புன்னகை
புன்னகை


புன்னகை - நகைச்சுவை
தனியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான் செழியன். முழுவாண்டு தேர்வின் கடைசி நாளன்று தான் அது நடந்தது.
வகுப்பில் உடன்படிக்கும் நண்பர்களான முத்துவும், காதரும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தனர். செழியன் அவர்களிடம் என்னப் பிரச்சினையென்று விசாரிக்கப் போனான். அந்த வகுப்பிலேயே படிக்கும் கோமலாவால் தான் இந்த பிரச்சினை என்று தெரிந்ததும் செழியன் லேசாய் விலகிக் கொண்டான்.
கோமலா, அந்த வகுப்பிலேயே மிகவும் அழகானவள். காண்போரை வியக்க வைக்கும் அழகு. அவள் சிரித்தால், ரோஜாப்பூ மலர்வதை நிறுத்திவிட்டு வேடிக்கைப் பார்க்கும். செக்கச் செவேலென்று அழகிய கன்னங்களும், அவளின் கண்கள் அழகிய மீன் நீந்துவது போலவும் இருக்கும். அவ்வளவு அழகு. வயதுக்கேற்ற உயரம். சொல்லவும் வேண்டுமா அவர்களுக்கான சண்டை ஏன் என்று?
செழியன் அவர்களை விட்டு நகர்ந்து, கோமலாவிடம் சென்று “உன்னால் தான் அவர்களுக்குள் சண்டை” என்றான்.
“அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்” என்றாள் அவள்.
“போய் சண்டையை நிறுத்து. நீ சொன்னா தான் கேப்பாங்க. இல்லனா நிறுத்தவே மாட்டாங்க” என்றான் செழியன்.
என்ன செய்வது என்று புரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள் கோமலா. அப்போது தான் அவளுடைய சிநேகிதி குமாரி வந்தாள். கோமலா அவளிடம் “இங்க பாருடி. இவனுங்க என்னாலதான் சண்டை போட்டுக்குறாங்கன்னு செழியன் சொல்றான். என்னைப் போய் தடுக்கச் சொல்றான். என்னடி பண்றது?” என்றாள்.
குமாரி சற்று யோசித்துவிட்டு கோமலாவின் காதுகளில் ஏதோ சொன்னாள். உடனே, கோமலா அருகிலிருந்த தன் பையிலிருந்து ஏதோ எடுத்தாள். தன் பாக்கெட்டில் அதை வைத்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கிச் சென்றாள்.
“டேய் முத்து, காதர். சண்டையை நிறுத்துங்கடா. ஏண்டா அடிச்சிக்கிட்டு இருக்கீங்க. இந்தா இதைப்புடிங்க ரெண்டு பேரும். இதுக்கு தான சண்டை. காலையில முத்து என் கையில இருந்து புடுங்கிகிட்டு போயிட்டு, நான் தான் அதை கொடுத்தேன்னு இவன் கிட்ட சொல்லி, ரெண்டு பேரும் இப்போ சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க” என்று தன் பாக்கெட்டில் வைத்திருந்ததை எடுத்து கொடுத்தாள். இருவரும் சண்டையை மறந்து, அதை பெற்றுக்கொண்டனர்.
கோமலா தொடர்ந்தாள். “டேய், ரெண்டு பேரும் இனிமே சண்டை போட்டிங்கன்னா அவ்வளவு தான். அடுத்த வருசம் நாமெல்லாம் மூணாங்கிளாஸ் போகப் போறோம். இன்னமும் சண்டை போட்டுக்கின்னு இருக்கீங்க”.
“சாரி, கோமலா. நீதான் ரப்பர் வச்ச பென்சில் கொடுத்துட்டியே. இனிமே ரெண்டு பேரும் பழம்” என்றனர் கோரசாக.
ஒரு சிறு புன்னகை உங்கள் உதடுகளில் வந்திருக்குமில்லையா? சிறு வயதில் எத்தனையோ விசயங்கள் நடந்திருக்கும். சண்டைகள் மனக்கஷ்டங்கள் அதை அனைத்துமே இன்று நினைத்துப் பார்த்தோமேயானால், எல்லாமே நகைச்சுவை தான்.