nazeer ahamed

Inspirational

4  

nazeer ahamed

Inspirational

சேவை

சேவை

3 mins
405


2019 டிசம்பர் மாதம். கடும் குளிர். காஷ்மீர் மாநிலத்திற்குச் சென்ற 400 தமிழக லாரி ஓட்டுனர்கள் 15 நாட்களாக அங்கு தங்கிய நிலையில், அவர்களுக்கு உணவுப் பொருட்களும், மருத்துவ உதவியும் தேவை என செய்திகள் வெளியானது.

இதை அடுத்து இந்திய ராணுவத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டாக்டர் கிருஷ்ணவேணி அங்கே உதவி செய்ய விரைந்தார். இந்திய ராணுவத்தில் கேப்டன் அந்தஸ்தில் பணிபுரியும் இந்தப் பெண்ணின் வயது அன்று 26 தான். திருமணம் ஆகவில்லை. இவருக்குப் பின்னர் ஒரு மிகப் பெரிய கதை இருக்கிறது. வாருங்கள் அதைப் பற்றிப் பார்ப்போம்...

டாக்டர் ஆக வேண்டும் என்பது இவரது கனவு என்பதைவிட இவரது அண்ணனுடைய லட்சியம் என்று தான் சொல்லவேண்டும். 12 வயதாக இருக்கும்போது பெற்றோர்களை எய்ட்ஸுக்குப் பறிகொடுத்தவர் கிருஷ்ணவேணி. கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் கிருஷ்ணவேணி.


இவருக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டும்தான். அப்பா வெற்றிலை வியாபாரம் செய்துகொண்டிருந்தார்.

பாட்டி வீட்டில்தான் இரண்டு பேரும் வளர்ந்தார்கள். அப்பா, அம்மா மரணித்த காரணம் கூட தெரியாமல் இருவரும் வளர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பாட்டிக்கு வயசு ஆக, வருமானமும் இல்லாமல் போக, வேறுவழியின்றி 14 வயதிலேயே படிப்பை மூட்டை கட்டி வைத்துவிட்டு, வெற்றிலை வியாபாரம் செய்யத் துவங்கினார் அண்ணன். Tamil News Plus

தான் படிக்காவிட்டாலும் தங்கை படித்துப் பெரிய ஆளாக வேண்டும் என்று விரும்பிய அண்ணன், தங்கை வீட்டில் இருந்தால் சரியாகப் படிக்க மாட்டார் என்று எண்ணி விடுதியில் சேர்த்து விட்டார். விடுமுறை நாட்களில் எல்லோர் வீட்டில் இருந்தும் பிள்ளைகளைப் பார்க்க அம்மா, அப்பா இருவரும் வருவார்கள். ஆனால் கிருஷ்ணவேணியைப் பார்க்க யாரும் வரமாட்டார்கள். கிருஷ்ணவேணி கண்களும் மனதும் வெறுமையுடன் விடுதியின் கதவையே பார்த்துக் கொண்டு இருக்கும். எப்போதாவது அண்ணன் பார்க்க வருவார். கடும் உழைப்பில் சம்பாதித்தக் காசை கிருஷ்ணவேணி செலவுக்குக் கொடுத்துவிட்டுப் போவார் அண்ணன்.


"எனக்காக இப்படி எல்லாம் நீ கஷ்டப்படுகிறியே, இது தேவையா?" என்று கேட்பார் கிருஷ்ணவேணி. "உனக்காகத்தான் அம்மா நான் உயிர் வாழ்கிறேன்.நீ நல்லா இருக்கணும்னு தான் நான் சம்பாதிக்கிறேன்" என்று பெருமையாகச் சொல்வார் அண்ணன்.

சொந்த ஊரில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஆரம்பிக்கவே, அண்ணன் ஊரைவிட்டு அம்மா வழி பாட்டி வீட்டுக்குப் போய்விட்டார். விடுதியில் கிருஷ்ணவேணி சக தோழிகளோடு, ஆனால் கூடவே மன அழுத்தத்தோடு நாட்களை ஓட்டி வந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஓரளவு விவரம் தெரிய வர, தங்களுடைய அம்மா, அப்பா மருத்துவ ரிப்போர்ட்டைப் பார்த்தார் கிருஷ்ணவேணி. அப்போதுதான் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது கிருஷ்ணவேணிக்குத் தெரியவந்தது.

எய்ட்ஸ் இருந்தால் கூட ஒழுங்கான முறையில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் வாழ்நாட்களை அதிகரித்திருக்க முடியும். ஆனால் கிருஷ்ணவேணியின் அம்மா, அப்பாவுக்கு அந்த விழிப்புணர்வு கூட இல்லை. அதை அவர்களிடம் சொல்ல ஆட்களும் இல்லை. இது மாதிரி நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்று எண்ணிய கிருஷ்ணவேணி, மனதில் டாக்டர் ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகம் உண்டானது.


அண்ணனின் வெற்றிலை வியாபாரத்தில் சொற்ப வருமானமே கிடைத்து வந்த நிலையில், படிப்பு மட்டுமே கிருஷ்ணவேணியின் கனவுக்கான சின்ன வெளிச்சமாக இருந்து வந்தது. படிப்பு ஒன்றுதான் நம்மை உயர்த்தும் என்று எண்ணிய கிருஷ்ணவேணி கடுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். Tamil News Plus

முயற்சி வீண் போகவில்லை. பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் இரண்டாவது இடத்திற்கு வந்திருந்தார். அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.ஊர் மக்களே ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஆனால் பட்ட துயரங்களுக்கு இது போதாது; இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தார் கிருஷ்ணவேணி.


அப்போது அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி. அவர் மேல் அன்பு கொண்ட ஆசிரியர் ஒருவர், மேலும் மதிப்பெண்கள் கூடுதலாக எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் அவரைச் சேர்த்துவிட்டார். 12-ஆம் வகுப்பில் 1144 மதிப்பெண்கள் எடுத்தார் கிருஷ்ணவேணி.

196.75 என்ற கட் ஆஃப் மதிப்பெண் எடுத்து நூலிழையில் அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். டாக்டர் கனவே கை நழுவிப் போவது போல் உணர்ந்தார் கிருஷ்ணவேணி.

அப்போதுதான் பள்ளிக் கரும்பலகை மூலம் நடிகர் சூர்யா நடத்துகிற அகரம் ஃபவுண்டேஷன் படிப்புக்கு உதவி செய்வது பற்றியும், அவர்களது தொலைபேசி எண்களும் தெரியவந்தது. அகரம் ஃபவுண்டேஷனைத் தொடர்பு கொண்டார் கிருஷ்ணவேணி.


கிருஷ்ணவேணியை நேரில் வந்து பார்த்த அகரம் ஃபவுண்டேஷன்காரர்கள் உதவி செய்ய ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல, முகம் தெரியாத பல மனிதர்கள் மற்றும் அவரோடு கூடப் படித்த நண்பர்கள் என்று பலரும் உதவிக் கரங்களை நீட்டினார்கள்

தமிழ் வழியில்படித்தவருக்கு மருத்துவம் ஒரு சவாலை உண்டாக்கியது. தான் கடந்து வந்த சவாலை விடவும் மொழியெல்லாம் ஒரு சவாலல்ல என தூசியாய் ஊதித் தள்ளிய கிருஷ்ணவேணி முதல் வகுப்பில் டாக்டர் ஆகி வெளியே வந்தார்.

கரூர் மாவட்டம் சமத்துவபுரத்தில் முதல் டாக்டர் இவர்தான். கிருஷ்ணவேணியை ஊரே கொண்டாடியது. பத்து ஆண்டுகளாக எந்த மகிழ்ச்சியையும் அனுபவிக்காமல் மனதைக் கல்லாகவே வைத்திருந்த அண்ணன் முகம்,மகிழ்வில் பூரித்தது. அதைக்கண்டு நெகிழ்ந்து போனார் டாக்டர் கிருஷ்ணவேணி.


அண்ணனுக்குத் தெரியாமலேயே இந்திய ராணுவத்தில் மருத்துவர் வேலைக்கு விண்ணப்பித்தார் கிருஷ்ணவேணி. எல்லா சோதனைகளும் முடிந்து தேர்வான பிறகுதான் அண்ணனிடம் அதைச் சொன்னார் தங்கை.

அண்ணனுக்குத் தங்கை தன் கூடவே இருக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை. எனவே 'ராணுவம் எல்லாம் வேண்டாம்' என்று பிடிவாதம் செய்தார். ஒருவழியாக அவரிடம் பேசிப் புரிய வைத்து, ராணுவத்தில் மருத்துவராக இணைந்துவிட்டார் கிருஷ்ணவேணி.


தனக்குக் கிடைத்த உதவிகள், தன்னை மாதிரியே உதவி தேவைப்படும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று படிக்கும்போதே முடிவெடுத்திருந்தார் கிருஷ்ணவேணி. அதனால், தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை, படிப்புக்கு உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காகச் செலவு செய்தார் கிருஷ்ணவேணி.

அதுமட்டுமல்ல, கிராமங்களில் விழிப்புணர்வு முகாம், இலவச மருத்துவ சிகிச்சை என்று தன்னால் முடிந்த அளவுக்கு சமுதாயத்துக்குத் திரும்ப உதவிக் கரங்களை நீட்டிக் கொண்டே இருக்கிறார் கிருஷ்ணவேணி.

ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில் தன்னுடைய சம்பாத்தியத்தில் அண்ணனுக்குத் திருமணம் பண்ணி வைத்துவிட்டார் கிருஷ்ணவேணி.


இப்போது ராணுவத்தில் மருத்துவத்துறையில் கேப்டன் பொறுப்பில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் கிருஷ்ணவேணி. குளிரையும் பனியையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் நாட்டு மக்களைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிற போர்வீரர்களுடைய உயிரைக் காப்பாற்றுகிற பொன்னான வாய்ப்பு தனக்கு இப்போது கிடைத்திருப்பதாக நம்புகிறார் கிருஷ்ணவேணி. அனாதைக் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்கும் முடிவில் அவர் உறுதியாக இருக்கிறார்.

எந்த நிலை சென்றாலும் வந்த நிலை மறக்காதே என்பதை கெட்டியாய் பிடித்துக்கொண்ட கிருஷ்ணவேணி இன்றும் மலைக்கிராமங்கள், ஏழை மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் தன்னுடைய மருத்துவ சேவையை தேடித் தேடி செய்துகொண்டிருக்கிறார் -


Rate this content
Log in

Similar tamil story from Inspirational