மதுரை முரளி

Action Inspirational Thriller

5.0  

மதுரை முரளி

Action Inspirational Thriller

முடிவா?..முடிச்சா?

முடிவா?..முடிச்சா?

14 mins
511


                                   “ முடிவா? முடிச்சா? “  மதுரை முரளி

               “இ-5 “  புறநகர் காவல் நிலையம் நகர பரபரப்பில் பாதியாய், ஒதுக்குப்புறமாய், அமைதியாய் இருந்தது.

               வாயில் போட்ட வாசனைப்பாக்கை அரைகுறையாக அரைத்து விட்டு , வாசனையை மூக்கில் பரப்பி , மூளைக்குள் செலுத்தி சுறுசுறுப்பானார் நிலைய எழுத்தர் கணேசன் .

             “  அண்ணே ,கணேசண்ணே . பத்து நாளைக்கு முன்னாடி  இங்கு சேர்ந்த ஆய்வாளர் அர்ஜுன் ஐயாவோட ஆரம்ப வேகமே அமர்க்களமாக இருக்கே !.” ஏட்டு லட்சுமி ஏகத்துக்கும் வியக்க ,

           “  ஆமா லட்சுமி.  அவருடைய வயசும், பேரும் அப்படி .  எல்லாம் இளமை வேகம். ஒரு விஷயம் சொல்றேன்.  மனசுக்குள்ள போட்டுக்க . நம்ம ஆய்வாளார் ஐயா,  நாலு நாள் விடுப்பு முடிஞ்சு இன்னிக்கு வர்றாரில்ல , நேத்திக்கே எனக்கு போன் போட்டு கடந்த 5, 6 வருஷத்துல முடிஞ்ச / முடியாத கேஸ் கட்டுகளை அவரோட பார்வைக்கு தயாராக வைச்சிருக்க உத்தரவு போட்டிருக்காரு...” எழுத்தர் நிறுத்த, 

          “ அப்படியா,  என்ன காரணம் ? ஏதாவது?...”  யோசனையாய் ஏட்டு லட்சுமி இழுக்க,

          “ நான் ஐயாவோட பழைய ஸ்டேஷன்ல அவரைப் பத்தி விசாரிச்சேன்.  ஐயா எப்போதுமே முடியாத, சிக்கலான வழக்கைத்தான்  முதல்ல கையில் எடுப்பாராம்.  சரி,  சரி ஐயா வர்ற நேரமாயிடுச்சு “  சொல்லி முடிக்கும்முன்,

          ஆய்வாளரின் ‘பொலிரோ ஜீப்’ ஹார்ன் சத்தம் அழுத்தமாய் அடிக்கப்பட்டு, அவரது வருகை உணர்த்தப்பட்டது.. வண்டி டிரைவரால்.

          ஸ்டேஷன் போர்டிகோவில் ‘சர்’ ரென  வண்டி நுழைந்து சட்டென்று நிற்க, வாசலுக்கு பாய்ந்தனர் ஏட்டு லட்சுமியும், எழுத்தர் கணேசனும்.

         “  ஐயா,  வணக்கம். “ கோரஸாய்க் குரல் கொடுத்தனர்.

          “ லட்சுமி,  நம்ம நிலையத்தோட பேட்ரோல் டீம் எங்கே போயிருக்கு ? ரோல் கால் முடிஞ்சிடுச்சா?  அவங்ககிட்ட பேசிட்டு விவரம் சொல்லுங்க.  எனக்கு இப்பவே வேண்டாம் . ஒரு அரை மணி கழிச்சு... புரியுதா? “  படு வேகமாய்,  ஓட்டமும் நடையுமாய்த் தன் அறைக்குள் நுழைந்த அர்ஜூன் 

‘சட்’ டென நின்று திரும்பிப் பார்க்க,

            கணேசன் பார்வையால், லட்சுமிக்குக் கொடுத்த கண்ணசைவு மொழியைக் கண்டு சற்று எரிச்சல் அடைந்தார் அர்ஜூன்.

            உடனே, “ கணேசன்,  என்ன விஷயம்?” எனச் சந்தேகமாய் வினவ,

            “ ஐயா,  ஒண்ணுமில்லை...”  தடுமாறிப்போனார் கணேசன்.

            “  ஹ.,  கணேசன்,  நான் கேட்ட பழைய வழக்கு பைல்களுடன் நீங்க மட்டும் உள்ளே வாங்க.  என்ன புரியுதா ? “ என உத்தரவிட,

             ஓடிப்போய் அரை ‘டஜன்’ பைல்களுடன் அடுத்த நிமிடத்தில்  அவர் ஆஜர்.        

            “ ஐயா, இதில ஹெச்.பி.  கேஸ்  மட்டும் ஆறு இருக்கு. ஆனா,  குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியல. தேடிட்டு இருக்கோம் ..”

            “ இன்னமுமா? அப்புறம்,  அது என்ன? ஏதோ, புது போஸ்ட் கார்டு மாதிரி தெரியுது?..”  கண்களைச் சுருக்கியவராய் அர்ஜுன்.

           “ இ..,  இது,  நேத்திக்கு வந்த ஒரு ‘மொட்டை’ கடிதம்.  சும்மா..”

 மேலே பேச விடாது,  கணேசனை விரல் அசைவால் நிறுத்திய அர்ஜுன்,     

          அந்த போஸ்ட்கார்டை “விருட்”டென வாங்கி பார்வையை ஓட விட்டார்.

         அதில்  “ ஐயா.. புது ஆய்வாளருக்கு தாழ்மையான வணக்கம்.  உங்களை வரவேற்கத்தான இந்த மடல் . நீங்க முதல்ல ஆய்வு செய்ய வேண்டியது வழக்கு எண் 723/15. சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்ட வாசகம் மினுமினுத்தது.

         கோபமாய்க் கார்டின் பின்பகுதியை திருப்பி,  தபால் முத்திரையை ஆராய்ந்த அர்ஜுன் தபால் அலுவலக கலெக்ஷன் முத்திரையைப் பார்த்துக்கொண்டே,

       “  கணேசன் , இந்த வழக்கு எண் 723/15 பைலைக் கொண்டு வாங்க.  அதோட விவரங்களையும் கொடுங்க ..” சொல்லிவிட்டு தனது இடுப்புக்கு இருக்கை கொடுத்தார் அர்ஜுன்.

        பரபரப்பாய் 15 நிமிடங்களைப் பறிகொடுத்த கணேசன்,  மீண்டும் ஆய்வாளர் அர்ஜுன் முன் ஆஜர் .

        “ ஐயா இந்த வழக்கு முடிவானதுங்க. அதாவது,  இது முடிஞ்சு போனதுங்க  ஐயா. ஒரு கொலை வழக்கு.  இப்ப எதுக்கு இந்த மொட்டையைப் போட்டு இருக்காங்கன்னு தெரியல. ? “ மென்று விழுங்கினார் கணேசன். 

        “ எது?.  இது முடிந்த வழக்கா? இல்ல முடித்து வைக்கப்பட்ட வழக்கா? நான் ஒரு மணி  நேரத்தில  கூப்பிடுறேன். என்கூட  நீங்களும்,  ஒரு அரை மணி நேரம் பீல்டுக்கு வாங்க. " ' படபட’ வெனப் பொறிந்த உத்தரவுக்கு

பொறி கலங்கிய கணேசன், 

       ஆய்வாளர் அர்ஜுனனின் அடுத்த அழைப்பிற்கு அவஸ்தையாய்க் காத்திருந்தார்.

       ‘மலர்வனம்’  பெயர் தாங்கிய பல ஏக்கர் பங்களா தன் வனப்பை முகப்பிலேயே தாங்கி நின்றிருந்தது.

        தானியங்கி  இழுவை மரக்கதவுகள் இரு திசைகளிலும் இயங்க,

        வீட்டைச்சுற்றிலும்,  எட்டடி உயரத்திற்கு எல்லைச்சுவர். முன்புற வாசலில் மட்டும் பளிங்கு கற்கள் பதிக்கப்பட்டு,  அந்த பங்களாவின் மதிப்பை பல மடங்கு எடுத்துக்காட்டியது .

        உள்ளே நுழைந்ததும்,  வெளிநாட்டு,  உள்நாட்டு கார்கள் போர்டிகோவை பங்கு போட,

        பரவியிருந்த பச்சை புல்வெளி கால் வைக்கக் கூசும் வண்ணம் செழிப்பாய்.

       அடுத்ததாய் ஓர் பெரிய நீச்சல் குளம் , பங்களாவின் தரைத்தள அளவில் அகலமாய், பார்வைக்கு நீல நிறத்தில் சுத்தமாய்த் தெரிந்தது.

       பங்களா உரிமையாளர் சொரூபராணி பல கோடி சொத்துக்காரி. டெக்ஸ்டைல் தொடங்கி,  செயற்கை வைர விற்பனை வரை.

       அவளின் துணைக்கு பிரித்திவிராஜ்...  கணவனாய். 

      “  அஞ்சலி.,  வீட்டு உள்வேளை எல்லாம் முடிச்சிட்டியா? “ தோட்டக்கார பரமு.

     “  இல்ளை பரமுண்ணே.  இன்னும் வீட்டை துடைக்க வேண்டியிருக்கு. அம்மா,  ஐயாவும் இப்பதான் கிளம்பினாங்க இல்லையா?  அதான் லேட். “ சற்று  அங்கலாய்தாள் அஞ்சலி.

     “  இங்கே பார் அஞ்சலி.  எப்படியும்  ஐயா,  அம்மா திரும்பி வர மாலைக்கு மேல் ஆகிவிடும் . நம்ம வேலையை,  நாம தான் பார்க்க போறோம்.  அதனால , “

     “ ம்.,  புரியுது.  ஏதோ விஷயம் சொல்ல நினைக்கிறே. ம்.,  சொல்லு..”     

       தோட்டத்து எவர்சிவ்வர் பெஞ்சில் , சிறிய நிழற்க்குடையின் கீழே அஞ்சலி அமர,

       சற்று தள்ளி அமர்ந்த பரமு, சுற்றும் மற்றும் பார்த்தவனாய்ப் பேசத் தொடங்கினான். 

        “ இங்கே பாரு அஞ்சலி.  நீ இங்கே வேலைக்குச் சேர்ந்து மூணு வருஷம் ஆகுது.  எனக்கு அஞ்சு வருஷம் ஆயிடுச்சு. இதுக்கு முன்னாடி,  அதாவது எனக்கு முன்னாடியிருந்த தோட்டக்கார வேலுவை நேற்று காய்கறிச் சந்தையில பார்த்தேன்... “

      “  என்ன,  பங்களா பழைய கதை ஏதாவது எடுத்து விட்டாரா?..” அஞ்சலி அவசரப்பட ,

      “ கதை இல்லை அஞ்சலி.  பங்களாவோட பரம ரகசியம் . நாங்க இப்ப நல்ல நெருக்கமா பழகிட்டோம்ல,  அதனால , வேலு விஷயத்தை என்கிட்ட சொன்னார். கேட்டா, நீ ஆடிப் போய்டுவே. “ மர்மமாய் பரமு ஒரு சிரிப்பு சிரிக்க,  

      “ என்ன புதுசா கரடி விட்டாரா? “ 

      “  பொய்யில்ல அஞ்சலி.  நிஜமான உண்மை.  அதாவது,  நம்ம ராணியம்மாவோட  புருஷன் பேரு மேகநாத் ஐயா. அவரு அம்மாவைவிட,  பத்து, பன்னிரண்டு வயசு மூத்தவராம்.  ஆனா,  அவரு இப்ப இல்ல. “ பதட்டமாக பரமு நிறுத்த,

      “  என்ன இது? அப்ப,  இப்பவுள்ள பிரித்திவிராஜ் ஐயா யாரு?..” அதிர்ச்சியாய் அஞ்சலி.

      “  அவரு,  எப்படிச்  சொல்ல?  அம்மாவோட கையாளு மாதிரி.  அதேசமயம் கணவன் மாதிரியும்.”  இலேசாக வெக்கப்பட்டான் பரமு.     

      “ அடப்பாவி.. என்னண்ணே இது?  ரொம்ப மர்மமா போகுதே... அம்மாவோட வீட்டுக்காரர் மேகநாத்தோ என்னமோ சொன்னியே?  அவர் இப்ப இல்லையா? “  யோசனையாய் அஞ்சலி வினவ,

      “  அவரு மேலே போயிட்டாரு . ஏதோ ஒரு விபத்துலன்னு வேலு சொன்னாரு . “ குரலைத் தணித்துக் கூற, 

     “  அடடா , எதுக்குண்ணே நமக்குப் பெரிய இடத்து விவகாரம் எல்லாம்? நான் உள்ளே போய்,  வேலையைத் தொடங்கணும்.”  சொன்னவாறே அஞ்சலி எழ ,

      ‘கிர், கிர்’  வாசலில் கார் ஹார்ன்  கத்திக்கதற,

      வேகமாய் உள்ளே காரில் பாய்ந்து, நிறுத்தி இறங்கிய பிரித்திவிராஜைக் கண்டதும் , உள்ளே தெறித்து ஓட எழுந்த அஞ்சலியைத் தடுத்தவன்,

     “  இந்தா அஞ்சலி,  என்ன பரமுக்கிட்ட வெட்டிப்பேச்சு?..” கோபமாகக் கத்தினான் பிரித்திவிராஜ்.

      ‘பட்’ டெனத் திரும்பி பரமுவைப் பார்வையிலேயே எரித்தவன்,

    “  அடுத்த மாசம் உனக்கு இங்கே வேலை வேண்டுமா? வேண்டாமா? “ சொடக்கிட்டு வினவ,

     “ ஐயா.. இல்லைங்க.. வேலை வேணுங்க.  மன்னிச்சுக்குங்க.  இதோ, தோட்ட வேலைக்குப் போயிடறேன் ..” பதில் சொல்லியவனாய்ப் பரமு நழுவ,     

      காலிலிருந்த செருப்பை உதறியெறிந்த பிரித்திவிராஜ் , ‘விர்’ரென மாடிப்படிகளில் தாவி ஏறினான்.

      இன்ஸ்பெக்டர் அர்ஜுனின் பொலிரோ போலீஸ் வாகனம், முடிக்கப்பட்ட வழக்கின்,  பழைய பக்கங்களின் பாதையைத் தேடி பயணத்தை தொடங்கியது.

      “ என்ன எழுத்தர் கணேசன்,  இப்பதான் வழக்கு எண் 723/15 பத்திய பதிவு விவரங்களை படிச்சேன்.  ஏதோ,  அவசரகதியில , வழக்க மூடப்பட்டது போல எனக்கு தோணுது . நீங்க என்ன நினைக்கிறீங்க ? “ டிரைவருக்கு பக்கத்தில் இருந்த கேட்டவாறு அர்ஜுன் பார்வையால் கணேசனைத் துளைக்க,

      “ அ., அது, அப்ப இருந்த ஆய்வாளர் ஐயா தான்,  வழக்கு வெறும் சம்பவம் தான்  கொலை இல்லைன்னு சொல்லி வழக்கை முடித்து வைச்சார்..” தடுமாற்றமாய்க் கணேசன் .

      “ நீங்க ஏன் இலேசா பதர்றமாதிரி மாதிரி தெரியுது? . சம்பவம் நடந்த வீடு.. பெரிய வீடு அதானே...” சொல்லியவர் ‘அந்த’ பங்களா வாசலில் வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி நடந்து வீட்டின் சுவரைப் பார்க்க ‘மலர்வனம்’ போர்டு,  வேண்டா விருந்தாளியாய் உள்ளே வரவேற்றது.

      ஆய்வாளர் அர்ஜுன் கதவு அருகே வந்ததும்,  கதவு தானாகத் திறக்க... செக்யூரிட்டி பெரிய சல்யூட் அடித்து விட்டு ஓரமாய் நின்றான்.

     வண்டியை உள்ளே வரச்சொல்லி சைகை செய்த ஆய்வாளர் அர்ஜுன், பார்வையாலே பங்களாவைப் பல கோணங்களில் அளந்து விட்டு,

     தூரமாய்க் கைகட்டி நின்ற பரமு மற்றும் அஞ்சலியை அருகே அழைத்து,  அவர்களின் விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார் .

    தொடர்ந்து நடந்து ஆய்வாளர் அர்ஜுன்  போர்டிகோவை அடையவும் , மாடியில் இருந்து பிரித்திவிராஜ் இறங்கி வரவும் சரியாக இருந்தது. 

     “ சா.. சார்,  உங்களுக்கு யார் வேணும்? “ 

      “  நான் இ – 5, ஸ்டேஷன் ஆய்வாளர் . இங்கே சொரூபாராணி யாரு?  நீங்க ? “அர்ஜுன் பிரித்திவிராஜை மேலும்,  கீழும் பார்க்க,

     “  நா., நான் பிரித்திவிராஜ். என் மனைவி தான் அவங்க..ராணி. எதுக்கு வந்திருக்கீங்க? “  வார்த்தைகளை அவன்  விழுங்கிக்கூற,

      “ அது., ஒரு சின்ன விசாரணை பண்ணத்தான்,  நான் இங்கே             வந்திருக்கேன்.  ராணியைக் கூப்பிடுங்க.”  சொன்னவாறே,  ஹால் சோபாவில் அமர்ந்தவர்,

      தயங்கி வாசலில் நின்ற எழுத்தர் கணேஷை உள்ளே வர அழைத்தார் அர்ஜுன்.

     “  ராணி மேடம்..சீ.. என் மனைவி வெளில போயிருக்காங்க...”

     “ நான் வந்திருக்கிற விவரத்தை  சொல்லி, அவசரம்னு சொல்லி இங்கே வரச்சொல்லுங்க. “ 

       ராணிக்கு தகவல் சொன்ன ராஜ்,  அடுத்த 20 நிமிடத்தைப் பதைபதைப்பாய் நகர்த்தினான். 

      இடையில் வரவழைக்கப்பட்ட காபியை குடித்தவாறே அர்ஜுன்,

     “  இங்கே மேகநாத்  இருந்தாரமே?  அவருக்கு நீங்க?..” ஆழமாய்ப் பார்த்து பிரித்திவிராஜைக் கேட்க,

     “ அ., அவரு எனக்கு தூரத்துச் சொந்தம்.  நான் 15 வருஷத்துக்கு மேலே இதே பங்களாவில தான் இருக்கேன்.  அவர் ஒரு விபத்துல  

மரணமாயிட்டாரு .. “

       பிரித்திவிராஜ்  சொல்லி முடிக்குமுன்,  பறந்து வந்த வெளிநாட்டு கார் ஒன்று ‘சட்’டென்று போர்டிகோவில் நிற்க,

       அதிலிருந்து ஒய்யரமாய் இறங்கிய சொரூபராணி வீட்டினுள் நுழைந்ததும்,  பதற்றமாய் இருந்த பிரித்திவிராஜ் எழுந்து நின்றதைப் பார்த்து கோணலாய்ச் சிரித்தார் அர்ஜுன்.

       “ குட் மார்னிங் ராணி மேம்...”  சுருக்க்கமாய் தான் வந்த விவரங்களை கூறிய அர்ஜுன், ராணியிடம்  தன் விசாரணையைத் துவக்கினார்.     

         இன்ஸ்பெக்டர் அர்ஜுனின் தொடர் கேள்விகளுக்குப் பதில் சொன்ன ராணி,

         “  எங்க வீட்டுக்காரர் ,  20 வருஷமா பண்ணின தொழிலை,  அவரோட மறைவுக்குப் பின்னாடி, இப்ப நாங்க கவனிக்கிறோம் . இவர் தான் என்னுடைய கணவர்..”

     “ புரியலை.  ரெண்டு பேரும் பதிவுத்திருமணம் பண்ணியிருக்கீங்களா? ..’     

       “ஆமா பதிவுத்திருமணம் தான் பண்ணியிருக்கோம் . உங்ககிட்ட , என்னோட தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச நான்  விரும்பல.  ஓகே..”    

கால் மேல் கால் போட்ட நிலையில் கம்பீரமாய் அமர்ந்து ராணி பதில் கூற,

       “ அது வேணாம்.  உங்க மாஜி கணவர் மேகநாத் எப்படி இந்த வீட்ல இறந்தார்? “  என நேரடியாக விசாரணை கத்தியை  நேராக பாய்ச்சினார் அர்ஜுன். 

       “ உங்க ஸ்டேஷன்ல கேஸ் ஷீட்ல எல்லா விவரமும் இருக்குமே.  2015 ஆம் வருஷம் மார்ச் 18 ஆம் தேதி மாலை ஐந்தரை மணிக்கு மேல இந்த வீட்டு நீச்சல் குளத்தில் நீந்தும்போது அவர் திடீர்னு இறந்திட்டாரு. அதுக்கு மூச்சு திணறல் வந்தது தான் காரணம்னு உங்க ரிகார்ட்லேயே இருக்குமே. திரும்ப எதுக்கு என்னுடைய பழைய நினைவுகளைக் கிளப்பறீங்க?..” ராணி சற்று குரல் உடைய ,

      “ மன்னிக்கணும் மேம் . வருத்தப்படாதீங்க . ஒரு சின்ன தகவல் வந்தது.  அதை உறுதிப்படுத்த தான் வந்தேன்..” 

       சற்று இடைவெளி விட்டு தன் பார்வையால் வீட்டு ஹாலை நோட்டமிட்டவாறே, ராணியின் பக்கம் திரும்பி ,

       “ இது என்ன? அலமாரி முழுசும்  நிறைய விளையாட்டு கோப்பைகள் இருக்கு.  இங்கே வேற யாராவது இருக்காங்களா? “ 

       “ இ..இதெல்லாம் அவரு  , எங்க வீட்டுக்காரர் மேகநாத் வாங்கினது. அவர் தேசிய நீச்சல் வீரர்..”  ராணி சொல்ல,

       “அப்படியா ! அருமை. நீச்சல் போட்டியில் இவ்வளவு கோப்பைகளையா வாங்கியிருக்காரு..ஓ ” மனசுக்குள் யோசித்தவர், 

   அடுத்தடுத்து, கேள்விகளை மேலும் ஆழமாய் இறக்கி ,தொடர்ந்து சில தகவல்களை ராணியிடமும், பிரித்திவிராஜ் இடமும் வாக்குமூலமாய்ப் பதிவு செய்து புறப்பட்டார் ஆய்வாளர் அர்ஜுன். 

        “ என்ன ராஜ் இது?  என்ன,  புதுசா கதை தொடங்குது? “  கோபமாய்க் கூறிய ராணி, பிரித்திவிராஜை முறைக்க, 

        “ இவர்.,  இந்த இன்ஸ்பெக்டர் வந்தது எனக்குத் தெரியாது.  அதுவும்,  திடீர்னு,  சர்ப்ரைஸா நேரா நம்ம வீட்டுக்கு வந்து,  நம்மளோட பழைய விவரங்களைத் தூசி தட்ட என்ன காரணம்? “ 

         “ இப்படி கேள்வியா கேட்காதே... ராஜ்.  பதிலைத்தேடு.  உடனே, எனக்கு பதில் வேணும்.” என்றவள்  விருட்’ டென மாடிப்படி ஏற ,

          சற்றே திகிலுடன் வாசலுக்கு வந்த பிருத்திவிராஜ்,  போலீஸ் வண்டி போன திசையைப் பார்த்து உறைந்து போனான்... அச்சத்தில்.

          வேகமெடுத்த பொலிரோவை,  சற்றுச் சாந்தமாய் ஓட்ட டிரைவரிடம் சொல்லிவிட்டு, பின்னால் திரும்பிப் பார்த்த அர்ஜுன்,

        “  என்ன எழுத்தர் கணேசன் , நான் இந்த வழக்கை மறுவிசாரணை தொடங்கினது  பற்றி என்ன நினைக்கிறீங்க ? “

         “ ஐயா,  நானே சொல்லலாம்னு  நினைச்சேன்.  நீங்க சந்தேகப்படற மாதிரி இதுல ஒரு ‘முடிச்சு’ தெரியுது... “

          “ஹா., ஹா. சரியா சொன்னே கணேசன்.  இனி , நாம விரைவா செயல்படலைன்னா.,  மிச்சம் உள்ள சாட்சியங்களை அவங்க முழுசா அழிக்க முயற்சிக்கலாம் . அதனால,  முதல் வேலையா,  நாளைக்கே அந்த வீட்ல உள்ளவங்களை முழுமையா  நாம விசாரிச்சிடணும். அதோட,  நம்ம ஸ்டேஷன் ஆய்வுக்குழுவை அந்த வீட்டை உடனே கண்காணிக்க ஏற்பாடு பண்ணுங்க. குறிப்பா.. ராணி,  பிரித்திவிராஜ் செயல்பாடுகளை,  அவர்களுடைய வெளி நடமாட்டத்தை , அவங்களுக்குத் தெரியாம கண்காணிக்க சொல்லுங்க. “

         “  நிச்சயமா ஐயா.  வேற ஏதாவது? ..”

          “ இன்னொரு முக்கியமான விஷயம் . தோட்டக்காரனையும்,  வீட்டு வேலைக்காரியையும் சம்பவம் நடந்த பின்னாடி தான், புதுசா வேலையில் சேர்த்திருக்காங்க . அதனால,  பழைய ஆட்களைப் பிடிச்சா,  சீக்கிரமே  இந்த வழக்கை நாம நெருக்கிடலாம். உங்க வார்த்தைப்படி,  முடிச்சை அவுத்திடலாம். என்ன புரியுதா? “

         “ சரிங்கய்யா.  நீங்க சொன்னதை,  உடனே தொடங்கிடறேன் ஐயா.”    

         “ தேவைப்பட்டா,  நாளைக்கு அந்த வீட்டை சோதனை போடப் 

போயிவோம்.  இது நிச்சயமா கொலையாத்தான் இருக்கும் . அதற்கான நோக்கம் என்னனு?  கண்டுபிடிக்கணும்.  கூடவே , அவங்க கலைச்ச,  காணாமல் போன தடயங்களை மீண்டும் கைப்பத்தணும். இதை இரகசியமா  வைச்சுகோங்க. என்ன டிரைவர்?..நீங்களும் தான். “. சொல்லிவிட்டு தீவிரமாய் யோசிக்கத் தொடங்கினார்ஆய்வாளர் அர்ஜுன்.

          அடுத்து நகர்ந்த இரண்டு நாட்கள் , ’தேஜஸ்’ ரயிலாய் நகர,

          பயத்திலும் பதட்டத்திலும் தப்பிக்கும் திசை தெரியாமல் தடுமாறி போனார்கள் பிரித்திவிராஜூம்,  ராணியும்.

       “  ராணி,  புதுசா வந்திருக்கிற ஆய்வாளர் ரொம்ப குடைச்சல் கொடுக்கிறாறே.  பெரிய சிக்கலில் போய் நாம மாட்டிக்குவோமா? ..”

     “  இங்கே பாரு ராஜ் . வெளி உலக பார்வைக்கு தான் நாம கணவன் மனைவி. இதையே ஒரு பலமாகவோ , பலவீனமாக நினைச்சு  என்கிட்ட நெருங்க நீ நினச்சா, அந்த நினைப்பை அடியோடு மறந்திடு. சொல்லிட்டேன்..” 

     “  என்ன ராணி ரொம்ப மிரட்டற?  நடந்தது எல்லாம் உன் உத்தரவுப்படி,  உன் ஆசைக்காக, உன் சார்பா நான் செஞ்சது . நீ தான் என்னைய நெருங்கி வந்தே. என் கூட உறவை வலுக்கட்டாயமா உண்டாக்கின.  அதை ஞாபகம் வைச்சுக்கோ...” பிரிதிவியின் பேச்சில் குரல் உயர,

       “ உன் உறவு எனக்கு வேணும் ...பல வகையில. இது பரஸ்பர உறவு. உனக்கும், எனக்கும் இருக்கும் இந்த கள்ள உறவு அவருக்குத் தெரிஞ்சதுனாலதான், மேகநாத்தை முடிக்க , உங்கிட்டச் சொன்னேன்.  சரி விடு.  நான் சொன்ன யோசனைப்படி,  பழைய தோட்டக்காரன் வேலுவை பார்த்தியா? “

       “  அவன் வெளியூர்ல இருக்கிறதா சொன்னான். போன்ல விஷயத்தைக் கேட்டேன். இன்னைக்கோ,  நாளைக்கோ நேர்ல போறேன்..”

      “  முட்டாள்த்தனமா பேசாத ராஜ்.  நீ போன்ல பேசினதை அவன் பதிவு பண்ணியிருந்தா உன்னோட சேர்ந்து,  நானும் உள்ளே போக வேண்டியதுதான்.” 

       ராணி பேசிக் கொண்டிருக்கும் போதே கீழேயிருந்து பரமுவின் குரல்     

       “அம்மா,  ஐயா . இன்ஸ்பெக்டர் ஐயா வந்திருக்காரு..” 

       ‘ சட்’ டென  முகம் வெளிறிப் போனார்கள் இருவரும்.

       வேகமாய்ப் பிரித்திவிராஜ் முதலில் படியிறங்க,  தொடர்ந்தாள் ராணி .     

       “ ராணிமேம், உங்க கணவர் இறப்பு தொடர்பா , இந்த வீட்டை சோதனை போட வாரண்ட்டோட வந்திருக்கேன்.  நீங்க ஒழுங்கா,  ஒத்துழைப்பு கொடுங்க . இல்ல..’  ஆய்வாளர் அர்ஜுன் எச்சரிக்க,

      “  என்னை எதுக்கு இப்படி தொந்தரவு பண்றீங்க? நான்  அடுத்தாப்புல , உங்க மேலதிகாரிக்கிட்ட புகார் கொடுக்கப்போறேன்..”

      “  அப்படி ஒரு எண்ணமா உங்களுக்கு ? இந்த வழக்கு தொடர்பா,  எனக்கு உங்க  வீட்ட சோதனை போட முழு சுதந்திரம் கொடுத்தது என் மேலதிகாரி தான் . இப்ப எங்க டீம் அவங்க வேலையைத் தொடங்கப் போறாங்க . நீங்க ரெண்டு பேரும் சோபாவில,  அமைதியா.. அது முடியலன்னா வெறுன கண்ண மூடிக்கிட்டு உட்காருங்க.  வீட்ல உள்ள எல்லா அலமாரி,  பீரோ,  அறைகள் சாவி உடனே என் கைக்கு வரணும்...”  உத்தரவிட்ட அர்ஜுன்,

       தனது டீம் கூட, தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்.

          அரை மணி நேரத் தேடலுக்குப்பின்,  மொட்டை மாடியில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்ட வீட்டின் பழைய கண்காணிப்பு கேமராக்கள் சிக்கியது. 

        அடுத்து,  மறைந்த மேகநாத் அறையில்,  அவரின் தனிப்பட்ட டைரி,  ஆவணங்களும் சிக்க, மொத்தமாய் பொலிரோவில் ஏற்றினார்கள் .

        “ ராணிமேம்,  பிரித்திவிராஜ் உங்க ரெண்டு பேருக்கும் விரைவிலேயே விசேஷ அழைப்பு வரும்.  என்ன புரியுதா? “  மிரட்டலாய்க் கூறிவிட்டு , ஆய்வாளர் அர்ஜுன் தனது டீமோடு புறப்பட,

          அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் இருவரும்.

          இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்துப்போன பிரித்திவிராஜ்,  ராணியின் ஆணைக்கு இணங்கி,

          தன் வண்டியை,  பழைய தோட்டக்காரன் வேலு வீட்டிற்கு விரட்டினான்.

        வீட்டு வாசலிலேயே பிரித்திவிராஜைப் பார்த்ததும்,  கண்டும் காணாததுமாய் வேலு நகர முயல,அவனை மடக்கிப் பிடித்தான் பிரித்திவிராஜ்.     

        “ என்ன வேலு , தப்பிக்கலாம்னு  பார்க்கறியா? நீதானே போலீசுக்கு தகவல் சொன்னது?  மாசாமாசம் நான் உனக்கு தர்ற பணம் போதலையா?  பிச்சைக்கார நாயே..”  ஆக்ரோஷமாய் அவனைப் பிடித்து  தள்ள,

       “  என்ன மிரட்டுற ராஜ் ? நீ அந்த வீட்ல என்னைய  மாதிரி ஒரு கூலி ஆளா வேலை பார்த்தவன்டா . ஆனா,என்ன ?அந்த ராணியம்மா மேல, உன்னோட ஆசைவலைய வீசி,  அவங்க தேவையைப் பூர்த்தி பண்ற மாதிரி நடந்து , கடைசில கணவனா நடிக்க ஆரம்பிச்சுட்ட ... “ மேலும் பேச விடாது அவன் வாயை துண்டால் பிரதிவிராஜ் கட்ட முயல,

         திமிறி  ஓடிய வேலு, பிரித்திவிராஜ் பேசினதை ரகசியமாய் தன் கையில் இருந்த செல்போனில் பதிவு செய்து சேமித்து  விட்டான்.

         “ டேய் வேலு , உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறியா? 

இதுக்கு மேலயும் உன்னைய  விட்டா,  எங்களுக்கு தான் ஆபத்து . இனியும்,  உன்னை தீர்த்துக்கட்டாம நாங்க விட மாட்டோம். உன்னால,  எங்க நிலைமைக்கே ஆபத்து வந்திடும் போல..”  எனக் கத்தியவாறே ,  தன் பாக்கெட்டிலிருந்த கத்தியை வீச,

         வினாடிக்கும் குறைவான நேரத்தில் குனிந்து விலகி,  அதிலிருந்து தப்பித்தான் வேலு.

       அடுத்த சில நிமிடங்கள் அங்குமிங்கும் ஓடி... வேலு, பிரித்திவிராஜ்க்கு பாய்ச்சல் காட்ட,

      சினிமா படம் கிளைமாக்ஸ் காட்சியாய்ப்  போலீஸ் விசில் சத்தம் கேட்டது.    

      தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டு.. கூடவே,  ராணியும் பிடிக்கப்பட  ஐ.ஜி தலைமையில் ஆய்வாளர் அர்ஜுனனுக்குப் பாராட்டு விழா.

       “ நம்ம ஆய்வாளர் அர்ஜுன் துடிப்பான துணிச்சலான அதிகாரி.  அவரு பெயருக்கேத்த மாதிரி , இந்த வழக்கோட முடிச்சு அவிழ்த்த  விதத்தை , சுருக்கமாக  உங்களுக்குச் சொல்லுவார்.  நம்ம எல்லாருக்கும் இது ஒரு நல்ல வழிகாட்டலாக இருக்கும்.  என்ன அர்ஜுன் ?..” என ஐ.ஜி. பேசி அமர,

      இடைவிடாத கைதட்டல் மழையில் சற்று சங்கடப்பட்டு,  எழுந்து பேச ஆரம்பித்தார் அர்ஜுன்.

    “  அனைவருக்கும் நன்றி- வணக்கம்.  நான் இப்ப, இந்த வழக்கோட ஒவ்வொரு நிலைகளையும் சொல்றேன். நான் புதுசா அந்த ஸ்டேஷனுக்கு போனதும்,  எனக்கு வந்த மொட்டைக்கடிதம் தான் முதல் ‘க்ளு’.

கூடவே , அதோட தபால் முத்திரையை வைச்சு, பங்களாவோட  பழைய தோட்டக்காரன் வேலுவுக்கு வலை விரிச்சேன்.  ஆனா,  அதுக்கு முன்னாடி இறந்த மேகநாத் பேர்ல இருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகை மூன்று கோடி எனக்கு புதிராகவும்,  கூடவே அதை மனைவி ராணி விரட்டி வாங்கினதும் சந்தேகம் கிளப்பிச்சு.  நான் வீட்டில போய் நேர்ல விசாரிப்ப, மேகநாத் ஒரு பெரிய   நீச்சல் வீரர் அதுவும் , தேசிய நீச்சல் வீரர் அப்படிங்கறது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. அப்படிப்பட்டவரே,  நீச்சல் குளத்துல மூச்சு முட்டி இறந்ததா கேஸ் டைரி குறிப்பிட்டதுதான்  என்னோட சந்தேகத்தை உறுதிபடுத்திடுச்சு.ஆமா.,  அவர் கொலை செய்யப்பட்டார்னு...”

         ‘பட,பட’ வென மீண்டும் கைதட்டல். 

     “ அடுத்ததா,  ராணியும்,  பிரித்திவிராஜும்  கணவன் மனைவிங்ற போலி உறவில நடமாடறதை  அவங்க வீட்டு வேலையாட்கள் மூலமாக தெரிஞ்சுக்கிட்டு,  கண்காணிப்பை நான்  தீவிரப்படுத்தினேன்.  அதில,  அவங்க , பழைய வேலையாட்களைச் சாமர்த்தியமா வேலையை விட்டு நிறுத்தினது தெரிஞ்சது.  உடனே,  வேலுவுக்கும் சேர்த்து  நான் ‘செக்’ வைச்சேன். எந்த குற்றவாளியும் ,ஒரு குற்றம் செய்யும் போது,  ஏதாவது ஒரு தடயத்தைத் தவற விட்டுவாங்கிறது அடிப்படை விதி. அந்த அடிப்படையில் பங்களா வீட்டை நான் சோதனை போட்டப்ப,அங்கே  கிடைச்ச பழைய கண்காணிப்பு கேமராவில, வேலுவும், பிரித்திவிராஜும் மேகநாத்தோட காலைப் பிடிச்சு , தண்ணிக்குள்ள அழுத்திக் கொன்னது  பதிவாயிருந்தது. அந்தப் பதிவுகள் ராணியோட லேப்டாப்ல இருந்தது.   ஆனா,  அதை அவங்க,  அஜாக்கிரத்தையா அழிக்க மறந்திட்டாங்க.  அதோட, ராணி,  பிரித்திவிராஜ் மற்றும் வேலு பேசிய அலைபேசி உரையாடல்கள் மூலமாக நடந்தது கூட்டு சதின்னு உறுதியாயிடுச்சு.  இது ஒரு வித்தியாசமான,  தவறான உறவுமுறை மற்றும் பேராசை கும்பலோட சதின்னு நான் நிருபிச்சிட்டேன். கைதான மூவரும்,  தங்களோட வாக்குமூலத்துல தங்களுடைய தவறை ஒத்துக்கிட்டாங்க . கடைசியா, 

இதில,  ஒரு சுவாரஸ்யமான விஷயம்.  ராணி அடுத்தாப்புல பிரித்திவிராஜை  3 கோடிக்கு காப்பீடு பண்ண சொல்லி சமீபத்துல வற்புறுத்தியிருக்கா.  இதை அந்த பிருத்விராஜ் பயத்துல எங்கிட்ட உளறினான். இதுதான் இந்த வழக்கோட பெரிய ஹைலைட் . அடுத்த முடிச்சும் கூட.அதுக்குள்ள நாம முந்திட்டோம்... ஹா ஹா. “  ஆய்வாளார் அர்ஜுன் சொல்லி முடித்ததும்,

            கூடியிருந்த காவல் அதிகாரிகள், தங்கள் சீட்டிலிருந்து எழுந்து கைதட்டி,  ஆரவாரம் செய்து ஆய்வாளர் அர்ஜுன் செயலைப் பாராட்டினார்கள்.

                                                   -0-0-0



Rate this content
Log in

Similar tamil story from Action