DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பனிரெண்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!(கோவை என். தீனதயாளன்)

அத்தியாயம் பனிரெண்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!(கோவை என். தீனதயாளன்)

4 mins
49



 

 

மால்களா… கிடங்குகளா..

ஒரு சில மால்கள் நம் ஊர் மால்களைப் போல் நூறு மடங்கு மால்களை இட்டு நிரப்பிய அளவில் இருக்கின்றன. இவைகளை கிடங்குகள் என்று சொல்லலாம். ‘வால்மார்ட்’டின்‘ ஒரு அங்கமாக சொல்லப்படும் ‘ஸாம்ஸ் க்ளப்’ இப்படி மிக மிகப் பெரிதாக இருக்கிறது. அங்கு பொருள்களை வாங்க அங்கத்தினர்களாக இருக்க வேண்டும். வீட்டுக்குத் தேவையான எல்லா பொருள்களும் அங்கே கிடைக்கின்றன. அது மளிகையாக இருக்கட்டும். எண்ணையாக இருக்கட்டும். குளிர்சாதனப் பெட்டியாக இருக்கட்டும். மிக்ஸி-கிரைண்டர்-துவைக்கும் எந்திரமாக இருக்கட்டும். காய்கறிகளாக இருக்கட்டும். எல்லாப் பொருள்களுமே மொத்த விலையில் கிடைக்கும். ஆனால் அதற்கு தகுந்தாற் போல் நாம் பொருள்களையும் மொத்தமாகத்தான் வாங்க வேண்டும். அதாவது அரை பவுண்டு ஒரு பவுண்டு எல்லாம் சாத்தியமில்லை.


அமெரிக்காவின் பல பகுதிகளில் அமையப் பெற்றிருக்கும் ‘ஸாம்ஸ் க்ளப்’புகளின் விஸ்தீரனம் எழுபத்தோரயிரம் சதுர அடியிலிருந்து ஒரு லட்சத்து முப்பதாயிரம் சதுர அடி வரை என்று சொல்கிறார்கள்.


அதைப் போலவே ‘Fry’s Electronics’ என்னும் கடை - அல்ல அல்ல மால் - அல்ல அல்ல கிடங்கு - மிகப் பிரம்மாண்டமான அளவில் அமைந்துள்ளது. சுமார் ஐம்பதாயிரம் வகையான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளனவாம். அமெரிக்கா முழுதும் முப்பது கிடங்குகளுக்கு மேல் வைத்திருக்கிறார்களாம். ஒவ்வொரு கிடங்கும் ஐம்பதாயிரம் சதுர அடியிலிருந்து ஒரு லட்சத்து என்பதாயிரம் சதுர அடி வரை இருப்பதாக சொல்கிறார்கள். எந்த ஒரு ‘எலக்ட்ரானிக்’ பொருளையோ அல்லது அது சம்மந்தப்பட்ட உபகரணங்களையோ மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கலாம். உண்மையில், எலக்ட்ரானிக் பொருள்களில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு நாள் முழுவதும் வேண்டுமானாலும் அங்கு செலவிட்டு பார்க்கும்/வாங்கும் அளவிற்கு பெரிதாக உள்ளது.


‘ராஸ் – லெஸ் ஃபார் ட்ரஸ்’ என்னும் ஆடைகளுக்கான கடை ஒன்றையும் பார்த்தோம். கடை மிகப் பெரியது. நிறைய தள்ளுபடி போட்டு வைத்திருக்கிறார்கள்.


‘ப்ரிமியம் அவுட்லெட்’(Premium Outlets) என்னும் கடைகள் நிறைந்த ஒரு பகுதிக்கு சென்றிருந்தோம். (ஒரு கிலோமீட்டர்!) நீள தெரு போன்ற அமைப்பில் நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன. அவைகளை கடைகள் என்று எளிதாக குறிப்பிடுவதை விட ‘குட்டி மால்கள்’ என்று சொல்லலாம். எல்லாமே அமெரிக்காவின் பிரபலமான ‘ப்ராண்டட்’ பொருள்களை விற்பனை செய்யும் மையங்கள். ஐந்திலிருந்து எண்பது சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறார்கள். ‘ப்ரிமியம் அவுட்லெட்’ என்பது அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் அமைந்திருக்கிறது.


‘டாய்ஸ் ஆர்’ அஸ்’(“Toys R’us”) என்னும் குழந்தைகளின் பொம்மைகளுக்கான ஒரு கடை அல்ல அல்ல கடல் உள்ளது. ஆயிரக்கணக்கான வகைகளில் பல்லாயிரக்கணக்கான பொம்மைகள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசுப் பொருள்கள் நிறைந்து விளங்கும் கடை இது. உலகின் எல்லா பிரபல ‘ப்ராண்ட்’ பொம்மைகளும் இங்கு கிடைக்கும்.


‘ஹோம் டெபோ’ என்னும் பிரம்மாண்ட கிடங்கில் எல்லாமே வீட்டுப் பொருள்கள்தான். வீடு என்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் ஏதாவது ஒரு பொருளை சொல்லுங்கள். அது அங்கே இருக்கும். உதாரணமாக.. அரிசி – இருக்கிறது; குளிர்பதனப் பெட்டி – இருக்கிறது. ஆனி – (எந்த வகை, எந்த அளவாக இருந்தாலும்) இருக்கிறது. மரம் – இருக்கிறது. கல் – இருக்கிறது. செங்கல் – இருக்கிறது. கட்டிங் ப்ளேயர் – இருக்கிறது!


அமெரிக்காவில் பெரும்பாலான நிறுவனங்கள் / கடைகள், மக்கள் எளிதில் நடமாடும் வண்ணம், நிறைய காலி இட வசதியுடன் உள்ளது. எனவே தீப்பிடிக்கும் அபாய சமயங்களில் எளிதில்/விரைவில் வெளியேறி விடலாம்.


           எதெடுத்தாலும் 99 சென்ட்டுகள்!  

இதைத் தவிர 99 சென்ட் கடைகளும் இருக்கின்றன. அங்கு எந்தப் பொருள் வாங்கினாலும் பெரும்பாலும் விலை 99 சென்ட் தான். தற்காலிகமாக ஓரிரு வருடங்கள் அமெரிக்காவில் தங்குவதற்கு செல்லும் சிலர், வீட்டு அலங்கார பொருள்கள் உட்பட்ட சில பொருள்களை இங்குதான் வாங்குகிறார்கள். ஆனால் வசதி படைத்தவர்கள் இங்கு வருவது போல் தெரியவில்லை!


நல்லெண்ணக் (goodwill) கடைகள்!

அதைத் தவிர ‘Goodwill’ கடைகள் என்று இருக்கின்றன. இங்கு நாம் வேண்டாம் என்று நினைக்கிற பொருள்களை தானமாக கொடுக்கலாம். அவற்றை குறைந்த விலைக்கு விற்று பல நற்காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவின் பல பாகங்களில் ‘Goodwill’ இருக்கின்றன.


 

 

இந்தியக் கடைகள்!

இதைத்தவிர ‘இந்தியா மார்க்கட்’, ‘ராணி மார்கட்’ போன்ற சில இந்திய கடைகள் இருக்கின்றன. இங்கு ஏறத்தாழ எல்லா இந்தியப்பொருள்களும் கிடைக்கும். ஆனால் விலைதான் அதிகம்.(வழக்கமான நம் புலம்பல்தான்). அதைத்தவிர ‘டெல்லி-இந்தியன் குஷைன்’ மற்றும் இந்திய உணவகங்களும் இருக்கின்றன.


நம் ஊரில் பிரபலமாக இருக்கும் பல பிரபலமான ப்ராண்ட் டயர்கள் (Tyres) இங்கும் காண முடிகிறது. ‘Dunlop’, ‘FireStone’, ’GoodYear’ என்று பல டயர் விளம்பரங்களைப் பார்க்க முடிகிறது. நம் ஊரில் உள்ள இந்த ‘ப்ராண்டுகள்’ அங்கிருக்கின்றனவா அல்லது அங்கிருக்கும் இவை நம் நாட்டில் கிடைக்கின்றனவா? (உங்களுக்கு ஒரு வீட்டுப் பாடம். இவை எந்த நாட்டு தயாரிப்புகள் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.)


இந்திய பாகிஸ்தானிய உணவு ஸ்பெஷல்!

‘ஷாலிமர்’ என்னும் ஒரு உணவகத்திற்கு போய் இருந்தோம். இந்திய பாகிஸ்தானிய உணவு வகை கிடைக்கும் இடம். கிஷோர்குமார், மன்னாடே போன்றவர்களின் பழைய இந்தி பாடல்கள் மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்க உணவு உண்டது ஒரு வித்தியாசமான அனுபவம். நாங்கள் சென்றபோது கூட்டமும் இல்லாததால் சூழல் நன்றாகவே இருந்தது!

 

பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!

இப்போது உங்களுக்கு ஒரு சோதனைக் கேள்வி!

அமெரிக்க டயர் கம்பெனிகளுக்கு சரியான எதிரி யார்? அவர்களின் டயர் விற்பனையை முடிந்த வரை கீழே இறக்குவது எது? டயர் கம்பெனிகளுக்கு எதிரணியில் நின்று அவர்களின் விற்பனையை பாதிக்கும் அவர்களை எங்கு காணலாம்? இவர்கள் அமெரிக்கா எங்கும் நிறைந்திருப்பதாக சொல்லப் படுகிறதே! அப்படியா!? இப்படிப்பட்ட எதிரிகளை உருவாக்குவது யார்? அரசாங்கமா? தனியார் நிறுவனங்களா? தனி நபர்களா?


‘பில்ட்-அப்’ போதும் என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு இரண்டு நிமிடமாவது படிப்பதை இங்கு நிறுத்தி விட்டு, சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு விடையைக் கண்டு பிடியுங்கள்! வெற்றி பெற்றால் என் மனமார்ந்த பாராட்டுக்கள். இல்லையென்றால் விடையை அடுத்த மூன்றாவது பத்தியில் நான் உங்களுக்கு சொல்கிறேன்.


அப்படியானால் அடுத்த இரண்டு பத்திகளில் என்ன இருக்கிறது?

 

இன்னுமொரு சோதனை கேள்வி!

நீங்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் செய்யும் பெரும்பாலான தொழில்களை அமெரிக்காவிலும் செய்து வெற்றி பெறலாம்! ஆனால் நம் நாட்டில் பிரபலமான இந்த குறிப்பிட்ட தொழிலை மட்டும், இங்கு அமெரிக்காவில் நீங்கள் செய்தால், பெரும் தோல்வியைதான் சந்திப்பீர்கள்! எந்தத் தடையும் இன்றி இந்தியாவில் தயார் செய்யும் இந்த ‘வீட்டுசாதன’த்தை இங்கு செய்தால் விரைவில் இழுத்து மூடிவிட்டுத் தான் வர வேண்டி இருக்கும். நம் நாட்டில், குறுகிய காலத்தில், இந்தத் தொழிலில் மிகப் பெரும் பணத்தை பார்த்து, உருவான பணக்காரர்கள் ஏராளம். ஆனால் அவர்களே இந்தத் தொழிலை இங்கே எடுத்துக் கொண்டு வந்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது! சரி! அது என்ன சாதனம் என்று கண்டு பிடித்து விட்டீர்களா? இல்லையென்றால் இங்கும் இரண்டு நிமிடம் எடுத்து யோசித்து விட்டு வாருங்கள்!


முதல் கேள்விக்கு ஒரு கேள்வியே விடை:

நம் நாட்டில் டயர்களுக்கு சரியான எதிரி யார்? அடிக்கடி நமது டயர்கள் ‘பஞ்ச்சர்’ ஆகிப் போவதற்கு காரணம் என்ன? அடிக்கடி நம்மை டயர்களை மாற்ற வைக்கும் அந்த குற்றவாளி யார்? இதற்கு நிச்சயமாக உங்களுக்கு விடை தெரிந்திருக்கும். ஆம்! நம் நாட்டின் தெருக்களின் கரடு முரடு பரிதாப நிலைதான் இதற்கு காரணம்!


ஆனால் மிகப் பெரும்பாலான அமெரிக்கத் தெருக்கள் எல்லாம் சும்மா கோதுமை அல்வா போல வழுக்கிக் கொண்டு போகும் தெருக்கள். தெருக்களின் அமைப்பும் பிடிப்பும் டயர்களுக்கு சாதகமானவை. சாதாரண தெருக்களின் அகலம் கூட நூறடிக்கு மேல் இருக்கும். ஆம்! இந்த அமெரிக்கத் தெருக்களின் அமைப்புதான் டயர் கம்பெனிகளுக்கு சரியான எதிரிகளாக இருக்கின்றன. டயர்களுக்கு மிகுந்த பாதுகாப்பைக் கொடுத்து, தேய்மானம் குறைவாக பார்த்துக் கொள்கின்றன. இதனால் டயர்கள் நீண்ட நாட்களுக்கு வருகின்றன. எனவே டயர்களை மாற்ற வேண்டிய நிலை நம் நாட்டைப் போல் அடிக்கடி வருவதில்லை.


சரி! அடுத்த கேள்விக்கு பதில் கண்டு பிடித்து விட்டீர்களா? அந்த ‘வீட்டு சாதனம்’ வேறொன்றுமில்லை. இன்று நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் வீட்டில் வைத்திருக்கும் UPS(Uninterrupted Power Supply) என்னும் தடையில்லா மின்சாரம் வழங்கும் சாதனம்தான். அமெரிக்காவில் நாங்கள் இருந்த வரையில் ஒரு முறை கூட மின்சாரம் துண்டிக்கப்பட வில்லை. எனவே இப்போது சொல்லுங்கள்! UPS எனும் இந்த வீட்டு மின்சாதனத் தொழில் அமெரிக்காவில் செல்லுபடி ஆகுமா? (விடையை சரியாக யூகித்தவர்களுக்கு பாராட்டுக்கள்!)


அதே போல இன்னொரு தொழிலும் அமெரிக்காவில் – குறிப்பாக லாஸ்வேகாஸில் எடுபட வாய்ப்பில்லை. இதில் எதிர்பார்ப்பை எகிற வைக்காமல் நானே சொல்லி விடுகிறேன். அதுதான் ‘கொசுவிரட்டிகள்’. நம் நாட்டில் லட்சோப லட்ச மக்கள் பயன்படுத்தும் ‘கொசு விரட்டிகள்’ இங்கு நாங்கள் பயன்படுத்தியதே இல்லை. லாஸ்வேகாஸில் இருந்த வரை ஒரு கொசுவைக்கூட நாங்கள் பார்த்ததே இல்லை.

 

   அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-13 ல் ............. தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics