DEENADAYALAN N

Classics Others

4  

DEENADAYALAN N

Classics Others

அத்தியாயம் ஐந்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் ஐந்துஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

5 mins
23.3K



ஆனந்தக் கண்ணீர்!

ஒரு வழியாக எல்லாப் பெட்டிகளையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து – அங்கே காத்திருந்த எங்கள் மகனையும் மருமகளையும் பார்த்து மெய் சிலிர்த்தோம். (ரோஜா படத்தின் கடைசி காட்சியில் அரவிந்தசாமியை நோக்கி ஓடிய மதுபாலாவைப் போல) அவர்களை நெருங்கி அணைத்து அவர்களின் நெற்றியில் முத்தமிட்டபோது எங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது..


நியூயார்க்கில் சுடச் சுட பருப்பு-நெய் சாதம்!

 

விமான நிலையத்திலிருந்து, சுமார் முக்கால் மணி நேர பயணத்தில் இருந்தது, எங்கள் தங்கும் விடுதி-கம்-உணவகம். எங்கள் மகன், மருமகள், மற்றும் உறவினர்கள் சிந்து,ராகேஷ்,ஆராத்யா எங்களுக்கு பத்து மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து லாட்ஜில் தங்கி விட்டிருந்தார்கள். ஹோட்டலின் தரம் மற்றும் அறை வாடகைகளை இணையத்தில் ஆய்வு செய்து இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வாடகைக்காரில் எங்கள் இடத்தை அடைந்த போது சூடாக சாதம், பருப்பு, நெய் மற்றும் தயிர் இவைகளுடன் வரவேற்றனர் சிந்து-ராகேஷ்-ஆராத்யா.


ஆம் சூடாக சாதம், பருப்பு, நெய் மற்றும் தயிர் தான்! நியூயார்க்கில் - விடுதி-கம்-உணவகத்தில் சுடச் சுட நம் சாத வகைகளா என்று நீங்கள் வியந்து நிற்பது எனக்கு புரிகிறது.


ஏறத்தாழ இருபத்தி நாலு மணி நேரம் பிரிட்டிஷ் விமான பயணத்தில் அவர்களின் உணவு வகைகளை உண்டு(!) பயணம் செய்த நாங்கள், நம் உணவு கண்ணில் தட்டுப் பட்டவுடன் ‘காய்ந்த மாடு கம்பில்’ கதையாக ஒரு விளாசு விளாசினோம்.


அது சரி.. நியூயார்க்கில்.. ஒரு ஹோட்டலில்.. எப்படி சூடான…..நம் சாப்பாடு! உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தக் கேள்வி எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. சற்றுப் பொறுங்கள்.. கை கழுவி விட்டு வருகிறோம்.


ம்.. என்ன கேட்டீர்கள்.. சாதம்..பருப்பு.. .. எப்படி லாட்ஜில் என்றுதானே கேட்டீர்கள். அது வேறொன்றுமில்லை. எல்லா ஹோட்டல் அறைகளிலும், ஓவன் (மின் அடுப்பு) வைத்திருப்பார்கள். குழந்தைக்காக – ஹோட்டலிலேயே நம் உணவை சமைப்பதற்காக – அரிசி பருப்பு நெய் தயிர் எல்லாம் சிந்து கொண்டு வந்திருந்தார். குழந்தைக்கு சமைக்கும் போது காய்ந்து வரப் போகும் எங்கள் பரிதாப நிலையை உணர்ந்து சேர்த்து சமைத்து வைத்திருந்தார்கள்.



விடுகதையை விடுவியுங்கள் பார்க்கலாம்!

 

சரி நியூயார்க்கில் இப்போது நேரம் என்ன தெரியுமா? உங்களுக்கு ஒரு விடுகதை! அதை வைத்து முடிந்தால் இப்போது நேரம் என்ன என்று சொல்லுங்கள். ஓகே! ரெடி!!


நாங்கள் ஆறாம் தேதி சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்டோம். பிறகு பத்தரை மணி நேரம் பயணம் செய்து லண்டனை அடைந்தோம். அப்பொழுது மணி என்ன? (இது தெரியாதா.. மாலை ஐந்தரை மணி.. என்று சொல்லி விட்டீர்களா – சாரி இது ‘பிங்கோ’ ராங் ஏன்சர்). அப்பொழுது லண்டனில் மதியம் ஒரு மணிதான்..


சரி.. இன்னொரு க்ளூ தருகிறேன்.. லண்டனில் மூன்று மணி நேரம் தங்கி இருந்து விட்டு, மலை நான்கு மணிக்கு விமானம் ஏறி ஏழே முக்கால் மணி நேரம் பயணம் செய்து நியூயார்க்கை அடைந்தோம். இப்பொழுது மணி என்ன? (ஏன் யாருமே பதில் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் – ஓ நீங்கள் இந்த விளையாட்டுக்கு வர்லையா – ஓகே .. மீறி நீங்கள் சொல்லி இருந்தாலும் அது ‘பிங்கோ ராங் ஏன்சராக’த்தான் இருக்கும் – ஏனென்றால் நானே குறிப்பைப் பார்க்காமல் சொன்னால் தவறாகத்தான் இருக்கும்!) சரி நானே சொல்லி விடுகிறேன். நியூயார்க்கில் நேரம் அப்போது மாலை ஆறேமுக்கால் மணி. நாங்கள் குளித்து சாப்பிட்டு முடிக்கும் போது இரவு மணி எட்டறை.


அதொன்றுமில்லை நண்பர்களே.. ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நேர வித்தியாசம் இருக்கும் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம். ஒவ்வொரு நாட்டிலும் – நேஷனல் (local) டைம், இன்டெர்நேஷனல் டைம், -- என்று இரண்டு நேரங்கள் இருக்கும். என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும். மேலும் - ஒரு நாடு அமைந்திருக்கும் லேட்டிட்யூட், லாஞ்சிட்யூட் போன்றவற்றவைப் பொறுத்து - சூரிய உதயம், மறைவு, இரவு, பகல், காலம், நேரம் முதலியன ஒவ்வொரு நாட்டிலும் மாறும் என்பதும் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும்!



நியூயார்க்கில் காலை உணவு!

 

இரவு தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை பல்லை மட்டும் விளக்கிக் கொண்டு, ஹோட்டல் ரெஸ்டாரண்டில் காலை உணவுக்காக கூடினோம்.


‘பல்லை மட்டும் விளக்கிக் கொண்டு’ என்பதற்கு இரண்டு காரணங்கள்:


காரணம் ஒன்று – காலை உணவுக்கான கட்டணம், அறை வாடகையோடு இணைந்தது (‘காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட்’). இலவச காலை சிற்றுண்டி என்றும் சொல்லலாம்.


காரணம் இரண்டு - எட்டு மணிக்குள் காலை உணவை முடித்து விட வேண்டும். எட்டு மணிக்கு மேல் உணவகத்தை மூடி விடுவார்கள்.


காலை உணவுக்கு இட்டிலி, உப்புமா, பொங்கல், பூரி, ஊத்தப்பம், சாம்பார், சட்டினி, உருளைக் கிழங்கு மசால்….. என்றெல்லாம் நினைத்து சப்புக் கொட்டிக் கொண்டு நாங்கள் போகவில்லை. ரெஸ்டாரண்டில் (எதோ பெரிதாக நினைத்து விட வேண்டாம். அது ஒரு எட்டுக்கு எட்டு அறைதான் அங்கேயே எல்லாம் வைத்திருப்பார்கள்.) ரொட்டித் துண்டுகள் – தோநட் எனும் இனிப்பு பன்னுகள், கெல்லாக்ஸ், தோசை மாதிரி ஊற்றிக் கொள்ளும் பான் கேக் மாவு, வெண்ணை, ஜாம், சாஸ், டீத்தூள், காபித்தூள், சக்கரைத்தூள், பால் பவுடர், ஆரஞ்ச் ஜூஸ் ,இவைகளை எல்லாம் வைத்திருப்பார்கள். நாமே ரொட்டியை டோஸ்ட் போடுதல், தோநட் சூடு செய்தல், கெல்லாக்ஸ் கலக்கிக் கொள்ளுதல், டீ காபி தயாரித்துக் கொள்ளுதல் என எல்லாவற்றையும் செய்து கொள்ள வேண்டும்.


நாலு இட்லி, இரண்டு வடை, ஒரு செட் பூரி, ஒரு மசால் தோசை, ஒரு வெங்காய ஊத்தப்பம், ஒரு காபி என ‘சிம்பிளாக’ காலை உணவை சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நமக்கு இது எல்லாம் எம்மாத்திரம். மேலும் மேல் நாட்டவர்கள் இரண்டு ஸ்லைஸ் ரொட்டித் துண்டுகளை எடுத்து நாசுக்காக டோஸ்ட் செய்து, ஒரு டம்ளரில் ஆரஞ்ச் ஜூசைப் பிடித்துக் கொண்டு ஓவனை/டோஸ்டரை விட்டு நகர்ந்து விடுவார்கள்.


ஆனால் நாம் மட்டும் அங்கே ஆளுக்கு எட்டு ஸ்லைஸ் ரொட்டித்துண்டு, இரண்டு தோநட்டுகள், ஒவ்வொரு ரொட்டித் துண்டுக்கும் இரண்டு பொட்டலம் வெண்ணையிட்டு அதன் மேல் ஊடாக ஜாமைத் தேய்த்து, ஒரு டம்ளர் ஆரஞ்ச் ஜூசும் இன்னொரு டம்ளர் காபியும்(?) எடுத்துக் கொண்டு முக்கால் மணிநேரம் அங்கே நிற்க முடியுமா?


எனவே நாமும் நாசுக்காக நாலு ரொட்டித்துண்டுகளை டோஸ்ட் செய்து, நான்கு வெண்ணை ஜாம் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் ஆரஞ்ச் ஜூஸை எடுத்துக் கொண்டு நம் அறைக்கு வந்து விட வேண்டியதுதான். நாம் ஆசையாக எடுத்துக் கொண்டு வந்த ஆரஞ்ச் ரசம் கலப்படம் இல்லாமல் சக்கரை இல்லாமல் இருப்பதால் நாம் குடித்தவுடன் ஒருவித கசப்பையும் குமட்டலையும் தான் கொடுக்கும்.


மீண்டும் காபியையோ டீயையோ தேடிக் கொண்டு போவதற்குள் ரெஸ்டாரண்ட் மூடி விட்டிருக்கும்!


ஏதோ ஒரு வழியாக காலை உணவு முடித்து – குளித்து(!) – நியூயார்க் கலாசாரத்திற்கு ஏற்றவாறு ஆடை அணிகலன்களை அணிந்தோம். ஆண்கள் என்றால் ஒரு அரை ட்ரவுசர் (அதுவும் வயசானதுகள் அடம் பிடித்துப் போட்டுக் கொள்ளுதுகள்!) – டீ சர்ட் – கலர்ஃபுல்லாக ஷூ, ஒரு கூலிங்கிளாஸ், கேமரா! பெண்கள் என்றால் சிறிய வயதுக்காரர்கள் ஜீன்ஸ் அல்லது கவுன் அல்லது டாப்ஸ் அல்லது ஏதோ மாடர்னாக ஒரு உடை! வயசானதுகள் என்றால் ஒரு சூடிதார் – கட் ஷூ! இப்படி எங்களை தயார் படுத்திக் கொண்டு புறப்பட்டோம்.


பூட்டி விட்டு வந்த பின் மீண்டும் பூட்டைத் திறந்து அறையின் உள்ளே சென்று நம் பொருள்களை எல்லாம் சரிபார்த்து பத்திரப்படுத்தி விட்டு புறப்பட்டோம்.


லாட்ஜுகளில் அவர்களிடம் நம் அறையின் சாவி ஒன்று இருக்கும். அதை பயன்படுத்தி இடையில் நம் அறையை சுத்தப்படுத்தி, படுக்கை விரிப்புகளை மாற்றி, டவல்கள், புது பற்பசை/சோப்புத்துண்டு/ப்ரஷ் முதலியன வைத்து விட்டு செல்வார்கள்.

 

  

‘மேன்ஹேட்டனி’ல் அமிதாப்ஜி!

 

இன்டர்னெட்டில் ஏற்கனவே டிக்கட் வாங்கி வைத்திருந்த ‘பேட்டர்சன் நியூயார்க்’ என்னும் ஒரு பேருந்தில் எல்லோரும் ஏறி சுமார் அரை மணி நேர பயணத்திற்கு பிறகு நியூயார்க் நகரின் ‘மேன்ஹேட்டன்’ பகுதியில், ‘ப்ராட்வே’ என்னும் பிரபலமான ஒரு லொகேஷனில் இறங்கினோம்.


பல்லாயிரக் கணக்கில் ஜனங்கள் அலைந்து கொண்டிருந்தார்கள். இறங்கியவுடன் எங்கள் கண்ணில் பட்ட, அமெரிக்காவின் மிகப் பிரபலமான, ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் மிக பிரம்மாண்டமான கட்டிடத்தை வியந்து பார்த்தோம். ஒரு பத்திரிகை அலுவலகம் இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்து இயங்குவது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.


அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் எல்லாம் நியூயார்க் வந்திருக்கிறார்களாம். சந்திக்கலாமா? என்று என் மகன் கேட்டதும், ‘கரும்பு தின்னக் கூலியா? தாராளமாகப் பார்க்கலாம்’ என்று அனைவரும் ஆரவாரத்துடன் கத்தினோம்.


உடனே சில அடிகள் நடந்து ‘மேடம் டுஸ்ஸாட்ஸ்’ என்னும் ஒரு அழகிய கட்டிடத்தின் அருகில் சென்ற போது, எங்களை ஒருவர் வரவேற்றார். அவர் மிக பிரபலமானவர் போல தோன்றியது. மிக வித்தியாசமாக ஒளிரும் கண்களுடன் – வெள்ளை வெளேர் என்று – அசல் மெழுகு பொம்மை போல ‘பளிச்’ என்றிருந்தார். 


அதை விட ஆச்சரியம் - உள்ளே நுழைந்ததுமே எங்களை ‘நெல்சன் மண்டேலா’ வரவேற்றார். அவரைத் தொடர்ந்து மார்டின் லூதர் கிங், ஜான் எஃப் கென்னடி, ஐன்ஸ்டீன் என பல பிரபலங்கள் வரவேற்றனர். எங்களுக்கு ஒரே ஆச்சரியம்! (ஹலோ.. ‘பில்ட் அப்’ போதும் – மேட்டருக்கு வா..’ என்கிறீர்களா.. இதோ வந்து விட்டேன்.)


ஓ,,, ஓ,,, இவை எல்லாமே மெழுகு பொம்மைகள்தான்.. பிரபலமான மனிதர்களின் மெழுகு பொம்மை வடிவங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம் தான் ‘மேடம் டுஸ்ஸாட்ஸ்’(Madame Tussauds).


மைக்கேல் ஜாக்சன், மிகப் பிரபலமான ஃஃபுட்பால் ப்ளேயர்கள் (அமெரிக்காவில் கிரிக்கெட்டை சீண்டுவார் இல்லை), பிரபல இசைக் குழுக்களின் வாசிப்பாளர்கள், பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள், என மெழுகுச் சிலைகள் கொட்டிக் கிடக்கின்றன.


அமிதாப், ஷாருக்கான் ஆகியோர் மட்டும் தான் நம் ஊர்க்காரர்களாக இருந்தார்கள். உள்ளே நுழையும்போது யாரோ ‘ஐஸ்வர்யாராய்’ இருக்கிறார் என்றார்கள். ஐஸும் இல்லை. ராயும் இல்லை. ஏமாற்றம்தான். என்றாலும் அமிதாப், ஷாருக்குடன் தனியாக, கூட்டாக நின்று பல புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.


உண்மையிலேயே மிகுந்த வருத்தத்தை அளித்தது நம் மகாத்மா காந்தி அங்கே இடம் பெறாமல் இருந்ததுதான்.



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஆறில் தொடரும்…

 





Rate this content
Log in

Similar tamil story from Classics