STORYMIRROR

DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதிமூன்றுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பதிமூன்றுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

5 mins
37



பெட்ரோல் பங்க்  அனுபவங்கள்

நம் நாட்டில் பெட்ரோல் போடுவதற்கும் அமெரிக்காவில் பெட்ரோல் போடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம் நாட்டில் வாகனத்தைக் கொண்டு போய் பெட்ரோல் எந்திரத்தின் முன் நிறுத்துவோம்.

‘நூறு ரூபாய்க்கு போடுங்க’

‘ஐம்பது ரூபாய்க்கு போடுங்க’

‘இரண்டு லிட்டர் போடுங்க’

‘டேங்க்கை ரொப்புங்க’

என்று நாம் எப்படி சொல்கிறோமோ, அதன்படி எந்திரத்தின் அருகில் நிற்கும் அலுவலர் பெட்ரோல் அடிப்பார். அடிக்கும் முன் ‘(zero) சைபர் பார்த்துக்கோங்க சார்’ என்பதையும் மறக்காமல் சொல்லுவார். தோள் பையோடு அருகில் இருக்கும் மற்றொருவர் பணத்தை வாங்கிக் கொள்வார்.


சிலர் ஒரு குறிப்பிட்ட பெட்ரோல்பங்க் பேரை சொல்லி ‘அங்கே போடாதே.. அங்கே பாய்ன்ட் அடிப்பாங்க..’ என்பார்கள்.


பிறகு வண்டியை காற்றடிக்கும் எந்திரத்துக்கு அருகில் கொண்டு வருவோம். காற்றடிக்க உதவும் அலுவலர் சில சமயம் பெட்ரோலும் போட்டுக் கொண்டு இருப்பார். அவரை அழைத்து, வரும் வரை காத்திருந்து, காற்றடித்துக் கொண்டு, - காற்று இலவசம் என்றாலும் -அவர் கையில் இரண்டோ மூன்றோ ரூபாய்கள் திணித்து விட்டு நகருவோம். தப்பித் தவறி நாமே காற்றடித்துக் கொள்ளலாம் என்று முயற்சித்தால் நம்மில் பெரும்பாலோர் இருக்கிற காற்றையும் பிடுங்கி விட்டு விட்டு ‘ஙே’ என்று முழித்துக் கொண்டு நிற்போம்.


ஆனால் அமெரிக்காவில், குறிப்பாக லாஸ் வேகாஸில் பெட்ரோல் பங்க்குகளில் ஆட்களே இருக்க மாட்டார்கள். நாமே பெட்ரோல் எந்திரத்தின் அருகில் வாகனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். நம் பண அட்டையை அந்த எந்திரத்தில் அதற்கென உள்ள இடத்தில் சொருக வேண்டும். பெட்ரொல் பம்ப்பை கையில் எடுத்து தேவையான பெட்ரோலை அடித்துக் கொண்டு பம்ப்பை அதன் இருக்கையில் மாட்டினால் நம் பண அட்டையிலிருந்து நாம் அடித்த பெட்ரோலுக்கான பணத்தை எடுத்துக் கொண்டு பண அட்டையை விடுவித்து பில்லை வெளியே தள்ளி விடும்.

 

தேவை என்றால் காற்றடிக்கும் எந்திரத்தின் அருகே சென்று அதற்கென்று இருக்கும் உண்டியல் ஓட்டையில் ஒரு டாலர் பணத்தை போட வேண்டும். அதன் பின் காற்றடிக்கும் குழாய் உங்கள் கைக்கு வரும். நீங்களே காற்றடித்துக் கொண்டு, குழாயை அதன் இடத்தில் வைத்து விட்டு, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டியதுதான்!


கிலோமீட்டர் என்பது இங்கு அவ்வளவாக வழக்கத்தில் இல்லை. மைல் தான். ஒரு மைல்=1.6KM. கிலோகிராம் பயன்படுத்துவதில்லை. பவுண்டுதான். ஒரு பவுண்டு=0.453592Kg லிட்டர் பயன் படுத்துவதில்லை. ‘கேலன்’தான்!; ஒரு கேலன்=3.78லிட்டர்கள்


இங்கே பெட்ரோல் கேலன் அளவில்தான் விலையிடப் படுகிறது. விலை (இந்த வரிகளை எழுதும் நாளில்) கேலனுக்கு மூன்று புள்ளி இரண்டு ஐந்து ($3.25) டாலர்கள்.


பாதசாரிகளுக்கே முன்னுரிமை!

நம் ஊர்களில் பாதசாரிகள் தெருவைக் கடப்பது என்பது சிம்ம சொப்பனம்தான். நம்மில் பலர் கடப்பதற்கான இடத்தில் தெருவைக் கடப்பதில்லை. முறைப்படி, தெருவின் ஒரு பக்கத்தில் இருந்து எதிர் பக்கத்தில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றால், முதலில் கடப்பதற்கான இடத்திற்கு (zebraline) செல்ல வேண்டும். பின் அங்கிருந்து தெருவைக் கடந்து எதிர் பக்கம் செல்ல வேண்டும். அதன் பின் நாம் செல்ல வேண்டிய கடைக்கு செல்ல வேண்டும். அதற்கு சில நூறு அடிகள் அதிகப்படியாக நடக்க வேண்டியிருக்கலாம். எனவே, அதற்கு சோம்பேறித்தனப் பட்டுக்கொண்டு, எங்கு நமக்குத் தேவையோ அந்த இடத்தில், ‘டகாலென பாய்ந்து.. ஓடி.. வரும் வண்டிகளுக்கு டென்ஷன் கொடுத்து, டிவைடர்கள் இருந்தால் பாய்ந்து ஹை ஜம்ப் செய்து, மீண்டும் டென்ஷன் கொடுத்து அந்தக் கடையை அடைந்து விட்டால் நமக்கு ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியது போல் ஆகி விடும். இதில் ஏற்படும் விபத்துக்கள் மிக அதிகம்.


ஆனால் அமெரிக்காவில், பெரும்பாலும், மக்கள், கடப்பதெற்கென இருக்கும் இடத்தில்தான் கடக்கிறார்கள். ஒரு பாதசாரி, நடைபாதையில் இல்லாமல் தெருவில் கடப்பதற்காக நிற்கிறார் என்றாலே, வாகனத்தை நிறுத்தி விட்டு, அவர் கடந்து செல்லும் வரை காத்திருக்கிறார்கள். மனிதாபிமானத்தாலும், விபத்து ஏற்பட்டால் தண்டனை மிகக் கடுமை என்பதாலும் வாகன ஓட்டிகள் நடப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்! 


ஆனால் இதை சாதகமாக எடுத்துக் கொண்டு பாதசாரிகள் தவறாக கடப்பதில்லை. தவறு பாதசாரிகள் பக்கம் இருந்தால் அவர்களுக்கும் நேரம் சரி இல்லாமல் போகும்.


ஒரு முறை தெற்கு ‘ஸ்ட்ரிப்’ தெரு என்னும் அதிக போக்கு வரத்து உள்ள பகுதி வழியாக நாங்கள் போய்க் கொண்டிருந்த போது திடீரென்று இரண்டு மூன்று பேர் தெருவைக் கடந்து ஓடிப் போனார்கள். நாங்கள் மேலும் சிறிது தூரம் சென்ற போது அவர்களில் ஒருவரை போலீஸார் பிடித்து, கைகளை பின் சேர்த்து விலங்கிட்டு கீழே உட்கார வைத்திருந்தனர்.


‘எப்பொ வருவேன்.. எப்டி வருவேன்னு எனக்கு தெரியாது.. ஆனா.. வர வேண்டிய நேரத்துக்கு.. கரெக்ட்டா வந்திடுவேன்’ என்பது நம் சூப்பர் ஸ்டாரின் பிரபலமான பஞ்ச் டைலாக்.. அதைப் போலவே, சாதாரணமாக இங்கு போலீஸ்காரர்களை தெருவில் காண முடியாது. ஆனால் போக்கு வரத்து விதி மீறல் என்றாலோ, எங்காவது ஏதாவது ஒரு சிறு சலசலப்பு என்றாலோ, போலீஸார் எப்பொழுது வருவார்கள், எப்படி வருவார்கள் என்று தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்ட்டாக வந்து விடுகிறார்கள்!


சில்லரை விஷயம்!

நம் ஊரில் அண்ணாச்சி கடையில் அரிசி வாங்கினாலும் சரி. பெட்டி கடையில் பேப்பர் வாங்கினாலும் சரி. உணவு விடுதியில் உப்புமா வாங்கினாலும் சரி. சூபர் மார்க்கெட்டில் சூயிங்கம் வாங்கினாலும் சரி. காய்கறி கடையில் கத்தரிக்காய் வாங்கினாலும் சரி. நா

ம் அன்றாடம் அனுபவிக்கும் ஒரு சித்திரவதை ‘மீதி சில்லரைக்கு மிட்டாய் வாங்கிக்கோ’ என்னும் வசனம்தான்.


நம் ஊரில் எப்பொழுது பார்த்தாலும் ‘சில்ரை இல்லை.. சில்ரை இல்லை..’ பாட்டு தான். சில கடைகளில் உண்மையிலேயே சில்லரை இல்லாத பொழுது அப்படி சொல்கிறார்கள். சில கடைகளில் இதை ஒரு வியாபார யுக்தியாக பயன் படுத்தி, சில்லரை இருந்தாலும் இல்லை என்று கூறி நமக்கு பயன்படாத பொருள்களை நம் தலையில் கட்டப் பார்க்கிறார்கள். ஒரு முறை ஒரு கடையில் ஐந்து ரூபாய் சில்லரை இல்லை என்று ஐந்து சாக்லேட் கொடுக்கிறார்கள். இது ‘மடியைப் பிடித்து மாங்காயைப் போட்டு குடுமியைப் பிடித்து காசை வாங்கும்’ கதையாக இருக்கிறது.


நம் ஊரில் பேருந்துகளில் சில்லரை இல்லையென்றால் சில சமயம் இறக்கியும் விட்டு விடுகிறார்கள்.


நம் ஊரில், சில ஹோட்டல்களில், தொன்னூற்றி ஐந்து ரூபாய் சில்லரை கொடுத்தால் நூறு ரூபாய் நோட்டைக் கொடுப்பதாக சொல்கிறார்கள். சில உறவினர்கள்/நண்பர்கள் நிறைய சில்லரைக் காசுகளை சேமித்து வைத்திருக்கிறார்கள். இதனால் கூட சில்லரை தட்டுப்பாடு ஏற்படலாம்.


ஆனால் ‘லாஸ் வேகாஸில்’ சில்லரை இல்லை என்கிற பிரச்சினையே இல்லை. மூனு டாலர் தொன்னூற்று இரண்டு சென்ட் என்றாலும், ஐந்து டாலர் கொடுத்தால் மீதி ஒரு டாலர் எட்டு சென்ட்டை மிகச்சரியாக கொடுத்து விடுகிறார்கள். (ஒரு சென்ட் என்பது நம் ஒரு பைசாவைப் போல என்று வைத்துக் கொள்ளலாம்.) சிறிய கடையாக இருந்தாலும் பெரிய மாலாக இருந்தாலும் சில்லரைப் பிரச்சினை இங்கு கிடையாது. ஆனால் பெரும்பாலும் இங்கு பண அட்டையைத்தான் பயன் படுத்துகிறார்கள் என்பது உண்மை.



அமெரிகாவில் ஸ்பானிஷ் மொழி!

‘அமெரிக்காலையெல்லாம் இங்கிலீஷ்தான் பேசுவாங்க’ என்பது பொதுவான பாமர மக்களாகிய நம் அபிப்பிராயம்.


பிரம்மாண்ட அங்காடிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் சில பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவற்றுள் உள்ளூர் ரியல் எஸ்டேட் விபரங்கள், உணவகங்கள், மால்கள், கடைகள், போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இலவச புத்தகங்களை வைத்திருப்பார்கள். வாராவாரம் புதுப்புது புத்தகங்களை வைப்பார்கள். ஒருமுறை, படிக்கலாம் என்று ஆர்வமாக ஒரிரு புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து படித்தால் ஒன்றுமே புரியவில்லை. ஆங்கில எழுத்துக்கள்தான். என்றாலும் வார்த்தைகள் புரியவில்லை.


விசாரித்த போதுதான் தெரிய வந்தது. அது ‘ஸ்பானிஷ்’ மொழி. அமெரிக்காவில் பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பது ‘ஸ்பானிஷ்’தான். அமெரிக்காவில் சைனீஸ், ஜெர்மன், ஃஃப்ரென்ச், இதாலி ,ஹவாயின் போன்ற பல மொழிகளை பேசும் ஒட்டு மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்கள் அதிகம் என்கிறார்கள். நியூமெக்ஸிகோ, நிவேடா, அரிசோனா, கொலராடோ போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்பானிஷ் மொழியை பயன்படுத்துகிறார்கள்.



உபயோகித்த பொருள்கள்

வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து தங்குபவர்கள் இரண்டு மூன்று வருடம் கழித்து திரும்பும்போது அது வரை பயன்படுத்திய பொருள்களை மறுவிற்பனை செய்வது கடினம். விலையும் கிடைக்காது. கட்டில், மெத்தை, சோபா, நாற்காலி, மேசை, டீபாய், க்ரில் அடுப்புகள், போன்ற பல பொருள்களை முடிந்தால் யாருக்காவது கொடுப்பார்கள். அல்லது வீட்டை காலி செய்யும்போது அவைகளை வீட்டுக்கு வெளியில் வைத்து விட்டு வந்து விடுவார்கள். அதை யாராவது எடுத்துக் கொள்ளலாம்! அல்லது சுத்தம் செய்பவர்கள் அப்புறப்படுத்தி விடுகிறார்கள்.



யாருமே இல்லாத ஊரிலே..

இங்கு நகர் அமைப்பு குழப்பம் இல்லாமல் இருக்கும். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு, தென் மேற்கு, தென்கிழக்கு, மையம் என பிரதான சாலைகள் இருக்கும். அவற்றின் குறுக்கும் நெடுக்கும் வேறு வேறு பெயர்களுடன் தெருக்கள் இருக்கும். உதாரணமாக 21 S ப்ரூஸ் தெரு என்றால் - பிரதான தெற்கு தெரு - அதில் பிரிந்து செல்லும் ப்ரூஸ் தெரு – அதில் அமைந்துள்ள 21ம் எண் உள்ள விலாசம் என்று பொருள். வழி விசாரிக்கும் போது, E வார்ம்ஸ்ப்ரிங்ஸ் என்றால் பிரதான கிழக்குத் தெருவில் பிரியும் வார்ம்ஸ்ப்ரிங்ஸ் தெரு என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.


இங்கு சாதாரண தெருக்கள் கூட 100 அடி / 200 அடி என்று மிக மிக அகலமாக இருக்கும். ‘ஹைவே’ என்றால் கேட்கவே வேண்டாம். தெருவில் கார்கள் மட்டும் நூற்றுக் கணக்கில் சர்.. சர்.. என்று வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். ஆனால் பட்டப்பகலில் கூட பாதசாரிகளைக் காண்பது மிக மிக அரிது. சில சமயம் நாம் மட்டுமே அந்தத் தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது சற்று பயமாகவே இருக்கும். அந்த அளவு தெருக்கள் வெறிச்சோடி கிடக்கும். ‘யாருமே இல்லாத ஊர்லே யாருக்குய்யா இப்பிடி டீ ஆத்திகிட்டிருக்கே’ என்று விவேக் கேட்பதைப் போல - ‘யாருமே இல்லாத ஊர்லே யாருக்குய்யா இவ்வளவு பெரிய ரோட்டை போட்டு வெச்சிருக்கீங்க’ என்று கேட்கத் தோன்றும்.



டூரிஸ்டுகள் நிறைந்திருக்கும் ‘ஸ்ட்ரிப்’ போன்ற தெருக்கள் இதற்கு விதிவிலக்கு. காசினோக்களும் (சூதாட்டவிடுதி), ஆடம்பர ஹோட்டல்களும், கேளிக்கை விடுதிகளும், ‘நைட்க்ளப்’புகளும், வயது வந்த ஆட்களுக்கு மட்டும் (adults only store) என்று கடைகளும், தெருவில் வருவோர் போவோரிடம் கவர்ச்சியான பெண்களின் படங்களைக் கொண்ட அட்டைகளை நீட்டுவோர்களும், தெரு நடனங்களும், தெரு இசைக் குழுக்களும், ஜெகஜ்ஜோதியாக வெளிச்சமுடன் திகழும் விளம்பர திரைகளும் என்று எண்ணிலடங்கா பொழுது போக்கு அம்சங்களும் / பணத்தை தண்ணீராய் செலவளிக்கும் மார்க்கங்களும் கொட்டிக் கிடக்கும் இந்தப் பகுதி – அடடா – வசதி மிக்கவர்களுக்கு இந்த ‘SinCity’ ஒரு ‘SuperFunCity’ தான் போங்கள்!



அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-14 ல் ............. தொடரும்…




Rate this content
Log in

Similar tamil story from Classics