DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பத்தொன்பதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பத்தொன்பதுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

3 mins
38


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பத்தொன்பது


 

ஸ்ட்ரிப் ரோட் அனுபவங்கள்!

 

      ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல் ‘ஸ்ட்ரிப் ரோட்’ என்பது ஒரு முக்கியமான பொழுதுபோக்குப் பகுதி. பகலை விட இரவில்தான் இங்கே ஆரவாரங்கள் களை கட்டும். பெரிய பெரிய உல்லாச விடுதிகளும், உணவகங்களும், கேஸினோக்களும், நைட்க்ளப்புகளும் நிறைந்து இருக்கும்.


கடலை மாவில் முக்கி, எண்ணையில் இட்டு, சுட்டு எடுக்கும் பஜ்ஜி ‘மினு மினு’ என்று பிரகாசிப்பதைப் போல் (இந்த வடை-போண்டா-பஜ்ஜி புத்தி நம்மளை எங்கேயும் விடாது போல இருக்கே!) விளக்கு வெளிச்சங்களில் மிதக்கும் ஒரு பகுதிதான் ஸ்ட்ரிப். எப்போதும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும்! ஆண்களும் பெண்களும் சரி சமமாகக் காணப்படுவார்கள்.


சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, நைட்க்ளப் போவது, சூதாட்ட விடுதிகளில் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடுவது, தெருக்களில் நடனமாடுவது – போன்ற எல்லாவற்றிலும் ஆண்களும் பெண்களும் சரி சமமாகத்தான் இருக்கிறார்கள் – ஒரே ஒரு விஷயத்தைத் தவிர!


இந்த விஷயத்தில் இங்கு ஆணை விட பெண் குறைவுதான்!

இந்த விஷயத்தில், ஆண்களை விட பெண்கள், குறை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள்! அது.. (ஹி..ஹி..) உடையில்! ஆண்கள் பெரும்பாலும் அரை ட்ரவுசர்தான் அணிகிறார்கள். பெண்கள் பெரும்பாலும் கால் ட்ரவுசர்தான் அணிகிறார்கள். ஆண்கள் முழு மார்பையும் மறைத்து சட்டை அணிகிறார்கள். பெண்கள் இப்படி அப்படித்தான் அணிகிறார்கள். ஆனால் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இதையெல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை – கூடவே வரும் மனைவிக்குக் கூட தெரியாமல், ரகசியமாக ஜொள்ளு விடுவதில் கைதேர்ந்தவர்களான, ஒரு சில ஜொள்ளு பார்ட்டிகளைத் தவிர!


‘பொசுக் பொசுக்’கென்று கை நீட்டக் கூடாது

ம் ஊரில் சில கடைகளுக்கு முன் நின்று நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அதே போல், ‘ஸ்ட்ரிப்’பில் நடந்து கொண்டே இருந்த போது, சில இடங்களில், நோட்டீஸ் போல அட்டைகளை சிலருக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் ஆர்வம் மிகுதியில் கையை நீட்டினேன். என் பையன் வெடுக்கென்று என் கையைப் பிடித்து ‘இந்தப் பக்கம் வாருங்கள்’ என்று இழுத்து விட்டான்.


பிறகுதான் தெரிந்தது, அந்த அட்டையில் அறைகுறை உடைகளுடன் பெண்கள் புகைப்படம் இருந்தது. எனக்குப் புரிந்து விட்டது! உங்களுக்கும் புரிந்திருக்குந்தானே!


உற்சாகப் பொழுது போக்குகள்

தெருக்களில் ஆங்காங்கே நடனங்கள் களை கட்டி நடந்து கொண்டிருந்தன. பாடல்களும் இசைக்கருவிகளும் உச்சஸ்தாயில் அலறி அலறி ஒலித்தன. இளம்/நடு/முதிய வயதில் இருந்த ஆண்களும் பெண்களும் தங்களை மறந்து மனம் விட்டு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள்.


தெருவில் இப்படி ஆடுகிறார்களே என்று ஆரம்பத்தில் நமக்கு தோன்றினாலும், உண்மையில், அவ்வாறு ஆடும் போது அவர்கள் தங்கள் கவலைகளை மறக்கிறார்கள். ‘டென்ஷனை’ கரைக்கிறார்கள். எந்த ஆபாசமும் இன்றி ஆடி ஆடி தங்கள் மனதை மயிலிறகாய் ஆக்கிக் கொள்கிறார்கள்.


வயது முதிர்ந்த ஒரு ஜோடி, கூட்ட இடிபாடைத் தவிர்த்து, ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று மெலிதான அசைவுகளுடன் ஆடியதைப் பார்த்த போது, மனம் உருகிப் போனது.


ஒரு இடத்தில் ஒரு குழுவின் நடனம் மிகவும் மனதை உருக்கியது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் (உள்ளூரில் எங்கிருந்தோ யாரோ அவர்களை அழைத்து வந்திருக்க வேண்டும்), அவர்களை உற்சாகப் படுத்தி சாதரண மனநிலை உள்ளவர்களும் இணைந்து ஆடிய நடனத்தைப் பார்த்து, அந்த பரபரப்பான சுழ்நிலையிலும் மனம் சற்று கணத்தது. (எல்லா மனிதர்களும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களே! எத்தனை சதவிகிதம் என்பதுதான் ஒருவரிலிருந்து மற்றொருவரை வேறு படுத்துகிறது.)


‘ஒன் டாலர் ப்ளீஸ்…!’

ஸ்ட்ரிப்’பில் தொடர்ந்து நடக்கும் பொழுது கண் தெரியாத ஒருவர் ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைத்துக் கொண்டு இருப்பார். இன்னொருவர் ‘செல்வதற்கு வீடு இல்லை’ (No Home to Go!) என்ற வாசகம் பொறித்த ஒரு தட்டியை பக்கத்தில் வைத்துக் கொண்டு படுத்துக் கிடப்பார். ‘தீயில் வீட்டை இழந்து விட்டேன்’ (Last Apartment in Fire) என்ற வாசகத்தட்டியுடன் மற்றொருவர் அமர்ந்திருப்பார். ‘உண்மையான லாஸ்வேகாஸ் அனுபவம் – வீடு திரும்ப முடியவில்லை’ (Real Lasvegas Experience-Cannot go home) என்ற தட்டியுடன் பிறிதொருவர் துவண்டு கிடப்பார்.


இன்னும் ஒருவர் ‘பைப்’ அல்லது ‘அக்கார்டின்’ அல்லது ‘வயலின்’ என்று ஏதாவது ஒரு கருவியை இசைத்துக் கொண்டு இருப்பார். ஆணும்(கணவன்!) பெண்ணும்(மனைவி!) இசைக் கருவிகளுடன் பாடிக்கொண்டிருப்பார்கள்.


இவர்கள் அனைவரின் முன்பாகவும் ஒரு கூடை அல்லது பக்கெட் அல்லது உண்டியல் போன்ற ஏதாவது ஒன்று இருக்கும். இவர்களில் ஒருவர் கூட ‘காசு போடுங்கள் என்று வாய் திறந்து கேட்டு நாங்கள் பார்க்கவில்லை. மனம் இறங்கும் சிலர் அதில் ஓரிரு டாலர்கள் போட்டு விட்டு செல்வார்கள். யாரையும் தொல்லைப் படுத்துவதும் இல்லை. இவ்வாறு இருப்பவர்கள் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவுதான்!


(ஹி..ஹி..) நைட்க்ளப் தகுதிகள்!

சில கேஸினோ/ஹோட்டல்களில், ‘நைட்க்ளப்’புகளுக்குள் செல்வதற்காக, இளைஞர்களும் அவர்களுக்கு சமமாக அல்லது சற்று அதிகமாகவே இளைஞிகளும், மிக நீ…ண்..ட வரிசையில் காத்திருந்தனர். நடுத்தர வயதுடைய ஆண்களும் பெண்களும் கூட நின்றிருந்தார்கள். அதற்கு எவ்வளவு கட்டணம் என்று தெரியவில்லை. (குடும்பத்துடன் சென்று கொண்டிருக்கும் போது இதையெல்லாம் போய் விசாரித்துக் கொண்டிருக்க முடியுமா?) இளைஞிகளுக்கு இலவசம் என்று சிலர் சொன்னார்கள். இளைஞிகளுடன் சென்றால் இளைஞர்களுக்கு ‘தள்ளுபடி’ உண்டு என்றார்கள். சிலர் அதெல்லாம் இல்லை-எல்லோருக்கும் ஒரே கட்டணம்தான் என்றார்கள். ‘பல்லு போனவனுக்கு பட்டாணி பற்றி என்ன கவலை?’ என்று பேசாமல் வந்துவிட்டேன்.

 

அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் 20ல் ............. தொடரும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Classics