுதியிருக்கு. அதை யாரால மாத்த முடியும். என் தலையெழுத்து” என்று சோக பெருமூச்சு விட்டார் முதியவர். 


சற்று நேரம் கழித்து தொடர்ந்தார். “தம்பி, ஒரு வீட்டுல பெரியவன்னு ஒருத்தன் இருந்தா, நாலு நல்லது கெட்டது சொல்லத்தான் செய்வாங்க. ஆனா, இதுங்க மாதிரி ஜென்மங்களுக்கு சுய புத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாது. நான் எந்த நல்லத சொன்னாலும், அதுல ஒரு குத்தத்தை கண்டுபிடிச்சு, என்ன திட்டுறதுதான் இவனுங்களுக்கும் இவங்க ஆத்தாள்களுக்கும் வேலை. இப்பக்கூட ஒரு நல்லத சொல்லித்தான் திட்டு வாங்கி, எச்ச தட்டுல அடி வாங்கி அவமானப்பட்டு, எங்கயாவது போயிடலாம்னு பார்த்தா, அதுக்கும் வழியில்லை இவனுங்க கிட்ட”


“இப்பவும் ஏன் இவர்கள் உங்களை தடுக்கிறார்கள் தாத்தா” செழியன் முதியவரிடம் அன்பாக கேட்டான்.


“எல்லாம் என் பேருல இருக்கிற சொத்து பணம் தான் தம்பி. இவனுங்க பாட்டி, அதான் என் பொண்டாட்டி அப்பவே சொல்லுச்சு, உங்கக்கிட்ட இருக்குற சொத்தை யாருக்கும் பிரிச்சு கொடுத்துராதீங்க. அவனுங்க நட்டாத்துல விட்டுட்டு போயிருவானுங்கன்னு. நல்ல வேளை, அந்த ஒரு விசயத்துல நான் அவள் பேச்சைக் கேட்டேன். இல்லன்னா எப்பயோ என்ன தொரத்தி விட்டுருப்பானுங்க” என்று வருத்தத்துடன் சொன்னார் முதியவர்.


“இப்பக்கூட அந்த சொத்துக்காகத்தான் என்னை வலுக்கட்டாயமா கூட்டிட்டுப்போக வந்திருக்கானுங்க இவனுங்க” என்று. தொடர்ந்தார் முதியவர்.


“யோவ் கிழவா, நம்ம ஊட்டுக்கதையை வரவன் போறவன்கிட்டலாம் சொல்லிட்டு இருக்க” என்று சொல்ல ராமு வாயைத் திறந்தான். சோமுவின் மூக்கைப் பார்த்துவிட்டு அமைதியானான்.


“ஏன் தாத்தா, இவர்கள் தான் இவ்வளவு தொல்லையும் அவமானமும் செய்திருக்கிறார்களே, நீங்கள் ஏன் இன்னமும் அமைதியாய் இருக்கீங்க. நேராக காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டியது தானே?” என்று செழியன் கேட்டான்.


“என்னதான் இருந்தாலும் நான் பெத்த புள்ளைங்க தானப்பா. என்ன செய்யிறது. எல்லாம் என் தலையெழுத்தேன்னு போயிக்கிட்டுருந்தேன். ஆனா இனிமே அந்த வீட்டுல ஒரு நிமிசம் கூட இருக்க மாட்டேன். நீ ஒரு உதவி பண்றியா, எனக்கு ஒரு நல்ல வக்கீலா இருந்தா சொல்லு, என்னோட எல்லா சொத்தையும் ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்துட்டு அங்கேயே இருந்துடறேன்” என்று மிக வருத்தமாக முதியவர் செழியனிடம் கேட்டார்.


“தாத்தா, நானே ஒரு வழக்கறிஞர் தான். வாங்க, உங்களுக்கு ஒரு நல்லது செய்து கொடுக்கிறேன்” என்று பரிவுடன் செழியன் கூறியதும், முதியவர் அவனை ஒரு மரியாதையுடன் அவன் கையை பிடித்துக்கொண்டு அவனுடன் சென்றார்.


அந்த இரண்டு இளைஞர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். 


மறுநாள் காலை செழியன் முதியவரை அவனுடைய வண்டியிலேயே உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று, தனது அலுவலகத்திலேயே “அன்னை ஆதரவற்றோர் இல்லம்” என்ற ஆதரவற்றோர் பள்ளிக்கு அவர் சொத்தை பதிவு செய்து கொடுத்தான். பிறகு, அந்த முதியவரிடம் ஒரு விண்ணப்பமும் வைத்தான். அந்த முதியவர் அவனை அதிர்ச்சியோடும் ஆசையோடும் பார்த்தார். 


“தாத்தா, என்னைப் பெற்றவர்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். நான் பிறந்த பிறகு அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிக் கொண்டு, என்னை ஆதரவற்றோர் பள்ளியில் சேர்த்துவிட்டு அவர்கள் வழியைத் தேடிக் கொண்டனர். பள்ளியில் படிக்கும்போதும் என்னை அத்தனை மாணவர்களும் அனாதை என்று கேளிச் செய்து அவமானப்படுத்துவார்கள். அதனால் என் மனம் அதிகம் புண்படும். அதனையும் மீறி என் படிப்பின் மீது கவனம் செலுத்தி இன்று வழக்கறிஞராய் இருக்கிறேன். இதுவரை எனக்கு யாரும், நல்லது சொல்லியோ, சிறுவயதில் எந்த தாத்தா பாட்டிகளும், எனக்கு கதைகளோ சொன்னதில்லை தாத்தா. இப்போது நீங்கள் சொத்து சுகத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதிக் கொடுக்கும்போது உங்களை ஏன் நான் என் தாத்தாவாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் வந்தது. நீங்கள் விருப்பப்பட்டால் என்னுடன் என் வீட்டிற்கே வந்து எனக்கு தாத்தாவாக இருக்க முடியுமா” என்று தன் விருப்பத்தை முதியவரிடம் கூறினான். 


முதியவரின் கண்கள் பனித்தது. “எந்த காலத்துல நான் என்ன பாவம் செஞ்சேனோ எனக்கு அந்த மாதிரி பணத்தாசை புடிச்ச, பெரியவங்களை மதிக்கத் தெரியாத புள்ளைங்க கிடைச்சது. ஆனா, நீ யாரோ என்னவோ, நேத்தி சாயங்காலத்துல இருந்து உன் தாத்தாவாவே என்ன நடத்துற, இது நான் எந்த ஜென்மத்தில செஞ்ச புண்ணியம்னும் தெரியலை. இந்த வயசான காலத்துல என்னைய கூட்டி வச்சிக்கணும்னு சொல்ற. ஆனா நீயும் என்னை ஒரு சமயத்துல பாரமா நினைச்சிட்டீன்னா என்ன பண்றது தம்பி” என்றார்.


“தாத்தா, இல்லாதவங்களுக்கு தான் அதோட அருமை புரியும். இருக்கிறவங்களுக்கு அது தெரியாது. அதனால் நீங்க எனக்கு என்னைக்கும் பாரமா இருக்க மாட்டீங்க தாத்தா” என்று கண்கள் கலங்க முதியவரிடம் சொன்னான். 


“சரி தம்பி, நேத்தி நான் வீட்டுக்கு வரும்போது, ஒரு அம்மா மடியில தலைவெச்சு படுத்துட்டுருந்தியே, அவங்க யாரு? உனக்குத்தான் யாருமில்லைன்னு சொன்ன”


“ஆமாம் தாத்தா. அவங்களதான் என் அம்மாவா நான் நினைச்சிட்டுருக்கேன். அவங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி, சாலையில் படுத்து தூங்கிட்டு இருந்தாங்க. நான் இப்போ அவர்களை என் அம்மாவாக தத்தெடுத்துகிட்டேன் தாத்தா”.


முதியவரின் கண்களில் அவரை அறியாமல், கண்ணீர் காவிரியாய் விரிந்தது. அந்த முதியவரை மெல்ல அணைத்துக்கொண்டு சென்று, தன் வீடு நோக்கி வண்டியில் பயணித்தான் செழியன்.


செழியனின் கனவு பலித்தது. ஆம். அவனுக்கு கிடைத்த பதக்கம், அந்த பெரியவரின் பாசம். அவனுக்கு கிடைத்த சான்றிதழ், அந்த முதியவரின் அனுபவம். அந்த கர ஓசை, அவனுக்கு கிடைத்த மகிழ்ச்சியின் உச்சம். அந்த வாழ்த்தொலி “செழியன் வாழ்க” என்பது அந்த முதியவரின் ஆசிர்வாதங்கள். 


வீட்டிலுள்ள பெரியவர்களை மதித்து நடத்துங்கள். அவர்களும் உங்களைப் போன்று மனிதர்கள் தான். உங்கள் வயதை கடந்து வந்தவர்கள் தான். அவர்களை மரியாதையுடனும், அவமானப் படுத்தாமலும் நடத்துங்கள். நாளை நீங்களும் முதுமை அடையலாம். அப்போது உங்களுக்கும் இது போல் நேரலாம். அதனால் பெரியவர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தவில்லையெனினும் அவமானப்படுத்தாதீர்கள். 


Rate this content
Log in

Similar tamil story from Drama