DEENADAYALAN N

Classics

4.0  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் ஏழுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் ஏழுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

5 mins
23.4K



 

நான்.. உயர.. உயர.. போகிறேன்!

 

அதன் பின், சாப்பிட்டு முடித்த அதே தெம்புடன் ‘பொடி’ (பருப்புப் பொடி போட்டு சாப்பிட்டதால் வந்த பாதிப்பு) நடையாகவே நடந்து, ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாகத் திகழ்ந்த, ‘எம்பையர் ஸ்டேட் பில்டிங்’ எனும் கட்டிடத்தை அடைந்தோம். அந்த கட்டிடத்தின் எண்பத்து ஆறாவது மாடிக்கு சென்று அங்கிருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிப்பது எங்கள் நோக்கம்.

‘நீ எல்லாம் வாழ்க்கைலே எப்பொடா உயரப் போறே’ – என்று சிறிய வயதில் எல்லா அப்பாக்களும் கேட்பது நினைவுக்கு வந்தது.

உயரே செல்வதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுக் கொண்டோம். பாதுகாப்பு சோதனைகளை முடித்தோம். ‘கண்ணாடி, பாட்டில்கள் தவிர்க்க வேண்டும் – சிறிய அளவிலான எளிதாக தூக்கிச் செல்லக்கூடிய லக்கேஜ் மட்டும்’ –போன்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு லிஃப்டில் ஏறினோம். சில வினாடிகளிலேயே எண்பத்து ஆறாவது மாடியை அடைந்தோம்.

அந்தத் தளம் முழுவதும் ஒரு வட்டவடிவில் அமைந்து இருந்தது. சுற்றுச்சுவர் அமைத்து, அதன் மேல் சுமார் பத்தடி உயரத்திற்கு இரும்பு கம்பிகளை பதித்து, எளிதில் பார்க்கும் வண்ணம் ஒரு அடிக்கு ஒரு அடி கம்பி சதுரங்களையும் அமைத்து இருந்தார்கள்.


                                           


ஆயிரக்கணக்கான வெளிநாட்டு / உள்நாட்டுப் பயணிகள். அந்த பிரம்மாண்ட உயரத்திலிருந்தனர். ஏறத்தாழ எல்லோருமே காமெராவும் கையுமாக அல்லது டெலஸ்கோப்பும் கண்ணுமாக திரிந்தனர். நியூயார்க் நகரின் அழகினையும், ஆச்சரியத்தையும், பிரம்மாண்டத்தையும், ஆங்காங்கே பூத்துக் குலுங்கும் ராட்சத மலர்களைப் போல் இருந்த ராட்சத கட்டிடங்களையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து தெரிந்த ஆறும் அதில் பயணம் செய்து கொண்டிருந்த படகுகளும் காண கண் கொள்ளா காட்சியாகும்.


ஒரு நல்ல கேமராவும் அதோடு முடிந்தால் ஒரு நல்ல ‘டெலஸ்கோப்’பும் இல்லையென்றால் இத்தகைய அழகான காட்சிகளை இழக்க நேரிடும். பொதுவாக பயணம் முழுவதுமே கேமரா இல்லை என்றால் வருத்தப்பட நேரிடும்.


‘எம்பையர் ஸ்டேட் பில்டிங்’கின் பிரமிப்பு நீங்கி அந்த உயரத்திலிருந்து சற்று மெதுமெதுவாக கீழிறங்கினோம். ‘டைம் ஸ்கொயர்’ நோக்கி எங்கள் நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம்.


       

கட்டிடம்.. கட்டிடம்.. கட்டிடம்.. சர்வம் ஜோதி மயம்!

 

 டைம் ஸ்கொயர் என்பது வேட்டையாடு விளையாடு படத்தில் கமலும்-ஜோதிகாவும் பாட்டெல்லாம் பாடுகின்ற ஒரு பகுதி.

அடேயப்பா… எங்கெங்கு நோக்கினும் வானுயர - சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை – உண்மையிலேயே வா……….னுயர பல நூற்றுக் கணக்கான கட்டிடங்கள் நம்மை வசீகரிக்கின்றன. உலகின் எல்லா பிரபலமான பிராண்டுகளும், பொருட்களும், நிறுவனங்களும் இந்த கட்டிடங்களுள் அமையப்பெற்று மிக மிகப் பிரம்மாண்டமான அளவில் இயங்குகின்றன.

.ஓரிடத்தில் சிற்சில கடைகளின் ஒரே மாதிரியான அமைப்பு நமக்கு சென்னை பர்மா பஜாரை நினைவு படுத்துகின்றன. ஆனால் பர்மா பஜாரைப் போல் ஒரே வரிசையில் இல்லை. சுத்தத்திலும், ஒரே மாதிரியான ஒளி அமைப்பிலும், நேர்த்தியான-ஒழுக்கமான தோற்றத்திலும் ஸ்னேகா மேடத்தின் பல்வரிசை அமைப்பில் நின்று மனதை மிகவும் கவர்ந்தன.

அந்த ஜனத்திரட்சியான கூட்ட நெரிசலிலும் ஒரு பக்கம் மிக்கிமவுஸ், சர்க்கஸ் கோமாளி போன்ற வேஷத்தில் சிலர் திரிந்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம், ஜட்டி மட்டும் அணிந்து, மிகுந்த உடற்கட்டுடன், மிகப்பெரிய உருவம் கொண்ட ஆண்கள், கையில் கிட்டார் இசைக் கருவியுடன் திரிந்தனர். மறுபுறம் மிக அழகான, மிக மிக அழகான, மிக மிக இயற்கையான ரோஸ்/வெள்ளை நிறத்தில், ஈருடை மட்டும் அணிந்து கொண்டு, பல வண்ண இறகுகளை சூடிய வண்ணம், ஈருடை தேவதைகள் போல் திரிந்தனர்.

நம் ஊரில் விழாக்காலங்களில் விதவிதமான வேஷம் அணிந்து, உடல் முழுதும் வண்ணப் பூச்சுக்களுடன் வரும் ஆண்களைப் போலவே இங்கும் சில ஆண்கள் குரங்கு வேடமணிந்தும், மற்ற விலங்குகளின் வேடமணிந்தும் வருவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

அதை விட வேடிக்கை என்னவென்றால், சுற்றுலா வந்த இளம் பெண்கள், பெரிய சைஸ் கட்டுடல் கொண்ட ஆண்களுடன் நின்று, போட்டோ எடுத்துக் கொண்டு, அவர்களுக்கு காசு கொடுக்கின்றனர். பெருசுகள், நடுவுகள், இளசுகள் என எல்லா வயது ஆண்களும் ஈருடை தேவதைகளுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களுக்கு காசு கொடுக்கிறார்கள். இவ்வாறு பல்வேறு வேஷத்தில் வருபவர்களுடன் மக்கள், குறிப்பாக நம்மைப் போன்ற டூரிஸ்டுகள் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு அவர்களுக்குப் பணம் கொடுகின்றனர்.

இத்தனை கூட்டத்தையும் சமாளித்துக் கொண்டு, தங்கள் ’செல்ல’த்தை ஆசையுடன் அன்புடன் பிரியமுடன் கட்டி அழைத்துக் கொண்டு வரும் சில உள்ளூர் நாகரீக பெண்களையும் காணலாம். (கரெக்ட்.. செல்லம் என்று நான் குறிப்பிட்டிருப்பது அவர்களின் ‘நாய்களை’த்தான்.)

நேரம் நன்றாக இருட்டி விட்டதால் டைம் ஸ்கொயர் ஒரு மின் விளக்கு வெளிச்ச சொர்க்கமாய் மலர்ந்திருந்தது. ஜோதி மயமாய் விரிந்து கிடந்தது. நம்மால் கற்பனை செய்ய முடியாத பலப்பல வண்ணங்களுடன் மிகப்பிரம்மாண்ட பெயர்ப் பலகைகள். நூற்றுக் கணக்கான, அகண்ட ப்ரம்மாண்ட எல்சிடி திரைகள். அவற்றில் ஓடும் கண்ணைப் பறிக்கும் விளம்பர வண்ண வெளிச்சங்கள். இரண்டு மணி கூண்டுகளுக்கு எதிராக அமைந்திருந்த ஒரு இறக்கத்தில் (slope) அமர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள், நேரம் போவதே தெரியாமல் தங்களை மறந்து சூழ்நிலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர்.

எதிரில் ஒரு பக்கம் நாஸ்டாக் பங்கு மார்க்கட் கட்டிடத்தில் சுற்றி சுற்றி வந்த ‘ஷேர்களின்’ விலைப் பட்டியல்’ ஷேர் பிரியர்களின் மனத்தில் ஒரு வித மயக்கத்தையும் பிரம்மிப்பையும் கொடுத்துக் கொண்டிருந்தது.

இரவு வெகு நேரம் அங்கே தங்கியிருந்து விட்டு எங்கள் அறைக்குத் திரும்பும்போது இரவு மணி பதினொன்றுக்கு மேல் ஆகி விட்டது. வரும் போதே பிசா உணவு வகைகளை பார்சல் வாங்கிக் கொண்டு வந்து, ‘உண்டோம்’ என்று பெயர் செய்து விட்டுப் படுத்துத் தூங்கினோம்.

(ஒரு விஷயம்! அசைவம் சாப்பிடாத நானும் என் மனைவியும்தான் உணவுப் பிரச்சினை என்று அதிகம் புலம்புவோம். ஆனால் அசைவம் சாப்பிடுபவர்களான எங்களுடன் இருந்த மற்ற அனைவருக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை.)


 

தேர் போல் ஊரும் பேருந்து கூரைப் பயணம்!

 

மறுநாள் நியூயார்க்கில் நாங்கள் பார்க்க இருந்தது அமெரிக்காவின் ‘Statue of Liberty’ எனப்படும் ‘சுதந்திராதேவி சிலை’தான். ஆனால், அதற்கு முன், ஊர் சுற்றிப் பார்க்கும் பேருந்தில் ஏறி, இரண்டு மணி நேரம் கழிக்கவிருந்தோம்.

நம் ஊரில் ஊர் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்? பேருந்து அல்லது ‘கால் டாக்சி’ அல்லது ஆட்டோ இவற்றில் ஏறி பிராயாணம் செய்து இடங்களைப் பார்ப்போம். ஆனால் இரண்டு மணி நேரம், பேருந்திலேயே அமர்ந்து கொண்டு ஊர் சுற்றிப் பார்க்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் எங்களுக்காக காத்திருந்தது.

பேருந்திலா..! அதில் அமர்ந்து கொண்டு ஊர் சுற்றிப் பார்ப்பதா? அதுவும் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பார்ப்பதா? அப்படி எதைப் பார்க்க முடியும்? காணும் காட்சிகள் மனதில் தங்குமா? ‘டர்.. புர்..’ என்று வந்து போகும் மற்ற வாகனங்களின் இரைச்சலில் எதை ரசிக்க முடியும்? அப்படி போகிற போக்கில் அரக்க பரக்க பார்ப்பதால் என்ன பயன்? அதில் அப்படி என்ன ஆர்வமூட்டும் வித்தியாசம் இருக்க முடியும்?

நியாயமான கேள்விகள்தான். அதற்கான பதில்களைப் பார்ப்போம். நாம் செல்லவிருக்கும் பேருந்து ‘Hop On Hop Off’ எனப்படும் ஆங்காங்கே ஏறி இறங்க வாய்ப்பு தரும் பேருந்து! இருக்கைகள் முழுவதும் அந்தப் பேருந்தின் மேற்கூரையில் திறந்த வெளியில் அமைக்கப்பட்டு இருக்கும். எனவே நமக்கு முன்னும் பின்னும் மேலேயும் கீழேயும் முன்னூற்றி அறுபது கோணப் பார்வையில் எங்கு வேண்டுமானாலும் பார்க்கலாம். மற்ற எந்த வாகனமும் இடையில் வர முடியாத, ‘இந்தப் பேருந்துக்கு மட்டுமே’ என்று தெருவின் ஒரு பகுதியில் ஒதுக்கப்பட்ட, தனியான பாதை! பேருந்து மெதுவாக ஊர்ந்து போய்க் கொண்டிருக்கும். அதே சமயம் மற்ற வாகனங்களும் ஜனங்களும் பேருந்தின் தனிப் பாதையின் இரு மறுங்கும் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள்.

பெரும்பாலும் மிகப் பெரிய.. மிக நெருக்கமான.. மிகமிகப் பெரிய.. மிகமிக உயரத்தில்.. கட்டிடங்கள்! அன்னாந்து பார்த்தாலும் அதன் உச்சியைப் பார்க்க முடியாது என்னும் படியான கட்டிடங்கள்! பல நூற்றுக் கணக்கான – மிகப் பிரபலமான கட்டிடங்களை ஒரு பேருந்தின் மொட்டை மாடியில் அமர்ந்து காண்பது என்பது ஒரு பரவசம் ஊட்டும் உணர்வுதான்.

ஆங்காங்கே தெருவில் மக்கள் ஏதாவது வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள், குளிர்பானம் குடித்துக் கொண்டு இருந்தார்கள், ஓரிரு ஜோடிகள் ‘மயங்கி’ நின்று கொண்டு இருந்தார்கள், வித விதமான மனிதர்கள் சுற்றித் திரிந்தார்கள்.

திடீரென்று ஒருவர் ஒரு இசைக் கருவியை வைத்து வாசித்துக் கொண்டிருந்தார், அவர் முன் இருக்கும் தொப்பி அல்லது தொப்பி போன்ற ஏதாவது ஒன்றில் ஒரு டாலர் நோட்டுகள் விழுந்து கொண்டிருந்தன.

இடையிடையே வெவ்வேறு சந்திப்புகளில் பேருந்து ஊர்ந்து கொண்டே திரும்பும்! அப்போது நம் தலைக்கு வெகு அருகில் போக்கு வரத்து சிக்னல் விளக்குகள் வந்து போகும். சில இடங்களில் கைக்கெட்டும் வகையில் மரங்களின் நெருக்கம் வந்து போகும்.

இந்தப் பேருந்தில் ஏறியவுடன், மைக்கை வைத்து விவரிக்கும் ஒரு வழிகாட்டி இருப்பார். அவர் பயணிகள் ஒவ்வொருவருக்கும் காதில் மாட்டிக் கொள்ளும் ‘இயர் போன்’ ஒன்றைக் கொடுத்து விடுவார். அது அவருடைய பேச்சை இரைச்சல் இன்றி கேட்பதற்காக. (அது நமக்கே நமக்குதான். திருப்பித் தரவேண்டியதில்லை). அதன் ஒற்றை முனையை நம் இருக்கையில் இணைந்திருக்கும் ஒரு சாக்கெட்டில் சொருகி, ‘ear phone’ – ஐ காதில் சொருகிக் கொண்டால் அவர் பேசுவது தெளிவாக கேட்கும். ஆனால் அவர் பேசும் ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களுக்கே சிரமம் எனும் பொழுது நம்மால் புரிந்து கொள்ள முடியுமா என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம். என்றாலும் அந்தப் புரியாமை என்பது நமது சந்தோஷத்தை - புலகாங்கிதத்தை எள்ளளவும் குறைக்கவில்லை என்பது எங்கள் அனுபவபூர்வ உண்மை.

பேருந்தின் கூறையில் இருக்கும் போது திடீர்னு மழை கிழை வருமே…. ‘அப்பொ என்ன செய்வீங்க.. அப்பொ என்ன செய்வீங்க..’ என்று குரு-சிஷ்யன் படத்தில் ரஜினி-பிரபுவை பார்த்து வினுசக்கரவர்த்தி கலாய்ப்பதைப் போல் நீங்களும் கலாய்ப்பது புரிகிறது. சற்றே மேகம் திரண்டு ஓரிரு துளி மழைத்தூரல் விழுந்த போது, பேருந்தில் இருந்த அத்தனை பேருக்கும், மஞ்சள் நிறத்தில் ஒரே மாதிரி மெலிதான ‘பயன்படுத்தி தூக்கி எறியும்’ மழைக் கோட்டையும் கொடுத்து அசத்தினார்கள். (இப்பொ என்ன செய்வீங்க.. இப்பொ என்ன செய்வீங்க..)

அது மட்டுமல்ல. இரு பக்கமும் சிட்டி பேங்க், அடிடாஸ், சப்வே, பாப்பாஜோன்ஸ்,மெக்டொனால்ட், ‘macy’s’, கோக், பெப்சி, ஏடி&டி, சைனா டவுன் என்று நமக்கு தெரிந்த அல்லது கேள்விப்பட்ட பிரபலமானவை நூற்றுக்கணக்கில் அணி வகுத்திருக்கும். மேலே அன்னாந்து பார்த்தால் இரட்டை டவர் மெமொரியல், ’Empire State Building’ என்று பல நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் பிரம்மாண்டம் காட்டி நம்மை மிரள வைக்கும். கொஞ்சம் கீழே பார்த்தால் பங்கு மார்க்கெட்டின் பிரபலமான ‘Bull Statue’ நம்மை அசர வைக்கும். இன்னொரு பக்கம் பார்த்தால் நியூயார்க்கின் பழமையான தபால் அலுவலக கட்டிடம் கையசைக்கும்.

ஒன்றை இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாக தென்படுவதில் என்ன ஒரு ஆச்சரியம் ஏற்படப் போகிறது என்று சிலர் நினைக்கலாம். அதன் பிரம்மாண்டத்தை, நெருக்கத்தை, வடிவங்களை, நீள-அகல-உயரங்களை, உயரங்களை, எண்ணிக்கையை நேரில் பார்க்கும்போதே நாம் அதை உணர்வோம்.


                                      அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் எட்டில் தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics