DEENADAYALAN N

Abstract

3.7  

DEENADAYALAN N

Abstract

அமெரிக்கப் பயணத் தொடர்-மூன்று

அமெரிக்கப் பயணத் தொடர்-மூன்று

5 mins
11.8K










லண்டனில்… ஓடிய ஓட்டம் என்ன!


சுமார் பத்தரை மணி நேர பிரயாணத்துக்குப் பிறகு விமானம் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் டெர்மினல் ஐந்தில் தரை இறங்கியது.


அப்போது, பயணம் புறப்படுவதற்கு முன், அமெரிக்காவிலிருந்த என் மகன் என் மனைவியிடம் பேசிய அலைபேசி பேச்சு, அசரீரியாய் எங்கள் காதுகளில் ஒலித்தது:


‘அம்மா..! லண்டனில் நீங்கள் விமானம் மாற வேண்டும். மூன்று மணி நேரம் லண்டனில் ‘ப்ரேக்’ இருக்கிறது. என்றாலும் முதன் முறை வருபவர்கள், செக்யூரிட்டி செக் முடித்து, சரியான டெர்மினலைக் கண்டு பிடித்து, சரியான கேட்டைக் கண்டு பிடித்து சரியான விமானத்தில் ஏறுவது என்பது மெத்தப் படித்தவர்களுக்கே சிரமமான காரியம். எனவே நான் ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் உனக்கு சக்கர நாற்காலி உதவி கேட்டிருக்கிறேன். அதனால் அவர்களே வந்து உங்களை அழைத்துச் சென்று எல்லா நடைமுறைகளையும் நிறைவேற்றி லண்டனில் பத்திரமாக விமானத்தில் ஏற்றி விடுவார்கள். ஏதாவது தவறு நேர்ந்து விமானத்தைத் தவற விட்டாலும் அவர்கள் பொறுப்பேற்று தங்க வைத்து உங்களை சரியான அடுத்த விமானத்தில் ஏற்றி விடுவார்கள்.’ என்று கூறி இருந்தார்.


அப்பொழுதெல்லாம் ‘சரி சரி’ என்று தலையாட்டி விட்டு, லண்டனில் இறங்கியவுடன் ‘ஐயோ.. நான் சக்கர நாற்காலியெல்லாம் ஏற மாட்டேன். நான் என்ன வியாதிக்காரியா? ஏன்? அணுமின் நிலையத்தில் ஒரு ‘சைன்டிஃபிக் ஆபீசராக’ வேலை செஞ்ச நீங்க விபரமா விசாரிச்சு சரியான இணைப்பு விமானத்தில் ஏறி விட முடியாதா?’ என்று அடம் பிடித்தாள்.


அவளது வாதத்தில் ஞாயம் இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. முதலாவதாக, அதற்கான முன்திட்டம் எதுவும் என்னிடம் இல்லை. ‘லண்டனில் நாம் விமானம் மாறும் பொறுப்பை யாரோ கவனித்துக் கொள்ளப் போகிறார்கள்’ என்ற உறுதியான எண்ணத்தில், லண்டனில் விமானம் மாற எந்த விதமான பொது அறிவையும் நான் சேகரித்து வைத்திருக்கவில்லை. எனவே அங்கிருந்த வழிகாட்டிப் பலகைகளின் உதவியுடன் செயல் பட ஆரம்பித்தேன்.


‘கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல்’ என்று சொல்வார்கள். ‘நடுக்கடலில் தத்தளித்ததைப் போல்’ என்பார்கள். அத்தோடு ‘லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் விமானம் மாற வேண்டிய சூழ்நிலைப் போல்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.


விமானத்தில் இருந்து இறங்கி, சுமார் முன்னூறு மீட்டர் தேடல் நடைக்குப் பிறகு செக்யூரிட்டி செக்கிற்கான இடத்தைக் கண்டு பிடித்தால்.. அங்கே வெவ்வேறு விமானங்களில் இருந்து இறங்கிய பல நூற்றுக்கணக்கான பயணிகள் நீ…..ண்ட வரிசையில் காத்திருந்தனர். ‘ஐய்யோடி சொக்கி’ என்று மனோரமா மாடுலேஷனில் வியந்து/பயந்து கொண்டே வரிசையின் கடைசியில் போய் இணைந்தோம். ‘பய புள்ளைக எவனாச்சும் ஒருத்தன் வரிசையின் இடையில் நுழைந்து சிறிய கலாட்டா செய்தால் போதும். அதை பயன் படுத்தி வரிசையின் முன் பாகத்தில் எங்கேயாவது நுழைந்து சற்றே முன்னேற்றம் கண்டு விடுவோம்’ என்று ஆர்வமுடன் எதிர் பார்த்தோம். ம்… அது கடைசி வரை நடக்கவே இல்லை பாஸ். ஆனால் வரிசையில் விரைவான முன்னேற்றம் கண்ட போது, விமான நிலைய அதிகாரிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.




செக்யூரிட்டி செக்


அடுத்து, செக்யூரிட்டி செக்கிங்க் ஆரம்பமானது:


“பெல்ட்டைக் கழட்டு - ஷூவைக் கழட்டு – வளையலை கழட்டு – செயினைக் கழட்டு – ‘லேப்டாப்’ பை எடுத்து தனியாக ஒரு ‘ட்ரே’யில் வை, -சட்டை/பேண்ட்டு பைகள் முழுவதையும் துளாவி பர்ஸ்/பேனா/சில்லரைக் காசு/கைப்பேசி போன்ற எல்லாவற்றையும் எடு - ஒவ்வொன்றையும் தனித்தனி ‘ட்ரே’யில் வை – கைப் பையை ஒரு தனி ‘ட்ரே’யில் வை”  

என்று கூறி, எல்லா ‘ட்ரே’க்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்கேனிங் இயந்திரத்தில் அனுப்பினார்கள் - செக்யூரிட்டி செக் செய்து கொண்டிருந்த பாதுகாவலர்கள்


‘நீ வா..’ என்று ஒவ்வொரு ஆளையும் கூப்பிட்டு, உடம்பின் ஒரு ‘இன்ச்’சைக் கூட விடாமல் தடவி – பின் இன்னொரு ஸ்கேனர் வழியாக அனுப்பினார்கள்.


வெளிறிப்போய் வெளியில் வந்து எல்லாவற்றையும் சேகரித்து அதனதன் இடத்தில் அது அதை வைத்து விட்டு, இந்தியாவிலேயே கொடுத்திருந்த போர்டிங் பாஸில் அடுத்து செல்ல வேண்டிய இடத்தைக் குறித்துக் கொண்டு – நேரத்தைப் பார்த்த போது சுமார் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.


ஏழு கடல் தாண்டி.. ஏழு மலை தாண்டி..!


நம் சென்னை அல்லது பெங்களூருவில் உள்ள விமான நிலையங்களில், பயணிகள் விமானத்திற்குள் நுழைவதற்கு/வெளி வருவதற்கு என்று ஒரு சில வாயில்கள் (GATE) இருக்கும். அவை ஒன்றுக்கொன்று வெகு அருகிலேயே அமைந்திருக்கும். அதில் அமெரிக்கா செல்பவர்களுக்கு வாயில் எண் 5, ஜெர்மனி செல்லும் பயணிகளுக்கு வாயில் எண் 8 என்றெல்லாம் அறிவித்து விடுவார்கள். எல்லாம் அருகருகே இருப்பதால் பெரிய குழப்பம் எதுவும் ஏற்பட்டு விடாது.


ஆனால் லண்டன் போன்ற விமான நிலையங்களில் பல டெர்மினல்கள் இருக்கும். ஒவ்வொரு டெர்மினலிலும் ஐம்பது /அறுபது /எழுபது என்று வாயில்கள் இருக்கும். ஏதோ ஒரு டெர்மினலில், எதோ ஒரு வாயிலில் சென்று இறங்கும் நாம் அதே/அல்லது மற்றொரு டெர்மினலில் உள்ள ஏதோ ஒரு வாயிலுக்கு சென்று இணைப்பு விமானத்தில் ஏற வேண்டி இருக்கும். அவ்வாறு ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினலுக்குப் போகும்போதோ அல்லது ஒரு வாயிலிலிருந்து இன்னொரு வாயிலுக்குப் போகும் போதோ, நடந்து சென்று அடைய முடியாத தொலைவில் கூட இருக்க வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் ‘ட்ராம்’ ஒன்றில் பயணம் செய்துதான் நாம் போக வேண்டிய டெர்மினல் அல்லது வாயிலுக்குப் போக வேண்டி இருக்கும். ஒவ்வொரு டெர்மினலுமே நம் ஊர் விமான நிலையத்தைப் போல் இருபது முப்பது மடங்கு பெரிதாக இருக்கும். (இவ்வளவு விபரமாக இப்பொழுது சொல்லும் நான், அப்பொழுது இந்த அளவு விபரங்களை வைத்திருக்கவில்லை)


இந்த சூழ்நிலையில், லண்டனில், விமானம் மாறுவதற்காக, ‘ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி’ என்கிற வழக்குச் சொல்லுக்கு ஏற்ப – ஆங்கில வழிகாட்டி பலகைகளின் அறிவுரைப் படி நடந்தோம் நடந்தோம் நடந்தோம்…! மனதில் பல சந்தேகங்களுடனேயே சுமார் இருபது நிமிட நடைக்குப் பிறகு ‘கண்டேன் சீதையை!’ பாணியில் ‘அங்க பாருங்க’ என்றாள் என் மனைவி! அங்கே நாங்கள் விமானம் ஏறுவதற்கான வாயில் எண் ஒரு அம்புக்குறியுடன் போடப்பட்டிருந்தது. ஆஹா.. நம் இலக்கை நெருங்கி விட்டோம். சற்றே ஆசுவாசப் படுத்திக் கொண்டோம்.


ஆனால் ஓரிரு நிமிடங்களே அவ்வாறு இருக்க முடிந்தது. விமானங்களின் வருகை-புறப்பாடு காண்பித்துக் கொண்டிருந்த ஒரு மின் தகவல் பட்டியலை கண்டு பிடித்து எங்களின் விமான எண்ணிற்கான விபரங்களை ஆராய்ந்த போது பகீரென்றது. விமான எண், சேருமிடம், புறப்படும் நேரம் எல்லாம் சரியாக இருந்தாலும் புறப்படும் வாயில் எண் என்னுமிடம் இன்னும் புதுப்பிக்கப் படாமல் காலியாக இருந்தது.


எங்கள் போர்டிங் பாஸில் இருந்த வாயில் எண், மின் பட்டியலிலும் இருந்திருந்தால், எந்த வித கலவரமோ களேபாரமோ இல்லாமல் இருந்திருப்போம். ஆனால் மின் பட்டியலில், வாயில் எண் இருக்க வேண்டிய இடம் இன்னும் ‘update’ செய்யப்படாமல் காலியாக இருந்ததால், ஒரு வேளை திடீரென்று வாயில் எண்ணை மாற்றி விட்டால் – அல்லது எங்களுக்குக் குறித்துக் கொடுத்த பிறகு மாற்றி இருந்தால் என்ன செய்வது? – அந்த புதிய வாயில் எண்ணை நோக்கி மீண்டும் ஒரு பயணத்தைத் துவங்க வேண்டி இருந்தால்… நிச்சயமாக விமானத்தை தவற விட்டு விட்டு ‘அரஹர சிவசிவ அம்போகரா’ என்று நிற்க வேண்டியதுதான்.


அருகில் விமான நிலைய சீருடையில் இருந்த ஒரு வெள்ளைக்கார அதிகாரியை நோக்கி ஓடினேன். போர்டிங் பாஸைக் காட்டி விபரம் கேட்டேன். அவருடைய விரைவு-கொழகொழ ஆங்கிலத்தை புரிந்து கொள்ள இயலாமல் (‘பாஸ் என்னும் பாஸ்கரன்’ பட நயன்தாரா போல்), ‘பார்டன்’ ‘பார்டன்’ என்று பல முறை அவரை வெறுப்பேற்றிய பிறகு, வாயில் எண் அதேதான் என்பது உறுதியானது.


ஆனால் அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த அடுத்த தகவல், ஒரு நெருப்புத் துண்டத்தை, வாயின் வழியாக வயிற்றுக்குள் தூக்கிப் போட்டது. ‘இந்த வாயிலை அடைய நீங்கள் ‘ட்ராம்’ பிடிக்க வேண்டும்’ என்பதுதான் அந்தத் தகவல்.

.

உடனே ‘புதுக்கோட்டை சரவணன்’ பட தனுஷ் தன் காதலியை இழுத்துக் கொண்டு காடுமேடெல்லாம் சுற்றி ஓடியதைப் போல நானும் கைப் பைகளையும் என் மனைவியையும் இழுத்துக் கொண்டு விமான நிலையத்துக் குள்ளேயே அமைந்திருந்த ‘ட்ராம் ஸ்டேஷனை’ நோக்கி ஓட ஆரம்பித்தேன்.


மீண்டும் ‘ஏழு கடல் தாண்டி.. ஏழு மலை தாண்டி’ கதையாக இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்தோம். பாலம் போன்ற அமைப்புக்களையும், ‘எஸ்கலேட்டர்களில்’ ஏறியும் இறங்கியும் கடைசியில் (அலிபாபா குகையில் அலிபாபா எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மாட்டியதைப் போல) ஆள் அரவம் இல்லாத ஒரு இடத்தில் விக்கித்து நின்றோம்!


‘பெரிய தப்பு செய்து விட்டோம். பேசாமல் சக்கர நாற்காலி உதவியைப் பெற்றிருந்தால் இத்தனை கஷ்டம் இருந்திருக்காது’ என்று அழாத குறையாக என் மனைவி சொல்ல, அதைக் கேட்க எனக்கு பாவமாக இருந்தது. ஒரு சிறிய தெம்பு ஏற்பட்டு மீண்டும் தட்டுத் தடுமாறி ஒரு பாதையைப் பிடித்து ஒரு கதவைத் திறந்தவுடன்’ அங்கே ட்ராம் ஸ்டேஷனையும் ட்ராமுக்காக பலர் காத்துக் கொண்டிருந்ததையும் பார்த்து  அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டோம்.


ட்ராமில் ஏறியவுடன், பிரயாண நேரம் வெறும் நான்கு நிமிடம்தான் என்னும் குறிப்பு வாசகத்தைப் பார்த்து பெருநிம்மதி அடைந்தோம்.


எப்படியோ, சரியான நேரத்துக்குள் வந்து போர்டிங் பாஸ் காட்டி விமானத்தில் ஏறி எங்கள் இருக்கையில் அமர்ந்த போது’ எங்களுக்கு ஏதோ பெரிய சாதனையை நிகழ்த்தியதைப் போல் பெருமையாக இருந்தது.


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் நான்கில் தொடரும்…



Rate this content
Log in

Similar tamil story from Abstract