DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதிநான்குஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பதிநான்குஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

4 mins
23



தெருக்களில் போக்குவரத்து!

நம் ஊரில் சிறந்த தெருக்களாக நாம் கருதுவது, தெருவை இரண்டாகப் பிரிக்கும், ‘டிவைடர்’ இருக்கும் தெருக்களைத்தான். ‘அங்கே டிவைடர் இருக்கு. விபத்துக்கான வாய்ப்பு குறைவு’ என்று சொல்லுவோம். டிவைடர் மீதே மோதி விபத்து ஏற்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம்.


பொதுவாக, லாஸ்வேகாஸ் நகரினுள், தெருவை இரண்டாகப் பிரிப்பது ஒரு நடுப் பாதைதான் (centre lane). அந்த நடுப் பாதையின் இருபக்கமும் மஞ்சள் கோடுகள் வரையப்பட்டிருக்கும். நடுப்பாதையின் இரண்டு பக்கத்திலும் மூன்று அல்லது நான்கு (lanes) பாதைகள் இருக்கும். ஒரு புறம் போகும் வாகனங்கள். மறு புறம் வரும் வாகனங்கள்.


அந்த மஞ்சள் பாதை எதற்கு? சிக்னல் இருக்கும் இடங்களில் இடது அல்லது வலது புறம் திரும்புவது என்றால் சிக்னல் விழும் திசையை வைத்து சென்று விடலாம். ஆனால், சிக்னல் இல்லாத இடங்களில் வரும் சந்திப்புகளில் இடது புறமோ வலது புறமோ திரும்ப வேண்டும் என்றால், அந்த வண்டிகள் இந்த மஞ்சள் கோடு பாதைக்குள் வந்து விட வேண்டும். பின் அந்த சந்திப்பில் பொறுமையாக காத்திருந்து, வண்டிகள் வராத சமயமாகப் பார்த்து திரும்பிக் கொள்ள வேண்டும்.


நம் ஊர்களில் ‘இடது புறம் செல்க’ (Keep Left) என்னும் விதி கடைப்பிடிக்கப் படுகிறது. இங்கு ‘வலது புறம் செல்க’ (Keep Right) என்னும் விதி கடைப் பிடிக்கப்படுகிறது. இங்கே உள்ள வாகனங்களில் ஸ்டியரிங் கும் ஓட்டுனர் இருக்கையும் இடது புறத்தில் இருக்கும். நம் ஊரில் வலது புறம் இருக்கும்.


இன்னொரு விஷயம். இங்கு வாகனங்கள் செல்லும் போது, இரண்டு வாகனங்களுக்கு இடையில் குறைந்த பட்சம் ஐந்து மீட்டராவது இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். நூற்றுக் கணக்கான வாகனங்கள் சிக்னலுக்காக நின்றாலும், இந்த இடைவெளியை நாம் பார்க்க முடியும்!


அதே போல் ‘ஹார்ன்’ ஒலி எழுப்புவது என்பது மிக மிக அரிது. உண்மையிலேயே நாங்கள் லாஸ்வேகாஸில் தங்கியிருந்த ஐந்து மாதங்களில் அதிக பட்சம் ஐந்து முறை கூட ‘ஹார்ன்’ ஒலி கேட்டிருக்க மாட்டோம்.


 

குட்டி மந்திரிகள் பராக்!

ஒருநாள் நடைபயிற்சி முடித்து திரும்பிக் கொண்டிருந்தோம். திடீரென தெருவில் சென்று கொண்டிருக்கும் எல்லா வாகனங்களும் அப்படி அப்படியே அசைவற்று நின்றன! ஒன்றன் பின்னால் ஒன்றாக வரும் எல்லா வாகனங்களும் அப்படியே அசைவில்லாமல் நின்று விட்டன. திருவிளையாடல் படத்தில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்னும் பாடலை சிவாஜி (டி.எம்.எஸ்!) பாடிக்கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் அசையும் பொருள் எல்லாமே அசைவற்று உராய்ந்து நின்று விடுவதைப் போல தெருவே அசைவற்று மிக அமைதியாக இருந்தது.


எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை ஏதாவது மந்திரி அல்லது வி.ஐ.பி.க்கள் வரப்போகிறார்களோ! அவர்களுக்காக போக்குவரத்து நிற்கிறதோ? ஆனால் அப்படி இருந்தாலும் ஒரு போலீஸைக் கூட காணவில்லையே! என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு மஞ்சள் நிற பள்ளி வாகனம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம். அதன் ஒரு பக்கத்தில் இருந்து ‘நில்’ (STOP) என்று எழுதப்பட்ட வட்ட வடிவ அறிவிப்புப் பலகை எழுந்து நின்று கொண்டிருந்தது. மறு பக்கத்தில் பள்ளிப் பேருந்தின் கதவு திறக்கப்பட்டு குழந்தைகள் ஏறிக் கொண்டிருந்தார்கள். சுமார் முப்பது குழந்தைகள் வரிசையில் நின்று, ஒருவர் பின் ஒருவராக, பதற்றமோ பயமோ இன்றி ஏறினர். அது வரை, மற்ற வாகனங்கள் எல்லாம் சலனமில்லா புகைப்பட காட்சியைப் போல காத்திருந்தன. அனைத்துக் குழந்தைகளும் ஏறிய பின், குழந்தைகள் அனைவரும் இருக்கைகளில் அமர்ந்த பின், பள்ளி வாகனக் கதவை மூடிய பின், ‘நில்’ சமிக்‌ஷையை பேருந்திலிருந்து இறக்கிய பின், பள்ளி வாகனம் நகர ஆரம்பித்த பின், மற்ற வாகனங்கள் ஒவ்வொன்றாக நகர ஆரம்பித்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும் ப்ரஜைகளை நோக்கி ஒரு வணக்கம் செலுத்தத்தான் தோன்றியது. \


வாகனங்கள்!

இங்கு மிதிவண்டிகளை எளிதில் பார்க்கலாம். சிறிய இரண்டு சக்கர வாகனங்களை எப்போதாவது பார்க்கலாம். சில வகை ஸ்கூட்டர்கள் வித்தியாசமான வடிவமைப்பில் அரிதினும் அரிதாக தெருவில் போவதைப் பார்த்திருக்கிறோம். மோட்டார் பைக்குகள் ஒன்றிரண்டு அவ்வப்போது பார்ப்போம். ஆனால் அவைகளின் தோற்றம் மிக அலங்காரமாக இருக்கும். வித விதமான தோற்றங்களில் இருக்கும். அவைகளின் விலையும் சில லட்சங்களாகும்.


நம் ஊரில் பைக் வைத்திருப்பவர்கள் கார் வைத்திருந்தால் பெருமை. ஆனால் இங்கு கார் வைத்திருப்பவர்கள் இத்தகைய விலை உயர்ந்த பைக் வைத்திருந்தால் பெருமை என்று சொல்கிறார்கள்.


நாங்கள் அறிந்து இங்கு கார்கள் இல்லாத குடும்பங்களே இல்லை என்று சொல்லலாம். சில சாதாரண குடும்பங்களில் கூட இரண்டு மூன்று கார்கள் வைத்திருப்பது சகஜம். சிலர் அடிக்கடி டூர் போவதற்கென்றே பிரத்தியேக வடிவமைப்புடன் கார்கள் வைத்திருப்பார்கள். இவற்றில், முன்னால் நான்கு பேர் உட்காரலாம். பின்னால் பெருமளவு லக்கேஜுகளை ஏற்றிச் செல்லும்படியான திறந்தவெளி டிக்கிகளை அமைத்திருப்பார்கள். இதில் கூடாரம், நாற்காலிகள், அடுப்புகள், காஸ் சிலிண்டர்கள். பொருள்கள், தின்பண்டங்கள் போன்றவற்றை நிரப்பிக் கொண்டு பிக்னிக் போவார்கள்.


சிறிய கார்கள் குறைவாகத்தான் இருக்கும். பெரிய கார்கள்தான் மிக அதிகமாக இருக்கும்.


பெரிய பெரிய மால்கள், குடியிருப்புகள் போன்றவற்றின் அளவுகளை விட, அவற்றிற்கென ஒதுக்கப்படும் ‘கார் பார்க்கிங்குகள்’ பல மடங்கு பெரிதாக இருக்கும். யாரும் தெருவில் ‘அப்பிடி சும்மா’ எல்லாம் காரை நிறுத்தி விட்டுப் போய் விட முடியாது. அப்படி யாரும் செய்வதும் இல்லை!


 

 

 

அபார்ட்மெண்ட்ஸ்

அபார்ட்மெண்ட்ஸ் என்றால் அடுக்குமாடி குடியிருப்பு என்றுதான் நமக்கு அர்த்தம். ஆனால் இங்கு பெரும்பாலும் குடியிருப்புகள் ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் தான் பார்க்க முடிந்தது. பெரும்பாலான குடியிருப்புகள் ‘gated community’ எனும் ‘ஒற்றைக் கதவு நுழைவு வாயில்’ அமைப்பில்தான் அமைந்திருக்கிறது.


பாதுகாப்புக்காக என்று ஆட்களை அதிகமாக பார்க்க முடியாது. ஆனால் எல்லாமே தானியங்கி மின் சாதனங்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது.


அந்த குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு என ஒரு மின் அட்டையைக் கொடுத்திருப்பார்கள். வெளியிலிருந்து கார்கள் உள்ளே வர, அந்த மின் அட்டையை, நுழைவு வாயிலின் முன்னே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு ‘ரிசீவர்’ முன்னே காட்டினால், அதை ‘சென்ஸ்’ செய்து, கதவுகளைத் திறந்து விடும்.


ஆனால் உள்ளிருந்து வெளியே செல்ல எந்த அட்டையும் தேவையில்லை. உள்ளிருந்து எந்தக் கார் வந்தாலும் அதன் ‘குறுக்கீட்டை’ உணர்ந்து கதவுகள் தானே திறந்து கொள்ளும்.


சரி! விருந்தினர்கள் வெளியிலிருந்து வந்தால்..? அவர்களுக்கு என்று ஒரு கடவுஎண் (password) இருக்கிறது. அதை அவர்களுக்கு தெரிவித்து விட வேண்டும். அவர்கள் அந்த எண்னை உள்ளீடு செய்தால் கதவு திறந்து கொள்ளும்.


ஒவ்வொரு வீட்டிலும் கூட பாதுகாப்பு மின் சாதனம் பொறுத்திக் கொள்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது, மின் சாதனத்தை இயக்கி ஒரு ‘கடவுஎண்’ணை ((password) பதிவு செய்து விடுகிறார்கள். யாராவது கதவைத் திறந்தால், அந்த கடவுஎண்ணை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பெரும் சத்தம் எழுப்பி பாதுகாப்பு அறையில் உள்ளவர்களுக்கு தெரிவித்து ஊரைக் கூட்டி விடும்.


மற்றபடி அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மூன்று சாவிகள் கொடுத்திருக்கிறார்கள். ஒன்று உடற்பயிற்சி கூடத்துக்கு. ஒன்று நீச்சல் குளத்திற்கு. ஒன்று குடியிருப்பை விட்டு நடந்து வெளியில் சென்று வருவதற்கு!


ஆனால் குடியிருப்பு பகுதியின் உள்ளே யாரும் வரமுடியாத படி கதவுகளெல்லாம். கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்தக் குடியிருப்பைச் சுற்றிய மதில் சுவர் ஒன்றும் அவ்வளவு உயரமானதாகவோ அல்லது ஒரு திருடன் நினைத்தால் தாண்டுவதற்கு கடினமானதாகவோ இருக்கவில்லை!




இங்கு ‘ரியல் எஸ்டேட்’ வியாபாரம் எப்படி இருக்கிறது?

வாடகைக்கு:

வாடகை வீடு என்றால் நம் ஊரில் இவ்வளவு ரூபாய் முன் பணம், இவ்வளவு ரூபாய் மாத வாடகை என்பார்கள். இரண்டு படுக்கை அறை, மூன்று படுக்கை அறை என்பார்கள். பகுதி வசதி(semi furnished) (அதாவது துணிகள் அடுக்க அலமாரி, பொருள்களை வைக்க பரண் போன்றவை) அமையப் பெற்றது என்பார்கள். முழு வசதி(fully furnished) (அதாவது அலமாரி, பரண், சமையல் அறை மின் புகைபோக்கி, பாத்திர அலமாரி, மின்விசிறி, குளிர் சாதனப் பெட்டி) போன்றவை அமையப்பெற்றது என்பார்கள்.


ஆனால் வாடகை வீட்டைப் பொறுத்த வரை இங்கு எளிதாகக் கிடைக்கிறது என்றே சொல்லலாம். தேவைக்கு மிகுந்து இருக்கிறது என்று தோன்றுகிறது. வாடகைக்கு கொடுப்பவர்கள் கொடுக்கும் சலுகைகளை பாருங்கள்:


வீடு மாற்றும் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்பார்கள்.

முதல் மாதம் வாடகை முழுமையாக/பகுதியாக தள்ளுபடி என்பார்கள்.

வார வாடகைக்கு தருகிறோம் என்பார்கள்.

நீச்சல் குளம், துவைக்கும் எந்திரம், உடற்பயிற்சி நிலையம், 24 மணி நேர பாதுகாப்பு, விளையாட்டு மைதானம், இலவச தொலைக்காட்சி இணைப்பு.

நாய்கள் அனுமதி (ஏற்றுக் கொள்ளக்கூடிய ‘இனம்’ மற்றும் குறிப்பிட்ட எடை மட்டும்)

பூனைகளுக்கு மட்டும் அனுமதி.

வாடிக்கையாளர் திருப்தி பரிசு தொடர்ந்து ஏழு வருடங்களாக பெற்றது.

வீட்டுக்குள்ளும் குடியிருப்பு பகுதி முழுவதிலும் இலவச இணைய வசதி.

‘ஸ்ட்ரிப்’, பள்ளி போன்றவைகளுக்கு வெகு அருகில்.( ‘ஸ்ட்ரிப்’-கேளிக்கை தெரு)


இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-15 ல் ............. தொடரும்…




Rate this content
Log in

Similar tamil story from Classics