DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் எட்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் எட்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்! கோவை என். தீனதயாளன்

3 mins
23K


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் எட்டு


ஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்

(கோவை என். தீனதயாளன்)

 

சுதந்திரா தேவி சிலை! (Statue of Liberty)

 

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தில் பிரமிப்புடன் செலவிட்டோம். பிறகு, அமெரிக்காவின் தேசீய சின்னங்களில் ஒன்றாக விளங்கும் ‘Statue of Liberty’ – சுதந்திராதேவி சிலை இருக்குமிடம் நோக்கி ‘நடராஜா சர்வீஸ்’ –இல் நடந்தோம். ஒரு பூங்கா வழியாக சிட்டுக்குருவிகளுக்கும் புறாக்களுக்கும் எங்கள் முக தரிசனங்களைக் கொடுத்துக் கொண்டே போனோம்.


இங்கு சிட்டுக் குருவிகள் நம் ஊர் சிட்டுக் குருவிகளை விட சற்றுப் பெரிதாக இருக்கின்றன. காக்கைகள் நம் ஊர் காக்கைகளை விட சற்று சிறியதாய் இருக்கின்றன. (ஆனால், பிற்பாடு, அரிசோனா மாநிலத்தில், ‘க்ராண்ட் கான்யான்’ என்னும் இடத்தில் நாங்கள் பார்த்த காக்கைகள், நம் ஊர் காக்கைகளைப் போல் இரண்டு மடங்குகள் பெரிதாக இருந்தன). மிக அதிகமாக காணப்படும் புறாக்கள் தோற்றத்திலும் அளவிலும் நம் ஊர் புறாக்களைப் போலவேதான் இருக்கின்றன.


அவ்வாறு நடந்து கொண்டிருந்த போது பூங்காவின் ஒரு ஓரத்தில் முதியவர் ஒருவர் பிடில் ஒன்றை வைத்து ஒரு சோக கீதம் எழுப்பிக் கொண்டிருந்தார். பிடிலின் மண்டை பகுதியை தரையில் வைத்து, வால் பகுதியை முகத்திற்கு நேராக நெட்டுக் குத்தலாக வைத்து இடது கையில் பிடித்துக் கொண்டு, பிடிலின் ‘வில்’லை வலது கையில் பிடித்து, பிடிலின் கம்பிகளின் மேல் தேய்த்து ஓர் உயிரோட்டமான இசையை எழுப்பிக் கொண்டிருந்தது மனதை என்னவோ செய்தது! அவர் முன் வைத்திருந்த தொப்பியில் சிலர் காசு போட்டு விட்டு சென்றார்கள். இத்தகைய காட்சிகளை கூட்டம் கூடும் இடங்களில் ஆங்காங்கே காண முடிந்தது. 


‘சுதந்திரா தேவி’ சிலை, அமெரிக்காவின் நூறாவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் நினைவாக ஏற்படுத்தப்பட்டதாக சொல்கிறார்கள். ‘லிபர்ட்டி ஐலன்ட்’ என்னும் ஒரு சிறிய தீவில் இருக்கிறது.. அதைக் காண படகில் தான் போக வேண்டும். அதற்கான டிக்கட்டை வாங்கிக் கொண்டு படகில் ஏறினோம். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே படகில் சென்றதும் ஒரு ‘த்ரில்’ லாகவே இருந்தது.


   


அவ்வாறு படகில் செல்லும்போது நியூயார்க்கின் பிரபலமான அடையளங்களுள் ஒன்றானதும், நாம் அவ்வப்போது போஸ்டர்களில் பார்த்து ரசித்ததும் ஆகிய ‘The Manhattan SkyLine’ என்னும் காட்சியை நேரடியாக அற்புதமாக ரசிக்க முடிந்தது. ‘தி மன்ஹாட்டன் ஸ்கைலைன்’ என்பது, பின் புலத்தில் பரந்து விரிந்த ஆகாயத்தில் நீந்திச் செல்லும் மேகங்கள் அமைந்திருக்க – முன் புலத்தில் ஆகிருதியான விதவிதமான கட்டிடங்களின் அமைப்புடன் கூடிய மனதை அள்ளும் உயிரோட்டமான காட்சியாகும். படங்களில் பார்தது மகிழ்ந்த அந்தக் காட்சியை நேரில் காணும்போது மனம் குதூகலமாய் விசிலடிக்கும்.


சுமார் அரை மணி நேர படகு சவாரிக்குள்ளாகவே ‘The Statue of Liberty’ என்னும் ‘சுதந்திராதேவி’ சிலையின் பிரம்மாண்டத்தை நமக்கு சுற்றி வளைத்து காண்பித்து விடுகிறார்கள். அவற்றையெல்லாம் நம் கேமராவின் சில்லுக்குள் சிறைப் பிடித்துக் கொண்டிருந்த போது, சிலையின் அருகில் சென்று பார்ப்பதற்காக நம்மை ‘லிபர்டி ஐலன்டில்’ இறக்கி விடுகிறார்கள். அந்த சிலையை. அருகில் இருந்து, போட்டோக்கள் பலவற்றை பலவாறாக எடுத்துக் கொண்டோம். தரையிலும் அதை சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் செலவழித்தோம்.


பின் அங்கேயே பசியாறி விட்டு மீண்டும் படகில் திரும்பினோம். திரும்பும் வழியில் விருப்பப் பட்டவர்கள் இடையில் ‘ரெலிஸ் ஐலன்ட்’ என்னும் இடத்தில் இறங்கிக் கொண்டார்கள். நாங்கள் கரையை அடைந்து எங்களின் தங்கும் விடுதியை நோக்கி பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தோம்.


ஏன் அவ்வளவு அவசரம் என்று கேட்கிறீர்களா?


மறுநாள் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து பிரயாணத்தைத் துவங்க வேண்டும்.


எங்கே போவதற்கு என்று கேட்கிறிர்களா?


உலகின் மிகப்பிரம்மாண்டமான ‘நயாகரா நீர் வீழ்ச்சி’யை காணத்தான்!
நியூயார்க் டு நயாகரா!

 

அடுத்த நாள் காலை திட்டமிட்டபடியே, அலாரம் வைத்து மூன்று மணிக்கெல்லாம் எழுந்து விட்டோம். முடிந்த வரை காலைக் கடனை மட்டும் முடித்துக் கொண்டோம். ஹோட்டலை காலி செய்து விட்டு புறப்பட்டோம்.


நியூயார்க்கிலிருந்து நயாகராவிற்கு செல்வது. அங்கு நயாகராவை கண்டு களிப்பது. மீண்டும் நியூயார்க் திரும்பி, அங்கிருந்து விமானம் ஏறி லாஸ் வேகாஸை அடைவது. இதுவே எங்கள் திட்டம்!


இதற்காக நியூயார்க்கிலேயே, முதல் நாள் மாலை ஆறு மணிக்கு ஒரு வாடகைக் காரை எடுத்து வைத்திருந்தோம். காருக்கு மட்டும் வாடகை. காரை நாமே ஓட்டிக் கொள்ளலாம்.


நியூயார்க்கிலிருந்து நயாகராவிற்கு எட்டு மணி நேரப் பிரயாணம். காலை மூன்று மணிக்கே ‘ஏலேலோ ஐலசா..’ என்று எல்லோரும் கூட்டாக கோஷம் போட்டுக் கொண்டு கார்ப் பயணத்தை துவக்கினோம்.


எங்கள் பாதை மிக அகண்ட நெடுஞ்சாலை. இரு புறமும் மலைகளும் மரங்களும் அணி வகுத்து கடந்தன. பின்னிரவு நேரம் கரைந்து, பொழுது புலர புலர பயணம் ரம்மியமாக இருந்தது. ஆகாயச் சந்திரன் மலைகளுக்கும் உயர்ந்த மரங்களுக்கும் இடையில் ஒளிந்து விளையாடிக் கொண்டே எங்களோடு பயணித்தது கண்கொள்ளாக் காட்சி. சில இடங்களில், எங்களுக்கு எதிரிலும் சில இடங்களில் எங்களுக்கு கீழும் மேலும், மேகமூட்டங்கள் எங்களை சுற்றி சுற்றி வந்து, வழியை மறைத்தும், வழியிலிருந்து விலகியும், கண்ணாமூச்சி ஆடின.


என் மகனும் உறவினர் ராகேஷும் ஆள் மாறி ஆள் காரை ஓட்டினர். வழியில் பல விதமான உணவகங்கள் இருந்தன. அவற்றுள் ‘சப்வேயும்’ ‘மெக்டொனால்ட்ஸும்’ கூட இருந்தன. சிரமப் பரிகாரத்திற்காகவும் ‘சப்வேயில்’ ‘நாஷ்டா’விற்காகவும் இடையில் ஒரு மணி நேரம் செலவழித்தோம். பின் பயணத்தை தொடர்ந்து மதியம் சுமார் பன்னிரண்டு மணிக்கு நாங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த ‘ஹோவார்ட் ஜான்சன்’ என்னும் தங்கும் விடுதியை அடந்தோம்.


நயாகாராவை அன்று இரவுக்குள் பார்த்தாக வேண்டும் என்பது எங்கள் பயணத் திட்டம். எனவே எல்லோரும் விரைவாக குளித்து முடித்தோம். அருகில் இருந்த ஒரு இந்தியன் தாபாவிலிருந்து ‘ரொட்டி’, ‘நான்’ எங்களுக்கு வெஜிடபிள் ‘சப்ஜி’ , மற்றவர்களுக்கு ‘நான் – வெஜ் சப்ஜி’ பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டோம். (என்ன இருந்தாலும் – அட நம்ம ஊர் தயிர் சாதம் வேண்டாம் – ஒரு இட்லி தோசை கூட - கிடைக்கவில்லையே..! இந்தியன் உணவகமாக இருந்து என்ன பயன்?) அதன் பின் நயாகரா நீர் வீழ்ச்சியை. பார்க்க கிளம்பினோம்.


தங்கியிருந்த விடுதியிலிருந்து நடை தூரத்திலேயே நயாகராவின் நுழை வாயில் இருந்தது, எல்லோரும் நடராஜா சர்விஸிலேயே புறப்பட்டோம்.                        அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் ஒன்பதில் தொடரும்…


Rate this content
Log in

Similar tamil story from Classics