Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

nazeer ahamed

Action

4.7  

nazeer ahamed

Action

அழகிய கலாம் காலம்.

அழகிய கலாம் காலம்.

2 mins
19


அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை தடுத்து நிறுத்தினாரா ?


"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ?எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார் அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.மாப்பிள்ளைக்கு 47.இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் : "கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்."பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி சொன்னாள்."சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."

சொன்னாள். கவனமாககுறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி. "எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்."இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள்.நான்தான் துறையூர் சரஸ்வதி."

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.


Rate this content
Log in

More tamil story from nazeer ahamed

Similar tamil story from Action