Deepa Sridharan

Drama Inspirational

4.5  

Deepa Sridharan

Drama Inspirational

நாட்டைக்குறிஞ்சி

நாட்டைக்குறிஞ்சி

11 mins
2.0K


//ஸ ரி க ம த நி ஸ்// //ஸ் நி த ம க ஸ// என்று, அவளின் குரல் ஸ்ருதி பெட்டியிலிருந்து வரும் சப்தத்துடன் பின்னிப்பிணைந்துகொண்டிருந்தது. அவளுடனே இணைந்து கொண்டு குழைந்தது அந்த குழந்தைகளின் குரல்களும். அன்றைய கிளாசில் அவள் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தாள். நாட்டைக்குறிஞ்சி ராகம், சமீப காலத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த சில விஷயங்களில் ஒன்றாகிப்போயிருந்தது. அந்த ராகத்தின் சுகம், அவளுக்கு ஏனோ அம்மாவின் மடியை ஞாபகப்படுத்துகிறது. அனந்தாயினி டீச்சரை அந்த குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தினமும் பாட்டு கிளாஸ் முடிந்ததும், அந்த குழந்தைகள் அவளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டுதான் செல்வார்கள். வளர்ந்த குழந்தைகளோ, அவளுடன் உட்கார்ந்து பலதரப்பட்ட விஷயங்களை கலந்துரையாடிவிட்டுச் செல்வார்கள்.

 அன்று அந்த குழந்தைகளை அனுப்பிவிட்டு, கலைந்துகிடந்த வீட்டை ஒழுங்கு செய்துவிட்டு சமயலைறைக்குள் நுழைந்தாள் அனந்தாயினி. அவளைப் போலவே அவளின் சமயலறையும் பொலிவுடன் காணப்பட்டது. அவள் சப்பாத்தியையும், பன்னீர் கிரேவியையும் திறம்பட செய்துமுடித்து அதன் சுவையில் கரைந்துவிட்டு, இரவு நியூஸ் சேனலில் ஆழ்ந்து போனாள்.

 பின்பு குளித்து, கரும் நீல நிற காட்டன் புடவையில் தன்னை நெய்துகொண்டு, வேலைக்குச் செல்லத் தயாரானாள். அதிக முக அலங்காரமில்லாமலே அவள் தனது முப்பத்தேழு வயதில் மிடுக்காக இருந்தாள். அவள் உயரத்திற்கேற்ற எடை, ஆரோக்கியமான உடற்கட்டு, அடர்ந்த கூந்தல், கூர்மையான கண்கள், மலர்ந்த முகம். ஆராவாரமில்லாத எளிய புன்னகை. அவள் தன்னை கண்ணாடியில் வடித்துவிட்டு கிளம்பினாள்.

இரவு வாழ்க்கையின் உச்சகட்டமாய் அந்த பெருநகரம் காட்சியளித்தது. மனிதர்கள் தங்கள் இயல்புக்கு மாறாக இரவு வேளையில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார்கள். அவள் கண்ணில் விழுந்த அனைவரின் முகத்திலும் உற்சாகம் குடி கொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. பகல் முழுக்க பெரும்பாலும் உறங்கிக் கிடக்கும் அந்த நகரம் இரவில் விழித்துக்கொண்டு கரப்பான் பூச்சிகளுக்கு சவாலாக மாறியிருந்தது. அவள் அலுவலகத்தை சென்றடைந்தாள்.

ரிசப்ஷனில் உள்ள ரெஜிஸ்டரில் கையெழுத்து போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள். அந்த அலுவலகத்தில், இருபது வயதிலிருந்து நாற்பத்தைந்து வயது வரை உள்ள ஆண்களும் பெண்களும் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர். அவள் உள்ளே நுழைந்ததும் அந்த காரிடோரில் வரிசையாக பல அறைகள் எதிரெதிரே அமைந்திருந்தன. ஒவ்வொரு அறையின் கதவிலும் ஒரு நம்பர் குறியீடு இருந்தது. அவள் அறை எண் 14க்குள் நுழைந்தாள்.

 நாற்பத்திரண்டு வயது நிரம்பிய அந்த ஆண் அவளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருந்த டைமிற்கு, 10 நிமிடங்கள் முன்னதாகவே அவன் அங்கு வந்திருந்தான். அவன் முகத்தை பார்த்த அவள் சற்றே குழம்பிப் போனாள். அவள் பார்வையைப் புரிந்து கொண்ட அவன், 'நீங்கள் தான் வேண்டும் என்று ஸ்பெஷல் ரெக்குவெஸ்ட் செய்து வந்திருக்கிறேன்' என்றான்.

"அது எப்படி சாத்தியம்? அலுவலக நிர்வாகிகள் அதற்கு சம்மதித்திருக்க மாட்டார்களே!" என்று அவள் முகம் மாறியது.

"ஆக்ட்சுவலி, நாந்தான் ரொம்ப ஸ்டிரெஸ் பண்ணி கேட்டேன்" என்று அவன் கூறினான்.

"ப்ளீஸ் வெயிட்" என்று சொல்லிவிட்டு, விருட்டென்று திரும்பி அந்த அறையைவிட்டு வெளியே சென்றாள் அனந்தாயினி.

அலுவலக நிர்வாகிகளிடம் சென்று பேசினாள். அவர்கள் எதையோ சொல்லி அவளை சமாதானம் செய்தார்கள். இந்த ஒருமுறை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அவள் வேறுவழியின்றி ஒத்துக் கொண்டு அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்.அவன் சற்றே பதட்டத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான். 

அவள், "லைட்டை ஆஃப் பண்ணவா" என்று கேட்டாள்.

"நான் உங்களிடம் சிறிது நேரம் பேச வேண்டும்", என்றான் அவன்.  "நமக்குள் பேசுவதற்கு ஒன்றும் இல்லையே " என்றாள் அவள்.

"ப்ளீஸ், கொஞ்ச நேரம் பேசலாமே" என்றான். 

"சொல்லுங்க என்ன பேசனும்" என்று அவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.

"எனக்குத் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது. ரீசன்ட்லி எனக்கும் என் மனைவிக்கும் பெரிய அளவில் எந்தவித ஈடுபாடும் இல்லை. நாங்கள் எங்கள் குழந்தைகளுக்காக பெயரளவில் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எனக்கு இந்த வாழ்க்கையில் சந்தோஷம் எதுவுமில்லை. மீ அன்ட் மை வைஃப் ஆர் பிசிகல்லி டிஸ்கனெக்டட் லான்ங் பேக். அதனால் தான் இங்கு மெம்பர்ஷிப் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். போனமுறை உங்களுடன் இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நீங்கள் என்னுடன் மட்டும் தனியாக செக்க்ஷூஅல் ரிலேஷன்ஷிப்பில்இருக்க முடியுமா? என்று கேட்டான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள், அவனை வினோதமாகப் பார்த்தாள். பின்பு சுதாரித்துக் கொண்டு, "இது போன்ற பேச்சுக்களை இந்த அலுவலகத்தில் நாங்கள் தவிர்க்க விரும்புகிறோம். அதுமட்டுமல்லாமல் எனக்கு இதில் பர்சனலாகவும் உடன்பாடு இல்லை" என்றாள்.

அவன், அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, "நீங்கள் இங்கு செய்யும் வேலையை எனக்காக மட்டும் ஒரு தனி வீட்டில் தங்கிக்கொண்டு செய்யப்போகிறீர்கள். அதில் உங்களுக்கு என்ன பிராப்ளம்?" என்று கேட்டான்.

"அது என் தனிமனித ஒழுக்கத்திற்கு முரண்பாடானது" என்று அவள் கூறினாள்.

 "ஒரு விபச்சாரிக்கு என்ன தனிமனித ஒழுக்கம் இருக்க முடியும்?" என்று அவன் அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டான்.

"நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்" என்று அவனிடம் அவள் கேட்டாள். 

"நான் யுனிவர்சிட்டியில் ப்ரொஃபேஸராக வேலை பார்க்கிறேன்" என்று அவன் பெருமையாகச் சொன்னான். 

"உங்கள் அறிவை விற்று சம்பாதிக்கிறீர்கள். அப்படித்தானே? என்று கேட்டாள்

"நான் பல இளைஞர்களுக்குக் கல்வியைக் கற்றுத் தருகிறேன். அது ஒரு நோபெல் புரோஃபேஷன்" என்று அவன் கூறினான். 

"இருக்கட்டும். ஆனால் அதை நீங்கள் பணத்துக்காகச் செய்கிறீர்கள். பேசிக்கலி நீங்கள் கற்றுக்கொண்ட அறிவை விற்பனை செய்கிறீர்கள். அதில் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது, பிறருக்கும் பலன் கிடைக்கிறது. அதே போன்றுதான் என்னுடைய வேலையும், நான் என் உடலை விற்கிறேன். அதில் பிறருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது எனக்கு பண பலன் கிடைக்கிறது. ஆகவே உங்களுக்குத் தனி மனித ஒழுக்கம் இருக்கிறது என்றால் கண்டிப்பாக எனக்கும் இருக்கிறது என்று கூறினாள்.

"அது எப்படி இரண்டும் ஒன்றாக முடியும்?" என்று கேட்டான் அவன். 

விற்றல்- வாங்கல் என்ற பரிபாஷையே இந்த உலகத்தை திறம்பட இயக்குகிறது. தொழிலாளி உழைப்பை விற்கிறான். படித்தவன் அறிவை விற்கிறான். கலைஞன் வித்தையை விற்கிறான். பாலியல் தொழிலாளி உடலை விற்கிறான்.

ஆனால் இவை எல்லாவற்றிலும் சுயஆதாயமும், சமுதாய சிந்தனையும், சக மனிதனுக்கு சேவை செய்யும் பொறுப்பும் இருக்கிறது. இது ஒரு அறிவுப்பூர்வமான சமூக அமைப்பு. இந்த அமைப்பு திறம்பட இயங்குவதால் தான் மனித இனம் இன்னும் நிலைத்திருக்கிறது. எனவே இவை எல்லாவற்றிலும் தனிமனித ஒழுக்கம் ஒளிந்து இருக்கிறது. ஒழுக்கம் இல்லாமல் விற்பவர்களும், வாங்குபவர்களும் இந்த சமுதாயத்தில் பின்னடைவை ஏற்படுத்துகிறார்கள் என்று கூறினாள்.

"உங்ககிட்ட பர்சனலா என்ன பெருசா தனிமனித ஒழுக்கம் இருக்கிறது கூறுங்கள்?" என்று கேட்டான். 

"நான் என்பது, என் உடல், அறிவு, மற்றும் மனம் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு கூட்டுமுயற்சி. இந்த மூன்றையும் நான் ஆரோக்கியமாக பார்த்துக்கொள்கிறேன். மூன்று வேளையும் என் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை நானே சமைத்து உண்கிறேன்.தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். நான் வசிக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்கிறேன். 

அடுத்து என் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் முப்பது நிமிடம் தியானம் செய்கிறேன். என் மனதிற்கு சந்தோஷம் தரும் பாட்டுக் கலையை குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன். வாரத்தில் ஒருநாள் முதியோர் இல்லத்திற்கு சென்று என்னால் முடிந்த உதவியை அங்குள்ளவர்களுக்கு செய்துவிட்டு வருகிறேன். 

என் அறிவை வளர்த்துக்கொள்ள அவ்வப்போது பல ஆன்லைன் கோர்ஸில் சேர்ந்து படிக்கிறேன். ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் மற்றும் பயாலஜியில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. அதைப்பற்றிய செய்திகளை அப்டேட் செய்து கொண்டேயிருப்பேன். இந்த வேலையில் திறம்பட இயங்குவதற்கு தேவையான செக்ஸாலஜி கோர்சை இங்கு உள்ள அனைவரும் கற்றுக் கொள்கிறோம். இந்த அமைப்பிற்கு என்று ஒழுங்கு முறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கிறது. இங்கு வேலை செய்யும் எல்லோரும் அதை பின்பற்றியாக வேண்டும்.

ஐ ஸ்டிரிக்ட்லி ஃபாலோ மை வொர்க் எத்திக்ஸ். எனவே இங்கும் தனிமனித ஒழுக்கம் தேவைப்படுகிறது. அதைத் தவிர்த்து, ஆஸ் ஏ சோஷியல் அனிமல், என்னால் இயன்றவரை சகமனிதர்களை மதிக்கிறேன். அவர்களுடன் அன்பையும், உணர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். பிறரை சுரண்டிப் பிழைப்பதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்கிறேன். என் மனதிற்கு தெரிந்தவரை யாரையும் ஏமாற்றுவதில்லை. சமுதாய சட்ட திட்டங்களை பின்பற்றுகிறேன். இவைதான் என் தனிமனித ஒழுக்கம் "என்று நிதானமாக அவள் அவனுக்கு பதில் அளித்தாள்.

அதை கேட்டு அவன் மலைத்துப் போனான். தனி மனித ஒழுக்கம் என்ற வார்த்தையைக் கூட அவன் தன் வாழ்நாளில் சிந்தித்து இருப்பானா என்று அவனுக்கு தெரியவில்லை. "சரி நீங்கள் சொல்வதை நான் ஒத்துக்கொள்கிறேன் என்றே வைத்துக் கொள்வோம், என்னுடன் பேர்சனலாக செக்க்ஷூஅல் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது உங்களுடைய தனிமனித ஒழுக்கத்தை எவ்வாறு பாதிக்கப்போகிறது?" என்று கேட்டான்.

நீங்கள் இங்கு வரும் பொழுது உங்களுக்குத் திருமணமாகி இருக்கிறதா? அப்படி ஆகியிருந்தால், நீங்கள் இங்கு வருவதை உங்கள் மனைவியுடன் சொல்லிவிட்டு வந்தீர்களா? போன்ற தகவல்கள் எனக்குத் தெரிவதில்லை. உங்கள் தேவையை நான் தீர்த்து வைக்கிறேன். அது என்னுடைய வேலை அவ்வளவுதான். ஆனால் பேர்சனல் ரிலேஷன்ஷிப் அப்படிப்பட்டதல்ல. அதில் பல எமோஷனல் கேள்விகள் தோன்றும். நீங்கள் என்னுடன் இருப்பதை உங்கள் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொண்டீர்களா, இல்லையா? என்ற கேள்வி எனக்குள் எழும். 

நீங்கள் அதை உங்கள் மனைவியிடம் மறைக்கிறீர்கள் என்றால், அந்த நம்பிக்கை துரோகத்திற்கு நானும் துணை போகிறேன் என்ற குற்ற உணர்வு என்னுள் எழும். நம்முடைய ரிலேஷன்ஷிப்பை மற்றவர்களிடம் மறைத்து வைக்கச் சொல்கிறீர்கள் என்றால், பலரிடம் நான் பொய் சொல்ல வேண்டியிருக்கும். இவையனைத்தும் என் தனிமனித ஒழுக்கத்திற்கு புறம்பானதாக நான் நினைக்கிறேன். ஐ அம் சாரி , நீங்கள் இதைப் பற்றி இனிமேல் என்னிடம் பேச வேண்டாம். லைட்டை சுவிட்ச் ஆப் செய்யட்டுமா' என்று கேட்டாள். அவன் தன் வக்கிர புத்தி, அந்த இருட்டை விடவும் இருட்டாக இருக்கிறதோ என்று நினைத்துக்கொண்டான்.  எனினும் அந்த இருட்டில் அவன் உடலும் புத்தியும் ஒன்று சேராமல் வெவ்வேறு உணர்விற்கு இரையானது. அவளோ தன் வேலையை எந்தவித தடுமாற்றமுமின்றி செய்துமுடித்தாள்.

வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் முன் அலுவலக மேனேஜரிடம் சென்று பேசினாள். ஒருமுறை அட்டென்ட் செய்த கஸ்டமரை, மறுமுறை எந்த எம்ப்லாயிக்கும் அசெயின் செய்யக் கூடாது என்பது அந்த நிறுவனத்தின் ஸ்டிரிக்ட் ரூல். அந்த மேனேஜர் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். "புதிதாக சேர்ந்த அலுவலர் ஒருவர் அங்கு ஃபாலோ செய்யப்படும் ரூல் தெரியாமல், அந்த கஸ்டமர் ரெக்குவெஸ்ட் செய்து கேட்டவுடன், பாவப்பட்டு ஒத்துக்கொண்டு விட்டார். அப்பாயின்மென்ட் கொடுத்தாகிவிட்டது அதனால் கடைசி நிமிடத்தில் அதை கேன்சல் செய்யவோ அல்லது வேறு நபருக்கு மாற்றி விடவோ முடியாமல் போய்விட்டது" என்று கூறினார். 

"இட்ஸ் ஆல் ரைட் , ஆனால் இது போன்ற விஷயங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது தேவையில்லாத மனப் பிரச்சனையை உருவாக்குகிறது" என்று கூறிவிட்டு அவள் கிளம்பினாள்.

வழக்கம்போல் அவளது வாழ்க்கை பாட்டு கிளாஸ், முதியோர் இல்லம், அலுவலகம் என்று போய்க்கொண்டிருந்தது.  அன்று மே 22, 2020 வெள்ளிக்கிழமை. அவள் பத்து வருடத்திற்கு முன்னால் வாங்கிய, அவளுக்கு மிகவும் பிடித்த கருப்பு நிற காட்டன் சுடிதார் ஒன்றை அணிந்துகொண்டாள் எப்போதும் போல் கண்ணாடியில் தன் உருவத்தை வடித்தாள்.அன்று சற்று கூடுதலான நேரம் அவள் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். தினமும் அவள் வெவ்வேறு உடைகளையும் ஆபரணங்களையும் அணிந்து கொண்டு அந்த கண்ணாடியில் தன் முகத்தை வடித்து விட்டுச் செல்கிறாள் அந்த கண்ணாடிக்கு நினைவிருக்குமா அவள் வடித்து விட்டுப்போன ஒவ்வொரு முகங்களும் என்று நினைத்துக் கொண்டாள். 

இந்தப் பிரபஞ்சமும் அப்படித்தானே, பல உயிரினங்களும் உயிரற்றவைகளும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் வெவ்வேறு விதமான நிகழ்வுகளை நடத்திவிட்டு தங்கள் சுவடுகளை வடித்து விட்டுப் போகின்றன. அதையெல்லாம் கண்ணாடி போல் இந்த பிரபஞ்சம் உள்வாங்கிக் கொள்கிறது ஆனால் அந்த பிரபஞ்சத்திற்கு மட்டுமே தெரியும் வடித்து விட்டுச் சென்ற முகங்கள் எல்லாம் அதன் நினைவுச்சுவடுகளா இல்லை கண்ணாடி உருவம் போல சில மணித்துளிகள் மட்டுமே பிரதிபலிக்கும் பிம்பங்களா என்று.

எப்போதும் போல அவள் அலுவலகத்திற்குள் நுழைந்தாள். அறை எண் ஒன்று. உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்து கொண்டாள். அப்பாயின்மென்ட் கொடுத்த நேரத்திற்கு 5 நிமிடங்கள் இருந்தது.  அவள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய டைரியை எடுத்து ஏதோ பக்கங்களைப் புரட்டிப் பார்த்து மனதில் சிரித்துக் கொண்டாள். கதவு சத்தம் கேட்டவுடன் அதை மூடி உள்ளே வைத்துவிட்டு புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே வருபவனைப் பார்த்தாள். இருவரும் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். 

"வருண்" என்று எழுந்து அவனிடம் ஓடினாள். இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர். அது அவளையும் மீறிய செயலாக அவள் உணர்ந்தாள்.  பின்பு தயக்கத்துடன், "ஐ யம் சாரி" என்று சொல்லிவிட்டு லைட்டை ஆஃப் செய்தாள். அவன் அவளிடமிருந்து விலகிச் சென்று லைட்டை ஆன் செய்தான். "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டான் .

"வருண், இங்கே நாங்கள் பர்சனலாக எதுவும் பேசுவதில்லை. நீ வந்த காரியத்தை முடித்து விட்டு போ. உனக்கு விருப்பம் இருந்தால் நாம் வெளியே எங்காவது சந்தித்து பேசலாம்" என்று கூறினாள். 

"ப்ளீஸ்" என்று சொல்லிவிட்டு அவன் அவள் அருகில் சென்று அமர்ந்தான்.

"நீ இன்னும் இங்கு தான் வேலை பார்க்கிறாயா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

"அஃப்கோர்ஸ்" என்று புன்னகைத்துக் கொண்டே அவள் அவனைப் பார்த்தாள். இருவரும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை அசை போட ஆரம்பித்தனர்.

ஜூன் 2005, அன்று அனந்தாயினி காலேஜ் கேன்டீனில் தன் தோழி சுஜிதாவின் அருகில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள். அந்த செமஸ்டர் ஃபீஸிற்கான பணம் அவளிடம் இல்லையென்றும், ஏதாவது பார்ட் டைம் வேலை பற்றி தகவல் கிடைத்தால் தன்னிடம் கூறும்படியும் சொல்லிக்கொண்டிருந்தாள் அனந்தாயினி. அப்பொழுதுதான் வருண் அங்கு வந்தான்.

"ஹாய் வருண்" என்று சுஜிதா புன்னகை பூத்தாள்.

"ஹாய் சுஜி" என்று கூறிக்கொண்டே அவன் அனந்தாயினி அருகில் வந்து அமர்ந்தான்.

"ஷீ இஸ் மை ஃபிரண்ட் அனந்தாயினி" என்று அறிமுகம் செய்தாள் சுஜிதா. அவர்கள் மூவரும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து வருண் தான் கிளம்புவதாக சொன்னான்.

"நைஸ் மீட்டின்ங் யூ அனந்தாயினி, மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் வருண்.

சுஜிதா, அனந்தாயினியிடம், உன் அம்மா அப்பா பற்றி நீ சொன்னதே இல்லையே என்று கேட்டாள்.

தனிமனித ஒழுக்கத்தையும் செக்க்ஷூஅல் லைஃப்பையும் பிரித்துப் பார்க்கத் தெரியாத ஒரு முட்டாள் பெண் என்னை பெற்றெடுத்து ஏதோ ஒரு புதரில் தூக்கியெறிஞ்சுட்டு போயிட்டா. யசோதா என்ற பாடகி தான் என்னை அந்த புதரிலிருந்து கண்டெடுத்து வளர்த்தாங்க. அவுங்க பாட்டு சொல்லிக்கொடுத்து கிடைக்கும் வருமானத்தில் என்னை படிக்க வைக்கிராங்க. அவங்களுக்குத் தொண்டையில் புற்று நோய். லாஸ்ட் ஸ்டேஜ். கொஞ்ச நாளா பாடறத நிறுத்திட்டாங்க. இப்போ வருமானம் இல்லாம நாங்க கஷ்டப் படறோம் என்று தன் இருபத்திரண்டு வருட வாழ்க்கையை ஏழே வரிகளில் கூறி முடித்தாள் அனந்தாயினி.

"நீ என்னை தப்பா நினைக்கலேன்னா, உனக்கு ஒரு வேலையைப்பத்தி சொல்றேன். உனக்கு விருப்பம் இருந்தால் அங்க கூட்டிட்டு போறேன்" என்றாள் சுஜிதா. 

"என்ன வேலை?" என்றாள் அனந்தாயினி.

"யூ வில் ஹேவ் டூ இன்டல்ஜ் இன் செக்க்ஷூஅல் ஆக்டிவிட்டி, ஆனா இன் ஏ ஹெல்த்தி வே" என்றாள் சுஜிதா.

"புரியல" என்றாள் அனந்தாயினி. 

அன்று சாயங்காலம் சுஜிதாவும் அனந்தாயினியும் 'எம்ப்ரேஸ்' பாலியல் நல மையம் என்ற இடத்திற்குச் சென்றார்கள். அனந்தாயினிக்கு அப்பெயர் வினோதமாக இருந்தது. அவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தவுடன் அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அந்த அலுவலக நிர்வாகியிடம் அழைத்துச் சென்றாள். சுஜிதா, அனந்தாயினியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

"இந்த மையத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார் அந்த நிர்வாகி.

"இல்லை" என்று கூறினாள் அனந்தாயினி.

"ஆண்கள் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதே இந்த மையத்தின் குறிக்கோள். எங்களை நாடி வரும் கஸ்டமர்களுக்கு செக்ஸ் சர்வீஸ் அளிப்பதே எங்கள் வேலை" என்று அந்த நிர்வாகி கூறினார். 

"ஏ கைன்ட் ஆஃப் ப்ராஸ்டிடுயூஷன்?" என்று கேட்டாள் அனந்தாயினி.

"அதற்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். உடலில் சில குறைபாடுகளினால் அல்லது அளவிற்கு மீறி சில உறுப்புகள் வேலை செய்வதினால், உடல் நலம் பாதிக்கப்படுகிறது அதை சரி செய்து கொள்ள நாம் உடல்நல மருத்துவரை அணுகுகிறோம் . நம் உடலை சரிசெய்துகொள்ள மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். அதுபோல நம் மனதை சரியாகக் கையாளத் தெரியாத பொழுது மன நல ஆலோசகரை அணுகுகிறோம். அவர் கொடுக்கும் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோன்றே ஒரு மனிதனின் செக்க்ஷூஅல் நீடும்.

 அது வெவ்வேறு மனிதர்களுக்கும் வெவ்வேறு விதமாக இயங்குகிறது. ஒருசிலருக்கு அந்த நீட் அதிகமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்து கொள்ள முடியாத போது சிலர் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சமுதாயத்தில் பல செக்க்ஷூஅல் வயலென்ஸ்/கிரைம் நடக்கிறது.  ஒரு சிலருக்கு செக்க்ஷூஅல் லைஃபிற்கான வாய்ப்பமே கிடைப்பதில்லை. இன்னும் பலருக்கு அது கிடைத்தும் போதுமானதாகவில்லை.அதுமட்டுமல்லாமல் திருமணமான சிலர் கூட சில நேரங்களில் தங்கள் செக்க்ஷூஅல் தேவையை நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். இது மனம், உடல் ஆகியவற்றில் ஏற்படும் மற்ற குறைபாடுகளைப் போல ஒரு இயல்பான குறைபாடு. இதை ஒரு ஆரோக்கியமான முறையில் அணுகுவது சமுதாயத்திற்கு முக்கியமான தேவை.

 இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் செக்ஸ் சர்வீஸை ஒரு வேலையாக மட்டும் நினைத்து செய்கிறார்கள். இதனால் மட்டுமே இந்த சமுதாயத்தில் பாலியல் வன்முறைகளை முற்றிலும் தவிர்த்துவிட முடியுமா? என்று கேட்டால் என்னால் நிச்சயமாக "ஆம்" என்று சொல்ல முடியாது. ஆனால் இது கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான அப்ரோச் என்று என்னால் சொல்ல முடியும்" என்று அந்த நிர்வாகி விளக்கினார். அவள் என்றைக்கும் இல்லாமல் ஏனோ தன்னை பெற்றவர்களை நினைத்துக் கொண்டாள்.

"அது மட்டுமல்லாமல் இங்கே மற்ற பிற அமைப்புகளும் இருக்கின்றன.செக்ஸ் எஜுக்கேஷன், செக்ஸ் கன்சல்டேஷன். 'ஆர் அன்ட் டி' பிரிவு போன்ற சேவைகளும் இங்கே உண்டு. ஒரு சிலர், செக்க்ஷூஅல் ஆக்டிவிட்டியில் ஈடுபடாமலேயே தங்கள் தேவைகளை எப்படிக் கையாள்வது என்று செக்ஸ் தெரப்பிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்றுச் செல்வர். இட் இஸ் டோட்டலி தி கஸ்டமர்'ஸ் சாய்ஸ். நாங்கள் யாருக்கும் எந்த முறையையும் திணிப்பதில்லை.

மேலும் இங்கே பல கட்டுப்பாடுகள் உண்டு. இங்க வேலை செய்பவர்களுக்கும், இங்கு வரும் கஸ்டமர்களுக்கும் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு ஏதாவது கன்டேஜியஸ் டிசீஸ் இருக்கிறதா என்று உறுதி செய்த பின்னரே அவர்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம். இங்கு வேலை செய்யத் துவங்கும் முன் அனைவரும் மூன்று வார செக்ஸ் எஜுக்கேஷன் கோர்சை முடிக்க வேண்டும். இங்கு வேலை செய்பவர்களுக்கும் வரும் கஸ்டமர்களுக்கும் எந்த பர்சனல் கான்டக்ட்டும் இருப்பதில்லை. ஒருமுறை அட்டென்ட் செய்த கஸ்டமரை மறுமுறை அவர்கள் அட்டென்ட் செய்வதில்லை. அது தேவையில்லாத ஏமோஷனல் பான்டின்ங்கை தவிர்க்கிறது. இங்கு வரும் கஸ்டமர்களிடம், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எந்த தகவல்களையும் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை. 

அவர்களின் கான்டாக்ட் நம்பர், மற்றும் அட்ரஸ் மட்டும் வாங்கிக் கொண்டு இங்கே மெம்பர்ஷிப் வாங்கிக்கொள்ளச் செய்வோம். கஸ்  டமர்ஸ் இங்கே வருவதற்கு நான்கு மணி நேரம் முன்னரே அப்பாயின்மென்ட் வாங்கி கொள்ள வேண்டும். இங்கே தனித்தனியே பல அறைகள் உண்டு அந்த அறைகளுக்குள் சீக்கிரட் அலார்ம் ஒன்றை வைத்துள்ளோம். வரும் கஸ்டமர்ஸ் இங்கு வேலை செய்பவர்களிடம் மூர்க்கமாக நடந்து கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது வன்முறை செயலில் ஈடுபட்டாலோ, அதன் மூலம் அலுவலக நிர்வாகிகளுக்கு இங்கே வேலை செய்பவர்கள் தெரியப்படுத்தலாம். இவ்வாறு இங்கே வேலை செய்பவர்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம். 

இங்கே வேலை செய்பவர்கள் எத்தனை கஸ்டமரை வேண்டுமானாலும் அட்டென்ட் செய்யலாம்.  அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதற்கேற்றவாறு வீக்லி சாலரி கொடுத்து விடுவோம். நான் இப்பொழுது கூறியவை எல்லாம் இந்த நிர்வாகத்தின் அடிப்படைத் தகவல்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கே வந்து ஜாயின் செய்துகொள்ளலாம்.  மற்ற விவரங்களை நான் உங்களுக்கு அப்போதுதெளிவாக விவரிக்கிறேன்" என்று அந்த நிர்வாகி கூறினார். அனந்தாயினிக்கு அந்த அமைப்பு பிடித்திருந்தது. அவள் அன்றே வேலையில் சேருவதாக கூறிவிட்டு விண்ணப்ப படிவங்களை வாங்கிக்கொண்டாள். அங்கிருந்து அனந்தாயினியும் சுஜிதாவும் கிளம்பி விட்டார்கள்.

அனந்தாயினி அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கி விட்டாள். அவளால் தன் படிப்பு செலவையும், வாழ்க்கையையும், தன் அம்மாவின் மருத்துவச் செலவையும் பார்த்துக் கொள்ள முடிந்தது. இதற்கிடையில் வருணும் அவளும் பலமுறை சந்தித்துக் கொண்டார்கள். அனந்தாயினி நல்ல பாடகியும் கூட. அவள் பாட்டில் வருண் ஈர்க்கப்பட்டான். அவளை மீட் பண்ணும்போதெல்லாம் பாடச்சொல்லி கேட்பான். அவள் என்ன பாட வேண்டும் என்று கேட்டால், 'உனக்கு பிடித்த ராகத்தில் ஏதாவது பாடு' என்று சொல்லுவான். அவளும் தனக்குப் பிடித்த கர்ணரஞ்சனி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளைப் பாடுவாள். சிறிது நாட்களுக்குப் பிறகு அவள் குரலின் மேல் இருந்த ஈர்ப்பு அவள் மீதும் ஏற்பட்டது வருணுக்கு. இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கத் தொடங்கினர். அவள் தன் மாஸ்டர் படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தாள். அவளுடைய வாழ்க்கை சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது.

ஒரு நாள் அவள் அம்மா யசோதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவள் அம்மா மடியில் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள். "அம்மா நீ பாடி கேட்டு ரொம்ப நாள் ஆகிறது. எனக்காக ஒரு பாட்டு பாடு" என்று கூறினாள் அனந்தாயினி. 'பால் வடியும் முகம் நினைந்து நினைந்து' என்று நாட்டைக்குறிஞ்சியில் பாடிக்கொண்டே அவள் அம்மா உயிரை விட்டாள்.

அனந்தாயினி தன் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பல இடங்களில் வேலை செய்து பார்த்தாள். எல்லா இடங்களிலும் போலித்தனமும், பொய்யும், மனித சுரண்டலும் நிரம்பியிருந்தது. அவளால் எந்த வேலையிலும் சில நாட்களுக்கு மேல் நீடித்து இருக்க முடியவில்லை. அந்த வீக் என்ட், வருணும் அவளும் சந்தித்துக் கொண்டார்கள். அன்று  மே 22, 2010. புதிதாக வாங்கிய கருப்பு நிற காட்டன் சுடிதாரில் அனந்தாயினி அவளுக்குப் பிடித்த கர்ணரஞ்சனி ராகத்தில் "எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ ....மேகமே மேகமே பால் நிலா தேயுதே,  "என்ற பாடலை பாடிக்கொண்டிருந்தாள்.

"நாம் திருமணம் செய்து கொள்ளலாமா" என்று வருண் அவளிடம் திடீரென கேட்டான்.

"ஓ ஷூவர்" என்றாள் அனந்தாயினி. 

"இன்றோடு நீ அந்த பாலியல் நல அமைப்பின் வேலையை விட்டுவிடு" என்று வருண் கூறினான். 

"அது என்னால் முடியாது" என்றாள் அனந்தாயினி.

"வாட் யூ மீன்? கல்யாணத்துக்கு அப்புறமும் நீ அந்த வேலையில இருப்பியா?" என்று கேட்டான்.

"அஃப்கோர்ஸ்" என்று புருவங்களை உயர்த்தினாள் அவள்.

 "ஹவ் இஸ் இட் பாசிபில்" என்று வருண் கேட்டான். 

"நீ என்னை திருமணம் செய்து கொள்வதற்காக உன் வேலையை விட்டு விடப் போகிறாயா?" என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.

 "டோன்ட் பீ ஸ்டூப்பீட்" என்றான் வருண். 

"இதில் முட்டாள்தனம் என்ன இருக்கிறது?  நான் தெளிவாகத்தான் சொல்கிறேன், கல்யாணத்துக்கு அப்புறமும் நான் அந்த வேலையை தொடர்வேன்" என்று தீர்க்கமாக பதிலளித்தாள் அனந்தாயினி. 

"ஹௌ கேன் யூ ஈவன் கம்ப்பேர் மை ஜாப் வித் யூ? என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீ இப்பொழுது அந்த வேலையில் இருப்பதையே என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. உன் மீது உள்ள காதலினால் நான் அதை சகித்துக் கொள்கிறேன். கல்யாணத்துக்கு அப்றம் நெனச்சுக்கூட பாக்கமுடியாது. என்னை பொருத்தவரை அது ஒழுக்கம் அல்ல" என்று வருண் கூறினான். 

ஒய் நாட்? உன் வேலையில் ப்ரமோஷன் வாங்க நீ அவுட் ஆஃப் தி வே போகி, உன் மேனேஜர் ஓய்ஃப்பிற்கு சில வேலைகளை செஞ்சு குடுக்கறது ஒழுக்கமான செயலா? மொராலிட்டி என்பது காலத்திற்கு தக்கவாறும் மனித தேவைகளுக்கு தக்கவாறும் மாறிக்கொண்டே இருக்கும். இந்த உலகத்தில் மாறுதலுக்கு உட்படாத விஷயம் எதுவுமே கிடையாது" என்று கூறினாள் அனந்தாயினி.

"ஐ கான்ட் அக்ரீ வித் யூ. நான் பண்றது ஜஸ்ட் ஏ ப்ரொஃபேஷனல் அட்ஜெஸ்ட்மென்ட்" எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய செக்க்ஷீஅல் தேவைக்காக ஒரு ப்ராஸ்டிட்டியூட்டிடம் நான் போகமாட்டேன். அந்த ஒழுக்கமில்லாத செயலை என் வாழ்க்கையில் நான் என்றுமே செய்ய மாட்டேன். சில மொராலிட்டி என்றுமே மாறுவதில்லை" என்றான் வருண். 

"ஒரு ராகம் பாடும்போது ஸ்வரங்களை மாற்றிப் பாடினால் அந்த ராகம் பொய்க்கும் ஆனால் அதுவே வேறு ஒரு புது ராகமாய் உருவெடுக்கும். அதுபோலத்தான் ஒழுக்கமும். உனக்கு  'ஒழுக்கம் பிறழ்தல்' என்று தோன்றும் ஒரு விஷயம் மற்றவருக்கு நல் ஒழுக்கமாகத் தெரியலாம். "ஐ அம் சாரி, நீ என்ன சொன்னாலும் என்னால் அந்த வேலையை விட முடியாது" என்று அனந்தாயினி அழுத்தமாகக் கூறினாள்.

"ஒழுக்கமில்லாத செயலுக்குத் துணைபோகும், உன் நியாயத்துடன் என்னால் வாழ முடியாது. என் மனைவி, மற்றவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொள்ளும் நயநாகரீகமற்ற செயலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது." என்றான் வருண்.

ஒரு விஷயத்தை/செயலை வல்கர் என்று தீர்மானிக்கும் மனித மூளை/ சிந்தனையை விட வல்கரான ஒன்று இருக்க முடியுமா? மனிதத் தேவைகளை, அறிவுப்பூர்வமாய் அணுகி, குறைந்தபட்ச தனிமனித/சமுதாய சேதாரத்துடன் நிவர்த்தி செய்து கொள்வது தானே ஒழுக்கம்  என்று அவள் மனதில் நினைத்துக்கொண்டாள்.

//"என் மனைவி, மற்றவர்களுடன் தன் உடலை பகிர்ந்து கொள்ளும் நயநாகரீகமற்ற செயலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது"// என்பது உன்னுடைய தனிப்பட்ட கருத்து/முடிவு. "அதை நான்  மதிக்கிறேன்" என்றாள் அவள். 

அவர்கள் இருவரும் பிரிந்து விடுவது என்று முடிவு செய்தார்கள். அன்றுதான் அவர்கள் பார்த்துக்கொண்ட கடைசி நாள்.

அசை போட்ட சுகத்தில் இருவரும் அந்த ஒன்னாம் நம்பர் அறைக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

"அனந்தாயினி, உனக்கு பிடித்த கர்ணரஞ்சனி ராகத்தில் ஒரு பாட்டு பாடு" என்றான் வருண். 

அவள் அவனை பார்த்து, "இப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த ராகம் நாட்டைக்குறிஞ்சி" என்றாள்.

வருண் அவளைப்பார்த்து மீண்டும் சிரித்தான்.

"மொராலிட்டி மட்டுமல்ல, மனிதனின் விருப்பு வெறுப்புகளும் கூட காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே தான் இருக்கிறது" என்றாள் அவள். 

"நீ மாறவே இல்லை" என்றான் அவன்.

"நீ மாறி விட்டாய்" என்றாள் அவள். 

மீண்டும் அந்த அறை புன்னகையில் நிரம்பியது.

"சரி பாட்டு பாடு" என்றான் வருண். 

"கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா, நான் கண்ணாடிப் பொருள் போலடா" என்று பாடத் துவங்கினாள் அனந்தாயினி. ஏனோ அன்று இரவு அவன் மனதிற்கும் உடலுக்கும் அந்த நாட்டைக்குறிஞ்சி மட்டுமே போதுமானதாய் இருந்தது.


Rate this content
Log in

Similar tamil story from Drama